நடிகர் ஆர்யாவின் சொந்தப் படம், ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோ என எதிர்பார்ப்புகளுடனும், படத்தின் கிளைமாக்ஸைப் பார்த்து நடிகை நயன்தாரா கண்ணீர் என இலவச விளம்பரத்துடனும் வந்திருக்கும் படம் அமரகாவியம். இந்த எதிர்பார்ப்பை அமரகாவியம் பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை தியேட்டரில் ரசிகர்களின் ரெஸ்பான்ஸே சொல்லிவிடுகிறது.
நாம் பார்த்துப் பார்த்து அழுத்துப் போன விடலைப் பருவத்து காதல்தான் கதையின் கரு. கைதியாக போலீஸ் வேனில்தான் கதையின் நாயகன் சத்யா அறிமுகமாகிறார். அங்கிருந்து ஃப்ளாஷ்பேக் விரிகிறது.
சத்யாவும், நாயகி மியா ஜார்ஜும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். சத்யாவின் நண்பன் மியாவை காதலிக்கிறார். நண்பனின் காதலுக்கு தூது போகிறார் சத்யா. அங்கு சத்யாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. “நான் உன்னை காதலிக்கிறேன்” என்று சத்யாவைப் பார்த்து மியா சொல்கிறார். நண்பனா, காதலியா என குழப்பத்துக்கு இடையே காதலை ஏற்கிறார் சத்யா. காதல் பறவைகளின் பயணத்தில் ஒரு திடீர் திருப்பம் ஏற்படுகிறது. அதன்பிறகு ஏற்படும் குழப்பங்கள், முட்டல்கள், மோதல்கள், பிரச்சினைகள்தான் மீதிக் கதை.
முதல்பாதி படம் பார்க்க கொஞ்சம் பொறுமை தேவை. படத்தின் கடைசியில் வரும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்துக்காக இரண்டரை மணி நேரத்தை இழுஇழுவென இழுத்திருக்கிறார் இயக்குநர். விடலைப் பருவத்து காதலை இவ்வளவு வலிந்து சொல்லியிருக்கத் தேவையில்லை. படத்தில் காதலர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் எல்லாம் இடைச்சொருகல்களாகவே உள்ளன.
நாயகியின் அப்பா நாயகனை அடிக்கிறார். அதற்காக அவரது வீட்டுக்கு தீ வைத்து விட்டு, அதேவீட்டின் இன்னொரு அறையில் நாயகனும் நாயகியும் உருகி மருகுவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. இப்படி சில காட்சிகள் யாதார்த்தத்தை மீறியே உள்ளன.
கடிதங்கள் மூலம் காதல் வளர்க்கும் காலமான 1988-89- களில் நடப்பது போல் காட்சிகள் காட்டப்படுகின்றன. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முந்தைய ரசனை, மேக்கப், உடையலங்காரம் படத்தில் மிஸ்ஸிங். படத்தில் ஹீரோ சத்யா நன்றாக நடித்திருக்கிறார். மிகத் தீவிரமாக ஒன்றை விரும்பும் ஒருவன் என்னென்ன செய்வானோ, அதையெல்லாம் அவர் செய்கிறார். அதற்காக எப்போதும் ஒரே இறுக்கத்துடன் முகத்தைக் காட்டியிருப்பதை தவிர்க்கலாம். ஆர்யாவின் பாதிப்பு சத்யாவின் நடிப்பில் தெரிந்தாலும், இந்தப் படம் அவருக்கு ஒரு ஏற்றத்தைத்தரும் என்று நம்பலாம்.
கதாநாயகி மியா அழகாக மட்டுமில்லை. நன்றாக நடிக்கவும் செய்கிறார். மூக்குத்தியை மறந்துவரும் இந்தக் காலத்து இளம் பெண்களுக்கு மூக்குத்தி எவ்வளவு அழகு என்பதை காட்சிக்கு காட்சி அவரது முகத்தைக் காட்டும்போதே தெரிகிறது. தமிழ் திரையுலகிற்கு நல்வரவாக அவர் இருப்பார் என எதிர்பார்க்கலாம். ‘மைனா’, ‘கும்கி’ போன்ற காதல் படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்த தம்பி ராமையாவை ஊறுகாய் போல இயக்குநர் பயன்படுத்திருயிருக்கிறார்.
படத்திற்கு இசை ஜிப்ரான். பின்னணி இசை படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. இயக்கத்திலும், இழுவையான திரைக்கதையிலும் குறைகள் இருந்தாலும் ஒளிப்பதிவில் ஜீவா சங்கர் ஸ்கோர் செய்திருக்கிறார்.
‘காவியம்’ என்ற பெயரையும் தாங்கி வந்திருப்பதால், நாயகனும், நாயகியும் துன்பியல் முடிவைத் தேடிக் கொள்வதை மட்டும் ஏமாற்றாமல் தந்திருக்கிறது ‘அமரகாவியம்’.
மதிப்பெண்: 2 / 5
No comments:
Post a Comment