31/03/2019

திருமாவளவனைத் தோற்கடித்த திருமாவளவன்!

ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயக உரிமையின் அடிப்படையிலானது. அதேசமயம், தேர்தல் தந்திரங்களில் ஒன்றாக, சுயேச்சைகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்வதும் உண்டு. பிரபல வேட்பாளர்கள் பெயரில் சுயேச்சை வேட்பாளரை நிறுத்தி வாக்காளர்களைக் குழப்புவதுதான் அந்தத் தந்திரம். வாக்காளர்கள் குழப்பமடைந்து ஓட்டை மாற்றிப் போடுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த உத்தியை அரசியல் கட்சிகள் பின்பற்றிவருகின்றன. அரதப் பழசான இந்த முயற்சிக்கு எந்தப் பலனும் இல்லை என்றே நம்பப்பட்டு வந்தது. ஆனால், 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெயர்க் குழப்பம் காரணமாக ஒரு பிரபல வேட்பாளர் தோற்கும் நிலை ஏற்பட்டது. அவர் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் மக்கள் நலக் கூட்டணி சார்பில் களமிறங்கினார். அந்தத் தொகுதியில் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் திருமாவளவன் தோல்வியடைந்தார். அந்தத் தொகுதியில் டி.திருமாவளவன் என்ற சுயேச்சை வேட்பாளர் களமிறங்கி 289 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஒரு வேளை அந்த வாக்குகளில் 50% திருமாவளவனுக்குக் கிடைத்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார்.
அதே தேர்தலில், உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில், இரண்டு சுயேச்சைகள் களமிறங்கினர். மூன்று விஜயகாந்துகளும் தோல்வியடைந்தனர். 2014 தருமபுரி மக்களவைத் தொகுதியிலும் அன்புமணி என்ற பெயரில் ஒரு சுயேச்சை வேட்பாளர் போட்டியிட்டு 1,370 வாக்குகளைப் பெற்றிருந்தார். தேர்தல் விநோதங்களுக்குப் பஞ்சமேயில்லை!
- இந்து தமிழ், 31-03-2019

30/03/2019

ஒரு ஓட்டில் தோற்றவர்களின் கதை!

சி.பி. ஜோஷி
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பவர்கள் சொல்லும் சாக்கு இது: “என்னுடைய ஒரு ஓட்டு இல்லை என்றால், ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.” உண்மையில் ஒரே ஓட்டில் தோற்றுப்போனவர்களை இந்தியத் தேர்தல் களம் பார்த்திருக்கிறது.

கர்நாடகத்தில் 2004-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சந்தேமர்ஹள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் துருவ்நாராயணா, மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஒரே ஓட்டில் தோற்கடித்தார். துருவ்நாராயணா 40,752 ஓட்டுகளைப் பெற்ற நிலையில், கிருஷ்ணமூர்த்திக்கு 40,751 ஓட்டுகளே கிடைத்தன.

2008 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில், நத்வாரா தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் சி.பி. ஜோஷி களமிறங்கினார். பாஜக சார்பில் கல்யாண் சிங் சவுகான் போட்டியிட்டார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோது வாக்கு எண்ணிக்கையில் இருவருக்கும் இடையே பெரும் இழுபறி ஏற்பட்டது. மாறி மாறி முன்னிலை வகித்தனர். ஜோஷி காங்கிரஸ் தலைவர் என்பதால், அவர் தேர்தலில் கரை சேருவாரா என்று காங்கிரஸ் தொண்டர்கள் கவலையில் மூழ்கினர். முடிவை ஊகிக்க முடியாத அளவுக்குக் கடுமையாக இருந்தது போட்டி.

இறுதியில் ஜோஷி 62,215 வாக்குகளைப் பெற்றார். கல்யாண் சிங் சவுகான் 62,216 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். ஒரே ஒரு ஓட்டில் ஜோஷியை கல்யாண் சிங் வீழ்த்தினார். ஜோஷியின் தோல்விக்குப் பின்னே ஒரு சுவாரஸ்யமான காரணமும் உண்டு. வாக்குப்பதிவு அன்று ஜோஷியின் அம்மா, மனைவி, கார் ஓட்டுநர் ஆகியோர் தேர்தலில் வாக்குச் சாவடிக்கே வரவில்லை. இவர்கள் மூவரும் ஓட்டு போட்டிருந்தால் ஜோஷி இரண்டு ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார்.

இனி, ஒரு ஓட்டில் என்ன நடக்கும் என்று நினைப்பீர்களா?

- இந்து தமிழ், 30-03-19

29/03/2019

ஒரு நடிகன் என்று மாறியாச்சு!

சினிமா ஒரு மாய உலகம். அதில் ஒருவர் எந்தத் துறையை ஆர்வமாகத் தேடி வருகிறாரோ, அது அவருக்குக் கிடைக்காமலேயே போய்விடும். வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கும் துறை, வீடு தேடிவந்து இழுத்துச் செல்லும். இன்றைய தமிழ்க் கலைஞர்களில் அதற்குச் சரியான உதாரணம் நடிகர் இளவரசு. இயக்குநகராக வேண்டும் என்ற லட்சியக் கனவுடன் இருந்தவரால் ஒளிப்பதிவாளராகத்தான் முடிந்தது. அதுவும் அவருக்கு எட்டாத கனியாக மாற, அரிதாரம் பூசி முழு நேர நடிகராக மாறியவர்.

1980-களில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியக் கனவுடன் மதுரையிலிருந்து புறப்பட்டவர்களில் இளவரசுவும் ஒருவர். சினிமா வாய்ப்பு தேடி அலைந்தவருக்கு பாராதிராஜா சினிமா யூனிட்டில் அடைக்கலம் கிடைத்தது. 1980 மற்றும் 90-களில் பாரதிராஜா இயக்கிய படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி. கண்ணன். அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் இளவரசு. எந்த சினிமா யூனிட்டிலும் இல்லாத ஒரு விஷேசம் பாரதிராஜா யூனிட்டில் நடக்கும். அவருடைய யூனிட்டில் பணியாற்றும் பெரும்பாலோனர் ஒரு காட்சியாலவது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். கேமரா மேன் உதவியாளராக இருந்தபோது சினிமாவில் தலைகாட்டினார் இளவரசு.

1987-ம் ஆண்டில் வெளியான ‘வேதம் புதிது’ படத்தில் பாலு தேவர் கதாபாத்திரத்தை சொத்துக்கு ஆசைப்பட்டு கொல்லும் வேடம் ஒன்று இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய ஆள் வராமல் போகவே, அந்த வாய்ப்பு இளவரசுக்கு கிடைத்தது. இரண்டு வசனம் பேசி இளவரசு நடித்தார். பின்பு அந்தக் கதாபாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் உயிர்கொடுத்தார் பாரதிராஜா. ஆனால், சென்சாரில் திரைக்கதை மாறியபோது இளவரசு நடித்த காட்சியமைப்புகள் மாறின. ஆனால், கேமரா மேன் உதவியாளராக இருந்த இளவரசு, கேமரா முன் நடித்த முதல் படம் ‘வேதம்புதிது’தான்.

அந்தப் படத்துக்கு பிறகு இடையே ‘என்னுயிர் தோழன்’, ‘கருத்தம்மா’ தவிர்த்து பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ தொடங்கி‘தமிழ்ச் செல்வன் ஐ.ஏ.எஸ்.’ படம்வரை ஏராளமான படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றிருக்கிறேன் என்பதைப் பெருமையாகச் சொல்கிறார் இளவரசு. கேமரா மேன் உதவியாளராக வந்த பிறகு அவருடைய லட்சியம் முழுவதுமே ஒளிப்பதிவாளராக வேண்டும் என்பதில் மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால்,  நடிகராக அவ்வப்போது தலைகாட்டிகொண்டிருந்ததால், அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் தேடி வந்திருக்கின்றன. ஆனால், அப்படி தேடிவந்த வாய்ப்புகளை வேண்டாம் என மறுத்ததாகச் சொல்கிறார் இளவரசு.

“1997-ம் ஆண்டில் ‘பொற்காலம்’ படம் வந்தது. அந்தப் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அந்தப் படத்துக்கு பிறகு   ‘வெற்றிகொடிக்கட்டு’, ‘பரிவட்டம்’ என்று அவ்வப்போது படங்களில் நடித்தேன். தொடர்ச்சியாக படவாய்ப்புகள் வந்தன. அந்தக் காலகட்டத்தில்தான் நான் ஒளிப்பதிவாளராக மாறியிருந்தேன். அதனால், அப்போது நான் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.  பலரும் என்னை நடிக்க அழைக்கும்போது,  ‘தேவையில்லாமல் நம்மை ஏன் கூப்பிடுகிறார்கள்’ என்று மறுத்திருக்கிறேன்” என்கிறார் இளவரசு.

சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே, 1990-களின் பிற்பகுதியில் இளவரசு ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். 1996-ம் ஆண்டு தொடங்கி 2000-ம் ஆண்டு வரை ஒளிப்பதிவளராக 13 படங்களில் இளவரசு பணியாற்றியிருக்கிறார். அதில் 11 படங்கள் வெளிவந்திருக்கின்றன. இதில், விஜய் நடித்த ‘ நினைத்தேன் வந்தாய்’ படமும் ஒன்று. அதன் பிறகு ஏன் ஒளிப்பதிவு வாய்ப்பு உங்களுக்கு வரவில்லை என்றால், ‘எவனும் கூப்பிடல..’ என வெடித்து சிரிக்கிறார்.

“என்னோட இயக்குனர்கள் சீமான், செல்வபாரதி, சிவச்சந்திரன் போன்றோர் கமர்ஷியலாக ஜெயிக்கவில்லை. வணிக வெற்றி இயக்குநர்களுக்கு மிகவும் முக்கியம். இயக்குநர்களை வைத்துதான் ஒளிப்பதிவாளர்கள் வர முடியும். நான் ஒளிப்பதிவாளராக இருந்தபோது உதவி இயக்குநர்களாக இருந்து பின்னர் இயக்குநர்களாக மாறியவர்கள், நமக்கு இவர் சரிப்பட்டு வருவாரா என்று யோசித்து கூப்பிடவில்லை. ஒளிப்பதிவாளராகக் கூப்பிடுவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. அந்தக் கட்டத்தில் ஆவணப் படங்களை எடுத்தேன். சினிமாவில் இயங்க வேண்டும் என்பதற்காகவும் வீட்டில் உள்ளவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இதைச் செய்தேன்” என்கிறார் இளவரசு.

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்துகொண்டே இயக்குநர்களாக இருந்தவர்கள் உண்டு. ஒளிப்பதிவாளராக இருந்து பின்னர் இயக்குநர் அவதாரம் எடுத்தவர்களும் உண்டு. ஆனால், இயக்குநராக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த இளவரசு, ஒளிப்பதிவாளர் வாய்ப்பு குறைந்தபோது, அரிதாரம் பூசிக்கொள்ளத் தொடங்கினார். நடிப்புதான் இனி என முடிவெடுத்தார். ஏன் இயக்குநராக முயற்சிக்கவில்லை என்று கேட்டதற்கு இப்படி பதில் சொல்கிறார் இளவரசு.

“ஒளிப்பதிவாளர் வாய்ப்பு குறைந்தாலும், வயிறுன்னு ஒன்னு இருக்கே. அதுமட்டுமில்ல, சினிமாவை தவிர எனக்கு எதுவும் தெரியாது. அதனால் ஒளிப்பதிவில் இருந்து எனக்கு ஏற்கனவே பரிட்சயமாகியிருந்த நடிப்புக்கு வந்துவிட்டேன். ஒளிப்பதிவாளராக இருந்துகொண்டு இயக்குநராக மாற வேண்டும் என்றால், அதற்கு முதலில் தயாரிப்பாளர் வேண்டும். பிறகு கதாநாயகன் வேண்டும். நான் ஒளிப்பதிவாளர் என்று சொன்னால் நம்புவார்கள். இயக்குநர் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? அதையெல்லாம் ஒவ்வொரிடமும் சொல்லி, நொந்து கேவலப்பட வேண்டுமா என்று யோசித்தேன். அதனால், இயக்குநர் ஆவதைப் பற்றி  நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என யதார்த்தமாகப் பேசுகிறார் இளவரசு.

புத்தாயிரத்துக்குப் பிறகு நடிப்பில் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்ட ஆரம்பித்த இளவரசு, வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என ஏற்காத வேடங்களே இல்லை. எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மையான நையாண்டிதனமான பேச்சுகள் மூலம் ரசிகர்களைக் கவர்வது இளவரசுக்கு கைவந்த கலை. அது எப்படி சாத்தியமானது?

“சினிமாவில் உள்ளதை உள்ளப்படி செய்தால் ஒரு கட்டத்தில் திகட்டிவிடும். தியேட்டரில் உட்கார்ந்துள்ளவர்களை கட்டிப்போட வேண்டும் என்றால்,  நல்ல எண்டர்டெயின்மென்ட் தேவை.  அதுபோன்ற சந்தர்ப்பத்தில் நமக்கு தோதான விஷயங்களை சேர்த்துக்கொள்ளலாம். கதைக்கோ, கதாபாத்திரங்களுக்கோ தொந்தரவு இல்லாமல் நகைச்சுவையைச் சேர்த்துக்கலாம். அதை இயக்குநர்களும் அனுமதிப்பார்கள். குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தபோதும் என்னுடைய நகைச்சுவைத்தனம் வெளிப்பட்டிருக்கிறது என்றால், தொந்தரவு செய்யாமல் அந்தக் காட்சி வந்திருக்கிறது என்று அர்த்தம்” என்கிறார் இளவரசு.

இதுவரை 170-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இளவரசு, இன்று மலையாளப் படத்திலும் தன் திறமையை வெளிப்படுத்திவருகிறார். 2017-ம் ஆண்டில் வெளியான ‘மாயநதி’ என்ற மலையாளப் படத்துக்குப் பிறகு 8 படங்களில் நடித்து முடித்துவிட்டார். மலையாளம் இல்லாமல் ஒரிய மொழியிலும் 3 படங்களில் இளவரசு நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என மூன்று தளங்களிலும் நடித்த ஜாம்பவான்கள் ஏராளம். புத்தாயிரத்துக்குப் பிறகு அந்த மூன்று தளங்களிலும்  நடிக்கும் திறமையான நடிகர்களில் ஒருவராகப் பரிணமித்திருக்கிறார் இளவரசு. ஒளிப்பதிவாளராக சினிமாவில் நுழைந்த இளவரசு, இன்று அந்தத் துறையே மறக்கும் அளவுக்கு முழு நேர நடிகராக மாறிவிட்டார். வாய்ப்புள்ள போதே தூற்றிக்கொள் என்ற சினிமா தத்துவத்துக்கு ஏற்ப யதார்த்தத்தை உணர்ந்த கலைஞர் அவர்!


கேள்வி - பதில்


ஒளிப்பதிவாளராக அறிமுகமான படம்?

1996-ல் சீமான் இயக்கத்தில் வெளியான ‘பாஞ்சாலங்குறிச்சி’.

சேரன் படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பது எப்படி?

ரெண்டு பேரும் பக்கத்து ஊர். ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். இது போதாதா?

நடிக்க முடியாமல் போனதே என்று வருந்திய படங்கள்?

‘குருதிப்புனல்’, ‘விருமாண்டி’. ஆனால், விட்டதை ‘பாபநாசம்’  மூலம் பிடித்தேன்.

மறக்க முடியாத பாராட்டு?

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில் மங்குனிப்பாண்டியனாக நடித்து சிரிக்க வைத்ததை  நாகேஷ் பாராட்டியது.

மீண்டும் ஒளிப்பாளராகும் எண்ணம் உண்டா?

 நிச்சயம் கிடையாது. இப்போதைக்கு நடிப்பு மட்டும்தான்.

எதிர்கால லட்சியம்?
ஒரு படத்தையாவது இயக்கிவிட வேண்டும்.



- இந்து தமிழ், 28/03/2019

நேயர்களை நடுங்கவைத்த நடத்தை விதிமுறைகள்!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றாலே அரசியல் கட்சிகளுக்குக் கொஞ்சம் கிலிதான். கொடி கட்டுவதில் தொடங்கி, சுவர் விளம்பரம், வாக்கு சேகரிப்பு, பிரியாணி வாங்கித் தருவது என ஒவ்வொரு விஷயத்திலும் தேர்தல் ஆணையம் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துகொண்டிருக்கும். எனவே, தேர்தல் நடத்தை விதிகள் அரசியல் கட்சிகளுக்கு வேப்பங்காயாகக் கசப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், விதிமுறைகளைக் கண்டு மக்களும் அஞ்சிய காலம் உண்டு.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம் அது.
இப்போதுபோல தொலைக்காட்சிகளோ கேபிளோ, டிடிஎச், டிஜிட்டல் சேவை வசதிகளோ அப்போது இல்லை. தூர்தர்ஷன் மட்டுமே காணக் கிடைக்கும். வெள்ளிக்கிழமை இரவில் வரும் ‘ஒளியும் ஒலியும்’ பாடல்களுக்காகவும், ஞாயிறு மாலையில் ஒளிபரப்பப்படும் திரைப்படத்துக்காகவும் ஊரே காத்திருக்கும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில், அரசியல் கட்சிகளில் உள்ள அரசியல் சார்புடைய நடிகர், நடிகையரின் படங்கள், பாடல்கள் எதையும் காட்ட மாட்டார்கள். எம்ஜிஆர், சிவாஜி, எஸ்எஸ்ஆர், ஜெயலலிதா போன்றோரின் படங்களையும் பாடல்களையும் கவனமாகத் தவிர்த்துவிடுவார்கள். டி.ராஜேந்தர், பாக்யராஜ் ஆகியோருடைய புதிய பாடல்களும்கூட(!) அனுமதிக்கப்படாது.

அரசியல் பின்னணி இல்லாதவர்களின் படங்களையும் பாடல்களையும்தான் தூர்தர்ஷனில் காட்டுவார்கள். ஜெமினி கணேசன் நடித்த படங்கள் அதிகம் ஒளிபரப்பாகும். ‘விருது’ படங்களைத் தேடிக் கண்டுபிடித்துப் போடுவார்கள்.
‘பஞ்சாயத்து டிவி.’யைப் பார்க்கக் குவியும் பார்வையாளர் கூட்டம், தேர்தல் காலத்தில் மட்டும் காணாமல்போய்விடும்.

வானொலியிலும் அதே கதைதான். தேர்தல் அறிவித்த உடனே, அரசியல் பின்னணி கொண்ட நடிகர்/நடிகைகளின் தீவிர ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்ததெல்லாம் உணர்வுபூர்வமான கனாக் காலம்!

- இந்து தமிழ், 29-03-2019


28/03/2019

முதல் இந்தியத் தேர்தலின் கதை!

இந்தியாவில் பதினேழாவது மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு
1967 - தமிழக வாக்குச்சாவடி
செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது. 1951 - 52-ம் ஆண்டில் இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 67 ஆண்டுகளில் 17-வது பொதுத் தேர்தலில் வந்து நிற்கிறோம். இந்தத் தருணத்தில் மக்களவை தேர்தலை வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்தபோது நாட்டின் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்றார். பிரதமராக நேரு பொறுப்பேற்றிருந்தாலும், இடைக்காலத்துக்கு நிறுவப்பட்ட  அமைச்சரவைக்குத் தலைவராகவே இருந்தார். இடைக்கால பிரதமராக நேரு இருந்த காலத்தில் பிரிட்டிஷ் சட்டங்களே இங்கே பின்பற்றப்பட்டன. 1950 ஜனவரி 26-ல் இந்தியா குடியரசு நாடாக மாறியது. இந்தியாவுக்கென உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின்படி முதல் பொதுத் தேர்தல் அதன் பிறகே நடைபெற்றது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தேர்தல் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில், முதல் மக்களவை தேர்தலை நாடு  எதிர்கொண்டது. மிகப் பெரும் சவால்கள் நிலவிய அந்தக் காலகட்டத்தில் 68 கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெற்றன. 1951 அக்டோபர் 25-ல் ஹிமாச்சலபிரதேசத்தில் தொடங்கிய முதல் கட்டத் தேர்தல், 1952 பிப்ரவரி 21-ல் உத்தரப்பிரதேசத்தில் நிறைவு பெற்றது. இந்த 67 ஆண்டுக் காலத்தில் இந்தியாவில் மிக அதிக நாட்கள் நடைபெற்ற தேர்தல் இதுதான்.

இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற சுகுமார் சென், முன் அனுபவம் ஏதுமின்றி வெற்றிகரமாகத் தேர்தலை நடத்தி காட்டினார். முதல் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்பு மிகப் பெரிய சவாலை இந்தியத் தேர்தல் ஆணையம் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தியச் சுதந்திரத்துக்கு முன்பும் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு தேர்தலை நடத்தியிருந்தாலும், அப்போது பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கவில்லை. மேலும் பிரிட்டிஷ் சட்டத்தின்படியே தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதுபோன்ற சூழ்நிலையில்தான் முதல் தேர்தலை இந்தியா எதிர்கொண்டது.

முதலில் தேர்தலில் வாக்குரிமை வயதை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்திய அரசியலைப்புச் சட்டத்தின்படி 21 வயது நிரம்பிய எல்லோருக்கும் வாக்குரிமை என 1950-ல் பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இந்திய இரண்டாம் நிலை நகரங்கள், கிராமங்கள் எதுவும் வளர்ச்சியடையாமல் இருந்தன. எழுத்தறிவு சதவீதமும் குறைவாக இருந்தது. அப்போது 15 சதவீதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்கிறது புள்ளிவிவரங்கள். எனவே தேர்தலைப் பற்றியும் வாக்குரிமை பற்றியும் பாமர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் ஏற்பட்டது.

இப்போது இருப்பதுபோல முதல் தேர்தலில் 543 நாடாளுமன்றத் தொகுதிகளும் இருக்கவில்லை. அப்போது 489 தொகுதிகள் மட்டுமே இருந்தன. முதல் மக்களவைத் தேர்தலில்  தனித் தொகுதிகளுக்கு வேறொரு நடைமுறை பின்பற்றப்பட்டது. 489 தொகுதிகளில் தலித்துகள், பழங்குடிகளுக்கு 94 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

சுகுமார் சென்
இந்த ஒதுக்கீட்டில் சில தொகுதிகளில் தலித் அல்லது பழங்குடி வேட்பாளர்கள் மட்டுமே நிற்கும் முறையும் சில தொகுதிகளில் இரட்டை உறுப்பினர் முறையும் பின்பற்றப்பட்டன. அதாவது, ஒரே தொகுதியில் பொது உறுப்பினர் ஒருவர், தலித் அல்லது பழங்குடி உறுப்பினர் ஒருவர் எனத் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகமாயின. இவர்களுக்கான ஓட்டுகளைத் தலித்துகள், பழங்குடிகள், பொதுப் பிரிவினர் என்று எல்லோருமே அளிப்பார்கள். எனவே சில தொகுதிகளில் இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டன.

ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 84 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 489 மக்களவைத் தொகுதிகளிலும் 1,849 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். நாடு முழுவதும் 17.3 கோடிப் பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தார்கள். ஆனால், தேர்தலில் 45 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாயின.

முதல் மக்களவை தேர்தலில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்தியத் தேசிய காங்கிரஸ் 364 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. எஸ்.ஏ. டாங்கே தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

-  இந்து தமிழ், 26-03-2019

24/03/2019

சென்னை ஸ்குவாஷ் புயல்!

இந்திய ஸ்குவாஷ் விளையாட்டைச் சர்வதேச அளவில் உயர்த்திப் பிடித்தவர் அவர். இந்திய ஸ்குவாஷ் விளையாட்டின் முடிசூடா ராணி. உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த தன்னிகரற்ற வீராங்கனை. இத்தனைப் பெருமைகளையும் படைத்த அந்த வீராங்கனை, தீபிகா பள்ளிக்கல்.

கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட தீபிகா பள்ளிக்கல், சென்னையில் பிறந்தவர். அம்மா சூசன், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடியவர். அம்மாபோல் தீபிகாவுக்கு கிரிக்கெட் மீதெல்லாம் ஆர்வம் பிறக்கவில்லை. ஸ்குவாஷ் விளையாட்டுக்கு அவர் வந்ததுகூட ஒரு விபத்துதான். பத்து வயதில் தோழி ஒருவர் மூலம் ஸ்குவாஷ் விளையாட்டு தீபிகாவுக்கு அறிமுகமானது. ஆனால், ஸ்குவாஷ் ராக்கெட்டைப் பிடித்த கையோடு, அடுத்த ஓராண்டில் தேசிய சாம்பியனாக தீபிகா உருவெடுத்ததெல்லாம் அதிசயம்!

தொழில்முறை ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனையாக தீபிகா 2006-ல் அடியெடுத்துவைத்தார். தீபிகாவிடமிருந்த ஸ்குவாஷ் திறமை வெளிப்பட்டது 2008-ல்தான். சென்னை ஓபனில் தனது முழுத் திறமையையும் வெளிச்சம் போட்டுக்காட்டினார் தீபிகா.

அதே ஆண்டில் பிரிட்டிஷ் ஓபன் ஜூனியர் சாம்பியன் (இது விம்பிள்டன் ஜூனியருக்கு இணையானது) பிரிவிலும் பல சாதனைகளைப் படைத்தார். அதேவேளையில் தன்னை இன்னும் மெருகேற்றிக்கொள்வதற்காக எகிப்திலும் சில காலம் ஸ்குவாஷ் பயிற்சியில் ஈடுபட்டார். பதின் பருவத்திலிருந்த தீபிகா, பெற்றோரைவிட்டுப் பிரிந்து பயிற்சியில் மூழ்கிக் கிடந்தார்.

பெருமையான தருணம்

ஒரு லட்சியத்தை அடைய விடாமுயற்சி வேண்டும் என்பதற்குச் சரியான உதாரணம் தீபிகா. ஸ்குவாஷில் ஜூனியர் அளவில் பெற்ற தொடர்ச்சியான வெற்றிகள், அவருக்குப் புதிய அடையாளத்தைத் தந்தன. 15 வயதுக்குட்பட்ட ஐரோப்பிய - ஆசிய ஸ்குவாஷ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை தீபிகா பெற்றார். ஆனால், அதன் பின்னணியில் தீபிகாவின் பெரும் உழைப்பு உண்டு.

16 வயதில் அந்த வயதுக்கே உரிய விளையாட்டு, கேளிக்கை, பொழுதுபோக்கு என எதிலும் தீபிகா ஈடுபாடு காட்டவில்லை. அவருடைய முழுக் கவனமும் ஸ்குவாஷ் மீது மட்டுமே குவிந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று எப்போதுமே பயிற்சியில் மூழ்கிக்கிடந்தார்.

வேண்டாம் சினிமா

ஃபேஷன் துறையிலும் தீபிகாவுக்கு ஈடுபாடு இருந்தது. தீபிகாவை ஸ்குவாஷ் விளையாட்டின் மரியா ஷரபோவா என அழைத்தவர்கள் ஏராளம்; இந்தியாவின் அழகுப் பொம்மை என்று வர்த்தணித்தவர்களும் அநேகர். அந்த வேளையில் அவருக்கு சினிமா அழைப்புகளும் வந்தன. அப்போது முடிவெடுப்பதில் தடுமாறும் வயதுதான் தீபிகாவுக்கு. ஆனால், தீர்க்கமாக முடிவெடுத்தார்.

“சினிமா எனக்குத் தேவையில்லை; ஸ்குவாஷ் விளையாட்டில் நம்பர் ஒன் வீராங்கனையாக வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய லட்சியம்” என்று வெளிப்படையாக அறிவித்து சினிமா அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.

தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வந்த தீபிகாவுக்கு வெற்றிகளும் குவியத் தொடங்கின. ஜெர்மன் ஓபன், பிரெஞ்ச் ஓபன், டச்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், ஸ்காட்டிஷ் ஓபன், ஐரோப்பிய ஓபன் என ஜூனியர் நிலைகளில் பெரும் வெற்றிகளைப் பதிவுசெய்தார் தீபிகா. அதற்கு முன்புவரை ஆசியாவின் நம்பர் ஒன் ஜூனியர் ஸ்குவாஷ் வீராங்கனையாக மட்டுமே இருந்தார் தீபிகா.

தொடர் வெற்றிகளுக்குப் பிறகு 2012-ல் சர்வதேசத் தரவரிசையில் பெரிய முன்னேற்றத்தைக் கண்டார். சர்வதேசத் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் கால் பதித்தார் தீபிகா. அந்த வகையில் ஸ்குவாஷில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றார்.

நாட்டுக்காகப் பதக்கங்கள்

ஸ்குவாஷ் விளையாட்டில் மைல் கல் தருணத்தை அடைந்தபோதும், அந்தப் பெருமை தன்னுடைய தலைக்கு ஏறாமல் தொடர்ந்து விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். அது அவருக்கு இன்னும் வெற்றிகளைப் பெற்றுத்தந்தது. சீனாவில் நடந்த மக்காவ் ஓபன் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரேச்சல் கிரின்ஹாமை வீழ்த்தி தீபிகா பட்டம் வென்றது அவருடைய திறமைக்கு மற்றுமொரு சாட்சியாக அமைந்தது. 2015-ம் ஆண்டில் கனடா ஓபனிலும் வெற்றி பெற்று அசத்தினார்.

வெறுமனே தொழில்முறைப் போட்டியாளராக மட்டுமல்லாமல், நாட்டுக்காகவும் பல்வேறு தொடர்களில் பங்கேற்று முத்திரை பதித்தவர் தீபிகா. 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் ஸ்குவாஷ் இரட்டையர் போட்டியில் ஜோஸ்னாவுடன் இணைந்து விளையாடி, தங்கப் பதக்கத்தை தீபிகா வென்றார். இதேபோல 2014 ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஸ்குவாஷ் அணி சார்பில் வெள்ளிப் பதக்கத்தையும் ஒற்றையர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் தீபிகா வென்றார்.

கடந்த ஆண்டு கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் மகளிர்
இரட்டையர் பிரிவில் ஜோஸ்னாவுடன் இணைந்து விளையாடி வெள்ளிப் பதக்கத்தையும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று நாடு திரும்பினார். கடந்த ஆண்டு ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்.

 ஒரே லட்சியம்

ஸ்குவாஷ் விளையாட்டில் தொடர்ச்சியாகத் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள தீபிகாவின் ஃபிட்னஸும் ஒரு முக்கியக் காரணம். ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை ஸ்குவாஷ் பயிற்சியில்தான் கழிப்பார் தீபிகா. விளையாட்டில் அவர் காட்டும் வேகமும் துடிப்பும் அவரைச் சிறந்த ஷாட் மேக்கராக மாற்றின. இந்த விஷயத்தில் சக போட்டியாளர் ஜோஸ்னாவோடு தீபிகாவுக்கு ஆரோக்கியமான போட்டி நிலவியது.

பல சந்தப்பங்களில் இருவரும் ஒருவரையொருவர் எதிர்கொண்டும் விளையாடி இருக்கிறார்கள். இருவருக்கும் இடையே போட்டி இருந்தாலும், விளையாட்டு என்ற அந்த எல்லையைத் தாண்டி சிறந்த நட்பையும் ஜோஸ்னாவுடன் தீபிகா கடைப்பிடித்தார்.

ஸ்குவாஷில் உச்சம்தொட்ட 2012-ம் ஆண்டில் தீபிகாவுக்கு அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. கிரிக்கெட்டே பிடிக்காமல் இருந்த தீபிகா, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை 2015-ல் காதல் மணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு ஸ்குவாஷில் இன்னொரு ரவுண்டு வரும் முயற்சியோடு தீவிரமாகக் களமாடிவருகிறார். காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள தீபிகாவுக்கு, ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் விளையாட்டு இல்லையே என்ற ஆதங்கம் நீண்ட நாட்களாகவே உண்டு.

அந்தக் குறையைப் போக்கிக்கொள்ளச் சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் முதலிடம் பிடிப்பதே இந்த ஸ்குவாஷ் புயலின் தற்போதைய உயர்ந்த லட்சியம்.

- இந்து தமிழ், 23/03/2019

13/03/2019

பூமராங் விமர்சனம்

வனப் பகுதியில் மலையேற்றம் செல்லும் சிவா என்ற இளைஞன் காட்டுத் தீயில் சிக்குகிறான். உயிர் பிழைத்தாலும், அந்த விபத்தில் அவருடைய முகம் உருக்குலைந்துவிடுகிறது. அதே வேளையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சக்தி (அதர்வா) மூளைச்சாவு அடைகிறான். அவருடைய முகத்தை எடுத்து முக மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிவாவுக்குப் பொருத்துகிறார்கள். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியவுடன் சிவாவை அடுத்தடுத்து கொலைசெய்ய முயற்சிகள் நடக்கின்றன. இதனால் குழம்பும் சிவா, தனக்கு ஒட்டப்பட்ட முகத்துக்கு காரணமான சக்தியின் பின்னணியைத் தேடிச் செல்கிறார். தன் முகத்துக்கு சொந்தக்காரர் யார், அவரை கொலை செய்ய ஏன் முயற்சிக்கிறார்கள் போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘பூமராங்’.

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே முக மாற்று படங்கள் தமிழில் வந்துள்ள நிலையில், படத்துக்கு அந்தத் தொழில்நுட்பத்தைத் தேர்வு செய்த இயக்குநர் கண்ணனைப் பாராட்டலாம்.  நதிநீர் இணைப்பு, தண்ணீரின்றி பாழ்படும் விவசாயம் போன்ற சமூகக் கருத்துகளைப் படத்தில் சொல்ல இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார். அதற்கு பக்கபலமாகச் சமகால கார்ப்பரேட் மூளைகள் செய்யும் தில்லாலங்கடிகளையும் துணைக்கு சேர்த்திருக்கிறார். சமகால அரசியலை கிண்டலடிக்கும் நையாண்டி வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. முகம் மாற்றிக்கொண்ட சிவாவை கொல்ல நடக்கும் முயற்சிகள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை முதல் பாகத்தில் கூட்டிவிடுகிறது.

ஆனால், இரண்டாம் பாகத்தில் வரும் திரைக்கதை அமைப்பு படத்தை வேறொரு தளத்துக்கு அழைத்து சென்றுவிடுகிறது. ஒரு புறம் காய்ந்த பூமி, இன்னொரு புறம் வீணாகக் கடலில் கலக்கும் ஆற்று நீர், அதைக் கிராமத்துக்கு திருப்பும் இளைஞரின் போராட்டம், அதை முறியடிக்க கார்ப்பரேட் கிரிமினலின் சதி எனத் திரைக்கதை நகர்கிறது. விவசாயம், நதிநீர் இணைப்பு போன்ற தீவிரமாகப் பேசக்கூடிய விஷயங்களை திரைக்கதை நகர்வுக்காக மேம்போக்காக இயக்குநர் காட்டுகிறார்.

இதற்கான காட்சி அமைப்புகளும் ஏற்கனவே பார்த்த ‘கத்தி’ போன்ற படங்களை நினைவுக்கு கொண்டுவந்துவிடுகிறது. இது முக மாற்று கதையா, விவசாய படமா, கார்ப்பரேட் தகிடுதத்தங்களைச் சொல்லும் கதையா எனக் குழப்பங்கள் வந்துவிடுகின்றன. முதல் பாதிக்கு மாறாக திரைக்கதை மெதுவாக நகர்வதால் ஒருவித அயர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது.

20 கிலோ மீட்டர் தூரத்துக்கு மனிதர்களே கால்வாய் வெட்ட முயற்சிப்பதாக காட்டும் காட்சியில் எந்த லாஜிக்குமே இல்லை. சட்ட விஷயங்களைப் பேசும் சுஹாசினி, முன்பின் தெரியாத இளைஞனின் முகத்தை இன்னொருவருக்கு தானமாக வழங்க கையெழுத்திட சொல்லும் காரணங்களும் நம்பும்படியாக இல்லை.

இந்தப் படத்தின் பலம் அதர்வா. முன் பாதியில் சிவா, பின்பாதியில் சக்தி என விறுவிறுப்பாக நடித்திருக்கிறார். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் கைதட்டலை அள்ளுகிறார். படத்தில் நாயகி இருக்க வேண்டும் என்பதற்காக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். டெம்பளேட் காதல் காட்சிகளில் வந்துபோகிறார். இவரைவிட இந்துஜா சற்று அழுத்தமான கதாபாத்திரத்தில் வருகிறார். முதல் பாகத்தில் சதிஷ் காமெடியில் சில காட்சிகளில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். இரண்டாம் பாகத்தில் தனது வழக்கமான பாணியில் சமகால அரசியலை கிண்டலடிக்கிறார் ஆர்.ஜெ. பாலாஜி.

படத்துக்கு இசை ரதன். பாடல்கள் தாளம் போட்டு ரசிக்க வைக்க மறுக்கிறது. வறட்சியான கிராமத்தை அழகாகப் படம் பிடித்து கவர்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார்.

கவர்ந்திழுக்கக்கூடிய விவசாயம், நதிநீர் இணைப்பு கதையைக் கொஞ்சம் (பூம)‘ராங்’காகப் பேசியிருக்கிறது இப்படம்.

மதிப்பெண் 2.5 / 5


11/03/2019

மல்யுத்த குடும்பத்தார்!

மகாவீர் சிங்குடன் போகத் சகோதரிகள்


அந்தத் தந்தைக்கு மல்யுத்தம் என்றால் உயிர். மல்யுத்தப் பயிற்சியாளரான அவர், தன்னைப் போல் தன் மகனைப் பார்போற்றும் மல்யுத்த வீரனாக்கக் கனவு கண்டார். ஆனால், அவருக்கோ அடுத்தடுத்து நான்கு பெண்கள் பிறந்தனர். இதனால், தன் ஆசையை மூட்டை கட்டிவைத்துவிட்டுத் தொழிலில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார்.

ஆனால், புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ன? அவருடைய இரண்டு மகள்கள் குஸ்தி போடும்போது, அவர்களிடம் வெளிப்பட்ட மல்யுத்தப் பாணியைக் கண்டு அவர் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார். தன் கனவுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முடிவு செய்தார். தன்னுடைய மகள்களுக்கு மல்யுத்தம் கற்றுக்கொடுத்தார். இன்று அவரது குடும்பத்தில் மூன்று பெண்கள்
முன்னணி மல்யுத்த சாம்பியன்கள்!

இந்திய மல்யுத்த விளையாட்டில் பிரகாசித்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண்கள் வேறு யாருமல்ல; ‘போகத் சகோதரிகள்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் கீதா போகத், பபிதாகுமரி, ரிது போகத் ஆகிய மூவரும்தான் அந்தப் பெருமைக்குரியவர்கள்.  அவர்களை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்குவதற்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த மகாவீர் சிங் போகத்தான் அந்தத் தந்தை. இந்தியில் வெளியாகிப் பெரும் வெற்றிபெற்ற ‘தங்கல்’ திரைப்படம், இந்தக் உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்டது.
பபிதா குமாரி

முடிவு செய்த தருணம்

ஹரியாணாவில் உள்ள பிஸ்வானி மாவட்டத்தில் பலாலி என்ற சிறு கிராமம்தான் போகத் சகோதரிகளின் சொந்த ஊர். ஏழை விவசாயியான அவர்களுடைய தந்தையின் ஒரே பொழுதுபோக்கு மல்யுத்த விளையாட்டு. மல்யுத்தப் பயிற்சியாளராகவும் மாறி அந்தக் கிராமத்திலிருந்த சிறுவர்களுக்கு மல்யுத்தப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார். தொடர்ச்சியாக நான்கு பெண் குழந்தைகள் பிறந்ததால், அவர்களுக்கு மல்யுத்தப் பயிற்சி அளிப்பதைப் பற்றி மகாவீர் சிங் யோசித்ததுகூட இல்லை.

அது 2000-ம் ஆண்டு. சிட்னி ஒலிம்பிக்கில் பளு தூக்கும் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்று தேசத்தின் மானம் காத்தார். நாட்டுக்காக ஒற்றைப் பெண்ணாக மல்லுக்கட்டி மல்லேஸ்வரி செய்த சாதனையைக் கண்ட மகாவீர் சிங், தன்னுடைய மகள்களால் ஏன் இதுபோன்ற சாதனை படைக்க முடியாது என்ற சிந்தனையில் மூழ்கினார். அவர்களை மல்யுத்த வீராங்கனைகளாக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். ஆனால், அவர்களுக்கு மல்யுத்தத்தின் மீது ஆர்வம் இருக்க வேண்டுமே என்று யோசித்தார்.

தடைகளைத் தாண்டி பயிற்சி

நான்கு மகள்களில் கீதாவும் பபிதாவும் மோதும் போது, அவர்களுக்குள் ஒளிந்திருந்த மல்யுத்தத் திறமை வெளிப்பட்டபோது மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றார் மகாவீர். உடனே நால்வருக்கும் மல்யுத்தப் பயிற்சி வழங்குவது எனத் தீர்மானித்தார். அப்பாவின் முடிவுகுப் பிறகு கீதா, பபிதா, ரிது ஆகியோருக்கு மல்யுத்தப் பயிற்சி கட்டாயமானது.

ரிது போகத்
பெண் குழந்தைகளுக்கு மல்யுத்தப் பயிற்சி வழங்குவதைக் கண்டு மகாவீர் சிங்கின் மனைவி கவுர் கொதித்துப்போனார். பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று  கிராம மனநிலைக்கே உரிய கோபத்தைக் கணவரிடம் காட்டினார். முடியை வெட்டிக்கொண்டு, அரைகுறை உடையுடன் பெண் குழந்தைகள் சண்டையிட்டால், அவர்களுடைய எதிர்காலம் பாழாகிவிடும்;
அவர்களுடைய திருமண வாழ்க்கை தடைபடும் என்றெல்லாம் சொன்னார். அவர் மட்டுமல்ல; அந்தக் கிராமத்தைச் சேர்ந்த எல்லோருமே பெண் குழந்தைகளுக்கு மல்யுத்தம் கற்றுக்கொடுப்பதைக் கேலி செய்தனர். முரட்டுச் சுபாவத்துடன் வளர்ந்து, எதிர்காலத்தில் பெற்றோருக்கு அவப்பெயர் வாங்கித்தருவார்கள் என சாபம்விடாத குறையாகப் பேசித் தீர்த்தார்கள்.

இடைவிடாத பயிற்சி

ஆனால், பெண்ணொருவர் பிரதமராக முடிந்த இந்திய நாட்டில், தன்னுடைய மகள்கள் மட்டும் மல்யுத்த வீராங்கனைகளாக முடியாதா என்று எதிர்க் கேள்வி கேட்டு ஊரார் வாயை அடைத்தார் மகாவீர். ஊராரின் பேச்சுகளையும் ஏச்சுகளையும் தாண்டித் தன் மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக அவர் மாற்றிக்காட்டினார். பயிற்சிக்காகத் தன் மகள்களை ஆண்களுடன் விளையாடவைத்தார்.

தினமும் அதிகாலை மூன்று மணி முதல் ஏழு மணிவரை பயிற்சி. பள்ளிக்கூடம் சென்றுவந்த பிறகு மாலையில் மீண்டும் பயிற்சி என ஒவ்வொருவரையும் கடும் பயிற்சி அளித்துச் செதுக்கினார். கிராமத்தில் வசதி குறைவு என்பதால், இந்திய விளையாட்டு ஆணையத்தில் பதிவுசெய்து, அருகே உள்ள சோனிபட்டுக்கு மேல்பயிற்சிக்காக மகள்களை அனுப்பிவைத்தார்.

தந்தையின் இடையறாத முயற்சி கைமேல் பலனைக் கொடுத்தது. முதல் இரண்டு பெண்களான கீதா போகத்தும் பபிதாகுமாரியும் 2009-ம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் காலடி வைத்தார்கள். ஜலந்தரில் நடந்த காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் 55 கிலோ எடைப் பிரிவில் கீதா தங்கப் பதக்கம் வென்று வெற்றிகரமாகப் பயணத்தைத் தொடங்கினார். அதே போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் பபிதாகுமாரியும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
கீதா போகத்

2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் அக்கா - தங்கை இருவரும் பதக்கம் வென்று சாதித்தார்கள். அக்கா கீதா தங்கப் பதக்கம் வெல்ல, தங்கை பபிதா வெள்ளிப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை கீதா போகத்துக்குக் கிடைத்தது.

தந்தைக்குப் பெருமை

இருவருமே மல்யுத்தப் போட்டியில் தொடர்ச்சியாகப் பல பதக்கங்களைப் பெற்று தேசத்துக்கு மட்டுமல்ல, தன் தந்தைக்கும் பெருமை சேர்த்தார்கள். மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் (2012); காமன்வெல்த் போட்டியில் தங்கம் (2014, 2018), வெள்ளி (2010); ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் (2013); காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் (2009, 2011) என பபிதாகுமாரி பதக்கங்களை அள்ளினார்.
அவருடைய அக்கா கீதா போகத், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் (2012); காமன்வெல்த் போட்டியில் தங்கம் (2010); ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் (2012, 2015); காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் (2009, 2011), வெள்ளி (2013) ஆகியவற்றை வென்று மல்யுத்த விளையாட்டில் முன்னணி வீராங்கனையாக உருவெடுத்தார்.

மகாவீர் சிங்கின் மூன்றாவது மகளான ரிது போகத், காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கமும் (2016), ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும் (2017) வென்று சகோதரிகளின் சாதனைப் பட்டியலில் சேர்ந்தார். கடைசி மகளான 20 வயது சங்கீதா போகத், சர்வதேச மல்யுத்தப் பயணத்துக்காகக் காத்திருக்கிறார்.

மகாவீர் அவருடைய மகள்களை மட்டும் மல்யுத்த வீராங்கனைகளாக வார்க்கவில்லை. தன் தம்பி ராஜ்பாலின் மகள்களான வினேஷ் போகத், பிரியங்கா போகத் ஆகியோரையும் வீராங்கனைகளாக மாற்றினார். தன் தம்பியின் மரணத்துக்குப் பிறகு அவர்களைத் தன்னுடனேயே தங்கவைத்துக் கொண்டார்.

ஐவர் ஆதிக்கம்

வினேஷ் போகத்
இந்த ஐவரில் குறிப்பிடத்தக்கவர் வினேஷ் போகத். கடந்த ஆண்டு கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார். காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப், இளையோர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று தங்கம் உள்படப் பத்துப் பதக்கங்களை வென்றவர் அவர் . இவருடைய சகோதரியான பிரியங்கா போகத் தேசிய மல்யுத்த சாம்பியனாக வலம்வருகிறார்.

2016-ல் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார்.  கீதா போகத், பபிதா குமாரி, ரிது போகத், வினேஷ் போகத், பிரியங்கா போகத் என ஐவருமே இந்திய மல்யுத்தத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள். இவர்களை ‘போகத் சகோதரிகள்’ என மல்யுத்த உலகம் அழைக்கிறது. இந்தச் சகோதரிகளின் ஆதிக்கம் ஒலிம்பிக் வரையிலும் நீண்டது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் கீதா போகத் தகுதிபெற்று, ஒலிம்பிக்குக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றார். இதேபோல அவருடைய சகோதரி பபிதாகுமாரியும் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று முதல் சுற்றில் வெளியேறினார். வினேஷ் போகத், ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்று காலிறுதிவரை முன்னேறி, கால் முட்டி காயத்தால் வெளியேறி பதக்க வாய்ப்பை நூலிழையில் கோட்டைவிட்டார்.

நம்பிக்கை நாயகிகள்

ஒரு சாதாரணக் கிராமத்தில் ஏழை மல்யுத்த வீரருக்குப் பிறந்த மூன்று பெண் பிள்ளைகளும் அவருடைய தம்பி மகள்கள் இருவரும் இன்று இந்திய மல்யுத்தப் போட்டியின் முகங்களாக மாறியிருக்கிறார்கள். ஆண் வாரிசுகளை மட்டுமே வைத்து வாழ்நாள் லட்சியத்தை ஒரு தந்தை அடைய முடியும் எனக் காலங்காலமாக நம்பப்பட்டுவந்த கற்பிதத்தை இந்தச் சகோதரிகள் சுக்குநூறாக்கிவிட்டார்கள். தந்தையின் லட்சியத்தைப் பெண் வாரிசுகளாலும் வென்றெடுக்க முடியும் என்று உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அந்த வகையில் போகத் சகோதரிகள் புதிய நம்பிக்கையைப் பெண்களிடம் விதைத்திருக்கிறார்கள்.

- இந்து தமிழ்,  03/03/2019

08/03/2019

நான் நடிகன்பா!

ந்தக் காலத்தில் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியாது. ஆனால், இன்றோ நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் என்ற அடையாளம் சிலருக்கு மட்டுமே உள்ளது. அந்த அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் இளங்கோ குமாரவேல்.

‘தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்’ என்ற பதத்துக்குப் பொருத்தமானவர். சுமார் 20 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் குணச்சித்திரப் பாத்திரங்களில் கோலோச்சிவரும் அவரை சந்தித்த உரையாடலின் ஒரு பகுதி.
சென்னைதான் இளங்கோ குமாரவேலின் பூர்வீகம். அவருடைய தாத்தா டாக்டர் ராசமாணிக்கம் ஒரு தமிழறிஞர். தந்தை இளங்கோ தமிழ் ஆசிரியர். அம்மா புனிதவதி இளங்கோவன் ஆல் இந்திய ரேடியோ முன்னாள் இயக்குநர். தமிழ் மனம் வீசும் குடும்பம். பெரிய குடும்ப பின்னணியோடு வந்த குமாரவேல், நாடகக் கலையைத் தன் வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்தார்.

1980-களின் இறுதியில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இந்திரா பார்த்தசாரதி துறைத் தலைவராக இருந்த ‘ஸ்கூல் ஆஃப் டிராமா’வில் முதுகலை படித்தவர் குமாரவேல். பிறகு ந. முத்துச்சாமியின் கூத்துப்பட்டறையிலும் பாடம் படித்தார். இந்த இரு இடங்களில்தான் உலக நாடகங்களையும் தமிழ் மரபுக் கலைகளையும் கற்றுக்கொண்டார் குமாரவேல்.
 நாடகம் மீதிருந்த தனியாதக் காதலால் ‘மேஜிக் லான்டர்ன்’ என்ற நாடகக் குழுவைக் குமாரவேல் தொடங்கினார்.

 குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கில நாடகங்களைக் கற்றுத் தருவது, நாடகங்களுக்குக் கதை எழுதுவது, அதில் நடிப்பது என இருந்தார். அந்த வகையில் 1999-ம் ஆண்டில் சென்னை ஒய்.எம்.சி.ஏ.வில் முதன் முறையாக ‘பொன்னியின் செல்வன்’ நாவலை  நாடகமாக்கினார். பொதுவாக நாடக
முயற்சிகளை கவனிக்கக்கூடியவர் நடிகர் நாசர். அந்த நாடகத்தில் கரிகாலனாக நாசர் நடித்தார். அதன்மூலமாக அவரோடு குமாரவேலுக்கு நட்பு ஏற்பட்டது. நாசர் மூலமாகவே தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

குமாரவேலின் சினிமா பயணம் 2001-ம் ஆண்டில் ‘மாயன்’  படத்திலிருந்து தொடங்கியது. அதையடுத்து தங்கர்பச்சனின் ‘அழகி’ படத்தில் வாய்ப்பு. இந்த இரு படங்களுக்குப் பிறகு இயக்குநர் ராதா மோகன் இயக்கிய ‘அழகிய தீயே’ படத்தில் நடிக்க வாய்ப்புத் தேடிவந்தது. ராதாமோகனுடன் நட்பு ஏற்படவும் நாடகம்தான் காரணம்.

ஒரு முறை‘மின்னல் ரவி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார் குமாரவேல். அந்த நாடகத்தைப் பார்க்க வந்த கேமரா மேன் விசு, இயக்குனர் ராதாமோகனிடம் குமாரவேலை அறிமுகப்படுத்தினார். அந்த அறிமுகமே ராதாமோகன் படத்தில் நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.
அதையடுத்து ராதாமோகன் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’, ‘அபியும் நானும்’, ‘பயணம்’, ‘கெளரவம்’, ‘உப்புக் கருவாடு’, ‘60 வயது மாநிறம்’, ‘காற்றின் மொழி’ என ராதாமோகனின் பெரும்பாலான படங்களில் குமாரவேலும் இடம் பிடித்திருக்கிறார்.

 ராதாமோகனின் ஆஸ்தான் நடிகரானது எப்படி எனக் குமாரவேலிடம் கேட்டால், “அது எப்படி நடந்துச்சுன்னு எனக்கே தெரியல” என்று சிரிக்கிறார். “அவருக்கு என்னைப் பிடித்தது ஒரு காரணமாக இருக்கலாம். என்னுடைய அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத்தான் ராதாமோகன் எனக்குக் கொடுத்திருக்கிறார். சில கதாபாத்திரங்களைச் செய்ய முடியுமா என்று தயங்கியபோதுகூட ‘உன்னால் முடியும்’ என்று தட்டிக் கொடுத்து செய்ய வைப்பார். ‘அழகிய தீயே’ படத்துக்கு பிறகு அவருடைய எல்லாப் படங்களிலும் நான் நடிக்கவில்லை என்றாலும், கதை விவாதங்களில்  எனக்கும் இடம் கொடுத்திருக்கிறார். எங்களுக்குள் நல்ல புரிதலும் நட்பும் உண்டு” என்கிறார் குமாரவேல்.

தொடர்ச்சியாக ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரங்களில் நடித்துவந்த குமாரவேல், ‘குரங்கு பொம்மை’ படத்தில் வில்லனாகவும் அரிதாரம் பூசியிருந்தார். அந்தக் கதாபாத்திரலும் அவர் ஜொலித்திருந்தார். அண்மையில் வெளியான ‘சர்வம் தாளமயம்’ படத்தில் ஜி.வி.பிரகாஷின் தந்தையாக ஜான்சன் கதாபாத்திரத்தில் முத்திரைப் பதித்திருந்தார் குமாரவேல். விளிம்பு நிலை மக்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம் அது.

மிருதங்கம் செய்யும் கூலித் தொழிலாளியாக வாழ்ந்திருந்தார்.
அந்தப் படத்தின் இயக்குநர் ராஜிவ் மேனன் குமாரவேலின் நெருங்கிய நண்பர் என்ற போதிலும், அவரையும் ஆடிசன் வைத்துதான் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்துக்காக  சென்னை ஐஸ்அவுஸில் மிருதங்கம் செய்யும் தொழிலாளி ஒருவரிடமிருந்து மிருதங்கம் எப்படி செய்வார்கள் என்பதைக் கற்ற பிறகே அந்தப் பாத்திரத்தை ஏற்றிருக்கிறார். “ஒரு கட்டத்தில் அந்தத் தொழிலாளியே எனக்கு இயக்குநர் போல ஆகிவிட்டார்.” என்கிறார் குமாரவேல்.

இதுவரை நாடகங்கள் பலவற்றை எழுதியிருக்கும் குமாரவேல்.  ‘கற்றது களவு’ என்ற படத்துக்கு திரைக்கதையும் எழுதியிருக்கிறார். நாடகம், சினிமா மட்டுமல்ல, விளம்பரத் துறையிலும் கால்பதித்தவர்.  1999-ம் ஆண்டு முதலே விளம்பரத் துறையில் இருந்துவருகிறார். தொடர்ந்து கலையும் கலை சார்ந்த தளமும்தான் குமாரவேலின் ஒரே தேர்வாக இருந்திருக்கிறது. தான் கற்றுக்கொண்ட  தொழிலில் இயங்குவதிலேயே அவருக்கு விருப்பம். அது நாடகமாக இருந்தாலும் சரி; விளம்பரம், சினிமாவாக இருந்தாலும் சரி!
---

பிரகாஷ்ராஜ் படங்களிலும் நீங்கள் இடம் பிடித்துவிடுகிறீர்களே?

‘அழகிய தீயே’ படத்திலிருந்து அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. அவருடைய படங்களில் திருப்தியான காதாபாத்திரங்கள் கிடைத்தது பெருமையான விஷயம்.

சுமார் 20 ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும், அடுத்தடுத்து படங்களில் நடிக்காமல் இருப்பது ஏன்?

‘அபியும் நானும்’ படத்துக்கு பிறகு, அதேபோல வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன. செய்த கதாபாத்திரத்தையே திரும்பவும் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.

‘குரங்கு பொம்மை’ படத்தில் திடீர் வில்லன் அவதாரம் எடுத்தன் ஏன்?

நான் நடிகன்பா.  நாடகங்களில் எத்தனை கதாபாத்திரங்களில் நடித்திருப்பேன். எனக்கு இது புதுசு இல்ல.

விளிம்பு நிலை மக்களின் கதாபாத்திரத்தை ஏற்ற ‘சர்வம் தாளமயம்’ படத்துக்கு ஹோம்வொர்க் ஏதும் செய்தீர்களா?

கண் பார்த்தது.. நடிப்பு தானாக வந்தது. ஆனால், அந்தப் படத்தில் ‘லைவ்’ சூட்டிங்தான் செய்தார்கள். எனவே, அதற்காக ஹோம் ஒர்க் செய்ய வேண்டியிருந்தது.

புதிய படங்கள்?

 ஹிப்ஹாப் ஆதியுடன் ‘நட்பே துணை’. சித்தார்த்துடன் ‘அருவம்’ மற்றும் ‘சதுரங்க வேட்டை 2’. இவை இல்லாமல் மிதுலன் படம் ஒன்று.

- இந்து தமிழ்,  08/03/2019








05/03/2019

தடம் விமர்சனம்


கட்டுமான நிறுவனம் நடத்திவரும் எழில் (அருண் விஜய்) தீபிகாவை (தன்யா ஹோப்) திருமணம் செய்துகொண்டு வாழ காத்திருக்கிறார்.  நண்பர் சுருளியுடன் (யோகிபாபு) சேர்ந்து கவின் (அருண் விஜய்) திருட்டுத் தொழிலில் ஈடுபடுகிறார். இந்தத் தருணத்தில் ஒரு கொலை நடக்கிறது. கொலைக்கு தடயமாக மொபைல் செல்பியில் அருண் விஜய் படம் பதிவாகிறது. இதை வைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பெப்சி விஜயன்) எழிலை கைது செய்கிறார்.

 அதே நேரத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி கைதாகிறார் கவின். அச்சு பிசகாமல் ஒரே உருவத்தில் இருக்கும் இருவரில், யார் கொலையாளி எனத் தெரியாமல் திணறுகிறது போலீஸ். கிடைக்கும் தடயங்களும் கைகொடுக்காமல் போகிறது. இறுதியில் கொலையாளி யார், ஏன் கொலை செய்தார் எனக் குழப்பங்களுடன் எழும் புதிர்களுக்குள் ஒளிந்துள்ள சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்கிறது ‘தடம்’.
 

சுமார் இரண்டே கால் மணி நேரம் நீளம் கொண்ட படத்தில் தொற்றிக்கொள்ளும் பரபரப்பையும் த்ரில்லிங்கையும் கடைசிவரை அப்படியே கொண்டு சென்றிருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனிக்கு ஒரு பூங்கொத்து.  ‘சட்டத்தின் ஓட்டைகள் அனைத்தும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளே’ என்று படத்தின் ஆரம்பத்திலேயே கார்டு போட்டுவிடுகிறார்கள். அது படம் முழுவதுமே எதிரொலிக்கிறது. வழக்கமான இரட்டையர் படமாக அல்லாமல், ஒத்த இரட்டையர்கள் (Identical twins) குற்றச் சம்பவங்களில் ஈடுபடும்போது மருத்துவ ரீதியாக கிடைக்கும் சாதகங்களைக் கதைக்கு ஆதார பலமாகப் பயன்படுத்தியிருப்பது திரைக்கதைக்கு வலு சேர்க்கிறது.
 

த்ரில்லர் படங்களுக்கே உரிய திருப்பங்களும் கதையோட்டத்துடன் பயணிப்பதில் இயக்குநர் தன் கைவண்ணத்தைக் காட்டியிருக்கிறார். குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற படங்களில் திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பினாலும் குழப்பங்கள் தொற்றிநிற்கும். ஆனால், அதற்கு இடம் தராமல் திரைக்கதையும் காட்சிப்படுத்துதலும் கச்சிதம். இடையிடையே சில கேள்விகள் மனதில் எழுந்தாலும், அதற்கான விடை மிஸ்ஸிங் ஆகாமல் படத்தை நிறைவு செய்ததில் இயக்குநரின் உழைப்பு அபாரம்.
 

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. ஒரே உருவத்தில் குழப்பும் இருவரும் தங்களைப் பற்றி முழுமையாக அவர்களே சொல்லாதவரை, போலீஸார் அதைப் பற்றி விசாரிக்காமல் இருப்பது விநோதம். சீரியஸான வழக்கை விசாரிக்கும் சூழலில் உடன் வரும் போலீஸார்  சிரிப்பு போலீஸாக வருவது காட்சியின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்துவிடுகிறது. குறிப்பாக தடயங்கள் எதுவும் கைகொடுக்காமல் போலீஸார் திணரும்போது, கிடைக்கும் முக்கியமான தடயம் போலீஸின் சபலத்தால் அழிவதாகக் காட்டும் காட்சி படத்தில் மிகப் பெரிய ஓட்டை. இதுபோன்ற காட்சிகளில் இயக்குநர் கொஞ்சம் கவனம் காட்டியிருக்கலாம்.
 

ஃபிளாஷ்பேக்கில் கவினின் அம்மாவாக வரும் சோனியாவை சூதாடியாகக் காட்டியிருப்பது இயக்குநரின் ரசனை வறட்சி. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தின் வேகத்துக்கு ஸ்பீடு பிரேக்காக விழுகிறது. திரைக்கதைக்குக் கொஞ்சமும் உதவாமல் முதல் பாகத்தில் வரும் தேவையில்லாத பாடல், யோகி பாபு தொடர்பான காட்சிகளில் கொஞ்சம் சுவாரசியசித்தைக் கூட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எழிலுடன் பெப்சி விஜயனுக்கு முன்விரோதம்,  எழிலை வழக்கில் சிக்க வைக்க அவர் எடுக்கும் முயற்சிகள் எனத் தமிழ்ப் படங்களுக்கே உரிய சில மசாலாத்தனங்கள் ஆங்காங்கே  தென்பட்டாலும், வேகமான திரைக்கதை காட்சிகள் அதை நேர் செய்துவிடுகின்றன.
 

அருண் விஜய்க்கு இந்தப் படம் நிச்சயம் பெயர் பெற்று தரும். இரட்டையர் பாத்திரத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். தோற்றத்திலும் உடல்மொழியிலும் ரொம்பவே மாற்றத்தைக் காட்டியிருக்கிறார். கதைக்கேற்ப  நடை, உடை, பாவனையிலும் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.  நாயகியாக வரும் தன்யா ஹோப், கொஞ்ச நேரமே வந்தாலும், கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கிறார். கவினை காதலிக்கும் அப்பாவி பெண்ணாக வந்துபோகிறார் ஸ்மிருதி வெங்கட்.


 முரட்டு இன்ஸ்பெக்டராக வரும் பெப்சி விஜயன் விரைப்பாகவே இருக்கிறார். சப் இன்ஸ்பெக்டராக வரும் வித்யா பிரதீப், நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். நாயகிகளைக்காட்டிலும் படம் முழுவதும் அவர் வருகிறார். முன்னணி காமெடியனாக உயர்ந்துவிட்ட யோகிபாபுவை இந்தப் பாத்திரத்தில் ஏன் நடிக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை.
 

அருண் ராஜின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். ஆனால், படத்தின் பின்பாதியில் அவருடைய பின்னணி இசை அருமை.   கோபிநாத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் என்றால்,  குழப்பம் இல்லாமல் தொகுத்ததில் ஸ்ரீகாந்தின் எடிட்டிங் படத்துக்குப் பக்கப்பலம்.
 

 இரட்டையர் படத்தை புதுமையாகவும் விறுவிறுப்பான த்ரில்லிங்குடன் கலந்து கொடுத்ததில் ‘தடம்’ அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது.

மதிப்பெண் 3.5 / 5