
நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. கருத்துக் கணிப்புகள் கூறியபடியே அதிமுகவே தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. மோடி ஆதரவு அலை எந்த விதத்திலும் தமிழகத்தையும் அதிமுகவையும் அசைத்துப் பார்க்கவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் உறுதி செய்கின்றன.
கூடவே நிழல் போல ஒட்டிக்கொண்டிருந்த இடதுசாரிகளை அதிமுக கழற்றி விட்டபோது அக்கட்சித் தொண்டர்கள் சற்று சோர்வடையவே செய்தனர். தொடக்கத்தில் 30 தொகுதிகளில் வெற்றி என்ற நிலையில் இருந்து 21 தொகுதிகள் வரை அதிமுக வெற்றி பெறும் என்று வாக்குப் பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியபோது தேர்தல் வெற்றி பற்றி அதிமுகவினருக்கு படபடப்பு ஏற்பட்டது.
ஆனால், தொகுதி வாரியாக மேற்கொண்ட பிரசாரம், மத்திய அரசால் தமிழகம் இழந்த உரிமைகள், அதற்கு திமுக உடந்தையாக இருந்ததாக செய்த பிரசாரம், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கு, தமிழகத்தில் எதிர்ப்பு அலையை அதிமுக சம்பாதிக்காதது ஆகியவை அதிமுகவுக்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் பெருவாரியான வெற்றியைத் தேடி தந்திருக்கிறது. “திமுக - காங்கிரஸூக்கு கட்சிகளுக்கு சம்மட்டி அடி கொடுங்கள்” என்று தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒருமுறை அமோக ஆதரவை தமிழக மக்கள் வழங்கியுள்ளனர்.
“டெல்லி செங்கோட்டைக்குச் செல்ல அதிமுக எக்ஸ்பிரஸ் தயார்” என அக்கட்சியின் பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியதில் இருந்தே பிரதமர் பதவியை அவர் குறி வைக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதிமுகவினரும், “ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தாருங்கள்” என்றே பிரசாரம் மேற்கொண்டனர். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் ஆதரவு அளித்துள்ளதும் தெரிகிறது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லியில் ஜெயலலிதாவின் செல்வாக்கு நிச்சயம் கூடும். மத்தியில் தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எனவே மத்தியில் ஆட்சியமைக்க ஜெயலலிதாவின் ஆதரவு தேவையில்லை என்ற நிலையே ஏற்பட்டிருக்கிறது. ஆட்சியமைக்க ஜெயலலிதாவின் ஆதரவு தேவையில்லை என்றபோதும், 37 எம்.பி.களைக் கொண்டு தமிழகத்தின் உரிமைகளை மீட்க ஜெயலலிதா நிச்சயம் பாடுபடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
1999, 2004, 2009 என கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்ற திமுக, இந்த முறை ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் பலத்த அடியைச் சந்தித்துள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கையும், மின்வெட்டையும் மையப்படுத்தி பிரசாரம் செய்த திமுகவுக்கு தேர்தல் முடிவு பெரும் பின்னடைவுதான். குறிப்பாக 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மோசமாகத் தோல்வியடைந்த திமுக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கவுரவமான வெற்றியை எதிர்பார்த்தது. ஆனால், மக்களின் பார்வை திமுக பக்கம் திரும்பவில்லை என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
நாடு முழுவதும் மோடி ஆதரவு அலை, திமுக-அதிமுகவுக்கு மாற்று, பிரம்மாண்ட கூட்டணி எனப் புறப்பட்ட தேமுதிக தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி தமிழகத்தில் பெரிய சலனத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், 2 தொகுதிகளில் இந்தக் கூட்டணி வெற்றிப் பெற்றிருப்பது பெரும் வெற்றிதான். அதுவும் பிரதான கட்சியான திமுகவே ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாதபோது இந்தக் கூட்டணி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது அந்தக் கூட்டணிக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக சுமார் 19 சதவீத வாக்குகளை இந்தக் கூட்டணி பெற்றிருப்பதும் அரசியலில் முக்கியத்துவம் பெறும்.
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற தேமுதிக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாமல் போனது அக்கட்சிக்கு இனிவரும் காலம் சோதனை களமாக அரசியல் இருக்கும் என்பதைக் காட்டுகிறது. ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாமக, பாஜக ஆகிய கட்சிகள் திமுக, அதிமுக ஆதரவில்லாமல் வெற்றி பெற்றதை நினைத்து மகிழ்ச்சியடையலாம். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அணியைக் கட்டமைக்க வேண்டும் என்ற பாஜகவின் முயற்சிக்கு இரு தொகுதிகளில் பெற்ற வெற்றி நிச்சயம் தெம்பைத் தரும்.
தனித்து களம் கண்ட காங்கிரஸ் எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தது என்றாலும், தங்களுக்கு 5 சதவீத வாக்குகள் தமிழகத்தில் இருப்பதை நிரூபித்துள்ளது. இது எதிர்காலத்தில் அக்கட்சிக்கு கூட்டணி பேச வாய்ப்பாக அமையும். ஒட்டுமொத்தத்தில் 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு, தமிழக மக்கள் அதிமுக பக்கமே நிற்பதை தெளிவுப்படுத்தியிருக்கிறது!.
கட்டுரை எழுதிய நாள் 16-05-2014
No comments:
Post a Comment