14/09/2010

மச்சிலி!


உலகிலேயே அதிக முறை புகைப்படம் எடுக்கப்பட்டவள். ஃபேஸ்புக் சமூக இணையதளத்தில் ரசிகர் வட்டம் கொண்டவள். ‘லேடி ஆஃப் தி லேக்’ என்று பெருமையோடு அழைக்கப்படுபவள். ஆண்டுக்கு 46 கோடி ரூபாய் இந்தியாவுக்கு வருமானம் ஈட்டித் தருபவள். வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியவள். அழகி என்றாலும் அருகில் நெருங்க அனுமதிக்காதவள்.  யார் இவள்? 

ராஜஸ்தான் மாநிலம் ரந்தாம்பூர் தேசிய பூங்காவில் வசிக்கிற பெண் புலி! வயது 15. முகத்தில் மீனை நினைவூட்டும் கோடுகள் காணப்படுவதால் ‘மச்சிலி’ என்ற செல்லப்பெயர் இவளுக்கு!  சராசரியாக காடுகளில் வாழும் புலிகளின் வாழ்க்கை 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் முடிவடைந்து விடும். இயற்கையாகவே புலிகள் 10 வயதை எட்டும்போதே முதுமை தொற்றிக் கொள்ளும். மச்சிலிக்கும் இப்போது அந்தப் பிரச்னைதான். சரியாக தற்போது 15 வயதாகும் மச்சிலிக்கு உடல் சுருங்கி தளர்ந்து போய்விட்டது. முன்பு செழிப்பாக பெருத்து இருந்தபோது பலரும் கேமராவில் இதை ஷூட் செய்தார்கள். ரந்தாம்பூர் தேசிய பூங்காவில் டூரிஸ்டுகள் சுற்றிப் பார்க்கவரும் பகுதியில் இதன் நடமாட்டம்தான் அதிகம் இருக்கும்.


இப்போது இது உடல் இளைத்து, நடக்கக் கூட தெம்பு இல்லாமல் படுத்தே கிடக்கிறது. ஆக்ரோஷமாக காட்டில் எதிரொலிக்கும் மச்சிலியின் உறுமலும் மாயமாய் மறைந்து விட்டது. உணவைக்கூட வேட்டையாடி உண்ண முடியாத துர்பாக்கிய நிலை. மான்களைக் கண்டால் ஒரே ஜம்ப்பில் எகிறி அடித்து சாப்பிட்ட மச்சிலிக்கு, இப்போது உணவு தேடியே வருகிறது. வேட்டையாட முடியாமல் தளர்ந்து கிடக்கும் மச்சிலிக்காக, ஆட்டுக்குட்டியையோ, கன்றுக்குட்டியையோ அது உலவும் லாக்கர்டா வனப்பகுதியில் ஏதாவது மரத்தில் கட்டிப் போட்டு வைக்கிறார்கள் பூங்கா ஊழியர்கள்.


ஆனால், என்ன பயன்? உணவு கிடைத்துவிட்டதே என ஆசையாக பக்கத்தில் சென்றால்கூட, மச்சிலியால் சாப்பிட முடியவில்லை. 4 மாதங்களுக்கு முன் மச்சிலியின் குட்டியை ஸ்வாஹா செய்யத் துடித்தது ஒரு முதலை. அதனுடன் வயதான நிலையிலும் கடும் சண்டையில் ஈடுபட்டது மச்சிலி. இறுதி வெற்றி மச்சிலிக்கே என்றாலும், சண்டையில் 3 பற்களை இழந்துவிட்டது. பற்கள் பறிபோனதால், மாமிசத்தை இழுத்துக் கடித்து உண்பதும் சிரமமாயிற்று.

‘‘மச்சிலி இந்த தேசியப் பூங்காவிலேயே ரொம்ப ஃபேமஸ். அதிக பார்வையாளர்கள் பார்த்து ரசித்த ஒரே புலி மச்சிலிதான். இதுவரை 11 குட்டிகளை ஈன்றிருக்கிறது. சென்ற ஆண்டு ‘டிராவல் ஆபரேட்டர்ஸ் ஃபார் டைகர்ஸ்’ அமைப்பு மச்சிலிக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கவுரவித்தது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு கோடி டாலர் வரை எங்கள் தேசிய பூங்கா வருமானம் ஈட்ட கடந்த பத்து ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறது மச்சிலி. இப்போது முதுமையில் போராடுவது ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. இனி என்ன நடக்குமோ...’’ என்று மச்சிலியின் எதிர்காலம் பற்றி பதற்றத்துடன் கூறுகிறார் பூங்காவின் இயக்குனர் ஷெகாவத்.


புகழ்பெற்ற மச்சிலி 2016 ஆகஸ்ட் 16 அன்று உயிரிழந்தது. 1996-ல் பிறந்த மச்சிலி புலி 20 ஆண்டுகள் வாழ்ந்ததும்கூட சாதனைதான்.


- குங்குமம், 14/9/2010

05/07/2010

பரபர பயோடீசல்..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலே, வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துவிடுகிறது. உடனே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி பாக்கெட்டில் கை வைத்துவிடுவார்களோ என்று பயமும் தொற்றிக்கொள்கிறது.

இப்போதும், ‘எரிபொருட்களின் விலை எந்த நேரத்திலும் உயரலாம்’ என்று அலாரம் அடிக்கின்றன எண்ணெய் நிறுவனங்கள். சொல்லியடிக்கும் விலை உயர்வால் சோர்ந்துபோன ஐரோப்பிய நாடுகள் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக தாவர வித்துகளிலிருந்து கிடைக்கும் பயோ டீசல் தயாரிப்புக்கு எப்போதோ மாறிவிட்டன. ஆனால், ஏராளமான தாவர வித்துகள் கொட்டிக்கிடக்கும் இந்தியாவிலோ, இப்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது பயோ டீசல் உற்பத்தி!

பெட்ரோல், டீசல் விலையை வைத்துதான் நம் நாட்டில் விலைவாசியே பட்டியலிடப்படுகிறது. டீசல் விலை ஏறினாலே ஆட்டோ கட்டணம் முதல் காய்கறி வரை எல்லாப் பொருட்களின் விலையும் விர்ர்ர்.. என உயரத்தில் பறந்துவிடுகிறது. அமுதசுரபியாக எரிபொருளை அள்ளித் தரும் வளைகுடா நாடுகளில் ஒரு நாள் எண்ணெய் ஊற்றுகள் வற்றினால்..? எல்லோரும் ஏதாவது ஒரு மாற்று வழியைப் பின்பற்றிதானே ஆக வேண்டும். இப்படி ஒரு தொலைநோக்குப் பார்வையோடு பயோ டீசல் உற்பத்தியைக் கச்சிதமாகச் செய்துவருகின்றன ஐரோப்பிய நாடுகள்.

அதென்ன பயோ டீசல்?

எஸ்டர்கள் என்றழைக்கப்படும் எத்தனாலைக் கொண்டிருக்கும் தாவர எண்ணெய் அல்லது விலங்குக் கொழுப்பிலிருந்து கிடைக்கும் எண்ணெயைக் குறிப்பிடுவதே உயிரி எரிபொருள் (பயோ எரிபொருள்). இந்த எண்ணெயை வேதியியல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் கிடைப்பதே பயோ டீசல்!

உலக அளவில் மாற்று டீசல் தயாரிப்புக்காகச் சோதனைச் சாலைகள் பெருகியிருக்கின்றன. நாதியே இல்லாமல் சாலைகளில் வளரும் காட்டாமணக்கு விதை முதல் பாட்டி சுட்ட வடையில் மீந்துபோன எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு, வேம்பு, புங்கம், இலுப்பை, சோளம் என எந்தெந்த தாவர வித்துகளையெல்லாம் எண்ணெயாக மாற்ற முடிகிறதோ, அவை அனைத்தையுமே பயோ டீசலாக மாற்றிவிடலாம். நம் தேவைக்கு தகுந்த அளவு டீசலை வெளிநாட்டினரிடம் கையேந்தாமல், நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.

நம் நாட்டின் சராசரி ஆண்டுத் தேவை, 380 லட்சம் டன் டீசல். எரிபொருள் இறக்குமதிக்காக 90 ஆயிரம் கோடி ரூபாயை
செலவிடுகிறது நம் தேசம். தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. எனவே, விலை ஏற்றத்தையும் தவிர்க்க முடியவில்லை. இப்படி எரிபொருட்களின் தேவையும் விலையும் ஏறுமுகமாகவே இருப்பதால், பயோ டீசலுக்கு ஆதரவான குரல் நம் தேசத்தில் ஓங்கி ஒலிக்கவே செய்கிறது.

 தாய்லாந்து, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் காட்டாமணக்கு, கரும்பு, சோளாம், வேம்பு எனப் பல தாவரங்களைக் கொண்டு ஜோராக பயோ டீசல் தயாரித்துவருகின்றனர். நம் தேசத்தில் மட்டும் 17 ஆயிரம் வகையான தாவரங்கள் இருக்கின்றன. இந்தத் தாவரங்கள் மூலம் ஆண்டுக்கு 60 லட்சம் டன் தாவர வித்துகள் வரை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றிலிருந்தே 45 மில்லியன் டன் பயோ டீசலை சுலபமாக உருவாக்கலாம் என்கின்றனர் பயோ டீசல் உற்பத்தியாளர்கள்.

கடந்த 2007-ம் ஆண்டில்தான் ஆண்டுக்கு 2 லட்சம் டன் பயோ டீசலை உருவாக்க மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்தது. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் பாமாயில் எண்ணெய் மற்றும் புங்க எண்ணெயிலிருந்தே பயோ டீசல் தயாரிக்கப்படுகிறது. இதுபோன்ற எண்ணெய்களை எக்காரணம் கொண்டும் இறக்குமதி செய்து பயோ டீசலை தயாரிக்கக்கூடாது என்பது அரசின் கொள்கைகளில் ஒன்று. அதேவேளையில் 2017-ம் ஆண்டுக்குள் 20 சதவீதம் அளவுக்கு பயோ டீசலை பயன்படுத்த இலக்கு நிர்ணயித்து தேசிய உயிரி எரிபொருள் கொள்கையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

தரிசு நிலங்களில் காட்டாமணக்கு உற்பத்தி செய்து, அதிலிருந்து பயோ டீசல் தயாரிக்க பச்சைக் கொடியும் காட்டியிருக்கிறது அரசு. கடந்த சில ஆண்டுகளாகத்தான் மாநில அரசுகள் தரிசு நிலங்களில் காட்டாமணக்கு பயிரிட்டு பயோ டீசலுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியிருக்கின்றன. ஆனால், இதற்கு முன்பே இந்தியாவில் தனி நபர்கள் பலர், பயோ டீசலை உருவாக்கும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 48 பெரிய பயோ டீசல் நிலையங்கள் நம் நாட்டில் தனியாரால் இயங்கிவருகின்றன. ஆனால், இவர்கள் உருவாக்கும் பயோ டீசல் இன்னும் வணிக ரீதியாக விற்பனைக்கு வரவில்லை!

தமிழகத்தில் சென்னை ஐ.சி.எஃப்.-பில் பயோ டீசல் மூலம் இயங்கும் ரயில் என்ஜின் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திருச்சி-லால்குடி, தஞ்சை-நாகூர் வழித்தடங்களில் பயோ டீசல் மூலம் ரயில்களே இயக்கப்படுகின்றன. இந்திய ரயில்வேயும் இந்தியன் ஆயின் கார்ப்பரேஷனும் பெட்ரோல், டீசல் எரிபொருட்களில் 10 சதவீதம் பயோ டீசலைக் கலந்து பயன்படுத்த இப்போது முன்வந்திருக்கின்றன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது வருங்காலம் பயோ டீசல் காலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!

பயோ வரலாறு

தாவர எண்ணெயிலிருந்து பயோ எரிபொருள் தயாரிக்கும் முறையை 1853-ம் ஆண்டிலேயே இங்கிலாந்து தொடங்கிவிட்டது. 1900-ம் ஆண்டில் பிரான்ஸில் கடலை எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருள் (பயோ டீசல்) மூலம் இயந்திரம் சுழற்றிக் காட்டப்பட்டது. இதன்பின் 1920 முதல் 1930 வரை பெல்ஜியம் , பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், ஜெர்மனி, பிரேசில், அர்ஜெண்டினா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் பயோ டீசல் தயாரிக்கும் முயற்சியில் இறங்கின. 1980-ல் தாய்லாந்தில் காட்டாமணக்கு மூலம் பயோ டோசல் வெற்றிகரமாக உருவாக்கிக் காட்டப்பட்டது. இதையடுத்தே உலகம் முழுவதும் பயோ டீசல் உற்பத்தி களைகட்டியது.

கழிவு தரும் டீசல்!

தாவர வித்துகளிலிருந்து பயோ டீசல் தயாரிப்பதைப் போலவே, கறிக்கோழி, வாத்துகளின் இறகுகளைப் பயன்படுத்தியும் புதிய வகையான பயோ டீசலைத் தயாரிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள். அந்நாட்டு நெவாடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரசாயன மற்றும் உலோகவியல் பொறியியல் மாணவர்கள் இதைச் சாதித்திருக்கின்றனர். கறிக்கோழிகள் மற்றும் வாத்துகளை இறைச்சியாகப் பயன்படுத்தும்போது இறகுகள் மற்றும் சில பாகங்கள் கழிக்கப்படுகின்றன. இவற்றில் 11 சதவீதம் கொழுப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக் கழிவுகளை தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து வேதியியல் மாற்றம் மூலம் பயோ டீசலாக மாற்ற முடியுமாம்!

எண்ணெய் டூ டீசல்

இயற்கையாகவே கிடைக்கும் பெட்ரோல், டீசலில் வழவழப்புத் தன்மை இருக்காது. ஆனால், தாவர எண்ணெய்களில் வழவழப்பு அதிகம். எனவே இவற்றை நேரடியாக எரிபொருளாகப் பயன்படுத்த முடியாது. இந்த வழவழப்பைப் பிரித்தெடுக்கும் முறைக்கு பெயர்தான் ‘டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன்’. இந்த வேதியியல் முறையில்தான் பயோ டீசல் தயாராகிறது. தாவர எண்ணெயுடன் கிரியா ஊக்கியாக மெத்தனால் கலந்து சூடாக்கும்போது, கிளிசரின் மற்றும் பயோ டீசல் கலவை உருவாகிறது. இதைச் சுத்திகரித்து பயோ டீசல் தனியாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. கிளிசரினை சோப்பு தயாரிக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.
உதாரணமாக, 25 ஹெக்டேரில் காட்டாமணக்கு செடி வளர்த்தால், நாள்தோறும் சராசரியாக 250 லிட்டர் பயோ டீசலை உருவாக்கலாம். ஒரு லிட்டர் பயோ டீசல் தயாரிக்க உற்பத்திச் செலவு (எண்ணெய் விலையைத் தவிர்த்து) 4.50 ரூபாய்தான். தவிர 35 கிலோ கிளிசராலும் கிடைக்கும். சிறிய மாதிரி பயோ டீசல் பிளான்ட் அமைக்க ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை செலவாகும். 

முத்தாரம், 05-07-2010

14/06/2010

கோல்! உலகக் கோப்பை கால்பந்து திருவிழா


உலகக் கோப்பை உற்சவத்தால் களைகட்டியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. சாம்பியன் கனவில் 32 நாடுகள் முட்டி மோதிக்கொள்ளத் தயாராகிவிட்டன. எந்த அணி சாம்பியன் என கால்பந்து ரசிகர்களின் ரத்த அழுத்தமும் எகிற ஆரம்பித்திருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்து, விளையாட்டு ரசிகர்களைக் கட்டிப்போடும் ஒரே விளையாட்டு - உலகக்கோப்பை கால்பந்தாட்டமே. தென் அமெரிக்க அணிகள் 10 முறையும், ஐரோப்பிய அணிகள் 9 முறையும் கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை இந்த முறை தென்னாப்பிரிக்காவி ஜூன் 11 அன்று தொடங்குகிறது. பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சுற்றுப்போட்டிகள், காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என பல கட்டங்களைக் கண்டுகளிக்க உலகம் முழுக்க காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

உலகக்கோப்பையில் விளையாட, அணிகளுக்கு அவ்வளவு சுலபத்தில் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதற்குக் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. தரவரிசைப் பட்டியலில் டாப் லிஸ்டில் உள்ள அணிகள்கூட வாய்ப்பு கிடைக்காமல் பார்வையாளராகும் அபாயம் கால் பந்தாட்டத்தில் மட்டுமே உண்டு!

சர்வதேச தரவரிசைப் பட்டியல்படி உலகக்கோப்பைப் போட்டியை நடத்தினால் 32 அணிகளில் தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அணிகளுக்கே அதிக வாய்ப்பு கிடைக்கும். ஆனால், வட, தென் அமெரிக்காவிலிருந்து 8 அணிகள் மட்டுமே விளையாட இருக்கின்றன. உலகக்கோப்பை என்பதால், எல்லா கண்டங்களிலும் உள்ள நாடுகளும் பங்குபெற வாய்ப்பை அளிக்கிறது சர்வதேச கால்பந்து குழுமம்.

அனைத்து நாடுகளில் உள்ள அணிகளுக்கு இடையே பல கட்டங்களில்  தகுதிப் போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் அணிகளுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு ஆசியாவில் ஜப்பான், தென்கொரியா, வடகொரியா, செர்பியா, ஸ்லோவேனியா, ரஷ்யா என 6 அணிகளும் வட அமெரிக்காவில் பிரேசில், பராகுவே, உருகுவே, சிலி, அர்ஜெண்டினா என 5 அணிகளும் ஐரோப்பாவில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல், நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, செக் குடியரசு என 10 அணிகளும், ஆப்பிரிகாவில் அல்ஜீரியா, காமரூன், காங்கோ, ஐவரிகோஸ்ட், நைஜீரியா என 5 அணிகளும், ஓசியானாவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என 2 அணிகளுமாக 31 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் தென்னாப்பிரிக்க அணி நேரடியாகவே தகுதி பெறுகிறது.

முதல் உலகக்கோப்பை 1930-ல் உருகுவே நாட்டில் நடைபெற்றது. அப்போது 13 அணிகள் மட்டுமே கலந்துகொண்டன. இறுதியாட்டத்தில் உருகுவேயும் அர்ஜெண்டினாவும் மோதின. 4-2 என்ற கோல் கணக்கில் வென்று முதல் உலகக்கோப்பையை வசப்படுத்தியது உருகுவே. இதன்பின் 1934-ல் இத்தாலியிலும், 1938-ல் பிரான்சிலும் நடைபெற்றன. அதன்பின் இரண்டாம் உலகப்போர் காரணமாக 12 ஆண்டுகள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படவே இல்லை. இடைவெளிக்குப்பின் 1950-ல் பிரேசிலில் உலகக்கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டன. பல அணிகள் பங்கேற்பது பற்றிய விதிமுறைகள் அப்போது செயல்படுத்தப்பட்டது.

இதுவரை நடைபெற்ற 18 உலகக்கோப்பைகளில் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற நாடு பிரேசில். 1958, 1962, 1970, 1994, 2002ம் ஆண்டுகளில் இதை சாதித்துக் காட்டியது. உலகக்கோப்பையில் ஆதிக்கம் செலுத்திய இன்னொரு அணி இத்தாலி. 1934, 1938, 1982, 2006 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வசப்படுத்தியிருக்கிறது. 1954, 1974, 1990 ஆண்டுகளில் ஜெர்மனி வென்றிருக்கிறது. உருகுவே இருமுறை (1930, 1950), அர்ஜெண்டினா இருமுறை (1978, 1986), இங்கிலாந்து ஒரு முறை (1966), பிரான்ஸ் (1998) கோப்பைகளை வென்றிருக்கின்றன.

உலகக்கோப்பை இறுதியாட்டத்துக்கு அதிக முறை  தகுதி பெற்ற அணி என்ற பெருமையை பிரேசிலும் ஜெர்மனியும் பகிர்ந்துகொள்கின்றன. இரு அணிகளும் தலா 7 முறை இறுதிக்கு தகுதி பெற்றிருக்கின்றன. இத்தாலி 6 முறை, அர்ஜெண்டினா 4 முறை, பிரான்ஸ், நெதர்லாந்து, செக் குடியரசு, ஹங்கேரி தலா 2 முறை, ஸ்வீடன் ஒரேயொரு முறை இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்ற நாடுகளின் பட்டியலில் இருக்கின்றன. இவற்றில் நெதர்லாந்து, செக் குடியரசு, ஹங்கேரி, ஸ்வீடன் ஆகியவை கோப்பையை வெல்லவில்லை.
கடந்த கால உலகக்கோப்பைப் போட்டிகளை வைத்து பிரேசில், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகக் கணித்திருக்கிறார்கள் கால்பந்தாட்ட நிபுணர்கள். அது ஜூலை 11 அன்று தெரிந்துவிடும்.

உலகக்கோப்பை துளிகள்

* ஐந்து முறை கோப்பை வென்றுள்ள பிரேசில் ஒருமுறைகூட சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் கோப்பை வென்றதில்லை.
* உருகுவே (1930), இத்தாலி (1934), இங்கிலாந்து (1966), ஜெர்மனி (1974), அர்ஜெண்டினா (1978) ஆகிய நாடுகள் சொந்த ஊரில் கோப்பையை வென்ற நாடுகள் ஆகும்.
* அதிக கோல்கள் அடிக்கும் வீரர்களுக்கு தங்க காலணி வழங்கும் முறை 1930-ம் ஆண்டிலிருந்தே பின்பற்றப்பட்டுவருகிறது.
* நாகரிகமாக விளையாடும் அணிகளுக்கு சிறந்த அணிக்கான விருது 1978-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
* உலகக் கோப்பையில் மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்டனியோ கார்பஜல் மற்றும் ஜெர்மனியின் லூதர் மேத்யூஸ் இருவரும் தலா 5 முறை விளையாடி உள்ளனர்.
* உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சிறப்புக்குச் சொந்தக்காரர் பிரேசிலின் ரொனால்டோ. 3 உலகக்கோப்பைகளில் 15 கோல்கள் அடித்துள்ளார்.
* 1982-ல் பிரான்ஸ் - இங்கிலாந்து ஆடிய ஆட்டத்தில், பிரான்ஸ் வீரர் பிரையன் ராப்சன் 27 விநாடிகளில் அடித்த கோல்தான், உலகக்கோப்பையில் மிக விரைவாக அடிக்கப்பட்ட கோல்.

தட்டிப் போகும் வாய்ப்பு..

இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஓசியானா நாடுகள் கோப்பை வென்றதில்லை. 1966-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையில் ரஷ்யாவும், 2002-ல் தென்கொரியா மற்றும் ஜப்பானில் கூட்டாக நடைபெற்ற உலகக்கோப்பையில் தென்கொரியாவும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. ஆசியாவிலிருந்து அரையிறுதி வரை தகுதி பெற்ற அணிகள் இவை மட்டுமே. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இறுதிக்கு முன்னேறவில்லை. இதேபோல ஆப்பிரிக்க அணிகளில் ஒன்றுகூட அரையிறுதி வாய்ப்பைப் பெற்றதே இல்லை. இதே கதிதான் ஓசியானா நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கும்.

தங்கக்கோப்பை!

உலகக்கோப்பையில் மூன்றுமுறை கோப்பை வெல்லும் அணிக்கு நிரந்தரமாக அந்தக் கோப்பை வழங்கப்படுவது வழக்கம். இதன்படி 1970-ல் மூன்றாவது முறையாக கோப்பை வென்ற பிரேசில அணிக்கு ‘ஜூல்ஸ் ரிமேட் கோப்பை’ வழங்கப்பட்டுவிட்டது. இதன்பின் 1974-ல் உலகக்கோப்பைக்காக 53 வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியாக இத்தாலியக் கலைஞர் சில்வியோ கஸ்ஸானிகா வடிவமைத்த கோப்பைதான் இப்போதைய கோப்பையின்  தோற்றம். முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட இக்கோப்பை 36 செ.மீ. உயரமும், 4.9 கிலோ எடையும் கொண்டது. 2038-ம் ஆண்டு வரை நடைபெறும் உலகக்கோப்பையில் வெற்றிபெறும் அணிகளின் பெயர்களை கோப்பையில் பொறிக்க முடியும். இக்கோப்பை சர்வதேச கால்பந்து குழுமத்திடமே இருக்கும். வெற்றி பெறும் அணிக்கு தங்கமுலாம் பூசப்பட்ட பிரதிதான்  வழங்கப்படுகிறது.

முத்தாரம், 14-06-2010

07/06/2010

தாகம் தீர்க்குமா கடல்?


சென்னைவாசிகளுக்கு மட்டுமல்ல... மகாராஷ்டிரா மக்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. ஆம்.. அங்கும் கடல் நீரைக் குடிநீராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறார்கள். அதற்கான ஆய்வுப் பணிகளையும் தொடங்கியிருக்கிறார்கள். பல நாடுகளிலும் கடல் நீரைக் குடிநீராக ருசித்து வருகிறார்கள். கரிக்கும் கடல் நீர், எப்படி சுவைமிக்க சிறுவாணி தண்ணீராக மாறுகிறது?

பூமியில் நான்கில் 3 பங்கு நீர்தான் சூழ்ந்திருக்கிறது. இப்படி நீர் சூழ்ந்த உலகில்தான் தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. ஏன் தண்ணீர் பஞ்சம்? காரணம், உப்பு நீர்! உலக நீர்வளங்களில் 97 சதவீதம் உப்பு நீரே. 3 சதவீதம் மட்டுமே நன்னீர். இந்த நீரையும் போட்டிப்போட்டுக்கொண்டு மாசுபடுத்திவருகின்றனர் மக்கள். நிலத்தில் மிச்சம் மீதியுள்ள நிலத்தடி நீரையும் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சாத குறை. உலகில் தண்ணீர் தேவை ஜிவ்வென இழுத்துக்கொண்டிருக்கும் நிலையில், நீர் இருப்போ தள்ளாடுகிறது. அப்படியானால், தண்ணீருக்காக யுத்தம் வருமோ? கவலை வேண்டாம்... நிலப்பரப்பில் நீர் தீர்ந்தாலும் இருக்கவே இருக்கிறது. கடல்!

கடல் நீரை அப்படியே எடுத்துப் பருகினால்தானே உப்புச்சுவை தெரியும். உப்பு நீக்கி சுத்திகரித்து பருகினால், உப்பு இருக்கும் இடமே தெரியாது. சென்னைக்கு அருகே மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம் இப்படித்தான் தொடங்கியிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் வங்காள விரிகுடா தண்ணீர், சென்னை வீட்டுக் குழாய்களில் கொட்ட இருக்கிறது.
உலகில் இப்போது 7,500 உப்பு நீக்கி நிலையங்கள் இருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகள், வளைகுடா நாடுகளில் மக்களின் குடிநீர் தேவையைக் கடல் நீர்தான் நிவர்த்திசெய்கிறது. தினமும் கோடிக்கணக்கான லிட்டர் கடல் நீர், மக்களின் வயிற்றில் குடிநீர் வார்த்துவருகிறது!

தொழில்நுட்பம் 1

 கடல் நீர் எப்படி குடிநீராகிறது? இது ரொம்ப சிம்பிள். பள்ளியில் படித்த தொழில்நுட்பம்தான். தலைகீழ் சவ்வூடு பரவல். அந்த முறையில் சுலபமாக உப்பை நீக்கிவிடலாம். சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் இந்தத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதே.

தொழில்நுட்பம் 2

வளைகுடா நாடுகளில் வேறொரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக குழாய் நீரை நன்றாகச் சூடாக்கி, ஆற வைத்து
பருகியிருக்கிறீர்களா? தண்ணீரைக் காய்ச்சுவதற்கு முன் இருந்த சுவை, அதைச் சூடாக்கிய பின் இருக்காது. தண்ணீரைச் சூடாக்கும்போது அதில் கலந்துள்ள தாதுக்கள் குறைந்துவிடும். கனல்சக்தி மூலம் உப்பு நீக்கும் திட்டமும் இப்படித்தான். வளைகுடா நாடுகளில் கடல் நீரை பிரமாண்ட பாய்லர்களில் பெட்ரோல், டீசல் கொண்டு சூடாக்கி, குளிர்வித்து, சில  தொழில்நுட்பங்கள் மூலம் உப்பு நீக்கி பயன்படுத்துகின்றனர்.

தொழில்நுட்பம் 3

இவை இரண்டும் 50 ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பம்தான். 2,400 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க கப்பல் மாலுமிகள் ஆவியாக்கும் முறையைப் பயன்படுத்தி கடல் நீரில் உப்பை நீக்கிக் குடிநீராக்கி உபயோகப்படுத்துகின்றனர் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ‘ஆவியாதல்’ முறையும் ஏற்கனவே சொன்னது போலத்தான். உப்பு நீரை பலமுறை கொதிக்க வைத்து குளிரூட்டி வடிகட்டிப் பயன்படுத்தினால், உப்புச்சுவை குறைந்துகொண்டே வரும்.

தொழில்நுட்பம் 4

பெருகிவரும் மக்கள்தொகை, மாசடைந்து வரும் தண்ணீர் ஆகியவற்றின் காரணமாக, வருங்காலங்களில் தேவை இரட்டிப்பாகலாம். அப்போது தண்ணீர் தேவையைத் தீர்மானிப்பதில் கடல் நீரே தீர்வாக இருக்கலாம். எல்லா நாடுகளிலும் சுலபமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு தொழில் நுட்பமும் கடல் நீரை குடி நீராக மாற்ற உதவுகிறது. அது அனல் மின்சார நிலையம் அல்லது அணுமின் நிலையத்தின் டர்பைன் வெளிக் கழிவிலிருந்து வெளியேறும் வெப்பத்தை உபயோகிப்பது. எரிபொருள் வளங்கள் இல்லாத நாடுகளில் சவ்வூடு பரவல் முறையில் கோடிகணக்கில் பணம் செலவு செய்து, கடல் நீரைக் குடிநீராக்குவதைவிட, மலிவான வழியில் அனல்மின் அல்லது அணுக்கரு வெப்ப சக்தியைப் பயன்படுத்தி கடல் நீரைக் குடிநீராக்கலாம்.

உலகில் 2025-ம் ஆண்டில் மக்கள்தொகை 800 கோடியாக உயரும் என்றும் இவர்களில் 100 கோடி பேருக்கு மட்டுமே சுத்தமான குடிநீர் கிடைக்கும் என்று குண்டு வீசியிருக்கிறது சமீபத்திய அமெரிக்க ஆய்வு. அப்போது மக்களின் தண்ணீர் தேவையைத் தீர்க்கப்போவது கடல் அன்னைதான்!

தாகம் தீர்க்கும் கடல்!

* வளைகுடா நாடுகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் 1,483 நிலையங்கள் உள்ளன. முதன்முதலில் இதற்கான நிலையம் அமைத்த நாடு - குவைத் (1957). ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், கத்தார் ஆகிய மூன்று நாடுகளிலும் சேர்ந்து தினமும் 50 கோடி லிட்டர் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது.
* 1965-ல் இஸ்ரேல், 1970-ல் சவுதி, 1997-ல் ஜப்பான், 2000-ல் கத்தார் எனப் பல நாடுகளிலும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகின்றன.
* 2000-ல் அமெரிக்காவின் டெக்சாஸ், ஃபுளோரிடா, அட்லாண்டா, கலிஃபோர்னியா ஆகிய மாகாணங்களில் 1,200 உப்பு நீக்கி நிலையங்கள் அமைக்கப்பட்டன.
* 2000-ம் ஆண்டு நிலவரப்படி உலகில் பல நாடுகளில் தினமும் 600 கோடி லிட்டர் கடல் நீர் குடிநீராக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
* இந்தியாவில் 2004-ம் ஆண்டிலேயே ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறிய நிலையங்கள் அமைக்கப்பட்டு, தினமும் 30 ஆயிரம் லிட்டர் கடல் நீர் குடி நீராக்கப்பட்டுவருகிறது.
* ஆயிரம் லிட்டர் கடல் நீரில் உப்பு நீக்க ரூ.200 முதல் ரூ.250 வரை செலவு ஆகும்.

முத்தாரம், 07/06/2010

19/04/2010

காணாமல் போகும் கர்ஜனை!


கம்பீர கர்ஜனைக்கும் ஆஜானுபாகு தோற்றத்துக்கும் வீரத்துக்கும் அடையாள விலங்கு, சிங்கம். இப்போது அதற்கு போதாத காலம். புலி, யானை போன்ற ஜாம்பவான்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் குறைந்து வருவதைப் போலவே, சிங்கங்களின் எண்ணிக்கையும் நம் நாட்டில் சர்ரென குறைந்துவருகிறது. இப்போது 250 - 300 சிங்கங்கள் மட்டுமே இருக்கும் என அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகி உள்ளது. மற்ற நாடுகளிலும் இதே கதிதான்!

குஜராத்தில் உள்ள கிர் காடு என்றால், ஒரே விலங்கு மட்டுமே நம் கண் முன்னே வந்து நிற்கும். அது சிங்கம்! இந்தியாவில் சிங்கங்கள் வாழும் ஒரே ஒரு காடு இதுதான். சிங்கங்கள் மிகுந்த இப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு ‘கிர் தேசிய பூங்கா’வாகப் பராமரிக்கப்படுகிறது. சிங்கங்கள் அடந்த காட்டுப் பகுதிகளை விரும்புவதில்லை. இலையுதிர் காடுகளே இவற்றின் விருப்பம். கிர் காடுகள் அந்த ரகத்தைச் சேர்ந்தவைதான். அதனால், இயல்பாகவே கிர் காட்டில் சிங்கங்கள் உலா வருகின்றன. இக்காடு 1412 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது.

2006-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 359 சிங்கங்கள் இந்தக் காட்டை அலங்கரித்தன. கடந்த 3 ஆண்டுகளிலோ 100 சிங்கங்கள் இறந்துள்ளன. இவற்றில் இயற்கையாகவே இறந்த சிங்கங்கள் சில மட்டுமே. அவற்றின் பல்லுக்காக வேட்டையாடப்பட்டும் தொற்று நோயாலும் இறந்தவை பல.

உலக அளவில் சிங்கத்தின் பல், எலும்பு மற்றும் முடி ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு. அதனால், சிங்கங்கள் சட்ட விரோதமாகவும் ஈவு இரக்கமின்றியும் வேட்டையாடப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 15 சிங்கங்கள் பல்லுக்காகக் கிர் காட்டில் கொல்லப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களில் மட்டும் 5 சிங்கங்கள் தொற்று நோயால் இறந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன. பிரேத பரிசோதனையில் இச்சிங்கங்களுக்கு ரேபிஸ் தொற்றுநோய் தாக்கியிருந்தது தெரிய வந்தது. தப்பித்தவறி கிணற்றில் விழுந்தும் மின்சார வேலிகளை மிதித்தும் சிங்கங்கள் இறந்தது அடுத்த
சோகம்!

கிர் காட்டில் சிங்கங்களின் எண்ணிக்கை குறைவது புதிதல்ல. 1907-ம் ஆண்டில் சிங்கங்கள் காட்டுமிராண்டித்தனமாக வேட்டையாடப்பட்டன. கணக்கெடுப்பில் 13 முதல் 25 சிங்கங்களே கிர் காட்டில் இருப்பதாகத் தெரிய வந்தது. கிர் காடுகள் அமைந்துள்ள ஜூனாகத் மாவட்ட நவாப் சிங்கங்களைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். சிங்கங்களைக் கொல்ல தடை விதித்தார். அதன் விளைவாக சிங்கங்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டு, மெல்ல மெல்ல அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அவர் அப்போது மேற்கொண்ட முயற்சியால். சிங்கங்களின் எண்ணிக்கை மூன்று சதங்களைத் தாண்டியது. இப்போதும் அதுபோன்ற ஒரு பாதுகாப்பு நடவடிக்கையை விரும்புகின்றனர் விலங்குகள் நல ஆர்வலர்கள்.

இந்தியா தவிர சிங்கங்கள் நிறைந்துள்ள கண்டம் ஆப்பிரிக்கா. இங்கும் அழிவுநிலைதான். நமீபியா, கென்யா, தான்சானியா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள 30 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பு காடுகளில் சிங்கங்கள் நிறைய உள்ளன. 1990-களில் ஒரு லட்சம் சிங்கங்கள் வரை இக்காடுகளை அலங்கரித்தன. 2004-ல் இந்த எண்ணிக்கை அதளபாதாளத்தில் சென்றது. 14 ஆண்டுகளில் 43 ஆயிரம் சிங்கங்கள் மடிந்தும் , கொல்லப்பட்டும் தொற்று நோயாலும் மறைந்தன. 2004-ல் தொற்றுநோய் தாக்கியபோது ஒரே நேரத்தில் ஆயிரம் சிங்கங்கள் ஆப்பிரிக்காவில் இறந்தது மிகப்பெரிய சோகம்.

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 30 முதல் 50 சதவீதம் சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகச் சர்வதேச விலங்குகள் நல நிதியம் கவலை தெரிவித்துள்ளது. இப்போதைய நிலையில் 16, 500 சிங்கங்கள் மட்டுமே ஆப்பிரிக்காவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சிங்கத்தின் பற்களும் எலும்புகளும் கலையம்சமுள்ள பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. ஆப்பிரிக்காவில் சராசரியாக தினந்தோறும் 2 முதல் 3 சிங்கங்கள் கொல்லப்படுகின்றன. இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், சிங்கங்களைப் புத்தகத்தில் மட்டுமே பார்க்கும் அரிய விலங்காகிவிடும் என்று சர்வதேச விலங்குகள் நல நிதியம் எச்சரித்துள்ளது.

இந்திய, ஆப்பிரிக்க நாட்டு சிங்கங்களுக்கு மட்டுமல்ல, தென் ஆப்பிரிக்க சிங்கங்களும் அழியும் விலங்குகள் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. உலகிலேயே இக்காட்டுப் பகுதிகளில்தான் அரிய வகை வெள்ளை சிங்கங்கள் உள்ளன. 1994-ம் ஆண்டில் 100  வெள்ளை சிங்கங்கள் அங்கு இருந்தன. இப்போது 75 - 80 சிங்கங்கள் மட்டுமே உள்ளன.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் பெரும்பாலானவை ஏழை நாடுகளாக இருப்பதால், அங்கு பலர் சட்டவிரோதமாக விலங்குகளைக் கொல்வதைத் தொழிலாகவே செய்கின்றனர். இந்தியாவில் பெரும்பாலும் அஜாக்கிரதையாகவே சிங்கங்கள் மடிகின்றன. ‘சிங்கம் இல்லா உலகம்’ என்ற நிலை ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், உடனடி தேவை, அதிரடி நடவடிக்கை!


சோம்பேறி ஆண்!


* பூனை இனத்தைச் சேர்ந்த விலங்கு சிங்கம். இந்த இனத்திலேயே மிகப் பெரிய விலங்கு இதுதான்.
* ‘சிங்கம் சிங்கிளாதான் வரும்’ என்பதெல்லாம் சினிமாவுக்கு மட்டும்தான் பொருந்தும். இவை கூட்டமாக வாழும் இயல்புடையவை.
* ஆண் சிங்கம் 120 - 150 கிலோ எடை இருக்கும். பெண் 100 கிலோ வரை இருக்கும்.
* சிங்கங்களுக்கு கேட்கும் திறன் மிக அதிகம்.
* பெரும்பாலும் பெண் சிங்கங்களே மாடு, பன்றி, மான், ஆகிய விலங்குகளை வேட்டையாடும். ஆண் சிங்கங்கள் சரியான் சோம்பேறி!
* நன்கு வேட்டையாடி உண்ட சிங்கங்கள் பல நாட்களுக்கு வேட்டையாடாது. அந்த நேரத்தில் அதன் அருகே வேறு பிராணிகள் சென்றாலும் அது தாக்காது.
* சிங்கங்கள் 10 - 14 ஆண்டுகள் வரை வாழும். ஆப்பிரிக்க சிங்கங்கள் 15 ஆண்டுகள் வரை வாழும். 

- முத்தாரம்,  19-04-2010

08/03/2010

இந்திய ஹாக்கியின் எதிர்காலம்?

2010 உலகக் கோப்பை 

ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக 6 முறை தங்கம்; 1975-ல் உலக சாம்பியன்; ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 9 வெள்ளி - இவையெல்லாம் இந்திய ஹாக்கியின் பழங்கதைகள். இப்போது? அரை நூற்றாண்டு காலம் ஹாக்கி உலகில் புலியாக வலம்வந்த நம் அணி, பூனையாக மாறிவிட்டது. இனி, தேர்ச்சி பெறுமா இந்திய அணி?

தலைநகர் டெல்லியில் அமர்க்களமாகத் தொடங்கிவிட்டது 12-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி. 1982-ல் மும்பையில் 5-வது உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. அதன்பிறகு இப்போதுதான் இந்தியாவில் நடக்கிறது. சொந்த மண்ணில் நடைபெறுவதால், சாம்பியன் கனவில் நம் வீரர்கள் உள்ளனர். ஆனால், ஜெர்மனி, பாகிஸ்தான், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் அணிகளும் ஆக்ரோஷத்தோடு தயாராகிவிட்டன.

82 ஆண்டுகால இந்திய ஹாக்கி வரலாற்றில், 2008-ல் ஹாக்கி அணிக்கு தீராத களங்கம் ஏற்பட்டது. ஆம், அந்த ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் விளையாட வாய்ப்புக் கிடைக்காமல் தகுதிச் சுற்றிலேயே தோல்வியைத் தழுவியது நம் அணி. சமீப காலமாக வீரர்களின் சம்பள பிரச்னை, நிதி இல்லாமல் தடுமாறும் இந்திய ஹாக்கி ஃபெடரேஷன் என சோதனை மேல் சோதனையைச் சந்தித்துவருகிறது இந்திய ஹாக்கி.
தள்ளாடி நடை தளர்ந்து காணப்படும் தேசிய விளையாட்டான ஹாக்கி, ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்தது. இங்கிலாந்தின் தேசிய விளையாட்டான ஹாக்கி, ஆங்கிலேயர் உபயத்தால் நம் நாட்டுக்குள் அடி எடுத்துவைத்தது. சுமார் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்தது நம் ஹாக்கி வரலாறு.

1928-ல் நெதர்லாந்து ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி அறிமுகமான போதே, தங்கப் பதக்கத்தை வசமாக்கியது இந்தியா. அன்று நம் வீரர்களின் வெற்றியைத் தடுக்க முடியாமல் மற்ற அணிகள் மண்டியிட்டன. தொடர்ந்து 1956 வரை 6 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று திறமையை நிரூபித்தனர். 1960-ல் வெள்ளி, 1964-ல் தங்கம், 1968-ல் வெண்கலம், 1972-ல் வெண்கலம் என பதக்க வேட்டை தொடர்ந்தது.

1980 மாஸ்கோ ஒலிம்பிக் 
1980-ல் தமிழக வீரர் பாஸ்கரன் தலைமையில் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா. இதுவே நம்மவர்கள் ஒலிம்பிக்கில் வென்ற கடைசிப் பதக்கம். அதோடு, இந்தியாவின் பதக்க வேட்டைக்கு முற்றுப்புள்ளி.

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி சூப்பர் ஸ்டாராக விளங்கிய காலத்தில், 1971-ல் உலகக் கோப்பை போட்டிகள் அறிமுகமாயின. ஒலிம்பிக்கில் பின்னியெடுத்த நம் அணியால், உலகக் கோப்பையில் அவ்வளவாகச் சாதிக்க முடியவில்லை. முதல் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியே சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவுக்கு 3-ம் இடம். 1973-ல் நடைபெற்ற 2-வது உலகக் கோப்பையில் இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது நம் அணி. இம்முறை இந்திய அணிக்கு எதிராகக் களமிறங்கிய நெதர்லாந்து அணி கோப்பையை வென்றது.

1975-ல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 3-வது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக அஜித்பால் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை முதன்முறையாகக் கைப்பற்றியது. இதன்பின் நடைபெற்ற 8 உலகக் கோப்பைகளிலும் அரையிறுதிக்கூட இந்திய அணியால் தகுதி பெற முடியவில்லை.

முன்பு ஆசிய கண்டத்திலும் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. 2 முறை
1975 உலகக் கோப்பை
ஆசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளது நம் அணி. 1982 முதல் 1994 வரை தொடர்ச்சியாக 4 முறை இரண்டாமிடம். 1958 - 2002 வரை நடைபெற்றுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2 முறை தங்கம், 9 முறை வெள்ளி, ஒரு முறை வெண்கலம் பெற்று சாதனை படைத்துள்ளது!

சமீப காலமாக இந்தியாவின் வெற்றி குறிப்பிடும்படியாக இல்லை. ஒரே ஆறுதலாக, கடைசியாக நடைபெற்ற இரு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் நம் அணியே வெற்றி பெற்றுள்ளது. 2009-ல் கோலாலம்பூரில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அவ்வளவுதான்!
புள்ளிவிவரங்களும் பழங்கதைகளும் களத்தில் வெற்றி தேடித் தருவதில்லை. அன்றைய நாளில் ஜொலிக்கும் அணிக்கே வெற்றி வாய்ப்பு கிட்டும். அதற்கு துடிப்பான, திறமையான, வியூகத்தை மாற்றி விளையாடக்கூடிய வீரர்கள் தேவை. ஒவ்வொரு காலத்திலும் இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திர ஆட்டக்காரர்கள் இருந்தனர். தயான்சந்த் (1928-36), பல்பீர் சிங் (1948-56), அஜித்பால் சிங் (1966-75), பாஸ்கரன் (1976-87), தன்ராஜ்பிள்ளை (1989-2004) உள்பட பலரை உதாரணமாகச் சொல்லலாம். இன்றோ இப்படி குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு வீரர்கள் இல்லை.

இன்றைய அணியில்  சூர்பா சிங், சர்தார் சிங், ராஜ்பால் சிங், சுனில் ஆகியோர் மட்டுமே எதிர்பார்க்கப்படும் வீரர்களாக உள்ளனர். இதுபோன்ற பிரச்னைகளுக்கு இடையே பழையை நிலையை இந்தியாவால் எட்ட முடியுமா?

 “நீண்ட காலமாகவே ஹாக்கிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. நம்
தன்ராஜ்பிள்ளை
நாட்டில் விளம்பர நிறுவனங்கள், ஸ்பான்சர்கள் என யாரும் ஹாக்கி வீரர்களைக் கண்டுகொள்வதும் இல்லை. கிரிக்கெட் விளையாட்டு எழுச்சி பெற்றுள்ளதால், ஹாக்கிக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. போதுமான நிதி ஒதுக்கீடு, நேர்மையான அணித் தேர்வு மற்றும் அணி நிர்வாகிகள் தேர்வு ஆகியவற்றை மேற்கொள்ளாத வரை இந்திய ஹாக்கி புத்துணர்வு பெறுவது சாத்தியமில்லை” என்கிறார் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ்பிள்ளை.

உலக அளவில் சூப்பர் ஹீரோவாக வலம் வந்து, இன்று தெற்காசிய நாடுகளில் அறிமுக ஹீரோ போல சுருங்கிவிட்ட இந்திய ஹாக்கி அணி மீண்டும் பழைய நிலையை அடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதற்கு அச்சாரமாக இருக்கட்டும் உலகக் கோப்பை!

உலகக் கோப்பை துளிகள்!

* உலகக் கோப்பை ஹாக்கியில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த பல அணிகள் பங்கேற்றுள்ளன. அரையிறுதி வரை தகுதி பெற்ற ஒரே அணி, கென்யா. ஆண்டு - 1971.
* ஜெர்மனி - கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என இரு நாடுகளாக இருந்தவரை அந்த அணியால் கோப்பையைக் கைபற்ற முடியவில்லை. ஒன்றான பிறகு 1990 முதல் 2006 வரை நடைபெற்ற உலகக் கோப்பைகளில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஜெர்மனி.
* உலகக் கோப்பையில் அதிகபட்சமாக பாகிஸ்தான் 4 முறை, நெதர்லாந்து 3 முறை, ஜெர்மனி 2 முறை, இந்தியா, ஆஸ்திரேலியா தலா ஒரு முறை சாம்பியன் அந்தஸ்தை அனுபவித்துள்ளன.
1973  உலகக் கோப்பை
* உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் இருமுறை மட்டுமே கூடுதல் கூடுதல் நேரத்துக்குப் பின் ‘பெனால்டி’ வாய்ப்பு மூலம் வெற்றி-தோல்வி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1973-ல் இறுதியாட்டத்தில் இந்தியா -  நெதர்லாந்து வெற்றி வாய்ப்பும், 1994-ல் நெதர்லாந்து - பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பும் ‘பெனால்டி’ முறையிலேயே தீர்மானிக்கப்பட்டது.
* கடந்த இரு உலகக் கோப்பைகளில் தென்கொரிய அணி மட்டுமே அரையிறுதி வரை தகுதிபெற்ற ஒரே ஆசிய நாடு.
* ஹாக்கியைக் கண்டுபிடித்த இங்கிலாந்து 1986-ல் ஒரே ஒரு முறை மட்டுமே இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்று ஆஸ்திரேலியாவிடம் கோப்பையைக் கோட்டைவிட்டது.

 - முத்தாரம்,  08-03-2010

04/01/2010

ஓட்டு போடாவிட்டால் குற்றமா?

‘உள்ளாட்சித் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்’ என்ற சட்டத்தை குஜராத் மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. வாக்களிக்கவில்லை எனில் அதற்கான காரணத்தை ஒரு மாதத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் வாக்களர்களுக்கு ‘செக்’ வைத்துள்ளது குஜராத் அரசு. ஏற்கனவே 32 நாடுகளில் ‘கட்டாய வாக்களிப்புச் சட்டம்’ அமலில் உள்ளது. இந்தியாவுக்கு இது சரிப்படுமா?

மக்களாட்சியின் அர்த்தமே மக்கள் முழுமையாக அதில் பங்கேற்கும் போதுதான் கிடைக்கிறது. இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளில் முக்கியமான ஒன்றுதான் வாக்குரிமை. 18 வயது நிரம்பியவர்கள் தங்களுக்குப் பிடித்த நபர்களை தங்களின் பிரதிநிதியாகப் பாராளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்க முடியும்.

70 கோடிக்கும் அதிக வாக்காளர்களைக் கொண்ட நம் நாட்டில் 30 கோடிப் பேர் வாக்குச்சாவடி பக்கமே தலைகாட்டுவதில்லை. பெரும்பான்மை மக்களின் ஆதரவு இல்லாமலேயே ஒருவர் மக்கள் பிரதிநிதியாகி விடுகிறார். நம் நாட்டில் வாக்களிப்பதற்காக விடப்படும் விடுமுறையைப் பொழுதுபோக்கு தினமாகவே பலர் கழிக்கின்றனர். வாக்களிக்காதவர்களில் மெத்தப் படித்தவர்களே அதிகம் இடம் பிடிப்பது அடுத்த வேதனை.

கடந்த சில தேர்தல்களை உற்றுநோக்கினால் தொடர்ந்து இந்தியாவில் வாக்குப்பதிவு சதவீதம் இறங்குமுகத்தில் இருப்பதை அறியலாம். இந்நிலையில்தான் குஜராத் மாநில அரசு இந்தச் சட்டத்தை இயற்றியுள்ளது.
உலகில் முதன் முதலில் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்துல் 1777-ம் ஆண்டில் கட்டாய வாக்களிப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த மக்கள் தொடர்ந்து வாக்களிக்காமலேயே இருந்துள்ளனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு, அப்போது இப்படி ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். சட்டத்தை மீறி தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. காலப்போக்கில் அங்கு இச்சட்டம் காலாவதியாகிவிட்டது. 1907-ல் ஸ்பெயினிலும் 1917-ல் ஹாலந்திலும் 1929-ல் ஆஸ்திரியாவிலும் கூட கட்டாய வாக்களிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. காலப்போக்கில் இந்நாடுகளிலும் இச்சட்டம் காணாமல் போய்விட்டன.

இப்போது உலகம் முழுவதும் 34 நாடுகளில் கட்டாய வாக்களிப்புச் சட்டங்கள் அமலில் உள்ளன. ஆனாலும் தீவிரமாக அமல்படுத்தும் நாடுகள் 14 மட்டுமே. அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சிலி, காங்கோ, ஈக்வெடார், பிஜி  தீவு, பெரு, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, துருக்கி, உருகுவே உள்பட சில நாடுகளில் மட்டுமே கட்டாய வாக்களிப்புச் சட்டம் மிகவும் கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது.

அர்ஜெண்டினாவில் 18 - 70 வயதுக்குட்பட்டவர்கள் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். 71 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பினால் வாக்களிக்கலாம். ஆஸ்திரேலியாவில் 18 வயது நிரம்பியவர்கள் மாநில மற்றும் தேசிய அளவிலான தேர்தல்களில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். பிரேசிலில் 18 வயதுக்குட்பட்டவர்களும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களையும் தவிர்த்து மற்ற அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். சிலியில் புதிதாக வாக்களர் பட்டியலில் இடம் பிடிப்பவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
ஈக்வெடாரில் 18 - 65 வயதுக்குட்பட்டவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.


இந்நாடுகளில் வாக்களிக்காதவர்கள் சரியாக காரணத்தை முறைப்படி தெரிவிக்க வேண்டும். காரணம் ஏறுக்கொள்ளும்படி இல்லாவிட்டால், அபராதம்தான்! துருக்கியில் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் வாக்களிக்காவிட்டால், 3 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, பிரேசில் நாடுகளில் வாக்களர் நோயாளியாகவோ வெளிநாட்டிலோ இருந்தால் அபராதம் விதிப்பதில்லை. அர்ஜெண்டினாவில் நோயுற்று இருந்தாலோ 500 கி.மீ. தொலைவில் இருந்தாலோ தண்டனை கிடையாது. நோயாளிகள் மருத்துவச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். வெளியூர் சென்றவர்கள் எந்த ஊரில் இருந்தேன்?, ஏன் சென்றேன்? போன்ற விவரங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.

கட்டாய வாக்களிப்புச் சட்டத்தை நிறைவேற்றிய பின் கண்டுகொள்ளாத நாடுகளும் உள்ளன. பெல்ஜியம், பொலிவியா, கோஸ்டாரிகா, டொமினிக்கன், எகிப்து, பிரான்ஸ், கிரீஸ், கவுதமாலா, இந்தோனேசியா, இத்தாலி, லக்‌ஷ்ம்பர்க், மெக்சிகோ, பனாமா, பராகுவே, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வெனிசுலா ஆகிய நாடுகளில் கட்டாய வாக்களிப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், கட்டாயப்படுத்துவதில்லை!

பெல்ஜியத்தில் தொடர்ந்து ஒருவர் வாக்களிக்காமல் இருந்தால், அவருடைய வாக்குரிமையைப் பறிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. பெரு, கிரீஸ், பொலிவியா ஆகிய நாடுகளில் வாக்களிக்கவில்லை என்றால், 3 மாத சம்பளத்தை அரசுக்கு அபராதமாகச் செலுத்தக் கூறுகிறது சட்டம். ஆனாலும் இதுபோன்ற தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. மாறாக இந்நாடுகளில் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.

வெளிநாடுகள் சிலவற்றில் ஒரு புறம் கண்டிப்புடனும், இன்னும் பல நாடுகளில் ஏட்டளவிலும் கட்டாய வாக்களிப்புச் சட்டங்கள் உள்ளன. குஜராத் மாநிலத்தில் கட்டாய வாக்களிப்புச் சட்டம் இயற்றப்பட்டதையடுத்து பாராளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலுக்கும் இதுபோன்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழவே செய்கின்றன. ஆனால், இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் ஒருவரை கட்டாயப்படுத்தி வாக்களிக்கச் செய்ய முடியாது. அதற்குப் பதிலாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யலாம் எறு தேர்தல் விதிகளை அமல்படுத்தும் அதிகாரிகளே கூறுகின்றனர்.

குஜராத் அரசின் சட்டம் எந்தளவு சாத்தியம்? இனிவரும் காலங்களிலேயே அது தெரியவரும். அதுவரையில் வாக்காளர் இஷ்டம்தான்!

எவ்ளோவ் ஓட்டு!

* உலகிலேயே ஆஸ்திரேலியாவில்தான் அதிக அளவில் வாக்களிக்கின்றனர். சராசரியாக அந்நாட்டில் 95 சதவீத வாக்குகள் பதிவாகின்றன. அடுத்த இடத்தைப் பிடிப்பது சிலி. அங்கு 93 சதவீதம். இந்த இரு நாடுகளிலும் கட்டாய வாக்களிப்புச் சட்டம் அமலில் உள்ளது. இச்சட்டம் அமலில் உள்ள பிரேசில் (83%), சுவிட்சர்லாந்து (86%) என நிறைய ஓட்டுகள் பதிவாகின்றன.
* இச்சட்டம் அமலில் இருந்தும் கண்டுகொள்ளப்படாத பெல்ஜியம் (91%), கோஸ்டாரிகா (81%), பிரான்ஸ் (76%), கிரீஸ் (86%), லக்ஸம்பர்க் (85%), இத்தாலி (90%) ஆகிய நாடுகளில் அதிக வாக்குகளே பதிவாகின்றன.
* இதுபோன்ற சட்டமே இயற்றப்படாத மால்டா (94%), டென்மார்க் (87%), ஜெர்மனி (86%), ஹாலந்து (83%), ருமேனியா (81%), பல்கேரியா (80%), இஸ்ரேல் (80%), போர்ச்சுக்கல் (79%), இங்கிலாந்து (76%), தென் கொரியா (75%) ஆகிய நாடுகளிலும் அதிகமாகவே வாக்குகள் பதிவாகின்றன.
* இந்தியாவில்..? வெறும் 54 சதவீதம்தான்! 

- முத்தாரம், 04/01/2010