26/12/2014

பேய்கள் ஜெயிக்கின்றனவா?

அரண்மனை 2...
தமிழ் திரையுலகை பேயும் பிசாசும் பிடித்து ஆட்டுகிறதோ என்னவோ தெரியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் தியேட்டர்களில் பேய்கள் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வந்து வெற்றி பெற்ற 'பீட்சா' படம், பேய் படங்களுக்கும் திகில் படங்களுக்கும் சிவப்புக் கம்பளத்தை விரித்துகொடுத்தது. வெற்றி இயக்குநர்களான சுந்தர்.சி, மிஸ்கின் முதல் புதுமுக இயக்குநர்கள் வரை பலர் திகில் படங்களாக எடுத்து தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள். தொடர்ந்து திகில் படங்கள் ரசிகர்களின் தூக்கத்தைக் கலைக்க வந்தன. ஆனால், இந்த திகில் படங்கள் ரசிகர்களைப் பயமுறுத்தியதா?

 ‘அரண்மனை’, ‘யாமிருக்க பயமே’, ‘ர’, ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’ உள்பட பல பேய் படங்கள் இந்தாண்டு வெளிவந்துள்ளன. இந்த வாரம் ‘பிசாசு’ படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்த ஆண்டும் மட்டும் பேயையும் திகிலையும் இணைத்து கொண்டு டிராவல் செய்த படங்கள் 25 சதவீதம் வந்திருப்பதாகக் திரையுலகில் கூறப்படுகிறது. இவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன.

 இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘மைடியர் லிசா’,  ‘யார்’ போன்ற படங்களை இப்போது பார்த்தாலும் அடிவயிறு கலங்கும். இன்னொருவர் உடலில் ஆவி புகுந்துகொண்டு பழிவாங்கும் கதைகள்தான் இவை. இப்படி பேய் படங்கள் நிறைய வந்திருந்தாலும், இந்தப் படங்களில் அமைக்கப்பட்ட காட்சி அமைப்புகள் சிறந்த திகில் பட அந்தஸ்தை இப்படங்களுக்கு பெற்று கொடுத்தன. இப்போதும் பயமுறுத்தும் பேய் படங்கள் வரவே செய்கின்றன. ஆனால், இப்போது வரும் பேய் படங்கள் ரசிகர்களை கவருகிறதா என்பது பெரும் கேள்விகுறிதான். எல்லாவற்றிலும் வித்தியாசத்தை எதிர்ப்பார்க்கிறார்கள்  ரசிகர்கள்.  இது பேய் படங்களுக்கும் பொருந்தவே செய்கிறது.

தியேட்டரில் பேய் படங்களைப் பார்க்கும்போது, ரசிகர்கள் ஒவ்வொருவரும் இயக்குநர்களாகி அடுத்த காட்சி இப்படித்தான் இருக்கும் என்று சுலபமாகக் கணித்துவிடுகிறார்கள்.  அடுத்தடுத்த காட்சிகளைக் கணிக்க முடியாமல் இருந்தால்தான் அது திகில். அப்படியில்லையென்றால் சலிப்புதான் மிச்சமாகும். இப்போது வந்துகொண்டிருக்கும் பல பேய் மற்றும் திகில் படங்கள் இந்தப் பாணியில்தான் இருக்கின்றன.
யாமிருக்க பயமேன்...

தொடர்ந்து ஒரே மாதிரியான திகில் படங்கள் வந்த வேளையில்தான் இரு ஆண்டுகளுக்கு முன்பு வித்தியாசமாக ‘பீட்சா’ படம் வந்தது. கணிக்க முடியாத அளவுக்கு திரைக்கதையும் கச்சிதமாக இருந்தது. திகிலும் திடீர் திருப்பங்களும் ‘பீட்சா’ படத்தை வெற்றிப் படமாக மாற்றியது. அதன்பிறகு தமிழ் திரையுலகில் பேய் படங்களும், திகில் படங்களும் வந்தவண்ணம் உள்ளன.

இந்த ஆண்டும் அப்படி வந்தப் படங்களில் ‘அரண்மனை’யும்,  ‘யாமிருக்க பயமே’ ஆகிய படங்கள் மட்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. ‘சந்திரமுகி’யில் தொடக்கத்தில் காமெடியை தொட்டுவிட்டு இடையில் பயத்தை லேசாக காட்டிவிட்டு இறுதியில் பயமுறுத்தியிருப்பார்கள். அதே திரைக்கதை பாணிதான் கிட்டத்தட்ட இந்த இரு படங்களிலும் பின்பற்றப்பட்டிருந்தன. அதோடு கிளாமரான ஹீரோயின்களுக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. வழக்கமான பாழடைந்த பங்களா, பழைய அரண்மனை, ஆவி, மர்மக் கொலைகள் என கதை நகர்ந்தாலும், திகிலை காமெடியாக காட்டிய உத்திதான்  இப்படங்களைக் கரைச் சேர்த்தன.

இப்படங்களைத் தவிர்த்து பிரபு யுவராஜ் இயக்கிய  ‘ர’ என்கிற படம் பேண்டசி வகை திகில் படமாக வெளிவந்தது. ஒரு வீட்டின் கதவுதான் இந்தப் படத்தில் பேய். ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’ என்ற படத்தை இயக்கிய புதுமுக இயக்குனர் வீரா, கிரிக்கெட்டிலிருந்து பேய் வருவதுபோல காட்டியிருந்தார். பேய் படங்களில் லாஜிக்குகள் பெரியதாக தேவையில்லையென்றாலும் சொல்லப்படும் விஷயம் கொஞ்சமாவது இயல்பாக இருக்க வேண்டும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். வெறுமனே கொடூர பேய் ஒப்பனை, கொலை செய்யும் பேய், அதை அடக்க மந்திர தந்திரம் என அரைத்த மாவையே அரைத்தால் பேய் படங்கள் எப்படி ஜெயிக்கும்? பல பேய்ப் படங்கள் இந்த ஆண்டு வெளி வந்திருந்தாலும், இந்தப் பேய்
கள் ரசிகர்களை பயமுறுத்தியது மாதிரி தெரியவில்லை.

பேய் படங்களைத் தவிர்த்து க்ரைம் திகில் படங்களாக ‘ நீ நான் நிழல்’, ‘தொட்டால் விடாது’, ‘தெகிடி’, ‘சரபம்’ ஆகிய படங்களும் ரசிர்களுக்கு பயம் காட்ட வந்தன. ஆனால், பீட்சாவின் சாயல் இப்படங்களில் இருந்ததால், பெரிய அளவில ரசிகர்களை கவர முடியவில்லை. பேய் படங்களாக இருந்தாலும், அதிலும் தேவை வித்தியாசமான கதை பிளஸ் திரைக்கதையமைப்பு என்பதைப் புரிந்து கொண்டால் பேய்களும் இங்கே நிச்சயம் ஜெயிக்கும்.

-தி இந்து. 2014

14/12/2014

லிங்கா விமர்சனம்


எந்திரன் படத்துக்கு பிறகு  நான்கு ஆண்டுகள் கழித்து ரஜினி நடித்திருக்கும் படம் லிங்கா. 1990-களில் பெரும் ஹிட் அடித்த முத்து, படையாப்பா ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி கைகோத்திருக்கும் படம். பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்துள்ள லிங்கா  ரசிகர்களுக்கு மடை திறந்த இன்ப வெள்ளத்தைக் கொடுத்திருக்கிறதா, இல்லையா?அந்த ஆர்வத்துக்கு படம் அணை போட்டதா இல்லை கரை உடைத்ததா?

சென்னையில் சில்லறைத் திருட்டுக்களில் ஈடுபடுகிறார் ராஜவம்சத்தின் வாரிசான லிங்கா (ரஜினி). அவரை ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் சிக்க வைத்து சோலையூர் கிராமத்துக்கு அழைத்துவருகிறார் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அனுஷ்கா. அந்த ஊரில் உள்ள அணைக்கு அருகில் அமைந்த கோயிலை இவர் கையால் திறக்க வேண்டும் என்று ஊர்ப் பெரியவர் மன்றாட, காரணம் புரியாமல் லிங்கா குழம்புகிறார். தன் அரண்மனை, சொத்துக்கள் அனைத்தையும் விற்று, வறட்சி, வெள்ளம் இரண்டாலும் பாதிக்கப்படும் சோலையூர் மக்களுக்காக பிரம்மாண்டமான அணை ஒன்றைக் கட்டியவர் லிங்காவின் தாத்தா ராஜா லிங்கேஸ்வரன். இதற்காகப் பெரும் கஷ்டங்களையும் அவமானங்களையும் ஏற்றுக்கொண்ட தியாகி.
தன் தாத்தாவின் அருமை பெருமையை உணர்ந்த லிங்கா, தற்போது ஒரு அரசியல்வாதியின் பேராசையால் அந்த அணைக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதன் பிறகு அணைக்கு வரும் ஆபத்தையும் ஊர் மக்களையும் பேரன் லிங்கேஸ்வரன் எப்படி காக்கிறார் என்பதுதான் மீதி கதை.

தாத்தா - பேரன் கதை. இரண்டையும் ரஜிதான் செய்திருக்கிறார். ஆனால், தத்தாவும் பேரனும் நேரடியாக சந்தித்திக் கொள்ளும் காட்சிகள் கிடையாது. தாத்தா வேடம் ஏற்றிருக்கும் ரஜினியின் கதை  75 ஆண்டுகளுக்கு முன்னால் நகர்கிறது. பேரன் ஏற்றிருக்கும் வேடம் இப்போது நகர்வது போல் அமைத்திருக்கிறார்கள். படத்தில் இரண்டு ரஜினிக்கும் ‘லிங்கேஸ்வரன்’ என்றுதான் பெயர்.

வழக்கம்போல ரஜினி அறிமுக பாடலோடு ஆரம்பிக்கிறது. படம் முழுவதையும் தன் தோளில் போட்டுக் கொண்டு  ரசிகர்களை திருப்தி செய்கிறார். இரண்டு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய ஸ்டைலில் ஜொலிக்கிறார். கம்பீரமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்கிறார். பஞ்ச் வசங்கள் இல்லாமலும், அரசியல் பொடி வசனங்கள் இல்லாமல் இயல்பான வசனங்களையை தனக்கே உரிய இவர் பேசும் வசனங்கள் எல்லாம் திரையில் தீ பறக்கிறது. அந்த சின்ன சின்ன ரியாக்‌ஷன்ஸ் எல்லாம் அருமையாக செய்திருக்கிறார்.நேரடியாக கதைக்குள் நுழைந்துவிட்டு ‘லிங்கா’ ரஜினியை அறிமுகம் செய்கிறார்கள்.  கோச்சடையானில் கேப்சர் மூவ்மெண்டில் ரஜினியைக் காட்டியதால் ஏமாந்து போயிருந்த ரசிகர்களை லிங்கா ஏமாமற்றவில்லை.

இளமைத் துள்ளலோடும் அதே உற்சாக வேகத்துடனேயே ரஜினி வலம் வருகிறார். ஸ்டைலாக சட்டையைத் தூக்கிவிடும்போது ரஜினியின் ஸ்டைல் ஜிலிர் என்று மின்னுகிறது. அறிமுக பாட்டில்  முடிந்ததில் தொடங்கி பேரன் ரஜினி, சந்தானம், கருணாகரனின் காமெடி ரகளைத் தொடங்குகிறது. காமெடி கலாட்டாக்கள் சில இடங்களில் சலிப்புத் தட்டினாலும் ரஜினியால் தப்பிவிடுகிறது. ரஜினியை எப்படியும் சோலையூருக்கு அழைத்துச் செல்வதற்காக அனுஸ்கா அவர் பின்னாலேயே அலைகிறார்.
படத்தின் கதைக்களம் முழுவதும் ஃபிளாஷ்பேக்கில்தான் விரிகிறது. மூன்று மணிநேரப் படத்தில் இவர் வரும் ஃப்ளாஷ்பேக் மட்டும் இரண்டு மணிநேரம் விரிகிறது. ரஜினி என்பது ஒரு மந்திரம் என்றால் அதை எப்படிப் பிரயோகிப்பது என்ற வித்தை தெரிந்தவர்களில் கே.எஸ். ரவிகுமாரும் ஒருவர்.

லிங்கேஸ்வரன் ராஜாவாக ரஜினிதான் கதையைத் தன் தோள்களில் சுமக்கிறார். எல்லாச் சொத்துக்களையும் இழப்பது, எல்லோருக்கும் வாரி வாரி வழங்குவது ஆகியவை ரஜினியின் முந்தைய படங்களில் பார்த்துப் பார்த்துச் சலித்த காட்சிகள். ராஜா ரஜினிக்குக் குடைச்சல் தரும் வெள்ளைக்கார கலெக்டர், அவரது மனைவியின் மிரட்டலால் மனம் மாறுவது மிகப் பழைய ஃபார்முலா. வெள்ளையர்களை விமர்சிக்கும் வேகத்தில் தேசபக்தியைக் காட்டிலும் இன வெறுப்பு தூக்கலாக இருக்கிறது. ரஜினி படத்தில் லாஜிக் பார்ப்பது தவறுதான் என்றாலும், கிளைமாக்ஸின் கோமாளித்தனம் வாய்விட்டுச் சிரிக்கவைக்கிறது. படத்தின் நீளம் சோர்வடைய வைக்கிறது.

அறிமுகக் காட்சியிலேயே கிரிக்கெட் மட்டையை வைத்துக்கொண்டு சண்டையில் சிக்சர் அடிக்கிறார் லிங்கேஸ்வரன் ரஜினி. வெள்ளைக்கார அதிகாரிகளுடன் வாக்குவாதம், மக்களைத் திரட்டி அணை கட்டும் போராட்டம், அனைத்தையும் துறக்கும் தியாகம் என்று ரஜினிக்குச் செமத்தியான தீனி. அமர்த்தலாகவும் நக்கலாகவும் ஆவேசமாகவும் பேசுகிறார். ‘தாத்தா ரஜினி’ ராஜ கம்பீரம் சேர்த்திருக்கிறார் என்றால், பேரன் ரஜினி கலகலப்பின் மொத்தக் குத்தகைத்தாரராக இருக்கிறார்.

இளம் ஹீரோக்களுக்குச் சவால்விடும் அளவுக்கு ரகளை செய்கிறார். சந்தானம் கோஷ்டியுடன் சேர்ந்து அவர் செய்யும் அலப்பறை சில இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் சலிக்கவும் வைக்கின்றன. ‘நண்பேன்...’ என்று சந்தானம் தொடங்கி வைக்க, ரஜினி ‘டா’ என்று முடித்துவைக்கிறார். ஆனால் ரஜினியின் இமேஜுக்கு வலு சேர்க்கும் பஞ்ச்களுக்குப் பஞ்சமில்லை.

ரஜினிக்கு அடுத்தபடியாக ஒளிப்பதிவாளர் ரத்னவேலு படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். குறிப்பாக அணை கட்டும் காட்சிகள், வெள்ளத்தை அணை தாக்குப்பிடிக்கும் காட்சி ஆகியவை அற்புதம். கிராஃபிக்ஸ் காட்சிகள் ஏமாற்று கின்றன. தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களில் கூடத் தரமான கிராஃபிக்ஸைத் தர முடியாதா என்ற ஏக்கம் ஏற்படுகிறது. ரஹ்மானின் இசையில் பின்னணி இசை கவர்கிற அளவுக்குப் பாடல்கள் கவரவில்லை. ‘சோனாக்‌ஷிக்கு நடிக்க அதிக வாய்ப்பு. அதை அவர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

படம் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த மாமனிதனை டைட்டிலில் கவுரவப்படுத்தியிருந்தால் பெருமையாகவும் பொருத்தமாகவும் இருந்திருக்குமே. ரஜினி மந்திரத்தைச் சரியாகப் பிரயோகித்திருக்கும் ரவிகுமார் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மதிப்பெண்: 2.5 / 5

12/12/2014

மீண்டும் வருவாரா அந்த ரஜினி?

முள்ளும் மலரும்
ரஜினியின் மிகச் சிறந்த படம் எது? அவருடைய ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும் இந்தக் கேள்வி கடினமாகத் தோன்றலாம். ஆனால், சினிமாவைச் சினிமாவாக மட்டுமே பார்க்கும் யதார்த்தமானவர்கள் பட்டெனச் சொல்லும் முதல் படம் ‘முள்ளும் மலரும்’. தமிழில் ‘பாசமலர்’ பாணியில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், அந்தப் பாணியில் பதிவு செய்யப்பட்ட படங்களுள் இதுவும் ஒன்று. காளி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பில் கலக்கியிருப்பார் ரஜினி. கோபம், இயலாமை, வெறுப்பு, பாசம் என யதார்த்தமான நடிப்பில் பல இடங்களில் ஸ்கோர் செய்திருப்பார் ரஜினி. ‘இந்தக் காளி கெட்ட பய சார்’ எனப் பஞ்ச் வசனங்கள் இல்லாத காலகட்டத்திலேயே இயல்பாகப் பேசி நடித்திருப்பார்.

இளமை ஊஞ்சலாடுகிறது
வில்லத்தனமான கதாபாத்திரங்களில் இருந்து விடுபட்டு அடுத்தகட்டக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது வெளியான ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படமும் ரஜினியின் நடிப்புத் திறனை வெளிப்படுத்திய படம்தான். இந்தப் படத்தில் ரஜினியின் ஸ்டைல் காட்சிகள் ஆங்காங்கே வெளிப்பட்டாலும், தன் நண்பன் செய்த தவறைப் பொறுக்க முடியாமலும், அதற்குத் தீர்வு காண முடியாமல் தவிக்கும் காட்சியிலும் கமலுக்கு இணையாக இயல்பாகத் தன்னை வெளிப்படுத்தியிருப்பார் ரஜினி. ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற சோகம் ததும்பிய படங்களிலும், ‘ராகவேந்திரா’ போன்ற சாந்த சொரூபி படங்களிலும் ரஜினி நடித்திருக்கிறார் என்பதெல்லாம் இந்தத் தலைமுறையினருக்கு ஆச்சரியமான விஷயமாகவே இருக்கும்.

இதுபோன்ற சில படங்கள் அவர் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் அளவுக்கு வந்திருந்தாலும், அதிரடி ஆக் ஷன் ஹீரோவாகவும், மாஸ் ஹீரோவாகவும், டான் போன்ற கதாபாத்திரங்களிலும் வந்த படங்கள் அவரது இயல்பான நடிப்புத் திறமையை மங்கச் செய்தன. ஸ்டைல் மன்னன், மாஸ் ஹீரோ என்ற இமேஜுக்கு ஏற்ப அவரது ஸ்டைல்களும், அதிரடிக் காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் அவரது படங்களை ஆக்கிரமித்தன.
இதுபோன்ற ஸ்டைல்களையும் அதிரடிக் காட்சிகளையும் ரஜினியும் அவரது ரசிகர்களும் விரும்பினார்களோ இல்லையோ, பட முதலாளிகளும், இயக்குனர்களும் விரும்பியதன் விளைவு, இயல்பான நடிப்பில் இருந்து தடம் மாறிப் பயணிக்க வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது. இடைப்பட்ட காலத்தில் எந்த இடத்திலும் ரஜினி மாஸ் ஹீரோ என்ற இமேஜிலிருந்து வெளி வர முடியாமல் போனதற்கு இதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.

முள்ளும் மலரும்
அடுத்து வரப்போகும் ரஜினியின் படங்களில்  மாஸ் ஹீரோ முத்திரை மாறாமலேயே ரஜினியின் கதாபாத்திரம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒருகாலத்தில் ஒரே ஆண்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஆண்டுக்கு ஒரு படம் என்ற அளவுக்குச் சுருங்கியபோது, அவரது பட அறிவிப்பே தலைப்புச் செய்தியாக மாறியது. எப்போதாவது ரஜினி படம் வெளிவரும் இன்றைய நிலையில் இனி ‘முள்ளும் மலரும்’ போன்ற இயல்பான கதாபாத்திரங்களில் நடித்த ரஜினியைக் காணவே முடியாதா? அதுவும், தற்போது வயதாகி விட்ட நிலையிலும், அவரது உடல்நிலை முன்பு போல ஒத்துழைக்க மறுக்கும் சூழ்நிலையிலும் ரஜினியை இயல்பான நடிப்பில் காண ஒரு கூட்டம் இப்போதும் காத்திருக்கிறது. அதைக் காணத் தமிழ் ரசிகர்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா?

ரஜினி நடித்த சமகாலத்தில் இந்திப் பட உலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கி இப்போது ஹாலிவுட் அளவுக்கு உயர்ந்து விட்ட அவரது நண்பர் அமிதாப்பச்சன் ‘பா’, ‘சர்க்கார்’, ‘சீனிகம்’, ‘நிசப்த்’ போன்ற நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ச்சியாக நடிக்க முடிகிறது. 1980களில் அமிதாப் படங்களின் பல ரீமேக் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற ரஜினியாலும் இதுபோன்ற படங்களில் நிச்சயம் நடிக்க முடியும். அந்த நாளைக் காண அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழ் கூறு நல்லுலகமும் காத்திருக்கிறது.

(ரஜினியின் பிறந்த நாளையொட்டி 2014-ல் எழுதியது)

05/11/2014

வாசன் - கரை சேருமா கப்பல்?

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் இருந்து வெளியேறி, தனிக்கட்சி தொடங்கி, ஆட்சியைப் பிடித்தவர் என்றால், அது எம்.ஜி.ஆர். மட்டுமே. அதன்பிறகு எத்தனையோ கட்சிகள் பிளவு கண்டுள்ளன. கட்சியில் இருந்து வெளியேறிவர்களால் தங்களை தனி வெற்றியாளராக ஒருபோதும் அடையாளம் காட்டிக் கொள்ள முடிந்ததில்லை.  யாருடனாவது கூட்டணி அமைத்தே தங்களின் இருப்பை வெளிப்படுத்த முடிந்திருக்கிறது. இதோ, ஜி.கே.வாசன் இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியிருக்கிறார்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, வாக்கு வங்கியைத் தொலைத்து கொண்டிருக்கிற கட்சியாக உள்ளது தமிழக காங்கிரஸ். இந்த நேரத்தில் அங்கிருந்து வெளியேறியுள்ள ஜி.கே.வாசன் கரை சேருவாரா?

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சி என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். எப்போது? 15 ஆண்டுகளுக்கு முன்பு. இரு திராவிடக் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தால், அது வெற்றிக் கூட்டணியாகவே இருந்தது. ஒரு சில தோல்விகள் தவிர. ஏனென்றால், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அப்படி . 1989-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஜி.கே. மூப்பனார் தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அப்போது 26 தொகுதிகளில் வெற்றியோடு 19.83 சதவீத வாக்குகளைப் பெற்றது காங்கிரஸ்.

 அதன்பிறகு காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது 1998 நாடாளுமன்றத் தேர்தலில்தான். இந்தத் தேர்தலின்போதும் தமிழக காங்கிரஸ் பிளவுட்டிருந்த நேரம்தான். ஜி.கே.மூப்பனார் தலைமையில் தமிழ் மா நில காங்கிரஸ் (தமாகா) திமுகவுடன் கூட்டணி அமைந்திருந்த காலகட்டம். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற ஓட்டு 5 சதவீதம். 1999-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணிக்குச் சென்றுவிட்டது. திமுக கூட்டணியில் இருந்த தமாகா தனித்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் தமாகா பெற்ற வாக்குகள் வாக்குகள் 10.6 சதவீதம். ஆக, 1998-ல் காங்கிரஸ் கட்சி தனித்தும், 1999-ல் தமாகா தனித்தும் பெற்ற மொத்த வாக்குகளைக் கூட்டினால் 15.6 சதவீதம் வரும். 15 ஆண்டுகளுக்கு முன்புகூட 15 சதவீத வாக்கு வங்கி வைத்திருந்த கட்சி காங்கிரஸ்.

இப்போது காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி என்ன? 4.3 சதவீதம். 2014-ம்  ஆண்டு நடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பெற்ற வாக்குகள். அதாவது, காங்கிரஸ், தமாகா இரண்டும் ஒன்றாக இருந்து பெற்ற வாக்குகள். 15 ஆண்டுகளுக்குள்   சுமார் 11 சதவீத வாக்குகளைத் தொலைத்திருக்கிறது இக்கட்சி. இதில் பழைய தமாகாவின் வாக்கு எவ்வளவு? திமுகவும் அதிமுகவும் பின்னடைவைச் சந்திந்த வேளையில்கூட 20 சதவீதத்துக்கும் மேலேயே அவற்றின் வாக்கு சதவீதம் இருந்திருக்கின்றன. காங்கிரஸ் போல் ஒரேடியாக இக்கட்சிகள் வாக்குகளைத் தொலைக்கவில்லை.

மூப்பனார் தமாகா தொடங்கியபோது பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் அவருடன் வந்தனர். தமிழ் மாநில காங்கிரஸ்தான் தமிழகத்தின் உண்மையான காங்கிரஸ் போல செயல்பட்டது. ஆனால், இப்போது வாசன் கோஷ்டி, தனியாக பிரிந்து தனி கட்சி கண்டிருக்கிறது, அவ்வளவுதான். ப. சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி, கிருஷ்ணசாமி கோஷ்டி என பல கோஷ்டிகள் காங்கிரஸ் கட்சியிலேயேதான் இருக்கின்றன.  இப்போது தனது பலத்தை நிரூபிக்க ஜி.கே.வாசனுக்கு உடனடி தேர்தல் எதுவும் இல்லை. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் எப்படி நடக்கும் என்பதைபற்றி சொல்லத் தேவையும் இல்லை. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் கட்சியை எப்படி வளர்த்தெடுக்கப் போகிறார் வாசன்? வாக்கு வங்கியை எப்படி உயர்த்தப் போகிறார்?

“தமிழகத்தில் இளைஞர்கள் ஒரு புதிய விடியலை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். புதிய அரசியல் கலாசாரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம்” என்று கூறுகிறார் ஜி.கே.வாசன். காங்கிரஸ் கட்சியில் எல்லா கோஷ்டிகளும் ஒன்றாக இருந்தபோதே, இளைஞர்களின் வாக்குகளைக் கவர வாசன் உள்ளிட்டவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

ஈழ விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்களில் இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடாமல் புறக்கணித்தார்களே, அவர்களை வாசன் தங்களுக்கு ஆதரவாக எப்படி மாற்றப் போகிறார்? பரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையினர்கூட இப்போது அக்கட்சிக்கு வாக்களிப்பதில்லையே, இதை எப்படி கையாளப்போகிறார் வாசன்? இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் கட்சியைப் பலப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்கலாம். கிராம்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம். இளைஞர்களைக் கவர புது உத்திகளை கையாளலாம். திமுக, தேமுதிக அல்லது அதிமுகவோடு கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்து அடி எடுத்து
வைக்கலாம். ஆனால், ஒன்றை நினைவில் கொள்வது நல்லது.

 1996-ம் ஆண்டில் ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியபோது இருந்த சூழல் வேறு. கட்சித் தொடங்கிய உடனே நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை மற்றும்  நாடாளுமன்றத் தேர்தலில்  திமுகவுடன் கூட்டணி, ரஜினியின் ஆதரவு வாய்ஸ், அதிமுகவுக்கு எதிராக வீசிய பேரலை என தமாகவுக்கு வெற்றி வீடு தேடி வந்தது. அன்றைய அரசியல் சூழலில் திடீர் குழந்தையாகப் பிறந்த தமாகவை தமிழக வாக்காளர்கள் தொட்டிலில் போட்டு தாலாட்டினார்கள்.

ஆனால், இன்று நிலைமையே வேறு. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே மூழ்கிக் கொண்டிருக்கிறது. அதில் இருந்து பிரிந்து வந்த வாசன் எப்படி கரையேரப் போகிறார்? தனது ஆதரவாளர்களை எப்படிக் கரைச் சேர்க்க போகிறார்? அவர் வெற்றிவாகைச் சூடும்வரை இதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வியாக இருப்பதை தவிர்க்க முடியாது.

- 05/11/2014

26/09/2014

மக்களுக்கு என்றுமே ‘அட்டகத்தி’தான்!

ஐந்து படங்களைத் தாண்டிவிட்டாலும் மக்களுக்கு இன்னும் ‘அட்டகத்தி’ தினேஷ்தான். அந்த அளவுக்கு அந்தப் படத்தின் கதாபாத்திரத்தில் அழுத்தமாகப் பொருந்தி, யதார்த்த மான நடிப்பைத் தந்தவர் தினேஷ்.
‘குக்கூ’வில் பார்வையற்ற இளைஞராகக் கலங்கவைத்த இவர், தற்போது நடித்து முடித்திருக்கும் படம் ‘திருடன் போலீஸ்’. நண்பர்களுடன் ஜாலி அரட்டையில் ஈடுபட்டிருந்தவரை அவரது இல்லத்தில் சந்தித்தோம்…


தனுஷின் நட்பு வட்டம் எப்படிச் சாத்தியமாச்சு?

சக திறமையாளர்களைச் சட்டுன்னு அங்கீகரிக்கிற மனுஷன் அவர். சிவகார்த்திகேயனை வைச்சு எதிர்நீச்சல் பண்ணாரு. இப்போ விஜய் சேதுபதி - நயன்தாராவை வைச்சு பண்றாரு. என்னை வைச்சு விசாரணை பண்றார். எல்லாரையும் புரோமோட் பண்ற மனசு ரொம்ப சவாலான குணம், அது தனுஷ்கிட்ட இருக்கு.

திருடன் போலீஸ் என்ன கதை?

இது ரொம்ப எமோஷனல் கதை. இந்தப் படம் அப்பாக்களுக்கான படமாக இருக்கும். இருக்குறப்ப தொல்லையா நினைக்கிற உறவுகளை இறந்த பிறகு தெய்வம்னு பேசுறோம். அதான் படமே. சிரிச்சு சிரிச்சு வயிறு வெடிக்கப் பெரிய ஏரியா இருக்கு. அதனால் இதைத் துள்ளல் படம்னு சொல்லனும்.

ஹீரோவா நடித்துக்கொண்டே நட்புக்காகவும் பல படங்கள்ல தலை காட்டுறீங்களே, உங்கள் இமேஜைப் பாதிக்காதா?

கண்டிப்பா பாதிக்காது. எதிர்நீச்சல் படத்தில் ‘அட்டகத்தி’ படத்தோட ஃபாலோ மாதிரிக் கடைசியில் ஒரு சீன் வைச்சாங்க. நான் எதிர்பார்க்காத அளவுக்கு அந்தக் காட்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைச்சது. இதுக்கு இயக்குநரின் புத்திசாலித்தனம்தான் காரணம். விஜய் சேதுபதிக்காகப் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடிச்சேன்.
இப்போ என்னோட ‘திருடன் போலீஸ்’ படத்தில் விஜய் சேதுபதி ஒரு பாட்டு பண்ணியிருக்கிறார். ஜீவா, ஆர்யா மாறிமாறி மத்தவங்க படங்களில் நடிச்சாங்க. இப்போ பீல்டில் பிஸ்னஸ்தான் முக்கியம். இது மார்க்கெட்டிங் உத்தின்னு நீங்க எடுத்துக்கிட்டாலும் அதுவும் சரிதான்.

ரெண்டு படம் ஹிட் கொடுத்தாச்சு... அடுத்து ஆக்‌ஷன் அவதார்தானே வழக்கமா இருக்கும்?

குக்கூ ரொம்ப கனமான படம். அதனால ரெண்டு படம் தள்ளி ஆக்‌ஷனைக் கையில எடுக்கிறதுன்னு முடிவு. நினைச்ச மாதிரியே ‘உள்குத்து’ வந்து சிக்கிடுச்சு. அது அதிரடி ஆக்‌ஷன் படம்தான். திருடன் போலீஸ் படத்துலயும் ஆக்‌ஷன் இருக்கு. ஆனா அது கதையோட சேர்ந்த ஆக்‌ஷன். எனக்குத் தகுந்த மாதிரி ஸ்டண்ட் மாஸ்டர் ஆக்‌ஷன் வச்சுருக்காரு.

அறிமுகப் படம் ஹிட்டடிச்சா உடனே ரசிகர் மன்றங்கள் வந்துடும். உங்களுக்கு வந்தாச்சா?

அய்யோ, மாட்டிவிடாதீங்க. ரசிகர் மன்றங்களை என்னால மேனேஜ் பண்ண முடியாது. கடலூரில் சில பேர் பேனர் வைச்சு, மாலை போட்டு, அதை போட்டோ எடுத்து அனுப்பினாங்க. ஆனால், எனக்கு அதில் விருப்பம் இல்லை. என்னைப் பொறுத்தவரை என் படங்களை ரசிகர்கள் வந்து பார்த்தாலே போதும். அவங்களோட அன்பு போதும். ஒரு கூட்டத்தைத் தோளில் சுமக்குறது என்னால முடியாது. ஷூட்டிங் முடிஞ்சா எப்போ வீட்டுக்குப் போகலாம்னு நினைக்கிற ஆளு நான்.

உங்களுக்குக் கிடைச்ச பொக்கிஷப் பாராட்டு?

எதேச்சையாக ஒருமுறை கவுண்டமணியைப் பார்த்தபோ ‘ஏய், அட்ட, என்னப்பா?’ன்னு கேட்டாரு. எனக்கு ரொம்ப வியப்பா போச்சு. குக்கூ படத்துல கண்ணு வலிக்காம எப்படி நடிச்சேன்னு கேட்டாரு. அவரு அப்டேட்டா இருக்குறதைப் பார்த்து ஆடிப்போயிட்டேன்.

யார் கூடச் சேர்ந்து நடிக்க ஆசை?

ரஜினியோட நடிக்கணும்னு ஆசை இருக்கு. அவருகூட எந்த ரோல் கிடைச்சாலும் நடிக்க நான் ரெடி. (‘கபாலி’ படத்தில் தினேஷ் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது).

- தி இந்து,  26/9/14

07/09/2014

அமரகாவியம் விமர்சனம்


நடிகர் ஆர்யாவின் சொந்தப் படம், ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோ என எதிர்பார்ப்புகளுடனும்,  படத்தின் கிளைமாக்ஸைப் பார்த்து நடிகை நயன்தாரா கண்ணீர் என இலவச விளம்பரத்துடனும் வந்திருக்கும் படம் அமரகாவியம். இந்த எதிர்பார்ப்பை அமரகாவியம் பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை தியேட்டரில் ரசிகர்களின் ரெஸ்பான்ஸே சொல்லிவிடுகிறது.

 நாம் பார்த்துப் பார்த்து அழுத்துப் போன விடலைப் பருவத்து காதல்தான் கதையின் கரு. கைதியாக போலீஸ் வேனில்தான்  கதையின்  நாயகன் சத்யா அறிமுகமாகிறார். அங்கிருந்து ஃப்ளாஷ்பேக் விரிகிறது. 

 சத்யாவும்,  நாயகி மியா ஜார்ஜும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள்.  சத்யாவின் நண்பன் மியாவை காதலிக்கிறார். நண்பனின் காதலுக்கு தூது போகிறார் சத்யா. அங்கு சத்யாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.  “நான் உன்னை காதலிக்கிறேன்” என்று சத்யாவைப் பார்த்து மியா சொல்கிறார்.  நண்பனா, காதலியா என குழப்பத்துக்கு இடையே காதலை ஏற்கிறார் சத்யா. காதல் பறவைகளின் பயணத்தில் ஒரு திடீர் திருப்பம் ஏற்படுகிறது. அதன்பிறகு ஏற்படும் குழப்பங்கள், முட்டல்கள், மோதல்கள், பிரச்சினைகள்தான்  மீதிக் கதை.

 முதல்பாதி படம் பார்க்க கொஞ்சம் பொறுமை தேவை. படத்தின் கடைசியில் வரும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்துக்காக இரண்டரை மணி நேரத்தை  இழுஇழுவென இழுத்திருக்கிறார் இயக்குநர்.  விடலைப் பருவத்து காதலை இவ்வளவு வலிந்து சொல்லியிருக்கத் தேவையில்லை. படத்தில் காதலர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் எல்லாம் இடைச்சொருகல்களாகவே உள்ளன.

நாயகியின் அப்பா  நாயகனை அடிக்கிறார். அதற்காக அவரது வீட்டுக்கு தீ வைத்து விட்டு, அதேவீட்டின் இன்னொரு அறையில்  நாயகனும்  நாயகியும் உருகி மருகுவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. இப்படி சில காட்சிகள் யாதார்த்தத்தை மீறியே உள்ளன.

கடிதங்கள் மூலம் காதல் வளர்க்கும் காலமான 1988-89- களில் நடப்பது போல் காட்சிகள் காட்டப்படுகின்றன. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முந்தைய ரசனை, மேக்கப், உடையலங்காரம் படத்தில் மிஸ்ஸிங். படத்தில்  ஹீரோ சத்யா நன்றாக நடித்திருக்கிறார். மிகத் தீவிரமாக ஒன்றை விரும்பும் ஒருவன் என்னென்ன செய்வானோ, அதையெல்லாம் அவர் செய்கிறார். அதற்காக எப்போதும் ஒரே இறுக்கத்துடன் முகத்தைக் காட்டியிருப்பதை தவிர்க்கலாம். ஆர்யாவின் பாதிப்பு சத்யாவின் நடிப்பில் தெரிந்தாலும், இந்தப் படம் அவருக்கு ஒரு ஏற்றத்தைத்தரும் என்று நம்பலாம்.

கதாநாயகி மியா அழகாக மட்டுமில்லை. நன்றாக நடிக்கவும் செய்கிறார். மூக்குத்தியை மறந்துவரும் இந்தக் காலத்து இளம் பெண்களுக்கு மூக்குத்தி எவ்வளவு அழகு என்பதை காட்சிக்கு காட்சி அவரது முகத்தைக் காட்டும்போதே தெரிகிறது. தமிழ் திரையுலகிற்கு நல்வரவாக அவர் இருப்பார் என எதிர்பார்க்கலாம்.  ‘மைனா’,  ‘கும்கி’ போன்ற காதல் படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்த தம்பி ராமையாவை ஊறுகாய் போல இயக்குநர் பயன்படுத்திருயிருக்கிறார்.

படத்திற்கு இசை ஜிப்ரான். பின்னணி இசை படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. இயக்கத்திலும், இழுவையான திரைக்கதையிலும் குறைகள் இருந்தாலும் ஒளிப்பதிவில் ஜீவா சங்கர் ஸ்கோர் செய்திருக்கிறார்.

 ‘காவியம்’ என்ற பெயரையும் தாங்கி வந்திருப்பதால், நாயகனும், நாயகியும் துன்பியல் முடிவைத் தேடிக் கொள்வதை மட்டும் ஏமாற்றாமல் தந்திருக்கிறது  ‘அமரகாவியம்’.

மதிப்பெண்: 2 / 5

13/08/2014

உலகின் அதிசயத் தீவு: டிராகன் மரங்கள்

உலகில் எத்தனையோ அதிசயங்களும் விநோதங்களும் மர்மங்களும் ஏராளமாக இருக்கின்றன. இப்படி விநோதங்களும் மர்மங்களும் கொண்ட ஒரு தீவு உலகில் இருக்கிறது. இந்தத் தீவில் எங்கு பார்த்தாலும் அதிசயம் கொட்டிகிடக்கிறது. பார்க்கின்ற அனைத்துமே இதற்கு முன்பு நாம் பார்க்காதவை. இந்தத் தீவில் காணப்படும் பொருட்கள் எல்லாம் வேறு எங்கும் காணப்படாதவை. இப்படி அதிசயத் தீவாகப் பார்க்கப்படும் அதன் பெயர் சோகோட்ரா.
இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்கக் கடற்கரை கொம்பு முனைக்கும் அரேபியத் தீபகற்பத்திற்கும் தெற்கே 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நான்கு தீவுகள் அடங்கிய அந்தச் சிறு தீவுக் கூட்டம். 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்துடன் இணைந்திருந்த இத்தீவு, நாளடைவில் ஏற்பட்ட புவியியல் மாற்றம் காரணமாகத் தனித் தீவுக் கூட்டமானது.
கரடுமுரடான பாலைவனம் போல் உள்ளது இந்தத் தீவு. திட்டு திட்டாகக் காடு, பிரம்மாண்டப் பாறைகள், வித்தியாசமான மரங்கள், விலங்குகள், அழகான கடற்கரை, குகைகள் என இயற்கைக்கு வாக்கப்பட்ட பூமி இது. இங்குக் கடல் மட்டத்திலிருந்து 1525 மீட்டர் உயரத்தில் மலைகள் உள்ளன. இங்கு வளரும் மரங்கள், பல்லுயிர் தாவரங்களை உலகில் வேறு எங்குமே காண முடியாது. வேற்றுக் கிரகச் சூழல் நிலவும் பகுதி இது என விஞ்ஞானிகள் அழைக்கும் இந்தச் சோகோட்ரா தீவு, ஏமன் நாட்டின் ஆளுகையின் கீழ் உள்ளது.
இத்தீவில் 800-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன. இதில் 240 தாவர வகைகள் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. குடை போன்ற மரங்கள், பாலைவனத்தில் மட்டுமே காணப்படும் பூக்கள், பாறைகளைப் பொத்துக் கொண்டு வளரும் மரங்கள், மரங்களின் கீழ்ப்பகுதி குண்டாகவும் மேல்பகுதி சூம்பிப் போன விரல்கள் போலவும் காணப்படும் மரங்களின் கிளைகள் என எல்லாமே இங்கு வித்தியாசம்தான்.
டிராகன் மரங்கள் எனப் பெயரிடப்பட்ட மரங்கள் நிறைய உள்ளன. மரத்தில் எங்கேயாவது கீறல் ஏற்பட்டல் சிவப்பு வண்ணத்தில் திரவம் வரும். ரத்தம் உறிஞ்சும் டிராகனை நினைவுபடுத்தும் விதமாக இந்த மரங்களுக்கு டிராகன் மரம் எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இயற்கை வளம் எந்த அளவுக்கு இங்கே கொட்டிக் கிடக்கிறதோ, அதே அளவுக்குப் புதிர்களும் நிறைந் திருக்கின்றன இத்தீவில். எனவே 2008-ம் ஆண்டில் இத்தீவுகளைப் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ.
இங்கு வளரும் தாவரங்கள் பற்றி முழுமையாக அறிய, தொடர்ந்து ஆய்வுகள் செய்து வருகின்றனர் விஞ்ஞானிகள். இந்த அதிசயத் தீவில் சுமார் 40 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
- இந்து தமிழ், 13/08/2014

26/05/2014

ஆனந்திபென் பட்டேல்: ஆசிரியர் பணியில் இருந்து முதல்வர் பதவிக்கு



மாநிலத்தில் ஒரே சமயத்தில் ஆளுநராக ஒரு பெண்ணும், முதல்வராக ஒரு பெண்ணும் இருக்கும் சம்பவங்கள் எப்போதாவதுதான் அரங்கேறும். இப்போது அது குஜராத்தில் நடந்திருக்கிறது. குஜராத்தின் முதல் பெண் முதல்வராக ஆனந்திபென் பட்டேல் பொறுப்பேற்றதன் மூலம் அது சாத்தியமாகியிருக்கிறது. பார்ப்பதற்கு சாது போல இருக்கும் ஆனந்திபென், செயலில் புலிப் பாய்ச்சல் காட்டக்கூடியவர். ஆண்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கும் அரசியலில் இவர் தனி அடையாளத்துடனேயே செயல்பட்டது இவரது தனிச்சிறப்பு. இதற்கு இரண்டு சம்பவங்களை உதாரணமாகக் கூறலாம்.

ஆண்கள் பள்ளியின் ஒரே மாணவி

குஜராத்தில் மேஷ்னா மாவட்டத்தில் உள்ள கரோட் கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஆனந்திபென். படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆனால், இவர் வசித்து வந்த மாவட்டத்தில் பெண்கள் படிப்பதற்கென்று தனிப் பள்ளிக்கூடம் இல்லை. அப்போது அந்த மாவட்டத்தில் ஒரே ஒரு ஆண்கள் பள்ளிக்கூடம் மட்டுமே இருந்தது.

அந்தப் பள்ளியில் சேர்த்துவிடுங்கள் என்று ஆனந்திபென் பட்டேல் வீட்டில் அடம் பிடித்தார். பெற்றோர் விரும்பவில்லைதான். ஆனாலும், மகளின் ஆசையை நிறைவேற்றினர். 700 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த அந்தப் பள்ளியில் ஒரே மாணவியாகக் ஆனந்திபென் பட்டேல் கல்வி பயின்றார். 4-ம் நிலை வரை அந்தப் பள்ளியில் படித்த பிறகு அடுத்தடுத்த மேற்கல்வியை வெவ்வேறு ஊர்களில் படித்தார். பிறகு ஒரு பள்ளியின் முதல்வராக உயர்ந்தார்.

பேரணி பெண்

1992-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ராமஜென்ம பூமியை மையமாக வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தது. அந்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று ‘தேசிய ஒற்றுமை பேரணி’யைப் பாரதிய ஜனதா நடத்தியது. பல மாநிலங்கள் வழியாகச் சென்று முடிவில் காஷ்மீரில் உள்ள நகரில் தேசியக்கொடியை ஏற்றுவதுதான் திட்டம். இதற்காக நாடு முழுவதும் 1,500 பாரதிய ஜனதா தொண்டர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இதில் ஒரே பெண்ணாக ஆனந்திபென் பட்டேலும் இடம் பிடித்தார்.

மிகுந்த பதற்றத்திற்குரிய பேரணி, பிரச்சினைகள் வரலாம் என்று தெரிந்தும் இந்தப் பேரணியில் ஒரே பெண்ணாக தைரியமாகக் களம் இறங்கினார் ஆனந்தி. இந்தப் பேரணியில் ஒரே பெண்ணாக இவர் பங்கேற்றதன் மூலம் தேசியத் தலைவர்களுடன் நல்ல அறி முகம் கிடைத்தது. இது அரசியலில் இவர் அடுத்த நிலைக்குச் செல்லவும் வழிவகுத்தது.

துணிவு, தைரியத்துடன் செயல்பட்டால் நல்ல நிலைக்குச் செல்லலாம் என்பதற்கு குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் நல்ல உதாரணம்.

20/05/2014

யார் இந்த அமித் ஷா?


















உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா வென்ற தொகுதிகளில் பாதிக்கும் கொஞ்சம் அதிகமான தொகுதிகளில்தான் தேசிய அளவில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு என்ன காரணம்? நரேந்திர மோடி அலை என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால், அந்த அலையை உத்தரப் பிரதேசத்தில் பேரலையாக மாற்றிக் காட்டியவர் அமித் ஷா.
ஆமாம், நரேந்திர மோடியின் வலதுகரம், குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர், ஷோரப்தீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர், மோடிக்காக இளம் பெண் வேவுபார்க்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர் என பல சர்ச்சைகளுக்கு ஆளான அமித் ஷாதான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரம்மாண்ட வெற்றிக்கு வித்திட்டிருக்கிறார். யார் இந்த அமித் ஷா? குஜராத்திலும், உத்தரப் பிரதேசத்திலும் இவர் சாதித்தது என்ன?
நதிமூலம்
பெரிய தொழில்குடும்பத்திலிருந்து வந்தவர்தான் இந்த அமித் ஷா. இவரும் ஒரு தொழிலதிபர்தான். ஆர்.எஸ்.எஸ். இயக்கம், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் இயக்கங்களில் ஈடுபட்டுப் பின்னர் பா.ஜ.க-வில் சேர்ந்தவர். 1985-ம் ஆண்டில் பா.ஜ.க-வில் நரேந்திர மோடி களமிறங்கிய பிறகு அவருக்குக் கீழ் இளைஞரணிப் பிரிவில் பணியாற்றியவர். 1991-ம் ஆண்டில் தொடங்கி குஜராத்தில் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அத்வானிக்காகத் தேர்தல் பொறுப்பாளராக அமித் ஷா பலமுறை பணியாற்றியிருக்கிறார். இதன்மூலம் அத்வானியுடன் அமித் ஷாவுக்கு நல்ல அறிமுகம் உண்டு. இப்படித்தான் நரேந்திர மோடியுடனும் நெருக்கம் ஏற்பட்டது.
ஆட்சியில் முக்கியத்துவம்
2002-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றவுடன் அமைச்சரவையில் அமித் ஷாவுக்கு இடம் கிடைத்தது. அமைச்சரவையில் இளையவரான அமித் ஷாவுக்கு உள்துறை உள்பட 10 துறைகள் வழங்கப்பட்டன, பலரது புருவங்களை உயர்த்தின. நரேந்திர மோடியின் வலதுகரமாக மாற இது ஒரு கருவியாக இருந்தது. 2007-ம் ஆண்டில் மீண்டும் நரேந்திர மோடி குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றபோதும் அமைச்சரவையில் அமித் ஷாவுக்கு முக்கியத்துவம் கிடைத்தது.
குஜராத்திலிருந்து உ.பி-க்கு…
இந்தக் காலகட்டத்தில் அவர் பதவியில் இருந்தபோதுதான் சோரப்தீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில் சிக்கினார். 2005-ம் ஆண்டில் நடந்த சோரப்தீன் ஷேக் கொலை வழக்கு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி சி.பி.ஐ. விசாரணைக்கு மாறியது. இதன்பிறகே என்கவுன்ட்டரில் அமித் ஷா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் பங்கு தெரியவந்தது. 2009-ம் ஆண்டில் நரேந்திர மோடியின் உத்தரவின்படி இளம் பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் அமித் ஷா தலையும் உருண்டது இந்தக் காலக்கட்டத்தில்தான். போலி என்கவுன்ட்டர் வழக்கின் ஒரு பகுதியாகவே கடந்த ஆண்டு குஜராத்தை விட்டு வெளியேறுமாறு அமித் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுவே, நரேந்திர மோடிக்கு வசதியாகப் போனது. சரியாக ஓராண்டுக்கு முன்னர் பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்ட பிறகு, அமித் ஷாவை உத்தரப் பிரதேசத்தில் போய்த் தங்குமாறு உத்தரவிட்டார். அதோடு, உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். சாதி அரசியல் ஆதிக்கம் உள்ள உத்தரப் பிரதேசத்தில் பிராமணர்கள், தலித்துகள் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதே அமித் ஷாவுக்கு மோடி கொடுத்த பணி. கடந்த ஓராண்டு காலமாக அங்கு தங்கி, கிராமங்கள்தோறும் சென்று பா.ஜ.க. தொண்டர்களை உசுப்பிவிட்டார். உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட வேண்டும் என்று ஆலோசனை வழங்கி, அதைச் செய்தும் காட்டினர் அமித் ஷா. மோடி போட்டியின் மூலம் உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாசம் அடைந்ததோடு புலிப் பாய்ச்சல் பிரச்சாரத்தில் ஈடுபட இந்த உத்தி அமித் ஷாவுக்கு உதவியது.
வெறுப்பு வித்தை
அயோத்தி பிரச்சினையைத் தூசுதட்டி, ராமர் படத்துடன் கூடிய பிரச்சாரத்தையும் இந்தத் தேர்தலில் அமித் ஷா முன்னெடுத்தார். இடையே முசாபர்நகர் கலவரத்துக்குப் பழிவாங்க வேண்டும் என்று வெறுப்பு அரசியலை பா.ஜ.க-வினர் மத்தியில் அமித் ஷா தூண்டிவிட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், அவை வாக்குகளைப் பெறவும் உதவியது. குறிப்பாக, சமாஜ்வாடி ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சிகளின் வாக்குகளைக் கவர வேண்டும் என்றால் எவ்வளவு கஷ்டம்? அதைத் திறம்படச் செய்து களப்பணியாற்றிய வகையில் அமித் ஷாவுக்கு இப்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது.
சமாஜ்வாடி வெறும் ஐந்து இடங்களிலும், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் குடும்பத் தொகுதிகளாகப் பார்க்கப்படும் அமேதியும், ரேபரேலியும் மட்டும் காங்கிரஸ் வசம். அப்னாதளம் இரண்டு இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. எதிர்க் கட்சிகளுக்குக் கிடைத்தது அவ்வளவுதான். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை.
இந்த இடத்தில் ஒன்றை நினைவுகூர வேண்டும். சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமா பாரதியை இங்கு களம் இறக்கிப் பார்த்தது பா.ஜ.க. ஆனால், பெரிய வெற்றி கிடைக்கவில்லை. வாஜ்பாய், அத்வானி போன்ற பெரிய தலைவர்கள் கோலோச்சிய காலத்திலேயே 1991-ல் 51 தொகுதிகளும், 1996-ல் 52 தொகுதிகளும், 1998-ல் 59 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க-வால் வெற்றி பெற முடிந்தது. குறிப்பாக, வாஜ்பாய் நான்கரை ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட 29 தொகுதிகளை மட்டுமே பா.ஜ.க-வால் வெல்ல முடிந்தது.
கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் தலா 10 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்த பா.ஜ.க., தற்போது மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை அள்ளியுள்ளது. நரேந்திர மோடியின் கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாக இது இருந்தாலும், இதன் பின்னணியில் முழுக்க முழுக்க இருப்பவர் அமித் ஷாதான். அமித் ஷாவுடன் ஷோரப்தீன் என்கவுன்ட்டரைத்தான் தொடர்புபடுத்திப் பேசுவார்கள். உண்மையில், அவர் சமீபத்தில் ஏராளமான என்கவுன்ட்டர்களை நிகழ்த்தியிருக்கிறார். உ.பி-யில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என்று எல்லாக் கட்சிகளையும் சரமாரியாக என்கவுன்ட்டர் செய்திருக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க-வுக்குப் புது ரத்தம் பாய்ச்சியதில் அமித் ஷாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதை நீர்த்துப்போகாமல் செய்வது இனி நரேந்திர மோ ஆட்சியின் கையில் உள்ளது.
- தி இந்து, 20/05/2014 (நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிக்குப் பிடிறகு எழுதப்பட்ட கட்டுரை)

16/05/2014

2014 தேர்தல் - அதிமுக மாஸ்... திமுக புஸ்... மோடி பாஸ்!



நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. கருத்துக் கணிப்புகள் கூறியபடியே அதிமுகவே தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. மோடி ஆதரவு அலை எந்த விதத்திலும் தமிழகத்தையும் அதிமுகவையும் அசைத்துப் பார்க்கவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் உறுதி செய்கின்றன. 

கூடவே நிழல் போல ஒட்டிக்கொண்டிருந்த இடதுசாரிகளை அதிமுக கழற்றி விட்டபோது அக்கட்சித் தொண்டர்கள் சற்று சோர்வடையவே செய்தனர். தொடக்கத்தில் 30 தொகுதிகளில் வெற்றி என்ற நிலையில் இருந்து 21 தொகுதிகள் வரை அதிமுக வெற்றி பெறும் என்று வாக்குப் பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியபோது தேர்தல் வெற்றி பற்றி அதிமுகவினருக்கு படபடப்பு ஏற்பட்டது. 

ஆனால், தொகுதி வாரியாக மேற்கொண்ட பிரசாரம், மத்திய அரசால் தமிழகம் இழந்த உரிமைகள், அதற்கு திமுக உடந்தையாக இருந்ததாக செய்த பிரசாரம், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கு, தமிழகத்தில் எதிர்ப்பு அலையை அதிமுக சம்பாதிக்காதது ஆகியவை அதிமுகவுக்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் பெருவாரியான வெற்றியைத் தேடி தந்திருக்கிறது.  “திமுக - காங்கிரஸூக்கு கட்சிகளுக்கு சம்மட்டி அடி கொடுங்கள்” என்று தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒருமுறை அமோக ஆதரவை தமிழக மக்கள் வழங்கியுள்ளனர்.

“டெல்லி செங்கோட்டைக்குச் செல்ல அதிமுக எக்ஸ்பிரஸ் தயார்” என அக்கட்சியின் பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியதில் இருந்தே பிரதமர் பதவியை அவர் குறி வைக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதிமுகவினரும், “ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தாருங்கள்” என்றே பிரசாரம் மேற்கொண்டனர். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் ஆதரவு அளித்துள்ளதும் தெரிகிறது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லியில் ஜெயலலிதாவின் செல்வாக்கு நிச்சயம் கூடும். மத்தியில் தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எனவே மத்தியில் ஆட்சியமைக்க ஜெயலலிதாவின் ஆதரவு தேவையில்லை என்ற நிலையே ஏற்பட்டிருக்கிறது. ஆட்சியமைக்க ஜெயலலிதாவின் ஆதரவு தேவையில்லை என்றபோதும், 37 எம்.பி.களைக் கொண்டு  தமிழகத்தின் உரிமைகளை மீட்க ஜெயலலிதா நிச்சயம் பாடுபடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

1999, 2004, 2009 என கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்ற திமுக, இந்த முறை ஒரு  தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் பலத்த அடியைச் சந்தித்துள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கையும், மின்வெட்டையும் மையப்படுத்தி பிரசாரம் செய்த திமுகவுக்கு தேர்தல் முடிவு பெரும் பின்னடைவுதான். குறிப்பாக 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மோசமாகத் தோல்வியடைந்த திமுக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கவுரவமான வெற்றியை எதிர்பார்த்தது. ஆனால், மக்களின் பார்வை திமுக பக்கம் திரும்பவில்லை என்பது  வெட்டவெளிச்சமாகியுள்ளது.

 நாடு முழுவதும் மோடி ஆதரவு அலை, திமுக-அதிமுகவுக்கு மாற்று, பிரம்மாண்ட கூட்டணி எனப் புறப்பட்ட தேமுதிக தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி தமிழகத்தில் பெரிய சலனத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், 2 தொகுதிகளில் இந்தக் கூட்டணி வெற்றிப் பெற்றிருப்பது பெரும் வெற்றிதான். அதுவும் பிரதான கட்சியான  திமுகவே ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாதபோது இந்தக் கூட்டணி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது அந்தக் கூட்டணிக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக சுமார் 19 சதவீத வாக்குகளை இந்தக் கூட்டணி பெற்றிருப்பதும் அரசியலில் முக்கியத்துவம் பெறும்.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற தேமுதிக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாமல் போனது அக்கட்சிக்கு இனிவரும் காலம் சோதனை களமாக அரசியல் இருக்கும் என்பதைக் காட்டுகிறது. ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாமக, பாஜக ஆகிய கட்சிகள் திமுக, அதிமுக ஆதரவில்லாமல் வெற்றி பெற்றதை நினைத்து மகிழ்ச்சியடையலாம். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அணியைக் கட்டமைக்க வேண்டும் என்ற பாஜகவின் முயற்சிக்கு இரு தொகுதிகளில் பெற்ற வெற்றி நிச்சயம் தெம்பைத் தரும்.

தனித்து களம் கண்ட காங்கிரஸ் எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தது என்றாலும், தங்களுக்கு 5 சதவீத வாக்குகள் தமிழகத்தில் இருப்பதை நிரூபித்துள்ளது. இது எதிர்காலத்தில் அக்கட்சிக்கு கூட்டணி பேச வாய்ப்பாக அமையும். ஒட்டுமொத்தத்தில் 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு, தமிழக மக்கள் அதிமுக பக்கமே நிற்பதை தெளிவுப்படுத்தியிருக்கிறது!.

கட்டுரை எழுதிய நாள் 16-05-2014

13/04/2014

தேர்தல் அறிக்கைகளெல்லாம் சும்மாதானா?


சுட்டெரிக்கும் கோடை வெயிலைவிடத் தகிக்கிறது தமிழக அரசியல் களம். வாக்குப்பதிவுக்கு இன்னும் பதினோரு தினங்கள் மட்டுமே உள்ளன. யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற பட்டிமன்றம் திரும்பிய பக்கமெல்லாம் நடந்தபடியிருக்க, அரசியல் கட்சிகள் ஓட்டுக்களைப் பெற வளையவளைய மக்களை வலம்வருகின்றனர். அரசியல் கட்சிகளின் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், பதிலடிகள், கேலிக்கூத்துகள் என பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. இத்தனை களேபரங்களும் மக்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காகத்தானே? நாடாளுமன்றத்துக்கு நடைபெறும் இந்தத் தேர்தலில் அதையொட்டி கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள்படி பிரச்சாரத்தை முன்னெடுத்துச்செல்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

வெறும் சம்பிரதாயம்தான்

தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில், வெற்றி பெற்றால் என்னென்ன செய்வோம் என்று கட்சிகள் உறுதிமொழி அளிப்பது வாடிக்கை. இதுவரையிலும் கட்சிகள் மேற்கொண்டுள்ள பிரச்சாரங்களைப் பார்த்தல், தேர்தல் அறிக்கை என்பதே வெறும் சம்பிரதாயம் என்றே சொல்ல வைக்கிறது. தேர்தல் அறிக்கையை மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்வதில் கட்சிகளுக்கே ஆர்வம் இல்லை என்பதுபோலத் தெரிகிறது. ஊறுகாய்போல சில இடங்களில் மட்டும் தேர்தல் அறிக்கைகளை குறிப்பிடும் கட்சிகள், மற்ற நேரங்களில் தாக்குதல் பாணி பிரச்சாரத்திலேயே ஈடுபடுகின்றன என்பது தெளிவு.

ஜெயலலிதாவின் பிரச்சாரம்

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே வேட்பாளர்களையும் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுவிட்டு, அதே வேகத்தில் பிரச்சாரத்துக்குக் கிளம்பிய முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைப் பெரிதாக எடுத்துச்சொல்வதில்லை. பிரச்சாரத்துக்குப் போகும் இடங்களிலெல்லாம் காங்கிரஸையும் தி.மு.க-வையும் அவர் வறுத்தெடுக்கிறார். குறிப்பாக, தி.மு.க-வின் மீது ஏவுகணைகள்போலக் குற்றச்சாட்டுகள் பாய்கின்றன. 2ஜி அலைக்கற்றை ஊழல், மின்வெட்டு போன்றவற்றுக்கெல்லாம் தி.மு.க-தான் காரணம், காவிரி, முல்லைப் பெரியாறு விஷயத்தில் துரோகம், இலங்கைத் தமிழர் விஷயத்தில் நாடகம் என்று பல கட்டங்களில் அவர் பேசிய, சொன்ன கருத்துக்களே இப்போதும் மக்களின் முன்னால் வைக்கப்படுகின்றன.

போட்டிப் பிரச்சாரம்

தி.மு.க-வைப் பொறுத்தவரை ஜெயலலிதா சொல்லும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் சொல்லியே தி.மு.க-வின் பிரச்சார பீரங்கிகளுக்கு நாக்கு வறண்டுபோகிறது. 2ஜி அலைக்கற்றை முறைகேடுபற்றி ஜெயலலிதாவுக்குப் பதில் தரும் வகையில் சொத்துக்குவிப்பு வழக்கு தி.மு.க. பிரச்சார மேடைகளில் முக்கிய இடம் பெறுகிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியின் சாதனைகள், மத்திய அரசில் அங்கம் வகித்தபோது செய்த சாதனைகள், ஜெயலலிதா ஆட்சியில் தி.மு.க. ஆட்சியின் திட்டங்களுக்கு மூடுவிழா என்ற வகையில் தி.மு.க-வின் பிரச்சாரம் அமைந்திருக்கிறது. சில இடங்களுக்கு ஏற்ப தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் மேற்கோள் காட்டிப் பேசுகிறார். தேர்தல் அறிக்கையை வழக்கமாகச் சுட்டிக்காட்டிப் பேசும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்த முறை இனம், மொழி சார்ந்த விஷயங்களுக்கே முன்னுரிமை கொடுத்து உருக்கத்தையும் குழைத்துப் பேசுகிறார்.

மோடியை மையமிட்டு…

பா.ஜ.க-வும் காங்கிரஸ் கட்சியும் அகில இந்திய அளவில் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்தாலும், அவற்றை மையப்படுத்தித் தமிழகத்தில் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. வழக்கமாகத் தனிநபர் விமர்சனம், பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், புகழ்மாலை சூட்டுவது என்ற பாணியையே இந்தக் கட்சிகள் அதிகம் கடைப்பிடிக்கின்றன. தே.மு.தி.க-வைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கை வெளியிடாததால், அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், தி.மு.க., அ.தி.மு.க-வை விமர்சனம் செய்வதில் பிரச்சார நேரத்தைச் செலவிடுகிறார். இடையில் மோடி புகழ், குஜராத் புகழ் பாடும் விஜயகாந்த், நதிநீர் இணைப்பு உள்ளிட்ட விஷயங்களைப் பேசி அவர் பாணியில் பிரச்சாரம் செய்கிறார். ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்தாலும், மோடியை மையப்படுத்தியும், இலங்கைத் தமிழர் நலனை மையப்படுத்தியுமே பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகிறது. இடதுசாரிக் கட்சிகள் வழக்கம்போல, தங்கள் கொள்கை சார்ந்த விஷயங்களைப் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்துகின்றன.

தமிழகத்தில் நடைபெறும் பிரச்சாரங்களைப் பார்த்தால், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் போலில்லாமல், உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத்துக்கான தேர்தல் பிரச்சாரங்கள் போலத்தான் தோன்றுகிறன. ஆக, தேர்தல் அறிக்கை ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்திருக்கிறது தமிழகத் தேர்தல் களம்.

- தி இந்து,  13-04-2014

11/04/2014

மனசிருந்தா மார்க்கப்பந்து! கிரேஸி மோகன் கலகல...

கிரேஸி மோகன். தமிழ்க் கூறும் கொல்லுலகம் அறிந்த காமெடிச் சுரங்கம்.  டைமிங் காமெடியில் கிங். தமிழ் மொழியில் நகைச்சுவை வசனங்களை அவர் கையாளும் விதம் குறித்து கேட்டதும் மடை திறந்த வெள்ளம் போல கொட்டினார். இனி ஓவர் டூ கிரேஸி மோகன்.

மொழின்னா என்ன? ரமண மகரிஷி அழகாக சொல்லியிருக்கிறாரு. மெளனமே ஒரு மொழிதான்னு. மெளனமே மிகப்பெரிய பேச்சுதான். எல்லா விஷயங்களுக்குமே பேச்சுதான் காரணம்.  நாம் நினைப்பது நன்றாக இருக்கும்.  அதை சொல்ல வரும்போது கொஞ்சம் குறைவாகும். எழுத வரும்போது இன்னும் குறைவாகும். பிரிண்ட்ல அதை பார்க்குபோது மோசமா தெரியும். சினிமாவும் அப்படித்தான். யோசிக்கிறப்ப நல்லா யோசிப்பாங்க. வசனம் எழுதும்போது நன்றாக எழுதுவாங்க. முடிக்கிறப்ப எல்லாமே மாறி போயிருக்கும்.

எனது குரு

கேமராவில் சூட்டிங் செய்கிறோம். அதை டிவிடிக்கு மாற்றுகிறோம். ஸ்பெஷல் எஃபெக்ட் சேர்க்கிறோம். ஒவ்வொன்றிலும் தரம் உயர வேண்டுமா இல்லையா? ஆனால், குறைந்திருக்கும். மொழியும் அப்படித்தான். ஒருவருக்கு இயற்கையாக, சுபாவமாக வருகிறது பாருங்க, அதுதான் நல்ல மொழி. ஆரம்ப காலங்களில் மொழியே இல்லாமல் மெளன படங்கள் வந்துச்சு. அதன்பிறகு என்.எஸ்.கிருஷ்ணன் வந்தாரு. காலத்தைத் தாண்டி மொழியில் சில பேரு முத்திரை பதித்திருக்கிறார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் அப்படியானவர்தான். மொழியில என்னுடைய குரு நாதர்கள் யாரென்று பார்த்தால், கி.வ.ஜெகநாதன், கலைமணி கொத்தமங்கலம் சுப்பு, கிருபானந்த வாரியார், கவிஞர் வாலி ஆகியோரைச் சொல்லலாம். மொழியில் கையாளுவதில் இவர்கள் எல்லாம் வல்லவர்கள்.

மொழி ஆளுமை

மொழி என்பது ஒரு ஊடகம், அவ்வளவுதான். அது ஒரு கடைக்கு போயி துணி வாங்குவது மாதிரிதான். துணியை எடுத்து அதை முழுக்கை தைப்பதா, ஸ்டைலா தைப்பதா, காலர் வைப்பதா, வேண்டாமா என்பதை அதை கையாளுபவரிடம்தான் அந்தத் திறமை இருக்கு. என்னைப் பொறுத்தவரை மொழியினாலதான் நான் ஜெயித்துக் கொண்டு இருக்கிறேன்.
 நம்ம தொழிலுக்கு மொழி ஆளுமை ரொம்ப ரொம்ப முக்கியம். இப்போ பாத்தீங்கன்னா, மைக்கேல் மதன் காமராஜன் படத்தில், கல்யாண விருந்து பண்ணும் காட்சி வரும். சாம்பார்ல மீன் விழுந்திடும். காட்சியில பாக்குறப்ப எல்லாருக்கும் சிரிப்பு வரும். இது இயல்பு. அதன்பிறகு ’வாட் யு மீன்.. ஐ மீன்..’ என்று பேசும்போதுதான் மொழி வரும். இந்த வசனம் காமெடியைக் கூட்டியது. அதாவது, சாம்பாரில் பல்லி விழுந்தாலும் தப்புதான். ஆனால், அந்த இடத்தில் ’வாட் யு மீன்..., ஐ மீன்...’ என்ற வசனம் எனக்கு கிடைத்ததால மீனை வைச்சுக்கிட்டேன். இந்த வசனம் அந்தக் காட்சியில் பளிச்சென வருவதற்கு வசனம் உதவியது. வசனத்திற்கு ஏற்ற காட்சி அமைத்தால் அதற்கு  ‘ரிவர்ஸ் இன்ஜினியரிங்’ என்று பெயர். கதை, திரைக்கதை, வசனம் என வரிசையாக  எழுத வேண்டுமென்று இல்லை. வசனம், திரைக்கதை, கதை என மாற்றியும் எழுதலாம். கொடியசைந்ததும் காற்று வந்ததா... காற்றசைந்ததும் கொடியசைந்ததா என்பது மாதிரிதான். அந்த நேரத்தில் எது நன்றாக வருகிறதோ அதை செய்துவிட வேண்டியதுதான்.

நகைச்சுவை மனோபாவம்

எனக்கு வாலி ரொம்பப் பிடிக்கும். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.  ஒருமுறை அவரோடு இருந்தப்போது, ஒருவர் வந்து கேட்டார். எப்போதும் கதர் உடையிலேயே இருக்கிறீர்களே என்று. அதற்கு வாலியிடம் இருந்து,  ‘வெதருக்கு ஏற்ற கதர்’ய்யா என்று பதில் வந்தது. இப்படி  நகைச்சுவையாக கூற ஒரு கெட்டிகாரத்தனம் வேண்டுமில்லையா? பஞ்ச் இல்லாத இடத்திலும், நகைச்சுவை இல்லாத இடத்திலும் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறோம் பாருங்க, அது ரொம்ப முக்கியம்.  அதேமாதிரி வாலியோட ‘கண்ணன் வந்தான் ராமா’வில் தேங்காய் சீனிவாசன் சொல்வாறு.  ‘பாருப்பா கிருஷ்ணா,  நான் இவ்வளவு மாத்திரை சாப்பிடுகிறேன்’ என்று.  ‘அதற்கு எல்லாம் நீ செய்த பாவம்தான் காரணம்’ என்று எதிர்க்குரல் வரும். டெட்ராமைசின், டெராமைசின், குரோசின் என சின்(பாவம்)..சின்னு... மாத்திரைகள் பெயர் பதிலாக விழும். அப்படி வசனம் அமைக்க கெட்டிகாரத்தனம் வேண்டுமில்லையா? எல்லாவற்றிலும் நகைச்சுவை இருக்கு என்று நினைக்கும் மனோபாவம் வேண்டும். அதற்கு கொஞ்சம் உழைக்கணும். மேலோட்டமாக இது போதும் என்று நினைத்தால் போதும்தான். நான் சில ஜோக்குகளுக்கு பத்து மணி நேரம் காத்திருந்திருக்கிறேன். அது மொழிக்கான காத்திருப்பு. மொழிக்காக காத்திருப்பது அலாதியானது.

என்னோட நாடகம் ஒன்றில்   ஹீரோ ஒரு பார்பரை டாக்டரா நடிக்க வைப்பாரு. பார்பரா அவர் இருக்குறப்ப கதாநாயகி பார்த்திருப்பா. டாக்டரா பார்க்கிறப்போ, கதாநாயகி கேட்பாள்,’ நான் உங்கள எங்கேயோ பார்த்திருக்கிறேனே’ என்று. அதற்கு பதில் எழுதனும். இதற்கு இரவு முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன். காலையில 5 மணிக்குதான அதற்கு பதில் கிடைத்தது. அந்த ஜோக் டைலாக் என்னான்ன, ‘என்னை நீங்க பார்த்தே இருக்க முடியாது. ஏன்னா நான் ஒன்லி ஃபார் ஜென்ஸ்’ என்று சொல்லுவான். அவன் வேற எதையோ சொல்லும்போதே அவனுடைய குணாதிசயம் வந்துடுச்சி இல்லையா. இதை எதுக்கு சொல்றோனா, மொழி இருக்கு பாருங்க, அதுக்காக காத்திருக்கணும். பொறுமை இருக்கணும். காத்திருக்கவனுக்கு மொழி நிச்சயமாக கிடைக்கும். மொழி மாறுவதை பத்தி ரொம்ப கவலைப்படக்கூடாது. மொழி கலப்பில்லாமல் எதையும் செய்ய முடியாது.

வட்டார வழக்கு

மொழியில் வட்டார வழக்கு இருக்கு இல்லையா? அதிலிருந்துதான் புதுக்கவிதைகள் எல்லம் வந்தன. ஆரம்ப காலங்களில் சினிமாவில், ’வாங்கோண்ணா,போங்கோண்ணா’ என்ற வசனங்கள் அதிகம் இருந்துச்சு. இதை சக்தி கிருஷ்ணசாமி போன்றவர்கள் மேம்படுத்தினாங்க. பாலச்சந்தர், சோ காலத்தில் ஒரு வரியில வசனங்களை கொண்டு வந்தாங்க. என்னோட காலத்தில் பட் பட்டென சொல்ற மாதிரி வசனங்கள் வந்து ரொம்ப சுலபமாயிடுச்சு. ஒரு வசனத்தை சொல்லும் போது பூர்வ பீடிகைகளையெல்லாம் சொல்லாமல் நேரடியாகவே சொல்லும் முறை வந்துடுச்சி. ஜனங்கள் ரொம்ப புத்திசாலியாக இருக்கிறார்கள். அவங்களவிட நாம் புத்திசாலியாக இருந்தால்தான் படம் ஓடும் என்பதை மனசுக்குள் வைத்துக்கொண்டு வசனம் எழுதனும்.

வட்டார வழக்கில் ஜோக் சொல்வது ரொம்ப ஈஸி கிடையாது. சதிலீலாவதி படம் எடுத்துக்கோங்க. படத்தில் கமல் கொங்கு பாஷை பேசியிருப்பாரு. நான் கோயமுத்தூர்காரன் இல்லை. இந்தப் படத்தில் என்னோட வசனங்களை எழுதின பிறகு அதை கோவை சரளாவிடம் கொடுத்து படிக்க வைச்சேன். அவர் படிக்கும் போது அதை பதிவு செய்து வசனங்களில் பயன்படுத்திக்கொண்டேன்.  ‘என்ற புருஷன்’ என்று சரளா பேசியதை வைத்தே,  ‘ஒன்ற புருஷன், ரெண்டற புருஷன்’னு காமெடி ஜோக் வைச்சேன். இதுதான் ஒரு எழுத்தானின், வசனகர்த்தாவின் திறமை. எந்த மொழியாகவும் இருந்தாலும் சரி, வட்டார மொழியாக இருந்தாலும் சரி, அதை பயன்படுத்திக்கொள்ளும் கெட்டிகாரத்தனம் வேண்டும்.

கண்ணதாசன் ஒரு முறை அவருடைய நண்பர் வீட்டுக்கு போயிருந்தார். காலிங் பெல்லை அழுத்தியதும், ‘’who is standing out side?'' என்று வீட்டுக்குள் இருந்து கேள்வி வந்தது. சிறிதும் தாமதிக்காமல், ‘’outstanding poet is standing out side'' என்று கண்ணதாசன் பதில் சொன்னார். ஆங்கிலமாக இருந்தாலும், அந்த வார்த்தைப் பிரயோகம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.  ‘தெனாலி’ படத்தில் ஈழத்தமிழை பயன்படுத்தியபோது நானும் கமலும் ஈழ நாடகங்களை நிறைய பார்த்தோம். கேட்டோம். அதை வைத்துதான் வசனங்களை அமைத்தேன். நாம் சாதாரணமாக  ‘அவர் எனக்கு கடவுள் மாதிரி’ என்று சொல்வதை,  ‘’நீ சாதாரண மச்சான் இல்லை. தெய்வ மச்சான்’’ என்று மெருகேற்றி வசனம் அமைக்கப்பட்டது. அந்த வசனத்தை படத்தில் கமல் டெலிவரி செய்யும்போது இன்னும் சிறப்பாக இருக்கும்.

பிடித்த வசனம்

நான் எழுதிய வசனங்களிலேயே அவ்வை சண்முகியில் எழுதிய வசனம் ரொம்பப் பிடிக்கும். கதாநாயகி கோபித்துக்கொண்டு அப்பா வீட்டுக்கு போய்விடுவாறு. குழந்தையை பார்த்துக்கொள்ள கமலே பெண் வேடமிட்டு இன்டர்வியூவுக்கு வருவார். அவரைப் பார்த்ததும் குழந்தை ஓடி வந்து கட்டிப்பிடிக்கும். குழந்தையை தூக்கியவுடன் அப்பா என்று சொல்லும். உடனே கமல்,  ‘எப்படி கண்டிபிடிச்ச’ என்று குழந்தையைப் பார்த்து கேட்பார். உடனே அதுக்கு குழந்தை,’ என் அப்பா வாசனை எனக்குத் தெரியாதா?’ என்று கூறும். பொதுவாக அம்மா வாசனை குழந்தைகளுக்கு நன்றாகத் தெரியும். அப்பா வாசனையும் குழந்தைகளுக்குத் தெரியும் என்பதை ஆடியன்சுக்கு சொல்லணும் என்பதற்காக இந்த வசனத்தை வைத்தோம்.

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படம் முன்னாபாய் எம்.பி.பி.எஸ். படத்தின் ரீமேக். இந்தப் படத்தில நான் முன்னாபாய் படத்தின் ஒரு வசனத்தைக் கூட நான் பயன்படுத்திகொள்ளவில்லை. முழுவதுமாக என் பாண்யில் எழுதியிருந்தேன். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்துல நானும் நடிச்சிருக்கேன். சூட்டிங் போது பேப்பர்ல மடிச்சு கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பேப்பர திருப்பி பார்த்தப்ப அதுல மார்க்கப்பந்து என்ற பெயரைப் பார்த்தேன். உடனே என் கேரக்டருக்கு மார்க்கப்பந்து என்று வைத்துக்கொண்டேன். உதவியாளர்கள் நல்ல பெயரா வைக்கலாமேன்னு சொன்னாங்க. நான் கேட்கல. அந்தப் பேரு நல்லா இருக்கும்னு உள் மனது சொல்லுச்சி. அந்தப் பெயரை வைச்சுதான், ‘மனமிருந்தால் மார்க்கப்பந்து’ என்ற வசனத்தையும் எழுதினேன். அது மிகவும் பிரபலமாச்சு. எந்த ஒரு விஷயத்தையும்  நுணுக்கமாக அணுகி வசனம் எழுதுவதற்கு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சமயோசித வசனம்

வசனகர்த்தாவுக்கு சமயோசிதமாக வசனம் எழுதும் திறமையும் வேண்டும். அருணாச்சலம் படத்துல தங்கையோட கல்யாண காட்சி. ஏற்பாடுகள் நடந்திக்கிட்டு இருக்கும். ரஜினி நடந்து வரும் முதல் காட்சி. அவரு என்ன நினைச்சரோ தெரியலை.  ‘சும்மா நடந்து வந்தா ஒரு மாதிரி இருக்கு. ஒரு டையலாக் கொடுங்க மோகன்’னு சொல்லிட்டாரு. என்ன வசனம் வைக்கலாம்னு சின்ன யோசனை. வேலையாள் ஒருவரை ஒரு இடத்துல உட்கார வைத்துவிட்டோம். இப்போ ரஜினி நடந்து வராரு. ரஜினி பக்கத்துல வந்ததும், வேலையாள் பொருளைத் துடைப்பார். உடனே ரஜினி, ‘பார்த்து வேலை செய். என்னை பார்த்தவுடன் வேலை செய்யாதே’ என்று சொல்வார். அது ஒரு பஞ்ச் டயலாக்கவும் வந்துச்சு.

ஆஹா படம் கூட நல்ல காமெடி வசனங்கள் நிரம்பிய படம்தான். கல்யாண வீட்டில் கதா நாயகி ஸ்வீட் பறிமாறிக்கொண்டிப்பாள். அவளிடம் போய்,  ‘பெயர் என்ன?’ என்று கேட்பான்  நாயகன்.  ‘ஜாங்கிரி’ என்று பதில் சொல்வாள் நாயகி.  நான், ‘உன் பெயர கேட்டேன்’ என்பான் நாயகன்.  ‘ஜானகி’ என்று பதில் கூறுவாள் நாயகி. உடனே நாயகன், ‘ஸ்வீட் நேம்’ என்பான். அதற்கு நாயகி,  ‘ஸ்வீட் பேரு ஜாங்கிரி’ என்பாள். இப்படி வசனங்கள் எழுதுறது இயற்கையாக அமைஞ்சிடிச்சு. வசனம் எழுதுவது எனக்கு சுலபமான வேலை ஆகிடுச்சு

வாசிப்புத் தேவை

என்னைப் பொறுத்தவரை ஆடியன்சுக்காக வசனம் எழுதுறவங்க ஜெயிப்பாங்க. மற்றவர்களை திருப்திபடுத்த வசனம் எழுதினா வெற்றி கிடைக்காது. வசனங்களை ஆடியன்சுக்கு புரிய மாதிரி  எழுதணும். புதுமையாக எழுதனும். அதற்கு ரொம்ப படிக்கணும். வாசிப்புகள் இல்லாமல் எதையும் புதிதாக சிந்திக்கவும் முடியாது. எழுதவும் முடியாது. 

- தி இந்து தமிழ்ப் புத்தாண்டு மலர், 2014

10/04/2014

சிலைகளுடன் ஒரு மர்மத் தீவு!


உலகில் மர்மம் நிறைந்த பகுதிகள் நிறைய உள்ளன. அதில் ஈஸ்டர் தீவும் ஒன்று. இங்கு அப்படியென்ன மர்மம் உள்ளது என்றுதானே நினைக்கிறீர்கள். ‘மோவாய்’ என்று அழைக்கப்படும் கற்சிலைகள் இங்கு நிறைய உள்ளன.

மோவாய் என்பது ‘பறவை மனிதன்’ என்ற உருவத்தைச் சொல்லும் வார்த்தை. பண்டைய கால மூதாதையர்களின் முகங்கள் இவை. இது தொன்மை வாய்ந்த ஒரு மனித இனத்தின் வழிபாட்டுச் சிலை. மோவாய் பற்றி இப்படி நிறையச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பறவை மனிதன் சிலை வழிபாடு தென்கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சிலி நாட்டுக்கு அருகே ஈஸ்டர் தீவில் மிகப் பிரபலமாம். இதற்காக ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பிரம்மாண்டமான சிலைகளை அத்தீவு முழுவதும் நிறுவி மக்கள் வழிபட்டதாகக் கூறுகிறார்கள். சிலைகளை வைப்பதற்காகவே அத்தீவில் இருந்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. மரம் அழிக்கப்பட்டதால் ஒரு கட்டத்தில் அத்தீவில் மழை பொய்த்து விவசாயத்துக்கு வழி இல்லாமல் போனது. இதனால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பசியைப் போக்க மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று நர மாமிசம் உண்டு மடிந்தனர். எஞ்சியவர்கள் அம்மை நோயால் இறந்தனர் என இத்தீவைப் பற்றிப் பல கதைகள் உலா வருகின்றன.

உச்சக்கட்டமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் இருந்தே இத்தீவு துண்டிக்கப்பட்டு மர்ம தேசமாக மாறியதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இப்படி மர்மங்கள் நிறைந்த இத்தீவு 1888-ம் ஆண்டுக்குப் பின்புதான் உலகின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது. இத்தீவு மக்களின் வாழ்க்கை முறையை முழுவதும் அறிய இப்போதும்கூட தொல்லியல் துறையினர் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈஸ்டர் தீவில் தற்போது வரை 887 மோவாய் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் 10 மீட்டர் உயரத்திலும் 80 முதல் 250 டன் எடையிலும் உள்ளது. இந்தச் சிலைகளை எப்படி வடித்தார்கள், கற்களை எப்படித் தூக்கி நிறுத்தினார்கள் என்பதற்கெல்லம் துல்லியமான பதில்கள் இல்லை.

மனிதர்களே இல்லாமல் சிலைகளுடன் உள்ள ஈஸ்டர் தீவு மர்ம தேசமாகவே இன்றும் நீடிக்கிறது.

தி இந்து, 10-04-2014

04/04/2014

மான் கராத்தே விமர்சனம்



லாஜிக்கோடு கதை சொல்வது ஒரு ரகம். லாஜிக்கே இல்லாமல் மசாலாக்களை மட்டுமே நம்பிக் கதை பண்ணுவது இன்னொரு ரகம். ‘மான் கராத்தே இரண்டாவது ரகம்வலுவான ஒரு முடிச்சின் அடிப்படையில் சங்கிலித் தொடர் திரைக்கதை அமைக்கும் ஏ.ஆர். முருகதாஸ் எழுதிய மிக பலவீனமான கதை இது. 

பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலையிழக்கும் ஐந்து நண்பர்கள்( முன்று ஆண்கள், இரண்டு பெண்கள்) அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். அப்போது அவர்கள் கையில் சித்தர் ஒருவர் ஒரு செய்தித்தாளைக் கொடுக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வரவிருக்கும் செய்தித்தாள் அது. அதில் ஒரு செய்தி இவர்களைப் பற்றியது. ராயபுரத்தில் வாழும் பீட்டர் (சிவகார்த்திகேயன்) மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் சாம்பியன்ஷிப் வெல்கிறார். அதில் கிடைக்கும் பரிசுத் தொகையான 2 கோடியை, ஐந்து ஐடி நண்பர்களுக்கும் அவர் கொடுப்பதாகவும் அந்தச் செய்தி சொல்கிறது.
இதில் உற்சாகமடையும் அவர்கள் பீட்டரைப் பிடித்து வந்து ஒப்பந்தம் போடுகிறார்கள். ஆனால் அவருக்கு பாக்ஸிங் என்றாலே என்னவென்று தெரியாது. இதனால் அவருக்கு பயிற்சியாளரை ஏற்பாடு செய்கிறார்கள். தான் காதலிக்கும் யாழினிக்கு (ஹன்சிகா) குத்துச் சண்டை பிடிக்கும் என்பதற்காக பீட்டரும் ஒப்புக்கொண்டு தயாராகிறார்.
முதல் இரண்டு சுற்றுக்களில் ‘மான் கராத்தே’ என்ற உத்தியை (எதிராளி முகத்தில் குத்த வரும்போது விலகிக்கொள்வது) பயன்படுத்தி சிவகார்த்திகேயன் வெல்கிறார். இறுதிப் போட்டிக்கு அவர் தகுதிபெறும்போதுதான் தெரிகிறது. பல ஆண்டுகளாக மாநில ஷாம்பியன்ஷிப் போட்டியை தக்கவைத்திருக்கும் தொழில்முறை குத்துச்சண்டை வீரரான மற்றொரு பீட்டர் (வம்சி கிருஷ்ணா)
என்று. நாம் ஒப்பந்தம் செய்ய வேண்டிய பீட்டர் இவர்தானோ என குழம்பும் ஐடி நண்பர்கள் ராயபுரம் பீட்டரை என்ன செய்தார்கள்? தனக்குக் குத்துச் சண்டை தெரியும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் காதலிக்காக இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு ராயபுரம் பீட்டர் வெற்றிபெற்றாரா இல்லையா என்பதுதான் திரைக்கதை.
கதையாகப் பார்க்கும்போது சுவையாகத் தோன்றலாம். ஆனால் காட்சிகளாகப் பார்க்கும்போது தலை கிறுகிறுக்கிறது. நிஜ வாழ்க்கையில் நிகழ வாய்ப்பே இல்லாத சரடுதான் ‘மான் கராத்தே’ கதை. சிவகார்த்திகேயன் ஏற்கனவே நடித்த எதிர்நீச்சலின் எதிர்மறை பிம்பம் இது. அதில் இருந்த முயற்சி, தன்னம்பிக்கை இரண்டையும் இழிவுபடுத்தும் விதமாக ஒரே நாளில் ஒருவன் குத்துச்சாண்டை வீரனாகி, பல ஆண்டுகளாக உழைத்து சாம்பியன்ஷிப் வென்ற ஒருவனை வீழ்த்துவதுபோல காட்டி, குத்துச்சண்டையையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் இழிவுபடுத்துகிறார் இயக்குநர்.  
கதையின் முதன்மைக் கதாபாத்திரம் மட்டுமின்றி நாயகியின் அப்பா, ஐந்து ஐ.டி. நண்பர்கள், பயிற்சியாளராக வரும் ஷாஜி எனப் பல பாத்திரங்களும் பலவீனமாகவே இருக்கின்றன.
நடிப்பு, நடனம் இரண்டிலும் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன், டைமிங் சென்ஸைத் தவறவிட்டிருக்கிறார். மசாலாவை நம்பினோர் கைவிடப்படார் என்ற முடிவுடன் ஒரு புது இயக்குநர் (திருக்குமரன்) களம் இறங்கியிருப்பது ஏமாற்றமளிக்கிறது. ஹன்ஷிகா கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார். முன்னணிக் காமெடியனாக வளர்ந்து வரும் சதீஷை வீணடித்திருக்கிறார்கள். படத்தில் நிமிர்ந்து உட்கார வைப்பவர் இசையமைப்பாளர் அனிருத் மட்டும்தான். ஆனால் பின்னணி இசையில் கொஞ்சம் அதிகமாகவே தட்டி அதை சராசரி ஆக்கிவிட்டிருக்கிறார்.
ராயபுரம் பீட்டருக்காக வெற்றியை விட்டு கொடுங்கள்’ ரியல் பாக்ஸர் பீட்டரிடம் அவரது மனைவி சொல்கிறார்.  ‘உன்னை யாராவது கேட்டால் நான் விட்டுத் தருவேனா, அதே மாதிரிதான் பாக்ஸிங்கும்’ என்று உணர்ச்சிக்கரமாக பேசும் அவர், ராயபுரம் பீட்டரிடம், ‘உன் காதலியை  விட்டுக்கொடு.. வெற்றியை விட்டுக் கொடுக்கிறேன்’ என்று வசனம் பேசுவது உச்சகட்ட முரண்.
பெருங்கூட்டத்திடம் தர்மடி வாங்கிய பின், முகத்திலும், மூக்கிலும் ரத்தம் வடிய  “மடங்க மடங்க அடிக்கிறதுலகூட இப்படியெல்லாங்கூடவா யோசிப்பாய்ங்க..! என்ற வடிவேலுவின் நிலைதான் ரசிகர்களுக்கும். 
மான் கராத்தே -  ரசிகர்களை ஏமாற்றிய மாய மான்.

மதிப்பெண்: 2.5 / 5

22/03/2014

கிராமமாக மாறிய நகரம்

தேர்த் திருவிழாவாக இருந்தாலும் சரி, கோயில் திருவிழாவாக இருந்தாலும் சரி, அது நிறைவடையும் வரையில் ஊரே கொண்டாட்டத்தில் திளைக்கும். பொதுவான ஓர் இடத்தில் வரிசையாகக் கடைகள், வாங்கி மகிழ விதவிதமான பொருட்கள், ருசி பார்க்கப் பல ஊர் பலகாரங்கள், குழந்தைகளைக் குதூகலமாக்க விளையாட்டுப் பொருட்கள், விளையாடி மகிழ ராட்டினங்கள் என ஊரே அமர்க்களப்படும். சாதாரணக் கிராமத்தில் இருந்து பெரிய ஊர்கள் வரை பங்குனி, சித்திரை மாதங்களில் இந்தக் காட்சிகளைக் காணலாம். ஆனால், கான்கிரீட் கோபுரங்களும், உயர்மட்டப் பாலங்களும், வண்ணமயமான ஷாப்பிங் மால்களும் நிறைந்த சென்னையில் இதெல்லாம் சாத்தியமா? சாத்தியம்தான் என்பதைப் பல ஆண்டுகளாக நிரூபித்துவருகிறது மயிலாப்பூரில் பங்குனித் திருவிழாவின் ஒருபகுதியாக நடைபெறும் அறுபத்துமூவர் விழா.

பங்குனித் திருவிழாவின் சிறப்பம்சமாக நடைபெறும் அறுபத்துமூவர் உலா அரங்கேறும் நாளன்று மயிலாப்பூரின் நான்கு மாட வீதிகளிலும் உற்சாகம் கொப்பளிக்க மக்கள் கூடுகிறார்கள். எங்குப் பார்த்தாலும் அன்னதானம். திரும்பும் இடமெல்லாம் நீர்மோர், குளிர்பானங்கள் வினியோகம். ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அன்னதானத்தில் பங்கேற்பு எனச் சமதர்ம விழாவாக நடந்து வருகிறது இந்த விழா.

அறுபத்து மூவர் உலா நடைபெறும் அன்றும் அதற்கு அடுத்த நாளும் மாடவீதிகளில் அமைக்கப்படும் கடைகள் கிராமங்களில் நடைபெறும் விழாக்களை ஞாபகப்படுத்துகின்றன. அமைக்கப்படும் கடைகளில் பிரதானமாக விற்கப்படுவது மண்பாண்டங்கள்தான். சென்னையைச் சுற்றியுள்ள பல ஊர்களிலும் இருந்து வந்து, இங்கு 3 நாட்களுக்குக் கடை அமைக்கிறார்கள் குயவர்கள். திருவிழாவுக்கு வரும் மக்களும் மண்பாண்டங்களை விரும்பி வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது.

மண்பாண்டக் கடை அமைத்திருந்த திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த பாளையத்தான் இப்படிக் கூறினார்: “நான் 13 ஆண்டுகளாக இங்கு வந்து கடை போடுகிறேன். நகரங்களில் மண்பாண்டங்களையெல்லாம் மக்கள் மறந்துவிட்டார்கள் என்று பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது. இது உண்மையில்லை. பங்குனி, சித்திரை மாதங்களில் எங்க ஊர் அருகே நடைபெறும் திருவிழாக்களுக்குச் சென்று கடை போடுவேன். ஆனால், இங்கு விற்பனையாகும் அளவுக்கு மற்ற இடங்களில் மண் பாண்டங்கள் விற்பனையாவதில்லை” என்று மயிலாப்பூர் விழாவின் பெருமையைப் பேசினார்.

பிளாஸ்டிக் விசிறிகள் இன்று வீடுகளை ஆக்கிரமித்துவிட்ட நிலையில் தென்ன மட்டையில் செய்யப்படும் விசிறிகளின் விற்பனையும் அமோகமாகவே நடைபெற்றது. “தென்னை விசிறியைத் தண்ணீரில் நனைத்து விசிறிப் பாருங்க, ஏ.சி.கூடத் தோற்றுவிடும்” என்று விசிறி வாங்கியபடியே தன்
அனுபவங்களைக் கூறினார் மந்தைவெளியைச் சேர்ந்த ராகவன். முறம், மூங்கில் கூடை என இயற்கையோடு இயைந்த பொருட்கள் மயிலாப்பூர் மாட வீதிகளை அலங்கரித்திருந்தன.

சிறுவர்கள் விளையாடி மகிழக் குதிரை ராட்டினங்கள் ஆங்காங்கே ரிங்... ரிங்… எனச் சத்தம் எழுப்பியபடி சுற்றிக்கொண்டிருந்தன. சென்னை மெரினா பகுதியில் குதிரை ராட்டினம் வைத்துப் பிழைப்பு நடத்திவரும் ராபர்ட், தெற்கு மாட வீதியில் ராட்டினம் வைத்திருந்தார். சிறுவர்கள் உற்சாகத்தோடு குதிரைச் சவாரி செய்துகொண்டிருந்தனர்.

மூங்கில் கழியில் ஜவ்வு மிட்டாயைச் சுற்றிக்கொண்டு உச்சியில் பொம்மையுடன் விசில் ஊதியபடி தெருக்களில் வந்து சிறுவர்களை ஈர்க்கும் வியாபாரிகளைக் காணுவதே இன்று அரிதாகிவிட்டது. அறுபத்து மூவர் உலாவுக்குச் சென்றால் பால்யப் பருவத்தில் பார்த்து மகிழ்ந்தவர்களைப் பார்க்கும் அனுபவமும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. சென்னை சிறுவர்களுக்கு இந்த அனுபவம் புதுமையாகத் தெரிந்தது. மிட்டாய் வாட்சுகளைக் கையில் சுற்றியதும் பல சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. இதேபோல பொம்மைகள், பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் சிறார்களைக் குறி வைத்து விற்பனைக்குக் குவிக்கப்பட்டிருந்தது.

ஆண்களைவிடப் பெண்கள், குழந்தைகள் இந்த விழாவுக்கு அதிகம் வந்திருந்ததைக் கவனிக்க முடிந்தது. அதற்கு ஏற்பப் பெண்களைக் குறி வைத்து வளையல்கள், தோடுகள், செயின்கள், பொட்டுகள், புடவைகள், வீட்டு அலமாரிப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் கடைகளில் களைகட்டியிருந்தன மாட வீதிகள். எதை எடுப்பது, எதை விட்டுச் செல்வது என யோசிக்கும் அளவுக்கு எண்ணற்ற பொருட்கள் இந்த மூன்று நாட்களுக்குக் கொண்டுவரப்படுகின்றன.

திருவிழா என்றால் இனிப்புக் கடைகளுக்குப் பஞ்சம் இருக்காது அல்லவா? அதை அறுபத்து மூவர் விழாவிலும் பார்க்க முடிந்தது. நகர்ப்புறங்களில் பீட்சா, பர்க்கர், டின் உணவுகள் சாப்பிட்டுப் பழக்கப்பட்டுவிட்ட குழந்தைகள், தங்கள் பெற்றோருடன் பாரம்பரிய இனிப்பு உணவுகளைச் சாப்பிட்டு மகிழ்ந்துகொண்டிருந்தனர். குறிப்பாக இலந்தை வடை, பால்பன், தேன் மிட்டாய், தேங்காய் மிட்டாய், தேங்காய் பர்பி, கடலை மிட்டாய், ரவா உருண்டை என எண்ணற்ற மிட்டாய் வியாபாரிகள் வீதிகளில் கூவிக் கூவி விற்பனை செய்துகொண்டிருந்தனர். ஐந்து ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரையில் பொருட்கள் கிடைப்பது கவனிக்கத்தக்க விஷயம்.

சென்னையில் உள்ள வெளியூர்க்காரர்கள் தம் பால்ய காலத்தை உணரவும், அந்த அனுபவங்களைத் தம் வாரிசுகளிடம் எடுத்துக் கூறவும் இந்த விழா ஒரு வாய்ப்பாக அமையலாம்.

தி இந்து, 22/03/2014