09/12/2019

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்


இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தாமல் தூக்கி வீசப்பட்ட ஒரு வெடிகுண்டு மாமல்லபுரத்தில் கரை ஒதுங்குகிறது. அதைப் பற்றி ஒரு வெளிநாட்டுப் பெண் போலீஸுக்கு தகவல் சொல்கிறார். அந்தக் குண்டு, காவல் நிலையத்திலிருந்து திருடப்பட்டு காயலான் கடைக்கு வருகிறது. அங்கே லோடு ஏற்றிச் செல்லும் ஓட்டுநர் செல்வத்தின் (தினேஷ்) லாரிக்கு அது வந்துவிடுகிறது. ஒருபுறம் அந்தக் குண்டைக் கைப்பற்ற ஆயுதத் தரகர் ஜான் விஜய் முயற்சிக்கிறார். அவருக்காக போலீஸ் அந்தக் குண்டை தேடிப் புறப்படுகின்றனர். இன்னொரு புறம் வெடிகுண்டு விபத்தால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் தன்யா (ரித்விகா) குண்டுகளுக்குள் ஒளிந்துள்ள  ஊழலை வெளிப்படுத்த, அதைத்தேடி அலைகிறார். அந்தக் குண்டு என்ன ஆனது, யார் கைக்கு சென்றது, அதில் உள்ள அரசியல் என்ன ஆகியவற்றுக்கு விடை சொல்கிறது ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’.

இரண்டாம் உலகப் போரில் அதிகம் பாதிக்கப்படாத இந்தியாவில் கொட்டப்பட்ட வெடிக்குண்டால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் அழகான ஒன்லைன் கதைக் களம். அந்தக் கதையைக் காயலான் கடை பின்னணியில் படமாக்கியிருக்கும் விதம் தமிழுக்குப் புதுசு. அதை நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை. காயிலான் கடையில் எளிய மக்களின் உழைப்பு சுரண்டப்படுவதையும் அங்கே அவர்கள் படும் துயரத்தைக் காட்சியாக்கியவிதமும் அருமை. படத்தின் தொடக்கத்திலேயே வெடிகுண்டு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து சொல்லிவிடுவதால் அந்தக் குண்டு வெடிக்குமோ வெடிக்காதோ என்ற எதிர்பார்ப்பு தொற்றிவிடுகிறது. அது படம் முடியும்வரை ஒரு சரடாகவே செல்கிறது.

படத்தின் பிரதானமான குண்டு கதையைத் தவிர, காதலுக்கு எதிர்ப்பு, ஆணவக்கொலை, காயிலான் கடை எளிய மக்களின் வாழ்க்கை எனக் கிளைக் கதைகளும் வருகின்றன. துண்டுத் துண்டாக வரும் இந்தக் கதைகளால் பிரதான கதை தடுமாறிவிடுகிறது. படத்தின் பெரும் இடையூறு மிக மெதுவாக நகரும் திரைக்கதை. குண்டு வெடிக்குமா, வெடிக்காதா என்ற திக்திக் விஷயங்கள் இருந்தபோதும், அதையும் தாண்டி எந்தத் திருப்பங்களும் இல்லாமல் விறுவிறுப்பின்றி  ஹைவேயில் செல்லும் கட்டை வண்டிபோல் கதை பயணிப்பது மைனஸ்.

இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு வெடிக்காத குண்டு என்பதும் அது கரை ஒதுங்கும் என்பதும் வெடித்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் உண்மையாக இருக்கலாம், ஆனால் நம்புவதற்கு ஒவ்வாதவையாக உள்ளது. இரண்டாம் பாகத்தில் கதையை நகைச்சுவையாகக் கொண்டு செல்வதா, சீரியஸாக கொண்டுசெல்வதா என இயக்குநருக்கு ஏற்பட்ட குழப்பத்தால் திரைக்கதை தள்ளாடிவிடுகிறது. வெடிக்காத குண்டைக் கைபற்ற ஆயுதக் கும்பல் மேற்கொள்ளும் நடவடிக்கையின் பின்னணியில் நம்பும்படியும் காட்சிகள் எதுவுமே இல்லை. எல்லாமே போகிறப்போக்கில் காட்டப்படுகிறது. வெடிக்காத குண்டைப் பற்றி விசாரிக்கும் ரித்விகாவின் காட்சி அமைப்புகளிலும் புதுமை இல்லை. தினேஷின் அப்பா எப்படி இறந்தார் என்பது பற்றி இரண்டு மாறுப்பட்ட தகவல்கள் படத்தில் வருகின்றன. இயக்குநர் அதை எப்படி மறந்தார் என்று தெரியவில்லை.

நடிகர் ‘அட்டக்கத்தி’ தினேஷுக்கு இதில் முக்கியமான கதாபாத்திரம். லாரி டிரைவராக காயிலான் கடையில் பணியாற்றும் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலைமையைச் சித்தரிக்கும் அந்தக் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். ஒருபுறம் வெடிகுண்டு, மறுபுறம் காதலி இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு சமாளிக்கும் வேடத்தை தன்னால் கச்சிதமாக செய்துள்ளார். முனீஸ்காந்து சினிமா பயணத்தில் இது ஒரு நல்ல படம். ‘பஞ்சர்’ என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவை, குணசித்திரம் என இரண்டையும் சேர்ந்தே செய்திருக்கிறார்.  லாரியில் இருப்பது வெடிகுண்டு எனத் தெரிந்தபிறகு அவரது பதற்றமும் பயமும் படத்தின் கலகலப்புக்கு உதவுகின்றன. ’பரியேறும் பெருமாள்’ படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடித்தாரோ, அதே கதாபாத்திரத்தில் நடிகை ஆனந்தி வருகிறார். படத்தில் வரும் துணைக் கதாபாத்திரங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஒரு பயணக் கதைக்கு அவசியமான ஒளிப்பதிவை ஒளிப்பதிவாளர் கிஷோர்குமார் வழங்கியுள்ளார். டென்மாவின் இசையில் பாடல்களும் பின்னணியிசையும் இதமாக உள்ளன. ‘மாவலியோ மாவலி’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது.

எளிய மக்களின் வாழ்க்கையை காயலான் கடை பின்னணியில் சொல்லியதில் மட்டும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ சத்தம் கேட்க வைக்கிறது!

மதிப்பெண்: 2.5 / 5

No comments:

Post a Comment