31/05/2019

எல்லாம் ‘காஞ்சனா’ கொடுத்தது!

அண்மை காலத்தில் காமெடியில் குழந்தைகளையும் கவர்ந்தவர் தேவதர்ஷினி. ‘காஞ்சனா’ படத்தில்  கோவை சரளா, ஸ்ரீமனுடன் சேர்ந்து பேயுடன் அடிக்கும் லூட்டிகள் காமெடி நடிகை என்ற அந்தஸ்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக  தொலைக்காட்சி மூலம் வீட்டு வரவேற்பறைக்கு தேவதர்ஷினி சென்றிருந்தாலும், இப்போதுதான் அவர் மீது புகழ் வெளிச்சம் பாய தொடங்கியிருக்கிறது.

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் தேவதர்ஷினி. 1990-களில் தொலைக்காட்சியில் திகில் கதையைச் சொன்ன ‘மர்மதேசம்’, காமெடி அலப்பறைகள் செய்த ‘ரமணி Vs ரமணி’ போன்ற தொடர்களின் நாயகி தேவதர்ஷினிதான். இந்த இரு தொடர்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைக்கவே, தொலைக்காட்சி தொடர்களில் தவிர்க்க முடியாத நடிகையானார். சுமார் 70 தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருந்தாலும், தேவதர்ஷினி ஹிட் கொடுத்த தொடர் ‘மர்மதேசம்’தான்.

“1997-ல் எனக்கு ‘மர்மதேசம்’ தொடரில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு.  அந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. தொடர்களில் நடிப்பதற்கு முன்பாக எனக்கு நல்லா நடிக்க வரும்ணு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, உண்மையில் நடிப்புன்னா என்னவென்று கற்றுக்கொடுத்தது ‘மர்மதேசம்’ இயக்குநர் நாகாதான். அதேபோல எனக்கு காமெடியில் புகழ் தேடி கொடுத்த ‘ரமணி Vs ரமணி’ தொடரையும் அவருதான் இயக்கினாரு. இந்தத் தொடர்தான் எனக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு வாங்கிக் கொடுத்துச்சு” என்கிறார் தேவதர்ஷினி.

தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக இருந்த தேவதர்ஷினிக்கு முதல் பட வாய்ப்பு, ‘எனக்கு 20 உனக்கு 18’ மூலமாக வந்தது. ஆனால், அந்தப் படத்துக்கு முன்பாகவே ‘பார்த்திபன் கனவு’ படம் வெளியானதால், அதுவே தேவதர்ஷினியின் முதல் படமாக அமைந்தது. முதல் படமே நல்ல நகைச்சுவை கதாபாத்திரமாக அவருக்கு அமைந்தது. வேலை, வெட்டி இல்லாத கணவர் விவேக்குடன் அவர் செய்த காமெடி அலப்பறைகள் இப்போதும்கூட தொலைக்காட்சிகளில் மிகப் பிரபலம்.  நடிகை ராதிகாவின் ‘அண்ணாமலை’, ‘ரமணி Vs ரமணி’ தொடரை பார்த்துவிட்டுதான் ‘பார்த்திபன் கனவு’ படத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வந்ததாகச் சொல்கிறார் தேவதர்ஷினி.

 “’பார்த்திபன் கனவு’ படத்துக்கு முன்புவரை சினிமாவுல நடிக்கணும்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை. ஆனா, ‘பார்த்திபன் கனவு’ படத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க நிறைய வாய்ப்பு வர ஆரம்பிச்சது. அக்கா, அண்ணி, தோழி என்று நிறைய வாய்ப்புகள் வந்தன. அதுல எனக்கு எந்தக் கதாபாத்திரங்கள் பொருந்துமோ, அதை மட்டுமே நடித்துக்கொண்டிருந்தேன்.” என்கிற தேவதர்ஷினிக்கு பெரிய பிரேக் கொடுத்த படம் , 2011-ல் வெளியான ‘காஞ்சனா’தான். ‘பார்த்திபன் கனவு’ படத்துக்கு பிறகு முழுமையாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தேவதர்ஷினி. கோவை சரளா, ஸ்ரீமன் கூட்டணியில் காமெடியில் தேவதர்ஷினி செய்த அலப்பறை கவனிக்க வைத்தது.

 ‘காஞ்சனா’ படத்துக்கு உங்களை லாரன்ஸ் எப்படி தேர்வுசெய்தார் என்று கேட்டால், கலகலவென சிரிக்கிறார் தேவதர்ஷினி. “உண்மையில் லாரன்ஸ் மாஸ்டர் என்னை எப்படி தேர்வு செஞ்சாருன்னு எனக்கே தெரியல. ஆனால், அந்தக் கதாபாத்திரத்துக்கு என்னை அவரிடம் பரிந்துரை செஞ்சது இணை இயக்குநர் துவாரகா என்பவர்தான். ‘காஞ்சனா 1’ படத்தில் என்னுடைய
கதாபாத்திரத்துக்கு முதல்ல முக்கியத்துவம் இல்ல. காமெடியான அண்ணி என்ற அளவில்தான் இருந்துச்சு. ஷூட்டிங் சமயத்தில்தான் கோவை சரளா-ஸ்ரீமனுடன் என்னுடைய கதாபாத்திரம் ஒர்க் அவுட் ஆகும்ன்ற நம்பிக்கையில் என் கதாபாத்திரத்தை லாரன்ஸ் மாஸ்டர் டெவலப் செய்தார். அண்ணி கதாபாத்திரத்துக்கு 25 நாட்கள் தேதி கேட்டப்ப, நானே ஆடிப்போய்விட்டேன்” என்று சிரித்தபடி சொல்கிறார் தேவதர்ஷினி.

 ‘காஞ்சனா 1’ மட்டுமல்ல, அண்மையில் வெளியான ‘காஞ்சனா 3’ படத்திலும் கோவை சரளா, ஸ்ரீமனுடன் சேர்ந்து தேவதர்ஷினி செய்திருந்த காமெடி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது.  ‘காஞ்சனா’ படம் தேவதர்ஷினியின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமும்கூட. ‘காஞ்சனா’வுக்கு முன்பாக சிறிய வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் மட்டுமே தேவதர்ஷினிக்கு வந்துகொண்டிருந்தன. அதன்பிறகு அதிக காட்சிகளில் வரும்படியான கதாபாத்திரங்கள் அவருக்குக் கிடைக்கத் தொடங்கின. அந்த வகையில் ‘96’ படத்தில் யதார்த்தமான தோழியாக நடித்தும் தேவதர்ஷினி ஸ்கோர் செய்திருந்தார்.

அக்கா, அண்ணி எனக் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நிறைய நடித்து விட்டார் தேவதர்ஷினி. ‘காக்க காக்க’ போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நினைவில் நிற்கக்கூடிய கதாபாத்திரங்கள் தேவதர்ஷினிக்கு அமைந்தன. ‘காஞ்சனா’ மூலம் காமெடியிலும் முத்திரை பதித்துள்ள தேவதர்ஷினியை இனி காமெடி நடிகையாகத் தொடர்ந்து பார்க்க முடியுமா? “முன்னெல்லாம் காமெடி என்பது தனி டிராக்காக இருக்கும். ஒரு காமெடியன், அவருக்கு ஜோடி என்றெல்லாம் இருக்கும். இப்போது அந்தப் போக்கு மாறிடுச்சி. வில்லன்கூட காமெடி செய்கிறார். பேய்கள்கூட காமெடி செய்கின்றன. எல்லாருடைய பார்வையும் காமெடி பக்கம் திரும்பிவிட்டதால், எனக்கு காமெடி கதாபாத்திரங்கள் தொடர்ந்து கிடைக்கும்ணு நம்புகிறேன்” என்கிறார் தேவதர்ஷினி.

அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் தேவதர்ஷினி நடிப்பதைவிட காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கும்போது அது ரசிகர்களை கவர்ந்துவிடுகிறது. காமெடியில் அவருக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ள நிலையில், மனோரமா, கோவை சரளா போன்ற நகைச்சுவை நடிகைகளின் வரிசையில் வர தேவதர்ஷினி விரும்பவில்லையா என்று கேட்டால், பதறுகிறார். “அய்யய்யோ... அது மிகப் பெரிய இடம். நம்ம வேலையைப் பார்த்துக்கிட்டு போக வேண்டியதுதான்”என்று அழுத்தமாகச் சொல்கிறார் தேவதர்ஷினி.



பட எண்ணிக்கை?

கணக்கு வைத்துகொள்ளவில்லை. சுமார் 100 படங்களில் நடித்திருப்பேன்.

மகிழ்ச்சியான தருணம்?

‘96’ படத்தில் என்னுடைய சின்ன வயது கதாபாத்திரத்துக்கு என் மகள் நடித்தது.

காஞ்சனாவை தாண்டி நினைவில் நிற்கும் படம்?

‘பார்த்திபன் கனவு’. எனக்கு மாநில அரசின் விருதை வாங்கிக்கொடுத்த படம்.

நடிக்க ஆசைப்படும் நடிகர்?

கமல் படத்தில் நடிக்க வேண்டும்.

அடுத்த படங்கள்?

என் கணவர் சேத்தனுக்கு ஜோடியாக ‘பிஇ’. பெயரிடப்படாத விஜய் படம், ‘தண்ணி வண்டி’ ‘கூர்கா’, ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’. ‘ஜோதிகாவோடு ஒரு படம், தெலுங்கு படம் ஒன்று.

- இந்து தமிழ், 31/05/2019

21/05/2019

விவிபாட் இயந்திரம் வந்த கதை!


இந்தியாவின் 17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (மே 23) எண்ணப்படுகின்றன. முதன்முறையாக விவிபாட் இயந்திரங்கள் மூலம் பதிவான ஒப்புகைச் சீட்டுகள் இந்தத் தேர்தலில் எண்ணப்பட உள்ளன. 
ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குச் சாவடிகள் வீதம் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் 30 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீடுகள் எண்ணப்பட உள்ளன. யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் இந்த விவிபாட் ஒப்புகைச் சீட்டு இந்தியாவுக்குள் எப்படி வந்தது?

இந்தியாவில் 1998-ம் ஆண்டு முதல் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. முதன்முறையாக 2004-ல் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகம் ஆனது முதலே அதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் கட்சிகள் புகார் கூறிவந்தன.

தொடர்ந்து சொல்லப்பட்டுவந்த புகாரைக் களைவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் ஒரு முயற்சியை மேற்கொண்டது. இதன்படி 2010 அக்டோபர் 8-ல் ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குநர் பி.வி. இந்திரேசன் தலைமையில் வல்லுநர்கள் கொண்ட தொழில்நுட்பக் குழுவைத் தேர்தல் ஆணையம் நியமித்தது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது.

யாருக்கு வாக்களித்தோம்?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒப்புகைச் சீட்டை வழங்க முடியுமா என்ற சாத்தியக்கூறுகளை இக்குழு ஆராய்ந்தது. நீண்ட ஆய்வுக்குப் பிறகு 'விவிபாட்' (Voter-verified paper audit trail) என்றழைக்கப்படும் 'வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனை'யை அறிமுகப்படுத்த இக்குழு தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்தது. இந்திரேசன் குழு வழங்கிய பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், களப் பரிசோதனை செய்ய முடிவெடுத்தது. 

2011-ம் ஆண்டில்தான் விவிபாட் இயந்திரம் முதன் முறையாகச் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் லடாக், கேரளாவில் திருவனந்தபுரம், மேகாலயாவில் சிரபுஞ்சி, டெல்லியில் கிழக்கு டெல்லி, ராஜஸ்தானில் ஜெய்சால்மர் ஆகிய தொகுதிகளில் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அது திருப்திகரமாக இருக்கவே தேர்தலில் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்துகொள்ளும் வசதியாக விவிபாட் இயந்திரம் முதன் முதலில் 2013-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நாகாலாந்தில் உள்ள நொக்சன் என்ற சட்டப்பேரவைத் தொகுதியில் நடந்த தேர்தலில்தான் விவிபாட் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. அதே ஆண்டில் மிசோராமில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் விவிபாட் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.

வட கிழக்கு மாநிலங்களில் மட்டுமே பரிசார்த்த முறையில் பயன்படுத்தப்பட்ட விவிபாட் இயந்திரத்தை 2014 மக்களவைத் தேர்தலிலும் ஒரு சோதனைத் திட்டமாகப் பயன்படுத்திப் பார்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதன்படி 2014 மக்களவைத் தேர்தலில் லக்னோ, காந்திநகர், தெற்கு பெங்களூரு, மத்திய சென்னை, ஜாதவ்பூர், ராய்ப்பூர், பாட்னா சாகிப், மிசோராம் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் விவிபாட் இயந்திரம் பரிசோதனை முறையில் பயன்படுத்தப்பட்டது.

அந்த 7 விநாடிகள்

சோதனை முயற்சியாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுவந்த விவிபாட் இயந்திரத்தை, தேர்தலில் முழுமையாகப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. 2017-ம் ஆண்டில் கோவாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விவிபாட் இயந்திரம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது. அப்போதும் உத்தரகாண்டில் 4, உத்தரப்பிரதேசத்தில் 20, மணிப்பூரில் 4, பஞ்சாபில் 8 தொகுதிகளிலும் இது பயன்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் 2017-ல் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விவிபாட் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் ஒப்புகைச் சீட்டை வழங்கும் விவிபாட் இயந்திரம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அழுத்தி வாக்கைச் செலுத்தும்போது அருகே இருக்கும் விவிபாட் இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை 7 விநாடிகள் பார்க்கும்படி வசதி செய்யப்பட்டிருந்தது. அப்படிப் பதிவான ஒப்புகைச் சீட்டுகள் ஒவ்வொரு தொகுதியிலும் 30 வாக்குச்சாவடிகளில் எண்ணிப் பார்த்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட உள்ளன.

- இந்து தமிழ், 21-05-2019

17/05/2019

நான் அம்மா நடிகை இல்லை!


‘டூலெட்’ படம் பார்த்தவர்கள் கறாரான வீட்டு ஓனர் அம்மா கதாபாத்திரத்தை மறந்திருக்கமாட்டார்கள். கெடுபிடி காட்டும் வீட்டு ஓனர் தோரணையைக் கண்முன்னே கொண்டுவந்துகாட்டிய அவர், ‘தியேட்டர் ஆர்டிஸ்ட்’ என்று பெயரெடுத்த ஆதிரா பாண்டிலெட்சுமி. கோடம்பாக்கத்தின் அண்மைக்கால ஸ்வீட் அம்மாக்கள் கதாபாத்திர பட்டியலில் ஆதிராவுக்குத்தான் முதலிடம். அம்மா கதாபாத்திரங்களைத் தாண்டி குணச்சித்திர வேடங்களிலும் ஜொலித்துவருகிறார்.

ஆதிராவுக்கு மதுரைதான் சொந்த ஊர். பதின் பருவத்திலேயே கல்யாணத்தைச் செய்துகொண்டு துபாயில் செட்டிலாகிவிட்டார். அங்கே அழகுக் கலை நிபுணராக இருந்தார். 15 ஆண்டுகள் கழித்து அம்மா, அப்பாவோடு வசிக்க வேண்டும் என்ற கனவோடு 2007-ல் குடும்பத்துடன் சென்னைக்குத் திரும்பினார். ஆனால், அந்த ஆண்டே உடல்நலம் பாதிக்கப்பட்டு அவருடைய அம்மா இறந்துபோனார். அந்தப் பிரிவு அவருக்கு பெரும் மன வலியைத் தந்தது. அதிலிருந்து மீள முடியாமல் துடித்தார். ஒரு கட்டத்தில் கவனத்தை திசை திருப்ப கிராமிய கலைகளில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர் கூத்துப் பட்டறையில் போய் சேர்ந்தார். அங்கே ஆறு ஆண்டுகள் இருந்து அடிப்படை விஷயங்களை கற்றுக்கொண்டார் ஆதிரா.

பின்னர் அங்கிருந்தபடியே தெருக்கூத்து கலையிலும் ஈடுபட்டார். இயல், இசை, நாடகம் என மூன்று துறைகளிலும் தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.  நாடகக் கலையை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்துவதற்காக 2014-ல் சொந்தமாக நவீன கூத்துப்பட்டறையைத் தொடங்கினார் ஆதிரா. அங்கே இளம் கலைஞர்களுக்கு நடிக்கக் கற்றுக்கொடுத்துவருகிறார். மேடையில் மட்டுமே நடித்துவந்த ஆதிரா, சினிமாவில் தான் நடிக்க நேர்ந்தது ஏன் என்பது குறித்து என்ன சொல்கிறார்?
ஒரு குப்பைக் கதை

“நாடகத் துறையில் இருந்தாலும், சினிமாவை இயக்க வேண்டும் என்ற என்ணம் மட்டுமே எனக்கு இருந்துச்சு. சினிமாவில் நடிக்கணும்னு நினைச்சிக்கூடப் பார்த்ததில்லை. ஆனால், சினிமாவில் நடிக்கணும்னு நிறைய பேரு என்னிடம் கற்றுக்கொள்ள வந்தாங்க. அவுங்களுக்கு சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்குற பொறுப்பும் எனக்கு வந்துச்சு. அதுக்கு நான் சினிமாவில் நடித்திருக்கணுமே என்ற எண்ணம் அப்போதான் வந்துச்சு. அதே தருணத்துல 2016-ல் ‘கணிதன்’ என்ற படத்தில் அதர்வாவின் அம்மாவாக நடிக்கவும் அழைப்பு வந்துச்சு. என்னுடைய நாடகத்தை யூடியூபில் பார்த்துட்டு என்னை  நடிக்க அழைச்சாங்க. அதனால், அந்த வாய்ப்பை மறுக்காம ஏற்றுக்கிட்டேன்” என்கிறார் ஆதிரா.

‘கணிதன்’ படத்தில் நகைச்சுவை கலந்த அம்மா வேடத்தில் இவர் காட்டிய குறும்பு, ஆதிராவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. தொடர்ந்து ‘பாம்புச் சட்டை’, ‘மருது’, ‘ஒரு குப்பைக் கதை’, ‘திமிருபுடிச் சவன்’, ‘சர்வம் தாளமயம்’, ‘டூலெட்’ என டஜன் படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். ‘பாம்புச் சட்டை’, ‘மருது’வில் அப்பாவி அம்மா, ‘ஒரு குப்பைக் கதை’யில் மீன்காரம்மா, ‘சர்வம் தாளமய’த்தில் யதார்த்தமான அம்மா, ‘டூலெட்’டில் கறாரான வீட்டுக்காரம்மா என நடித்துள்ள எல்லா படங்களில் வெரைட்டிக் காட்டியிருக்கிறார் ஆதிரா. தொடர்ந்து அம்மா கதாபாத்திரத்தை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்களே என்று கேட்டால், அவரசமாக மறுக்கிறார்.

 “அம்மா கதாபாத்திரத்துல் மட்டுமே நடிக்கணும்னு யோசித்து செய்யுறதில்ல. யாரிடமும் இந்தக் கதாபாத்திரத்தைக் கொடுங்க என்றும் கேட்பதில்லை. இந்தக் கதாபாத்திரத்துக்கு ஆதிரா நல்லா இருப்பார் என்ற நம்பிக்கையில கேட்குறவங்க கதையிலதான் நடிக்கிறேன். அம்மா கதாபாத்திரம் மட்டுமல்ல, ‘ஆந்திரா மெஸ்’ படத்தில் ஹீரோவுக்கு ஜோடியா நடித்திருந்தேன். தொடர்ந்து வித்தியாசமா நடிக்கணும்னு என்பதே என் ஆசை” என்கிறார் ஆதிரா.

‘டூலெட்’ படத்தில் கறாரான வீட்டு ஓனர் கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்திகைப் பார்த்தீர்களா என்று கேட்டதற்கு, “அந்தக் கதாபாத்திரத்தின் உத்வேகத்துக்கு நாங்க பழநியில குடியிருந்த வீட்டோ ஓனரும், சென்னையில் என்னுடைய வீட்டில் குடியிருந்த ஒருவரோடு ஏற்பட்ட அனுபவமும் ஒரு காரணம். இந்த இரண்டு கேரக்டர்களை மனதில்கொண்டுதான் இந்தப் படத்தில் நடிச்சேன்.  அந்தப் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்துச்சு” என்கிறார் ஆதிரா. ‘ஒரு குப்பைக் கதை’யில் அக்மார்க் மீன்காரம்மாவாக நடித்து
சர்வம் தாளமயம்
அசத்தியிருந்தார் ஆதிரா.

நாடகத் துறையிலிருந்து வருபவர்களுக்கு மிகையான நடிப்பை வழங்குவார்கள் என்று சொல்வார்கள். ஆனால், நாடகத் துறையிலிருந்து வந்திருந்தாலும் மிகை நடிப்பில்லாமல் யதார்த்தமாக நடிப்பதில் ஆதிரா தனி பானியைக் கடைபிடிக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன் நிறைய ஒத்திகை பார்ப்பதாகவும் சொல்கிறார் ஆதிரா.

“ உண்மையில் நான் ஒரு ஹைஃபையான் ஆளு. எளிய மக்களின் கதாபாத்திரத்துல நடிக்குற அளவுக்கு அந்த மாதிரி வாழ்க்கையை முன்னபின்ன நான் பார்த்ததும் இல்லை. ஆனால், அதுபோன்ற கதாபாத்திரங்கள்ல நடிக்குறது நிறைய சவாலான விஷயம்தான். ‘ஒரு குப்பைக் கதை’யில் மீன்காரம்மாவாக நடிச்சேன். அதுக்காக மீன் விற்கும் பெண்களை பல பேர தொடர்ந்து கவனிச்சுவந்தேன். அவுங்களோட மேனரிஸம், பேசுறவிதம் என எல்லாத்தையும் கவனிச்சுதான் நடிச்சேன். ‘சர்வம்தாளமயம்’ படத்துலகூட  ‘எப்ப பார்த்தாலும் கச்சேரிக்கு போனா, சோத்துக்கு இன்னா பண்றது’ என்று கேட்குற கதாபாத்திரம்கூட எளிய மக்களிடம் கவனித்த விஷயங்கள்தான்” என்கிறார் ஆதிரா.

 சினிமாவில் நடிப்பதோடு நாடகங்களை இயக்கி நடிப்பதிலும் ஆதிரா தொடர்ந்து பிஸியாகவே இருக்கிறார். இவருடைய நவீன கூத்துப்பட்டறையிலிருந்து பல சினிமா கலைஞர்கள் உருவாகி, சினிமாவுக்குள் வந்திருப்பதாகவும் பெருமையாகச் சொல்கிறார்.
 “நவீன கூத்துப்பட்டறையில் நிறைய பேருக்கு நடிப்பு சொல்லித் தருகிறேன். ‘ஒரு குப்பைக் கதை’ வில்லன் சுஜூ இங்கிருந்து சினிமாவுக்கு போனவர்தான். சர்க்கஸ் மெஹந்தி பட நாயகன் இங்க பாடம் படிச்சவர்தான். ‘திமிரு புடிச்சவன்’ படத்துல வர்ற 3 பசங்களில் 2 பேர் எங்களிடம் பாடம் படிச்சவங்கதான். ‘கனா’ படத்துல கிரிக்கெட் விளையாடுற எல்லா பெண்களும் நாங்கதான் பயிற்சி கொடுத்தோம்.  ‘ஜடா’ படத்தில் 60 சதவீதம் பேர் எங்க பட்டறையச் சேர்ந்தவங்கதான் நடிச்சிருங்காங்க” என்று பெருமையாகச் சொல்கிறார் ஆதிரா.

தமிழ் சினிமாவில் ‘காப்பி பேஸ்ட்’ நடிப்பு பெருகிவருவதாக வருத்தப்படும் ஆதிரா, ‘டிக்டாக்’ மூலம் குறுக்கு வழியில் சினிமாவுக்குள் நுழைவதையும் எதிர்க்கிறார். “எதையாவது பார்த்து அதை அப்படியே ‘இமிடேட்’ செய்து நடிப்பது நடிப்பல்ல. இது தமிழ் சினிமாவில் பெருகிக்கொண்டு வருகிறது. அதை மாற்றிவிட்டு வித்தியாசனான நடிப்பு களாத்தை இங்கே கொண்டுவர வேண்டும். அதன் மூலமாக வித்தியாசமான நடிகர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் இலக்கு” என்றும் உறுதியாகச் சொல்கிறார் ஆதிரா.

கேள்வி - பதில்


அம்மா கதாபாத்திரம் மட்டும் போதுமா?

உலகத்தின் பார்வையில் ஒளிந்துகிடக்கிற எல்லா கதாபாத்திரத்திலும் நடிக்கவும் ஆசை.

லட்சியம்?

பிரகாஷ்ராஜ் மாதிரி எல்லா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்.

கனவு?

சினிமாவை இயக்க வேண்டும்.

இலக்கு?

வித்தியாசமான நடிகர்களை உருவாக்க வேண்டும்.

மறக்க முடியாத நிகழ்வு?

‘டூலெட்’ படத்துக்காக சிறந்த சப்போர்டிங் ஆர்டிஸ்ட் விருது கிடைத்தது.

அடுத்த படங்கள்?

இயக்குநர் அமீரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’; கலையரசன் நடிக்கும் ‘குதிரை வால்’;  கதிர் நடிக்கும் ‘ஜடா’; பெயரிடாத சிவகார்த்திகேயன் படம்.



- இந்து தமிழ், 17-05-2019

அயோக்யா விமர்சனம்

 

சென்னை நீலாங்கரையில் போதை பொருள், ஆள் கடத்தல், சொத்துகளை அபகரிப்பது என சட்டவிரோத காரியங்களை செய்து வருகிறார் காளிராஜன் (பார்த்திபன்). தன்னை எதிர்த்து கேள்வி கேட்காத, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தன் பகுதிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். அந்த இடத்துக்கு எப்போதும் பணத்தாசை பிடித்த கர்ணனை (விஷால்) அமைச்சர் உதவியுடன் கொண்டுவருகிறார். பார்த்திபனுடன் விஷால் கைகோர்க்க ஈவு இரக்கம் இன்றி எல்லா காரியங்களும் நடக்கின்றன.

ஒரு கட்டத்தில் பார்த்திபனின் தம்பிகளால் ஓர் இளம்பெண்  கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். அந்த வழக்கை எதிர்கொள்ளும் விஷால், தன் காதலியின் மனம் கவர நல்ல போலீஸாக மாறவே, பார்த்திபனுடன் விரோதம் ஏற்படுகிறது. தன் தம்பிகளைக் காப்பாற்ற விஷாலுடன் பார்த்திபன் மல்லுக்கட்டுகிறார். இந்தப் போட்டியில் யார் வென்றது என்பதை ஒரு திருப்பமான கிளைமாக்ஸுடன் பேசுகிறது ‘அயோக்யா’.

தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் மறுஆக்கம்தான் ‘அயோக்யா’. உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு கடமை இருக்கிறது என்று டைட்டில் போட்டுவிடுகிறார்கள். அந்தக் கடமையைச் செய்து காட்ட எந்த எல்லைக்கு நாயகன் செல்கிறார் என்பதை உரக்கப் பேசுகிறது படம். ஓர் அவலமாக மாறிவிட்ட பாலியல் குரூரங்களை முன்னெடுத்து படத்தில் பேசியிருப்பது இயக்குநரின் சமூக அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறது. அதற்காக அவருக்கு சபாஷ் போடலாம்.

படத்தின் முதல் பாதி, நாயகன் பிம்பத்தை தூக்கியபடி திரைக்கதை நகர்கிறது. ஆனால், அதை அலுப்பூட்டாமல் படமாக்கிய விதத்தில் இயக்குநர் வெங்கட் மோகன் வெற்றி பெற்றிருக்கிறார். பார்த்திபன் செய்யும் முறையற்ற எல்லா வேலைகளுக்கும் விஷால் துணையாக இருக்கிறார். அடாவடி செய்கிறார். ஆனால், கடிவாளம் இல்லாத குதிரையாக, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இத்தனை வானாவிய அதிகாரமா என மனதில் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் நாயகனை அந்த உடையில் காட்டாமலேயே படத்தை எடுத்திருப்பது விநோதம். இல்லாத ஆதாரத்தை நீதிமன்றத்துக்கு விஷால் எப்படி கொண்டுவரப்போகிறார் என்ற பரபரப்பை அழகாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அதற்காக ‘உங்களால் தூக்குத் தண்டனை வழங்க முடியுமா’ என்று நீதிபதிகளைப் பார்த்து நாயகன் கேட்பதும், அதன்படியே தீர்ப்பு எழுதப்படுவதும் அபத்தம்.

பணத்துக்காக எதையும் செய்ய அஞ்சாத விஷால், பாலியல் குரூரத்துக்காக மட்டும் மனம் மாறுவதாக காட்டும் காட்சிகளும் நம்பும்படியாக இல்லை. விஷால் பார்த்திபன் பிரிவில் காட்டப்படும் காட்சிகளிலும் புதுமை இல்லை. அது வழக்கமான தமிழ் சினிமா டெம்ப்ளேட்.

சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட ஆதரவற்ற சிறுவனாக தொடங்கி, சுயநலத்தின் உச்சமாகி, பணவெறியில் அலைந்து திரியும் பாத்திரத்தில் விஷால் கச்சிதம்.  நான் அயோக்கியந்தான் என்று விளக்கம் கொடுக்கும் இடத்திலும், மனமாற்றத்துக்கு பிறகு தடுமாறும் இடத்திலும் நன்றாக நடித்திருக்கிறார். சில இடங்களில் அவருடைய மிகை நடிப்பு சற்றே எரிச்சலைக் கூட்டினாலும், போலீஸூக்கே உரிய அவருடைய மிடுக்கான தோற்றம் ரசிக்க வைக்கிறது. படத்தின் நாயகி ராஷி கண்ணா அழகு பதுமையாக வந்துபோகிறார். ஒரு சில இடங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

எப்போதும் குடிப்பது, சுற்றிலும் அடியாட்கள் என வழக்கமான வில்லனாக வருகிறார் பார்த்திபன். அவருடைய வழக்கமான உடல்மொழி படத்தில் மிஸ்ஸிங். ஹெட் கான்ஸ்ட்பிளாக கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் கவர்கிறார். விஷால் நல்லவராக மாறிய பிறகு அவர் அடிக்கும் சல்யூட் ரசிக்க வைக்கிறது. திருடனாக இரு காட்சிகளில் வந்துபோகிறார் யோகி பாபு. ராதாரவி, சச்சு, ஆனந்த்ராஜ், தேவதர்ஷினி, ‘ஆடுகளம்’ நரேன், பூஜா தேவரியா என நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்புகள் இல்லை. பிண்ணனி இசையில் சாம்.சி.எஸ் கவனம் கொள்கிறார். கார்த்திக் ஒளிப்பதிவில் குறையில்லை.

கூட்டு பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவோருக்கு தூக்குத் தண்டனை வழக்க வேண்டும்; அதை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற ஒற்றை வரியில் படம் உயர்ந்து நிற்கிறது. மற்றபடி வழக்கமான மசாலா தூவப்பட்ட  அக்மார்க் படம் 'அயோக்யா’.

மதிப்பெண்: 2.5 / 5

16/05/2019

நாயுடு Vs ராவ் - கிங் மேக்கர் போட்டி!



பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க காங்கிரஸ் தலைமையில் அணி அமைக்கும் முயற்சியை மீண்டும் தொடங்கியிருக்கிறார் தெலுங்கு தேச கட்சி தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு. காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணிக்குத் தூபம் போட்டுவருகிறார் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரும் தெலங்கானா முதல்ருமான சந்திரசேகர ராவ். ஓரிடத்தில் அரசியல் படித்து, வளர்ந்த இவர்கள், தற்போது ‘கிங் மேக்க’ராகத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு, என்.டி.ராமாராவ் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இளம் வயதில் காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். 1982-ல் ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்த பிறகு தெலுங்குதேசத்தில் இணைந்தார். அப்போது என்.டி.ராமாராவின் மருமகன் என்ற கூடுதல் தகுதியும் அவருக்கு இருந்ததால், அடுத்த சில ஆண்டுகளில் என்.டி.ராமாராவின் அரசியல் வாரிசாக உருவெடுத்தார் சந்திரபாபு நாயுடு.

சந்திரபாபு நாயுடுவைப் போலவே தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து, பிறகு என்.டி. ராமாராவிடம் அரசியல் பாடம் படித்து, பின்னாளில் தெலங்கானா பகுதியில் ஹீரோவானவர் சந்திரசேகர ராவ். என்.டி.ராமாராவ் அமைச்சரவையில் மட்டுமல்ல, சந்திரபாபு நாயுடு அமைச்சரவையிலும் அமைச்சராகப் பணியாற்றியவர் சந்திரசேகர ராவ். ஒன்றுபட்ட ஆந்திராவில் தெற்கே சந்திராபு நாயுடு என்றால், வடக்கே சந்திரசேகர ராவ். இது எல்லாமே சந்திரசேகர ராவ் 2001-ல் தனிகட்சி தொடங்கும் வரை இருந்த நிலை.

தெலங்கானா மாநிலம் கோரி தெலுங்கு தேசத்திலிருந்து விலகி தெலங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற கட்சியை சந்திரசேகர ராவ் தொடங்கிய பிறகு இருவரும் எதிரும் புதிருமாக மாறினார்கள். 2014-ம் ஆண்டில் ஆந்திரா பிரிந்த பிறகு இவர்களுக்கு இடையேயான ஈகோ யுத்தம் பங்காளிச் சண்டையாகவே மாறிபோனது. இடையே 2009-ல் மட்டுமே இருவரும் ஒரே அணியில் இருந்தனர். காங்கிரஸை வீழ்த்தவும், சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியத்தால் வாக்குகள் சிதறாமல் இருக்கவும் இருவரும் கூட்டணி சேர்ந்தார்கள். 

அதன்பிறகு கடந்த 6 ஆண்டுகளாகவே சந்திரபாபுவும் சந்திரசேகர ராவும் துருவ அரசியலையே நடத்திவருகிறார்கள். தெலங்கானா பகுதியில் தெலுங்கு தேசம் என்ற கட்சியே இல்லாத அளவுக்கு அதன் ஆதரவு வாக்குகளை மொத்தமாகவே கபளீகரம் செய்துவிட்டார் சந்திரசேகர ராவ். அப்போது முதலே சந்திரபாபுவும் சந்திரசேகருக்கும் ஏழாம் பொருத்தம்தான். இருவருமே அரசியலில் பரஸ்பரம் எதிரியாகிவிட்டார்கள். சந்திரபாபு நாயுடு இருக்கும் கூட்டணியில் சந்திரசேகர ராவ் இருக்கமாட்டார். சந்திரசேகர ராவ் இடம் பெறும் கூட்டணியை விட்டு சந்திரபாபு எப்போதும் தள்ளியே இருப்பார். தற்போதுவரை இவர்களுடைய அரசியல் சதுரங்கம் இதுதான்.

 
தெலங்கானாவிலும் ஆந்திராவில் மட்டுமே நீடித்துக்கொண்டிருந்த இவர்களுடைய பனிப்போர், இப்போது தேசிய அளவிலும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. அதன் தாக்கம், 35 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் செய்துவந்த சந்திரபாபுவை, தற்போது காலம் அவரை காங்கிரஸ் பக்கம் தள்ளிவிட்டிருக்கிறது. தெலங்கானாவில் தெலுங்குதேசத்துக்கிருந்த செல்வாக்கை சந்திரசேகர ராவ் சீர்குலைத்ததுபோல தற்போது ஆந்திராவில்  காங்கிரஸை தாண்டி ஜெகன் மோகன் ரெட்டி பெரும் போட்டியாளராகிவிட்டார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சி சந்திரபாபு நாயுடுக்கு ஆபத்பாந்தவனாக மாறிபோய்விட்டது. கூடவே பாஜக எதிர்ப்பு கோஷமும் அவருக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.

 ஆனால், சந்திரபாபு நாயுடுவுக்கு முன்பாகவே காங்கிரஸ், பாஜக அல்லாத ‘ஃபெடரல் அணி’யை உருவாக்கத் திட்டமிட்டு, அதற்காக நாடு முழுவதும் உள்ள தேசிய தலைவர்களைச் சந்தித்துவந்தார் சந்திரசேகர ராவ். ஆனால், திடீரென தெலங்கானா சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு, முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சந்திரசேகர ராவ் தயாரானபோது, தேசிய அரசியலை மூட்டைக் கட்டிவைத்தார். இந்த இடைவெளியில்தான் உள்ளே நுழைந்தார் சந்திரபாபு நாயுடு. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் அணியை கட்டமைக்க பணிகளை முன்னெடுத்தார். சந்திரசேகர ராவை போலவே சந்திர பாபுவும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று தலைவர்களைச் சந்தித்துவந்தார்.

ஆனால், தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, ஆட்சிக் கட்டிலில் ஏறிய பிறகு, மீண்டும் தேசிய அரசியல் பாதைக்கு திரும்பினார் சந்திரசேகர ராவ். சந்திரபாபு நாயுடுவுக்கு போட்டியாகவும் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாகவும் மூன்றாவது அணி என்ற கோஷத்தை கடந்த ஜனவரியிலிருந்தே ஒலிக்கத் தொடங்கினார் சந்திரசேகர ராவ். மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், மாயாவதி, அகிலேஷ், குமாரசாமி எனப் பலரையும் சந்தித்து ஆதரவுகோரினார் சந்திரசேகர ராவ்.

சந்திரசேகர ராவின் இந்த நடவடிக்கை சந்திரபாபு நாயுடுவுக்கு எட்டிக்காயாக கசத்தது. தேசிய அரசியலில் தான் எடுக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்த சந்திரசேகர ராவ் செயல்படுவதாக நினைக்கத் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் கட்சிகளைத் திரட்ட சந்திரபாபு விரும்பியதற்கு மாறாக, காங்கிரஸ், பாஜக அல்லாத அணியை கட்டமைக்க சந்திரசேகர ராவ் முயற்சிப்பதைக் கண்டு சீறினார் சந்திரபாபு நாயுடு. சந்திரசேகர ராவ் ஏற்படுத்த நினைக்கும் அணி என்பது பாஜகவின் ‘பி’ டீம் என்று வெளிப்படையாக விமர்சித்தார் சந்திரபாபு நாயுடு. 

கடந்த பிப்ரவரியில் மம்தா பானர்ஜியையும் நவீன் பட்நாயக்கையும் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசிய பிறகு டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். இந்த இரு விஷயத்தையும் இணைத்து சந்திரசேகர ராவை கடுமையாக விமர்சித்தார் சந்திரபாபு நாயுடு. “தெலங்கானா மாநில நலனுக்காக பிரதமர் மோடியை சந்திரசேகர ராவ் சந்தித்தாரா அல்லது மூன்றாவது அணியை உருவாக்குவதைப் பற்றி மோடியிடம் விளக்கினாரா?” என்று கேள்வி எழுப்பி விமர்சித்தார் சந்திரபாபு நாயுடு. பதிலுக்கு சந்திரசேகர ராவ், “பல ஆண்டுகளாக பாஜகவுக்கு கூஜா தூக்கிக்கொண்டிருந்த சந்திரபாபு நாயுடு, வெட்கமே இல்லாமல் தற்பொழுது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்” எனப் பதிலடி தந்தார்.
 
 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாகவே எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட இந்த இரு தலைவர்களுமே தனித்தனியாக தீவிர முயற்சி மேற்கொண்டார்கள். ஆனால், இந்த இரு தலைவர்களின் முயற்சிகளும் வெற்றிபெறவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இரு தலைவர்களுமே தத்தமது மாநில தேர்தல் பிரசாரங்களில் களமிறங்கிவிட்டார்கள். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. மே 23-ம் தேதிக்காக எல்லா அரசியல் கட்சிகளும் காத்திருக்கின்றன. தேர்தல் முடிவு எப்படி இருக்குமோ என கட்சிகள் பதற்றத்தில் இருக்கின்றன. ஆனால், சந்திரபாபு நாயுடுவும் சந்திரசேகர ராவும் மீண்டும் தேசிய அளவில் அணி சேர்க்கைக்காகப் புறப்பட்டுவிட்டார்கள்.

ராகுல், மம்தா என அடுத்தடுத்து அரசியல் கட்சிகளைத் தலைவர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துவருகிறார். சந்திரசேகர ராவும் கேரள முதல்வர் பினராயி விஜயனில் தொடங்கி  தலைவர்களைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். இருவருமே ‘தேசிய அரசியலில் ஒரு மாற்றம்’ என்ற அடிப்படையிலேயே எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்துவருகிறார்கள். இருவருமே தேசிய அரசியலில் ‘கிங்மேக்கர்’கள் ஆவதற்கு முயற்சிகளை செய்துவருகிறார்கள். இதன் பின்னணியில் அவர்களுக்கு இடையே உள்ள ‘ஈகோ’வும் ஒரு காரணம்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால்தான் தெலங்கானா பகுதியில் போட்டியிட முடியும் என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பகுதியில் தெலுங்கு தேசம் சுத்தமாக துடைத்து எறியப்பட்டுவிட்டது. 
காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முடியாமல் போனதால், தெலங்கானா பகுதியில் இந்த முறை தெலுங்கு தேசம் போட்டியிடவில்லை. 37 ஆண்டுகால தெலுங்கு  தேச கட்சி வரலாற்றில் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று  முடிவெடுக்கும் சூழலூக்கு சந்திரபாபு நாயுடு தள்ளப்பட்டார். இதற்கு மூலக் காரணம் சந்திரசேகர ராவ். இதனால், இயல்பாகவே சந்திரசேகர ராவ் மீது சந்திரபாபு நாயுடுவுக்கு தீராக் கோபம். இந்த மையப் புள்ளிதான் தேசிய அரசியலிலும் அவர்களைத் தனித்தனி ஆவர்த்தணங்களை செய்ய வைத்திருக்கிறது. 

கடந்த காலங்களில் ஒன்றுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த தலைவர்கள் தேசிய அரசியலில் கோலோச்சியிருக்கிறார்கள். 1988-ல் தேசிய முன்னணியின் அமைப்பாளராக என்.டி.ராமாராவ் இருந்தார்.  1996-ல் ஐக்கிய முன்னணி உருவானதில் சந்திரபாபு நாயுடு முக்கிய பங்கு வகித்ததோடு, அதன் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்டமைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குள் மற்ற கட்சிகளைக் கொண்டுவரும் பொறுப்பை காங்கிரஸ் கட்சியே மேற்கொள்ளவில்லை. மாறாக சந்திரபாபு நாயுடு அதற்கான முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்.

இதுவரை சந்திராபு நாயுடு மட்டுமே செய்துவந்த ‘கிங் மேக்கர்’ பணியைப் பங்குபோட தற்போது சந்திரசேகர ராவும் வந்துவிட்டார். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட இருவரில் ‘கிங்மேக்கர்’ போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை  தேர்தல் முடிவுதான் நிர்ணய செய்யும். தேர்தலில் பாஜக கூட்டனி 200-க்கும் குறைவான தொகுதிகளைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கையிலேயே  ‘கிங் மேக்கர்’ போட்டியில் இவர்கள் நீடித்துவருகிறார்கள். எதிர்ப்பார்ப்பதுபோல நடந்தால், ‘கிங் மேக்கர்’ போட்டி இன்னும் சுவாரசியமாகும். 

05/05/2019

K - 13 விமர்சனம்

சினிமா இயக்கத் துடித்துக்கொண்டிருக்கும் மதியழகன் (அருள்நிதி) சக சினிமா நண்பர்கள் ஒரு பப்பில் வழங்கும் மது விருந்தில் பங்கேற்கிறார். அதே பப்புக்கு எழுத்தாளரான மலர்விழியும் (ஷரத்தா ஸ்ரீநாத்) வருகிறார். அங்கே இருவருக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. குடிப்போதையில் அருள்நிதி ஷரத்தா வீட்டுக்குச் செல்கிறார். காலையில் விடிந்து பார்க்கும்போது அருள்நிதி ஒரு சேரில்  கட்டப்பட்டு கிடக்கிறார். அருகே ஷரத்தா கையில் ரத்தக் காயத்துடன் இறந்துக்கிடக்கிறார். 

எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டதாக நினைக்கும் அருள்நிதி அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால், அங்கிருந்து நகர முடியாமல் சூழ்நிலைகள் அவரை அங்கேயே கட்டிப்போடுகிறது. இதன்பிறகு அருள்நிதி அங்கிருந்து தப்பித்தாரா இல்லையா, ஷரத்தா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா, அருள்நிதியின் சினிமா கனவு என்ன ஆனது போன்ற கேள்விகளுக்கு ‘K-13’- விடை சொல்கிறது.

K-13 என்ற அடுக்குமாடி வீட்டில் ஒரு நாளில் நடக்கும் மரணத்தைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களின் கோவைதான் இந்தப் படம். மிகவும் ஆர்வமுள்ள ஒரு விஷயத்தின் மீது படைப்பாளிக்கு ஏற்படும் ஆழமான ஈடுபாடு என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதை உளவியல் ரீதியாக சொல்ல முனைந்திருக்கிறது இப்படம். முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணின் வீட்டுக்கு வந்து சிக்கலில்  நாயகன் மாட்டிக்கொள்வதிலிருந்து, அவர் எப்படி இறந்தார், அருள்நிதியை யார் கட்டிப்போட்டது போன்ற கேள்விகள் நாயகனைபோல பார்வையாளர்களுக்கும் தொற்றிக்கொள்கிறது.

அதற்கேற்ப அங்கிருந்து தப்பித்து செல்ல தடயங்களையும் கைரேகைகளையும் நாயகன் அழிப்பது என த்ரில்லருக்கான அம்சங்களுடன் கதை பயணிக்கத் தொடங்குகிறது. பக்கத்தில் பிணத்தை வைத்துக்கொண்டு நாயகன் அடையும் பதற்றத்தைப் பார்வையாளர்களுக்கும் அப்படியே கடத்த முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பரத் நீலகண்டன். ஆனால், நான் லீனியர் பாணியில் முன்னும் பின்னுமாகக் காட்டப்படும் காட்சிகளால் த்ரில்லருக்கான விறுவிறுப்பு குறைந்துவிடுகிறது.

இரண்டாம் பாகத்தில்தான் திரைக்கதைக்காகக் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர்.  ஆனால், முதல் பாகத்தில் காட்டிய காட்சிகளுக்கு நியாயத்துடன் கட்டமைக்கப்பட்ட காட்சிகளைக் காட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால், அவை எல்லாமே துரித கதியில் மேலோட்டமாகக் காட்டப்படுவதால் மனதில் ஒட்டாமலேயே போய்விடுகிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அருள்நிதியை ஷரத்தா ஏன் பின்தொடர்கிறார் என்பதற்கு நியாயமான காரணங்கள் சொல்லப்படவில்லை. தப்பிக்க வாய்ப்பிருந்தும் நாயகன் அங்கே இருந்த
செல்ல முடியாததற்கு சொல்லப்படும் காரணங்களிலும் வலுவில்லை.

த்ரில்லர் படங்களை குழப்பம் இல்லாமல் எடுப்பது பெரும் கலை. ஆனால், அதில் இயக்குநரின் கைவண்ணம் சீட்டுக்கட்டாய் சரிகிறது. படத்தில் குழப்பமாகத் திரியும் நாயகனைபோலவே பார்வையாளர்களும் காட்சிகளை குழப்பத்துடனேயே பார்க்கும்படி  படமாக்கியிருப்பது இரண்டாம் பாகத்தில் படத்தின் அடிநாதத்தையே குலைத்துவிடுகிறது. அதோடு படத்தின் முடிவில் அருள்நிதி யார் என்ற ஒரு திருப்பத்தை இயக்குநர் சொல்கிறார். படத்துக்குள் படமாகக் காட்டப்படும் அந்தத் திருப்பத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பே படம் முடிந்துவிடுவதும் பெரும் குறை.

சினிமா எடுக்க 10 ஆண்டுகளாக கனவு காணும் இளைஞனின் வேடத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் அருள்நிதி. படம் முழுவதும் மப்பும் பதற்றமும் பீதியுமாக இருக்கிறார். அதைத் தாண்டி அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. முதல் பாகம் முழுவதும் பிணமாக நடித்திருக்கிறார் ஷரத்தா. இரண்டாம் பாகத்தில் மட்டுமே எமஷனலோடு நடிக்க முயற்சித்திருக்கிறார். கொரியர் டெலிவரி மேனாக ஒரே காட்சியில் வரும் யோகிபாபு, இந்தப் படத்தில் ஏன் நடித்தார் எனத் தெரியவில்லை. ஷரத்தாவின் தோழியாக வரும் காயத்ரியின் பாத்திரவார்ப்பில் முக்கியத்துவம் இல்லை. ‘எரும சாணி’ விஜய், ரமேஷ் திலக் ஆகியோர் கதையோட்டத்தோடு காணாமல் போய்விடுகிறார்கள்.

படத்தின் பலம் சாம் சி.எஸ்.ஸின் இசைதான். த்ரில்லர் படத்துக்கே உரிய பின்னனி இசையை வழங்கியிருக்கிறார். வீட்டைச் சுற்றிச் சுற்றிக் காட்டும் அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவுக்கு பெரிய வேலை இல்லை. ரூபணின் படத்தொகுப்பில் குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம்.

கதைக்காக எந்த எல்லைக்கும் படைப்பாளி செல்லலாம் எனப் படத்தில் ஒரு வசனம் வரும். படம் சொல்ல வந்த சங்கதி அதுதான். ஆனால், அதை அழகாகப் படமாக்க படைப்பாளி இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

மதிப்பெண் 2.5 / 5