28/12/2009

இந்திய மாநிலங்கள் எப்படித் தோன்றின?



தெலங்கானா, கூர்க்காலாந்து, பண்டல்கண்ட், கூர்க், விதர்பா, ஹரித் பிரதேசம், மிதிலாஞ்சல், சவுராஷ்டிரா, போடோலாந்து. இவையெல்லாம் தனி மாநில கோரிக்கைகளின் பெயர்கள். ஆந்திராவைப் பிரித்து தனி தெலங்கானா அமைக்க மட்டும் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது மத்திய அரசு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘பிரிட்டிஷ் இந்தியா’ என்ற பெயரில் சில மாநிலங்களே இருந்தன. இப்போது 28 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. புதிய மா நிலங்கள் எப்படி உருவாகின?

இப்போதைய இந்தியாவுடன் பாகிஸ்தான், பங்களாதேஷ், பூடான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பகுதிதான் ‘பிரிட்டிஷ் இந்தியா’ என்று அழைக்கப்பட்டது. பிரிட்டிஷ் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பரம்பரை ஆட்சியாளர்களால் சமஸ்தானங்கள் ஆளப்பட்டுவந்தன. பிரிட்டிஷ் இந்தியா 15 மாகாணங்களைக் கொண்டிருந்தன. அஜ்மேர்-மேர்வாரா, அஸ்ஸாம், பலுசிஸ்தான், மத்திய மாகாணங்கள், பெரார், கூர்க், டெல்லி, மதராஸ், வடகிழக்கு எல்லை மாகாணங்கள், ஒரிஸா, பஞ்சாப்-சிந்து, ஐக்கிய மாகாணங்கள் - இவை 15 மாநிலங்களின் பெயர்கள். இந்த 15 மாநிலங்களுக்குள் 500-க்கும் அதிகமான சமஸ்தானங்கள் இருந்தன.

இவை தவிர ‘போர்த்துக்கீசிய இந்தியா’ என்ற பெயரில் கோவா, டாமன், டையூ, தத்ரா நகர், ஹைவேலி ஆகிய பகுதிகளும் ‘பிரெஞ்சு இந்தியா’ என்ற பெயரில் சண்டர்நகர், ஏமன், பாண்டிச்சேரி, காரைக்கால், மாகி ஆகிய பகுதிகளும் உள்ளடங்கியிருந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடந்தது. மாகாணங்களும் சமஸ்தானங்களும் பங்கிடப்பட்டன. பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டும் மட்டும் சமய அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டன. ஐதராபாத்தின் இஸ்லாமிய ஆட்சியாளர் சுதந்திரமாக இருக்க முயன்றார். ஆனால், இந்தியப் படை தலையிட்டு அதனை இந்தியாவுடன் இணைத்தது. இதேபோல ஜம்மு காஷ்மீருக்கு இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுமே உரிமை கோரின. ஆனால், ஜம்மு காஷ்மீர் ஆட்சியாளர் இந்தியாவுடன் இணைந்துகொண்டார்.

தனித்தனியாக இருந்த சமஸ்தானங்களை ஒரே இந்தியாவாக இருங்கிணைக்கப் பாடுப்பட்டவர் ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல். ‘ஒரே இந்தியா’ என்ற சிந்தனையுடன் சுதந்திரக் காற்றை அனுபவிக்க ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே இந்தியாவுக்கு மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள் தலைவலியாக மாறின.

தனி மாநில பிரிவினைக்காக முதன்முதலில் போராடியவர் பொட்டி ஸ்ரீராமுலு. மதாஸ் மாகாணத்தில்தான் ஆந்திரப் பகுதிகள் இணைந்திருந்தன. தெலுங்கு பேசுபவர்களுக்காகத் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று குரல் உயர்த்திப் போராட்டத்தில் குதித்தார் பொட்டி ஸ்ரீராமுலு. மொழிவாரி மாநிலங்கள் அமைத்தால் இந்தியா சிதறும் என்று நேருவும் வல்லபாய் படேலும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் போராட்டங்கள் தொடர்ந்தன.

இந்தியாவை மொழிவாரியாக பிரிப்பதைவிட 3 பெரிய மாநிலங்களாகப் பிரித்து
பொட்டி ஸ்ரீராமுலு
அதை ‘தட்சிணப் பிரதேசம்’ என்று அழைக்கலாம் என யோசனை கூறினார் நேரு. இந்த யோசனைக்கும் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை. இதற்கிடையே 1952-ல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலுக்காக மதாராஸ் மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நேருவை, தெலுங்கு மொழி பேசுபவர்கள் முற்றுகையிட்டு தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தினர். அதே ஆண்டு 56 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் பொட்டி ஸ்ரீராமுலு. அவர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால், ஆந்திரப் பகுதியில் கலவரம் பற்றி எரிந்தது. 1952-ல் டிசம்பர் மாதத்தில் ஆந்திரா என்ற தனி மாநிலம் உருவாக்கப்படுவதாக அறிவித்தார் நேரு.

இதே காலகட்டத்தில் கன்னடம், மராட்டி, மலையாளம், குஜராத்தி, மராத்தி மொழி பேசுபவர்களும் தனி மாநிலம் கேட்டு போராடினர். மற்ற மொழி பேசுபவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்க ‘மாநிலங்கள் மறுசீரமைப்பு கமிஷன்’ அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1956-ல் 14 புதிய மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன. மதராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா, ஐதராபாத் பிரிக்கப்பட்டு ‘ஆந்திரப்பிரதேசம்’ என்ற பெயரில் புதிய மாநிலம் முறைப்படி உருவானது. ஆந்திரப்பிரதேசம் புதிதாக உருவாக்கப்பட்டாலும் பிரச்னை தீராமலேயே இருந்தது. ஆந்திராவின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினர் ஆந்திரவாசிகள். ஆனால், தமிழக தலைவர்கள் அதை கடுமையாக எதிர்த்தனர்.

இறுதியில் கர்னூலை தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் உருவானது.
1960-ல் மராத்தி மொழி அதிகம் பேசும் பம்பாய் மாகாணம் ‘மகாராஷ்டிரா’ என்றும் குஜராத்தி மொழி பேசுபவர்களுக்காக ‘குஜராத்’ என்றும் பெயரிடப்பட்டு தனி மாநிலங்கள் உருவாகின. பம்பாய் மாகாணம் மகாராஷ்டிராவுடன் இருப்பதை குஜராத்வாசிகள் கடுமையாக எதிர்த்தனர். பம்பாயின் வணிகத்தையும் தொழில் துறையையும் உருவாக்கியவர்கள் அங்கு வாழ்ந்த குஜராத்திகள் என்பதால் அதை மகாராஷ்டிராவுடன் இணைக்கக்கூடாது என்று வாதம் செய்தனர். ஆனால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் இதுபோன்ற பேச்சுகளை கடுமையாக சாடினார். இதனால், அந்தப் பிரச்னை முடிந்து, பம்பாய் மகாராஷ்டிராவுடன் இணைக்கப்பட்டது.

அஸ்ஸாமில் இணைந்து இருந்த நகா மக்கள் பகுதி பிரிக்கப்பட்டு நாகாலாந்து உருவானது. 1966-ல் பஞ்சாப் மாநிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஹரியானா, இமாச்சலப்பிரதேச மாநிலங்கள் உருவாயின. வடகிழக்கு மாகாணம்
மேகாலயா, மணிப்பூர், திரிபுரா என்று புதிய மாநிலங்களாக அறிமுகமாயின. பெரிய மாநிலங்கள் எல்லாம் வடக்கிலேயே இருந்தன. உ.பி., பீகார், மத்தியப்பிரதேசம் ஆகிய பெரிய மாநிலங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற திட்டமும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதே எழுந்தது.
ஆனால், அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நீ...ண்ட இடைவெளிக்குப் பிறகு 2000-ம் ஆண்டில் உ.பி., பீகார், ம.பி. ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ஜார்கண்ட், சட்டீஸ்கர், உத்தரகாண்ட் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தெலுங்கு பேசுபவர்களுக்காக ஆந்திரா கேட்டுப் போராடியவர்களே இப்போது தெலங்கானாவுக்காக இதை மேலும் கூறுபோட போர்க்கொடி உயர்த்தி, கிட்டத்தட்ட வெற்றிக்கொட்டியும் நாட்டிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து பல மாநிலங்களிலும் புதிய மாநிலக் கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. இதில் யாரெல்லாம் வெற்றி பெறுவார்கள் என்பது பில்லியன் டாலர் கேள்வி!

முத்தாரம், 28-12-2009  

30/11/2009

போபால் 25! உலகை உலுக்கிய விஷ வாயு விபத்து



மக்களின் மனதில் ஏற்படும் வடுக்களை ஏற்படுத்தியவற்றில் முக்கியமான ஒன்று ‘போபால் விஷ வாயு கசிவு’ விபத்து. 1984 டிசம்பர் 3 அன்று ‘யூனியன் கார்பைடு’ தொழிற்சாலையில் இருந்து விஷ வாயு கசிந்ததில் என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள்ளாகவே ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்விட்டனர். விஷ வாயு ஏற்படுத்திய தாக்கம் இன்னும் ஓயவில்லை. இப்போது பிறக்கும் குழந்தைகள்கூட ஊனமாகக் காட்சியளிக்கின்றன. இப்படி ஒரு பயங்கர விபத்து நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

மத்தியப்பிரதேச மா நிலத் தலைநகர் போபால். இங்கு 1969-ல் அமெரிக்காவில் உள்ள யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனின் பூச்சுக்கொல்லி மருந்து தயாரிக்கும் ரசாயனத் தொழிற்சாலை நிறுவப்பட்டது. இத்தொழிற்சாலையின் 51 சதவீத பங்குகளை யூனியன் கார்பைடு நிறுவனமும், 26 சதவீத பங்குகளை மத்திய அரசும், 23 சதவீத பங்குகளை 24 ஆயிரம் இந்தியர்களும் கொண்டிருந்தனர். 

இந்தத் தொழிற்சாலையில் பூச்சுக்கொல்லிக்குத் தேவையான மித்தைல் ஐசோசயனைடு (மிக்) தயாரித்து அதை சேமித்து வைக்கும் பணி நடைபெற்றது.
முக்கிய மூலத்திரவமான இதனுடன் கார்பன் டெட்ராகுளோரைடு மற்றும் ஆல்பா ஃநாப்தால் இரண்டையும் கலந்தால் பூச்சுக்கொல்லி மருந்தை உண்டாக்கலாம். இதையே இந்த ரசாயன தொழிற்சாலையின் தொழிலார்கள் செய்துவந்தனர். இவற்றில் மிக் ரசாயனம் மிகவும் வீரியமானது. கொடிய விஷத்தன்மை கொண்டது. ரசாயனத் தொழிற்சாலையில் 15 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட 3 மிக் கலன்கள் நிறுவப்பட்டன. இவற்றில் இரண்டு கலன்களில் மட்டுமே மிக் திரவம் இருக்க வேண்டும். ஒரு கலன் காலியாகவே இருக்க வேண்டும் என்பது விதிமுறை.

ஆனால், 1984 டிசம்பர் 3-ம் தேதி இரவு விதிமுறைக்கு மாறாக 3 கலன்களிலும் மிக் இருந்தது. இங்குதான் கவனக்குறைவு ஆரம்பமானது. விபத்து நடக்கும் வரை இந்தக் கவனக்குறையை யாருமே கண்டுகொள்ளாமல் போனதால்தான் இவ்வளவு பெரிய விபத்து நடந்தேறி, வரலாற்றில் சோகமான சம்பவமாகப் பதிந்தது. இரவுப் பணிக்கு வந்த தொழிலாளர்கள் மிக் கலனை இணைக்கும் வால்வை மட்டும் மூடிவிட்டு, கலனை மூடாமல் நீரைச் செலுத்தினர். இந்த நீர் 13 ஆயிரம் லிட்டர் மிக் இருந்த கலனில் எதிர்பாராதவிதமாகக் கொட்டியது.

ஏற்கனவே வால்வுகளில் சில சமயம் சிறுசிறு கசிவு இருந்ததால், விதிமுறைப்படி வட்டத்தட்டை இடையில் நுழைத்து கலன் தனித்து விடப்பட வேண்டும். அன்றைய தினத்தில் தட்டை அமைத்து கலனை தனித்துவிடவும் இல்லை. இதை மேலதிகாரிகளும் கவனத்தில் கொள்ளவில்லை. மிக் கலனில் நீர் கொட்டியதால், அழுத்தம் சிறிது சிறிதாக அதிகரிக்கத் தொடங்கியது. அழுத்தமானியில் 8 பி.எஸ்.ஐ. அவளவுதான் நார்மல். ஆனால், 10 என காட்டியது. அதையும் யாரும் கண்டுகொள்ளவேயில்லை. இரவு சுமார் 1 மணிக்கு அழுத்தம் 40 பி.எஸ்.ஐ. அளவை எட்டியது.

அழுத்தம் அதிகரித்ததால், கலன் உப்பி உடைய ஆரம்பித்தது. மிக் வெளியேறத் தொடங்கியது. மிக் வெளியேறியதும் தொழிலாளர்கள் பலருக்கும் கண்களில் எரிச்சல் உண்டானது. இதன்பின்னரே நிலைமையை உணர்ந்த மேலதிகாரிகளும் தொழிலாளர்களும் மிக் வெளியேறுவதைத்தடுக்க அசுர வேகத்தில் பணி மேற்கொண்டனர். ஆனால், என்ன பயன்? நிலைமை ஏற்கனவே மோசமாகியிருந்தது. மிக் விஷ வாயு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வெளியேறியது.

திடீரென 120 அடி உயரப் புகைப் போக்கியில் 10 அடிக்கு வெள்ளை புகை கிளம்பியது. மேற்புறத்தில் பரவிய புகை தாழ்ந்து காற்றுப்போன திசையெல்லாம் பரவ ஆரம்பித்தது. சம்பவம் நடக்கும்போது இரவு என்பதால், ஊரே மயான அமைதியில் இருந்தது. மக்களை எச்சரிக்கை செய்யும் பொருட்டு அதிகாலை 2 மணியளவில் அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டது. ஆனால், மக்களும் ஆழ்ந்த உறக்கத்தால் செவிமடுக்கவில்லை. காற்றில் கலந்து விஷ வாயு மக்கள் வசிக்கும் நிலப் பகுதியில் தாழ்ந்து பரவியது. விஷ வாயுவின் இந்த திடீர் தாக்குதலில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அப்படியே துயில் எழ முடியாமல் மடிந்தார்கள். திடீரென கண் விழித்தவர்கள் கண்ணெரிச்சல், நெஞ்செரிச்சல் தாங்காமல் அங்குமிங்கும் ஓடி அப்படியே உயிரைவிட்டனர்.

விடியற்காலை வரை வெளியேறிய விஷ வாயுவால் 14 ஆயிரத்து 400 பேர் மாய்ந்தனர். டிசம்பர் 3 காலைப் பொழுது போபால் நகரவாசிகளுக்கு நரகமாகிப்போனது. ஆயிரக்கணக்கான ஆடு, மாடு, நாய்களும் தெருவோரமெங்கும் மடிந்துகிடந்தன. இறந்தவர்களை எரிக்கவோ புதைக்கவோகூட இடம் இல்லாமல் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் எரித்தும் புதைத்தும் சொந்தங்களை இழந்தவர்கள் பரிதவிப்பில் ஆழ்ந்தனர். போபால் நகரின் 4.8 கிலோ மீட்டர் பரவியது விஷ வாயு. 40 டன் மிக் விஷவாயு பரவி பாசக்கயிறு வீசியதில் இறந்தவர்களைவிட கண் இழந்தவர்கள், நோயுற்றவர்கள், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 4 லட்சத்தைத் தாண்டியது.

விஷ வாயு கசிவு ஏற்பட்ட இரண்டு நாட்களில் ரணத்தை காட்டிலும் விபத்துக்கு பின்னர் நீடி(க்கும்)த்த விஷவாயுவின் தாக்கம் கொடுமையிலும் கொடுமை. குடிநீர், கிணற்று நீர் என எல்லா நீர் ஆதாரங்களிலும் விஷ வாயு பரவியதால் நீரைக்கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். நிலமும் மாசடைந்துபோனது. விஷ கசிவுக்கு ஆளான கர்ப்பிணி பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் உதடுகள் பிளவுபட்டும், கண் பார்வையிழந்தும், தைராய்டு புற்றுநோயுடனும் பிறந்தன. இன்னும் பல குழந்தைகள் இறந்தே பிறந்தன. விஷ வாயு சம்பவம் நடந்து அடுத்த 7 மாதங்களில் பிறந்த குழந்தைகள் எல்லாமே உடல் ஊனமாகவோ இறந்தோ பிறந்தன என்று கூறுகிறது ‘போபாலின் சிசுக்கள்’ என்ற புத்தகம்.

விஷ வாயுவின் தாக்கம் தொடர்ந்ததால் 1987-ம் ஆண்டில் போபால் நகரில் குழந்தை இறப்பு 5 மடங்காக அதிகரித்தது. விபத்து நடந்தபோது குழந்தையாக இருந்தவர்களுக்கு இப்போது திருமண வயதாகியும், திருமணம் செய்துவைக்க பெற்றோர் பலரும் தயங்கும் நிலையே உள்ளது. திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறக்குமோ என்ற அச்சமே இதற்குக் காரணம்.

இந்த விபத்து ஏற்பட்டு 25 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், அந்த விபத்தால் போபால் நகர மக்கள் அனுபவித்த வேதனைகளும் வலிகளும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. உலகில் ஹிரோசிமா, நாகாசாகியில் வீசப்பட்ட அணுகுண்டு வீச்சு, ரஷ்யாவில் செர்நோபில் அணு உலை வெடிப்பு சம்பவத்துக்கு அடுத்து என்றும் மறக்க முடியாத சம்பவம் போபால் விஷ வாயு கசிவு விபத்துதான்.

விபத்துக்குப் பின்...

10/11/2009

அழிகிறது ஆர்க்டிக் பனிமலை!

‘இன்னும் 10 ஆண்டுகளில் வட துருவ ஆர்க்டிக் கடலில் பனிமலையில் முழுவதும் உருகிவிடும்’ என்று புதிய குண்டை வீசியிருக்கிறார் பிரிட்டன் விஞ்ஞானி பீட்டர் வாதம்ஸ். இவருடைய ஆராய்ச்சி உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை அலற வைத்துள்ளது. இதற்கு முன்பு, 2007ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இன்னும் 30 ஆண்டுகளில் பனிமலைகள் உருகிவிடும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குள் இவ்வளவு பெரிய மாற்றம் எப்படி?

உலகம் வெப்பமயதாமதல் பிரச்சினை தொடங்கியதிலிருந்தே ஆர்க்டிக் கடலில் மாற்றங்கள் தவிர்க்க முடியாததாகிவிட்டது, உலக வெப்பமயமாதலின் தீவிரத்தை ஆர்க்டிக்கில் மட்டுமே துல்லியமாகக் காண முடியும். ஆர்க்டிக் கடலில்தான் பனிமலைகள் அதிகளவில் சூழ்ந்துள்ளன.  2005-ம் ஆண்டுக்கு முன்புவரை அங்கு ஆய்வு மேற்கொண்ட பன்னாட்டு விஞ்ஞானிகள், ‘இன்னும் 100 ஆண்டுகளில் பனிமலைகள் உருகிவிடும்’ என்றே அபாய சங்கு ஊதிவந்தனர். இதை உலக நாடுகள் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

2002-ல் அமெரிக்காவின் கொலொராடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆர்க்டிக் கடலின் மேற்பரப்பில் ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்ட பின்னரே எல்லோர் வயிற்றிலும் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. ‘ஆர்க்டிக் கடலில் உள்ள எல்லீம்சர் தீவில் நான்கில் ஒரு பகுதி பனிப்பரப்பு இப்போது இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன்பு 9 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பனிப்பரப்பு இத்தீவில் இருந்தது. இப்போது இது வெறும் ஆயிரம் சதுர கிலோ மீட்டராக மாறிவிட்டது’ என்று சொன்னபோது அதிர்ச்சியில் உறைந்தனர் விஞ்ஞானிகள். அதோடு, அடுத்த குண்டையும் போட்டனர் ஆராய்ச்சிக் குழுவினர்... ‘இன்னும் 30 ஆண்டுகளில் ஆர்க்டிக் கடலில் பனிமலைகள் உருகிவிடும் அபாயம் உள்ளது!’

இதைக் கேட்டதும் லேசாக ஆடிப்போன உலகத் தலைவர்கள் உலக வெப்பமயமாதல் உயர்வைக் குறைக்க பல வழிகளிலும் தீவிரம் காட்ட ஆரம்பித்தனர். 2009 மார்ச் - மே மாதங்களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் பீட்டர் வாதம்ஸ், பேராசிரியர் பென் ஹாடோவ் தலைமையிலான குழுவினர் ஆர்க்டிக் உறைகடல் மேற்பரப்பில் ஆய்வில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 450.6 கிலோ மீட்டர் நடந்துசென்ற ஆய்வுக் குழுவினர், சென்ற வழியெங்கும் பனிப்படலத்தின் ஆழத்தை அளந்தனர். சேகரித்த தகவல்களை 4 மாதங்களாக ஆய்வு செய்தனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் பலரது தூக்கத்தையே கெடுத்துவிட்டன. ‘இன்னும் 10 ஆண்டுகளில் வட துருவ ஆர்க்டிக் கடலில் பனிமலைகள் முழுவதும் உருகிவிடும். ஏற்கனவே கணித்திருந்த காலத்தைவிட மிகவும் முன்கூட்டியே இந்த நிலை ஏற்படலாம்’ என்று அணுகுண்டையே போட்டிருக்கிறது அக்குழு. இந்தக் கணிப்பு சரியா?

‘சரிதான்’ என்கிறார் பீட்டர் வாதம்ஸ். ‘புவிச் சூட்டின் காரணமாக ஆர்க்டிக் கடல் வட துருவத்தில் பனிமலைகள் வேகமாக உருகிவருகின்றன. குறிப்பாகக் கோடை காலங்களில் எகிறும் அதிகபட்ச வெப்பநிலையால் கீரின்லாந்து எல்லீம்சர் தீவுப் பகுதிகளில் உறைபனி மறைந்துவருகிறது. இதைக் கவனிக்கையில், ‘2020-ல் ஜப்பானிலிருந்து ஆர்க்டிக் வடதுருவ வழியாக அட்லாண்டிக்கிற்கு கப்பலில் சுலபமாகச் செல்ல முடியும். இந்த மாற்றம் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது’ என்று அலராம் அடிக்கிறார் அவர்.

 ‘2008- ஆண்டு நவம்பரில் ஆர்க்டிக் கடலின் பனிப் பரப்பளவு 46 லட்சத்து 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். இதே காலட்டம் 2009-ல் 41 லட்சத்து 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்தான். ஓராண்டுக்குள் சுமார் 5 லட்சம் சதுர கிலோ மீட்டர் பனிப்பரப்பு காணாமல் போய்விட்டது. அதோடு உறைபனி மேலே நடந்து ஆய்வு செய்தபோது பல இடங்களில் பனிக்கட்டியின் அடர்த்திக் குறைந்திருப்பதையும் காண முடிந்தது’ என்று தன் பங்குக்குக் கிலி ஏற்படுத்தியுள்ளார் பேராசிரியர் பேராசிரியர் பென் ஹாடோவ்.

2007-ம் ஆண்டு கொலோராடோ பல்கலைக்கழகமும் இதே கருத்தையே கூறியது. ‘கடந்த 35 ஆண்டுகளாக ஆர்க்டிக் கடல் பகுதியில் பனி அளவை செயற்கைக்கோள் மூலம் கணக்கிட்டு வருகின்றனர். ஆர்க்டிக் கடல் மேற்பரப்பில் பனிப் பரப்பளவு இப்போது மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. 1979 - 2000 ஆண்டுகளுக்கு இடையே நடத்தப்பட்ட கணக்கீட்டின்படி இப்போது 16 லட்சம் சதுர கிலோ மீட்டர் பனி உருகியுள்ளது. இது அமெரிக்காவின் அலாஸ்கா மற்றும் டெக்ஸாஸ் மாநிலத்தின் பரப்பளவு அல்லது இங்கிலாந்தின் 10 மடங்கு பரப்பளவுக்குச் சமம்!’

ஆர்க்டிக் கடல் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளில் 2-7 பாரன்ஹீட் வெப்பம் அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம். இதனால், கடலில் குளிர்ந்த காற்று மறைந்து வெப்பக் காற்று சுழன்று அடிக்கிறது. இதன் காரணமாக பூமி சூடாகி பனிச்சிகரங்களில் பனி மலைகள மறைவதும், துருவக் கடல்களில் பனிப்படலங்கள் உருகுதலும் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக நடைபெறுகிறது.

100 ஆண்டுகளில் ஆர்க்டிக் கடல் பனி மறையும் என்ற முந்தைய கணிப்பு, இப்போது 10 ஆண்டுகளாகச் சுருங்கிவிட்டது. விரைவிலேயே உலகில் கடல் மட்டம் அதிகரித்து பல பகுதிகள் கடலுக்குள் சங்கமமாகி அழியும் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத - ஆனால், நிஜமாகக்கூடிய கற்பனை!

சொகுசு வாழ்க்கைக்கு விலையாக இயற்கையைக் காவுகொடுத்து வருகிறோம். இது எங்கு கொண்டு போய்விடுமோ? நிலவில் வளம் இருக்கிறதா, செவ்வாயில் நீர் இருக்கிறதா, மற்ற கோள்களில் மனிதர்கள் வாழ் முடியுமா? இப்படி வளர்ந்த நாடுகள் ஆய்வுகளில் மூழ்கிக்கிடக்கின்றன. கண் முன்னே மறைந்துவரும் ஆர்க்டிக் பனிமலையையும் கடலையும் காப்பாற்றாமல் போனால், வருங்காலச் சந்ததியினர் நம்மை மன்னிப்பார்களா?

- முத்தாரம், 9/11/2009 

26/10/2009

நிலவுடன் மோதி விளையாடு! விஞ்ஞானமா, விபரீதமா?

அக்டோபர் 9 அன்று அமெரிக்காவின் நாசா பரபரப்புடன் இருந்தது. விஞ்ஞானிகள் முகத்தில் ஏக டென்ஷன். பார்வையாளர்கள் படையெடுத்து வர நாசா அரங்கமே அல்லோலகல்லோலப்பட்டது. இந்தப் பரபரப்புக்குக் காரணம், ‘மோதி விளையாடு’ கான்செப்ட். யாருடன்? நிலவுடன்!

நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பதற்கு நிலவையே உரசிப் பார்ப்பது என்றால் சும்மாவா? இதை வெற்றிகரமாக முடித்திருகின்றனர் நாசா விஞ்ஞானிகள். நிலவுடன் மோதும் இத்திட்டத்தால் என்ன பயன்? இதனால் விபரீதங்கள் ஏற்படுமா?

அரை நூற்றாண்டு காலமாக நிலவுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பில் இருக்கின்றானர் அமெரிக்கர்கள். 40 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக நிலவில் காலடி வைத்தனர் இரு அமெரிக்க விண்வெளி வீரர்கள். நிலவில் வளங்கள் இருக்கின்றனவா? தண்ணீர் இருக்கிறதா? அங்கு மனிதர்கள் வாழ முடியுமா? இதுபோன்ற விஷயங்களை அறிவதற்காக அப்போதிருந்தே ஆய்வு செய்கிறது நாசா. 2008-ல் நிலவுக்கு அனுப்பப்பட்ட ‘சந்திரயான் - 1’ அங்கு தண்ணீர் இருப்பதை சமீபத்தில் உறுதிப்படுத்தியது.

இதற்கு முன்பே, 2006-ல் ‘நிலவில் நீர்’ ஆய்வைத் தொடங்கிவிட்டது அமெரிக்கா. இதற்காக எல்கிராஸ் (Lunar Observation and Sensing Satellite)  என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது நாசா. இந்த ஆண்டு ஜூன் 18 அன்று ‘அட்லஸ் 5’ என்ற ராக்கெட்டுடன் எல்கிராஸ் நிலவை நோக்கிப் பயணமானது. அதோடு ‘செண்டார்’ என்ற குட்டி ராக்கெட்டும் பயணித்தது. சர்ச்சைகளையும் சுமந்தே பயணித்த இவை, அக்டோபர் மாதத்தில் நிலவுடன் மோத வேண்டும் என்பதே நாசாவின் திட்டம்.

 நிலவின் மேற்பரப்பு முழுக்க சூரிய வெளிச்சம் படும் பாலைவனப் பகுதி. கீழ்ப்பகுதிக்கான தென் துருவத்தில் சூரிய வெளிச்சம் படாது. இது கரடுமுரடான பகுதியா, பாலைவனமா என்பதும் யாருக்குமே தெரியாது. ஆனால், அங்கு ஹைட்ரஜன் இருப்பது மட்டும் ஏற்கனவே உறுதியாகியுள்ளது. கூடவே ஆக்சிஜனும் இருந்துவிட்டால்? தண்ணீர் இருப்பது உறுதியாகிவிடும் என்பது நாசா விஞ்ஞானிகளின் கணிப்பு. இதை உறுதி செய்வதற்காகவே நிலவுடன் மோதும் திட்டத்தைத் தயாரித்தனர் விஞ்ஞானிகள். திட்டமிட்டப்படி அக்டோபர் 8 அன்று எல்கிராஸும் செண்டாரும் தனித்தனியாகப் பிரிந்தன.

இதை நாசாவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ‘இன்ச் பை இன்ச்’சாக கவனித்துகொண்டிருந்தனர் விஞ்ஞானிகள். செண்டார் தனியாகப் பிரிந்ததும் மணிக்கு 9 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் நிலவை நோக்கிப் பறந்தது. 9-ம் தேதி காலை அமெரிக்க நேரப்படி 11.30 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் மோதிச் சிதறியது. இதன் எடை 2 ஆயிரத்து 370 கிலோ. இவ்வளவு எடையுள்ள பொருள் நிலவுடன் மோதியது மிகப் பெரிய பள்ளம் உருவானது.

செண்டாரைப் பின்தொடர்ந்து எல்கிராஸும் நிலவை நோக்கி வேகமாகப் பயணித்தது. செண்டார் நிலவுடன் மோதியவுடன் ஏற்பட்ட வெளிச்சத்தை வைத்து எல்கிராஸில் பொருத்தப்பட்டிருந்த நவீன கேமராக்கள் படங்களை எடுத்து நாசாவுக்கு அனுப்பின. சில நிமிடங்கள் கழித்து எல்கிராஸும் 2 கி.மீ.  தள்ளி இன்னொரு இடத்தில் மோதியது. இவை அனைத்தும் வெற்றிகரமாக நடந்தேறின. இந்நிகழ்ச்சி நாசாவின் வெப்சைட்டில் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நிலவுடன் மோதும் திட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அடுத்து?

 நிலவில் மோதிய இடம்
“ராக்கெட் மோதல்களின் விளைவுகளை கண்காணிக்க வேறொரு விண்கலம் அனுப்பப்பட உள்ளது. ராக்கெட் மோதலில் 90 மீட்டர் ஆழத்துக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மோதி வெடித்துச் சிதறிய பாகங்கள், நெருப்புத் துகள்கள் 30 மைல் தூரம் வரை விழுந்துள்ளன. இவை விழுந்த இடத்தில் ஐஸ் இருந்தால், அது உருகி ஒடும். இதை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” என்கிறார் இத்திட்ட மேலாளர் டேனியல் ஆண்ட்ரூஸ்.

‘இது நிலவு மீதான தாக்குதல். இதனால் நிலா வெளிச்சம் பூமிக்கு வராமல் போக வாய்ப்பு உண்டு. இப்படி மிகப் பெரிய மோதலை ஏற்படுத்தும்போது பின்விளைவுகளை ஆராயாமல் செய்துள்ளனர்” என்று பொரிந்து தள்ளுகின்றனர் இன்னொரு பிரிவு விஞ்ஞானிகள்.

நிலவில் ராக்கெட் மோதி இத்தனை நாட்கள் கடந்த நிலையிலும் இப்படி ஒரு ரிப்போர்ட் பதிவாகவில்லை என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். “ நிலவில் அடிக்கடி விண்கற்கள் விழுந்துள்ளன. அதுமட்டுமல்ல,  நிலவுக்கு அனுப்பப்படும் விண்கலங்கள் திட்டக்காலம் முடிந்ததும் நிலவுடன் மோதுவது வாடிக்கையான நிகழ்வு அதுபோலத்தான் இதுவும். இப்போது நடந்துள்ள மோதலால் நிலவுக்கு எந்தப் பாதிப்பும் வராது. நிலவில் மோதிய இடத்தையும் அதனால் ஏற்பட்ட பள்ளத்தையும் நாசாவில் இருந்து அமெச்சூர் டெலஸ்கோப் மூலம் கண்காணிக்கிறோம். பூமியில் இருந்து எந்த நாட்டு விஞ்ஞானியும் ‘ஃபால்மர் 200 இன்ச் டெலஸ்கோப்’ மூலம் நிலவைக் கண்காணிக்க முடியும். எனவே, பீதி தேவையில்லை” என்று உறுதியாகக் கூறுகின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

 “நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை முதலில் உறுதிப்படுத்தியது ‘சந்திரயான் - 1’தான். இப்போது நாசா மேற்கொண்டுள்ள ஆய்வின் மூலம் நிரூபணம் ஆகும்போது இது மிகப்பெரிய கண்டுபிடிப்புத் திட்டமாகக் கருதப்படும்” என்று கூறியுள்ளார் நாசா இயக்குநர் பீட் வொர்டன்.
 நிலம், தண்ணீர், காற்று என மூன்றும் இருந்தால் நிலவில் மனிதர்களைக் குடியமர்த்திவிடலாம் என்று பரபரக்கின்றனர் அமெரிக்கர்கள். நிலவில் தண்ணீர் இருப்பது உறுதியாகுமா? இதை விரைவிலேயே இந்த ஆய்வு சொல்லிவிடும். எதற்கும் நிலவில் ஃபாளட் பார்த்து வைப்பது நல்லது!

முத்தாரம், 26-10-2009    

22/09/2009

சீண்டும் சீனா!

 நேருவுடன் சூயென்லாய்
'பாகிஸ்தானை விட இந்தியாவுக்கு எதிரி நாடு சீனாதான்' என்று நம் நாட்டு அரசியல்வாதிகளில் சிலர் அடிக்கடி கூறுவதுண்டு. குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் கொண்டது சீனா. இந்தியாவுடன் நட்புறவு என்று பேசிக் கொண்டே எல்லையில் கைவரிசையை காட்டுவதில் சீனா கில்லாடி!

1962ம் ஆண்டில் சீன பிரதமர் சூயென்லாய் இந்தியாவுக்கு வந்து சென்ற ஒரு வார காலத்திற்குள்ளாக யாருமே எதிர்பார்க்காத வேளையில் இந்தியா மீது போரைத் தொடுத்துது அந்த நாடு. இப்போதும் அப்படித்தான். எல்லையில் அத்துமீறி நுழைவது, இந்தியாவின் கண்காணிப்பு சாதனங்களை சேதப்படுத்துவது, இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கு போலிப் பொருட்களை அனுப்புவது என தொடர்கிறது. இந்தியா மீது சீனாவுக்கு அப்படி என்ன கோபம், வெறுப்பு..?

1949ம் ஆண்டில் சீனா குடியரசு நாடாக உருவானது. அதை முதலில் அங்கீகரித்த நாடு இந்தியதான். 1950ம் ஆண்டில் கொரிய போரில் சீனா மூக்கை நுழைத்த போது உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளானது. அப்போது கூட சீனாவுக்கு ஆதரவாகவே இருந்தது இந்தியா. இப்படி வெளிப்படையாக தனது ஆதரவையும், நட்பையும் வெளிப்படுத்திய இந்தியாவுக்கு சீனா கொடுத்த பரிசு என்ன தெரியுமா? நம்பிக்கைத் துரோகம்!

இந்தியா - சீனா - திபெத் நாடுகளின் எல்லைக்கோட்டுப் பகுதியாக மக்மோஹன் எல்லைக்கோடு உள்ளது. 1951ம் ஆண்டில் திபெத் மற்றும் ஜின்ஜியாங் பகுதிகளுக்கு இடையே 1200 கி.மீ. தொலைவுக்குச் சாலை அமைத்தது சீனா. அந்த சாலை இந்திய எல்லைப் பகுதியான அக்ஸாய்சின் வரை நீண்டது.

1954ம் ஆண்டில் சீனா வெளியிட்ட அந்நாட்டு வரைப்படத்தில் 1,20,000 சதுர கி.மீ. இந்தியப் பகுதிகளை இணைத்து வெளியிட்டது. காஷ்மீரில் அக்ஸாய்சின், சிக்கிம், அருணாச்சலப்பிரதேசத்தையும் (இது தெற்கு திபெத்தாம்!) தங்கள் நாட்டின் பகுதியாக காட்டியது. அந்த காலகட்டத்தில் அக்ஸாய்சின் பகுதியில் சில இடங்களை சீனா ஆக்கிரமிக்கவும் செய்தது. பின்னர் இரு நாடுகளின் எல்லைப் பிரச்னை பஞ்ச சீலக் கொள்கையின் மூலம் தீர்க்க முடிவு செய்யப்பட்டது.

50 ஆண்டுகளுக்கு முன்பு திபெத் மீது படையெடுத்தது சீனா. தனி நாடாக இருந்த திபெத்தை தங்கள் நாட்டின் பகுதியாக சீனா அறிவித்தது. இந்தியாவிடம் அடைக்கலாம் கேட்டார் திபெத் தலைவரான தலாய் லாமா. இந்தியாவுக்கு அவருக்கு அடைக்கலம் அளித்தது. தலாய் லாமாவை ஒப்படைக்கும்படி இந்தியாவை சீனா வற்புறுத்தியும் பயனில்லாமல் போகவே, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு பின் இரு நாடுகளும் இரு துருவங்களாகின.

1962ம் செப்டம்பர் 19 அன்று இந்தியா மீது போர் தொடுத்தது சீனா. காஷ்மீரில் அக்ஸாய்சின் , அருணாச்சலப்பிரதேச எல்லைப் பகுதியில்போர் உச்சக்கட்டத்தை எட்டியது. ஏற்கனவே இந்திய எல்லைப் பகுதியை ஆக்கிமித்திருந்த சீனா, மேலும் முன்னேறி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தது. அஸ்ஸாம் மாநிலத்தில் தேஜ்பூர் வரை சீனப்படையினர் முன்னேறினர்.
1962 போர்க் களத்தில் நேரு

சர்வதேச நாடுகளின் நெருக்கடியை அடுத்து போரை நிறுத்திக் கொண்டது சீனா. இந்தப் போரில் 33 ஆயிரம் சதுர கி.மீ. நிலப்பகுதியை சீனாவிடம் இழந்தது இந்தியா.
‘‘சீனாவின் பழைய பகுதிகளை ஏற்கனவே இந்திய ராணுவம் கைப்பற்றி இருந்தது. அவர்களை பழைய இடத்துக்கு விரட்டும் நோக்கம் நிறைவேறி விட்டது. மீண்டும் இந்தியா ஆக்கிரமிப்பு செய்தால் தாக்குவோம்‘‘ என்று அறிவிப்பு வெளியிட்டது சீனா.
ஆனால் ‘‘இந்தியாவுடனான போர் மக்மோஹன் எல்லை பற்றியது அல்ல, திபெத் பற்றியது‘‘ என விளக்கம் அளித்தார் அந்நாட்டு தேசியத் தலைவர் மா சே துங்.

இந்தியாவுடன் நேரடியாக மோதிய சீனா போருக்குப் பின் தந்திர வேலைகளையும் கச்சிதமாகச் செய்ய ஆரம்பித்தது. இந்தியாவை எதிரியாகக் கருதும் பாகிஸ்தானுக்கு ஏராளமான நிதி, தொழில்நுட்ப, ஆயுத உதவிகளைச் செய்வது, இந்தியாவில் உள்ள பிரிவினை சக்திகளுக்கு நிதி உதவி அளிப்பது, விடுதலைப்புலிகளை ஒடுக்குதல் என்ற போர்வையிலும், போருக்குப் பின் உதவி என்ற பெயரிலும் இலங்கைக்கு உதவி செய்து இந்தியாவுக்கு எதிராக தளம் அமைத்து வருவது, மியான்மருடன் நெருங்கிய உறவு வைத்து இந்திய வளர்ச்சிக்கு செக் வைப்பது என சீனாவின் சூழ்ச்சிகள் இன்னும் தொடர்கின்றன.

சமீப காலமாக இந்திய எல்லைப் பகுதியில் நேரடியாகவே அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது சீனா. இந்திய எல்லைப் பகுதியில் ஹெலிகாப்டரில் பறப்பது, எல்லையில் சிவப்பு வண்ணத்தில் சீனா எழுதி வைப்பது, இந்தியாவின் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கேமராக்களை சேதப்படுத்துவது, காஷ்மீர் எல்லைப்பகுதியான காரகோரத்தில் வாழும் கிராம மக்களை மிரட்டி விரட்டுவது என அத்துமீறல்கள் தொடர்கின்றன.

எல்லைப்பகுதியில் விளையாட்டு காட்டிய சீனா அடுத்தகட்டமாக இந்தியப் பொருளாதாரம் மீது போரை ஏவி வருகிறது. பொருளாதார ரீதியாக இந்தியா வளர்ச்சியடைந்துவிடக்கூடாது என்பதற்காக போலி பொருட்களை உற்பத்தி செய்து ‘மேட் இன் இந்தியா’ என உலக நாடுகளில் விற்பனை செய்து வருகிறது என நீண்ட பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. சர்வதேச அடையாள குறிப்பெண்கள் இல்லாமல் பால் பொருட்கள், மருந்துகள், செல்போன், பொம்மைகள், எலக்ட்ரானிக் பொருட்களை அனுப்பி வைத்து நம் பொருளாதார வளரச்சியை அசைத்துப் பார்க்கும் வேலையிலும் இறங்கியுள்ளது சீனா.

இதற்கெல்லாம் காரணம்? எந்த ரூபத்திலும் ஆசியாவின் வல்லரசு என்ற

இந்திய-சீன எல்லை
நிலையை இந்தியா அடைந்து விடக்கூடாது என்பதே... ஆசியாவில் ‘பெரியண்ண‘னாக தானே இருக்க வேண்டும் என்று நினைக்கிறது சீனா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தார். ‘‘சீனா மீது இந்தியா சிறு நடவடிக்கை எடுத்தாலும் சிதறி விடும். மத ரீதியாக உள்ள இந்தியாவில் ஜாதி, இன ரீதியாகவும் மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். இந்த நாட்டை சிதறடிப்பது பெரிய விஷயமில்லை‘‘ என்
று குறிப்பிட்டு இருந்தார். ஜாதி, இனம், மொழி, கலாசாரம் என பிரிந்து கிடந்தாலும் நாட்டுப் பற்றை வெளிப்படுத்துவதில் இந்தியர்களை அடித்துக் கொள்ள ஆட்களே இல்லை.. இது சீனர்களுக்கு புரியவில்லை.. அய்யோ பாவம்!

- முத்தாரம், 22-09-2009


13/08/2009

அரிஹந்த் ஆட்டம் ஆரம்பம்!


இனி நாமும் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம். வளர்ந்த நாடுகளிடம் மட்டுமே உள்ள அணு நீர்மூழ்கிக் கப்பலை இந்தியாவும் சுயமாகத் தயாரித்துள்ளது. இந்தியாவிடம் அணு நீர்மூழ்கிக் கப்பல் இருக்க வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெட்டார் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி. அவருடைய 25-வது நினைவு தின ஆண்டில் அணு நீர்மூழ்கிக் கப்பல் பயணத்தை தொடங்கியுள்ளதன் மூலம் இந்திராவின் கனவும் நிறைவேறியிருக்கிறது!

சீனா, பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அணு நீர்மூழ்கிக் கப்பல்  தேவை என்ற சிந்தனை 1960-களில் எழுந்தது. குறிப்பாக சீனா நிலம், நீர், ஆகாய மார்க்கமாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தது. இதனால், 1974-ல் பொக்ரானில் முதல் அணுகுண்டு சோதனை நடத்த அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி உத்தரவிட்டார். தொடர்ச்சியாக இந்திய கடற்படையும் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையமும் சுயமாகவே அணு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கும் யோசனையை மத்திய அரசுக்கு தெரிவித்தன.

அதே 1974-ம் ஆண்டில் அணு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கும் பணியை மேற்கொள்ளுமாறு பாபா அணு ஆராய்ச்சி மையத்துக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்துக்கும் (டி.ஆர்.டி.ஓ) உத்தரவிட்டார் பிரதமர் இந்திராகாந்தி. இந்தியா சுயமாகவே ஓர் அணு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கினால், அது உலக நாடுகளிடையே எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் இந்திரா நன்றாகவே உணர்ந்திருந்தார். அதனால், அணு நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை ரகசியமாகவே வைத்திருந்தது இந்தியா.
1974-ல் உத்தரவிட்டிருந்தாலும், பணி  தொடங்கியது 1984-ம் ஆண்டில்தான்.

‘கப்பல் நகரம்’ என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ‘அதிநவீன தொழில்நுட்பக் கப்பல்’ என்ற பெயரில் அணு நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் பணி ரகசியமாகத் தொடங்கியது. அதே ஆண்டே இந்திரா காந்தி
மறைந்தார். இதன்பின் வந்த பிரதமர்களும் அணு நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்குவதில் ஆர்வம் காட்டினர். 25 ஆண்டு கால உழைப்புக்குப் பிறகு ‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’ எனப் பெயரிடப்பட்ட அணு நீர்மூழ்கிக் கப்பல் ஜூலை 26-ம் தேதி அன்று சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தியாவிடம் ஏற்கனவே டீசல் - மின்சாரம் மூலம் இயங்கும் 16 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. இந்தக் கப்பல்களால் நீண்ட நாட்களுக்கு நீருக்குள்ளேயே இருக்க முடியாது. புகையை வெளியிடவும் பேட்டரியை சார்ஜ் செய்யவும் அவ்வப்போது கடல் நீருக்கு மேலே வர வேண்டும்.

அணு உலையால் உருவாகும் உயர் வெப்பநிலையில் செயல்படும் நீராவி எஞ்சினால் இயங்குகிறது, அணு நீர்மூழ்கிக் கப்பல். கடல் நீரில் ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் இக்கப்பலில் உள்ளதால், அணு நீர்மூழ்கிக் கப்பல் நீரில் பல மாதங்கள் இருக்க முடியும். பல ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு மூழ்கியபடியே பயணிக்கவும் செய்யும். கப்பலில் ஊழியர்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் பல நாட்களுக்கு சேமிக்கும் வசதி இருக்கிறது.
அவசரப் பணிக்காக மட்டுமே வெளியே வரலாம். கடலுக்கு அடியில் அணு நீர்மூழ்கிக் கப்பல் இருக்கிறதா என்று எதிரிகள் சோதித்தாலும் பயனில்லை. அந்தளவு நவீன தொழில்நுட்பங்கள் இக்கப்பலில் புகுத்தப்பட்டுள்ளன.

ஐ.என்.எஸ். அரிஹந்த் அணு நீர்மூழ்கிக் கப்பல் 112 மீட்டர் நீளமும் 25 மீட்டர் அகலமும் கொண்டது. கப்பலின் அதிநவீன வெசல்ஸ் 6 ஆயிரம் டன் எடை கொண்டது. கடலுக்கு அடியில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் கப்பல் பயணிக்கும். கடலுக்கு அடியில் 44 கி.மீ. வேகத்திலும் கடலுக்கு மேலே 28 கி.மீ. வேகத்திலும் பயணம் செய்யும் திறன் உடையது. 95 பேர் பயணம் செய்யலாம்.
கடலுக்கு இருந்தபடியே எதிரிகளை குறிப்பார்த்து ஏவுகணையால் வீழ்த்தும் வசதியும் இக்கப்பலில் உள்ளது. இதில் ‘சகாரா பாலிஸ்டிக்’ ஏவுகணை பொருத்த கடற்படை முடிவு செய்துள்ளது. ஒரே நேரத்தில் 4 புறமும் ஏவுகணையைச் செலுத்தி எதிரிகளின் இலக்குகளை 750 கி.மீ. தாண்டி தாக்கும் வல்லமை இக்கப்பலுக்கு உள்ளது. எதிர்காலத்தில் 3,500 கி.மீ. தாண்டி இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் பொருத்தவும் திட்டமுண்டு.

ஏவுகணைகளோடு அணுகுண்டுகளையும் இணைத்து அனுப்ப முடியும்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் 80 மெகாவாட் அணுசக்தி உலையால் இயங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அணுசக்தி உலை கல்பாக்கம் அணுசக்தி நிலையத்தில் உருவாக்கப்பட்டது. இதனால், தமிழகத்தின் பங்கும் இக்கப்பலில் உள்ளது. இப்போது இக்கப்பல் வங்காள விரிகுடா கடல் பகுதியில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இரண்டாண்டுகள் கழித்து ஐ.என்.எஸ். அரிஹந்த் இந்திய கப்பல் படையில் சேர்க்கப்படும்.

1950-களில்தான் அணுக் கருத்திறன் மூலம் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அந்த வரிசையில் உலகில் அணு நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருக்கும் 6-வது நாடாக இந்தியா இணைந்துள்ளது. ஏற்கனவே வான் மற்றும் நிலம் மூலம் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது. அணு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கியிருப்பதன் மூலம் கடல் மார்க்கமாகவும் அணு ஆயுதங்களை கையாளும் புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளது இந்தியா. அரிஹந்தின் ஆட்டம் (Atom) இனி ஆரம்பம்!

அரிஹந்த்!

* அரிஹந்த் என்பது சமஸ்கிருத வார்த்தை. இதற்கு ‘எதிரிகளை அழிப்பவன்’
என்று பொருள்.
* இந்தியாவின் ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பல் ரஷ்யாவின் சார்லி அணு நீர்மூழ்கிக் கப்பல் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
* அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க செலவான தொகை 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய்.
* நீர்மூழ்கிக் கப்பல் இயங்க தேவையான அணுசக்தி உலையை அமைக்க தொடக்கத்தில் சிக்கல் எழுந்தது. இதை சரிசெய்ய இந்தியாவுக்கு கைக்கொடுத்தது ரஷ்யா.
* இந்திய போர்க்கப்பல்களை பெண்கள்தான் தொடங்கி வைக்க வேண்டும் என்ற மரபு பின்பற்றப்படுகிறது. இதன்படி, பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குருசரண் கவுர் தேங்காய் உடைத்து கப்பல் சோதனை ஓட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

உலக அணுக் கப்பல்கள்!

நீர்மூழ்கிக் கப்பல்கள் 19-ம் நூற்றாண்டிலேயே பயன்பாட்டில் இருந்துள்ளன. இரண்டாம் உலகப் போரில் நீர்மூழ்கிக் கப்பல்களை அதிகளவில் பயன்படுத்தியது அமெரிக்கா. இப்போது உலகில் 49 நாடுகளில் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அமெரிக்கா (79), ரஷ்யா (44), இங்கிலாந்து (13), பிரான்ஸ் (10), சீனா (10), இந்தியா (1) என ஆறு நாடுகளிடம் மட்டுமே அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. முதல் அணு நீர்மூழ்கிக் கப்பலை 1954-ல் அமெரிக்கா உருவாக்கியது. சோவியத் யூனியன் 1956-ல் உருவாக்கியது. அர்ஜெண்டினா, பிரேசில் நாடுகள் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் முயற்சியில் உள்ளன.

- முத்தாரம், 13-08-2009

09/07/2009

அதியச கிரகணத்தால் ஆபத்து வருமா?


வானில் நடக்கும் நிகழ்வுகள் பலவும் அற்புதமே. வரும் ஜூலை 6 அன்று சந்திர கிரகணம். 22 அன்று சூரிய கிரகணம்; ஆகஸ்ட் 6 அன்று மீண்டும் சந்திர கிரகணம் என 30 நாட்களுக்குள் 3 முறை கிரகணங்கள் தோன்ற உள்ளன. வழக்கமாக கிரகணங்கள் ஏற்படும்போதெல்லாம் பூமிக்குப் பேரழிவு போன்ற பீதிகளுக்குப் பஞ்சம் இருக்காது. இப்போதும் அப்படித்தான். 30 நாட்களுக்குள் 3 முறை கிரகணங்கள் எப்படித் தோன்றுகின்றன? உண்மையிலேயே பூமியில் பேரழிவு ஏற்படுமா?

சூரிய கிரகணம் சந்திர கிரகணமும் தோன்றுவது வானில் நடைபெறும் சாதாரண நிகழ்வே. சூரியன் - சந்திரன் - பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் அமையும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கு முன்னால் நேர்க்கோட்டில் நகர்ந்துவரும் சந்திரனின் நிழல், பூமியின் மீது விழும். அப்போது சூரியனை சந்திரன் மறைக்கும். இதுவே சூரிய கிரகணம்.

சந்திரன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது. இச்சுழற்சியின்போது சூரியன் - பூமி - சந்திரன் அகியவை நேர்க்கோட்டில் அமையும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, சூரியனின் ஒளி சந்திரனில் படாமல் மறையும். இதுவே சந்திரகிரகணம், குறிப்பிட்ட சில நாட்களுக்குள்ளேயே இரண்டு அல்லது மூன்று முறைகூட கிரகணங்கள் தோன்றக்கூடும். எப்போதாவதுதான் இந்த அபூர்வ நிகழ்வுகள் நடக்கின்றன. இதற்கும் காரணம் உள்ளது.

 “சராசரியாக ஓராண்டில் 5 சூரிய கிரகணங்கள், 2 சந்திர கிரகணங்கள் ஏற்பட வேண்டும். கிரகணங்கள் அமாவாசை, பெளர்ணமியை ஒட்டியே வரும். அமாவாசை, பெளர்ணமி 15 நாட்களுக்குள் வருவதைப்போல சந்திரகிரகணமும் சூரிய கிரகணமும் 15 நாட்களுக்குள் ஏற்படலாம். தீர்க்க ரேகையில் சூரியனுக்கு 23 டிகிரி கோணத்தில் பூமி சாய்ந்திருக்கும். சந்திரன் 5 டிகிரி கோணத்தில் சாய்ந்திருக்கும். இதற்கு ஏற்றப்புள்ளி - இறக்கப்புள்ளி என்று பெயர். இந்தப் புள்ளிகளில் சூரியன், சந்திரன் நிலைகொள்ளும்போது அடுத்தடுத்து சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் தோன்றும். இது ஓர் வான்
நிகழ்வுதான். ஆனால், அபூர்வமாகவே நிகழும்.

கிரகணங்கள் உலகின் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக தெரியாது. ஒரிடத்தில் முழுமையாக இருக்கும். இன்னோர் இடத்தில் பகுதியாகத் தெரியும். இன்னும் சில இடங்களில் கால் பங்குதான் தெரியும். முழு சூரிய கிரகணமோ முழு சந்திர கிரகணமோ தெரிந்த இடத்தில் மீண்டும் சூரிய மற்றும் சந்திர கிரகணம் தெரிய 360 ஆண்டுகள் ஆகும் என்கிறார் திருச்சி அண்ணா கோளரங்கம் மற்றும் அறிவியல் மைய இயக்குநர் அழகிரிசுவாமிராஜ்.

கிரகணங்கள் ஏற்படும்போதெல்லாம் பூமியில் பேரழிவு ஏற்படும் என்ற கருத்து தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதுவும் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் இரு முறையோ மும்முறையோ கிரகணங்கள் ஏற்படும்போது பீதி மேலும் அதிகரிக்கிறது. “இரண்டு அல்லது மூன்று கிரகணங்கள் தோன்றிய கிமு 3076-ம் ஆண்டில் மகாபாரதப் போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. கிமு 3031-ல் துவாராகை பகுதி கடலில் மூழ்கியது. கி.பி. 1910 மற்றும் 1945 ஆண்டுகளில் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் நடந்தது. ஹிரோசிமா, நாகசாகியில் அணுகுண்டுகள்  வீசப்பட்டன’ என்று முந்தைய காலங்களில் தொடர் கிரகணங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற விபரீதங்களை ஒப்பிட்டுக் கூறுகிறது” பெங்களூருவைச் சேர்ந்த பாரத் கியான் அமைப்பு.
2009 முதல் 2020 வரை 6 முறை அடுத்தடுத்து 2 அல்லது 3 கிரகணங்கள் தோன்ற இருப்பதாகக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள். இந்தக் காலகட்டத்தில் போர் அல்லது பேரழிவு ஏற்படுமா, இல்லையா? “இல்லை’ என்று மறுக்கின்றனர் வானவியல் ஆராய்ச்சியாளர்கள்!

“ஒரு சம்பவம் ஏற்பட்டபோது கிரகணங்கள் ஏற்பட்டிருக்கலாம். இது எதிர்பாராமல் நடக்கும் விஷயங்கள். இதை வைத்து கிரகணம் ஏற்பட்ட நேரத்தில்தான் அந்த நிகழ்வு ஏற்பட்டது என்று கூறுவது தவறு. 1999-ம் ஆண்டில் இரண்டு கிரகணங்கள் 15 நாட்களுக்குள் ஏற்பட்டன. அப்போது பூமி, சூரியன், சந்திரன், வியாழன், வெள்ளி என 5 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்தன. அப்போதும் பேரழிவு நிச்சயம் என்று கூறினார்கள். ஆனால்,
எந்த அழிவும் ஏற்படவில்லை.

சூரியனில்தான் ஈர்ப்பு விசை மிக அதிகம். சூரியனோடு ஒப்பிடும்போது மற்ற கோள்களில் 0.2 சதவீதம் மட்டுமே ஈர்ப்பு விசை உள்ளன. ஈர்ப்பு விசை இல்லாமல் பூமியில் பேரழிவு என்பது நடக்கவே நடக்காத ஒன்று” என்று மறுக்கிறார் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத் திட்ட இயக்குநர் அய்யம்பெருமாள்.

கடைசியாக 1999-ல் அடுத்தடுத்து சில தினங்களில் 2 கிரகணங்கள் தோன்றியுள்ளன. இதன்பின் இப்போது 3 முறை கிரகணங்கள் தோன்ற உள்ளன. இதில், ஜூலை 23-ம் தேதி ஏற்பட உள்ள சூரிய கிரகணத்துக்குப் பல சிறப்புகள் உள்ளன. 500 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக நேரம் நீடிக்க உள்ள சூரிய கிரகணம் இதுவே. 6 நிமிடங்கள் 39 விநாடிகள் வரை நீடிக்கும். இதன்பின் 2049-ம் ஆண்டுதான் அதிகளவு நீடிக்கும் சூரிய கிரகணம் ஏற்படும். அதுமட்டுல்ல... இந்த நூற்றாண்டில் இந்தியாவில் தெரியும் கடைசி சூரிய கிரகணமும் இதுவே. 105 ஆண்டுகள் கழித்து 2114 ஜூன் 3 அன்றுதான் இந்தியாவில் சூரிய கிரகணம் தெரியும். இந்த நூற்றாண்டில் வாழும் இந்திய மக்களுக்கு இது அதிசய கிரகணம் என்றால் மிகையில்லை!

கண்ணைப் பறிக்குமா கிரகணம்?

சூரிய கிரகணம் ஏற்படும்போது வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. கண்ணில் உள்ள விழித்திரை சுருங்கி விரியும் தன்மை கொண்டது. சாதாரணமாக சூரியனை சிறிது நேரம் பார்த்துவிட்டு வீட்டுக்குள் சென்றாலே இருட்டாக இருக்கும். சூரிய ஒளி கண்ணில் படும்போது விழித்துரை மூடிக்கொண்டதால் ஏற்படும் பாதிப்பு இது. சாதாரண நேரத்திலேயே பாதிப்பு என்றால், சூரிய
கிரகணத்தின்போது சொல்லவே தேவையில்லை!
சூரிய கிரகணத்தின்போது அகச்சிவப்பு கதிர்கள் சூரியனில் அதிகளவு உருவாகும். அந்த நேரத்தில் ஒளியின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். அப்போது வெறும் கண்ணிலோ அல்லது தொலைநோக்கியிலோ சூரியனை பார்த்தால் விழித்திரை கிழிந்துவிடும். இதனால், நிரந்தர கண் பாதிப்பு ஏற்படும். ‘பிளாஸ்மா வெல்டிங் கிளாஸ்’ மூலம் சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். இது சூரியனின் ஒளியைப் பல மடங்கு சிறிதாக்கிக் காட்டும். சந்திர கிரகணத்தை சாதாரணமாகவே பார்க்கலாம்.

முத்தாரம், 09-07-2009  

23/04/2009

முகத்தை புதுசாக்கலாம்! பிளாஸ்டிக் சர்ஜரியின் புதிய பரிமாணம்


சில ஆண்டுகளுக்கு முன் கறுப்பின பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் தன் முகத்தோற்றத்தை மாற்றி, திடீரென வெள்ளை நிறமாகி பரபரப்பு ஏற்படுத்தினார். நம்மூர் நடிகை ஸ்ரீதேவி மூக்கை மாற்றியமைத்ததும் முக்கிய செய்தியானது. இவையெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி என்று சொல்லக்கூடிய அறுவை சிகிச்சையால் சாத்தியமானவைதான். இப்போதோ ‘முகம் மாற்று அறுவை சிகிச்சை’ மருத்துவ உலகில் புதிய அத்தியாயத்தை அரங்கேற்றி வருகிறது. லண்டனில் இச்சிகிச்சை செய்ய 34 பேர் காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு புதிய முகம்  அளிக்க அரசு அனுமதி பெற்றிருக்கிறார் டாக்டர் பீட்டர் பட்லர்.

முகம் மாற்று அறுவை சிகிச்சை என்பது இறந்தார் ஒருவருடைய முகத்தின் தசை, கண், இமையின் கீழ் இருக்கும் பகுதி, ரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகள் ஆகியவற்றை எடுத்து, முகம் சேதமடைந்து வேறொருவருக்குப் பொருத்துவதே. இதற்கு, முகப் பகுதிகளை இறந்த சில சில மணி நேரத்துக்குள்ளாக எடுத்தாக வேண்டும். இறந்தவரின் பாலினம், வயது, தசைகள் ஆகியவையும் பொருத்தப்பட வேண்டியவருக்குப் பொருத்தமானதா எனப் பார்க்க வேண்டும். இன்னும் முக்கியம்,  திசுக்கள் பொருத்தம் பார்ப்பது.

 ‘புதிய முகம்’ படத்தில் நடிகர் வினீத்துக்கு இப்படி ஆபரேஷன் செய்து, சுரேஷ் மேனனாக அவர் மாறிவிடுவார். ‘குரு சிஷ்யன்’ படத்தில் நடிகர் ரவிச்சந்திரன், நடிகர் செந்தாமரையின் முகமூடியை அணிந்துகொண்டு பிரபுவின் பெற்றோரைக் கொன்றுவிடுவார். இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்! முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவரின் முகம், தானம் செய்தவரின் முகம் போல இருக்குமா என்றால், ‘இருக்காது’ என்பதுதான் மருத்துவர்களின் பதில். ஏற்கனவே முகம் பாதிக்கப்பட்ட நிலையில், இன்னொருவரின் முகப்பகுதிகளை பொருத்தும்போது அதே தோற்றம் கிடைக்காது என்கின்றனர் மருத்துவர்கள்.

2005-ம் ஆண்டுதான் முகம் மாற்று அறுவை சிகிச்சைக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது. பிரான்ஸ் நாட்டில் இசபெல்லா டினோரி என்ற 38 வயது பெண்ணை நாய் கடித்து குதறியது. இதில் அவருடைய முகம் ரணகளமானது. டாக்டர் அமின்ஸை அவர் அணுகவே, முகம் மாற்று அறுவை சிகிச்சை நடந்தேறியது. மூக்கு, உதடு, தாடை ஆகிய பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டன. அடுத்து சீனாவில் லீ கோவ்ங் என்பவர் கரடியால் தாக்கப்பட்டு இச்சிகிச்சையைப் பெற்றார். ஐரோப்பாவில் மரபியல் காரணங்களால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இச்சிகிச்சை தரப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் முகம் மாற்று சிகிச்சை செய்ய அரசு
இசபெல்லா டினோரி
அனுமதி வழங்கியது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டுதான் முதல் முகம் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இது உலகின் 4-வது சிகிச்சை. இதற்கு நும் நடந்தவற்றைக் காட்டிலும் இது முழுமையான சிகிச்சையாக அமைந்தது. இறந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை பெயர் வெளியிடப்படாத பெண்ணின் முகத்தில் 80 சதவீதம் பொருத்தினர் 12 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர்.

முகம் மாற்று அறுவை சிகிச்சை முதலில் நடைபெற்ற பிரான்சில் இப்போது அடுத்தடுத்து 2 சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. பாரிஸில் உள்ள ஹென்றி மாண்டோர் மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டில் முகத்தில் காயமடைந்த நபருக்கு சிகிச்சை நடைபெற்றது. 2004-ம் ஆண்டில் தீ விபத்தில் காயமடைந்த 30 வயது ஆணுக்கு, இந்த மாதம் (2009, ஏப்ரல்) சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆணுக்கு நெற்றி, மூக்கு, கண் இமைகள், காதுகள், தொண்டைப் பகுதி, கைகள் மாற்றியமைக்கப்பட்டன. இந்த அளவு அதிகமாக முகம் மாற்றி சிகிச்சை செய்வது இதுவே முதல் முறை.

“முகம் மாற்று அறுவை சிகிச்சை இப்போது வெற்றிகரமாகவும் நுட்பமாகவும் செய்யப்படுகிறது. நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்பவே செய்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில் அதிகளவில் முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான சிறப்பு மையங்களை தொடங்குவோம்” என்கிறார் இச்சிகிச்சையை மேற்கொண்ட டாக்டர் லாரன்ட் லான்ட்ரி. இது மருத்துவ உலகில் அதிசயமாகவும் புதிய அத்தியாயமாகவும் கருதப்படுகிறது. முகம் அதிகளவில் சேதமடைந்த ஒருவருக்கு மற்ற சிகிச்சைகள் எதுவும் பலன் தரவில்லை என்றால் மட்டுமே இதைச் செய்ய வேண்டும் என்ற குரலும் மருத்துவ உலகில் எதிரொலிக்கிறது.

இச்சிகிச்சையை மேற்கொள்வதால், நோயாளி வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும். அதுவும், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கக்கூடிய மருந்துகள். பின்விளைவுகளுக்கு நோயாளியின் மனதையும் தயார் செய்ய வேண்டும். சிகிச்சை தோல்வி அடைந்தாலோ நோயாளிக்கு நரக வேதனைதான். இப்படிப் பல பிரச்னைகளும் இருப்பதால், இந்தச் சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இன்னும் பல நாடுகளில் முகம் மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி தரப்படவில்லை. தேடப்படும் பயங்கரவாதிகள்,  முக்கிய குற்றவாளிகள் தங்கள் முகத்தை மாற்றியமைத்து தப்பிக்க வாய்ப்பு இருப்பதாக நினைப்பதே இதற்குக் காரணம். இந்தியாவில் பலவித மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்து வந்தாலும், முகம் மாற்று அறுவை சிகிச்சை பற்றிய சிந்தனை வலுப்பெறவில்லை. இதயம், சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையைப் போல உயிர்க் காக்கும் சிகிச்சையாக இல்லாமல், உடலை மேம்படுத்தும் சிகிச்சையாகவே இது பார்க்கப்படுகிறது என்பதும் உண்மையே!

- முத்தாரம், 23-04-2009

16/04/2009

ஜி20 நாடுகள் உருவான கதை!


லண்டனில் நடந்து முடிந்திருக்கிறது ஜி20 உச்சி மாநாடு. உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி அப்படி என்னதான் விவாதிக்கிறார்கள்? இது பாமர மக்களுக்கு எழும் கேள்வி.

உலகப் பொருளாதாரம் இப்போது தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடி காரணமாக வேலையிழப்பு, ஊதியம் இழப்பு, வாங்கும் சக்தி இழப்பு எனப் பல நாட்டு மக்களின் கனவுகள் தகர்ந்துகொண்டிருக்கின்றன. ஜி20 உச்சி மாநாடு என்பது பொருளாதாரம் சார்ந்து விவாதிக்கும் இடம். அந்த வளர்ச்சியைத் தக்க வைப்பது, வளரும் நாடுகளின் பொருளாதார நிலை எனப் பலவற்றை இந்த மாநாட்டில் பேசுவதைத் தலைவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாகத் திகழும் நாடுகள்தான் ஜி20 கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன. உலகப் பொருளாதாரத்தின் 85 சதவீத வளர்ச்சி ஜி20 கூட்டமைப்பு நாடுகளைச் சார்ந்தே இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

1990ம் ஆண்டுக்கு முன்புவரை ஜி20 என்ற கட்டமைப்பே இல்லை. ஜி8 என்ற வளர்ந்த நாடுகளின் கூட்டமைபு மட்டுமே இருந்தது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. பல நாடுகள் உலக சந்தையாக மாறிய பின் ஜி8 கூட்டமைப்பு நாடுகள் மட்டுமல்லாமல், பல நாட்கள் அடங்கிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியது.

குறிப்பாக, வளரும் நாடுகள் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. 1998-ம் ஆண்டில் ஜி8 உச்சி மாநாடு வாஷிங்டனில் நடந்தது. ஜி8 கூட்டமைப்பில் உள்ள நாடுகள் உட்பட் மற்ற நாடுகளும் அங்கம் வகிக்கக்கூடிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் அப்போதுதான் நிறைவேற்றப்பட்டது. இதன் முக்கிய சாரம்சமே, உலகப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நிதியம் மற்ற நாடுகளுடன் இணைந்து மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதுதான்.

இதைத் தொடர்ந்து மற்ற நாடுகள் அடங்கிய கூட்டமைப்பை உருவாக்க, 1999-ம் ஆண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இருமுறை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகள் கலந்துகொண்டன. தொடக்கத்தில் 33 நாடுகளைக் கொண்ட ஜி33 கூட்டமைப்பை உருவாக்கவே முடிவு செய்யப்பட்டது. இறுதியாக, அது குறைக்கப்பட்டு ஜி20 ஆக ஆனது. இந்தக் கூட்டமைப்பில்
அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, செக் குடியரசு ஆகிய நாடுகளைக் கொண்ட அமைப்பாக உருவானது. ஜி20 நாடுகளின் முதல் உச்சி மாநாடு 1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெர்லின் நகரில் நடைபெற்றது.

சிஸ்டமெடிக்காக இயங்கும் முக்கிய ஆலைகளின் வளர்ச்சி, உலகப் பொருளாதார வளர்ச்சி, அதை நீட்டிக்கச் செய்வது, சர்வதேச நிதி சந்தையை ஒருங்கிணைந்து ஒத்துழைப்பை மாற்றியமைப்பது, சர்வதேச நிதி நிறுவனத்தை மாற்றுவது ஆகியவை குறித்து ஜி20 உச்சி மாநாடுகளில் விவாதிக்கப்பட்டு வந்துள்ளன. ஒவ்வொரு நாடும்  தங்களின் ஒரு கருத்தை ஜி20 உச்சி மாநாட்டில் பதிவு செய்ய முடியும். கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள மற்ற நாடுகள் அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் அது செயல் திட்டத்தில் சேர்க்கப்படும்.

இப்போது லண்டனில் நடந்த ஜி20 உச்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக உலக நாடுகள் பல தத்தளித்து வரும் சூழலில் இந்த உச்சி மாநாடு நடந்துள்ளது. அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றபின் முதன் முறையாக ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில், சர்வதேச பொருளாதார நெருக்கடியைக் குறைக்க ஒரு ட்ரில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் 50 லட்சம் கோடி ரூபாய்) உலக வங்கிக்கும், சர்வதேச நிதியத்துக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வருங்காலங்களில் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. இதன் மூலம் ஓரளவுக்காவது பொருளாதார நெருக்கடி குறைந்தால், அது உலக மக்களை கொஞ்சமாவது நிம்மதியடையச் செய்யும் என்று நம்பலாம்.

ஜி20 - சில தகவல்கள்

* ஜி20 கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் ஆகியோரைக் கொண்டுதான் இது தோற்றுவிக்கப்பட்டது.
* இந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகள் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, சர்வதேச கண்காணிப்பு நிதியம் ஆகிய அமைப்புகளும் கலந்துகொள்ளும்.
* கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் சுழற்சி முறையில் தலைமை பொறுப்பை வகிப்பார்கள். தற்போது சுழற்சி முறையில் இங்கிலாந்து, தலைமை பொறுப்பில் உள்ளது. இதனாலேயே ஜி20 உச்சி மாநாடு இந்த முறை லண்டனில் நடைபெற்றது. அடுத்த தலைமைப் பொறுப்பு தென் கொரியாவுக்குக் கிடைக்கும்.
* ஜி8 பணக்கார நாடுகளின் கூட்டமைப்பைவிட ஜி20 கூட்டமைப்பு சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பணக்கார நாடுகளின் வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருக்கும் வளரும் நாடுகள் கூட்டமைப்பில் இடம் பெற்றிருப்பதால், அவர்களின் குரலுக்கு மதிப்பு தரும் நிலையில் ஜி8 கூட்டமைப்பு உள்ளது.
* 1999-ம் ஆண்டு முதல் ஜி20 உச்சை மாநாடு நடந்தது. இதன்பின் 15 முறை உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
* பணக்கார நாடுகள் எப்படி ஜி8 என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனவோ, அதுபோல இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகள் சேர்ந்து ஜி4 என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில், நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ஒருவரையொருவர் ஆதரிக்கவே ஜி4 உருவாக்கப்பட்டது.

முத்தாரம், 16-04-2009