![]() |
மக்களின் மனதில் ஏற்படும் வடுக்களை ஏற்படுத்தியவற்றில் முக்கியமான ஒன்று ‘போபால் விஷ வாயு கசிவு’ விபத்து. 1984 டிசம்பர் 3 அன்று ‘யூனியன் கார்பைடு’ தொழிற்சாலையில் இருந்து விஷ வாயு கசிந்ததில் என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள்ளாகவே ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்விட்டனர். விஷ வாயு ஏற்படுத்திய தாக்கம் இன்னும் ஓயவில்லை. இப்போது பிறக்கும் குழந்தைகள்கூட ஊனமாகக் காட்சியளிக்கின்றன. இப்படி ஒரு பயங்கர விபத்து நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
மத்தியப்பிரதேச மா நிலத் தலைநகர் போபால். இங்கு 1969-ல் அமெரிக்காவில் உள்ள யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனின் பூச்சுக்கொல்லி மருந்து தயாரிக்கும் ரசாயனத் தொழிற்சாலை நிறுவப்பட்டது. இத்தொழிற்சாலையின் 51 சதவீத பங்குகளை யூனியன் கார்பைடு நிறுவனமும், 26 சதவீத பங்குகளை மத்திய அரசும், 23 சதவீத பங்குகளை 24 ஆயிரம் இந்தியர்களும் கொண்டிருந்தனர்.
இந்தத் தொழிற்சாலையில் பூச்சுக்கொல்லிக்குத் தேவையான மித்தைல் ஐசோசயனைடு (மிக்) தயாரித்து அதை சேமித்து வைக்கும் பணி நடைபெற்றது.
முக்கிய மூலத்திரவமான இதனுடன் கார்பன் டெட்ராகுளோரைடு மற்றும் ஆல்பா ஃநாப்தால் இரண்டையும் கலந்தால் பூச்சுக்கொல்லி மருந்தை உண்டாக்கலாம். இதையே இந்த ரசாயன தொழிற்சாலையின் தொழிலார்கள் செய்துவந்தனர். இவற்றில் மிக் ரசாயனம் மிகவும் வீரியமானது. கொடிய விஷத்தன்மை கொண்டது. ரசாயனத் தொழிற்சாலையில் 15 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட 3 மிக் கலன்கள் நிறுவப்பட்டன. இவற்றில் இரண்டு கலன்களில் மட்டுமே மிக் திரவம் இருக்க வேண்டும். ஒரு கலன் காலியாகவே இருக்க வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால், 1984 டிசம்பர் 3-ம் தேதி இரவு விதிமுறைக்கு மாறாக 3 கலன்களிலும் மிக் இருந்தது. இங்குதான் கவனக்குறைவு ஆரம்பமானது. விபத்து நடக்கும் வரை இந்தக் கவனக்குறையை யாருமே கண்டுகொள்ளாமல் போனதால்தான் இவ்வளவு பெரிய விபத்து நடந்தேறி, வரலாற்றில் சோகமான சம்பவமாகப் பதிந்தது. இரவுப் பணிக்கு வந்த தொழிலாளர்கள் மிக் கலனை இணைக்கும் வால்வை மட்டும் மூடிவிட்டு, கலனை மூடாமல் நீரைச் செலுத்தினர். இந்த நீர் 13 ஆயிரம் லிட்டர் மிக் இருந்த கலனில் எதிர்பாராதவிதமாகக் கொட்டியது.
ஏற்கனவே வால்வுகளில் சில சமயம் சிறுசிறு கசிவு இருந்ததால், விதிமுறைப்படி வட்டத்தட்டை இடையில் நுழைத்து கலன் தனித்து விடப்பட வேண்டும். அன்றைய தினத்தில் தட்டை அமைத்து கலனை தனித்துவிடவும் இல்லை. இதை மேலதிகாரிகளும் கவனத்தில் கொள்ளவில்லை. மிக் கலனில் நீர் கொட்டியதால், அழுத்தம் சிறிது சிறிதாக அதிகரிக்கத் தொடங்கியது. அழுத்தமானியில் 8 பி.எஸ்.ஐ. அவளவுதான் நார்மல். ஆனால், 10 என காட்டியது. அதையும் யாரும் கண்டுகொள்ளவேயில்லை. இரவு சுமார் 1 மணிக்கு அழுத்தம் 40 பி.எஸ்.ஐ. அளவை எட்டியது.
அழுத்தம் அதிகரித்ததால், கலன் உப்பி உடைய ஆரம்பித்தது. மிக் வெளியேறத் தொடங்கியது. மிக் வெளியேறியதும் தொழிலாளர்கள் பலருக்கும் கண்களில் எரிச்சல் உண்டானது. இதன்பின்னரே நிலைமையை உணர்ந்த மேலதிகாரிகளும் தொழிலாளர்களும் மிக் வெளியேறுவதைத்தடுக்க அசுர வேகத்தில் பணி மேற்கொண்டனர். ஆனால், என்ன பயன்? நிலைமை ஏற்கனவே மோசமாகியிருந்தது. மிக் விஷ வாயு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வெளியேறியது.
திடீரென 120 அடி உயரப் புகைப் போக்கியில் 10 அடிக்கு வெள்ளை புகை கிளம்பியது. மேற்புறத்தில் பரவிய புகை தாழ்ந்து காற்றுப்போன திசையெல்லாம் பரவ ஆரம்பித்தது. சம்பவம் நடக்கும்போது இரவு என்பதால், ஊரே மயான அமைதியில் இருந்தது. மக்களை எச்சரிக்கை செய்யும் பொருட்டு அதிகாலை 2 மணியளவில் அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டது. ஆனால், மக்களும் ஆழ்ந்த உறக்கத்தால் செவிமடுக்கவில்லை. காற்றில் கலந்து விஷ வாயு மக்கள் வசிக்கும் நிலப் பகுதியில் தாழ்ந்து பரவியது. விஷ வாயுவின் இந்த திடீர் தாக்குதலில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அப்படியே துயில் எழ முடியாமல் மடிந்தார்கள். திடீரென கண் விழித்தவர்கள் கண்ணெரிச்சல், நெஞ்செரிச்சல் தாங்காமல் அங்குமிங்கும் ஓடி அப்படியே உயிரைவிட்டனர்.
விடியற்காலை வரை வெளியேறிய விஷ வாயுவால் 14 ஆயிரத்து 400 பேர் மாய்ந்தனர். டிசம்பர் 3 காலைப் பொழுது போபால் நகரவாசிகளுக்கு நரகமாகிப்போனது. ஆயிரக்கணக்கான ஆடு, மாடு, நாய்களும் தெருவோரமெங்கும் மடிந்துகிடந்தன. இறந்தவர்களை எரிக்கவோ புதைக்கவோகூட இடம் இல்லாமல் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் எரித்தும் புதைத்தும் சொந்தங்களை இழந்தவர்கள் பரிதவிப்பில் ஆழ்ந்தனர். போபால் நகரின் 4.8 கிலோ மீட்டர் பரவியது விஷ வாயு. 40 டன் மிக் விஷவாயு பரவி பாசக்கயிறு வீசியதில் இறந்தவர்களைவிட கண் இழந்தவர்கள், நோயுற்றவர்கள், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 4 லட்சத்தைத் தாண்டியது.
விஷ வாயு கசிவு ஏற்பட்ட இரண்டு நாட்களில் ரணத்தை காட்டிலும் விபத்துக்கு பின்னர் நீடி(க்கும்)த்த விஷவாயுவின் தாக்கம் கொடுமையிலும் கொடுமை. குடிநீர், கிணற்று நீர் என எல்லா நீர் ஆதாரங்களிலும் விஷ வாயு பரவியதால் நீரைக்கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். நிலமும் மாசடைந்துபோனது. விஷ கசிவுக்கு ஆளான கர்ப்பிணி பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் உதடுகள் பிளவுபட்டும், கண் பார்வையிழந்தும், தைராய்டு புற்றுநோயுடனும் பிறந்தன. இன்னும் பல குழந்தைகள் இறந்தே பிறந்தன. விஷ வாயு சம்பவம் நடந்து அடுத்த 7 மாதங்களில் பிறந்த குழந்தைகள் எல்லாமே உடல் ஊனமாகவோ இறந்தோ பிறந்தன என்று கூறுகிறது ‘போபாலின் சிசுக்கள்’ என்ற புத்தகம்.
விஷ வாயுவின் தாக்கம் தொடர்ந்ததால் 1987-ம் ஆண்டில் போபால் நகரில் குழந்தை இறப்பு 5 மடங்காக அதிகரித்தது. விபத்து நடந்தபோது குழந்தையாக இருந்தவர்களுக்கு இப்போது திருமண வயதாகியும், திருமணம் செய்துவைக்க பெற்றோர் பலரும் தயங்கும் நிலையே உள்ளது. திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறக்குமோ என்ற அச்சமே இதற்குக் காரணம்.
இந்த விபத்து ஏற்பட்டு 25 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், அந்த விபத்தால் போபால் நகர மக்கள் அனுபவித்த வேதனைகளும் வலிகளும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. உலகில் ஹிரோசிமா, நாகாசாகியில் வீசப்பட்ட அணுகுண்டு வீச்சு, ரஷ்யாவில் செர்நோபில் அணு உலை வெடிப்பு சம்பவத்துக்கு அடுத்து என்றும் மறக்க முடியாத சம்பவம் போபால் விஷ வாயு கசிவு விபத்துதான்.
* இந்த விபத்தில் 5 லட்சம் பேர் நஷ்டஈடு பெற தகுதியானவர்கள் என கணக்கெடுக்கப்பட்டது. இவர்களில் பலர் தங்கள் வாழ்வு சூறையாடப்பட்டதற்கு நீதி கேட்டு இன்றும் போராடிவருகின்றனர்.
* யூனியன் கார்பைடு நிறுவனம் 35 லட்சம் டாலர் உதவித் தொகை வழங்குவதாக அறிவித்தது. நஷ்டஈடு குறைவாக இருந்ததால், மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் 47 கோடி டாலர் தொகை வழங்க ஒப்புக்கொண்டது,
* 1991-ல் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவ வசதி பெறுவதற்காக நீதிமன்ற உத்தரவுப்படி போபாலில் மருத்துவமனை அமைத்தது யூனியன் கார்பைடு நிறுவனம்.
* இந்நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி வாரன் ஆண்டர்சனை போபால் விஷ வாயு விபத்துக்குக் காரணம் என போபால் உயர் நீதிமன்றம் 2002-ல் அறிவித்தது. அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த உத்தரவை அடுத்து அவர் ஓடி ஒளிந்துகொண்டார்.
* இப்போது ‘டெள கெமிக்கல் கம்பெனி’ யூனியன் கார்பைடு நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளது. விபத்து நடந்து 25 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கும் இத்தொழிற்சாலையை மீண்டும் திறக்க இந்நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
- முத்தாரம், 30-11-2009
No comments:
Post a Comment