ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் அதிகாரம் யாருக்கு என்ற போட்டியில் தினகரன் வெற்றிபெற்றிருக்கிறார். பா.ஜ.க. சொல்பேச்சு கேட்கும் கிளிப்பிள்ளைகளாக மாறிய ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு ஆட்சி, அதிகாரம், பணப்பலம் எனச் சர்வசக்தியும் இருந்து, அதிமுகவினர், மக்களின் வாக்குகளைப் பெற முடியாமல். அவர்களாகவே இரட்டை இலையைத் தோற்கடித்திருக்கிறார்கள். அதிமுகவின் பலவீனம் வெற்றித் தேடித் தரும் என்ற திமுக ஒரு தரப்பினரின் எண்ணமும், தினகரன் வெற்றிபெற்றால் ஆட்சிக்கு சிக்கல் வரும் என்ற திமுகவினரின் இன்னொரு தரப்பின் மனோபாவமும் அந்தக் கட்சியின் டெபாசிட்டையே காலி செய்திருக்கிறது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் என்பது ஒரு எம்.எல்.ஏ.வின் மறைவைத் தொடர்ந்து நடத்தும் வழக்கமான இடைத்தேர்தல் ரகமாக அமையவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சி இரண்டு அணிகள், பிறகு மூன்று அணிகள் என உடைந்து நிலைகுலைந்தன. இரண்டு அணிகள் சேர்ந்து இரட்டை இலையை மீட்டன. ஆனாலும், 21 எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்துக்கொண்டு எடப்பாடி அரசுக்கு சிம்மச்சொப்பனமாக மாறி, தினகரன் எடுத்த அவதாரம் அந்தக் கட்சியில் ஏற்பட்ட பிளவு தீர்க்கப்படவில்லை என்பதை உணர்த்தியது.
இந்தச் சூழ்நிலையில் அறிவிக்கப்பட்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், அரசைப் பற்றி எடை போடும் தேர்தலாக மட்டும் இல்லாமல், மக்கள் செல்வாக்கு, அதிமுகவின் தொண்டர்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதை உணர்த்தும் தேர்தலாக தொடக்கம் முதலே பார்க்கப்பட்டது. இன்னொரு புறம் அதிமுக சிதைந்த நிலையிலும் ஸ்டாலின் செயல் தலைவராகப் பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதாலும் திமுகவுக்கு மக்கள் செல்வாக்குக் கூடியிருக்கிறது என்பதை நிரூபிக்கும் தேர்தலாகவும் இது கணிக்கப்பட்டது. இப்படி பல எதிர்பார்ப்புகள் இருந்ததால், வழக்கமான இடைத்தேர்தல் உத்தியை அதிமுகவினரும் தினகரன் தரப்பினரும் எடுத்தனர்.
எதற்காகக் கடந்த ஏப்ரலில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதோ, அது கொஞ்சமும் மாறாமல் இந்த முறையும் அரங்கேறியது. கடந்த ஏப்ரலில் தொகுதி முழுவதும் தினகரன் - எடப்பாடி தரப்பு வாக்குக்கு 4 ஆயிரம் ரூபாயை வழங்கி வாக்காளர்களைத் திக்குமுக்காடச் செய்தனர். அப்போது ஓபிஎஸ் தரப்பு பணம் கொடுக்க முன்வந்தபோதிலும், ஆட்சி அதிகாரத்தை வைத்து தினகரன் - எடப்பாடி தரப்பு அதைத் தடுத்தது. ஆனால், பணம் எக்கச்சக்கமாகப் புழங்கியதால் இடைத்தேர்தல் ரத்தானது. அதன்பிறகு காட்சிகள் மாறி, ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து கைகோத்தார்கள். ஓபிஎஸைபோல தினகரன் இந்தமுறை தனித்துவிடப்பட்டார்.
இரட்டை இலையை ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்புக்குத் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய உடனே, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையும் அறிவித்தது. பாரம்பரிய இரட்டை இலை சின்னம் கிடைத்ததால், ஆர்.கே. நகர் தங்களுக்குத்தான் என்று அதிமுகவினர் கருதினர். அதற்கேற்ப தொகுதியில் நன்கு அறிமுகமான மதுசூதனனை அதிமுக களத்தில் இறக்கியது. தினகரன் சுயேட்சையாகக் களமிறங்கினார். கடந்த முறை அவர் பயன்படுத்திய தொப்பி சின்னம்கூட கிடைக்காத அளவுக்கு அதிமுக தரப்பு நீதிமன்றம் சென்று எதிர்த்தது. இவர்கள் இப்படி மல்லுக்கட்டிக்கொண்டிருந்த வேளையில், இவர்களின் சண்டையே திமுகவுக்கு வெற்றியைத் தேடி தந்துவிடும் என்று ஸ்டாலின் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தார்.
தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்தே மீண்டும் வைட்டமின் ‘ப’வை அதிமுக இறக்க ஆரம்பித்தது. அவர்களுடைய எண்ணம், ‘தினகரன் பெரிதாகச் சாதிக்க முடியாது. ஆனால், திமுக வென்றுவிடக் கூடாது’ என்பதாக மட்டுமே இருந்தது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா 97 ஆயிரம் சொச்ச வாக்குகளைப் பெற்றார். திமுக 57 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. அந்த 97 ஆயிரம் வாக்குகளை அப்படியே தக்கவைக்க வேண்டும் என்று அதிமுக தரப்பு தீவிரமாக இருந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே அதிகார துஷ்பிரயோகங்கள், தேர்தல் விதிமுறை மீறல்கள் அமர்க்களாக நடந்தன. தேர்தல் கணிப்புகள் திமுக அதிமுகவுக்கு இடையே போட்டி நிலவுவதாக வந்தன. தேர்தல் நெருங்கும்வேளையில் அதிமுக பணத்தை வாரி இறைத்தாகவும் புகார்கள் எழுந்தன. தினகரன் தரப்பு பணத்தைக் கொடுக்க தயாராக இருந்தாலும் ஆட்சி, அதிகாரத்தை வைத்து அதிமுக தடுத்துவிட்டது. ஒருபுறம் திமுக அவ்வப்போது கட்சி சார்பாக கருத்துக்கணிப்பு நடத்தி, தாங்கள்தான் வெற்றிபெறுவோம், எனவே பணம் தரதேவையில்லை என்ற முடிவை எடுத்து செயல்பட்டனர்.
தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அதிமுகவினர் 6 ஆயிரம் ரூபாயை வாக்காளர்களுக்கு வினியோகித்ததாக அந்தத் தொகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரிடம் விசாரித்தபோது சொன்னார். ‘முதலில் தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முடிவு செய்த அதிமுக, பிறகு அதிமுகவினருக்கு மட்டும் கொடுத்தால் போதும் என்று முடிவு செய்தனர். ஆனால், அப்படிக் ஒரு தரப்புக்கு மட்டுமே கொடுக்கப்பட்டதை ஆர்.கே. நகர்வாசிகள் விரும்பவில்லை. கடந்தமுறை தினகரன் எல்லாருக்குமே 4 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அதை மக்கள் மறக்கவில்லை. இந்தமுறையும் பணம் தருவதாக உறுதியளித்தனர். அதற்காக 20 ரூபாய் நோட்டில் நம்பர் எழுதி டோக்கன்களாக கொடுத்தனர்” என்கிறார் அவர்.
விசாரித்தவரையில் தினகரன் தரப்பு 6 ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னதாக ஆர்.கே. நகர் தொகுதிவாசிகள் தெரிவித்தனர். தேர்தல் முடிவுகள் தினகரனுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கிய விவகாரம் பற்றி தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரலில் சசிகலா படத்தைப் போட்டு ஓட்டு கேட்கவே அஞ்சினார் தினகரன். ஆனால், இந்த முறை சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரன் அபாரமாக வெற்றி பெற்றிருக்கிறார். ஆளுங்கட்சி மீதான எதிர்ப்புதான் தினகரனுக்கு ஓட்டாக விழுந்தது என்பதையும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. பணம் மட்டுமே தினகரனுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது என்பதையும் ஏற்க முடியவில்லை. ஏனென்றால், அதிமுக பணம் தந்தது மட்டுமல்ல, அவர்களிடம்தான் ஆட்சியும் அதிகாரமும் இருக்கிறது. உண்மை அதுவல்ல.
ஒக்கி புயல் குமரி மாவட்டத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த சமயத்தில்கூட ஆர்.கே.நகரில் முதல்வரும் துணை முதல்வரும் சூறாவளிச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டனர். திமுகவின் பிரச்சாரம் ஏனோதானோ என்ற வகையில்தான் இருந்தது. ஆனால் இவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் தினகரன் களத்தில் இறங்கினார். சொந்த ஊரில் இருந்தெல்லாம் தொண்டர்களை அழைத்துவந்து, அவர்களைத் ‘தொழில்நுட்ப’ரீதியிலான களப்பணிகளில் ஈடுபடுத்தினார். ஆரம்பத்தில் திமுக, அதிமுகவுக்குமான போட்டிக்களமாக இருந்த ஆர்.கே.நகர் மெல்ல மெல்ல அதிமுக - தினகரனுக்கான போட்டிக்களமாக மாறியது. இப்படி போட்டி மாறியதை திமுக ஒன்று கவனிக்கவில்லை அல்லது கணிக்கவில்லை. இன்னொன்று அவரது பாசிட்டிவான எதிர்கொள்ளும் திறன், மீடியாக்களை தோழமையோடு அணுகுவது, இடியே விழுந்தாலும் சிரித்த முகத்தோடு அதை எதிர்கொள்வது என அவர் காட்டும் நடவடிக்கைகளை பலரும் சிலாகித்துப் பேசுவதைப் பார்க்க முடிகிறது. இவை எல்லாம் சேர்ந்துதான் தினகரனுக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் மாஸ் என்று போட்டியில், தினகரன் பாஸ் ஆகியிருக்கிறார். இரட்டை இலை, நன்கு அறிமுகமான வேட்பாளர், அதிமுக வாக்களார்கள் என பல சாதகங்கள் இருந்தும் ஓபிஎஸ்-இபிஎஸ் வெற்றி பெற முடியவில்லையெனில், அவர்களுக்கு தொண்டர்கள், மக்கள் ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதிமுகவோ திமுக-தினகரன் சதிதான் ஆர் கே நகர் வெற்றி என்று சொல்லி தப்பிக்கப் பார்க்கின்றன.
ஆனால், தினகரன் வெற்றி பெற்றல், ஆட்சி கவிழும் என்பதற்காக திமுக விட்டு கொடுத்தது என்ற பேச்சு திமுகவினர் மத்தியிலேயே உள்ளது. ஆ.கே. நகர் திமுகவுக்கு எப்போதும் சாதகமாக இருந்த தொகுதி அல்ல. ஆனால், திமுக சுமார் 50 ஆயிரம் வாக்குகளைப் பெறக்கூடிய தொகுதிதான். உண்மையில் தினகரனுக்காகத் திமுக விட்டுக்கொடுத்திருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஸ்டாலினுக்கு எதிர் அரசியல் செய்பவர்கள் எடப்பாடியாகவோ ஓபிஎஸ்ஸாகவோ இருந்தால் அது அவருக்குப் பெரிய சவாலாக இருக்கப்போவதில்லை. ஆனால், ஆட்சி கவிழ்ப்புக்காக தினகரனுக்கு ஆதரவு தெரிவிந்திருந்தால், ஒன்று சசிகலா குடும்ப வகையறாக்களை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அர்த்தம். இன்னொன்று ஒரு பலமான போட்டியாளரை தெரிந்தோ தெரியாமாலோ உருவாக்குகிறார்கள் என்றுதான் சொல்ல முடியும்.
எது எப்படியோ அடுத்து வர பொது தேர்தலில் ஸ்டாலின் சந்திக்க கூடிய போட்டியாளராக டிடிவிதான் இருப்பார் எனும்போது அவருக்கு இப்போது ஏன் திமுக விட்டு தர வேண்டும்? ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுக பிளவுப்பட்ட பிறகு தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் இது. பணநாயகம், அத்துமீறல், தேர்தல் கமிஷனின் பாராமுகம் எனத் திமுக குறிப்பிடும் பல அம்சங்கள் இருந்தாலும், திமுக வெற்றி வாகையைத்தான் சூடியிக்க வேண்டும் என்றில்லை. குறைந்தபட்சம் டெபாசிட்டையாவது பெற்றிருக்க வேண்டும். அதிமுகவில் குழப்பங்களோ மோதல்களோ அதிகரித்தால், பொது தேர்தலுக்கு வெகுநாட்கள் இருக்கப்போவதில்லை. அதற்குள் ஆர் கே நகரில் மக்களிடம் பெற்ற செல்வாக்கைபோல (பணத்தைத் தாண்டி) ஒவ்வொரு தொகுதியிலும் பெற்றால், ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கை தினகரன் பிடிக்க வாய்ப்புண்டு .
இந்தத் தேர்தல் மூலம் திமுக சாதித்தது ஒன்றே ஒன்றுதான். வாக்குக்குப் பணம் தராததன் மூலம் திருமங்கலம் பார்மூலாவை உருவாக்கியதன் பாவத்தைப் போக்கியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment