இன்று உலகையே பாடாய்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று நோயைப் போலவே, நூறு ஆண்டுகளுக்கு முன்பும் உலகம் ஒரு தொற்றுநோயால் உறைந்துபோய் கிடந்தது. முதலாம் உலகப் போரால் உலகம் திண்டாடிக்கொண்டிருந்த வேளையில், 1918-ம் ஆண்டில் உலகை பீதியில் உறைய வைக்க ஸ்பானிஷ் ஃப்ளூவும் கிளம்பியது. இன்று கொரோனா தொற்றுநோயைப் போலவே, அன்று பெரும்பாலான உலக நாடுகளில் ஸ்பானிஷ் ஃபுளூ ஜெட் வேகத்தில் பரவியது. 1918-ம் ஆண்டு முதல் 1920-ம் ஆண்டு வரை நீடித்த இந்த ஸ்பானிஷ் ஃபுளூ வைரஸால் உலகம் முழுவதும் 50 கோடி மக்கள் மாண்டார்கள் என்கின்றன பதிவுகள்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு உலகையே அசைத்துபார்த்த ஸ்பானிஷ் ஃபுளூ தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் ஸ்பெயினைச் சேர்ந்த ஏனா டெல் வெல்லா. 1913-ம் ஆண்டில் பிறந்த இவர், 5 வயது சிறுமியாக இருந்தபோது ஸ்பானிஷ் ஃபுளூ தொற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ஏனா டெல், சிகிச்சைக்கு பிறகு ஸ்பானிஷ் ஃபுளூ தொற்று நோயிலிருந்து மீண்டு வந்தார். அன்று சிறுமியாக நோய்தொற்றுக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்டு வந்த ஏனா டெல், 2013-ம் ஆண்டில் நூற்றாண்டைக் கடந்தார்.
ஆனால், தற்போது 107-வது வயதை எட்ட உள்ள ஏனா டெல்லுக்கு கொரோனா வடிவில் பெரும் சோதனை வந்தது. இத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயினில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிய வேளையில், ஏனா டெல் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மாட்ரிட்டில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஏனா டெல், கொரோனா நோய்தொற்றிலிருந்து மீண்டு வருவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. வயதானவர்களை கொரோனா ஒரு வழி பார்த்துவிடுகிறது என்பதால் ஏற்பட்ட சந்தேகம் இது.
ஆனால், மருத்துவமனையில் நீண்ட உயிர்ப் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவிலிருந்து பரிபூரணமாக மீண்டுவந்திருக்கிறார் ஏனே டெல். நலத்தோடு வீடும் திரும்பிவிட்டார். அவரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர் மருத்துவர்களும் ஊழியர்களும். முதியவர்களுக்கு கொரோனா நோய்தொற்று வந்தால் அவ்வளவுதான் என்று கூறப்படும் நிலையில், 107 வயதான டெல், அதிலிருந்து மீண்டுவந்து உலகுக்குப் புதிய செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்.
அதோடு, நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பானிஷ் ஃபுளூ, இப்போது கொரோனா என இரு பெரும் தொற்றுநோய்களிலிருந்து மீண்டு, ஒரு நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த இரு தொற்றுநோய்களிலும் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டவர் என்று வாழும் உதாரணமாகியிருக்கிறார். வரலாற்றில் அரிதான நிகழ்வுகள் எப்போதாவது நிகழும். அந்த வகையில் ஏனா டெல் வெல்லா நிகழ்த்தி காட்டியிருப்பது அரிதிலும் அரிதான ஒன்று!
No comments:
Post a Comment