தன்னுடைய உடல் வளர்ச்சிக்காக சட்டையை உரிக்கும் பாம்பை போல, மனிதன் தன்னுடைய வளர்ச்சிக்காக மாறிக் கொள்ளலாமா என்ற சமூக சிந்தனையுடன் கூடிய கதைக்கு காதல், செண்டிமெண்ட், காமெடி போன்ற மசாலாக்களுடன் கலந்து வந்திருக்கும் படம் ‘பாம்பு சட்டை’.
தன் அண்ணனை திருமணம் செய்து விதவையாக இருக்கும் அண்ணியுடன் (பானு) ஒரே வீட்டில் வசித்து வருகிறார் தட்சிணா (பாபி சிம்ஹா). அவருக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தர வேண்டும் என்று விரும்புகிறார். சரியான வேலை எதுவும் இல்லாமல் கிடைத்த வேலையைச் செய்யும் பாபி சிம்ஹா, பார்த்த மாத்திரத்தில் துரத்தித் துரத்தி வேணியை (கீர்த்தி சுரேஷ்) காதல் செய்கிறார். அண்ணியுடன் ஒரே வீட்டில் இருப்பதால் கீர்த்தியைத் திருமணம் செய்து தர அவருடைய தந்தை (சார்லி) மறுக்கிறார். அண்ணியைத் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து, அதற்காக தேவைப்படும் பணத்தை புரட்டும் பணியில் ஈடுபடுகிறார் பாபி. அப்போது தவறாக கள்ள நோட்டு கும்பலிடம் சிக்கி சேர்த்த பணத்தையும் இழக்கிறார். பணம் இல்லாமல் தவிக்கும் பாபி சிம்ஹா, இழந்த பணத்தை மீட்டாரா, அண்ணிக்குத் திருமணம் செய்து வைத்தாரா? தன் காதலியைக் கரம் பிடித்தாரா என்பதே பாம்பு சட்டையின் கதை.
ஓர் எளிய கதையைக் கள்ளநோட்டு பின்னணியுடன் சொன்ன விதத்தில் அறிமுக இயக்குநர் ஆடம் தாசனை பாராட்டலாம். தினசரி வாழ்வில் துப்புரவுத் தொழிலில் உள்ளவர்கள் படும் துயரங்களை பதிவு செய்த வகையில் இயக்குநருக்குப் பூக்கொத்து கொடுக்கலாம். கள்ள நோட்டு தயாரிப்பையும், அதை கள்ள நோட்டு கும்பல் புழக்கத்தில் விடுவதற்காக வறியவர்களை குறி வைப்பதையும் அழாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இழுவையான காட்சிகள் படத்துக்கு வேகத்தடையாக மாறி பிரேக் போட வைக்கின்றன. தெளிவில்லாத திரைக்கதை படத்தின் மீதான சுவாரஸியத்தை குறைத்துவிடுகின்றன. சம்பந்தமே இல்லாமல் வரும் பாக்ஸிங்கும், திரைக்கதையோடு பயணித்து வரும் அந்தக் காட்சிகளும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.
தண்ணீர் கேன் போடும் பாத்திரத்தில் அருமையாக பொருந்தியிருக்கிறார் பாபி சிம்ஹா. பாத்திர வார்ப்பிற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அண்ணியையும் தன்னையும் சேர்ந்து வைத்து பேசும்போது கோபப்படுவது, கீர்த்தியின் காதலுக்காக மெனக்கெடுவது, தெரிந்தே தப்பு செய்யும்போது அந்த ஆற்றாமையில் மனம் புழுங்குவது என நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால், உடல்மொழி ஒத்துழைக்கும் அளவுக்கு காட்சியோடு அவர் வெளிப்படுத்தும் ஒரே மாதிரியான குரல் சலிப்பை உண்டாக்குகின்றன.
கார்மெண்ட் கம்பெனியில் துணி தைக்கும் ஏழைப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இயல்பான தோற்றத்தில் கவர்கிறார். துப்புரவுத் தொழிலாளியின் மகளாக நடித்து சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சலை உள்வாங்கி நடித்திருக்கிறார். காமெடியனாக வரும் மொட்டை ராஜேந்திரன் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பானு, துப்புரவுத் தொழிலாளியாக சார்லி, வில்லனாக கே.ராஜன், குருசோமசுந்தரம், ஆர்.வி. உதயகுமார் பாத்திரத்துக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
அஜீஸின் பின்னணி இசை படத்துக்கு பலம் என்றாலும், பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. ஒளிப்பதிவு வெங்கடேஷ். சென்னையை மிக அழகாக தன் காமிராவில் பதிவு செய்திருக்கிறார்.
மனிதர்களின் வாழ்க்கை யதார்த்தை உரித்துக் காட்ட முயன்று, கோவையில்லாத திரைக்கதையால் கிழிந்து கிடக்கிறது ‘பாம்பு சட்டை’.
மதிப்பெண்: 2.5 / 5
No comments:
Post a Comment