02/04/2017

கவண் விமர்சனம்

ஊடக அறத்தையும் உண்மையும் உரக்கச் சொல்லும் ஓர் இளைஞனுக்கும் அரசியல் சித்து விளையாட்டுகளால் ஊடக நிறுவனத்தை வளர்க்க விரும்பும் ஒரு முதலாளிக்கும் நடக்கும் சடுகுடு விளையாட்டுத்தான் ‘கவண்’.
தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைக்கு சேரும் திலக் (விஜய் சேதுபதி) ஊடக அறத்தைக் கடைப்பிடித்து செய்திகளை வழங்குகிறார். ஆனால், அந்தச் செய்தி எப்படி வர வேண்டும் என்று ஊடக முதலாளி கல்யாண் (அக்ஸ்தீப் சைகால்) முடிவு செய்கிறார். மோசமான அரசியல்வாதியான தீரண் மணியரசுடன் (போஸ் வெங்கட்) கூட்டு சேர்ந்துக் கொண்டு, தொலைக்காட்சி மூலம் அவரை உயர்த்திப் பிடிக்கிறார் ஊடக முதலாளி. அதை விஜய் சேதுபதி எதிர்க்கிறார். வேலையிலிருந்து வெளியேறும் விஜய் சேதுபதியும் அவரது நண்பர்களும் ஊடக முதலாளியின் முகத்திரையைக் கிழிக்க என்ன செய்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை.

காட்சி ஊடகத்தின் பின்னே இருக்கும் கார்ப்பரேட் மற்றும் அரசியல் கூட்டு சதியை உரக்க சொன்ன விதத்தில் இயக்குநர் கே.வி. ஆனந்த் கவர்கிறார். ரியாலிட்டி ஷோக்களில் நடைபெறும்  டிராமாக்களையும்,  ஒரு குழுவை வெளியேற்றும்போது பரிதாப உணர்வைத் தூண்ட அடித்து அழ வைப்பது, வம்பிழுப்பது என நடக்கும் கூத்துகளை அச்சு பிசகாமல் காட்டியதில் ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர்.

பிரேக்கிங் நியூஸ், பரபரப்பு பசி, முந்தித் தரும் பிரத்யேக செய்திகளில் தொலைக்காட்சிகள் அணுகும் விதத்தில் நடக்கும் தகிடுதத்தங்களை தோலுரித்து காட்ட இயக்குநர் முனைந்திருக்கிறார். ஆனால், அதற்கான திரைக்கதை அமைப்பில் அதீத கற்பனையைக் கலந்து, சொல்ல வந்த விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறார். பரபரப்பான செய்திகளை முந்தி தருவதற்கான டி.ஆர்.பி. போட்டியில், ஊடக அறத்தை எப்படி மறக்கிறார்கள் என்பதைச் சொல்வதற்குப் பதிலாக, ஊடகத்தில் இருப்பவர்களே அரசியல்வாதியுடன் சேர்ந்துகொண்டு வெடிகுண்டு வைத்து செய்திகளை உருவாக்கிறார்கள் என்று காட்டுவதெலாம் சுத்த அபத்தம்.

சுற்றுச்சூழல் போராட்டம், தீவிரவாதியாக சித்தரிக்க முயலும் ஒரு சமுதாயத்தின் இளைஞன் படும் கஷ்டங்கங்கள் என சமகால விஷயங்கள் ஊறுகாய் போல தொட்டு கொள்ள காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  காட்டில் நடக்கும் துப்பாக்கிச் சண்டை காட்சிகளைத் தூரத்திலிருந்து படம் பிடிப்பது, ஒரு பெரிய ஊடக நிறுவனத்தில் ஓரிருவர் உட்கார்ந்துகொண்டு தங்கள் இஷ்டத்துக்கு செய்திகளை மாற்றிக் காட்டுவது போன்ற லாஜிக் இல்லாத காட்சிகளும் மிகவும் இழுவையாக காட்டும் கிளைமாக்ஸ் காட்சிகளும் சலிப்பை வரவழைக்கின்றன. முதல் பாகத்தில் இருக்கும் பரபரப்பு, வேகமான காட்சிகளுக்கு இரண்டாம் பாகம் மொத்தமாக ஸ்பீடு பிரேக் போட்டு  சோர்வடைய செய்கிறது. 

செய்தியாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஊடக அறத்தை கொடிப் பிடித்து காட்டுகிறார் விஜய் சேதுபதி. சிறு தவறு செய்துவிட்டு பிரியும் காதலை தொடர தொடர்ந்து முயற்சிப்பது, உண்மைக்காக கோபப்படுவது, ஆற்றாமையால் துடிப்பது என கிடைத்த எல்லா இடங்களிலும் கைத்தட்டலை அள்ளுகிறார் விஜய் சேதுபதி. வழக்கமான பாணியிலிருந்து தலையலங்காரத்தை மாற்றி கவரவும் செய்கிறார். காட்சிக்கேற்ப உடல்மொழியை வெளிப்படுத்துவதில் ஜொலிக்கிறார்.

நாயகி மடோனா செபாஸ்டியன் நிறைவான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். கோபப்படும்போதும், விஜய் சேதுபதிக்கு அறிவுரை சொல்லும்போதும் யதார்த்த நடிப்பைத் தந்திருக்கிறார்.   நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரியத் திரையில் முகம் காட்டியிருக்கும்  டி.ராஜேந்தர் நஷ்டத்தில் இயங்கும் ஊடக முதலாளியாக நடித்திருக்கிறார். வழக்கமான தன்னுடைய பாணியில் எதுகை, மோனையோடு பேசி நடித்திருக்கிறார்.  ஊடக முதலாளி பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார் அக்ஸ்தீப் சைகால். பாண்டியராஜன், ஜெகன், விக்ராந்த், போஸ் வெங்கட், பவர் ஸ்டார் சீனிவாசன், நாசர், தர்ஷனா ராஜேந்திரன், ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா ஆகியோர் பாத்திரத்துக்கேற்ப பொருந்துகிறார்கள்.

'கக்கூஸ் கப்படிச்சா பாலூத்தியா கழுவுறீங்க, அதுக்காக ஆசிட்டை வெச்சு காலைக் கழுவ முடியாது’ போன்ற வசனங்கள் படத்துக்கு வலிமை சேர்க்கின்றன.  தொலைக்காட்சி நிறுவனத்தை அபிநந்தன் ராமானுஜத்தின் கேமரா அழகாக காட்டியிருக்கிறது. ஹிப் ஹாப் தமிழா இசையில், கண்ணம்மா ராக் பாடல் மட்டும் கவர்கிறது.

ஊடக அறத்தை சொல்ல வந்து குறி தப்பி நிற்கிறது ‘கவண்’.

மதிப்பெண்: 2.5 / 5

No comments:

Post a Comment