வானில் நடக்கும் நிகழ்வுகள் பலவும் அற்புதமே. வரும் ஜூலை 6 அன்று சந்திர கிரகணம். 22 அன்று சூரிய கிரகணம்; ஆகஸ்ட் 6 அன்று மீண்டும் சந்திர கிரகணம் என 30 நாட்களுக்குள் 3 முறை கிரகணங்கள் தோன்ற உள்ளன. வழக்கமாக கிரகணங்கள் ஏற்படும்போதெல்லாம் பூமிக்குப் பேரழிவு போன்ற பீதிகளுக்குப் பஞ்சம் இருக்காது. இப்போதும் அப்படித்தான். 30 நாட்களுக்குள் 3 முறை கிரகணங்கள் எப்படித் தோன்றுகின்றன? உண்மையிலேயே பூமியில் பேரழிவு ஏற்படுமா?
சூரிய கிரகணம் சந்திர கிரகணமும் தோன்றுவது வானில் நடைபெறும் சாதாரண நிகழ்வே. சூரியன் - சந்திரன் - பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் அமையும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கு முன்னால் நேர்க்கோட்டில் நகர்ந்துவரும் சந்திரனின் நிழல், பூமியின் மீது விழும். அப்போது சூரியனை சந்திரன் மறைக்கும். இதுவே சூரிய கிரகணம்.
சந்திரன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது. இச்சுழற்சியின்போது சூரியன் - பூமி - சந்திரன் அகியவை நேர்க்கோட்டில் அமையும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, சூரியனின் ஒளி சந்திரனில் படாமல் மறையும். இதுவே சந்திரகிரகணம், குறிப்பிட்ட சில நாட்களுக்குள்ளேயே இரண்டு அல்லது மூன்று முறைகூட கிரகணங்கள் தோன்றக்கூடும். எப்போதாவதுதான் இந்த அபூர்வ நிகழ்வுகள் நடக்கின்றன. இதற்கும் காரணம் உள்ளது.
“சராசரியாக ஓராண்டில் 5 சூரிய கிரகணங்கள், 2 சந்திர கிரகணங்கள் ஏற்பட வேண்டும். கிரகணங்கள் அமாவாசை, பெளர்ணமியை ஒட்டியே வரும். அமாவாசை, பெளர்ணமி 15 நாட்களுக்குள் வருவதைப்போல சந்திரகிரகணமும் சூரிய கிரகணமும் 15 நாட்களுக்குள் ஏற்படலாம். தீர்க்க ரேகையில் சூரியனுக்கு 23 டிகிரி கோணத்தில் பூமி சாய்ந்திருக்கும். சந்திரன் 5 டிகிரி கோணத்தில் சாய்ந்திருக்கும். இதற்கு ஏற்றப்புள்ளி - இறக்கப்புள்ளி என்று பெயர். இந்தப் புள்ளிகளில் சூரியன், சந்திரன் நிலைகொள்ளும்போது அடுத்தடுத்து சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் தோன்றும். இது ஓர் வான்
நிகழ்வுதான். ஆனால், அபூர்வமாகவே நிகழும்.
கிரகணங்கள் உலகின் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக தெரியாது. ஒரிடத்தில் முழுமையாக இருக்கும். இன்னோர் இடத்தில் பகுதியாகத் தெரியும். இன்னும் சில இடங்களில் கால் பங்குதான் தெரியும். முழு சூரிய கிரகணமோ முழு சந்திர கிரகணமோ தெரிந்த இடத்தில் மீண்டும் சூரிய மற்றும் சந்திர கிரகணம் தெரிய 360 ஆண்டுகள் ஆகும் என்கிறார் திருச்சி அண்ணா கோளரங்கம் மற்றும் அறிவியல் மைய இயக்குநர் அழகிரிசுவாமிராஜ்.
கிரகணங்கள் ஏற்படும்போதெல்லாம் பூமியில் பேரழிவு ஏற்படும் என்ற கருத்து தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதுவும் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் இரு முறையோ மும்முறையோ கிரகணங்கள் ஏற்படும்போது பீதி மேலும் அதிகரிக்கிறது. “இரண்டு அல்லது மூன்று கிரகணங்கள் தோன்றிய கிமு 3076-ம் ஆண்டில் மகாபாரதப் போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. கிமு 3031-ல் துவாராகை பகுதி கடலில் மூழ்கியது. கி.பி. 1910 மற்றும் 1945 ஆண்டுகளில் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் நடந்தது. ஹிரோசிமா, நாகசாகியில் அணுகுண்டுகள் வீசப்பட்டன’ என்று முந்தைய காலங்களில் தொடர் கிரகணங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற விபரீதங்களை ஒப்பிட்டுக் கூறுகிறது” பெங்களூருவைச் சேர்ந்த பாரத் கியான் அமைப்பு.
2009 முதல் 2020 வரை 6 முறை அடுத்தடுத்து 2 அல்லது 3 கிரகணங்கள் தோன்ற இருப்பதாகக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள். இந்தக் காலகட்டத்தில் போர் அல்லது பேரழிவு ஏற்படுமா, இல்லையா? “இல்லை’ என்று மறுக்கின்றனர் வானவியல் ஆராய்ச்சியாளர்கள்!
“ஒரு சம்பவம் ஏற்பட்டபோது கிரகணங்கள் ஏற்பட்டிருக்கலாம். இது எதிர்பாராமல் நடக்கும் விஷயங்கள். இதை வைத்து கிரகணம் ஏற்பட்ட நேரத்தில்தான் அந்த நிகழ்வு ஏற்பட்டது என்று கூறுவது தவறு. 1999-ம் ஆண்டில் இரண்டு கிரகணங்கள் 15 நாட்களுக்குள் ஏற்பட்டன. அப்போது பூமி, சூரியன், சந்திரன், வியாழன், வெள்ளி என 5 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்தன. அப்போதும் பேரழிவு நிச்சயம் என்று கூறினார்கள். ஆனால்,
எந்த அழிவும் ஏற்படவில்லை.
சூரியனில்தான் ஈர்ப்பு விசை மிக அதிகம். சூரியனோடு ஒப்பிடும்போது மற்ற கோள்களில் 0.2 சதவீதம் மட்டுமே ஈர்ப்பு விசை உள்ளன. ஈர்ப்பு விசை இல்லாமல் பூமியில் பேரழிவு என்பது நடக்கவே நடக்காத ஒன்று” என்று மறுக்கிறார் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத் திட்ட இயக்குநர் அய்யம்பெருமாள்.
கடைசியாக 1999-ல் அடுத்தடுத்து சில தினங்களில் 2 கிரகணங்கள் தோன்றியுள்ளன. இதன்பின் இப்போது 3 முறை கிரகணங்கள் தோன்ற உள்ளன. இதில், ஜூலை 23-ம் தேதி ஏற்பட உள்ள சூரிய கிரகணத்துக்குப் பல சிறப்புகள் உள்ளன. 500 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக நேரம் நீடிக்க உள்ள சூரிய கிரகணம் இதுவே. 6 நிமிடங்கள் 39 விநாடிகள் வரை நீடிக்கும். இதன்பின் 2049-ம் ஆண்டுதான் அதிகளவு நீடிக்கும் சூரிய கிரகணம் ஏற்படும். அதுமட்டுல்ல... இந்த நூற்றாண்டில் இந்தியாவில் தெரியும் கடைசி சூரிய கிரகணமும் இதுவே. 105 ஆண்டுகள் கழித்து 2114 ஜூன் 3 அன்றுதான் இந்தியாவில் சூரிய கிரகணம் தெரியும். இந்த நூற்றாண்டில் வாழும் இந்திய மக்களுக்கு இது அதிசய கிரகணம் என்றால் மிகையில்லை!
கண்ணைப் பறிக்குமா கிரகணம்?
சூரிய கிரகணம் ஏற்படும்போது வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. கண்ணில் உள்ள விழித்திரை சுருங்கி விரியும் தன்மை கொண்டது. சாதாரணமாக சூரியனை சிறிது நேரம் பார்த்துவிட்டு வீட்டுக்குள் சென்றாலே இருட்டாக இருக்கும். சூரிய ஒளி கண்ணில் படும்போது விழித்துரை மூடிக்கொண்டதால் ஏற்படும் பாதிப்பு இது. சாதாரண நேரத்திலேயே பாதிப்பு என்றால், சூரிய
கிரகணத்தின்போது சொல்லவே தேவையில்லை!
சூரிய கிரகணத்தின்போது அகச்சிவப்பு கதிர்கள் சூரியனில் அதிகளவு உருவாகும். அந்த நேரத்தில் ஒளியின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். அப்போது வெறும் கண்ணிலோ அல்லது தொலைநோக்கியிலோ சூரியனை பார்த்தால் விழித்திரை கிழிந்துவிடும். இதனால், நிரந்தர கண் பாதிப்பு ஏற்படும். ‘பிளாஸ்மா வெல்டிங் கிளாஸ்’ மூலம் சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். இது சூரியனின் ஒளியைப் பல மடங்கு சிறிதாக்கிக் காட்டும். சந்திர கிரகணத்தை சாதாரணமாகவே பார்க்கலாம்.
முத்தாரம், 09-07-2009
No comments:
Post a Comment