ஸ்டூடியோக்களில் மட்டுமே சினிமா என்ற காலம் ஒன்று இருந்தது. அப்போது வெளிப்புறப் படப்பிடிப்புகள் என்பதே அரிது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அசல் உலகத்துக்கு இடம் மாறத் தொடங்கின. அப்போது சென்னையைத் தாண்டி சினிமா நகரங்கள் உருவெடுத்தன. அந்த நகரங்கள் இன்றுவரை சினிமாக்காரர்களின் சொர்க்கப்புரியாகவே இருந்துவருகின்றன.
செட்டு சினிமா
கனவுலக கதைகளைப் பேசும் சினிமாக்களின் கோயிலாக ஒரு காலத்தில் ஸ்டூடியோக்களே கோலோச்சின. தமிழ் சினிமா மிக அரிதாகவே ஸ்டுடியோக்களை விட்டு வெளியே வந்தது. தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில்கூட பெரும்பாலான படங்கள் ஸ்டுடியோக்களிலேயே எடுக்கப்பட்டன. ஆறு, குளங்கள், மலைகள், வயல்வெளிகள், நிலவு, சூரியன் என இயற்கைக்காட்சிகள்கூட அந்தக் காலத்தில் அசலானவை அல்ல. பெரும்பாலும் ஸ்டூடியோ செட்டுகள்தான். காடு, மலை, வனாந்திரங்களில் நாயகன் குதிரையில் சாகசம் செல்வதுபோல காட்சிகள் தேவைப்பட்டாலும், சில விநாடிகள் நாயகனின் முகத்தை குளோசப்பில் காட்டுடிவிட்டு டெம்ப்ளேட்டாக காடு, மலையில் குதிரையில் நாயகன் செல்வதுபோலக் காட்டிவிடுவார்கள். சினிமா சாகச காட்சிகள் பெரும்பாலும் ‘டூப்’களாகவே இருந்தன.
குட்டிக் கோடம்பாக்கம்
1970-களில் மாய பிம்பங்கள் விலகி நிஜ பிம்பங்கள் சினிமாவை ஆக்கிரமிக்கத் தொடங்கின. சினிமாவில் நிழல்களாகக் காட்டப்பட்டுவந்த ஆறுகள், குளங்கள், மலைகள், வயல்வெளிகள், வனாந்திரங்கள், தெருக்கள், வீடுகள், பங்களாக்கள் என அனைத்துமே நிஜமாயின. அப்போது சினிமாவுக்கேற்ற ரசனைமிக்க இடங்களைத் தேடி சினிமாக்காரர்கள் பயணப்பட்டார்கள். சென்னைக்கு வெளியே கோபிச்செட்டிப்பாளையம், பொள்ளாச்சி, காரைக்குடி, ஊட்டி எனப் பல சினிமா நகரங்கள் உருவாகத் தொடங்கின. இவற்றில் கோபிச்செட்டிபாளையமும் பொள்ளாச்சியும் ‘மினி கோலிவுட்’ எனச் சொல்லப்படும் அளவுக்கு நிலைபெற்றன.
தமிழ் சினிமாவில் கிராமிய சூழலில் ஒரு திரைப்படம் உருவாக்கப்படுகிறது என்றால் அதில் பொள்ளாச்சிக்கும் கோபிக்கும் நிச்சயம் இடம் இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள இந்த இரு ஊர்களிலும் அழகான வயல்வெளிகள், நீண்ட வரப்புகள், திரும்பும் இடமெல்லாம் ஓடும் கிளை ஓடைகள், ரம்மியமான ஆறு, பசுமையான புல்வெளிகள், பரவசமூட்டும் மலைகள், அச்சமூட்டும் காடுகள், கிராமக் குடியிருப்புகள், கோயில் குளங்கள், அணைக்கட்டுகள், இருபுறமும் அடர்ந்த மரங்களை கொண்ட குகை போன்ற சாலைகள் என இயற்கை அமைப்புகள் பொள்ளாச்சியும் கோபியும் சினிமா நகரங்களாக உருவாகக் காரணங்களாக இருந்தன.
![]() |
கொடிவேரி |
எந்தப் பகுதியில் கேமராவை வைத்தாலும், அழகான ஒளிப்பதிவை கொடுக்கும் இடம் எனப் பொள்ளாச்சியைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள் சினிமாக்காரர்கள். அது உண்மைதான். பொள்ளாச்சியில் கேமராவை எந்தக் கோணத்தில் வைத்தாலும் மேற்குத் தொடர்ச்சி மலையை விட்டுவிட்டு படம் பிடிக்கவே முடியாது. மலைகள் மட்டுமல்ல அழகான சமவெளியும் பொள்ளாச்சிக்கு அருகே இருக்கும் அடர்த்தியான வனங்களும், அணைக்கட்டும், வால்பாறையின் தேயிலைத் தோட்டங்களும், டாப்- சிலிப்பின் அடர்ந்த காடுகளும் திரைத்துறையின் கேமராக்களை இங்கு கொண்டுவந்து நிறுத்தின.
பொள்ளாச்சியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சுமார் 1,500 திரைப்படங்கள் படமாக்கப்பட்டிருப்பதாக சினிமா தரவுகள் வியக்க வைக்கின்றன. சுமார் 5 ஆயிரம் பாடல்கள் அல்லது கிராமப் புற காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் அசரடிக்கின்றன. தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒடியா படங்களும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் சினிமா அறையை விட்டு வெளியே வந்த காலம் முதலே பொள்ளாச்சியில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
சினிமாவின் மையம்
1970-களில் வெளிப்புறப் படப்பிடிப்புகள் பொள்ளாச்சியில் வேகம் பிடித்திருந்தாலும், அதற்கு முன்பே இங்கே படப்பிடிப்புகள் நடைபெற்றிருக்கின்றன. 1956-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான
![]() |
ஆழியார் அணை |
1970-களுக்கு பிறகு பொள்ளாச்சி இல்லாத தமிழ் சினிமா என்பது அரிதாகவே மாறிபோனது. 1970-களின் இறுதியில் தொடங்கி 2000-ம் ஆண்டுவரை தமிழ் சினிமாவின் மையமாகப் பொள்ளாச்சி மாறியது. திரைத்துறையினர் பொள்ளாச்சியை நாடி வந்ததற்கு அங்கே இருக்கும் எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளும் கிராமிய சூழலும் மட்டுமே காரணமல்ல. ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்றால் வேறு எங்கும் போகத் தேவையில்லை. பொள்ளாச்சி அருகே டாப் சிலிப், ஆழியாறு, வால்பாறை, அட்டகட்டி போன்ற பகுதிகளில் படமாக்கிவிட்டு வந்துவிடலாம். சற்று தொலைவாகப் போக வேண்டுமென்றால், கேரளாவில் சாலக்குடி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சென்று பாடல்களைப் படமாக்கிவிட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு வந்துவிடலாம்.
கொங்கு இயக்குநர்கள்
பொள்ளாச்சியில் குறைந்த பட்ஜெட்டில் படங்களை எடுத்துவிட முடியும். படப்பிடிப்புக்குத் தேவையான இடவசதி, பொருட்கள், கிராமப்படங்களுக்கு தேவையான வீட்டு விலங்குகள், ஆட்கள் என அத்தனை தேவையையும் உள்ளூர் மக்களே பூர்த்தி செய்துகொடுத்துவிடுவார்கள். சினிமாக்காரர்களை தங்கள் வீட்டு உறவினர்களைப் போல அந்தப் பகுதி மக்கள் பார்க்கும் அளவுக்கு பொள்ளாச்சியும் சினிமாவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்தன.
“அந்தக் காலத்தில் பொள்ளாச்சி, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய ஊர்களில் ஓட்டல்கள் இல்லை. அதனால், நடிகர், நடிகைகள் பொதுமக்கள் வீடுகளில்தான் தங்குவார்கள். சற்று வசதி படைத்தவர்கள் தங்கள் வீட்டில் நடிகர், நடிகைகளை தங்க வைத்து உபசரித்து அனுப்புவார்கள். சினிமா நடிகர்கள் தங்கள் வீடுகளில் தங்குவதைக் கவுரமாக மக்கள் பார்த்தனர். அப்போது படப்பிடிப்பு நடத்த கட்டணம் எதுவும் இல்லை. எங்கே வேண்டுமானாலும் படப்பிடிப்பு நடத்திக்கொள்ளலாம். மக்களே தங்களுக்கு சொந்தமான இடங்களில் சூட்டிங் நடத்த விரும்பி அழைப்பார்கள்.” என்கிறார் சினிமா புரொடக்ஷன் எக்ஸிகியூடிவான பொள்ளாச்சி ராஜ்குமார்.
பொள்ளாச்சி மட்டுமல்ல, இந்த ஊரைச் சுற்றியுள்ள ஆழியாறு, சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர், உடுமலைப்பேட்டை, காளியாபுரம், ஊத்துக்குளி, நெகமம், கிணத்துக்கடவு, திருமூர்த்தி மலை, சர்க்கார்பதி, சூளிக்கல், வால்பாறை, அமராவதி, சோலையாறு அணைப்பகுதிகள் சினிமாவின் சொர்க்கபுரியாகவே இருந்துவருகின்றன. 1980 மற்றும் 90-களில் உருவான தமிழ் இயக்குநர்களின் ஒரே சாய்ஸாக பொள்ளாச்சியே இருந்தது. இந்தக் காலகட்டத்தில் கொங்கு பகுதி சார்ந்த கதைகளும் தமிழ் திரையில் ஆக்கிரமிக்கத் தொடங்கின. கொங்கு பகுதியிலிருந்து திரை உலகில் அடியெடுத்துவைத்த இயக்குநர்கள் ஆர். சுந்தர்ராஜன், மணிவண்ணன், பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், சுந்தர் சி போன்றவர்கள் தங்கள் படங்களை இந்தப் பகுதிகளில் அதிகமாகவே படமாக்கினார்கள்.
சினிமா அடையாளங்கள்
![]() |
சிங்காரவேலன்... பம்பாய் வீடு |
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்றும்கூட பல வீடுகள் சினிமா பெயரில் அழைக்கப்படுகின்றன. சிங்காநல்லூர் ‘தேவர்மகன்’ வீடு, கெலக்காடு ‘சிங்காரவேலன்’ வீடு, சிங்காரம்பாளையம் ‘பசும்பொன்’ வீடு, சேத்துமடை ‘பம்பாய்’ வீடு, முத்தூர் ‘சின்னக்கவுண்டர்’ வீடு, நெய்க்காரப்பட்டி ‘சூரியவம்சம்’ வீடு, ‘எஜமான்’ வாணவராயர் பங்களா’ என சினிமா பெயர்களில் வீடுகளை அழைக்கும் அளவுக்கு சினிமா படப்பிடிப்பிகள் பொள்ளாச்சியில் கோலோச்சியிருக்கின்றன. நூற்றுக்கணக்கான படங்கள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டிருந்தாலும், சில படங்கள் பொள்ளாச்சியின் பெயரை உரக்கச் சொல்கின்றன.
‘பாகப்பிரிவினை’, ‘விடிவெள்ளி’, ‘முரட்டுக்காளை’, ‘சகலகலா வல்லவன்’, ‘கரையெல்லாம் செண்பகப்பூ’, ‘தேவர் மகன்’, ‘சின்னக்கவுண்டர்’, ‘கிழக்கு வாசல்’, ‘பம்பாய்’ ‘அமைதிப்படை’, ‘எஜமான்’, ‘சூரியன்’, ‘சூரியவம்சம்’, தோழர் பாண்டியன்’, ‘பொன்னுமணி’, ‘ராஜகுமாரன்’, ‘வானத்தைப்போல’, ‘தூள்’, ‘ஜெயம்’, ‘காதலுக்கு மரியாதை’, ‘காசி’, ‘அரண்மனை’ உள்ளிட்ட பல ப்ளாக் பஸ்டர் படங்கள் இங்கே படமாக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சியை படப்பிடிப்புதளமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இங்கே எடுக்கப்பட்ட படங்களில் 80 சதவீத படங்கள் வெற்றி பெற்றதால், பொள்ளாச்சியை அதிர்ஷ்ட பகுதியாகவும் பார்க்கிறார்கள். எனவே பொள்ளாச்சி எப்போதுமே சினிமாக்காரர்களின் செண்டிமெண்ட் பகுதியாக இருப்பதில் வியப்பில்லை.
கோபி சினிமா
பொள்ளாச்சியைப் போலவே ‘குட்டிக் கோடம்பாக்கம்’ என்று அழைக்கப்படும் இன்னொரு ஊர் கோபிச்செட்டிப்பாளையம். பொள்ளாச்சியைப் போலவே தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்கள் இங்கே படமாக்கப்பட்டிருகின்றன. கோபியில் எடுக்கப்பட்ட முதல் படம் சிவாஜி கணேசன் நடித்து, 1959-ல் வெளியான ‘பாகப்பிரிவினை’. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜி.என். வேலுமணியின் சொந்த ஊர் கோபிச்செட்டிப்பாளையம்தான். ஊர்ப் பாசத்தால் ‘பாகப்பிரிவினை’ படக் காட்சிகளை கோபியில் எடுக்க அவர் விரும்பினார். ‘பாகப்பிரிவினை’ படத்திலிந்துதான் கோபியின் படப்பிடிப்பு பயணம் தொடங்கியது.
பாக்யராஜ் உபயம்
அதே காலகட்டத்தில் இயக்குநர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், மணிவண்ணன், ராமராஜன், ஆர். சுந்தர்ராஜன், பி. வாசு, மனோஜ்குமார், வி.சேகர், மணிவாசகம், கே.எஸ். ரவிக்குமார், சுந்தர். சி போன்ற இயக்குநர்களும் கோபி பகுதியில் தங்கள் படங்களைப் போட்டிப்போட்டுக்கொண்டு படமாக்கினார்கள். குறிப்பாக மணிவண்ணன், கே.எஸ். ரவிக்குமார். சுந்தர்.சி, பி. வாசு போன்ற இயக்குநர்கள் கொங்கு மண்ணுக்கேத்த கதைகளை உருவாக்கியதால், கோபிதான் அவர்களுடைய விருப்பத் தேர்வாக இருந்தது.
பஞ்சாயத்து ஆலமரங்கள்
கோபியில் படம்பிடிக்க ஏதுவான பகுதிகள் நிறைய உள்ளன. தமிழ் சினிமாவுக்கு பஞ்சாயத்து ஆலமரங்களை அறிமுகம் செய்துவைத்த பெருமை கோபிக்கே உண்டு. மேலும் கோபியில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பவானி ஆறு பயணிக்கிறது. கோபியில் வெப்பநிலை எப்போதும் மிதமாகவே இருக்கும். கணிக்க முடியாத வானிலை உள்ள பகுதி இது. இதுபோன்ற காரணங்களாலேயே படப்பிடிப்புகள் நடத்த கோபியை சினிமாக்காரர்கள் விரும்பி தேர்வு செய்தார்கள்.
![]() |
சின்னகவுண்டர் ஆலமர பஞ்சாயத்து.. |
தமிழ் சினிமாவில் ஆகப் பெரும் சாதனைப் படைத்த ‘சின்னத்தம்பி’ படம் முழுக்க முழுக்க கோபியில்தான் படமாக்கப்பட்டது. அந்தப் படத்தில் வரும் பிரபுவின் செட்டு வீடு பவானி ஆற்றங்கரையோரமும் குஷ்புவின் வீடு பவானிசாகர் அணையில் உள்ள கட்டிடத்திலும் படமாக்கப்பட்டன. பவானிசாகர் அணை இன்றுவரை ‘சின்னத்தம்பி’யின் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது. கள்ளிப்பட்டியில் ‘ராசுக்குட்டி’ வீடு, சி.கே.எஸ். பங்களா என கோபியில் சினிமா படப் பெயரை தாங்கி நிற்கும் வீடுகளுக்கும் பஞ்சமில்லை. பன்னாரியம்மன் கோயில், குண்டேரிப்பள்ளம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கொடிவேரி அணை, வயல்வெளிகள், சத்தியமங்கலம் வனப்பகுதிகள், கோயில்கள் எனப் படம் பிடிக்க ஏதுவான பகுதிகள் கோபியில் அதிகம் உள்ளன.
தமிழ்ப் படங்கள் மட்டுமல்ல, ஏராளமான பிற மொழி படங்களும் கோபியில் படமாக்கப்பட்டு அந்த ஊரின் பெருமையைப் பேசியது. இவற்றில் ‘சேரன் பாண்டியன்’, ‘ராசுக்குட்டி’, ‘மருதுபாண்டி’, ‘சின்னத்தம்பி’, ‘எங்க சின்ன ராசா’ (இந்தி டப்பிங்), ‘செந்தமிழ் பாட்டு’ (ஒடியா டப்பிங்) ஆகிய படங்கள் முழுமையாக கோபியிலேயே படமாக்கப்பட்டதன் மூலம் கோபி அகில இந்திய அளவில் சினிமாக்காரர்களை ஈர்த்தது.
ஊட்டி சினிமா
தமிழ் சினிமாவின் அந்தக் காலம் தொடங்கி இப்போதுவரை இயக்குநர்கள்
விரும்பும் இடம் என்றால், அது ஊட்டிதான். ‘மலைகளின் அரசி’ என்று வர்ணிக்கப்படும் ஊட்டியில் பசுமை நிறத்தை போர்த்திக்கொண்டு விரிந்து கிடக்கும் இயற்கை அழகும், ஓங்கி உயர்ந்த மலைகளும், சலசலத்து ஓடும் நீரோடைகளும், அழகழகான பூங்காக்களும், பூத்துக்குலுங்கும் பூக்களும், ரம்மியமான் சீதோஷணமும் சினிமாக்காரர்களை ஊட்டிக்கு அழைத்துவந்தது. தமிழ் சினிமாவில் ஒரு பாடல் காட்சியாவது ஊட்டியில் படமாக்குவதைப் பழக்கமாகவே வைத்திருந்தார்கள். தொடக்கத்தில் ஒரு பாடலுக்கான ஊராக மட்டுமே பார்க்கப்பட்டுவந்த ஊட்டி, பிறகு ‘ஊட்டி வரை உறவு’ என்று ஸ்ரீதர் படம் எடுக்கும் அளவுக்கு அந்த ஊர் சினிமாக்காரர்களின் ஆதர்சனமானது. ஸ்ரீதரின் 'காதலிக்க நேரமில்லை' படம் ஊட்டியை இன்னொரு பரிணாமத்தில் காட்டியது. அதன் பிறகே, பலரும் ஊட்டியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினார்கள். எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா’ படமும் ஊட்டி அழகை தனித்து அடையாளப்படுத்தியது.
![]() |
ஊட்டி... அன்பே வா.. |
பெரும்பாலான தமிழ் சினிமாக்களைப் பொருத்தவரை ஊட்டி என்றாலே தேயிலைத் தோட்டங்களும் மேடான புல்தரைகளும் அங்கு எடுக்கப்படும் பாடல் காட்சிகளும் என்றுதான் இருந்தது. ஆனால், அந்த எண்ணத்தை சிதறு தேங்காய்போல உடைத்துப்போட்டவர் இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. மலை ரயில் செல்லும் தண்டவாளங்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் குடியிருப்புகள், நீலகிரியின் மலை கிராமங்கள், பனியும் இளவெயிலும் கைகோர்க்கும் கிராமங்கள், வானுயர்ந்த மரங்கள், ஆளரவமற்ற உட்புறச் சாலைகள், ஆடம்பரமில்லாத அழகியல் என ஊட்டியை உயிர்ப்புடன் காட்டியவர் பாலு மகேந்திராதான். குறிப்பாக அவருடைய‘மூன்றாம் பிறை’யும் ‘மூடுபனி’யும் ஊட்டியை அழகு பிறையாக மின்ன வைத்தது. ‘மூன்றாம் பிறை’யில் வரும் கேத்தி ரயில்வே ஸ்டேஷன் அவருடைய படங்களுக்கெல்லாம் சிகரம் வைத்த இடம்.
ஒரு காலத்தில் குளுகுளு காட்சிகளைப் படம் பிடிக்க காஷ்மீருக்கும் சிம்லாவுக்கும் ஓடிக் கொண்டிருந்த பாலிவுட்காரர்கள், காஷ்மீரில் தீவிரவாதம் உச்சத்துக்குப் போனபோது ஊட்டிப் பக்கம் திரும்பினார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஊட்டியும் குளுமை தந்தது. இதனால், பிறமொழி இயக்குநர்களும் ஊட்டிக்கு வண்டியைத் திருப்பினார்கள். பொள்ளாச்சி, கோபியைப் போலவே ஊட்டியிலும் நூற்றுக்கணக்கான படங்கள் பிடிக்கப்பட்டுள்ள்ன. பொதுவாகப் பாடல் காட்சிகள் என்றில்லாமல், எழில் சார்ந்த சினிமா களமும் ஊட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கின்றன.
1998-ல் வெளியான ‘உயிரே’ படத்தில் இடம்பெற்ற ‘ தக்க தைய.. தைய... தையா...’ பாடலில் ஊட்டி மலை ரயிலை புதிய கோணத்தில் காட்டியிருந்தார் இயக்குநர் மணிரத்னம். ஊட்டியில் நயின்த் மைல், பைன் மர காடு, பைக்காரா ஏரி, அப்பர் பவானி ஏரி, அவலாஞ்ச் ஏரி, எமரால்ட் ஏரி, தாவரவியல் பூங்கா, கேத்தி பள்ளத்தாக்கு, ரோஸ் கார்டன், ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா, ஃபெர்ன்ஹில்ஸ் அரண்மனை என படப்பிடிப்புகள் நடத்த ஏராளமான இடங்கள் ஊட்டியில் குவிந்துகிடக்கின்றன.
காரைக்குடி சினிமா
தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் படப்பிடிப்புகள் நடக்கும் பகுதியாகக் காரைக்குடி மாறியிருக்கிறது. மாறாத பழமை, வித்தியாசமான கட்டிடங்கள், பசுமையான கிராமங்கள் போன்ற அம்சங்கள் சினிமாக்காரர்களை காரைக்குடி ஈர்த்திருக்கிறது. ஆனால், காரைக்குடியில் ஒரு காலத்தில் சினிமா ஸ்டூடியோ இருந்தது இன்றைய தலைமுறையினர் அறிந்திராத சங்கதி. தமிழ் சினிமாவின் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் காரைக்குடியில்தான் முதன் முதலில் தங்களுடைய சினிமா ஸ்டுடியோவை உருவாக்கியது. காரைக்குடி ஸ்டூடியோவில்தான் புகழ்பெற்ற ‘வேதாள உலகம்’ படம் தொடங்கியது. காலப்போக்கில்தான் ஏவிஎம் சென்னைக்கு இடம் மாறி பிரபலமானது.
ஏவிஎம் ஸ்டுடியோ சென்னைக்கு சென்ற பிறகு பல ஆண்டுகள் கழித்து முதன் முதலில் காரைக்குடி பகுதிகளையும் அதன் சுற்றுப்புற பகுதிகளையும் சினிமாவில் காட்டியவர் இயக்குநர் விசு. ‘சிதம்பர ரகசியம்’ என்ற படத்தைக் காரைக்குடியில்தான் அவர் படமாக்கினார். 1998-ல் ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’ படத்தின் காட்சிகள் அந்த ஊருக்கு சினிமா வெளிச்சத்தை அதிகமாக்கியது. காரைக்குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீட்டில் ஏராளமான படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பழமையைப் போற்றும் இதுபோன்ற வீடுகள் காரைக்குடியில் இருப்பதால் சினிமா படப்பிடிப்புக்கு அந்த ஊர் புகழ்பெற்று விளங்குகிறது.
தற்போது கிராமிய படங்கள் என்றாலே, பெரும்பாலும் காரைக்குடிக்குதான் செல்கிறார்கள். காரைக்குடியைச் சுற்றியுள்ள கானாடுகாத்தான் உள்ளிட்ட பல ஊர்களில் பழமையான கட்டிடக்கலையை நினைவுகூரும் விதமாக ஏராளமான வீடுகள் உள்ளன. காரைக்குடியில் ஒரு படம் எடுத்தால் ‘ஹிட்’ ஆகும் என்ற அரதபழசான சினிமா செண்டிமெண்ட் காரணமாகவும் நிறைய படங்கள் இங்கே படமாக்கப்பட்டுவருகின்றன. அந்த செண்டிமெண்டை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஹரி. இயக்குனர் ஹரி தன்னுடைய படத்தில் ஒரு காட்சியையாவது காரைக்குடியில் எடுக்காமல் இருக்க மாட்டார். அதேபோல் இயக்குனர் லிங்குசாமிக்கும் காரைக்குடி ஃபேவரைட். தமிழ்த் திரையுலகினர் மட்டுமல்லாமல் தெலுங்குத் திரையுலகினரும் தற்போது காரைக்குடிக்கு விரும்பிவருகிறார்கள்.
மீளுமா கனவுலக நகரங்கள்?
ஒரு காலத்தில் பொள்ளாச்சி, கோபிச்செட்டிப்பாளையம், ஊட்டி போன்ற நகரங்களில் எப்போதும் சினிமா படப்பிடிப்புகளைப் பார்க்க முடியும். ஆனால், 2010-க்கு பிறகு பொள்ளாச்சி, கோபியில் சற்று குறையத் தொடங்கின. ஊட்டியில் சினிமா படப்படிப்பு நடப்பதே அரிது என்றாகிவிட்டாது. “சினிமா என்பது வியாபாரம் என்பதால், தொடக்கத்தில் இலவசமாக ஷூட்டிங் செய்ய இடம் கொடுத்த மக்கள் சற்று காசு கேட்க ஆரம்பித்தார்கள். காலத்துக்கு ஏற்ப கட்டணமும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. பிறகு போலீஸ் அனுமதி, கெடுபிடி என அதுவும் ஒரு பக்கம் அதிகமானது. வனப்பகுதிகளில் சூட்டிங் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சினிமா சூட்டிங் லொகேஷன்கள் குறைந்தன. இதுபோன்ற காரணங்களால் இடையில் படப்பிடிப்புகள் இங்கே குறைந்தன. இப்போது மீண்டும் பழையபடி படப்பிடிப்புகள் தொடங்க ஆரம்பித்துள்ளன. தெலுங்கு படங்கள் இங்கே அதிகம் படம்பிடிக்கப்படுகின்றன.” என்கிறார் பொள்ளாச்சி ராஜ்குமார்.
ஸ்டுடியோக்களில் படப்பிடிப்புகள் நடந்தபோது, செயற்கைத்தனத்தோடு காட்சிகளைப் பார்த்துவந்த மக்களுக்கு வெளிப்புற படப்பிடிப்புகள் காண்பதற்கினிய காட்சிகளையும் தந்தன. வெளிப்புற இடங்கள் மூலமே உலகக் காட்சிகளையும் தரிசிக்க முடிந்தது. ஆனால், இன்றோ சூட்டிங் நடத்த கட்டண உயர்வு, கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் போன்ற காரணத்தால், இந்த நகரங்கள் சினிமாக்காரர்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகின்றன. கடந்த ஒரிரு ஆண்டுகளாகத்தான் இந்த ஊர்களின் பக்கம் மீண்டும் சினிமாக்காரர்களின் பார்வை திரும்பியிருக்கிறது. பழையபடி மீண்டும் சினிமா சொர்க்கங்களாக இந்த நகரங்கள் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இந்து தமிழ், 2019 தீபாவளி மலர்
No comments:
Post a Comment