சிலம்பம் வாத்தியாரான ருத்ரபிரபாகரன் (ரிச்சர்ட் ரிஷி) தன் மனைவி திரௌபதியையும் (ஷீலா ராஜ்குமார்) அவருடைய தங்கை லட்சுமியையும் ஆணவக்கொலை செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதானவர். அவர் ஜாமீனில் வெளிவருகிறார். சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள வழக்கறிஞர் கருணாவையும் அரசியல் பிரமுகர் செஞ்சி சேகரையும் அவர் அடுத்தடுத்து கொலைசெய்கிறார். இந்தச் சூழலில் அவருடைய மனைவி திரௌபதி உயிருடன் இருப்பதாக அவருக்குத் தகவல் கிடைக்கிறது. ருத்ர பிரபாகர் ஏன் இந்தக் கொலைகளைச் செய்கிறார்? ஆணவக் கொலைக்காளானதாகச் சொல்லப்படும் திரௌபதி எப்படி உயிருடன் உள்ளார், ருத்ர பிரபாகரன் குடும்பத்துக்கு என்ன நடந்தது போன்ற வினாக்களுக்கு விடை தருகிறது 'திரௌபதி'.
நாடகக் காதல், ஆணவக் கொலை, போலி பதிவுத் திருமணம் என மூன்று விஷயங்களை கையில் எடுத்து, அதுதொடர்பாகக் கேள்விபட்ட விஷயங்களைத் திரைக்கதையாக்கிப் படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஜி. மோகன். முதல் பாகத்தில் பழிக்குப் பழியாக நடக்கும் கொலைக் காட்சிகளை வேகம் குறையாமல் இயக்குநர் படமாக்கியிருக்கிறார். அந்த வகையில் விறுவிறுப்பாகவும் காட்சிகள் நகர்ந்துவிடுகின்றன. ஆனால், இரண்டாம் பாகம் முழுவதுமே முதல் பாகத்துக்கு மாறாக, நாடகத்தன்மையோடு படம் பயணிப்பதால், மனம் ஒன்றாமல் போய்விடுகிறது.
பதிவுத் துறையில் நடக்கும் திருமணங்கள் போலியானவை என்று இயக்குநர் காட்டியிருப்பது அதிர்ச்சி ரகம். அந்த வகையில் இளம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார். நாயகன் இரு கொலைகள் செய்வதற்கான பின்னணிக் காரணமாகக் காட்டப்படும் காட்சிக்கான திரைக்கதை வலுவாகப் பின்னப்படவில்லை. திரெளதி யார், அவருக்கு என்ன நடந்தது என நாயகனும்
வில்லன் கோஷ்டியில் ஒருவரும் என மாறிமாறி கதைச் சொல்கிறார்கள். என்ன நடந்ததே என்று தெரியாமல் இரண்டு பேரைக் கொலை செய்ய நாயகன் எப்படி முடிவு செய்தார் என்ற கேள்விக்குப் படத்தில் விடையில்லை.
திரெளபதி உயிரோடு இருக்கிறாரா இல்லையா எனத் தெரியாமலேயே கொலைகளைச் செய்கிறார் நாயகன். அந்தக் கொலைகளைக் கண்டுபிடிக்க வரும் போலீஸும் ஃபிளாஸ்பேக்கில் நடந்த குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டி, நிழல் காலத்தில் நடந்த கொலைகளை மறந்துவிடுகிறார்கள். நாடகக் காதல் என்ற காட்சி அமைப்புகளும் மிகையாகக் காட்டப்பட்டுள்ளன. செல்போனிலேயே காதல் வளர்க்கும் இளம்பெண், காதலன் யார், குடிகாரானா என்றுகூட ஆராயமல் திருமணம் செய்துகொள்வதாகக் காட்டும் காட்சி உறுத்தல்.
பதிவு அலுவலகத்தில் நடக்கும் தகிடுத்தங்களைக் கிண்டலடிப்போர், கண்டிப்போரோ போலி திருமணங்கள் நடப்பதற்கு உதவியாக இருப்பது லாஜிக் ஓட்டை. படத்தில் பல வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன. மியூட் செய்யப்படாத வசனங்கள் எல்லாமே ஒரு நோக்கத்துக்காக எழுதப்பட்டுள்ளன என உணரவைக்கிறது. போலீஸ் வழக்கான ஒரு கொலை முயற்சியில் தப்பியவரை மூளை சாவு அடைந்ததாக அந்த ஆளையே ஒரு டாக்டர் மறைப்பது, ஜாமீனில் வெளிவந்தவர் என்ன ஆனார் என்று போலீஸூக்கே தெரியாமல் இருப்பது, மூன்று மணி நேரம் மகள் என்ன ஆனார் என்று தெரியாத தந்தை தற்கொலை செய்துகொள்வது, ‘இவங்களை இப்படித்தான் போட்டுத்தள்ளணும்’ என்று வழக்கறிஞரே பேசுவது எனப் படத்தில் தர்க்கப் பிழைகள் நிறைந்துகிடைக்கின்றன.
தமிழில் நிலையான இடம் கிடைக்காமல் இருக்கும் நாயகன் ரிச்சர்டுக்கு இப்படம் நல்ல வாய்ப்பு. இயக்குநர் சொன்னப்படி நடித்துகொடுத்திருக்கிறார். திரெளபதியாக வரும் ஷிலா கிராமத்து கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். ஆனால், பல இடங்களில் மிகையான அவருடைய நடிப்பு துருத்தி நிற்கிறது. ஆறுபாலா, கருணாஸ் போன்ற முகம் தெரிந்த சில நடிகர்கள் மட்டுமே படத்தில் இருக்கிறார்கள். ஜூபினின் இசையில் குக்கூக்கூ பாடல் ரசிக்க வைக்கிறது.
பழிக்குப் பழியாக எடுத்திருக்க வேண்டிய ஒரு கதைக்கு, வேறு வண்ணம் பூச முயன்ற திரைக்கதையால் இந்தத்‘திரெளபதி’ பெரிதாக மனம் கவரவில்லை.
மதிப்பெண் - 2 / 5
No comments:
Post a Comment