ஓர் அரசியல்வாதி குடும்பம். அப்பா முதல்வர் (பழ. கருப்பையா) மகன் துணை முதல்வர் (ராம்கி). இன்னொரு மகன் ராணுவ கர்னல் (விஷால்). தேர்தல் பிரசாரத்தில் தேசிய தலைவர் ஒருவர் கொல்லபடுகிறார். அதே பிரசாரத்தில் விஷாலின் காதலியும் (ஐஸ்வர்யா லெக்மி) கொலையாகிறார். அந்தப் பழி ராம்கி மீது விழுகிறது. அடுத்து ராம்கியும் தற்கொலை செய்கிறார். இந்த மூன்று மரணத்துக்கும் யார் காரணம் என ஆராய்கிறார் விஷால். அந்தக் காரணகர்த்தாக்களைப் பழித் தீர்க்க விஷால் ‘ஆக்ஷன்’ அவதாரம் எடுப்பதே படத்தின் கதை.
பக்கா ஆக்ஷன் கதையைப் படமாக்க வேண்டும் என்று இயக்குநர் சுந்தர்.சி-க்கு நீண்ட நாள் ஆவல் போல. அதை இந்தப் படத்தின் மூலம் தீர்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இது சுந்தர். சி-யின் படமா என அடுத்தடுத்து காட்சிகள் யோசிக்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்கு ஒரு பலவீனமான கதையை சுந்தர். சி படமாக்கியிருக்கிறார். படம் தொடக்கமே துருக்கியில் துரத்தலில் தொடங்குகிறது. அந்தத் துரத்தல் படம் முடியும் வரை நம்மையும் சேர்த்தே துரத்துகிறது.
அரை மணி நேர ஃபிளாஸ்பேக்கைக் கடந்துவந்தால், அதன் பிறகு 2 மணி நேரமும் ஆக்ஷன் காட்சிகளால் பார்வையாளர்களைத் திணறடிக்கிறார்கள். படம் லண்டன், கரிபீயன் தீவு, துருக்கி, பாகிஸ்தான் என எங்கெங்கோ சுற்றிவருகிறது. ஒன்று துரத்திகொண்டே இருக்கிறார்கள்; இல்லை ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த இரண்டையும் செய்யாத வேளையில் சண்டைப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த மூன்றையும் முதலில் படமாக்கிவிட்டு, அதற்கு ஒரு கதையை இயக்குநர் தயார் செய்திருப்பார் போல. ஒரு துரத்தல், ஆக்ஷன் கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் பின்னணி கதை அமையவில்லை.
4 ஆயிரம் கோடியை வாங்கிவிட்டு தலைமறைவாகும் தொழிலதிபருக்கும் அச்சுறுத்தும் தீவிரவாதிக்கும் என்ன தொடர்பு என்பதை துளிகூட படத்தில் சொல்லவே இல்லை. படத்தின் முக்கியமான் இந்த இடத்தை இயக்குநர் அப்படியே கைகழுவிவிடுகிறார். துருக்கியில் அதிநவீன பாதுகாப்பு கொண்ட வங்கியின் சர்வர் அறையில் புகுந்து பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி விடுவது, ஒரு முதல்வரின் வீட்டில் புகுந்து அவருடைய மகனை அதுவும் துணை முதல்வரை தூக்குமாட்டிவிடுவது, இந்த சிசிடிவி யுகத்தில் கார் பார்க்கிங் ஏரியாவில் இருந்துகொண்டு தேசிய தலைவரை கொல்வது எனப் படத்தில் டன் கணக்கில் பூச்சுற்றல்கள்.
வழக்கமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் படம் என்றால், தீவிரவாதி
தலைவருடன் நாயகன் மல்லுக்கட்டுவதுடன் முடிந்துவிடும். ஆனால், இந்தப் படத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதியையே விஷால் ஒரு காட்டு காட்டுகிறார். போலீஸும் இண்டர்போலும் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் ஒரே ஆளாக ஒவ்வொரு நாட்டுக்கும் போய் செய்கிறார் விஷால்.
தலைவருடன் நாயகன் மல்லுக்கட்டுவதுடன் முடிந்துவிடும். ஆனால், இந்தப் படத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதியையே விஷால் ஒரு காட்டு காட்டுகிறார். போலீஸும் இண்டர்போலும் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் ஒரே ஆளாக ஒவ்வொரு நாட்டுக்கும் போய் செய்கிறார் விஷால்.
படத்தின் நாயகன் விஷால், சுபாஷ் என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். அவருடைய வாட்டசாட்டமான உயரமும் அதற்கு உதவுகிறது. தலை முடியில்கூட அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளார். சண்டைக் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார். குறிப்பாக லண்டன், துருக்கி சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. படத்தின் நாயகி தமன்னா, சக ராணுவ வீராங்கனையாக நடித்திருக்கிறார். ஆக்ஷன், துரத்தல் காட்சிகளில் சில இடங்களில் விஷாலுக்கு இணையாக நடித்திருக்கிறார்.
இன்னொரு நாயகியாக வரும் ஐஸ்வர்யா லெக்மி அவ்வப்போது சிணுங்கிக்கொண்டுவந்து, பிறகு இறந்துபோகிறார். தொழில்முறை கில்லராக வரும் அகான்ஷா கவர்ச்சியிலும் சண்டைக் காட்சியிலும் மிரள வைக்கிறார். முதல்வராக வரும் பழ கருப்பையா வழக்கம்போல அடுக்குமொழி பேசி செல்கிறார். துணை முதல்வராக வரும் ராம்கியை விரைவாகவே கொன்றுவிடுகிறார்கள். லண்டனில் ஹேக்கராக வரும் யோகிபாபு கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். தீவிரவாதியாக வரும் கபீர் துகான் சிங், ‘நான் யார் தெரியுமா?’ என்று கத்திக்கொண்டே இருக்கிறார்.
படத்துக்கு இசை ஹிப் ஹாப் ஆதி. பாடல்கள் மனதில் ஒட்டவும் இல்லை. படத்துக்கும் இடையூராகவே வந்து செல்கின்றன. இயக்குநரைவிட இந்தப் படத்தில் ஸ்டண்ட் இயக்குநர் அதிகம் உழைத்திருக்கிறார். சில சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகளுக்காக நிச்சயம் அவரை பாராட்டலாம். ஒளிப்பதிவாளர் டட்லியையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். வேகமான துரத்தலையும் துருக்கியையும் அவ்வளவு அழகாக கேமராவுக்குள் கடத்தியிருக்கிறார்.
'அவன் வந்தால் ஆப்ஷன் கிடையாது... ஆக்ஷன்தான்’ என்று படத்தின் தொடக்கத்தில் ஒரு வசனம் வரும். அதை மட்டுமே நம்பி கதையில் கோட்டை விட்டதில், ‘ஆக்ஷன்’ எந்த ரியாக்ஷனையும் ஏற்படுத்தவில்லை.
மதிப்பெண்: 2 / 5
மதிப்பெண்: 2 / 5
No comments:
Post a Comment