29/12/2019

2019: நடிப்பில் வெற்றிக்கொடி கட்டிய நாயகர்கள்!

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் எத்தனை செல்வாக்கோடு இருந்தாலும், திரையில் ஜொலிக்கும் நாயகர்கள்தாம் அந்தந்தப் படங்களின் ஒட்டுமொத்த அடையாளங்கள்.  நாயகர்களுக்குள் யார் முதன்மையானவர் என்ற போட்டிகள் எப்போதும் இருந்தாலும், ஓர் ஆண்டில் நாயகர்கள் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை, படங்களின் வெற்றி, தோல்வி போன்ற விஷயங்கள் நாயகர்களின் உச்சத்தையும், வளர்ந்து வரும் வேகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிவிடும். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் தங்களின் நடிப்பாற்றலின் மூலம் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற கதாநாயகர்கள் என்று பெயரெடுப்பவர்கள் ஒரு சிலரே. அந்த வகையில் இந்த ஆண்டு நடிப்பின் மூலம் வெற்றிக்கொடி கட்டியவர்கள் யார்?

அஜித்

கடந்த ஆண்டு ஒரு படமும் வரவில்லையே என்ற ரசிகர்களின் ஏக்கத்தை இந்த ஆண்டு இரட்டிப்பாகத் தீர்த்து வைத்தார் அஜித். ஆண்டு தொடக்கத்தில் ‘விஸ்வாசம்’, ஆண்டு மத்தியில் ‘நேர்க்கொண்டப் பார்வை’ என இரு வேறு பரிமாணங்களில் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். பொதுவெளியில் தலை காட்டாத அஜித்தை திரையில் பார்ப்பதே ரசிகர்களுக்கு கொண்டாட்டமான அனுபவம்தான். அதற்கேற்ப ‘விஸ்வாச’த்தில் ‘தூக்குதுரை’யாக படம் முழுக்க வேஷ்டி, முறுக்கு மீசை, மதுரை வட்டார மொழியில் அஜித் வெளுத்துவாங்கினார்.

பெண்களை அவமதிப்பதில்தான் ஆணின் வீரம் அடங்கியிருப்பதாகத் தமிழ் சினிமா தொடர்ந்து கதைகளைக் கட்டமைத்துவரும் சூழலில், முன்னணி நாயகரான அஜித் அதைத் தகர்த்தெறிந்த படம் ‘நேர்கொண்டப் பார்வை’. பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாக்கப்படும் பெண்களையே குற்றவாளிகளாக்க முயலும் பொதுப்புத்தியை அஜித் தோலுரித்துகாட்டியவிதம் எல்லோரையும் ஈர்த்தது. ‘நோ’ என்று சொன்னால் நோதான்’ என்று பெண்களின் பார்வையிலிருந்து ஓர் ஆணாக அஜித் பேசியது முக்கியமான தருணமாக அமைந்தது. தான் ஒரு முன்னணி கதாநாயகன் என்ற பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்காமல் ‘நேர்க்கொண்டப் பார்வை’யோடு நடித்த கதாபாத்திரம் அஜித்தைப் பெண்கள் மத்தியில் நிஜ கதாநாயகனாக உயர்த்தியது. ‘விஸ்வாசம்’, ‘நேர்க்கொண்டப் பார்வை’ என இரு படங்களும் அஜித்துக்கு வெற்றி படங்களாகவும் வசூலைக் குவித்த படமாகவும் இந்த ஆண்டு அமைந்தன.

விஜய்

ஆண்டுக்கு ஒரிரு படங்களில் தலையைக் காட்டும் கொள்கையைப் பின்பற்றும் விஜய், இந்த ஆண்டு நடித்து வெளியான ஒரே படம் ‘பிகில்’. முதன் முறையாக அப்பா - மகன் என அவதாரம் எடுத்த  படமும்கூட. விஜய் அப்பா வேடத்துக்கு செட் ஆவாரா என எழுந்த கேள்விகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மிக எளிமையான தோற்ற வேறுபாடு, குரல் மாறுபாடு என அப்பா - மகன் கதபாத்திரங்களை சிறப்பாகவே கடந்துசென்றார் விஜய்.
கால்பந்து வீரராகவும் பயிற்சியாளராகவும் வரும் காட்சிகளில் விஜயின் வழக்கமான துறுதுறுப்பும் இளமைத் துள்ளலும் ரசிகர்களைக் கவர்ந்தன. ஏற்கனவே வந்த படங்களின் சாயல் கொண்ட படம் என்ற விமர்சனத்தை ‘பிகில்’ பெற்றபோதும், படம் பாக்ஸ் ஆபிஸை நிரப்ப தவறவில்லை.

கார்த்தி

முன்னணி வரிசையில் உள்ள நாயகர்கள் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு பிரம்மாண்ட வெற்றிக்காகக் காத்திருக்கும் வேளையில் கார்த்தியின் கேரியர் கிராஃப் தொடர்ந்து பரமபத ஏணியில் ஏறுவதைப்போல ஏறிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் ‘தேவ்’, ‘கைதி’, ‘தம்பி’ என மூன்று வெவ்வேறுவிதமான கதையம்சங்கள் உள்ள படங்களில் கார்த்தி நடித்திருந்தார். கொஞ்சம் சறுக்கல் அடைந்தாலும், பல மடங்கு உயரமாக அடுத்தடுத்த படங்களில் வெற்றியைப் பெறும் நடிகர்களில் கார்த்தியும் ஒருவர்.

‘தேவ்’ சறுக்கலை ஏற்படுத்த ‘கைதி’யில் இறங்கி அடித்தார் கார்த்தி. தீபாவளி திருநாளில் ‘பிகில்’ ஃபீவர் ரசிகர்களை ஆக்கிரமித்திருந்த வேளையில், ‘கைதி’யில் டில்லியாக கார்த்தி டேக் ஆஃப் ஆனார். படம் முழுவதுமே லுங்கியும் தாடியும் நெற்றியில் திருநீறுமாக அதகளம் செய்திருந்தார். ‘தேவ்’ படத்தின் கதாபாத்திரத்துக்கு நேர்மாறாக கார்த்தி நடிப்பில் கெத்து காட்டியிருந்தில் ‘கைதி’ கார்த்தியின் கேரியரில் இன்னொரு மைல்கல்லானது. ஆண்டு இறுதியில் வெளியான ‘தம்பி’ படம் கார்த்தியின் வழக்கமான படமாக அமைந்தாலும், தன்னுடைய டிரேட் மார்க் நடிப்பால் ரசிகர்களுக்குத் தீனிப்போட தவறவில்லை.

தனுஷ்

கடந்த ஆண்டு இரு படங்களில் நடித்ததுபோல இந்த ஆண்டும் தனுஷ் நடித்து இரு படங்களே வெளியாயின. ‘அசுரன்’. நீண்ட நாளாக கிடப்பில் கிடந்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என இரு படங்களோடு திருப்தியானார் தனுஷ். ‘அசுரன்’ தனுஷின் சினிமா கேரியரில் தரமான படமாகப் பதிவான நிலையில் ‘தோட்டா’ சீறி பாயாமல் போனது. ஆனால், ‘அசுரன்’ கொடுத்த வெற்றி இன்னும் ஓராண்டுக்கு தாங்கும் என்று சொல்லுமளவுக்கு நடிப்பைக்
கொட்டி நடித்திருந்தார் தனுஷ்.

திருமணம் செய்யும் வயதில் ஒரு மகனுக்கு அப்பாவாக தனுஷ் ஏற்ற  சிவசாமி வேடம் பொருந்தவில்லையோ என்ற கேள்வியை தனது நடிப்பால் ஈடுகட்டி நடித்திருந்தார். பிள்ளைகளுக்குப் பாசமான அப்பா, குடும்பத்தைக் காக்கப் போராடும் குடும்பத் தலைவன், ஃபிளாஷ்பேக்கில் அழகான காதலன், சாதிய துவேஷங்களை எதிர்க்கும் ஆக்ரோஷமான இளைஞன் என ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் மிளிர்ந்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தனுஷுக்கு ஒரு படம் வெற்றி, ஒரு படம் தோல்வி. அந்த வகையில் தனுஷுக்கு ஃபிப்டி மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது ‘அசுரன்’.

விஜய் சேதுபதி

மசாலா படமா, கிராமத்துப் படமா, பெண்களை மையப்படுத்திய படமா, ஃபீரியட் படமா, நாயகன் பிம்பத்தைப் பார்க்காத படமா என எந்தப் படமாக இருந்தாலும் ஒரே சாய்ஸ் விஜய் சேதுபதி என்ற நிலையைத் தமிழ் திரையுலகம இந்த ஆண்டும் பார்த்தது. விஜய் சேதுபதி நடிப்பில் ‘பேட்ட’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘சிந்துபாத்’, ‘சைரா’,  ‘சங்கத்தமிழன்’ என ஐந்து படங்கள் வெளியாகின. ஐந்து படங்கள் வெளியாகியிருந்தாலும் ‘சூப்பர் டீலக்’ஸில் விஜய் சேதுபதி ஏற்ற திருநங்கை வேடம் பேச வைத்தது.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் விஜய்சேதுபதி தனித்து தெரிவதைப் போல ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்திலும் தனித்து தெரிந்தார். நாயகன் என்ற இமேஜை தூர வைத்துவிட்டு, ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரம் மூலம் இயக்குநரின் நடிகராக விஜய் சேதுபதி மாறி நடித்திருந்தார். காவல் நிலையத்தில் விஜய் சேதுபதி ஏற்றிருந்த அந்தக் காட்சியை எந்த நாயகனாவது செய்வாரா என்று யோசிக்க வைத்திருந்தார். திருநங்கைகளின் துயரத்தை, மனப்போராட்டத்தை, பொதுவாழ்வில் எதிர் கொள்ளும் சிக்கல்களை இயல்பான உடல்மொழி, முகபாவம், வசன உச்சரிப்புத் தொனி ஆகியவை வழியே பிரமிப்பூட்டும் வகையில் வெளிப்படுத்தியிருந்தார் விஜய் சேதுபதி. ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற ஒற்றைப் படம் விஜய் சேதுபதி என்ற கலைஞனை இந்த ஆண்டு தனித்து அடையாளப்படுத்தியது.

பார்த்திபன்


நடிப்புக் கலைஞரான ஆர். பார்த்திபன் பல படங்களில் பரிணமித்திருக்கிறார். இந்த ஆண்டு அவருடைய இயக்கத்தில் நடித்து வெளியான ‘ஒத்த செருப்பு’ என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்ப ஒற்றை ஆளாக புதியதொரு பாணியில் நடித்து தமிழ் திரையுலகத்துக்கு அதை அறிமுகம் செய்து வைத்தார் பார்த்திபன். படத்தில் அபூர்வமானதும் சவாலானதுமான அம்சமாக முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்றான பார்த்திபன் ஏற்ற மாசிலாமணி என்ற கதாபாத்திரம் மட்டுமே திரையில் தோன்றுவது என்ற யோசனையே பிரமிக்க வைத்தது.

ஒரே அறை, ஒரே நடிகர் என்று சலிப்படைய வைக்காமல் சுமார் இரண்டு மணி நேரம் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டதில் திரைக் கதையாசிரியருமாக நடிகருமாக இரட்டை சவாரியில் பார்த்திபன் அழுத்தமான வெற்றியைப் பதிவு செய்திருந்தார். வித்தியாசமான படங்கள் எனக் குரல் வழியே சொல்லிக்கொண்டிருக்காமல் அதை ஒலியும் ஒளியும் ஆக்கி ‘புதிய பாதை’ போட்டதில் ‘குடைக்குள் மழை’யாக பார்த்திபன் இந்த ஆண்டு ஜில்லென ரசிக்க வைத்தார்.

ஆர்யா

இந்த ஆண்டு ஆர்யா நடிப்பில் ‘மகாமுனி’ ‘காப்பான்’ என இரு படங்கள் வெளியாகியிருந்தது. ‘காப்பா’னில் துக்கடாவாக வந்துபோனவர் மகாமுனியில் தூள் கிளப்பியிருந்தார். இரட்டை வேடங்கள் என்பதே கதாநாயகர்களின் சாகசங்களுக்கான களமாக பயன்படுத்திவரும் தமிழ் சினிமாவில், இரட்டை வேடத்தை சராசரி மனிதர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஆர்யா ஏற்றிருந்தது ரசிர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தது.

நடிக்க வாய்ப்புள்ள படங்கள் என்றால், ஆர்யா அவதாரம் வேறுமாதிரி இருக்கும் என்று இன்னொரு முறை அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார் ஆர்யா. ‘நான் கடவுள்’ அகோரிபோல ஆர்யாவுக்கு மகா, முனி கதாபாத்திரங்கள் வாழ்நாள் கதாபாத்திரங்கள். அந்தப் பாத்திர வார்ப்புக்கு கச்சிதமாகப் பொருந்தியதோடு மட்டுமல்லாமல், அதன் நுட்பங்களை உணர்ந்து, உடல்மொழி, வசன உச்சரிப்பிலும் நடிப்பை வெளிப்படுத்தியவிதத்தில் ஆர்யாவுக்கு ஆயிரம் வாலா பட்டாசு போடலாம்.

அருண் விஜய்

அருண் விஜய் நீண்ட நாள் கழித்து இந்த ஆண்டு அழுத்தமாக ‘தடம்’ பதித்தார். இரட்டையர் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வெளியான  ‘தடம்’ படம் ஒத்த இரட்டையர்கள் (Identical twins) குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதை தோலுரித்துக் காட்டியது. இரு வேடங்களில் வெரைட்டி காட்டி நடித்து ரசிகர்களைக் கட்டிப்போட்டார் அருண் விஜய். இரட்டையர்
பாத்திரத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்திய அருண் விஜய், தோற்றத்திலும் உடல்மொழியிலும் ரொம்பவே மாற்றத்தைக் காட்டியிருக்கிறார். அருண் விஜயின் சினிமா கேரியரில் இப்படம் அவருக்கு தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியது.

திரைக்கு வெளியே.. மு. ராமசாமி

 நாயகர்கள் வயதான வேடத்தில் நடிப்பது தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. ஆனால், வயதான நாடகக் கலைஞரான மு.ராமசாமி முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்த படமாக வெளியானது ‘கே.டி. என்ற கருப்புத்துரை’ படம். உறவுகளால் உதறப்பட்ட முதியவரும் உறவுகள் யார் என்றே தெரியாத ஒரு சிறுவனும் நடத்தும் அன்பு சாம்ராஜ்ஜியம்தான் படத்தின் பயணம். கதைதான் படத்தின் நாயகன் என்பதால், நட்சத்திர அந்தஸ்து எல்லாம் இரண்டாம்பட்சமானது. நாடகங்கள் மூலம் நடிப்பு ஆளுமையாக உருவெடுத்திருக்கும் மு.ராமசாமி கருப்புத்துரை கதாபாத்திரத்தில் நம் வீட்டு தாத்தாவைக் கண்முன்னே கொண்டுவந்தார்.

ஊட்டி வளர்த்த பிள்ளைகளே தன்னைக் கொல்ல நினைக்கிறார்களே எனும் வேதனையும், குட்டி என்ற சிறுவன் மூலம் கிடைக்கும் அன்பில் நெகிழ்வதிலும் வஞ்சனையே இல்லாமல் நடித்திருந்தார். அதுவும் நல்லி எலும்பைக் கடித்தபடி பிரியாணி சாப்பிடும் காட்சியைப் பார்த்தவர்கள், படம் முடிந்ததும் நேராக பிரியாணிக் கடைக்கு போகும் அளவுக்கு தத்ரூபமாக நடித்து கலக்கியிருந்தார் மு.ராமசாமி. கடைசி காலத்தில் கைவிடப்பட்ட முதியவரின் மொத்த வலியையும் பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்தியதிலும் மு.ராமசாமி மிளிர்ந்தார். பல படங்களில் சிறு வேடங்களில் வந்துபோன மு.ராமசாமிக்கு இந்தப் படம் தனித்த அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது.

- இந்து தமிழ், 27-12-2019

25/12/2019

ஹீரோ விமர்சனம்

சிறு வயதிலிருந்து சக்திமான்போல ஆக வேண்டும் என்ற ஆசை கொண்டவர் சக்தி (சிவகார்த்திகேயன்). சந்தர்ப்ப சூழ்நிலையால், பிழைப்புக்காக போலிச் சான்றிதழ் தயாரித்துக் கொடுக்கும் வேலை செய்கிறார்.  கல்லூரியில் மாணவர்களைச் சேர்த்துவிட்டு கமிஷனும் பார்க்கிறார். அவருடைய தங்கை போன்ற மதிக்கு ஏரோ நாட்டிகல் படிப்புக்காக சீட்டுக்கு அலைகிறார். ஆனால், அது கிடைக்காமல் போகிறது. மதி கண்டுபிடித்த உப்புநீர் இன்ஜினை வைத்து சீட் பெறுகிறார். ஆனால், மதி காப்புரிமை திருடிவிட்டார் என்று போலீஸ் கைது செய்கிறது. இதனால் மதி தற்கொலைசெய்துகொள்கிறார். மதியின் கண்டுபிடிப்புக்குக் காரணமாக இருக்கும் சத்தியமூர்த்தி (அர்ஜுன்)யுடன் சிவகார்த்திகேயன் கைகோர்க்கிறார். இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் கார்ப்பரேட் உலகின் தாதாவான மகாதேவை (அபய் தியோல்) அழைக்க சிவகார்த்தி ஹீரோ அவதாரம் எடுக்கிறார். அதில் அவர் வென்றாரா, இல்லையா என்பதுதான் ‘ஹீரோ’ கதை.

நம் நாட்டின் கற்றல் முறையைக் கேள்விக்கொள்ளாக்கியிருக்கிறது இப்படம். படம் நெடுகிலும் இந்தக் கருத்தை இயக்குநர் மித்ரன் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த ஒற்றை விஷயத்தைதான் திரைக்கதைக்கான கன்டண்டாக மாற்றியிருக்கிறார் இயக்குநர். ஆனால், காட்சிகளாக மாற்றுவதில் இயக்குநர் சறுக்கிவிடுகிறார். கன்னிவெடிகளைப் போல படம் நெடுகிலும் சரடுகள் வெடித்துக்கிளம்புகின்றன. மருத்துவக் கல்லூரி ஊழல்களைக் கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியைப் பாந்தமாக மிரட்டுவதில் தொடங்கும் சரடு படம் முடியும்வரை வெடித்துக் கிளம்புகின்றன.

அரசுக்கே தெரியாமல் நடக்கும் ஒரு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி எப்படி உயர்க்கல்வியில் சேர முயற்சிக்க முடியும் என்ற கேள்வியும் பிரதானமாக எழுகிறது. தனித்தேர்வராக எழுதினார் என்றால்கூட, அதை நியாயப்படுத்தும் காட்சிகள் படத்தில் மிஸ்ஸிங். வில்லனாக வரும் மகாதேவ், கல்லூரி நடத்துபவரா, கார்ப்பரேட்டா என படத்தில் ஏகக் குழப்பம். ஒரே ஆள் இரண்டையும் செய்வதாகவும் காட்சிகள் எதுவும் இல்லை. புத்திசாலிகளை உடன் வைத்துக்கொண்டு அவரையும் நன்றாகக் கவனித்து தானும் சம்பாதிப்பதுதான் கார்ப்பரேட்டுகளின் பாணி. புத்திசாலிகளின் சிந்தனையை மகாதேவ் ஏன் அழிக்க முயற்சிக்க வேண்டும் என்ற கேள்விக்கும் படத்தில் விடை இல்லை.

படத்தின் நடுவில் அர்ஜூன் - சிவகார்த்திகேயன் என யாருக்கு முக்கியத்துவம் தருவது என்பதிலும் இயக்குநர் தடுமாறிவிடுகிறார். எதைப் பற்றியும் கவலைப்படாமல் காசு கொடுத்தால் கள்ளத்தனமாக சான்றிதழ் அடித்துக்கொடுக்கும் நாயகன், பின்பகுதியில் அறச்சீற்றம் கொள்வது சிரிப்பை வரவழைத்துவிடுகிறது. பிராட்டாக உருவாக்கும் கல்வி முறையை விமர்சித்து, தன்னம்பிக்கையைக் கொடுக்கும் கல்வி என அர்ஜூன் பேசும் பள்ளியில் படிக்கும் மாணவி தற்கொலை செய்வதாகக் காட்டும் காட்சியும் லாஜிக் ஓட்டை. வில்லன்களை அழிக்க சூப்பர் ஹீரோ தேவை என்ற படத்தின் மையக்கருத்துக்கே படத்தின் பின்பகுதியில்தான் இயக்குநர் வருகிறார்.

 நாயகன் ‘ஹீரோ’ அவதாரம் எடுக்கும்போது படமும் முடிந்துவிடுகிறது.
சிவகார்த்திகேயன் வழக்கம் போல் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். அர்ஜுனுக்கு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் தான் இன்னும் ஆக்‌ஷன் கிங் என்பதை நிரூபிக்கிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் வருகிறார். இவர் படத்தில் தேவையில்லாத ஆனி.  அழகம் பெருமாள், இளங்கோ குமார வேல், ரோபோ சங்கர் போன்றோரும் சினிமாவில் வந்துபோகிறார்கள். பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவும் இல்லை.

இந்த ‘ஹீரோ’வின் சாகசங்களில் லாஜிக்கும் இல்லை; மேஜிக்கும் இல்லை.

மதிப்பெண் - 2 / 5

18/12/2019

கமல், ரஜினி யுகம்...! பின்னோக்கிய காலப் பயணம்

1970.... ஸ்டூடியோக்கள் யுகம் மறைந்து மனம் மயக்கும் மண்வாசனை தொடங்கிய காலம். எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரு பெரும் கலைஞர்களின் ஆதிக்கம் குறைய தொடங்கிய நேரம். புதிய புதிய படைப்பாளிகள் கதை உள்ளடக்கத்திலும், காட்சி அமைப்பிலும் யதார்த்தத்தைப் புகுத்திய தருணம். பல எதிர்பார்ப்புகளோடு புதிய கலைஞர்கள் தமிழ்ச் சினிமாவில் காலடி எடுத்து வைத்த வேளை. ஆனால், அந்த இரண்டு கலைஞர்களின் எழுச்சி தமிழ்ச் சினிமாவின் தடத்தை மாற்றியது. அறிமுகமாகிச் சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் பிதாமகன்களான அந்த இரு கலைஞர்கள் யார்? கமல், ரஜினி!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சூப்பர் ஸ்டார்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர்.-சிவாஜி. 1970-களிம் முற்பகுதியில் எம்.ஜி.ஆர். தீவிர அரசியலுக்கு சென்றுவிட சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். அவரோடு சமகாலத்தில் நடித்து புகழ்பெற்ற இன்னொரு மாபெரும் கலைஞரான சிவாஜி நடித்துக்கொண்டிருந்தாலும் வயதுக்கேற்ற வேடங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் உச்ச நட்சத்திரங்கள் இடங்கள் காலியாகின. அந்தக் காலியிடத்தை வேறு யாராவது பிடிப்பார்கள் என்று அப்போது யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

எம்.ஜி.ஆர்.-சிவாஜி  நாயகர்களாகக் கொடிக்கட்டி பறந்த காலத்தில் அறிமுகமாகி 70-களிலும் கோலோச்சிய முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர், சிவகுமார், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந் போன்றவர்கள் அந்த ஓட்டத்தில் இருக்கவும் இல்லை. 1960-களில்  எம்.ஜி.ஆரும் சிவாஜியும் தனித்தனிப் பார்முலாவை உருவாக்கி, அதில் பயணித்து மாபெரும் வெற்றி பெற்றார்கள். 1970-களின் முற்பகுதியில் முன்னேறிக் கொண்டிருந்த நாயகர்கள் அதே பழைய பாணி பார்முலாவையே பின்பற்றினார்கள்.  இந்தப் படங்களில் துள்ளல்மயமான,  வித்தியாசமான, சாகசங்கள் நிறைந்த காட்சிகளோ,
புதுமைகளோ  இருந்ததில்லை.

எம்.ஜி.ஆரும். சிவாஜியும் செய்த காட்டிய அதே  நடிப்பு உத்தியை மற்றவர்களும் பின்பற்றியபோது அது ரசிகர்களுக்குச் சலிப்பை உண்டாக்கின என்றும் சொல்லலாம். அதன் காரணமாக அவர்களால் ரசிகர்களைப் பெரியளவில் ஈர்க்க முடியாமல் போனது. 1970-களின் மத்தியில் அறிமுகமான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் ரசிகர்களை ஈர்த்ததற்கும்  இதுதான் காரணம். கால ஓட்டத்துக்கு ஏற்ப இளமை துள்ளல், சாகசங்கள், காதல் ரசம் கொட்ட வைத்த காட்சிகள் என ரசிகர்களை ஈர்க்கும் மந்திர உத்திகளை ரஜினி-கமல் பயன்படுத்தினார்கள். அது அவர்களுக்குத் தமிழ் சினிமாவில் புதிய அடையாளத்தை உருவாக்கியது.

‘அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...’ என மழலை சொல் மாறாமல் பாட்டு பாடி நடித்த சிறுவன் கமல், 1970-களின் முற்பகுதியில் வாலிபனாகப் பாலசந்தரால் ‘அரங்கேற்றம்’ ஆனார். தொடர்ந்து  இயக்குநர் பாலசந்தரின் சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, நான் அவனில்லை எனப் பல படங்களில் தலையைக் காட்டிக் கொண்டிருந்த கமலுக்கு 1975-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டு. அந்த ஆண்டில்தான் கமல் நாயகனாகப் பரிணமித்த 'அபூர்வ ராகங்கள்' வெளியானது. கமலுக்குப் பெரும் அங்கீகாரம் கொடுத்த படம். 

படத்தின் கதை சர்ச்சைக்குள்ளான ஒரு கருவைக் கொண்டிருந்தாலும் வித்தியாசமான கதைக்காக  மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் விடலைப் பருவத்து நாயகனாக  நடித்தது முதலே கமல் என்ற அரிய கலைஞன் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார். இதே படத்தின் முதல் காட்சியில் கறுப்பான தோற்றம், பரட்டை தலையுடன் தோன்றிய ரஜினி, தமிழ் ரசிகர்களின் இதயங்களைக் கட்டிப்போட்டுவிட்டார். அடுத்த சில ஆண்டுகளின் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாகத் தாம் இருப்போம் என 1975-ல் கமலும் ரஜினியும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.

குறிப்பாக ரஜினி என்றாலே ஸ்டைல், ஸ்டைல் என்றாலே ரஜினி என்ற ஒரு காலம் அப்போதே தொடங்கிவிட்டது. அவர் நடித்த படங்களில் ஏதாவது ஒரு வகை ஸ்டைல் ரசிகர்களுக்காகத் திணிக்கப்பட்ட காலகட்டம் அது. கமல் என்றாலே காதல் மன்னன் என்றானது. அவரது படத்தில் உருகிக் உருகி காதல் ரசம் பாலாறு தேனாருமாக ஓடும். அப்படியே  நடிப்புக்காக வித்தியாசமான தோற்றங்களில் மாறுவது, நடிப்புக்காக மெனக்கெடுவதும் கமலுக்கான ஒரு அடையாளமாகிபோனது.

ஆரம்பக் காலப் படங்களில் ஸ்டைல் முத்திரை ரஜினி மீது விழுவதற்கு   'மூன்று முடிச்சி' படமும் ஒரு காரணம். சாதுவான கமல், கனிவான ஸ்ரீதேவி, கோரமான ரஜினி என மூன்று பேருமே  நடிப்பில் ஸ்கோர் செய்த படம். சாதாரண முக்கோணக் காதல் கதை போல் தெரிந்தாலும், ரஜினியின் கோரமுகம் வெளிப்படும் போதும் கதை வேகமெடுக்கும். ஸ்ரீதேவியை அடைய ரஜினி முயற்சிக்க, ஸ்ரீதேவியோ ரஜினியின் அப்பாவையே திருமணம் செய்து கொண்டு அவருக்குச் சித்தியாக வந்து  ரஜினியை வெறுப்பேற்றும்போது இருவருக்கும் மாறி மாறி ஸ்கோர் விழுந்து கொண்டே இருந்தது. ரஜினியின் வித்தியாசமான மேனரிசமும், அவரது வேகமும், வில்லத்தனமிக்க பேச்சும் அந்தக் காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஜினிக்குத் தமிழில் புதிய தொடக்கத்தைக் கொடுத்த படம் இது.

அதேபோல 1976-ல் ரஜினி-கமல்-ஸ்ரீதேவி நடித்துத் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த இன்னொரு படம்  ‘16 வயதினிலே’. படம் வெளியாகி 40 ஆண்டுகளைத் தொட்டும்கூடச் சப்பாணி-பரட்டை-மயில் கதாபாத்திரங்கள் இன்னும் பேசப்படுகிறது. ராஜபாட் உடையிலும், ஒயிட் காலர் டிரஸ்ஸிலும்  நாயகர்களைப் பார்த்துச் சலித்துபோன ரசிகர்கள், கோவணத்தில்  ‘சப்பாணி கமலை’ப் பார்த்து அதிசயித்துதான் போனார்கள்.  ‘இதெப்படி இருக்கு...’ என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே பஞ் டயலாக் பேசிய 'பரட்டை ரஜினி'க்குத் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கேரக்டராக அது அமைந்தது.

 'மூன்று முடிச்சி', '16 வயதினிலே' என இரண்டுப் படங்களை இங்கே குறிப்பிட ஒரு காரணம் உண்டு. ஏனென்றால் இந்த இரு படங்களும் முறையே 1975, 1976-ம் ஆண்டுகளில் வெளியான படங்கள். ரஜினியும் கமலும் அறிமுகமான ஓரிரு ஆண்டுகளிலே உச்சிக்குக் கொண்டு போன படங்கள்.  கமலும் ரஜினியும் அறிமுகமான சில ஆண்டுகளிலே தமிழ் படத்தை எப்படி ஆக்கிரமித்துவிட்டார்கள் என்பதை ஒரு புள்ளிவிவரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே புரிந்து விடும்.

 1975-ம் ஆண்டு முதல் 1979-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முக்கிய நாயகர்களாக வலம் வந்த ரவிச்சந்திரன் 8 படங்களிலும், ஜெய்சங்கர் 11 படங்களிலும், சிவக்குமார் 17 படங்களிலும் மட்டுமே நடித்திருக்கிறார்கள். தனி ஆவர்த்தணமாக சிவாஜி கணேசன் 38 படங்களில் நடித்துள்ளார். கமலை எடுத்துக் கொண்டால் இந்தக் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் சேர்த்து 85 படங்களில் நடித்திருக்கிறார். இதில் தமிழ் படங்களின் எண்ணிக்கை மட்டும் 44.  ரஜினியோ தமிழ், இந்தி, தெலுங்கு என 55 படங்களில் நடித்துள்ளார். இவற்றில் தமிழில் மட்டும்   34 படங்கள்.

1950-60-களில் சூப்பர் ஸ்டார்களாக இருந்த எம்.ஜி.ஆரும்., சிவாஜியும் ஒரே படத்தில்தான் ஒன்றாகச் சேர்ந்து நடித்தார்கள். 1975 முதல் 1979-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்  கமல் - ரஜினி 'அபூர்வ ராகம்', 'மூன்று முடிச்சி',  'அவர்கள்', '16 வயதினிலே', 'தப்புத்தாளங்கள்', 'இளமை ஊஞ்சலாடுகிறது',  'தாயில்லாமல் நானில்லை', 'நினைத்தாலே இனிக்கும்', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' என 9 தமிழ் படங்களிலும், 2 தெலுங்கு படங்களிலும், ஒரு இந்தி படத்திலும் ஒன்றாக நடித்திருக்கிறார்கள்.  இவற்றில் பெரும்பாலான படங்களில் கமல் நாயகனாகவே நடித்திருந்தார். ரஜினி இரண்டாவது கதாநாயகன் அல்லது முக்கியமான வேடம்தான். தொடக்கக் காலத்தில் எந்த ஈகோவும் இல்லாமல் இருவரும் மாறிப் மாறி படங்களில் நடித்து ரசிகர்களைச் சம்பாதித்தார்கள். 1970-களில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதில் ரஜினியும் கமலும் ஒன்றாகச் சேர்ந்து படங்களில் நடித்ததும் ஒரு காரணம்.

தொடக்கக் காலத்தில் இவர்கள் இருவரும் ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமான கேரக்டர்களையே தேர்ந்தெடுத்து நடித்தார்கள். கமல்  'அந்தரங்கம்', 'மன்மத லீலை', 'உணர்ச்சிகள்', 'மோகம் முப்பது வருஷம்' எனக் காதல் படங்கள் கொஞ்சம் அதிகம். வில்லத்தனம் மிக்க பாத்திரங்களில் நடித்துகொண்டிருந்த போது 'பைரவி' படத்தில் நாயகனாக அறிமுகமானார் ரஜினி. இந்தக் காலகட்டத்தில் ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘முள்ளும் மலரும்’,  ‘ஆறிலிருந்து அறுபது வரை’ எனக் குணச்சித்திரப் படங்களும் ரஜினியின் நடிப்புத் திறமைக்குச் சான்றாக அமைந்தன. ‘ஸ்டைல் மன்னன்’ என்று பேசப்பட்ட காலத்தில் ரஜினிக்குள் இருந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்திய படங்கள் இவை.

கமலும் ரஜினியும் கொஞ்சம் வளரவளர, நாயகர்களாக நிலை பெற்ற பிறகு அவர்களுக்கான கதையமைப்பும் காட்சியமைப்புகளும் மாறின. கமலைப் பொறுத்தவரை ஒரு சர்க்கஸ் கலைஞரைப் போலப் பல ஆச்சரியமான, திறமையான, பரிதாபப்படவைக்கும் வேடங்களைச் செய்து மக்களை ரசிக்க வைத்தார். ஆனால் ரஜினியோ மேஜிக் நிபுணரைப்போல ஸ்டைலாக நடித்து மக்களை வசியம் செய்தார்.   ரஜினி படங்களில் தம்பி, தங்கச்சி, அம்மா என்று குடும்பச் செண்டிமெண்ட் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். கமல் படங்களில் பெரும்பாலும் காதலிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் இருக்கும். கமல் படங்களில் அதிகமாகக் காதலில் ஜெயிக்கச் சவால் விடுவது, காதலியைக் காப்பாற்ற வில்லன்களுடன் போராடுவது போலக் காட்சிகள் இருக்கும்.

பல படங்களில் சேர்ந்து நடித்த கமலும் ரஜினியும் 1980-ம் ஆண்டுக்குப் பிறகு சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்துத் தனித்தனிப் பாதையை வகுத்துக் கொண்டார்கள். ரஜினி-கமல் என்று பேச்செடுத்தாலே 1980-ஐ பற்றிதான் பேசுவார்கள். ஆனால், 1970-களில் மத்தியிலேயே அவர்களின் யுகம் தொடங்கிவிட்டது; 1970-களிலே உச்ச நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுவிட்டார்கள். அன்று தொடங்கிய அந்த யுகம் 35 ஆண்டுகளைக் கடந்தும் நீடிப்பதும் ஆச்சரியமும் அதிசயமும் கலந்த விஷயம்தான்!

இந்து தமிழ், 2016 பொங்கல் மலர் 

09/12/2019

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்


இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தாமல் தூக்கி வீசப்பட்ட ஒரு வெடிகுண்டு மாமல்லபுரத்தில் கரை ஒதுங்குகிறது. அதைப் பற்றி ஒரு வெளிநாட்டுப் பெண் போலீஸுக்கு தகவல் சொல்கிறார். அந்தக் குண்டு, காவல் நிலையத்திலிருந்து திருடப்பட்டு காயலான் கடைக்கு வருகிறது. அங்கே லோடு ஏற்றிச் செல்லும் ஓட்டுநர் செல்வத்தின் (தினேஷ்) லாரிக்கு அது வந்துவிடுகிறது. ஒருபுறம் அந்தக் குண்டைக் கைப்பற்ற ஆயுதத் தரகர் ஜான் விஜய் முயற்சிக்கிறார். அவருக்காக போலீஸ் அந்தக் குண்டை தேடிப் புறப்படுகின்றனர். இன்னொரு புறம் வெடிகுண்டு விபத்தால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் தன்யா (ரித்விகா) குண்டுகளுக்குள் ஒளிந்துள்ள  ஊழலை வெளிப்படுத்த, அதைத்தேடி அலைகிறார். அந்தக் குண்டு என்ன ஆனது, யார் கைக்கு சென்றது, அதில் உள்ள அரசியல் என்ன ஆகியவற்றுக்கு விடை சொல்கிறது ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’.

இரண்டாம் உலகப் போரில் அதிகம் பாதிக்கப்படாத இந்தியாவில் கொட்டப்பட்ட வெடிக்குண்டால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் அழகான ஒன்லைன் கதைக் களம். அந்தக் கதையைக் காயலான் கடை பின்னணியில் படமாக்கியிருக்கும் விதம் தமிழுக்குப் புதுசு. அதை நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை. காயிலான் கடையில் எளிய மக்களின் உழைப்பு சுரண்டப்படுவதையும் அங்கே அவர்கள் படும் துயரத்தைக் காட்சியாக்கியவிதமும் அருமை. படத்தின் தொடக்கத்திலேயே வெடிகுண்டு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து சொல்லிவிடுவதால் அந்தக் குண்டு வெடிக்குமோ வெடிக்காதோ என்ற எதிர்பார்ப்பு தொற்றிவிடுகிறது. அது படம் முடியும்வரை ஒரு சரடாகவே செல்கிறது.

படத்தின் பிரதானமான குண்டு கதையைத் தவிர, காதலுக்கு எதிர்ப்பு, ஆணவக்கொலை, காயிலான் கடை எளிய மக்களின் வாழ்க்கை எனக் கிளைக் கதைகளும் வருகின்றன. துண்டுத் துண்டாக வரும் இந்தக் கதைகளால் பிரதான கதை தடுமாறிவிடுகிறது. படத்தின் பெரும் இடையூறு மிக மெதுவாக நகரும் திரைக்கதை. குண்டு வெடிக்குமா, வெடிக்காதா என்ற திக்திக் விஷயங்கள் இருந்தபோதும், அதையும் தாண்டி எந்தத் திருப்பங்களும் இல்லாமல் விறுவிறுப்பின்றி  ஹைவேயில் செல்லும் கட்டை வண்டிபோல் கதை பயணிப்பது மைனஸ்.

இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு வெடிக்காத குண்டு என்பதும் அது கரை ஒதுங்கும் என்பதும் வெடித்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் உண்மையாக இருக்கலாம், ஆனால் நம்புவதற்கு ஒவ்வாதவையாக உள்ளது. இரண்டாம் பாகத்தில் கதையை நகைச்சுவையாகக் கொண்டு செல்வதா, சீரியஸாக கொண்டுசெல்வதா என இயக்குநருக்கு ஏற்பட்ட குழப்பத்தால் திரைக்கதை தள்ளாடிவிடுகிறது. வெடிக்காத குண்டைக் கைபற்ற ஆயுதக் கும்பல் மேற்கொள்ளும் நடவடிக்கையின் பின்னணியில் நம்பும்படியும் காட்சிகள் எதுவுமே இல்லை. எல்லாமே போகிறப்போக்கில் காட்டப்படுகிறது. வெடிக்காத குண்டைப் பற்றி விசாரிக்கும் ரித்விகாவின் காட்சி அமைப்புகளிலும் புதுமை இல்லை. தினேஷின் அப்பா எப்படி இறந்தார் என்பது பற்றி இரண்டு மாறுப்பட்ட தகவல்கள் படத்தில் வருகின்றன. இயக்குநர் அதை எப்படி மறந்தார் என்று தெரியவில்லை.

நடிகர் ‘அட்டக்கத்தி’ தினேஷுக்கு இதில் முக்கியமான கதாபாத்திரம். லாரி டிரைவராக காயிலான் கடையில் பணியாற்றும் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலைமையைச் சித்தரிக்கும் அந்தக் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். ஒருபுறம் வெடிகுண்டு, மறுபுறம் காதலி இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு சமாளிக்கும் வேடத்தை தன்னால் கச்சிதமாக செய்துள்ளார். முனீஸ்காந்து சினிமா பயணத்தில் இது ஒரு நல்ல படம். ‘பஞ்சர்’ என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவை, குணசித்திரம் என இரண்டையும் சேர்ந்தே செய்திருக்கிறார்.  லாரியில் இருப்பது வெடிகுண்டு எனத் தெரிந்தபிறகு அவரது பதற்றமும் பயமும் படத்தின் கலகலப்புக்கு உதவுகின்றன. ’பரியேறும் பெருமாள்’ படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடித்தாரோ, அதே கதாபாத்திரத்தில் நடிகை ஆனந்தி வருகிறார். படத்தில் வரும் துணைக் கதாபாத்திரங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஒரு பயணக் கதைக்கு அவசியமான ஒளிப்பதிவை ஒளிப்பதிவாளர் கிஷோர்குமார் வழங்கியுள்ளார். டென்மாவின் இசையில் பாடல்களும் பின்னணியிசையும் இதமாக உள்ளன. ‘மாவலியோ மாவலி’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது.

எளிய மக்களின் வாழ்க்கையை காயலான் கடை பின்னணியில் சொல்லியதில் மட்டும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ சத்தம் கேட்க வைக்கிறது!

மதிப்பெண்: 2.5 / 5

07/12/2019

ஒரு நகரம் இரு அடையாளங்கள்!

தமிழகத்தின் மத்தியில் உள்ள திருச்சி நகருக்கு மட்டுமல்ல, நம் மாநிலத்தின் அடையாளங்களில் ஒன்றாகிவிட்ட  மலைக்கோட்டை முற்காலத்தில் வரலாற்றை ஆராதித்த ஓர் இடம். மலைக்கோட்டைக்குள்ளும் கோட்டைக்கு வெளியேயும் பல அரசர்களின் போர்களையும் ஆங்கிலேயர்கள் காலத்தில் பீரங்கி ஓசைகளையும் கேட்ட இடம். சுருக்கமாகச் சொன்னால், வரலாற்றின் தடங்கள் மிகவும் அழுத்தமாகப் பதிந்த இடம்.

மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள வீதிகள் இன்று பரபரப்பு நிறைந்த வர்த்தகப் பகுதிகள். முற்காலத்தில் இந்த வீதிகள் மலைக்கோட்டையைக் காக்கும் அகழிகளாக இருந்தன.  இந்தக் கோட்டை நாயக்கர்கள், பிஜப்பூர், கர்நாடக மற்றும் மராட்டிய படைகளின் போர்களைக் கண்டு களித்திருந்தாலும், சந்தா சாஹிப்புடன் ஆற்காட்டு அலி நடத்திய போர் வரலாற்றில்  நீங்காத இடத்தைப் பிடித்த இடம். ஆற்காட்டு அலிக்கு ஆதரவாக ஆங்கிலேயப் படைகள் களமிறங்கி சாந்தா சாஹிப்பை கொன்றது இந்த மலைக்கோட்டைக்குள்தான்.
பழமையானப் பாறை
மலைக்கோட்டையும், கோட்டையைச் சுற்றியிருக்கும் இடங்களும் திருச்சியின் மிகப் பழமையான பகுதிகள்.  மலைக்கோட்டையைப் பற்றி சொல்லாமல் திருச்சியின் வரலாற்றை யாராலும் கூறிவிடமுடியாது. உச்சிபிள்ளையார் கோயிலுடன் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் இந்த மலைக்கோட்டை  வெறும் பாறையாக மட்டுமே இருந்த ஒரு காலமும் உண்டு. இந்த பாறை சுமார் 350 கோடி ஆண்டுகள்  வயதுடையது என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். உலகிலேயே மிகப் பழமையான பாறைகளில் மலைக்கோட்டை பாறையும் ஒன்று.
உறையூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சோழ மண்டலத்தில் பலம், செல்வாக்கு, ஆட்சி ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தபோது, விஜயநகரப் பேரரசின் கைக்கு திருச்சிராப்பள்ளி சென்றது. கி.பி. 1565-ம் ஆண்டு தக்காண மன்னர்கள் திருச்சிராப்பள்ளியை கைப்பற்றும் வரை விஜயநகர ஆட்சியின் கீழ் திருச்சி இருந்தது. திருச்சி நகரமும், அதிலுள்ள கோட்டையும், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் வடிவமைத்துக் கட்டினார்கள்.   இன்று அழகாகக் காட்சியளிக்கும் மலைக்கோட்டையின் வளர்ச்சியில் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், விஜயநகர பேரரசர்கள் என பலருக்கும் கணிசமாக பங்கு இருக்கிறது.  மகேந்திரவர்மனால் கி.பி. 7ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலும் இங்கே இருக்கிறது.
பல்லவர்கள் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றப்பட்ட மலைக்கோட்டைக் கோயிலை, இயற்கையாகவே அமைந்த அரண்களைச் சாதகமாக்கிக் கொண்டு நாயக்க மன்னர்கள் இன்னும் மேம்படுத்தினார்கள்.  விசுவநாத நாயக்கர் என்பவரால் கொத்தளங்கள் அமைக்கப்பட்டு இன்னும் வலுப்படுத்தப்பட்டது மலைக்கோட்டை.
 கோட்டைக்குள் சரண்
 பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது மலைக்கோட்டை வெடிமருந்துக் கூடமாக விளங்கியது. இதற்கு அடையாளமாக மலை மீது உள்ள குகைக் கோயிலின் தரைப் பகுதியில் குழிகள் இருப்பதை இப்போதும் பார்க்கலாம்.  18-ஆம் நூற்றாண்டில் இங்குள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில்தான் பிரெஞ்சுப் படைகள், பிரிட்டிஷ் படைகளிடம் சரண் அடைந்தன. இங்கே பிரிட்டிஷ்
படைகளுக்கு வெற்றி தேடிக் கொடுத்த மேஜர் லாரன்ஸின் நினைவாக, லண்டனிலுள்ள வெஸ்ட் மினிஸ்டர் ஆலயத்தில் பொறிக்கப்பட்டுள்ள சின்னத்தில், மலைக்கோட்டையின் படமும் இடம்பெற்றுள்ளதிலிருந்து இதன் வரலாற்றை எளிமையாக அறிந்து கொள்ள முடியும். பதினெட்டாம் நூற்றாண்டில், திருச்சி ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழ் வந்து விட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அருகே இருந்த சிந்தாமணி, வரகனேரி, உறையூர் உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்பட்டு திருச்சி ஒரு நகரமாக  உருமாறியது. முற்காலத்துக்கான பிரம்மாண்ட அடையாளமாக மலைக்கோட்டையும், அதன் உள்ளே உள்ள குகைகள், குடைவரக்கோயில்கள் இன்றும் காட்சியளிக்கின்றன. 1858-ம் ஆண்டு திருச்சி நகரத்தை ஆங்கிலேயர்கள் விரிவாக்கம் செய்தபோது, கோட்டை மதில் சுவரை தரைமட்டமாக்கி, அகழியைத் தூர்த்தனர்.  அகழி இருந்த இடம்தான் தற்போது மேலரண் சாலை (மேல புலிவார்டு ரோடு), கீழரண் சாலை (கீழ புலிவார்டு ரோடு) என்று அழைக்கப்படுகிறது. மதில் சுவரில் இடிக்கப்படாமல் விடப்பட்ட சிறிய பகுதிதான், தற்போது தெப்பக்குளம் அருகே உள்ள கோட்டைச் சுவரும், முதன்மை அரண் கதவும் (Main Gurad Gate) உள்ள பகுதி.
இந்தப் பகுதிகள் முழுவதும் இன்று திருச்சி  மாநகரின் இதயப் பகுதியாகவும், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் நிரம்பிய பகுதியாகவும் உருமாறியிருக்கிறது. திருச்சி மட்டுமல்ல சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ளவர்களும் இங்குள்ள பஜார் கடைகளுக்கு வருவதால் எப்போதும் இங்கே கூட்டம் மொய்த்துகொண்டிருக்கும். சென்னையில் உள்ள ரங்கநாதன் தெரு போல இங்குள்ள என்.எஸ்.பி. ரோடும் பஜார் கடைகளுக்கு பெயர் பெற்று விளங்கி வருகிறது. 
வரலாற்றுச் சின்னம்
மலைக்கோட்டை என்ற மிகப்பெரிய வரலாற்றுச் சின்னத்தைத் தவிர்த்து இப்பகுதியில் இன்னும் சில வரலாற்றுச் சின்னங்களைக்  காணலாம். அதில் ஒன்றுதான் டவுன்ஹாலும், அங்குள்ள அரண்மனையும். தற்போது தாலுகா அலுவலமாக செயல்பட்டு வருகிறது இந்த அரண்மனை. 17-ம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. அந்த அரண்மனையை ராணி மங்கம்மாள் அரண்மனை என்று அழைக்கிறார்கள். இந்த அரண்மனை சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. இதன் அருகிலேயே தர்பார் ஹால் ஒன்றும் உள்ளது. சில காலம் மதுரையை ஆண்ட நாயக்கர்களின் அரசவையாகவும் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது இந்த அரண்மனை அரசு அருங்காட்சியமாக செயல்படுகிறது. இதை  ராணி மங்கம்மாள் கொலு மண்டபம் என்றும் அழைக்கிறார்கள்.
திருச்சியில் சொல்லத்தக்க வகையில் வாழ்ந்துவிட்டும் சாதனைகள் பலவற்றை செய்துவிட்டும் சென்ற சரித்திர புகழ்பெற்றவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ராணி மங்கம்மாளும் ஒருவர். மதுரையை ஆட்சி புரிந்தவர். இருந்தாலும் இவருக்கும் திருச்சிக்குமான நெருக்கம் மிக அதிகம். ராணி மங்கம்மாள், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரிடம்  தளபதியாக இருந்த தப்பகுள லிங்கம நாயக்கர் அவர்களின் மகள்.  ஆண்கள் மட்டுமே பட்டத்திற்கு உரிமையுள்ளவர்கள் - ஆட்சி செய்ய தகுதியுள்ளவர்கள் என்று கூறப்பட்ட அந்த காலத்தில், மிகவும் இக்கட்டான ஒரு தருணத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் மங்கம்மாள்.
உண்மையில் பெரும் ராஜதந்திரியாகவும், சிறந்த நிர்வாகியாகவும், எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதவராகவும் இருந்தார். நாயக்கர்களின் ராஜ்ஜியம் திருச்சியிலும் பரந்து விரிந்திருந்தது. குறிப்பாக ராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் நாயக்கர்களின் தலைநகராக  திருச்சி இருந்தது. எனவேதான் திருச்சியில் ராணி மங்ம்மாளின் பெயரைச் சொல்லும் அடையாளங்கள் நிறைய உள்ளன.
இவர்  சமுதாயப் பணிகளில் முழு மூச்சாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கோவில் கட்டுவதை மட்டுமே கருத்தாக எண்ணாமல் , சாலை அமைத்தல், நகரங்களை அமைத்தல் , குடிநீர் தொட்டி அமைத்தல் , கம்மாய் , ஏரி, குளம் அமைத்தல் போன்ற சமுதாய பணிகளை செய்து வந்தார். குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் திருச்சியில் பல இடங்களில் குளங்களை வெட்டினார். சத்திரங்களை கட்டினார். பெயரில் இவர் பெயரில் மலைகோட்டைக்கு அருகே மங்கம்மாள் சத்திரம்கூட உள்ளது. திருச்சியில் இவரது பெயர் நிலைபெற்றதற்கு இவரது சமுதாயப் பணியும் ஒரு காரணம்.  
இன்னொரு அடையாளம்

திருச்சியின் வரலாறு  மலைக்கோட்டையைச் சுற்றி மட்டும் இருக்கவில்லை. மலைக்கோட்டை அருகே அமைந்திருந்த  உறையூர் பாரம்பரியமும் பழமையும் வரலாற்று சிறப்பும் பெற்ற ஒரு நகரம். தஞ்சாவூருக்கு முன்பே சோழர்கள் கோலோச்சிய நகரம் உறையூர்.  உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள்  முற்காலச் சோழர்கள்.  கி.மு. 3-ம் ஆண்டு தொடங்கி பல நூறு ஆண்டுகள் சோழர்களின் தலைநகரமாக இருந்தது உறையூர். சங்கக் காலத்தில் ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த சோழநாட்டில் ஒரு பிரிவாக உறையூர் வளம் பெற்றிருந்தது. உறையூரை 15  சோழ மன்னர்கள் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்திருக்கிறார்கள். அவர்களில் தித்தன், நெடுங்கிள்ளி, கரிகாலன், கோப்பெருஞ்சோழன் ஆகியோர் முக்கியமானவர்கள்.  இவர்களில் கரிகாலச் சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருச்சிக்கு அருகே காவிரி ஆற்றில் கல்லணையைக் கட்டியதால் இன்று வரை சோழர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறது.
சோழர்களும் நெசவும்
சோழர்கள் காலத்தில் உறையூர் நெசவுத் தொழிலில் சிறந்து விளங்கியது.  உறையூரில் இன்றும்கூட நெசவாளர் காலனி என்ற பெயரில் ஒரு இடம் இருக்கிறது. உறையூருக்கு அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் துணி வெளுப்பது, சாயம் பூசுவது என பல வேலைகள் இன்றும்கூட நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதிகள் எல்லாம் முற்காலத்தில் இருந்தே நெசவுத் தொழிலின் ஒரு தொடர்ச்சியாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. 1965-ம் ஆண்டு முதல் 1969-ம் ஆண்டு வரை உறையூர் பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தியது. அப்போது  ஒரு அகழியில் சாயத் தொட்டி ஒன்றின் மீதிமிச்சம் தரைக்குக் கீழே எட்டடி ஆழத்தில் கண்டறியப்பட்டது. இது துணிகளைச் சாயமிடுவதற்கான நீர்த் தொட்டி. உறையூர் சங்கக் காலத்தில் ஒரு செழுமையான நெசவுத் தொழில் மையமாகத் திகழ்ந்தது என்பதற்கு இதுவே சான்று என்று தொல்லியல் ஆய்வாளர்களும்  நம்புகிறார்கள்.
முற்காலத்தில் உறையூர் என்ற  நகரில் திருச்சிராப்பள்ளி சிறியப்பகுதியாக இருந்தது. இன்றோ பரந்து விரிந்த திருச்சி மாநகரில் உறையூர் ஒரு சிறுப்பகுதி. காலச்சக்கரம் நகரங்களின் தலையெழுத்தை இப்படி மாற்றி எழுதியிருக்கிறது.

இந்து தமிழ் பொங்கல் மலர், 2015

30/11/2019

அஞ்சலி: பாலாசிங் எனும் அபூர்வம்


நான்கு மாதங்களுக்கு முன்பு பாலா சிங்கை பேட்டி எடுக்கச் சென்றிருந்தேன். ‘நாயகன், நாயகி, இயக்குநர் ஆகியோரைத் தாண்டி குணச்சித்திர வேடத்தில் ஜொலிக்கும் கலைஞர்களைப் பற்றிய பேட்டி’ என்று அறிமுகம் கொடுத்தேன். “துக்கடா வேஷத் தில் நடிக்கும் நடிகர்களைப் பற்றிய பேட்டின்னு சொல்லுங்க தம்பி” என்று யதார்த்தம் குறையாமல் கலகலவென்று சிரித்துக்கொண்டே பேசத் தொடங்கினார் பாலா சிங். சினிமாவில் மாபெரும் கனவோடும் தணியாத தாகத்தோடும் காலடி எடுத்து வைத்த பாலாவை தமிழ் சினிமா வாரி அணைத்துக்கொள்ளவும் இல்லை; தூற்றி விரட்டவும் இல்லை என்பதுதான் நகை முரண்.

வில்லன், குணச்சித்திரம், அரசியல்வாதி என எந்தக் கதாபாத்திரத்திலும் கச்சிதமாகப் பொருந்தும் அற்புதமான கலைஞர்தான் பாலா. சிறு வேடமோ முழு நீள வேடமோ அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் அபார ஆற்றல் உடையவர். அவருடைய நடிப்பில் மிகை இருக்காது. கெட்-அப்பை பெரிய அளவில் மாற்றிக்கொள்ளாமல், நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்திய அற்புதமான நடிப்புக் கலைஞர் பாலா சிங்.
நாகர்கோவில் அருகே உள்ள அம்சிக்காகுழி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் பாலா. படிக்கும் வயதிலிருந்தே நாடகங்கள் என்றால் அவருக்கு ஈர்ப்பு. நாகர்கோவிலில் கோயில்கள், தேவாலயங்களில் நாடகங்கள் போட்டு தன்னை நாடகக் கலைஞராக நிலைநிறுத்திக்கொண்டார்.

நாடகங்களைப் போடுவதற்காக ஒவ்வோர் ஊருக்கும் பயணப்பட்ட பாலா, மேடை ஏறாத ஊர்களே இல்லை. பெரும் நம்பிக்கையோடும் சினிமா கனவோடும் சென்னை நோக்கி வரும் கலைஞர்களைப்போல் பாலாவும் 80-களின் தொடக்கத்தில் சென்னைக்குள் அடி வைத்தார். சென்னையில் பத்திரிகையாளர் ஞாநியின் பரிக்ஷா நாடக் குழு பாலாவை மேடையேற்றி அழகு பார்த்தது. உளவியல் மருத்துவரான ருத்ரனும் தன் பங்குக்கு அவரை நாடகங்களில் நடிக்க வைத்தார்.

முதல் படம்

நாடகங்களில் நடிப்பதே சினிமாவுக்கான முன்னோட்டம் என்ற அடிப்படையில் சினிமா வாய்ப்புக்காக அலையத் தொடங்கினார் பாலா. சென்னையில் பாலா ஏறி இறங்காத இயக்குநர்களின் வீடுகளே கிடையாது. ஆனால், ஏமாற்றமே அவருடைய வாழ்க்கையானது. சென்னையில் வாழ்க்கையை நகர்த்துவதற்கும் கைதூக்கிவிடவும் ஆள் இல்லை என்ற நிலையில், சினிமாவில் எப்படியும் நடித்துவிடுவது என்ற வைராக்கியம் மட்டும் அவருக்குள் ஆழமாக வேரோடி இருந்தது.

நீண்ட தேடுதலுக்குப் பிறகு 1982-ல் மெளலி இயக்கிய ‘வா இந்த பக்கம்’ என்ற படத்தில் தலைகாட்டினார் பாலா. பிறகு பாலா நடித்தது எல்லாமே ‘துக்கடா’ வேடங்கள்தான். சினிமாவுக்குள் புழங்கிக்கொண்டே இருந்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற எழுதப்படாத விதிக்கு பாலாவும் விதிவிலக்கல்ல. உதவி இயக்குநர், புரொடெக்‌ஷன் மேனேஜர் எனப் பல அவதாரங்களை எடுத்தார். அப்படிக் கிடைத்த அறிமுகமும் நாடகத்தில் ஈடுபாடு உடைய நாசரின் உதவியும் பாலா சிங் என்ற சிறந்த கலைஞனை ‘அவதாரம்’ மூலம் அரிதாரம் பூச வைத்தது.

1993-ல் நடிகர் நாசர் இயக்கிய ‘அவதாரம்’ படத்தில் அந்த வில்லன் வாய்ப்பு அத்தனை சுலபமாகக் கிடைத்துவிட வில்லை. ‘காமத்தை எப்போதும் கண்களிலும், முதுகில் குத்தும் சூழ்ச்சியை முகத்திலும் காட்டி’ அவர் முன்பாகவே ஒரு காட்சியை நடித்துக்காட்ட ஆடிப்போனாராம் நாசர். அப்படித்தான் அந்த வில்லன் 'பாசி'யாகத் தமிழ் ரசிகர் கள் மனதில் ஒட்டிக்கொண்டார்.‘அவதார’த்தைத் தொடர்ந்து ‘ராசி’, ‘பொற்காலம்’, 'ஆனந்த பூங்காற்றே’, ‘விருமாண்டி’ என நல்ல படங்கள் பாலாவுக்கு அமைந்தன. ஆனால்,
பெரிய வில்லன் நடிகராக வந்திருக்க வேண்டிய பாலா, பின்னாளில் வில்லனுக்கு சப்போர்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க நேர்ந்தது துரதிர்ஷ்டம்.

கடைசி வரை நடிப்பு

எந்த சப்போர்ட்டிவ் கதாபாத்திரலும் முத்திரைப் பதித்து ஜொலிக்க பாலா தவறியதில்லை. அதற்கு உதாரணமாக ‘புதுப்பேட்டை’யைச் சொல்லலாம். வில்லனாகவோ, சப்போர்ட்டிவ் வில்லனாகவோ நடிப்பவர்கள் எல்லாம் கத்திக்கொண்டே இருக்கும் காலம் இது. ஆனால், சத்தம் போடாமல் நடிப்பின் மூலம் வில்லன் கதாபாத்திரத்துக்கும் உயிர்கொடுத்தவர் பாலா. இன்றைய தலைமுறையினர் பாலாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய நடிப்பு உத்தி இது.

என்னதான் நடிப்பில் முத்திரைப் பதித்தாலும், தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெறுபவர்களுக்கே மாலை, மரியாதை கிடைக்கும் என்ற நியதி பாலாவின் சினிமா வாழ்க்கையிலும் தொடரவே செய்தது. அதையெல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் எப்போதும்போலவே நடித்துக் கொண்டிருந்தார். அரசியல் படம் என்றால் பாலாவுக்கு எப்போதும் ஓரிடம் இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தார். அதற்கு சமீபத்திய உதாரணமாகிப் போனது ‘என்.ஜி.கே’ படத்தின் திரைக்கதையில் திருப்புமுனை ஏற்படுத்திய அவருடைய அருணகிரி கதாபாத்திரம்.

நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாலாவிடம், சினிமாவில் எப்போதும் புழங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவருடைய எண்ணம் கடைசிவரை மாறவே இல்லை. கிடைக்கும் வேடங்களைப் பற்றி கவலைப்படாமல், எத்தனை வயதானாலும் நடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று மட்டுமே அவர் விரும்பினார். அவருடைய கடைசிக் காலம்வரை அது நடந்தது மட்டுமே தமிழ் சினிமா பாலா சிங்குக்குக் கொடுத்த ஒரே கவுரவம்.

23/11/2019

சாகச விளையாட்டின் சாதனை மங்கை


ஜிம்னாஸ்டிக்ஸ் என்ற சாகச விளையாட்டு இந்தியாவிலும் இருக்கிறது என்று உலகுக்கு உணர்த்தியவர் அந்தப் பெண். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் பெண் என்ற இமாலய சாதனையைப் படைத்தவர் அவர். அவரால் இன்று இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் துளிர்த்து வளரத் தொடங்கியிருக்கிறது. இளம் பெண்களின் புதிய ரோல் மாடலாக உருவெடுத்திருக்கும் அவர், 25 வயதான தீபா கர்மாகர்!

புகழ்பெற்ற வீராங்கனைகளை அள்ளிக்கொடுத்திருக்கும் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராதான் இவரது சொந்த ஊர். எளிமையான குடும்பத்தில் பிறந்த தீபாவின் அப்பா துலா கர்மாகர் பளு தூக்கும் வீரர். சிறு வயதிலிருந்தே தன்னை போலவே மகளையும் விளையாட்டு வீராங்கனையாக்க வேண்டும் என்பது அவரது கனவு. பளு தூக்குதல் விளையாட்டு அல்லாமல் ஜிம்னாஸ்டிக்கை அவர் தேர்ந்தெடுத்தார். இந்தியாவில் பெரிய அளவில் வளராத ஜிம்னாஸ்டிக்ஸில் தன் மகளை வீராங்கனையாக்க வேண்டும் என்று விரும்பியது ஆச்சரியம்தான்.

வார்க்கப்பட்ட தீபா

தீபாவுக்கு ஆறு வயதாகும்போதே ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியில் சேர்த்துவிட்டார் அவரது அப்பா. பெற்றோருக்கு இருக்கும் கனவு பிள்ளைக்கும் இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை அல்லவா? தீபாவுக்கும் அப்படித்தான் இருந்தது. விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு மீது கொஞ்சமும் ஈடுபாடு இல்லாமல் இருந்தார் தீபா.

பிறகுதான் தீபாவுக்கு ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு மீது ஏன் ஆர்வம் இல்லை என்பதை அவரது பயிற்சியாளர் சோமா நந்தி கண்டுபிடித்தார். தீபாவின் கால்கள் தட்டையாக இருந்ததால், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் அவரால் ஈடுபாட்டுடன் விளையாட முடியவில்லை என்பதை உணர்ந்தார். சாகச விளையாட்டான ஜிம்னாஸ்டிக்ஸின் பலமே கால்கள்தான். கால்கள் வலிமையாகவும் நெகிழும் தன்மையுடனும் சமநிலைத்தன்மையுடனும் இருப்பது அவசியம். தட்டையான பாதங்கள் இருந்தால் ஜிம்னாஸ்டிக்ஸில் ஜொலிக்க முடியாது என்பதால், தீபாவுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கத் தொடங்கினார் பயிற்சியாளர்.

குறிப்பாகக் கால்களுக்கு மட்டும் தனி பயிற்சி அளித்தார். தொடர்ச்சியான பயிற்சிகளும் எல்லையில்லா முயற்சிகளும் திருவினையாயின. ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாடும் அளவுக்கு தீபாவின் பாதங்கள் நெகிழ்வுதன்மையுடன் மாறின. இதன்பின்னரே தீபாவுக்கு முறையான ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் தொடங்கின.
தொடக்கத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் ஈடுபாடு இல்லாவிட்டாலும், தன்னுடைய குறைதான் அதற்குத் தடையாக இருக்கிறது என்பதை உணர்ந்த பிறகு, அதிலிருந்து மீள அந்தச் சின்ன வயதில் தீபா கொடுத்த ஒத்துழைப்புதான், அவரை பிற்காலத்தில் சாம்பியன் வீராங்கனையாக்கத் துணை நின்றது.

அடிப்படை வசதிகள் இல்லை

ஜிம்னாஸ்டிக்ஸில் அவர் உச்சத்தைத் தொடுவதற்கு முன்பு, அந்த விளையாட்டில் பயிற்சியில் ஈடுபட அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு ஒரு பொருட்டே அல்ல என்ற நிலைதான். ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி பெற முறையான உள்கட்டமைப்பு வசதிகள் கிடையாது. அதுவும் பின்தங்கிய மாநிலமான திரிபுராவைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

 ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிக் கூடத்தில் எங்கு பார்த்தாலும் எலிகள்தான் உலாவும். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்றழைக்கும் அளவுக்கு ஆபத்தான இந்தச் சாகச  விளையாட்டில் பயிற்சியில் ஈடுபடும் அளவுக்கு எந்த வசதியும் இல்லாமல்தான் இந்த விளையாட்டில் காலடி எடுத்துவைத்தார் தீபா கர்மேகர். குறைகளையும் நிறைகளாக்கிக்கொள்ளும் மன உறுதி அவரிடம் இருந்ததால், இந்த விளையாட்டில் முன்னேறத் தொடங்கினார் தீபா.

அங்கீகாரம் வந்தது 

இதன் பின்னர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார் தீபா. முதன்முதலில்  2007-ம்  ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த தேசிய ஜூனியர் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் வென்றதுதான் அவரது முதல் பதக்கம். டெல்லியில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் தீபாவுக்கும் இடம் கிடைத்தது. காமன்வெல்த் போட்டியில் தீபா பெரிதாக சாதிக்கவில்லையென்றாலும், இந்தியாவின் ஆண்கள் அணியைச் சேர்ந்த ஆசிஷ் குமார் முதன் முறையாக ஜிம்னாஸ்டிக்ஸில் பதக்கம் வென்றார். ஆசிஷ் வென்ற பதக்கம் ஜிம்னாஸ்டிக்ஸில் சர்வதேச பதக்கம் வெல்ல தீபாவுக்கு உந்துதலை தந்தது.

தொடர்ந்து ஜிம்னாஸ்டிக்ஸில் பல்வேறு வகையான  நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட தீபாவுக்கு 2014-ம் ஆண்டு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இந்த முறையும் அவரது தன்னம்பிக்கையை மட்டுமல்ல, அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதும் காமன்வெல்த் போட்டிதான். 2014-ல் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் முதன் முறையாக வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் தீபா. ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பையும் சூடிகொண்டார். இந்த வெற்றிக்கு பிறகு சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தொடர்ச்சியாகப் பங்கேற்க ஆரம்பித்தார் தீபா. 2015-ல் ஜப்பான் ஏஆர்டி ஜிம்னாஸ்டிக்ஸ் ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

ஒலிம்பிக் பெருமை

2016-ம் ஆண்டு தீபாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பங்கேற்க தீபா தகுதி பெற்றார். இந்தப் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார் தீபா. ஒலிம்பிக்கில் 4-வது இடத்தைப் பிடித்து நூலிழையில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டார் தீபா. ஆனால்,  இந்திய வீராங்கனை ஒருவரின் ஜிம்னாஸ்டிக்ஸ் திறமையைப் பார்த்து உலகமே திரும்பி பார்த்தது.

கடந்த 11 ஆண்டுகளில் மாநிலம், தேசியம், சர்வதேசம் என அனைத்து வடிவங்களிலும் 77 பதக்கங்களை வாங்கிக் குவித்திருக்கிறார் தீபா. இவற்றில் 67 தங்கப் பதக்கங்களும் அடங்கும். தீபாவின் ஜிம்னாஸ்டிக்ஸ் திறமையைக் கண்டு 2016-ம் ஆண்டு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கி கவுரவித்தது. அதற்கு அடுத்த ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் மத்திய அரசு வழங்கியது.  2017-ம் ஆண்டு 30 வயதுக்குட்பட்ட ஆசியாவின் மிகச் சிறந்த சாதனையாளர்கள் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் தீபா கர்மாகரும் இடம்பிடித்தார்.


ஜிம்னாஸ்டிக்ஸில் மிகவும் ஆபத்தான 'புரோடுனோவா வால்ட்’டில் பங்கேற்ற ஐந்து சர்வதேச வீராங்கனைகளில் தீபாவும் ஒருவர். இந்தப் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் தீபா தவிர மற்றவர்கள் ஒலிம்பிக்கிலும் தடம் பதித்தவர்கள். தீபாவுக்கும் அந்தத் தருணம் ஒரு நாள் நிச்சயம் அமையும். அப்போதுதான் அவரது அந்தரச் சாகசம் முழுமை பெறும்.

இந்து தமிழ், 16/12/2018

17/11/2019

ஆக்‌ஷன் விமர்சனம்

ஓர் அரசியல்வாதி குடும்பம். அப்பா முதல்வர் (பழ. கருப்பையா) மகன் துணை முதல்வர் (ராம்கி). இன்னொரு மகன் ராணுவ கர்னல் (விஷால்). தேர்தல் பிரசாரத்தில் தேசிய தலைவர் ஒருவர் கொல்லபடுகிறார். அதே பிரசாரத்தில் விஷாலின் காதலியும் (ஐஸ்வர்யா லெக்மி) கொலையாகிறார். அந்தப் பழி ராம்கி மீது விழுகிறது. அடுத்து ராம்கியும் தற்கொலை செய்கிறார். இந்த மூன்று மரணத்துக்கும் யார் காரணம் என ஆராய்கிறார் விஷால். அந்தக் காரணகர்த்தாக்களைப்  பழித் தீர்க்க விஷால் ‘ஆக்‌ஷன்’ அவதாரம் எடுப்பதே படத்தின் கதை.

பக்கா ஆக்‌ஷன் கதையைப் படமாக்க வேண்டும் என்று இயக்குநர் சுந்தர்.சி-க்கு நீண்ட நாள் ஆவல் போல. அதை இந்தப் படத்தின் மூலம் தீர்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இது சுந்தர். சி-யின் படமா என அடுத்தடுத்து காட்சிகள் யோசிக்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்கு ஒரு பலவீனமான கதையை சுந்தர். சி படமாக்கியிருக்கிறார். படம் தொடக்கமே துருக்கியில் துரத்தலில் தொடங்குகிறது. அந்தத் துரத்தல் படம் முடியும் வரை நம்மையும் சேர்த்தே துரத்துகிறது. 

அரை மணி நேர ஃபிளாஸ்பேக்கைக் கடந்துவந்தால், அதன் பிறகு 2 மணி நேரமும் ஆக்‌ஷன் காட்சிகளால் பார்வையாளர்களைத் திணறடிக்கிறார்கள். படம் லண்டன், கரிபீயன் தீவு, துருக்கி, பாகிஸ்தான் என எங்கெங்கோ சுற்றிவருகிறது. ஒன்று துரத்திகொண்டே இருக்கிறார்கள்; இல்லை ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த இரண்டையும் செய்யாத வேளையில் சண்டைப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த மூன்றையும் முதலில் படமாக்கிவிட்டு, அதற்கு ஒரு கதையை இயக்குநர் தயார் செய்திருப்பார் போல. ஒரு துரத்தல், ஆக்‌ஷன் கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் பின்னணி கதை அமையவில்லை.

4 ஆயிரம் கோடியை வாங்கிவிட்டு தலைமறைவாகும் தொழிலதிபருக்கும் அச்சுறுத்தும் தீவிரவாதிக்கும் என்ன தொடர்பு என்பதை துளிகூட படத்தில் சொல்லவே இல்லை. படத்தின் முக்கியமான் இந்த இடத்தை இயக்குநர் அப்படியே கைகழுவிவிடுகிறார். துருக்கியில் அதிநவீன பாதுகாப்பு கொண்ட வங்கியின் சர்வர் அறையில் புகுந்து பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி விடுவது, ஒரு முதல்வரின் வீட்டில் புகுந்து அவருடைய மகனை அதுவும் துணை முதல்வரை தூக்குமாட்டிவிடுவது, இந்த சிசிடிவி யுகத்தில் கார் பார்க்கிங் ஏரியாவில் இருந்துகொண்டு தேசிய தலைவரை கொல்வது எனப் படத்தில் டன் கணக்கில் பூச்சுற்றல்கள்.

வழக்கமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் படம் என்றால், தீவிரவாதி
தலைவருடன் நாயகன் மல்லுக்கட்டுவதுடன் முடிந்துவிடும். ஆனால், இந்தப் படத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதியையே விஷால் ஒரு காட்டு காட்டுகிறார். போலீஸும் இண்டர்போலும் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் ஒரே ஆளாக ஒவ்வொரு நாட்டுக்கும் போய் செய்கிறார் விஷால்.

படத்தின் நாயகன் விஷால், சுபாஷ் என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். அவருடைய வாட்டசாட்டமான உயரமும் அதற்கு உதவுகிறது. தலை முடியில்கூட அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளார். சண்டைக் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார். குறிப்பாக லண்டன், துருக்கி சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. படத்தின் நாயகி தமன்னா, சக ராணுவ வீராங்கனையாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன், துரத்தல் காட்சிகளில் சில இடங்களில் விஷாலுக்கு இணையாக நடித்திருக்கிறார்.

இன்னொரு நாயகியாக வரும் ஐஸ்வர்யா லெக்மி அவ்வப்போது சிணுங்கிக்கொண்டுவந்து, பிறகு இறந்துபோகிறார். தொழில்முறை கில்லராக வரும் அகான்ஷா கவர்ச்சியிலும் சண்டைக் காட்சியிலும் மிரள வைக்கிறார். முதல்வராக வரும் பழ கருப்பையா வழக்கம்போல அடுக்குமொழி பேசி செல்கிறார். துணை முதல்வராக வரும் ராம்கியை விரைவாகவே கொன்றுவிடுகிறார்கள். லண்டனில் ஹேக்கராக வரும் யோகிபாபு கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். தீவிரவாதியாக வரும் கபீர் துகான் சிங்,  ‘நான் யார் தெரியுமா?’ என்று கத்திக்கொண்டே இருக்கிறார்.
    
படத்துக்கு இசை ஹிப் ஹாப் ஆதி. பாடல்கள் மனதில் ஒட்டவும் இல்லை. படத்துக்கும் இடையூராகவே வந்து செல்கின்றன. இயக்குநரைவிட இந்தப் படத்தில் ஸ்டண்ட் இயக்குநர் அதிகம் உழைத்திருக்கிறார். சில சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகளுக்காக நிச்சயம் அவரை பாராட்டலாம். ஒளிப்பதிவாளர் டட்லியையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். வேகமான துரத்தலையும் துருக்கியையும் அவ்வளவு அழகாக கேமராவுக்குள் கடத்தியிருக்கிறார்.  

 'அவன் வந்தால் ஆப்ஷன் கிடையாது... ஆக்‌ஷன்தான்’ என்று படத்தின் தொடக்கத்தில் ஒரு வசனம் வரும். அதை மட்டுமே நம்பி கதையில் கோட்டை விட்டதில், ‘ஆக்‌ஷன்’ எந்த ரியாக்‌ஷனையும் ஏற்படுத்தவில்லை.

மதிப்பெண்: 2 / 5

05/11/2019

துரோகத்தால் வீழ்ந்த திப்பு சுல்தான்!

மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாத சுவாமி கோயிலிலிருந்து கூப்பிடும் தூரத்திலேயே உள்ளது திப்பு சுல்தானின் கோட்டை. வெறும் தரையும் ஆங்காங்கே தலைகாட்டும் குட்டிச் சுவர்களும்தான் திப்புவின் கோட்டையாக எஞ்சியிருக்கின்றன. நான்காம் ஆங்கிலோ - மைசூர் போரின்போதே ஆங்கிலேயர்களின் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு திப்புவின் கோட்டை இரையாகிவிட்டது. அத்துடன் இது மைசூர் அரண்மனைகளைவிட ஒரு நூற்றாண்டு பழமையானதும்கூட. வீரமும் வரலாறும் சேர்ந்த அந்தப் பகுதியைப் பார்த்துவிட்டுக் கடந்தோம். சற்றுத் தள்ளி ஒரு மேட்டுப் பகுதி. இங்கே கர்னல் பெய்லிஸ் டன்ஜன் என்றழைக்கப்படும் திப்பு சுல்தான் உருவாக்கிய சிறை தென்பட்டது.

திப்பு சிறை

மேடான பகுதிக்குச் சென்றவுடன், தரைப் பகுதிக்கும் கீழே
திப்பு சுல்தான் உருவாக்கிய சிறை
தெரிகிறது சிறைக்கூடம். தரை மட்டத்தில் மதில் சுவர். மதில் சுவரையொட்டி காவிரி ஓடுகிறது. தரை மட்டத்துக்குக் கீழே சிறைச்சாலை என நுட்பமாகக் கட்டப்பட்டிருந்தது. படிக்கட்டுகளின் வழியே கீழே இறங்கினால், பூமிக்கு 30 அடி ஆழத்தில்தான் சிறைக் கூடம் தெரிகிறது.
உள்ளே நுழைந்தால் இன்னும் ஆச்சரியம். சிறை இரண்டு வரிசையாகப் பிரிக்கப்பட்டுப் பெரிய பெரிய தூண்கள் உள்ளன. தூண்களுக்கும் சுவர்களுக்கும் இடையே வளைவுகள். சுவரில் வரிசையாய்ச் சிறுசிறு கற்கள். ஓர் அடி நீளத்துக்கு ஒரே அளவாகச் சம இடைவெளியில் இந்தச் சிறுகற்கள் பொருத்தப்பட்டுள்ளன. கைதிகளை இரு கற்களுக்கும் இடையே நிற்க வைத்து, இரு கைகளையும் தோள் உயரத்துக்கு நீட்டச் செய்து இந்தச் சிறு கற்களுடன் கைகளைப் பிணைத்துக் கட்டிவிடுவார்களாம். சுவரில் உள்ள ஒரு துவாரத்தைத் திறந்துவிட்டால், காவிரி நீர் இந்தச் சிறையை மெல்ல நிரப்பிவிடும். மரண பீதியுடன் கைதிகள் ஜலசமாதி ஆகிவிடுவார்களாம்.
அது சரி, இந்தச் சிறைக்கு ஆங்கிலேய அதிகாரியின் பெயர் எப்படி வந்தது? நான்காம் ஆங்கிலோ-மைசூர் போருக்கு முன்பாக திப்பு சுல்தானிடம் சிறைபட்டு, இச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டார் ஆங்கிலேய அதிகாரியான கர்னல் பெய்லிஸ். அதனால், இந்தச் சிறைக்கு அவர் பெயரே நிலைத்துவிட்டது.

தண்ணீர் வாயில்

அங்கிருந்து ஐந்து நிமிடப் பயணத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள தண்ணீர் வாயில் (Water Gate) தென்பட்டது. இதைத்  ‘துரோகத்தின் நினைவுச் சின்னம்’ என்று அழைப்பதுண்டு என்று வழிகாட்டி சொன்னார். திப்பு சுல்தான் நாள்தோறும் அதிகாலையில் இவ்வழியே நுழைந்து, காவிரியில் நீராடுவது வழக்கம். மூன்றுமுறை ஆங்கிலோ- மைசூர் போர் நடந்தும் வீழ்த்த முடியாத திப்புவை, மீர் சாதிக் எனும் திப்புவின் படைத் தளபதி மூலமே
‘துரோகத்தின் நினைவுச் சின்னம்’
வீழ்த்தியிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.

ஒரு நாள் வழக்கம்போல இங்கே நீராட வந்த திப்பு சுல்தானுக்கு எதிராக ஆங்கிலேயர் படை திடுமென நுழைந்து எதிர்பாராமல் தொடுத்த தாக்குதலை முறியடிக்க முடியாமல் கொல்லப்பட்டார் திப்பு. ஒரு வீரனை வேறெப்படி வீழ்த்த முடியும்?
கனத்த இதயத்துடன் தண்ணீர் வாயிலைச் சிறிது நேரம் பார்த்துவிட்டுப் புறப்பட்டோம். சிறிது தூரம்தான் சென்றிருக்கும். 1799 மே 4 அன்று திப்புவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்று அவருடைய நினைவிடத்தைக் காட்டினார்கள். ஒரு மாவீரரைத் துரோகம் வீழ்த்திய கதையை மனதில் சுமந்தபடி அங்கிருந்து மவுனமாகப் புறப்பட்டோம்.

திப்பு இறந்த இடம்

சற்றுத் தள்ளி திப்பு சுல்தான் கட்டிய ஜும்மா மசூதியைப்
திப்புவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடம்
பார்த்தோம். இந்த மசூதி இருந்த இடத்தில் ஒரு காலத்தில் ஆஞ்சநேயர் கோயில் இருந்ததாகவும், திப்பு ஆட்சிக்கு வந்த பிறகே ஆஞ்சநேயர் கோயில் போய், மசூதி வந்ததாகவும் சொன்னார் வழிகாட்டி. கோயில்களை இடித்து மசூதி கட்டியவர் என்ற பெயர் சில வரலாற்றுப் புத்தகங்களில் திப்புவுக்கு உண்டு. ஆனால், இந்த மசூதிக்கு நேர் எதிரே ரங்கநாதர் கோயிலும் உள்ளது. கோயில்களை இடித்தவர் திப்பு என்றால், ரங்கநாதர் கோயிலை மட்டும் அவர் எப்படி விட்டுவைத்தார் என்ற கேள்வி மனதுக்குள் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்கும் மானியமும் வழங்கியவர் திப்பு. இதற்கு வரலாற்று ஆதாரம் உள்ளது.

திப்பு சுல்தானின் கோடை மாளிகை
கோடை மாளிகை

திப்புவின் வரலாறு பற்றிய சிந்தனைகளில் மூழ்கிபடியே அங்கிருந்து வெளியே வந்தோம். 15 நிமிட பயணத்துக்குப் பின் திப்பு சுல்தானின் கோடை மாளிகைக்குச் சென்றோம். தாஜ்மஹால் பாணியில் நீண்ட பாதை. பாதையின் இருபுறங்களிலும் கண்ணைக் கவரும் தோட்டம். ‘தாரியா தவுலத்’ என்றழைக்கப்படும் இந்த மாளிகை, சந்தனப் பலகைகளால் கட்டப்பட்டது. சுவர் முழுவதும் திப்பு சுல்தானின் போர்க்களக் காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மாட்டப்பட்டுள்ளன. திப்பு காலத்து வாள்கள், துப்பாக்கிகள், அவர் பயன்படுத்திய உடைகள், பதக்கங்கள் எனப் பல அரிய பொருட்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் பார்த்த பிறகு, அங்கிருந்து சில நிமிடப் பயணத்தில் கும்பஸ் என்ற இடத்தில் திப்பு சுல்தானின் சமாதிக்குச் சென்றோம்.

மறைந்த தன் பெற்றோருக்காக திப்பு சுல்தான் கட்டியது இது. திப்பு
திப்பு சமாதி
சுல்தான் கொல்லப்பட்ட அடுத்த நாளே, அவருடைய சடலத்தை ஆங்கிலேயர்கள் இங்கே அடக்கம் செய்தார்கள். திப்புவின் தந்தை ஹைதர் அலி, தாய் பாத்திமா பேகத்தின் சமாதிகளுக்கு அருகிலேயே திப்புவும் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தோட்டத்திலும் திப்பு அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு வெளியேயும் எங்கே பார்த்தாலும் சமாதிகள்தாம். ஆனால், கண்ணைக் கவரும் நுணுக்கமான கட்டிட வேலைப்பாடுகளும் முகப்பில் உள்ள பெரிய தோட்டமும் இந்த இடத்தை அழகாக்குகின்றன.