29/12/2017

மீம்ஸை (ஆளும்) அரசன்!

மீம்ஸ் கிரியேட்டர்களின் தவிர்க்க முடியாத நாயகனாக இந்த ஆண்டும் ஃபுல் மீல்ஸ் கொடுத்தார் வடிவேல். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, சினிமா என விதவிதமான மீம்ஸ் கிரியேட்டர்களின் கைவண்ணத்தில் உருவான மீம்ஸ்கள் மூலம், இந்த ஆண்டும் ஹெவியாக ரசிக்க வைத்தார் வடிவேல். மீம்ஸ்களில் வடிவேல் ஏன் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார்?

சமூக ஊடகங்கள் பெருகிய பிறகே மீம்ஸ்களும் பெரிய அளவில் வரத்தொடங்கின. மீம்ஸ்கள் வரத் தொடங்கிய காலத்தில், வடிவேல்தான் உச்சத்தில் இருந்தார். அந்த வகையில் பகடிகளையும் நையாண்டித்தனத்தையும் வெளிப்படுத்தும் மீம்ஸ்களுக்கு வடிவேல் சட்டென பொருந்தியது ஒரு காரணம். அதற்கேற்ப வடிவேலுவின் வித்தியாசமான உடல்மொழியும் முகபாவனைகளும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வசதியாகவே இருக்கின்றன.

சுயமாகத் தன்னை பகடி செய்துகொண்டு அவர் செய்த காமெடிகள் அனைத்தும் இன்று மீம்ஸ்களில் அதிகம் வெளிப்படுகின்றன. ஊருக்குள் உதார்விட்டுத் திரிவது, ஹீரோக்களின் பஞ்ச் வசனங்கள், அரசியல் தலைவர்களின் வாக்குறுதிகள், போலித்தனமான ஆவேசம், வாய்ச்சவடால் மேடை பேச்சைக் காலங்காலமாகப் பார்த்தவர்கள் தமிழக மக்கள். இவற்றை மையமாக வைத்து வடிவேல் செய்த காமெடிகள், தமிழர்களின் வயிற்றைப் புண்ணாக்கின. அந்தக் காட்சிகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் இன்றைய சூழ்நிலையோடு பொருந்திபோகவே செய்கின்றன. அதனால், வடிவேலுவின் காமெடி காட்சிகளைக் கொண்டு மீம்ஸ் கிரியேட்டர்கள் விதவிதமாக மீஸ்ஸ்களை உருவாக்குகிறார்கள்.

சினிமாவில் வடிவேல் நடிப்பதில் தொய்வு ஏற்பட்டாலும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், ட்வீட்கள், வாட்ஸ்அப் செய்திகள் எனப் பலவற்றிலும் மீம்ஸ்களாக வடிவேலு நீக்கமற நிறைந்திருக்கிறார். தமிழகத்தில் ஹீரோக்கள் பேசிய பஞ்ச் வசனங்களைவிட, ஆத்மார்த்தமாக இளைஞர்களின் மனதுக்குள் ஊருவிய வசனங்கள் வடிவேலுவுடையவை. அந்த வகையில் இந்த ஆண்டு மட்டுமல்ல, மீம்ஸ்கள் இருக்கும்வரை மீம்ஸ் கிரியேட்டர்களின் நாயகனாக வடிவேலு சிம்மாசனமிட்டிருப்பார் என்று எதிர்பார்க்கலாம்!

- தி இந்து ‘இளமை புதுமை’, 2017.

26/12/2017

ஆர்.கே, நகர் தேர்தல் உணர்த்தும் பாடம் என்ன?


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் அதிகாரம் யாருக்கு என்ற போட்டியில் தினகரன் வெற்றிபெற்றிருக்கிறார். பா.ஜ.க. சொல்பேச்சு கேட்கும் கிளிப்பிள்ளைகளாக மாறிய ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு ஆட்சி, அதிகாரம், பணப்பலம் எனச் சர்வசக்தியும் இருந்து,  அதிமுகவினர், மக்களின் வாக்குகளைப் பெற முடியாமல். அவர்களாகவே இரட்டை இலையைத் தோற்கடித்திருக்கிறார்கள். அதிமுகவின் பலவீனம் வெற்றித் தேடித் தரும் என்ற திமுக ஒரு தரப்பினரின் எண்ணமும், தினகரன் வெற்றிபெற்றால் ஆட்சிக்கு சிக்கல் வரும் என்ற திமுகவினரின் இன்னொரு தரப்பின் மனோபாவமும் அந்தக் கட்சியின் டெபாசிட்டையே காலி செய்திருக்கிறது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் என்பது ஒரு எம்.எல்.ஏ.வின் மறைவைத் தொடர்ந்து நடத்தும் வழக்கமான இடைத்தேர்தல் ரகமாக அமையவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சி இரண்டு அணிகள், பிறகு மூன்று அணிகள் என உடைந்து நிலைகுலைந்தன. இரண்டு அணிகள் சேர்ந்து இரட்டை இலையை மீட்டன. ஆனாலும், 21 எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்துக்கொண்டு எடப்பாடி அரசுக்கு சிம்மச்சொப்பனமாக மாறி, தினகரன் எடுத்த அவதாரம் அந்தக் கட்சியில் ஏற்பட்ட பிளவு தீர்க்கப்படவில்லை என்பதை உணர்த்தியது.
இந்தச் சூழ்நிலையில் அறிவிக்கப்பட்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், அரசைப் பற்றி எடை போடும் தேர்தலாக மட்டும் இல்லாமல், மக்கள் செல்வாக்கு, அதிமுகவின் தொண்டர்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதை உணர்த்தும் தேர்தலாக தொடக்கம் முதலே பார்க்கப்பட்டது. இன்னொரு புறம் அதிமுக சிதைந்த நிலையிலும் ஸ்டாலின் செயல் தலைவராகப் பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதாலும் திமுகவுக்கு மக்கள் செல்வாக்குக் கூடியிருக்கிறது என்பதை நிரூபிக்கும் தேர்தலாகவும் இது கணிக்கப்பட்டது. இப்படி பல எதிர்பார்ப்புகள் இருந்ததால், வழக்கமான இடைத்தேர்தல் உத்தியை அதிமுகவினரும் தினகரன் தரப்பினரும் எடுத்தனர்.
எதற்காகக் கடந்த ஏப்ரலில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதோ, அது கொஞ்சமும் மாறாமல் இந்த முறையும் அரங்கேறியது. கடந்த ஏப்ரலில் தொகுதி முழுவதும் தினகரன் - எடப்பாடி தரப்பு வாக்குக்கு 4 ஆயிரம் ரூபாயை வழங்கி வாக்காளர்களைத் திக்குமுக்காடச் செய்தனர். அப்போது ஓபிஎஸ் தரப்பு பணம் கொடுக்க முன்வந்தபோதிலும், ஆட்சி அதிகாரத்தை வைத்து தினகரன் - எடப்பாடி தரப்பு அதைத் தடுத்தது. ஆனால், பணம் எக்கச்சக்கமாகப் புழங்கியதால் இடைத்தேர்தல் ரத்தானது. அதன்பிறகு காட்சிகள் மாறி, ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து கைகோத்தார்கள். ஓபிஎஸைபோல தினகரன் இந்தமுறை தனித்துவிடப்பட்டார்.
இரட்டை இலையை ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்புக்குத் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய உடனே, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையும் அறிவித்தது. பாரம்பரிய இரட்டை இலை சின்னம் கிடைத்ததால், ஆர்.கே. நகர் தங்களுக்குத்தான் என்று அதிமுகவினர் கருதினர். அதற்கேற்ப தொகுதியில் நன்கு அறிமுகமான மதுசூதனனை அதிமுக களத்தில் இறக்கியது. தினகரன் சுயேட்சையாகக் களமிறங்கினார். கடந்த முறை அவர் பயன்படுத்திய தொப்பி சின்னம்கூட கிடைக்காத அளவுக்கு அதிமுக தரப்பு நீதிமன்றம் சென்று எதிர்த்தது. இவர்கள் இப்படி மல்லுக்கட்டிக்கொண்டிருந்த வேளையில், இவர்களின் சண்டையே திமுகவுக்கு வெற்றியைத் தேடி தந்துவிடும் என்று ஸ்டாலின் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தார்.
தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்தே மீண்டும் வைட்டமின் ‘ப’வை அதிமுக இறக்க ஆரம்பித்தது. அவர்களுடைய எண்ணம், ‘தினகரன் பெரிதாகச் சாதிக்க முடியாது. ஆனால், திமுக வென்றுவிடக் கூடாது’ என்பதாக மட்டுமே இருந்தது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா 97 ஆயிரம் சொச்ச வாக்குகளைப் பெற்றார். திமுக 57 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. அந்த 97 ஆயிரம் வாக்குகளை அப்படியே தக்கவைக்க வேண்டும் என்று அதிமுக தரப்பு தீவிரமாக இருந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே அதிகார துஷ்பிரயோகங்கள், தேர்தல் விதிமுறை மீறல்கள் அமர்க்களாக நடந்தன. தேர்தல் கணிப்புகள் திமுக அதிமுகவுக்கு இடையே போட்டி நிலவுவதாக வந்தன. தேர்தல் நெருங்கும்வேளையில் அதிமுக பணத்தை வாரி இறைத்தாகவும் புகார்கள் எழுந்தன. தினகரன் தரப்பு பணத்தைக் கொடுக்க தயாராக இருந்தாலும் ஆட்சி, அதிகாரத்தை வைத்து அதிமுக தடுத்துவிட்டது. ஒருபுறம் திமுக அவ்வப்போது கட்சி சார்பாக கருத்துக்கணிப்பு நடத்தி, தாங்கள்தான் வெற்றிபெறுவோம், எனவே பணம் தரதேவையில்லை என்ற முடிவை எடுத்து செயல்பட்டனர்.
தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அதிமுகவினர் 6 ஆயிரம் ரூபாயை வாக்காளர்களுக்கு வினியோகித்ததாக அந்தத் தொகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரிடம் விசாரித்தபோது சொன்னார். ‘முதலில் தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முடிவு செய்த அதிமுக, பிறகு அதிமுகவினருக்கு மட்டும் கொடுத்தால் போதும் என்று முடிவு செய்தனர். ஆனால், அப்படிக் ஒரு தரப்புக்கு மட்டுமே கொடுக்கப்பட்டதை ஆர்.கே. நகர்வாசிகள் விரும்பவில்லை. கடந்தமுறை தினகரன் எல்லாருக்குமே 4 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அதை மக்கள் மறக்கவில்லை. இந்தமுறையும் பணம் தருவதாக உறுதியளித்தனர். அதற்காக 20 ரூபாய் நோட்டில் நம்பர் எழுதி டோக்கன்களாக கொடுத்தனர்” என்கிறார் அவர்.
விசாரித்தவரையில் தினகரன் தரப்பு 6 ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னதாக ஆர்.கே. நகர் தொகுதிவாசிகள் தெரிவித்தனர். தேர்தல் முடிவுகள் தினகரனுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கிய விவகாரம் பற்றி தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரலில் சசிகலா படத்தைப் போட்டு ஓட்டு கேட்கவே அஞ்சினார் தினகரன். ஆனால், இந்த முறை சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரன் அபாரமாக வெற்றி பெற்றிருக்கிறார். ஆளுங்கட்சி மீதான எதிர்ப்புதான் தினகரனுக்கு ஓட்டாக விழுந்தது என்பதையும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. பணம் மட்டுமே தினகரனுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது என்பதையும் ஏற்க முடியவில்லை. ஏனென்றால், அதிமுக பணம் தந்தது மட்டுமல்ல, அவர்களிடம்தான் ஆட்சியும் அதிகாரமும் இருக்கிறது. உண்மை அதுவல்ல.
ஒக்கி புயல் குமரி மாவட்டத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த சமயத்தில்கூட ஆர்.கே.நகரில் முதல்வரும் துணை முதல்வரும் சூறாவளிச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டனர். திமுகவின் பிரச்சாரம் ஏனோதானோ என்ற வகையில்தான் இருந்தது. ஆனால் இவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் தினகரன் களத்தில் இறங்கினார். சொந்த ஊரில் இருந்தெல்லாம் தொண்டர்களை அழைத்துவந்து, அவர்களைத் ‘தொழில்நுட்ப’ரீதியிலான களப்பணிகளில் ஈடுபடுத்தினார். ஆரம்பத்தில் திமுக, அதிமுகவுக்குமான போட்டிக்களமாக இருந்த ஆர்.கே.நகர் மெல்ல மெல்ல அதிமுக - தினகரனுக்கான போட்டிக்களமாக மாறியது. இப்படி போட்டி மாறியதை திமுக ஒன்று கவனிக்கவில்லை அல்லது கணிக்கவில்லை. இன்னொன்று அவரது பாசிட்டிவான எதிர்கொள்ளும் திறன், மீடியாக்களை தோழமையோடு அணுகுவது, இடியே விழுந்தாலும் சிரித்த முகத்தோடு அதை எதிர்கொள்வது என அவர் காட்டும் நடவடிக்கைகளை பலரும் சிலாகித்துப் பேசுவதைப் பார்க்க முடிகிறது. இவை எல்லாம் சேர்ந்துதான் தினகரனுக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் மாஸ் என்று போட்டியில், தினகரன் பாஸ் ஆகியிருக்கிறார். இரட்டை இலை, நன்கு அறிமுகமான வேட்பாளர், அதிமுக வாக்களார்கள் என பல சாதகங்கள் இருந்தும் ஓபிஎஸ்-இபிஎஸ் வெற்றி பெற முடியவில்லையெனில், அவர்களுக்கு தொண்டர்கள், மக்கள் ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதிமுகவோ திமுக-தினகரன் சதிதான் ஆர் கே நகர் வெற்றி என்று சொல்லி தப்பிக்கப் பார்க்கின்றன.
ஆனால், தினகரன் வெற்றி பெற்றல், ஆட்சி கவிழும் என்பதற்காக திமுக விட்டு கொடுத்தது என்ற பேச்சு திமுகவினர் மத்தியிலேயே உள்ளது. ஆ.கே. நகர் திமுகவுக்கு எப்போதும் சாதகமாக இருந்த தொகுதி அல்ல. ஆனால், திமுக சுமார் 50 ஆயிரம் வாக்குகளைப் பெறக்கூடிய தொகுதிதான். உண்மையில் தினகரனுக்காகத் திமுக விட்டுக்கொடுத்திருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.  ஸ்டாலினுக்கு எதிர் அரசியல் செய்பவர்கள் எடப்பாடியாகவோ ஓபிஎஸ்ஸாகவோ இருந்தால் அது அவருக்குப் பெரிய சவாலாக இருக்கப்போவதில்லை. ஆனால், ஆட்சி கவிழ்ப்புக்காக தினகரனுக்கு ஆதரவு தெரிவிந்திருந்தால், ஒன்று சசிகலா குடும்ப வகையறாக்களை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அர்த்தம். இன்னொன்று ஒரு பலமான போட்டியாளரை தெரிந்தோ தெரியாமாலோ உருவாக்குகிறார்கள் என்றுதான் சொல்ல முடியும்.
எது எப்படியோ அடுத்து வர பொது தேர்தலில் ஸ்டாலின் சந்திக்க கூடிய போட்டியாளராக டிடிவிதான் இருப்பார் எனும்போது அவருக்கு இப்போது ஏன் திமுக விட்டு தர வேண்டும்? ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுக பிளவுப்பட்ட பிறகு தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் இது. பணநாயகம், அத்துமீறல், தேர்தல் கமிஷனின் பாராமுகம் எனத் திமுக குறிப்பிடும் பல அம்சங்கள் இருந்தாலும்,  திமுக வெற்றி வாகையைத்தான் சூடியிக்க வேண்டும் என்றில்லை. குறைந்தபட்சம் டெபாசிட்டையாவது பெற்றிருக்க வேண்டும். அதிமுகவில் குழப்பங்களோ மோதல்களோ அதிகரித்தால், பொது தேர்தலுக்கு வெகுநாட்கள் இருக்கப்போவதில்லை. அதற்குள் ஆர் கே நகரில் மக்களிடம் பெற்ற செல்வாக்கைபோல (பணத்தைத் தாண்டி) ஒவ்வொரு தொகுதியிலும் பெற்றால், ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கை தினகரன் பிடிக்க வாய்ப்புண்டு .
இந்தத் தேர்தல் மூலம் திமுக சாதித்தது ஒன்றே ஒன்றுதான். வாக்குக்குப் பணம் தராததன் மூலம் திருமங்கலம் பார்மூலாவை உருவாக்கியதன் பாவத்தைப் போக்கியிருக்கிறார்கள்.

22/12/2017

சக்க போடு போடு ராஜா விமர்சனம்

சென்னையின் பெரிய தாதா சம்பத். இவரது தங்கை பாப்ரி கோஷை  காதலிக்கிறார் சந்தானத்தின் நண்பர் சேது. யாருக்கும் தெரியாமல் இவர்களுக்கு திருமணம் செய்துவைக்கிறார் சந்தானம். இதனால் சந்தானத்தை கொல்ல சம்பத்  துடிக்கிறார். சந்தானமோ சென்னையில் இருந்தால் பிரச்சினை என, பெங்களூரு சென்றுவிடுகிறார். சென்ற இடத்தில் வைபவியைக் கண்டதும் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் வைபவி சம்பத்தின் இரண்டாவது தங்கை என சந்தானத்துக்குத் தெரிய வருகிறது. அதன்பிறகு சம்பத்தை, சந்தானம் எப்படி வழிக்குக் கொண்டுவந்து, காதலில் வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

 அரதப்பழசான ஒரு கதையைப் பட்டி, டிங்கர் பார்த்து கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சேதுராமன். முதல் பாதியில் தங்கையைத் திருமணம் செய்துகொண்டு போன சேதுவை விட்டுவிட்டு உதவிய சந்தானத்தை தேடித் தேடி அழைகிறார் சம்பத். இரண்டாம் பாதி அது அப்படியே உல்டாவாக மாறுகிறது. யாரைத் தேடி சம்பத் அழைகிறாரோ, அவரது வீட்டிலேயே குடும்ப சகிதம் இருந்துகொண்டு, சந்தானம் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு தலையாட்டுகிறார். இந்த இரண்டு முரண்பாடுகளுக்கு மத்தியில்தான் மொத்தத் திரைக்கதையும் செல்கிறது. அதனால், லாஜிக்கைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ‘டைமிங் ஜோக்’ கணக்காக கதை நகர்கிறது.

அதற்கேற்ப முரட்டு பார்வையுடனும் தடித்த உருவத்துடன் வரும் தாதா சம்பத் முதல் அடியாட்கள்வரை பாத்திர வார்ப்புகள் பக்குவம் இல்லாமல் பகடியாகவே காட்டப்படுகின்றன. சற்று துரத்தல் அம்சம் உள்ள இந்தக் கதையில் தேடும் படலம் அம்சங்களையாவது விறுவிறுப்பாகக் காட்டியிருக்கலாம். அதுவும் இல்லை. படத்தில் வரும் திடீர் ட்விஸ்டுகளும் சுவாரசியத்தைக் கூட்ட உதவ மறுக்கின்றன. இதனால்,  காட்சிகள் மனதில் ஒட்டாமல் தறிகெட்டு பயணிக்கின்றன. அடிக்கடி வரும் பாடல்களும் படத்துக்கு வேகத்தடையாக அமைந்துவிடுகின்றன.

கடைசிவரை விவேக் எது சொன்னாலும் நம்பாத சம்பத், கிளைமாக்ஸில் மட்டும் உடனே நம்புவது அபத்தம். விதவிதமாக வரும் சந்தானம், உண்மையில் என்னதான் செய்கிறார் என்பதைக்கூட சொல்லாமல் விட்டதெல்லம் இயக்குநருக்கே வெளிச்சம். சம்பத் முதல் அவரது ரவுடிக்கூட்டம்வரை ஆறாம் அறிவு இல்லாதவர்கள்போலவே காட்டுவது, வகைத்தொகை இல்லாமல் சந்தானத்துக்கு பலரும் உதவுவதெல்லாம் அக்மார்க் சினிமாத்தனம். 

திரைக்கதையில் இப்படி பலவீனங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்த படத்தின் பலமும் சந்தானம்தான். நடன அசைவுகளிலும் ஸ்டைலான தோற்றத்திலும் சீறி பாய்ந்து சண்டைப் போடுவதிலும் முழுமையான நாயகனாகப் பரிணமித்திருக்கிறார். காதலியைக் கலாய்ப்பது, தினுசு தினுசாக யோசிப்பது, விவேக், சம்பத்தைப் பேசிபேசி கவிழ்ப்பது என அவரது பாத்திரம் கச்சிதம். ஆனால், அவரது உடல்மொழி ஒத்துழைக்க மறுப்பது மைனஸ். ‘பஞ்ச் டயலாக் பேசிட்டு அடிக்கிறது பழைய ஸ்டைல், பஞ்ச் டயலாக் பேசுறவனை அடிக்குறதுதான் புது ஸ்டைலு’, ‘போனவாரம்கூட ஓட ஓட ஒருத்தனை வெட்டுனேன், ஓடும்போது முடி வெட்றது ரொம்ப கஷ்டமாச்சே எப்படி வெட்டுன' போன்ற அவரது வழக்கமான  நையாண்டி வசனங்களுக்கும் வசீகரிக்கின்றன.

நகைச்சுவைப் பாத்திரத்தில் வரும் விவேக்கும் தாதா சம்பத்தோடு சேர்ந்து சுற்றுகிறார். பார்த்துபார்த்து புளித்துப்போன அவரது பாத்திரத்தில் எந்தப் புதுமையும் இல்லை. சில இடங்களில் மட்டுமே விவேக்கின் நகைச்சுவை எடுபடுகிறது. நாயகி வைபவி படம் முழுக்க வந்தாலும், அவருக்குப் பெரிய வேலையில்லை. பயமுறுத்தும் தாதாபோல முதலில் காட்டப்படும் சம்பத், கடைசியில் சிரிப்பு ரவுடி கணக்காக மாறிவிடுகிறார். திடீர் வில்லனாக வரும் சரத் லோகிதாஸின் பாத்திரவார்ப்பும் ஏனோதானோ ரகம்தான். சிரிக்க வைக்க  டிடிவி கணேஷ், ரோபோ சங்கர், சுவாமிநாதன் என காமெடியர்கள் இருந்தாலும், பவர்ஸ்டார் சீனிவாசனும் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்ட வருகிறார்.

படத்துக்கு இசை சிம்பு. பின்னணி இசையில் அவருக்கு பெரிய வேலையில்லை. ‘தேவதை...’, ‘கலக்கு மச்சான்..’ பாடல்கள் தாளம்போட வைக்கின்றன. அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவில் குறையில்லை.

சக்க போடு போடு ராஜா - புதுமை இல்லாத சாதாரண ராஜா!

மதிப்பெண்: 2 / 5

15/12/2017

தமிழுக்குக் கிடைத்த 'மூன்று முடிச்சிகள்'

மூன்று முடிச்சு படப் போஸ்டர்
1970.... ஸ்டூடியோக்கள் யுகம் மறைந்து மனம் மயக்கும் மண்வாசனை தொடங்கிய காலம். எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரு பெரும் கலைஞர்களின் ஆதிக்கம் குறைய தொடங்கிய நேரம். புதிய புதிய படைப்பாளிகள் கதை உள்ளடக்கத்திலும், காட்சி அமைப்பிலும் யதார்த்தத்தைப் புகுத்திய தருணம். பல எதிர்பார்ப்புகளோடு புதிய கலைஞர்கள் தமிழ்ச் சினிமாவில் காலடி எடுத்து வைத்த வேளை. ஆனால், அந்த இரண்டு கலைஞர்களின் எழுச்சி தமிழ்ச் சினிமாவின் தடத்தை மாற்றியது. அறிமுகமாகிச் சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் பிதாமகன்களான அந்த இரு கலைஞர்கள் யார்? கமல், ரஜினி!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சூப்பர் ஸ்டார்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர்.-சிவாஜி. 1970-களிம் முற்பகுதியில் எம்.ஜி.ஆர். தீவிர அரசியலுக்கு சென்றுவிட சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். அவரோடு சமகாலத்தில் நடித்து புகழ்பெற்ற இன்னொரு மாபெரும் கலைஞரான சிவாஜி நடித்துக்கொண்டிருந்தாலும் வயதுக்கேற்ற வேடங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் உச்ச நட்சத்திரங்கள் இடங்கள் காலியாகின. அந்தக் காலியிடத்தை வேறு யாராவது பிடிப்பார்கள் என்று அப்போது யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.




எம்.ஜி.ஆர்.-சிவாஜி  நாயகர்களாகக் கொடிக்கட்டி பறந்த காலத்தில் அறிமுகமாகி 70-களிலும் கோலோச்சிய முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர், சிவகுமார், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந் போன்றவர்கள் அந்த ஓட்டத்தில் இருக்கவும் இல்லை. 1960-களில்  எம்.ஜி.ஆரும் சிவாஜியும் தனித்தனிப் பார்முலாவை உருவாக்கி, அதில் பயணித்து மாபெரும் வெற்றி பெற்றார்கள். 1970-களின் முற்பகுதியில் முன்னேறிக் கொண்டிருந்த நாயகர்கள் அதே பழைய பாணி பார்முலாவையே பின்பற்றினார்கள்.  இந்தப் படங்களில் துள்ளல்மயமான,  வித்தியாசமான, சாகசங்கள் நிறைந்த காட்சிகளோ, புதுமைகளோ  இருந்ததில்லை.

எம்.ஜி.ஆரும். சிவாஜியும் செய்த காட்டிய அதே  நடிப்பு உத்தியை மற்றவர்களும் பின்பற்றியபோது அது ரசிகர்களுக்குச் சலிப்பை உண்டாக்கின என்றும் சொல்லலாம். அதன் காரணமாக அவர்களால் ரசிகர்களைப் பெரியளவில் ஈர்க்க முடியாமல் போனது. 1970-களின் மத்தியில்
அறிமுகமான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் ரசிகர்களை ஈர்த்ததற்கும்  இதுதான் காரணம். கால ஓட்டத்துக்கு
ஏற்ப இளமை துள்ளல், சாகசங்கள், காதல் ரசம் கொட்ட வைத்த காட்சிகள் என ரசிகர்களை ஈர்க்கும் மந்திர உத்திகளை ரஜினி-கமல் பயன்படுத்தினார்கள். அது அவர்களுக்குத் தமிழ் சினிமாவில் புதிய அடையாளத்தை உருவாக்கியது.

‘அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...’ என மழலை சொல் மாறாமல் பாட்டு பாடி நடித்த சிறுவன் கமல், 1970-களின் முற்பகுதியில் வாலிபனாகப் பாலசந்தரால் ‘அரங்கேற்றம்’ ஆனார். தொடர்ந்து  இயக்குநர் பாலசந்தரின் சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, நான் அவனில்லை எனப் பல படங்களில் தலையைக் காட்டிக் கொண்டிருந்த கமலுக்கு 1975-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டு. அந்த ஆண்டில்தான் கமல் நாயகனாகப் பரிணமித்த அபூர்வ ராகங்கள் வெளியானது. கமலுக்குப் பெரும் அங்கீகாரம் கொடுத்த படம்.   படத்தின் கதை சர்ச்சைக்குள்ளான ஒரு கருவைக்
கொண்டிருந்தாலும் வித்தியாசமான கதைக்காக  மாபெரும் வெற்றி பெற்றது. 
இந்தப் படத்தில் விடலைப் பருவத்து நாயகனாக  நடித்தது முதலே கமல் என்ற அரிய கலைஞன் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார். இதே படத்தின் முதல் காட்சியில் கறுப்பான தோற்றம், பரட்டை தலையுடன் தோன்றிய ரஜினி, தமிழ் ரசிகர்களின் இதய
ங்களைக் கட்டிப்போட்டுவிட்டார். அடுத்த சில ஆண்டுகளின் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாகத் தாம் இருப்போம் என 1975-ல் கமலும் ரஜினியும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.

குறிப்பாக ரஜினி என்றாலே ஸ்டைல், ஸ்டைல் என்றாலே ரஜினி என்ற ஒரு காலம் அப்போதே தொடங்கிவிட்டது. அவர் நடித்த படங்களில் ஏதாவது ஒரு வகை ஸ்டைல் ரசிகர்களு
க்காகத் திணிக்கப்பட்ட காலகட்டம் அது. கமல் என்றாலே காதல் மன்னன் என்றானது. அவரது படத்தில் உருகிக் உருகி காதல் ரசம் பாலாறு தேனாருமாக ஓடும். அப்படியே  நடிப்புக்காக வித்தியாசமான தோற்றங்களில் மாறுவது, நடிப்புக்காக மெனக்கெடுவதும் கமலுக்கான ஒரு அடையாளமாகிபோனது.

ஆரம்பக் காலப் படங்களில் ஸ்டைல் முத்திரை ரஜினி மீது விழுவதற்கு  மூன்று முடிச்சி படமும் ஒரு காரணம். சாதுவான கமல், கனிவான ஸ்ரீதேவி, கோரமான ரஜினி என மூன்று பேருமே  நடிப்பில் ஸ்கோர் செய்த படம். சாதாரண முக்கோணக் காதல் கதை போல் தெரிந்தாலும், ரஜினியின் கோரமுகம் வெளிப்படும் போதும் கதை வேகமெடுக்கும். ஸ்ரீதேவியை அடைய ரஜினி முயற்சிக்க
, ஸ்ரீதேவியோ ரஜினியின் அப்பாவையே திருமணம் செய்து கொண்டு அவருக்குச் சித்தியாக வந்து  ரஜினியை வெறுப்பேற்றும்போது இருவருக்கும் மாறி மாறி ஸ்கோர் விழுந்து கொண்டே இருந்தது. ரஜினியின் வித்தியாசமான மேனரிசமும், அவரது வேகமும், வில்லத்தனமிக்க பேச்சும் அந்தக் காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஜினிக்குத் தமிழில் புதிய தொடக்கத்தைக் கொடுத்த படம் இது.

அதேபோல 1976-ல் ரஜினி-கமல்-ஸ்ரீதேவி நடித்துத் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த இன்னொரு படம்  ‘16 வயதினிலே’. படம் வெளியாகி 40 ஆண்டுகளைத் தொட்டும்கூடச் சப்பாணி-பரட்டை-மயில் கதாபாத்திரங்கள் இன்னும் பேசப்படுகிறது. ராஜபாட் உடையிலும், ஒயிட் காலர் டிரஸ்ஸிலும்  நாயகர்களைப் பார்த்துச் சலித்துபோன ரசிகர்கள், கோவணத்தில்  ‘சப்பாணி கமலை’ப் பா
மூன்று பேருக்கும் பெயர் பெற்று தந்த படம்
ர்த்து அதிசயித்துதான் போனார்கள்.  ‘இதெப்படி இருக்கு...’ என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே பஞ் டயலாக் பேசிய 'பரட்டை ரஜினி'க்குத் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கேரக்டராக அது அமைந்தது.
மூன்று முடிச்சி, 16 வயதினிலே என இரண்டுப் படங்களை இங்கே குறிப்பிட ஒரு காரணம் உண்டு. ஏனென்றால் இந்த இரு படங்களும் முறையே 1975, 1976-ம் ஆண்டுகளில் வெளியான படங்கள். ரஜினியும் கமலும் அறிமுகமான ஓரிரு ஆண்டுகளிலே உச்சிக்குக் கொண்டு போன படங்கள்.  கமலும் ரஜினியும் அறிமுகமான சில ஆண்டுகளிலே தமிழ் படத்தை எப்படி ஆக்கிரமித்துவிட்டார்கள் என்பதை ஒரு புள்ளிவிவரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே புரிந்து விடும்.

 1975-ம் ஆண்டு முதல் 1979-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முக்கிய நாயகர்களாக வலம் வந்த ரவிச்சந்திரன் 8 படங்களிலும், ஜெய்சங்கர் 11 படங்களிலும், சிவக்குமார் 17 படங்களிலும் மட்டுமே நடித்திருக்கிறார்கள். தனி ஆவர்த்தணமாக சிவாஜி கணேசன் 38 படங்களில் நடித்துள்ளார். கமலை எடுத்துக் கொண்டால் இந்தக் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் சேர்த்து 85 படங்களில் நடித்திருக்கிறார். இதில் தமிழ் படங்களின் எண்ணிக்கை மட்டும் 44.  ரஜினியோ தமிழ், இந்தி, தெலுங்கு என 55 படங்களில் நடித்துள்ளார். இவற்றில் தமிழில் மட்டும்   34 படங்கள்.
1950-60-களில் சூப்பர் ஸ்டார்களாக இருந்த எம்.ஜி.ஆரும்., சிவாஜியும் ஒரே படத்தில்தான் ஒன்றாகச் சேர்ந்து நடித்தார்கள்.

1975 முதல் 1979-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்  கமல் - ரஜினி அபூர்வ ராகம், மூன்று முடிச்சி, அவர்கள், 16 வயதினிலே, தப்புத்தாளங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, தாயில்லாமல் நானில்லை, நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும் என 9 தமிழ் படங்களிலும், 2 தெலுங்கு படங்களிலும், ஒரு இந்தி படத்திலும் ஒன்றாக நடித்திருக்கிறார்கள்.  இவற்றில் பெரும்பாலான படங்களில் கமல் நாயகனாகவே நடித்திருந்தார். ரஜினி இரண்டாவது கதாநாயகன் அல்லது முக்கியமான வேடம்தான். தொடக்கக் காலத்தில் எந்த ஈகோவும் இல்லாமல் இருவரும் மாறிப் மாறி படங்களில் நடித்து ரசிகர்களைச் சம்பாதித்தார்கள். 1970-களில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதில் ரஜினியும் கமலும் ஒன்றாகச் சேர்ந்து படங்களில் நடித்ததும் ஒரு காரணம்.

தொடக்கக் காலத்தில் இவர்கள் இருவரும் ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமான கேரக்டர்களையே தேர்ந்தெடுத்து நடித்தார்கள். கமல் அந்தரங்கம், மன்மத லீலை, உணர்ச்சிகள், மோகம் முப்பது வருஷம் எனக் காதல் படங்கள் கொஞ்சம் அதிகம். வில்லன்தனம் மிக்க பாத்திரங்களில் நடித்துகொண்டிருந்த போது பைரவி படத்தில் நாயகனாக அறிமுகமானார் ரஜினி. இந்தக் காலகட்டத்தில் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை எனக் குணச்சித்திரப் படங்களும் ரஜினியின் நடிப்புத் திறமைக்குச் சான்றாக அமைந்தன. ஸ்டை
ல் மன்னன் என்று பேசப்பட்ட காலத்தில் ரஜினிக்குள் இருந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்திய படங்கள் இவை.

கமலும் ரஜினியும் கொஞ்சம் வளரவளர, நாயகர்களாக நிலை பெற்ற பிறகு அவர்களுக்கான கதையமைப்பும் காட்சியமைப்புகளும் மாறின. கமலைப் பொறுத்தவரை ஒரு சர்க்கஸ் கலைஞரைப் போலப் பல ஆச்சரியமான, திறமையான, பரிதாபப்படவைக்கும் வேடங்களைச் செய்து மக்களை ரசிக்க வைத்தார். ஆனால் ரஜினியோ மேஜி நிபுணரைப்போ
ல ஸ்டைலாக நடித்து மக்களை வசியம் செய்தார்.   ரஜினி படங்களில் தம்பி, தங்கச்சி, அம்மா என்று குடும்பச் செண்டிமெண்ட் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். கமல் படங்களில் பெரும்பாலும் காதலிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் இருக்கும். கமல் படங்களில் அதிகமாகக் காதலில் ஜெயிக்கச் சவால் விடுவது, காதலியைக் காப்பாற்ற வில்லன்களுடன் போராடுவது போலக் காட்சிகள் இருக்கும்.

பல படங்களில் சேர்ந்து நடித்த கமலும் ரஜினியும் 1980-ம் ஆண்டுக்குப் பிறகு சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்துத் தனித்தனிப் பாதையை வகுத்துக் கொண்டார்கள். ரஜினி-கமல் என்று பேச்செடுத்தாலே 1980-ஐ பற்றிதான் பேசுவார்கள். ஆனால், 1970-களில் மத்தியிலேயே அவர்களின் யுகம் தொடங்கிவிட்டது; 1970-களிலே உச்ச நட்சத்திர அந்
தஸ்தைப் பெற்றுவிட்டார்கள். அன்று தொடங்கிய அந்த யுகம் 35 ஆண்டுகளைக் கடந்தும் நீடிப்பதும் ஆச்சரியமும் அதிசயமும் கலந்த விஷயம்தான் என்பது நிதர்சனமான உண்மை.

கனவுக்கன்னி ஸ்ரீதேவி


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிக் குமரியாகத் திரையுலகில் வலம்வந்து மலைக்க வைத்தவர் ஸ்ரீதேவி. 1970-களில் கதா நாயர்களைப் போலவே நாயகிகளின் இடத்திலும் ஒரு வெற்றிடம். 1960-களில் ரசிகர்களின் கனவு கன்னிகளாக இருந்தவர்கள் அம்மா, அக்கா வேடத்துக்கு மாறியபோது 1970-களில் இளமை பஞ்சம் ஏற்பட்டது. 1970-களில் மஞ்சுளா, லதா, ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, சுமித்ரா போன்ற நடிகைகள் புதிதாக அறிமுகமாகிக் கவனம் ஈர்த்துகொண்டிருந்தார்கள். குறிப்பாக மஞ்சுளாவும் லதாவும் பெரும்பாலும் சீனியர் நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்துகொண்டிருந்ததால், அவர்கள் சீனியர்களுக்கான ஜோடிகளாகவே பார்க்கப்பட்டார்கள். அப்போது   டீன்ஏஜ் பருவத்தில் சினிமாவில் காலடி வைத்த ஸ்ரீதேவியின் வருகை ரசிகர்கள் மனதில் இளமை அலை அடிக்க வைத்தது.

 ரஜினிக்கு மூன்று முடிச்சி படம் எப்படியோ அதுபோல ஸ்ரீதேவிக்கும் அந்தப் படம் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. ஈகோ பார்க்காமல் மூன்று முடிச்சி படத்தில் முதியவரைத் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தது முத்தாய்ப்பாக அமைந்தது. பதினாரு வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி நடித்தபோது அவருக்கு 14 வயதுதான். டீன்ஏஜ் பருவத்தில் வரும் இனக்கவர்ச்சி காதலை அழகாக உள்வாங்கி நடித்து அந்தக் கால இளைஞர்களை ‘மயில்..மயில்..’ என்று சொல்ல வைத்துத் தூக்கத்தைக் கெடுத்தவர் ‘மயில் ஸ்ரீதேவி’. இந்தப் படத்தில் மயில் ஏற்படுத்திய தாக்கம் தமிழ் சினிமா உள்ளவரை  நிச்சயம் நிலைத்திருக்கும்.
காயத்ரி படத்தில்...
ஸ்ரீதேவியின் அழகும், அவரது இயல்பான நடிப்பும் அவருக்கு ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. குறுகிய காலத்திலேயே கனவுக்கன்னியாக வலம் வரத் தொடங்கினார் ஸ்ரீதேவி.  வணக்கத்துக்குரிய காதலியே’ படத்தில் இரட்டை வேடம். ரஜினி,  விஜயகுமார் என இருவருடனும் டூயட் பாடிய இரண்டு ஸ்ரீதேவிகளுமே கருப்பு வெள்ளையிலும் கலர்ஃபுல்லாக தெரிந்தார்கள்.  பாரதிராஜா, கமல் கூட்டணியில் வந்த ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தின் கதாநாயகி சாரதாவை எளிதில் மறந்துவிட முடியுமா?  இந்த மின்மினிக்குக் கண்ணிலொரு பாட்டில் அந்தக் காலத்திலேயே பிகினி  உடையில் வந்த ரசிகர்களைக் கிறங்கடித்தார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி-கமல் கூட்டணியில் வந்த ‘மீண்டும் கோகிலா’ ஒரு இதமான நகைச்சுவை இழையோடிய அழகு படம்.  ‘குரு’ ‘ தாயில்லாமல் நானில்லை’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’ என்று கமலுடன் அவர் ஜோடி சேர்ந்த ஒவ்வொரு படமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து. கமல்-ஸ்ரீதேவி ஜோடி கனவு ஜோடியாகத் தமிழ் சினிமாவில் வலம் வந்தது 1970-களின் பிற்பகுதியிலேயே தொடங்கிவிட்டது.  கமலுடன் ஸ்ரீதேவி நடித்ததைப் போலவே ரஜினியுடனும் 1970-களில் பல படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. ப்ரியா, தர்மயுத்தம், தனிக்காட்டு ராஜா எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

1970-களின் பிற்பகுதியும், 1980-களின் முற்பகுதியும் என 10 ஆண்டுகள் தமிழ் சினிமா என்றால் கமல், ரஜினி, ஸ்ரீதேவி என்று சொல்லுமளவுக்கு கொடிகட்டிப் பறந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு படங்களையும் சேர்த்துக் கமல்-ஸ்ரீதேவி ஜோடி 21 படங்களிலும் நடித்துள்ளது. அதேபோல ரஜினி-ஸ்ரீதேவி ஜோடி 22 படங்களில் நடித்துள்ளது. இதில் கமல்-ஸ்ரீதேவி ஜோடி தமிழில் மட்டும் 15 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்கள். ரஜினி-ஸ்ரீதேவி 12 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இதில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி என மூன்று பேரும் இரண்டு படங்களில் சங்கமித்திருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரையும் முதன்முதலில் ஒன்றாகச் சேர்த்தது ‘மூன்று முடிச்சி’ படம்தான்.
அழகையும் நடிப்பையும் ஒருங்கே கொண்ட நடிகைகளில் முக்கிய இடம் இவருக்குத்தான். ஸ்ரீதேவிக்குப் பிறகு அவரைப் போல ஒரு தமிழ் நடிகை தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கவேயில்லை. கமல், ரஜினி என இருவருடன் சேர்ந்து நடித்தளவுக்கு ஸ்ரீ தேவி ஏனோ ஏனைய நடிகர்களுடன் அவ்வளவாக நடிக்கவில்லை.

2017 - மைதானங்களை அதிர வைத்தவர்கள்


விளையாட்டுத் துறையில் ஒரே வீரர் அல்லது வீராங்கனை வாழ்நாள் சாதனையாளராக வலம் வர முடியாது. திடீரென ஒருவர் உச்சத்துக்குச் செல்வார். உச்சத்தில் இருந்தவர் தலைக்குப்புறக் கிடப்பார். குறிப்பிட்ட ஆண்டில் களத்தில் நின்று சாதித்தவர்களே அந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் அரியணையை அடைவார்கள். அப்படி 2017-ம் ஆண்டு ஜொலித்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் யார்?

ரவிச்சந்திரன் அஸ்வின்

அஸ்வின்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத சுழல் மன்னரான அஸ்வின், இந்த ஆண்டு ஓசையில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தினார். நாக்பூரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளைக் கடந்தவர் என்ற சாதனையைச் சொந்தமாக்கிக்கொண்டார். 56 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி செய்திருந்த சாதனையையும் தரைமட்டமாக்கினார். உள்ளூரில்தான் அஸ்வின் ஜொலிக்கிறார் என்ற விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், இன்றைய நிலையில் இவர் மட்டுமே சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருக்கிறார்.

பி.வி. சிந்து

பிவி சிந்து
பாட்மிண்டனில் இந்தியாவின் ‘ஒன் வுமன் ஆர்மி’யாகப் போய்க்கொண்டிருந்த சாய்னா நேவாலைப் பின்னுக்குத் தள்ளி உலக பாட்மிண்டனின் ராணியாகக் கோலோச்சிக்கொண்டிருக்கிறார் பி.வி. சிந்து. இந்த ஆண்டு கொரியன் பாட்மிண்டன் சூப்பர் சீரிஸில் சாம்பியன் பட்டம் வென்றபோது, அதிகப் புள்ளிகள் பெற்று உலக பாட்மிண்டன் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறினார் பி.வி. சிந்து. உலகத் தரவரிசையில் இரண்டாம் இடம்வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்தது. தற்போதைய நிலையில் தரவரிசையில் 3-ம் இடத்தில் நீடிக்கிறார்.

விராட் கோலி

விராட் கோலி
கிரிக்கெட்டில் விராட் கோலி இந்த ஆண்டு செய்யாத சாதனைகளே இல்லை. இந்த ஆண்டு மட்டும் டெஸ்ட் போட்டிகளில் 3 இரட்டைச் சதங்களை விளாசினார். கேப்டனாக ஆறு இரட்டைச் சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாராவைச் சமன் செய்தார். ரன் மெஷினாக மாறி இந்த ஆண்டில் மட்டும் அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து 2,818 ரன் விளாசியிருக்கிறார். சர்வதேசப் போட்டிகளில் 50 சர்வதேச சதங்களையும் இந்த ஆண்டு கடந்திருக்கிறார். விராட் கோலி கேப்டனாக இந்திய அணிக்கு 9 டெஸ்ட் தொடர்களை தொடர்ந்து வென்றுக் காட்டியதும் இந்த ஆண்டில்தான்.

லட்சுமணன்

லட்சுமணன்
இந்த ஆண்டு தமிழக விளையாட்டு வீரர் ஒருவரின் தனிப்பட்ட சாதனையாகப் புதுக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமணனின் வெற்றியை ஆராதிக்கலாம். புவனேஸ்வரில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் லட்சுமணன் தங்கம் வென்று தமிழகத்தின் தங்க மகனானார். மிகவும் பின்தங்கிய, ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், இளம் வயதிலிருந்தே வெறுங்காலில் புதுக்கோட்டை சாலைகளில் ஓடி பயிற்சி பெற்றவர். விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு லட்சுமணன் இன்று ஒரு ரோல் மாடல்.

கிடாம்பி ஸ்ரீகாந்த்

பாட்மிண்டனில் மகளிர் பிரிவில் பி.வி. சிந்து ஒரு புறம் சூறாவளியாகச் சுழன்று அடித்த வேளையில் ஆண்கள் பிரிவில் ஓசையே இல்லாமல் வெற்றிக்கொடியை நாட்டினார் கிடாம்பி ஸ்ரீகாந்த். இந்த ஆண்டு மட்டும் இந்தோனேஷிய ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், டென்மார்க் ஓபன், பிரெஞ்சு ஓபன் என சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்று உலகின் தரமான பாட்மிண்டன் வீரர்களில் ஒருவராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த். தரவரிசைப் பட்டியலிலும் ஏற்றம் கண்ட கிடாம்பி ஸ்ரீகாந்த், 4-வது இடத்தில் உள்ளார்.

மித்தாலி ராஜ்

மித்தாலி ராஜ்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்து அதற்கு தனி அந்தஸ்து ஏற்படுத்திக்கொடுத்தார் மித்தாலிராஜ். இவரது தலைமையிலான அணி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிவரை சென்று, நூலிழையில் இங்கிலாந்திடம் கோப்பையைக் கோட்டைவிட்டது. தனிப்பட்ட சாதனையாக ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 7 அரை சதங்களை அடித்த முதல் வீராங்கனை, ஒரு நாள் போட்டியில் அதிக ரன் அடித்த வீராங்கனை, 6 ஆயிரம் ரன் கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமைகளை இந்த ஆண்டு படைத்தார் மித்தாலி ராஜ். அனைத்துக்கும் மகுடம் வைத்தாற்போல் தரவரிசையிலும் இந்த ஆண்டு முதலிடம் பிடித்தார் மித்தாலி ராஜ்.

மீராபாய் சானு

மகளிர் பளுதூக்குதலில் இந்த ஆண்டு இந்தியாவின் கொடியை உயரப் பறக்கவிட்டார் மீராபாய் சானு. அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் பளுதூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய். உலகச் சாம்பியன்ஷிப் பளுதூக்குதலில் கர்ணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர் மட்டுமே. இதற்கு முன்பு 1994, 95-ம் ஆண்டுகளில் கர்ணம் மல்லேஸ்வரி தங்கம் வென்றதே சாதனையாக இருந்தது. அந்த வரலாற்றை மாற்றிக் காட்டியிருக்கிறார் மீராபாய் சானு.

பங்கஜ் அத்வானி

பங்கஜ் அத்வானி
பில்லியர்ட்ஸ் விளையாட்டில் இந்தியாவின் முகமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் பங்கஜ் அத்வானிக்கு இந்த ஆண்டும் மறக்க முடியாததாக அமைந்தது. கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்து வீரர் மைக் ரசலை வீழ்த்தி பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றார். இது பங்கஜ் அத்வானி வென்ற 18-வது பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டம் என்ற பெருமையையும் பெற்றுத் தந்தது.

ஹரிந்தர் பால் சாந்து

ஸ்குவாஷ் விளையாட்டில் இந்த ஆண்டு ஹரிந்தர் பால் சாந்து குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்தார். சண்டிகரில் பிறந்து சென்னையில் வாழ்ந்துவரும் ஹரிந்தர் பால் சாந்துவின் ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றது கவனம் பெற்றது. அடிலெய்டில் நடந்த இந்தத் தொடரில் உலகின் முதல்நிலை வீரர்களான நெதர்லாந்தின் பியட்ரோ ஸ்வெட்டர்மேன், ஆஸ்திரேலியாவின் ரைஸ் டௌலிங் போன்றவர்களை வீழ்த்தினார். இந்த சாம்பியன்ஷிப் வெற்றி சாந்துவின் 8-வது தொழில்முறை பட்டம். இந்த ஆண்டில் அவர் பெற்ற 3-வது சாம்பியன் பட்டம் இது.

பிரனாய் குமார்
பிரனாய்குமார்

 இந்த ஆண்டு உலக பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கும் இன்னொரு இந்திய வீரர் பிரனாய்குமார். தற்போது தவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் பிரனாய் குமார், இந்த ஆண்டில் மட்டும் 45 போட்டிகளில் விளையாடி 31 வெற்றிகளை வசப்படுத்தியிருக்கிறார். இதில் இந்தோனேஷிய ஓபன், வியட்நாம் ஓபன் தொடர்களை வென்றதும் அடங்கும்.

 நன்றி: தி இந்து










14/12/2017

சத்யா விமர்சனம்


காணாமல் போகும் முன்னாள் காதலியின் குழந்தையை  ஜேம்ஸ்பாண்ட் பாணியில் முன்னாள் காதலன் கண்டுபிடிக்கும் படம்தான் ‘சத்யா’. 



ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார் சத்யா (சிபிராஜ்). நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரது முன்னாள் காதலியான ஸ்வேதவிடம் (ரம்யா நம்பீசன்) இருந்து உதவி கேட்டு போன் வருகிறது. இதற்காகச் சென்னைத் திரும்புகிறார் சிபிராஜ். ‘தன் குழந்தை காணாமல் போய் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன, அதை உன்னால்தான் கண்டுபிடித்துத் தர முடியும்’ என்று கதறுகிறார் ரம்யா நம்பீசன். அந்தக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சிபிராஜ் இறங்குபோது, அடுக்கடுக்கான அதிர்ச்சிகளும் புதிர்களும் சிபிராஜுக்குக் காத்திருக்கின்றன.  அந்தப் புதிர்களுக்குள் ஒளிந்துள்ள சிக்கலான முடிச்சுகளை  சிபிராஜ் எப்படி அவிழ்க்கிறார் என்பதுதான் ‘சத்யா’ படத்தின் ஒட்டுமொத்த கதையும்.



தெலுங்கில் வந்து வெற்றிபெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக் இது. அந்தப் படத்தைப் பிசிறு தட்டாமல் அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். படம் தொடங்கியது முதலே விறுவிறுப்பும் த்ரிலிங்கும் படம் பார்ப்பவர்களை ஆக்கிரமித்துவிடுகின்றன. அதைக் கடைசிவரை அப்படியே கொண்டு சென்றிருக்கும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணனுக்கு ஒரு பூங்கொத்து. படத்தின் பிரதான புதிர்களே, காணாமல் போனதாக சொல்லப்படும்  குழந்தை உண்மையில் இருந்ததா, இல்லையா என்பதுதான். அப்படி ஒரு குழந்தை இருந்ததைக் கண்டுபிடித்தால்தான் அதை யார், எதற்காகக் கடத்தியிருப்பார்கள் என்ற விடையை அடுத்து கண்டுபிடிக்க முடியும்.


குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற படங்களில் திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பினாலும் குழப்பங்கள் தொற்றிநிற்கும். ஆனால், அதற்கு இடம் தராமல் திரைக்கதையும் காட்சிப்படுத்துதலும் கச்சிதம். 
இடையிடையே சில கேள்விகள் மனதில் எழுந்தாலும், அதற்கான விடை எங்கும் மிஸ்ஸிங் ஆகாமல் படத்தை நிறைவு செய்ததில் ‘சத்யா’ கெத்து காட்டுகிறது. ‘வலையோசை கலகலவென..’ பழைய சத்யா படத்தின் பாடல் வானொலியில் கேட்பதுபோல எதேச்சையாகக் காட்டுவதில் தொடங்கி குட்டிக் குட்டி காட்சிகளில்கூட இயக்குநர் கவனம் காட்டியிருக்கிறார். 

ஆனால், படத்தின் அடிநாதமாகக் குழந்தையைப் பற்றிய விஷயத்தை மறைக்க ரம்யா நம்பீசனின் கணவர் எடுக்கும் முயற்சிகளில் புதுமை ஏதும் இல்லை. அந்தக் காட்சிகள் வழக்கமான சினிமாத்தனம்.
படத்தில் அடுத்தடுத்து வரும் சில திருப்பங்களும் திரைக்கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் புகுத்தப்பட்டுள்ளதுபோலவே தெரிகிறது. உதாரணமாகக்  போலீஸ் அதிகாரியாக வரும் அணுயாத்தான் (வரலட்சுமி சரத்குமார்) இத்தனை நாளாக குழந்தையை வைத்திருந்தார் என்பதற்காகச் சொல்லப்படும் காட்சிகள், தமிழ் சினிமாவின்  புளித்துப்போன சென்டிமென்ட் ரகம். ஒரு போலீஸ் அதிகாரி, போதை மருந்துக் கடத்தல்காரர்களுடன் ஏன் தொடர்புகொண்டிருக்கிறார் என்பதற்கான வலுவான காரணங்களும் படத்தில் இல்லை.  

காதலித்து, திருமணம்வரை வந்து தன் அப்பாவுக்காக வேறொருவரைத் திருமணம் செய்யப்போவதாக சிபிராஜிடம் சொல்லி, பிரியும் தருணத்தில் காதலருடன் உறவுகொண்டு அந்தக் குழந்தையை பெற்றெடுத்தார் என்று சொல்லப்படும் ஃபிளாஷ்பேக் காட்சியில் எந்த லாஜிக்குமே இல்லை. இப்படி தமிழ்ப் படங்களுக்கே உரிய சில மசாலாத்தனங்கள் ஆங்காங்கே படத்தில் தென்பட்டாலும், வேகமான திரைக்கதை காட்சிகள் அதை நேர் செய்துவிடுகின்றன.

தமிழ் சினிமாவில் நிலையான இடம் இல்லாமல் தவிக்கும் சிபிராஜுக்கு, இந்தப் படம் நிச்சயம் பெயர் பெற்று தரும். தோற்றத்திலும் ரொம்பவே மாறியிருக்கிறார். கதைக்கேற்ப  நடை, உடை, பாவனையிலும்  நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.  நாயகியாக வரும் ரம்யா நம்பீசன், சிபிராஜுடன் காதல் காட்சிகளில் கலகலப்பான பேர்வழியாகவும், காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாமல், ஆற்றாமையால் திரியும் அபலைப் பெண்ணாகவும் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக சற்று நேரமே வந்தாலும், கடைசியில் வில்லியாக அவதாரம் எடுக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

நல்ல போலீஸாக வரும் ஆனந்த்ராஜ் அவ்வப்போது சிரிக்கவும் வைக்கிறார். காமெடியனாகவும் குணச்சித்திர பாத்திரத்திலும் வரும் சதிஷ் கவனம் பெறுகிறார். சதீஷ் பாத்திரத்துக்கு இஸ்லாமியர் பெயரை வைத்தால், நம் ஊருக்கு பொருந்தாத உடையில் அலையவிடலாமா? யோகி பாபுவின் வழக்கமான நையாண்டி சிரிக்க வைக்கிறது. நாயகியின் அப்பாவான நிழல்கள் ரவி ‘இங்கிதம்’ பற்றி பாடம் எடுப்பவராக வருகிறார்.

கார்த்திக் கிருஷ்ணாவின் பஞ்ச், குசும்பு வசனங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. படத்துக்கு இசை சிமான் கே. சிங். ‘யவ்வனா..., சாங்கு...’ பாடல்கள் கேட்கும்படி உள்ளன. த்ரில்லிங் படத்துக்கு ஏற்ப பின்னணி இசையை வழங்கியிருக்கிறார். அரண்மனை பழனியின் ஒளிப்பதிவு பளிச்சென இருக்கிறது. கவுதம் ரவிச்சந்திரனின் படத்தொகுப்பு படத்துக்கு பலம் சேர்க்கிறது.

வேகத்தடை இல்லாத விறுவிறுப்பான த்ரில்லிங் திரைக்கதையால் ‘சத்யா’ சீறிப்பாய்கிறான்.

மதிப்பெண்: 3 / 5

விஷாலுக்கு முன்பே சுயேட்சையாகப் போட்டியிட்ட நடிகர், நடிகைகள்



ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் வேட்புமனுத்தாக்கல் செய்ததும் அவரது மனு தள்ளுபடி ஆனதும்தான் தமிழக அரசியலில் இப்போது ஹாட் டாபிக். வழக்கமாக சுயேட்சை வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வதும், அவர்களது மனுக்கள் தள்ளுபடி ஆவதும் பத்தோடு பதினொன்று என்ற வகையிலேயே இருக்கும். பிரபலம் என்பதால் விஷால் வேட்பு மனு தள்ளுபடி கவனம் பெற்றிருக்கிறது. இதற்கு முன்பும்கூட தமிழகத் தேர்தல் களத்தில் நடிகர், நடிகைகள் சுயேட்சையாகக் களம் கண்டு அந்தந்தக் காலகட்டத்தில் கவனம் பெற்றிருக்கிறார்கள். 
 
எஸ்.வி. சேகர்
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்திருந்த சமயத்தில் 1989-ம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் எஸ்.வி.சேகர் மயிலாப்பூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். சுயேட்சையாகப் போட்டியிட்ட எஸ்.வி.சேகர், சுமார் 650 வாக்குகளைப் பெற்றார். இதில் குறிப்பிடும்படி விஷயம் என்னவென்றால், பல சந்தர்ப்பங்களில் இடைக்கால முதல்வராகப் பணியாற்றிய நாவலர் நெடுஞ்செழியனும் இதே தொகுதியில் அப்போது சுயேட்சையாகப் போட்டியிட்டார். அவரைவிட எஸ்.வி. சேகர் கூடுதல் ஓட்டுகள் பெற்றது அப்போது பரபரப்பு செய்தியானது.
டி. ராஜேந்தர்
1980-களில் திமுகவின் பிரச்சார பீரங்கியாகச் செயல்பட்ட நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர், கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து வெளியேறி தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்ற இயக்கத்தை நடந்தி வந்தார். 1991-ல் நடந்த சட்டப்பேர்வைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து பர்கூர் தொகுதியில் களம் இறங்கினார் டி. ராஜேந்தர். அவருக்கு சுயேட்சை சின்னம் ஒதுக்கப்பட்டது.  பர்கூரில் ஜெயலலிதா 67,680 ஓட்டுகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டி.ராஜேந்தர் 30,465 ஓட்டுகளை பெற்று தோல்வியடைந்தார். இந்தத் தொகுதியில் திமுக போட்டியிடாமல், டி. ராஜேந்தருக்கு மறைமுகமாக ஆதரவு அளித்தது. இதேபோல 2006-ல் தனது சொந்த ஊரான மயிலாடுதுறையிலும் டி.ராஜேந்தர் சுயேட்சையாகப் போட்டியிட்டார்.
ரேவதி
சினிமாவில் யதார்த்தமான நடிப்பை வழங்கிக்கொண்டிருந்த நடிகை ரேவதி தேர்தல் களத்தில் குதித்தது 1996-ல் நடந்தது.  அப்போது தமிழகச் சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற்றது. அன்றைய அதிமுக அரசுக்கு எதிராக எதிர்ப்பலை வீசிய வேளையில் ஆளுங்கட்சியை மட்டுமல்லாமல் திமுகவையும் எதிர்த்து தென் சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார் ரேவதி. அந்தத் தேர்தலில் 42, 906 வாக்குகள் பெற்று ரேவதி தோல்வியடைந்தார்.
மன்சூரலிகான்
அடிக்கடி அரசியல் கருத்துகளை கூறி அதிரடி காட்டும் வில்லன் நடிகர் மன்சூரலிகான் 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் சுயேட்சையாகக் களம் கண்டார். ‘எந்தக் கட்சியும் சரியில்லை’ என்ற கோஷத்தோடு களத்தில் குதித்த மன்சூரலிகான் 2531 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியைச் சந்தித்தார். இதற்கு முன்பாக 1999-ல் பெரியகுளம் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்டு மன்சூரலிகான் 88 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது தனிக்கதை.
  கிட்டி
வில்லன் நடிகர், குணச்சித்திர நடிகராக பெரிய திரையில் வலம் வரும்  நடிகர் கிட்டி என்ற கிருஷ்ணமூர்த்தி 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். வேளச்சேரி தொகுதியைச் சேர்ந்த கிட்டி இந்தப் பகுதி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக போட்டியிடுவதாகக் கூறி சுயேட்சையாகக் களம் இறங்கினார். ஆனால், தேர்தலில் 2477 ஓட்டுகள் மட்டுமே பெற்று கிட்டி தோல்வியடைந்தார். இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நடிகர் வாகை சந்திரசேகர்தான் இந்த தொகுதியின் வெற்றியாளர்.
- தி இந்து