07/12/2019

ஒரு நகரம் இரு அடையாளங்கள்!

தமிழகத்தின் மத்தியில் உள்ள திருச்சி நகருக்கு மட்டுமல்ல, நம் மாநிலத்தின் அடையாளங்களில் ஒன்றாகிவிட்ட  மலைக்கோட்டை முற்காலத்தில் வரலாற்றை ஆராதித்த ஓர் இடம். மலைக்கோட்டைக்குள்ளும் கோட்டைக்கு வெளியேயும் பல அரசர்களின் போர்களையும் ஆங்கிலேயர்கள் காலத்தில் பீரங்கி ஓசைகளையும் கேட்ட இடம். சுருக்கமாகச் சொன்னால், வரலாற்றின் தடங்கள் மிகவும் அழுத்தமாகப் பதிந்த இடம்.

மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள வீதிகள் இன்று பரபரப்பு நிறைந்த வர்த்தகப் பகுதிகள். முற்காலத்தில் இந்த வீதிகள் மலைக்கோட்டையைக் காக்கும் அகழிகளாக இருந்தன.  இந்தக் கோட்டை நாயக்கர்கள், பிஜப்பூர், கர்நாடக மற்றும் மராட்டிய படைகளின் போர்களைக் கண்டு களித்திருந்தாலும், சந்தா சாஹிப்புடன் ஆற்காட்டு அலி நடத்திய போர் வரலாற்றில்  நீங்காத இடத்தைப் பிடித்த இடம். ஆற்காட்டு அலிக்கு ஆதரவாக ஆங்கிலேயப் படைகள் களமிறங்கி சாந்தா சாஹிப்பை கொன்றது இந்த மலைக்கோட்டைக்குள்தான்.
பழமையானப் பாறை
மலைக்கோட்டையும், கோட்டையைச் சுற்றியிருக்கும் இடங்களும் திருச்சியின் மிகப் பழமையான பகுதிகள்.  மலைக்கோட்டையைப் பற்றி சொல்லாமல் திருச்சியின் வரலாற்றை யாராலும் கூறிவிடமுடியாது. உச்சிபிள்ளையார் கோயிலுடன் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் இந்த மலைக்கோட்டை  வெறும் பாறையாக மட்டுமே இருந்த ஒரு காலமும் உண்டு. இந்த பாறை சுமார் 350 கோடி ஆண்டுகள்  வயதுடையது என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். உலகிலேயே மிகப் பழமையான பாறைகளில் மலைக்கோட்டை பாறையும் ஒன்று.
உறையூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சோழ மண்டலத்தில் பலம், செல்வாக்கு, ஆட்சி ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தபோது, விஜயநகரப் பேரரசின் கைக்கு திருச்சிராப்பள்ளி சென்றது. கி.பி. 1565-ம் ஆண்டு தக்காண மன்னர்கள் திருச்சிராப்பள்ளியை கைப்பற்றும் வரை விஜயநகர ஆட்சியின் கீழ் திருச்சி இருந்தது. திருச்சி நகரமும், அதிலுள்ள கோட்டையும், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் வடிவமைத்துக் கட்டினார்கள்.   இன்று அழகாகக் காட்சியளிக்கும் மலைக்கோட்டையின் வளர்ச்சியில் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், விஜயநகர பேரரசர்கள் என பலருக்கும் கணிசமாக பங்கு இருக்கிறது.  மகேந்திரவர்மனால் கி.பி. 7ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலும் இங்கே இருக்கிறது.
பல்லவர்கள் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றப்பட்ட மலைக்கோட்டைக் கோயிலை, இயற்கையாகவே அமைந்த அரண்களைச் சாதகமாக்கிக் கொண்டு நாயக்க மன்னர்கள் இன்னும் மேம்படுத்தினார்கள்.  விசுவநாத நாயக்கர் என்பவரால் கொத்தளங்கள் அமைக்கப்பட்டு இன்னும் வலுப்படுத்தப்பட்டது மலைக்கோட்டை.
 கோட்டைக்குள் சரண்
 பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது மலைக்கோட்டை வெடிமருந்துக் கூடமாக விளங்கியது. இதற்கு அடையாளமாக மலை மீது உள்ள குகைக் கோயிலின் தரைப் பகுதியில் குழிகள் இருப்பதை இப்போதும் பார்க்கலாம்.  18-ஆம் நூற்றாண்டில் இங்குள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில்தான் பிரெஞ்சுப் படைகள், பிரிட்டிஷ் படைகளிடம் சரண் அடைந்தன. இங்கே பிரிட்டிஷ்
படைகளுக்கு வெற்றி தேடிக் கொடுத்த மேஜர் லாரன்ஸின் நினைவாக, லண்டனிலுள்ள வெஸ்ட் மினிஸ்டர் ஆலயத்தில் பொறிக்கப்பட்டுள்ள சின்னத்தில், மலைக்கோட்டையின் படமும் இடம்பெற்றுள்ளதிலிருந்து இதன் வரலாற்றை எளிமையாக அறிந்து கொள்ள முடியும். பதினெட்டாம் நூற்றாண்டில், திருச்சி ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழ் வந்து விட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அருகே இருந்த சிந்தாமணி, வரகனேரி, உறையூர் உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்பட்டு திருச்சி ஒரு நகரமாக  உருமாறியது. முற்காலத்துக்கான பிரம்மாண்ட அடையாளமாக மலைக்கோட்டையும், அதன் உள்ளே உள்ள குகைகள், குடைவரக்கோயில்கள் இன்றும் காட்சியளிக்கின்றன. 1858-ம் ஆண்டு திருச்சி நகரத்தை ஆங்கிலேயர்கள் விரிவாக்கம் செய்தபோது, கோட்டை மதில் சுவரை தரைமட்டமாக்கி, அகழியைத் தூர்த்தனர்.  அகழி இருந்த இடம்தான் தற்போது மேலரண் சாலை (மேல புலிவார்டு ரோடு), கீழரண் சாலை (கீழ புலிவார்டு ரோடு) என்று அழைக்கப்படுகிறது. மதில் சுவரில் இடிக்கப்படாமல் விடப்பட்ட சிறிய பகுதிதான், தற்போது தெப்பக்குளம் அருகே உள்ள கோட்டைச் சுவரும், முதன்மை அரண் கதவும் (Main Gurad Gate) உள்ள பகுதி.
இந்தப் பகுதிகள் முழுவதும் இன்று திருச்சி  மாநகரின் இதயப் பகுதியாகவும், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் நிரம்பிய பகுதியாகவும் உருமாறியிருக்கிறது. திருச்சி மட்டுமல்ல சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ளவர்களும் இங்குள்ள பஜார் கடைகளுக்கு வருவதால் எப்போதும் இங்கே கூட்டம் மொய்த்துகொண்டிருக்கும். சென்னையில் உள்ள ரங்கநாதன் தெரு போல இங்குள்ள என்.எஸ்.பி. ரோடும் பஜார் கடைகளுக்கு பெயர் பெற்று விளங்கி வருகிறது. 
வரலாற்றுச் சின்னம்
மலைக்கோட்டை என்ற மிகப்பெரிய வரலாற்றுச் சின்னத்தைத் தவிர்த்து இப்பகுதியில் இன்னும் சில வரலாற்றுச் சின்னங்களைக்  காணலாம். அதில் ஒன்றுதான் டவுன்ஹாலும், அங்குள்ள அரண்மனையும். தற்போது தாலுகா அலுவலமாக செயல்பட்டு வருகிறது இந்த அரண்மனை. 17-ம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. அந்த அரண்மனையை ராணி மங்கம்மாள் அரண்மனை என்று அழைக்கிறார்கள். இந்த அரண்மனை சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. இதன் அருகிலேயே தர்பார் ஹால் ஒன்றும் உள்ளது. சில காலம் மதுரையை ஆண்ட நாயக்கர்களின் அரசவையாகவும் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது இந்த அரண்மனை அரசு அருங்காட்சியமாக செயல்படுகிறது. இதை  ராணி மங்கம்மாள் கொலு மண்டபம் என்றும் அழைக்கிறார்கள்.
திருச்சியில் சொல்லத்தக்க வகையில் வாழ்ந்துவிட்டும் சாதனைகள் பலவற்றை செய்துவிட்டும் சென்ற சரித்திர புகழ்பெற்றவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ராணி மங்கம்மாளும் ஒருவர். மதுரையை ஆட்சி புரிந்தவர். இருந்தாலும் இவருக்கும் திருச்சிக்குமான நெருக்கம் மிக அதிகம். ராணி மங்கம்மாள், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரிடம்  தளபதியாக இருந்த தப்பகுள லிங்கம நாயக்கர் அவர்களின் மகள்.  ஆண்கள் மட்டுமே பட்டத்திற்கு உரிமையுள்ளவர்கள் - ஆட்சி செய்ய தகுதியுள்ளவர்கள் என்று கூறப்பட்ட அந்த காலத்தில், மிகவும் இக்கட்டான ஒரு தருணத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் மங்கம்மாள்.
உண்மையில் பெரும் ராஜதந்திரியாகவும், சிறந்த நிர்வாகியாகவும், எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதவராகவும் இருந்தார். நாயக்கர்களின் ராஜ்ஜியம் திருச்சியிலும் பரந்து விரிந்திருந்தது. குறிப்பாக ராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் நாயக்கர்களின் தலைநகராக  திருச்சி இருந்தது. எனவேதான் திருச்சியில் ராணி மங்ம்மாளின் பெயரைச் சொல்லும் அடையாளங்கள் நிறைய உள்ளன.
இவர்  சமுதாயப் பணிகளில் முழு மூச்சாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கோவில் கட்டுவதை மட்டுமே கருத்தாக எண்ணாமல் , சாலை அமைத்தல், நகரங்களை அமைத்தல் , குடிநீர் தொட்டி அமைத்தல் , கம்மாய் , ஏரி, குளம் அமைத்தல் போன்ற சமுதாய பணிகளை செய்து வந்தார். குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் திருச்சியில் பல இடங்களில் குளங்களை வெட்டினார். சத்திரங்களை கட்டினார். பெயரில் இவர் பெயரில் மலைகோட்டைக்கு அருகே மங்கம்மாள் சத்திரம்கூட உள்ளது. திருச்சியில் இவரது பெயர் நிலைபெற்றதற்கு இவரது சமுதாயப் பணியும் ஒரு காரணம்.  
இன்னொரு அடையாளம்

திருச்சியின் வரலாறு  மலைக்கோட்டையைச் சுற்றி மட்டும் இருக்கவில்லை. மலைக்கோட்டை அருகே அமைந்திருந்த  உறையூர் பாரம்பரியமும் பழமையும் வரலாற்று சிறப்பும் பெற்ற ஒரு நகரம். தஞ்சாவூருக்கு முன்பே சோழர்கள் கோலோச்சிய நகரம் உறையூர்.  உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள்  முற்காலச் சோழர்கள்.  கி.மு. 3-ம் ஆண்டு தொடங்கி பல நூறு ஆண்டுகள் சோழர்களின் தலைநகரமாக இருந்தது உறையூர். சங்கக் காலத்தில் ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த சோழநாட்டில் ஒரு பிரிவாக உறையூர் வளம் பெற்றிருந்தது. உறையூரை 15  சோழ மன்னர்கள் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்திருக்கிறார்கள். அவர்களில் தித்தன், நெடுங்கிள்ளி, கரிகாலன், கோப்பெருஞ்சோழன் ஆகியோர் முக்கியமானவர்கள்.  இவர்களில் கரிகாலச் சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருச்சிக்கு அருகே காவிரி ஆற்றில் கல்லணையைக் கட்டியதால் இன்று வரை சோழர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறது.
சோழர்களும் நெசவும்
சோழர்கள் காலத்தில் உறையூர் நெசவுத் தொழிலில் சிறந்து விளங்கியது.  உறையூரில் இன்றும்கூட நெசவாளர் காலனி என்ற பெயரில் ஒரு இடம் இருக்கிறது. உறையூருக்கு அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் துணி வெளுப்பது, சாயம் பூசுவது என பல வேலைகள் இன்றும்கூட நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதிகள் எல்லாம் முற்காலத்தில் இருந்தே நெசவுத் தொழிலின் ஒரு தொடர்ச்சியாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. 1965-ம் ஆண்டு முதல் 1969-ம் ஆண்டு வரை உறையூர் பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தியது. அப்போது  ஒரு அகழியில் சாயத் தொட்டி ஒன்றின் மீதிமிச்சம் தரைக்குக் கீழே எட்டடி ஆழத்தில் கண்டறியப்பட்டது. இது துணிகளைச் சாயமிடுவதற்கான நீர்த் தொட்டி. உறையூர் சங்கக் காலத்தில் ஒரு செழுமையான நெசவுத் தொழில் மையமாகத் திகழ்ந்தது என்பதற்கு இதுவே சான்று என்று தொல்லியல் ஆய்வாளர்களும்  நம்புகிறார்கள்.
முற்காலத்தில் உறையூர் என்ற  நகரில் திருச்சிராப்பள்ளி சிறியப்பகுதியாக இருந்தது. இன்றோ பரந்து விரிந்த திருச்சி மாநகரில் உறையூர் ஒரு சிறுப்பகுதி. காலச்சக்கரம் நகரங்களின் தலையெழுத்தை இப்படி மாற்றி எழுதியிருக்கிறது.

இந்து தமிழ் பொங்கல் மலர், 2015

No comments:

Post a Comment