30/01/2018

ஆசியாவின் ‘ஆசியான்’ கதை!

முன் எப்போதும் இல்லாத ஒரு சிறப்பு, சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த குடியரசுத் தின விழாவுக்குக் கிடைத்திருக்கிறது. ஒரே சமயத்தில் ‘ஆசியான்’ என்றழைக்கப்படும் தென்கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பின் பத்து நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்பித்ததுதான் அது. ‘ஆசியான்’ அமைப்புக்கும் இந்தியாவுக்குமான பேச்சுவார்த்தை உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆனதன் நிறைவு ஆண்டு இது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த ஆண்டு குடியரசுத் தினவிழாவில் பத்து தலைவர்களும் பங்கேற்றார்கள். ஆசியான் அமைப்பு என்பது என்ன? அதற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?

தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கிய ‘சார்க்’ என்ற அமைப்பு ஒன்று இருக்கிறதல்லவா? இதைப் போலவே தென் கிழக்காசியாவில் உள்ள நாடுகள் சேர்த்து உருவாக்கிய அமைப்புதான் ‘ஆசியான்’. இதை தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) என்று அழைப்பார்கள்.  இந்த கூட்டமைப்பை இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து 1967-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி உருவாக்கின. பின்னர் புரூனே (1987), வியட்நாம் (1995), மியான்மர், லாவோஸ், (1997), கம்போடியா (1999) ஆகிய நாடுகள் இந்தக் கூட்டமைப்பில் இணைந்தன.

பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல், உறுப்பு நாடுகளிடையே சமூக மற்றும் பண்பாட்டு உறவுகளைப் பேணுதல், கிழக்காசிய பிராந்தியத்தில் அமைதியைப் பேணுதல், உறுப்பு நாடுகள் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாட வாய்ப்பை வழங்குதல் போன்றவை இந்தக் கூட்டமைப்பின் குறிக்கோள்களாக அறிவிக்கப்பட்டன. உலகின் பெரிய கூட்டமைப்பிகளில்  ஆசியான் அமைப்பும் ஒன்று. உலகின் எட்டாவது மிகப் பெரிய பொருளாதார அமைப்பு இது. கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் 4.46 மில்லியன் கி.மீ. நிலப்பரப்பைக் கொண்டிருக்கின்றன. உலக மொத்த பரப்பளவில் இது 3 சதவீதம். இந்தப் பிராந்தியத்தின் மக்கள்தொகை சுமார் 60 கோடி.

இந்தியாவுக்கும் ஆசியான் அமைப்புக்கும் என்ன தொடர்பு? ஆசியான் அமைப்பு பத்து நாடுகளோடு தொடர்பை வைத்துக்கொள்ளவில்லை. வர்த்தகத்திலும் பொருளாதாரத்திலும் இணைந்து செயல்பட வசதியாக பிற நாடுகளுடனும் தொடர்பு வைத்துக்கொண்டன. அந்தவகையில் ‘ஆசியான் பிளஸ் த்ரீ’ என்ற அந்தஸ்தை சீனா, ஜப்பான், தென்கொரியா என மூன்று நாடுகளுக்கு ஆசியான் அமைப்பு வழங்கியது. பின்னர் இந்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் அந்த அந்தஸ்தைப் பெற்றன.  இதன்படி 1992-ம் ஆண்டிலிருந்து ஆசியான் அமைப்போடு இந்தியாவுக்கு உறவு இருந்து வருகிறது. அந்த உறவு தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டிதான் இந்த ஆண்டு குடியரசுத் தின விழாவில் ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றார்கள்.

விருந்தினர்களின் வந்தனம்


இந்தியா குடியரசாக மலர்ந்த 1950-ம் ஆண்டிலிருந்தே வெளி நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கும் நடைமுறை இருந்துவருகிறது. ஆனால், இந்த ஆண்டு குடியரசுத் தினத்தில்தான் 10 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒருசேர பங்கேற்ற நிகழ்வு நடந்திருக்கிறது.

1950-ம் ஆண்டு குடியரசுத் தின விழாவில் முதன் முதலாக சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் அப்போதைய இந்தோனேசிய அதிபர் சுகர்னோ.
1952, 1953, 1966 என இந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்காத நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஒரே பாகிஸ்தான் தலைவர் என்ற சிறப்பு மாலிக் குலாம் முகமதுவுக்கு உண்டு. 1955-ம் ஆண்டு விழாவில் இவர் பங்கேற்றார். ராஜபாதை அணிவகுப்பில் பங்கேற்ற முதல் வெளிநாட்டுத் தலைவரும் இவர்தான்.

1956 (ஜப்பான், பிரிட்டன்), 1968 (சோவியத் யூனியன், யூகோஸ்லேவேகியா),

1974 (இலங்கை, யுகோஸ்லேவேகியா) ஆகிய ஆண்டுகளில் இரண்டு வெளி நாட்டுத் தலைவர்கள் குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றிருக்கிறார்கள்.

இந்தியக் குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஒரே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. இவர் 2015-ம் ஆண்டு பங்கேற்றார்.
1994-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் அதிபராக நெல்சன் மண்டேலா பொறுப்பேற்ற பிறகு, 1995-ம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

- தி இந்து, 30/01/2018

24/01/2018

உலகை விழுங்கும் சாட்டிலைட்



ஹாலிவுட் அறிவியல் புனைவுக் கதைகள் என்றாலே முதுகைத் தண்டை ஜில்லிட வைக்கும். அப்படியான ஒரு திரைப்படம் ரசிகர்களை மகிழ்விக்க காத்துக்கொண்டிருக்கிறது. ‘மூன் 44’,  இண்டிபென்டன்ஸ் டே’, ‘காட்ஷிலாபோன்ற அறிவியல் புனைவுப் படங்களை இயக்கி புகழ்பெற்ற டீன் டேவ் இயக்கியஜியோஸ்ட்ராம்படம்தான் அது. த்ரிலிங்கிற்கும் விறுவிறுப்புக்கும் பிரம்மாண்டத்துக்கும் பஞ்சமே இல்லாமல் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் டீன் டேவ்.
பூமியை இயக்கும் சாட்டிலைட்டுகளால் எதிர்காலத்தில் உலகுக்கு என்ன ஆபத்து வருகிறது என்பதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. பருவநிலையைக் கட்டுப்படுத்தும் ஒரு சேட்டிலைட்டில் திடீரென கோளாறு ஏற்படுகிறது. இதன்பிறகு அந்த சாட்டிலைட்டிலிருந்து புறப்படும் துண்டுகள் பூமியின் மீது விழுந்து இயற்கை பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன. அதனால் அந்த சேட்டிலைட்டின் இயக்கத்தை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் உத்தரவிடுகிறார். விண்வெளி வீரராக வரும் நாயகன் ஜெரார்ட் பட்லரும் அவரது டீமும் இதற்காகக் களமிறங்குகிறது. விண்வெளிக்குப் பறக்கும் அவர்களும் மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். அந்த ஆபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொண்டு, உலகைக் காப்பாற்ற என்ன செய்கிறார்கள் என்பதை விறுவிறுப்பு குறையாமல் படு சுவாரஸ்யமாக தயாரித்திருக்கிறார்கள்.
இயற்கைப் பேரழிவு காட்சிகளில் கலக்கலான கிராஃபிக்ஸைக் கலந்து பிரம்மாண்டமாகவே படமாக்கப்பட்டுள்ளது. வானுயர கட்டிடங்களை சுனாமி விழுங்கும் டீஸர் காட்சிகள் கண்களை அகல விரிக்க வைக்கின்றன. ராபர்ட்டோ சாஃபெரின் ஒளிப்பதிவும், லோர்னெ பால்ஃபியின் இசையும் படத்துக்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்டாக இருக்கும். அமெரிக்காவில் வெளியான இந்தப் படத்தின் டீஸருக்கே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததால், படம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் படக்குழு காத்திருக்கிறது.
- தி இந்து (டாக்கீஸ்)க்கா 2017 செப்டம்பரில் எழுதியது.

19/01/2018

சாகசங்களின் சாட்சி


சூப்பர் மேன், ஸ்பைடர்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் பறந்துபறந்து செல்லும் பின்னணியில் நவீன தொழில்நுட்பங்களும் கிராஃபிக்ஸ்களின் உபயமும் நிறையவே இருக்கும். ஆனால், ‘கரணம் தப்பினால் மரணம்’ என்று சொல்லுமளவுக்கு  பிரம்மாண்ட மலைகளிலிருந்தும் உயரமான கட்டிடங்களின் உச்சியிலிருந்தும் குதிக்கும் ரியல் ஹீரோக்களின் பின்னணியில் ஒப்பனையும் இல்லை; எந்தத் தொழில்நுட்பமும் இல்லை.  இதுபோன்ற ரியல் ஹீரோக்களை மையப்படுத்தி ஓர் ஆவணப்படம்  அமெரிக்காவில் 2015, ஏப்ரல் மாதம் வெளியானது. படத்தின் பெயர்சன்சைன் சூப்பர்மேன்’.
கிராபிக்ஸ் உதவியுடன் கற்பனை மனிதர்கள் செய்யும் சாகசங்கள் எல்லாம் யதார்த்துக்கு அப்பாற்பட்டவை. அப்படிப்பட்ட காட்சிகளே பல நேரங்களில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், ரத்தமும் சதையும் கலந்த மனிதர்கள் செய்யும் இந்தச் சாகசங்கள் திகில் ரகம். அதுவும் தலையில் கேமராக்களைக் கட்டிக் கொண்டு அந்தரத்தில் காட்சிகளை ஒளிப்பதிவு செய்தபடி, மலையிலிருந்து நேரடியாக குதிக்கும் காட்சிகள் திக்திக்கென இருக்கும்.  பார்ப்பவர்களின் ரத்தத்தை உறையச் செய்யும் இதுபோன்ற சாகசங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மார்க் ஸ்டார்க்.
உலக புகழ்பெற்ற பேஸ் ஜம்பிங் வீரர் கார்ல் பொயினிஸின் அனுபவம்தான் இந்தப் படத்தின் ஒரு வரி கதை. இவர்  ‘பேஸ் ஜம்பிங் இயக்கத்தின் தந்தைஎன்றழைக்கப்படுபவர். இவரது மனைவியும் இதேபோல ஒரு பேஸ் ஜம்பிங் வீராங்கனைதான். இருவரும் சாகச சாதனைகளை செய்யும்போதே இதயத்தையும் பரிமாறிக் கொண்டவர்கள்.  நார்வேயில் உள்ள ட்ரோல் வால் மலையில் 1984-ல் மலை உச்சியிலிருந்து கார்ல் குதித்து கின்னஸ் சாதனை செய்தார். இந்தச் சாதனையைத் தொடர்ந்து அங்கு எதிர்பாராத விபத்து நிகழ்கிறது. இப்படி கார்லின் அனுபவத்தை  கதையாக்கி, அதில் காதலையும் குலைத்து, பேஸ் ஜம்பிங் வீரர்களின் சாகசங்களையும் சொல்லியிருக்கிறார்  இயக்குநர்.
 நம் ஊரில் ஆவணப் படங்களை அங்கீகரிப்பதுக்கூட கிடையாது. ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லை. ஆவணப்படத்தை தியேட்டர்களில்தான் வெளியிடுவார்கள். மக்களும் அந்தப் படத்தை அங்கீகரிக்கும் வகையில், காசு கொடுத்து படம் பாப்பார்கள். இந்தப் படம்  சாசகசங்களின் சாட்சியாக எப்போதும் இருக்கும் என்று  நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

16/01/2018

இஸ்ரோ 100 நாட் அவுட்!



சதம் என்றாலே எப்போதும் ஸ்பெஷல்தான். விளையாட்டில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் சதத்தைத் தொடும் நிகழ்வு மிகவும் இனிமையான தருணமாகவே இருக்கும். அந்த வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) நூறாவது முறையாக செயற்கைக் கோள்களை ஏவி வரலாற்றில் முக்கியமான மைல் கல்லைத் தொட்டிருக்கிறது. இந்தத் தருணத்தில் இஸ்ரோவின் காலப் பயணத்தைத் திரும்பிப் பார்ப்போம்.
இந்தியாவில் 1960-களில் இருந்தே விண்வெளி ஆய்வுகள் முன்னெடுக்கப்படத் தொடங்கின. முதலில் தளம் அமைப்பதற்கான பணிகள்தான் இந்தியாவில் தொடங்கப்பட்டன. அப்படி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட முதல் இடம் தும்பா. கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பழமையான புனித மேரி மக்டாலினே தேவாலயத்தில்தான் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. தொழில்நுட்பம் பெரிய அளராத அந்தக் காலகட்டத்தில் பரிசோதனைக்காக 1963-ம் ஆண்டு நவம்பர் 21 தேதி ’சவுண்டிங் ராக்கெட்’ ஏவப்பட்டது.
அது புகையைக் கக்கியபடி சென்றதை வெறுமனவே கண்ணால் பார்த்து, அது சென்ற போக்கை விஞ்ஞானிகள் மதிப்பிட்டனர். இதனைத்தொடர்ந்து 1965 ஜனவரி 1-ம் தேதி விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மையம் தும்பாவில் விரிவுப்படுத்தப்பட்டது. அந்தக் காலட்டத்தில் ராக்கெட்டுக்கு வேண்டிய தளவாடங்களையும், ஏவ உதவும் கருவிகளையும் மாட்டு வண்டியிலும் சைக்கிளிலும் கொண்டு செல்லும் நிலை இருந்தது. தொடக்கநிலை என்பதால், வெளிநாடுகளின் உதவியுடன் இந்திய விஞ்ஞானிகள் செயல்பட்டனர்.
ஆரியபட்டா செயற்கைக்கோள்
1969-ம் ஆண்டு சுதந்திர தினம் விண்வெளி துறையில் மறக்க முடியாத நாள். அன்றுதான் இந்திய அணுசக்தித் துறையின் கீழ் இஸ்ரோ செயல்படத் தொடங்கியது.  அதன் முதல் தலைவராக டாக்டர் விக்ரம் சாராபாய் இருந்தார்.
அடுத்த ஆறு ஆண்டுகளில் இந்தியா உலகில் செயற்கைக்கோள் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்தது. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று இந்தியா தனது முதலாவது பரிசோதனை செய்கைக்கோளான ஆரியபட்டாவை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது.  இந்த செயற்கைக்கோளை அனுப்ப ரஷ்யதான் அன்று உதவியது. ரஷ்யாவின் ராக்கெட்டுடன் இது செலுத்தப்பட்டது. முதல் பரிசோதனை செயற்கைக்கோள் அனுப்பும்போது இஸ்ரோ பெங்களூருவுக்கு மாற்றப்பட்டிருந்தது. அப்போதும்கூட இஸ்ரோவில் பெரிய அளவில் வசதிகள் இல்லாமல்தான் செயல்பட்டது.
ஆரியபட்டாவைத் தொடர்ந்து பரிசோதனை செயற்கைக்கோளாக பாஸ்கராவை 1979-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி இஸ்ரோ அனுப்பியது. இந்த ராக்கெட்டும் ரஷ்ய உதவியுடன்தான் ஏவப்பட்டது. இஸ்ரோ வெளி நாடுகளின் உதவியின்றி அனுப்பிய முதல் செயற்கைக்கோள் ரோகினி. 1980-ம் ஆண்டு இது அனுப்பப்பட்டது. இதன்பின்  இஸ்ரோவின் சாதனைப் பயணம் எல்லாமே ராக்கெட் வேகம்தான். சர்வதேச அளவில் செயற்கைகோள் ஏவுதலில் முக்கிய இடத்தைப் பிடித்த இஸ்ரோ, ராக்கெட், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய முன்னேற்றத்தையும் அடைந்தது. பல முக்கியமான செயற்கைக்கோள்களை அனுப்பி முத்திரையும் பதித்தது இஸ்ரோ.
 பூமியைப் பற்றிய ஆய்வு, இயற்கை வள ஆதாராங்களின் பயன்பாடு, நீர்வள ஆதார வளர்ச்சி. தகவல் தொடர்புக்கென இஸ்ரோ பல செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது. அதுமட்டுமல்ல,  நாட்டில் உள்ள கிராமப்புற மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் வின்வெளி சார்ந்த தொலைத்தொடர்பு கல்வி, தொலை மருத்துவ வசதி திட்டங்களை செயல்படுத்துவதிலும் இஸ்ரோ முக்கிய பங்கை ஆற்றியிருக்கிறது. சீராக ராக்கெட்டுகளையும் செயற்கைக்கோள்களையு ஏவிய இஸ்ரோ, 2000-ம் ஆண்டுக்கு பிறகு அதன் வேகம் இன்னும் பல மடங்கு அதிகரித்தது.
மேரி மக்டாலினே தேவாலயம்
ஒரு காலத்தில் வெளிநாட்டின் உதவியோடு செயல்பட்ட இஸ்ரோ, இன்று வல்லரசு நாடுகளின் செயற்கைக்கோள்களை அனுப்பும் அளவுக்கு மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. வருங்காலத்தில் இந்தியா விண்வெளித் துறையின் வல்லரசாக இருக்கும் காலமும் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
 முக்கியமான தருணங்கள்
* செவ்வாய்க் கிரக ஆய்வை அமெரிக்காவின் நாசா போன்ற விண்வெளி ஆய்வு மையங்கள் மட்டுமே செய்துவந்த வேளையில், இந்தியாவுக்கு அது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால், இதிலும் இஸ்ரோ முத்திரைப் பதித்தது. 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் மங்கள்யானை இஸ்ரோ விண்ணில் ஏவியது. மங்கள்யான், 2017 ஜூன் 21-ம் தேதியுடன் 1000 நாட்களை நிறைவு செய்து பெரும் சாதனையும் படைத்தது.
* விண்வெளி துறையில் ஒரு மகத்தான நாளை கடந்த ஆண்டு ஏற்படுத்தியது இஸ்ரோ. 2017, பிப்ரவரி 16 அன்று பிஎஸ்எல்வி சி 37 ராக்கெட் மூலம் ஒரே சமயத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. ஒரே சமயத்தில் இத்தனை செயற்கைக்கோள்கள் அனுப்பிய இஸ்ரோவைப் பார்த்து வல்லரசு நாடுகள் மூக்கில் விரல் வைத்தன. இதற்கு முன்பு 2014-ல் ரஷ்யா 37 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணில் செலுத்தியதே உலக சாதனையாக இருந்தது.
* என்னதான் இஸ்ரோ மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியிருந்தாலும், அதிக எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை அனுப்ப மற்ற நாடுகளின் உதவியைத்தான் இஸ்ரோ எதிர்பார்த்திருந்தது. அந்த வரலாற்றையும் 2017-ல் இஸ்ரோ மாற்றி எழுதியது. சென்ற ஆண்டு ஜூன் 5-ம் தேதி   சொந்தமாக கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிக்க முடியும் என்று உலக நாடுகளுக்கு இஸ்ரோ உரக்க சொன்ன நாள் அது. அன்றுதான் ஜிஎஸ்எல்வி மார்க் 3-ஐ இஸ்ரோ ஏவியது. இதன்மூலம் 4000 ஆயிரம் கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் சக்தியைப் பெற்றது இஸ்ரோ.
* 2008, அக்டோபர் 22-ம் தேதியும்கூட இஸ்ரோ வரலாற்றில் மறக்க முடியாத நாள்தான். நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக அன்றுதான் சந்திரயான் -1ஐ இஸ்ரோ அனுப்பியது. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை சந்திரயான் கண்டுபிடித்ததை நாசா உறுதிப்படுத்தியது. தொடர்ச்சியாக 2013 டிசம்பர் 30 அன்று சந்திரயான் -2ஐ இஸ்ரோ அனுப்பியது.
மாட்டு வண்டியில் ராக்கெட்
* 2018-ம் ஆண்டு தொடக்கமே இஸ்ரோவுக்கு அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது. பி.எஸ்.எல்.வி. - சி40 ராக்கெட் மூலம் கார்டோசாட் - 2சீரிஸ் உள்பட 31 செயற்கைக் கோள்களை, இஸ்ரோ வெற்றிக்கரமாக ஏவியிருக்கிறது. இது பி.எஸ்.எல்.வி. வரிசையில் 42-வது ராக்கெட். 'கார்
 டோசாட்' வரிசையில் ஏழாவது செயற்கைக்கோள். 2005-ல் முதல் செயற்கைக்கோள் செலுத்தப் பட்டது. இதன்மூலம் வரைபடம், கடல்வழி போக்குவரத்து கண்காணிப்பு, நீர்வள மேம்பாடு, நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புக்கு உதவும்.


* இப்போது அனுப்பிய செயற்கைக்கோள்களில் ஒரு நானோ, ஒரு மைக்ரோ என மூன்று செயற்கைக்கோள்கள் இந்தியாவுக்கு சொந்தமானவை. மற்றவை கனடா, பின்லாந்து, பிரான்ஸ், தென்கொரியா, பிரிட்டன், அமெரிக்காவைச் சேர்ந்தவை. இதுவரை இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 237. 1999-ல் முதன்முதலாக வெளிநாட்டு செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்பியது. இதுவரை 28 நாடுகளின் செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது.  
(தி இந்து, 16-01-2018)