17/03/2020

அசுரகுரு விமர்சனம்

கூரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சக்தி (விக்ரம் பிரபு), பின்னணியில் கொள்ளையடிக்கும் வேலையையும் செய்கிறார். விக்ரம் பிரபுவின் கொள்ளைகளைக் கண்டுபிடிப்பதற்காக போலீஸ் உயரதிகாரியாக மணிவாசகம் (‘பாகுபலி’ சுப்பாராஜ்) நியமிக்கப்படுகிறார். கொள்ளையில் ஹவாலா பணத்தை இழந்த ஜமாலுதீன் ( நாகிநீடு) விக்ரம் பிரபுவைக் கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் பணியில் இருக்கும் தியாவை (மஹிமா நம்பியார்) அணுகுகிறார். இவர்கள் எல்லோரும் வெவ்வேறு திசைகளில் விக்ரம் பிரபுவைத் தேடுகிறார்கள். இந்தத் தேடலில் விக்ரம் பிரபு சிக்கினாரா இல்லையா? இந்தக் கொள்ளைகளை விக்ரம் பிரபு ஏன் அரங்கேற்றுகிறார்? என்பதே ‘அசுரகுரு’வின் திரைக்கதை.

ஒரு வழக்கமான கதையை கொஞ்சம் பரபரப்பாகச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ராஜ்தீப். முதல் காட்சியிலேயே ஓடும் ரயிலில் கொள்ளை நடக்கிறது. அந்தப் பரபரப்பான கொள்ளை முடிந்தவுடன், அடுத்தடுத்து கொள்ளையடிக்கிறார் விக்ரம்பிரபு. இந்தக் கொள்ளைக்காட்சிகளாலும், ஏன் கொள்ளையடிக்கிறார் என்று நம் மனதில் பிரதானமாக எழும் கேள்வியாலும் முதல் பாகம் விறுவிறுப்பாக கடந்துவிடுகிறது. அதற்கு நாயகன்  டெக்னிக்குகளாகக் கொள்ளையடிக்கும் நேர்த்தியான காட்சிகளும் கைகொடுக்கின்றன. திருடன் - போலீஸ் கதைக்குரிய நகர்த்தல்களோடு திரைக்கதை பயணிப்பதும் படத்துக்கு பிளஸ்.

முதல் பாகத்தில் எழும் அடுக்கடுக்கான கேள்விகளால் இரண்டாம் பாகத்தின்
மீது எதிர்பார்ப்புகள் அதிகரிக்கின்றன. ஆனால், இரண்டாம் பாகத்தில் இயக்குநர் சறுக்கிவிடுகிறார். விக்ரம் பிரபு ஏன் கொள்ளையடிக்கிறார் என்பதற்கு சொல்லப்படும் காரணம், ஊதி பெருக்கப்பட்ட பலூனை ஊசியால் குத்துவதைப் போல ஆகிவிடுகிறது. கோடிகோடியாகக் கொள்ளையடிக்கும் பணத்தை தன் வீட்டிலேயே அலங்காரம் செய்து வைத்திருப்பது நம்பும்படியாக இல்லை. மஹிமாவின் துப்பறியும் காட்சியும் சுப்பாராஜின் துப்பறியும் காட்சியும் புதுமை இல்லாமல் ஊசலாடுகின்றன. கடைசியில் வரும் ட்விஸ்ட்டையும்  கிளைமாக்ஸையும் ஊகிக்க முடிவது பெருங்குறை.

விநோத நோயால்  பாதிக்கப்பட்ட நண்பனை மருத்துவரிடம் அழைத்து செல்லாத நண்பன்,  நாயகன் - நாயகிக்கு ஏற்படும் காதல், அவ்வப்போது சண்டைப் போட ஆஜராகும் வில்லன், நல்லவர் போல நடிக்கும் போலீஸ் என படம் நெடுகிலும் டெம்ப்ளேட் சரடுகள் நம்மை சோதிக்கின்றன.

 நாயகனாக விக்ரம் பிரபு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். கொள்ளையடிக்கும் காட்சிகளிலும் சண்டைக்காட்சிகளிலும், கொள்ளையடிக்க நினைக்கும் காட்சிகளிலும் இயக்குநர் சொன்னதை அப்படியே செய்துகொடுத்திருக்கிறார். ஸ்டைலிஸ் துப்பறியும் நாயகியாக மஹிமா நம்பியார். கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். அவருக்கு கஷ்டப்பட்டு புகைபிடிக்கும் காட்சியை இயக்குநர்  ஏன் வைத்தார் என்றுதான்  தெரியவில்லை. யோகிபாபுக்கு பட எண்ணிக்கையில் ஒன்று கூடுவதைத் தவிர இப்படத்தில் வேறேதும் இல்லை.

போலீஸ் உயரதிகாரியாக சுப்பாராஜ் நல்ல தேர்வு. அவருடைய உயரமும் உடல் கட்டுக்கோப்பும் அதற்கு உதவுகிறது. நண்பனாக ஜெகன் அவ்வப்போது வந்து போகிறார்.  நாகிநீடு, குமரவேல், மனோபாலா உள்ளிட்டோரும் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். கனேஷ் ராகவேந்திராவின் இசையில் புதுமையில்லை. ராமலிங்கத்தின் ஒளிப்பதிவில் கொள்ளைக் காட்சிகள் நேர்த்தி. லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு கச்சிதம்.

கொள்ளையடிக்கும் காட்சிகளில் டெக்னிக்குகளைப் பயன்படுத்த நினைத்த இயக்குநர், திரைக்கதையில் அதைக் காட்டவில்லை. விளைவு, ‘அசுரகுரு’வின் சாகசங்கள் மேஜிக்கும் இல்லாமல்; லாஜிக்கும் இல்லாமல் தள்ளாடுகிறது.

மதிப்பெண் - 2 / 5

No comments:

Post a Comment