வருடத்துக்கொரு படம்கூட இல்லை. தன் மனதில் உள்ள கதைக் கருவுக்காக முழுமையான வடிவம் கிடைக்கும்வரை காத்திருந்து, ஆத்மார்த்தமாகப் படம் பண்ணும் இயக்குநர்களில் ஒருவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். 2002-ம் ஆண்டில் தொடங்கி 2012-ம் ஆண்டுவரை நான்கே படங்கள். ‘சாமுராய்’, ‘காதல்’, ‘கல்லூரி’ மற்றும் ‘வழக்கு எண் 18/9’. இவை அனைத்துமே ஒருவகையில் சமூக பிரச்சனைகள் பற்றி பேசிய யதார்த்தமான படங்கள்.வழக்கமான தமிழ் சினிமா கலாச்சாரத்திலிருந்து மாறி, எளிய மக்களின் போராட்ட வாழ்வின் மறுபக்கத்தை முகத்தில் அடித்தாற்போல சொல்வது பாலாஜி சக்திவேலின் ஸ்டைல். விக்ரம் நடித்து, அவர் இயக்கிய ‘சாமுராய்’ படம் மட்டும் கொஞ்சம் ஹீரோயிசம் கலந்த பாணியில் சொல்லப்பட்ட கதை. அதை நடிகர் விக்ரமுக்காக செய்தாரோ என்னவோ!
‘சாமுராய்’ படம் நன்றாக வந்திருந்தாலும், சரியாக ஓடாமல் போனதால் தமிழ் சினிமா உலகில் இவரது அடையாளம் வெளிப்படாமலேயே இருந்தது. வணிக ரீதியாக வெற்றிபெற முடியாததாலேயே இவரது திறமையை வெளிக்காட்டசத்திய சோதனைக்கும் ஆளாக வேண்டியிருந்தது. சினிமா வாழ்க்கைக்காக கமர்ஷியல் சினிமா சூழலில், இவர் சிக்காமலிருந்தது தமிழ் சினிமாவின் புண்ணியம்.
மூன்று ஆண்டுகள் கழித்து இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் ‘காதல்’ படம் வெளியானது. படத்தில் பெரிய நட்சத்திரங்கள் இல்லை. ‘பாய்ஸ்’ படத்தில் நடித்திருந்த பரத் தவிர ஏறக்குறைய அனைவரும் புதுமுகங்கள். உண்மை சம்பவம் என்ற அறிமுகத்துடன் வெளியானது அந்தப் படம். இருவேறு சமூகத்தைச் சேர்ந்த ஜோடி காதலித்து திருமணம் செய்த பிறகும், அந்த இளைஞனை அடித்து உதைத்து மனநலம் பாதிக்கப்பட்டவனாக மாற்றும் சாதிய கொடூரத்தை சோகத்துடன் காட்டியிருந்தார் பாலாஜி சக்திவேல். சாதிய சதியால் காதலனை மறந்து வேறு ஒருவரை திருமணம் செய்யும் காதலி, மனநலம் பாதிக்கப்பட்ட காதலனை அரவணைத்து செல்லும் காதலியின் கணவன் மூலம் மனிதநேயத்தை சொன்ன பாணி பாலாஜி சக்திவேலுக்கு மட்டுமே வாய்த்த வரம். மிக வலிமையான கதையை இப்படத்தில் சொல்லியதன் மூலம், பங்கேற்ற எல்லாருக்கும் மிகப்பெரிய வாழ்வு கிடைத்தது. முதல் வாய்ப்பைத் தவற விட்ட பாலாஜி சக்திவேல், இந்தமுறை மிகச் சரியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.

‘காதல்’ படம் தமிழ் ரசிர்களை உலுக்கியெடுத்தது என்றால், அவரது அடுத்தப் படமான ‘கல்லூரி’ மனதைப் பிசைந்தது. இந்தப் படமும் சமூகத்தில் நல்ல அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் படத்தில் ஒரு சிறு நகரில் இருக்கும் அரசு கல்லூரி பற்றியும் அங்கு படிக்கும் மாணவர்களின் பின்புலம் பற்றியும் சொல்லப்படாத பல செய்திகளைப் பதிவு
செய்தது ‘கல்லூரி’ படம். படத்தின் கிளைமாக்ஸ், உண்மையாக நடந்த ஓர் அரசியல் கேவலத்தை யதார்த்தமாக உணர்த்தியிருந்தது.
‘காதல்’ படத்திற்கு பிறகு மீண்டும் ஓர் இடைவெளி. 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அழுத்தமான கதையுடன் மீண்டும் களத்திற்குள் வந்தார். ஒரு அடித்தட்டு இளைஞன், அவனை நித்தமும் கடந்து செல்லும் அவனது காதலி, அவள் வேலை செய்யும் வீட்டு பெரிய இடத்துப் பெண், அவளை போகப் பொருளாக மட்டும் பார்க்கும் அதைவிட பெரிய இடத்துப் பையன். இவர்கள் நால்வருக்கும் பொதுவாக ஒரு சம்பவம். படம் அந்தப் புள்ளியில் இருந்துதான் விரிகிறது. ஐந்தாவது கதாபாத்திரமாகக் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் காவல் துறை அதிகாரி. அதுதான் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் கதைக் கரு.

குடும்பங்களின் ஏழ்மை நிலை, உயர்தட்டு குடும்பப் பிள்ளைகளின் பாலியல் ஒழுக்கக்கேடு, ஏழை பெண் மீதான புனிதமான காதல், தன் இச்சைக்கு அடங்க மறுக்கும் பெண்ணுக்கு அமில வீச்சை பரிசாகத் தரும் இளைஞன், எளிய மக்களை ஏமாற்றும் நயவஞ்சக காவல் அதிகாரி என சமூகத்தின் அங்கங்களையும் சீரழிவுகளையும் பாலாஜி சக்திவேல் காட்சிப்படுத்தியிருந்த விதம் சிக்ஸர் ரகங்கள்.
இவரது எல்லாப் படங்களையும் உற்று கவனித்தால், ஒன்று புலப்படும். எல்லாப் படங்களிலும் ஏழை எளிய மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களின் அவலநிலைக்கு, சினிமாவுக்கே உரிய மகிழ்ச்சிகரமான, நம்பமுடியாத முடிவைத் தராமல், யதார்த்தத்தை முடிவாக தந்திருப்பார் பாலாஜி சக்திவேல். அதானால்தான் என்னவோ இவரது படைப்புகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதில்லை.
சினிமா வெறும் பொழுதுபோக்கை தருவது மட்டுமல்ல; வெகுஜனமக்களின் சிந்தனைப் போக்கையும் வளர்க்க வேண்டும். அந்த வகையில் பாலாஜி சக்திவேல், தொடர்ந்து நம்பிக்கையளிக்கும் இயக்குனராகப் பரிணமித்து வருகிறார்.
(2013, தி இந்து தீபாவளி மலர்)
No comments:
Post a Comment