30/01/2011

1979 - மீண்டும் விஸ்வரூபம் காட்டிய வெஸ்ட்இண்டீஸ்


இரண்டாவது முறையும் இங்கிலாந்திலேயே உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடை பெற்றது. 4 ஆண்டுகள் கழித்து 1979ல் இரண்டாவது உலகக்கோப்பை ஜூன் 9 முதல் 21 வரை நடைபெற்றது. இத்தொடரையும் புரூடன்ஷியல் நிறுவனமே ஸ்பான்சர் செய்தது. முதல் உலகக்கோப்பை போலவே இத்தொடரிலும் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை.

கிழக்கு ஆப்பிரிக்க அணிக்கு பதிலாக கனடா களமிறங்கியது. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், கனடா அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளும் இடம் பிடித்தன. இதிலும் 15 போட்டிகளே நடை பெற்றன. வெங்கட்ராகவன் தலை மையில் இரண்டாவது முறையாக இத்தொடரில் களமிறங்கியது இந்தியா.

அரையிறுதிக்கு இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் அணிகள் தகுதி பெற்றன. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து  வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின.

இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட்சின் சதம் மறக்க முடியாத ஒன்று. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் எப்படி பந்து வீசினாலும் அதை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பி தனது கிளாசிக் இன்னிங்ஸை ரிச்சர்ட்ஸ் வெளிப்படுத்தியது என்றும் நீங்காது நினைவாக இருக்கும். முதல் உலகக் கோப்பைப் போட்டியைப் போலவே இரண்டாவது தொடரிலும் வெஸ்ட்இண்டீஸ் கோப்பையை வெல்ல ரிச்சர்ட்ஸ் முக்கிய காரணமாக இருந்தார். எத்தனையோ மட்டையாளர்கள் வந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஒரு வித்தியாசமான ஆளுமையாக இந்த உலகக்கோப்பையில்  மிளிர்ந்தார். இப்போட்டியில் 92 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி மீண்டும் உலகக்கோப்பையைத் தக்க வைத்துக்கொண்டது.


டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகள் தவிர மற்ற இரு அணிகளைத் தேர்வு செய்ய தகுதிச் சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இலங்கையும், கனடாவும் தகுதி பெற்றன. இரண்டாவது உலகக் கோப்பையில் இந்தியாவின் பங்களிப்பைப் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்வதிற்கில்லை. அப்போதைய கத்துக்குட்டி அணியான இலங்கையிடம்கூட இந்தியா வெற்றிபெறவில்லை. இத்தொடரில் இந்தியா 3 லீக் ஆட்டங்கள் விளையாடி ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை.   இந்தியா போல் இல்லாமல் பாகிஸ்தான் பலம் பொருந்திய அணியாக உருவெடுத்தது. அரையிறுதி வரை முன்னேறி தனது பலத்தை நிரூபித்தது. இத்தொடரிலும் தொடர் நாயகன் விருது அறிமுகம் செய்யப்படவில்லை. இறுதியாட்டத்தில் 138 ரன் குவித்த விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


- முத்தாரம், 30/01/2011

24/01/2011

உதயமாகுது புதிய தேசம்!

   

ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க நடக்கும் தேர்தல் வழக்கமானது; சூடானில் நடந்த இந்தத் தேர்தல் வேறு ரகம். நாடு ஒன்றாகவே இருப்பதா அல்லது இரண்டாகப் பிரிப்பதா என்பதைத் தீர்மானிக்க தேர்தல் நடந்தது. தென் சூடான் புதிய நாடாக உருவெடுக்க பலமாக ஓட்டு விழுந்திருக்கிறது.

தென் சூடானை அடக்கி ஆண்ட வட சூடான் நிகழ்த்திய 40 ஆண்டுகால அத்துமீறல்களுக்கு பரிகாரமாக பாகப்பிரிவினைதான் தீர்வு என உரக்கச் சொல்லியிருக்கிறார்கள் மக்கள். பிரிவு உறுதியாகிவிட்ட நிலையில் உற்சாகக் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன தென் சூடானில். ஒரு குடும்பத்தில் பாகப்பிரிவினை என்றாலே சொத்துகள், பொருட்களை மட்டுமல்ல, கடன்களைக்கூட பாதியாக பங்கிட்டுப் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். ஆனால், ஒரு நாடு பாகப்பிரிவினை கண்டால்..? இதுதான் இப்போது ஒருங்கிணைந்த சூடான் முன் நிற்கும் ஒரே கேள்வி!

ஆப்ரிக்க கண்டத்தில் பரப்பளவில் மிகப்பெரிய நாடு சூடான். தென் சூடானில் ஆப்ரிக்க பழங்குடியினர், கிறிஸ்தவர்கள் அதிகம். வடக்கு சூடானில் அரபு முஸ்லிம்கள், நுபியான் இன மக்களின் ஆதிக்கம் அதிகம். தென் சூடான் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். இதுதான் 1970ல் இரு பகுதிகளுக்கும் இடையே உள்நாட்டுக் கலவரம் வெடிக்க காரணமாக இருந்தது. சுமார் 35 ஆண்டுகள் தொடர்ந்த உள்நாட்டுப் போரால் 25 லட்சம் பேர் மடிந்ததுதான் மிச்சம். கலவரம் உச்சகட்டத்தை அடைந்தவேளையில் 2005ல் அமெரிக்கா உள்பட மேலைநாடுகள் தலையிட்டன. அப்போது போட்ட உடன்படிக்கையின்படிதான் இப்போது வாக்கெடுப்பு நடந்தது.

தென் சூடான் எண்ணெய் வளமும் தங்கச் சுரங்கங்களும் நிறைந்த வளமான பகுதி. மக்கள்தான் வறுமையில் இருக்கின்றனர். பக்காவான கட்டிடங்கள் கொண்ட ஒரு சுமாரான நகரம்கூட இல்லாத பகுதி அது. தெற்கின் வளங்களைச் சுரண்டி வடக்கு வளர்ந்துவிட்டது. எந்த வளங்களும் இல்லாத வட சூடான், இந்த வருமானத்தை வைத்தே செழிப்பாகிவிட்டது. இப்போதைய நிலையில் தென் சூடான் பொருளாதார ரீதியாக வட சூடானையே நம்பியிருக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் குழாய்கள் வட சூடான் வழியாகத்தான் கடலுக்குள் செல்கின்றன. இதில் பிரச்னை ஏற்பட்டால், சோமாலியா போல பசி, பட்டினியால் தென் சூடான் மக்கள் சாக நேரிடும்.

வட மற்றும் தென் சூடானுக்கு நடுவில் அபெய் என்ற பெரிய மாகாணம் உள்ளது. இதை யாருடன் இணைக்கலாம் என தனியாக வாக்குப்பதிவு விரைவிலேயே நடத்தப்பட இருக்கிறது. இந்த மாகாணத்திலும் எண்ணெய் வளம் அதிகமுள்ளது என்பதால், இரு பிரதேசங்களும் இப்போதே மோதத் தொடங்கியுள்ளன. இதனால், கலவரங்கள் மீண்டும் எழலாம் என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது. இதைவிட முக்கியமனது கடன். ஒன்றுபட்ட சூடான் வெளிநாடுகளில் வாங்கிக் குவித்துள்ள கடன் தொகை 3.6270 லட்சம் கோடி டாலர். இந்த கடனுக்கு யார் பொறுப்பேற்கப்போகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

குங்குமம், 24-01-2011


17/01/2011

1975 - கெத்து காட்டிய வெஸ்ட் இண்டீஸ்!

முதல் உலகக் கோப்பைத் தொடரை 1975-ல் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் நடத்த முடிவு செய்தது ஐ.சி.சி. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் தொடரில் பங்கேற்பது  உறுதியானது.

 7-வது அணியாக டெஸ்ட் அங்கீகாரம் பெறாத இலங்கை தேர்வு செய்யப்பட்டது. 1964-ம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்காவும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியாகவே இருந்தது. நிறவெறிக் கொள்கை அந்நாட்டில் பின்பற்றப்பட்டதால், சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால், அந்த அணியால் முதல் உலகக்கோப்பையில் பங்கேற்க முடியவில்லை. ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு அணி பங்கேற்க வேண்டும் என்பதற்காக கென்யா, தான்சானியா, உகாண்டா, நைஜீரியா ஆகிய நாட்டு வீரர்களைக் கொண்ட கிழக்கு ஆப்பிரிக்கா 8-வது அணியாகத் தேர்வானது.

இத்தொடரை புரூடன்ஷியல் நிறுவனம் ஸ்பான்சர் செய்ததால், அந்தப் பெயரிலேயே கோப்பை அழைக்கப்பட்டது. ஒவ்வோர் அணிக்கும் 60 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது. வண்ண உடைகள் இல்லை. ஆர்ப்பாட்டம், அமர்க்களம் இல்லாமல் 1975 ஜூன் 7-ல் தொடங்கியது முதல் உலகக் கோப்பை போட்டி. மொத்தம் 15 நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்தப் போட்டியில் 12 லீக் ஆட்டங்கள், இரு அரையிறுதி, ஓர் இறுதி ஆட்டம் என 15 ஆட்டங்கள் நடைபெற்றன.

‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, கிழக்கு ஆப்பிரிக்க அணிகளும், ‘பி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அணிகளும் களமிறங்கின. தமிழக வீரர் வெங்கட் ராகவன் தலைமையில் முதல் உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கியது இந்தியா.
‘ஏ’ பிரிவில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும், ‘பி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. ஜூன் 21-ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரே லியா & வெஸ்ட்இண்டீஸ்  அணிகள் மோதின.

இந்தத் தொடரில் சிறந்த ஆட்டம் என்றால் அது இறுதிபோட்டிதான். வரலாற்றில் சிறப்பான கேப்டன்கள் வாய்ப்பது அணிகளுக்கு  அபூர்வம். இறுதியாட்டத்தில் மல்லுக்கட்டிய இரு அணி கேப்டன்களும் அப்படி அரிதானவர்கள்தான். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிளைவ் லாயிடும், ஆஸ்திரேலிய அணிக்கு இயான் சேப்பலும் கேப்டன்களாக இருந்தார்கள். ஆஸ்திரேலியாவே முதல் உலகக் கோப்பையை வெல்லும் என்றே பலரும் நினைத்திருந்தார்கள். சாப்பல் மிக பிரமாதமாக ஆஸ்திரேலியா அணியை வழி நடத்தினார். ஆனாலும், வெஸ்ட்இண்டீஸ் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்த பறிகொடுத்தபோது கிளைவ் லாயிட் களமிறங்கி 102 ரன்களை புயலாக விளாசினார். அந்த ரன்னும், விவியன் ரிச்சர்ட்சின் அருமையான பீல்டிங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை வசப்படுத்த காரணமானது.

இந்தியா என்ன செய்தது?

முதல் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு மொத்தமே 18 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்டிருந்தன. உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை 85 பந்துகளில் 102 ரன் குவித்த கிளைவ் லாயிட் பெற்றார். அப்போது தொடர் நாயகன் விருது அறிமுகம் செய்யப்படவில்லை. முதல் உலகக்கோப்பையில் இந்தியா கிழக்கு ஆப்பிரிக்காவை மட்டுமே தோற்கடித்தது.

ஆமை வேக கவாஸ்கர்

ஆமை வேக கவாஸ்கர்
எந்த அளவுக்கு இறுதி ஆட்டம் மனதில் நிற்குமோ அதே அளவு நம் காவஸ்கரின் ஆமை வேக ஆட்டமும்  உலகக் கோப்பைப் போட்டிகள் உள்ள வரை நினைவில் இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் அந்த அணி எடுத்த 330 ரன்களை  இந்திய அணி தொடக்கூட முடியாது என்று எல்லாருக்குமே தெரிந்திருந்ததுதான். ஆனாலும், ஓரளவுக்கு கவுரவமாக ஸ்கோரை இந்தியா எடுக்கும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இந்திய அணியோ 3 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய காவஸ்கர் டெஸ்ட் ஆட்டம் போல டொக்..டொக்.. என டொக்கடித்து மிகமிக மந்தமாக விளையாடினார்.  60 ஓவர் முழுவதும் விளையாடிய அவர், கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். ஆனால் எடுத்த ரன்கள் வெறும் 36.  அவர் எதிர்கொண்ட பந்துகள் எத்தனை தெரியுமா? 160 பந்துகள்!  கவாஸ்கரின் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்ட வரலாற்றில் இது ஒரு பெரும் கரும் புள்ளியாக அமைந்தது. 

- முத்தாரம், 17/01/2011