04/01/2010

ஓட்டு போடாவிட்டால் குற்றமா?

‘உள்ளாட்சித் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்’ என்ற சட்டத்தை குஜராத் மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. வாக்களிக்கவில்லை எனில் அதற்கான காரணத்தை ஒரு மாதத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் வாக்களர்களுக்கு ‘செக்’ வைத்துள்ளது குஜராத் அரசு. ஏற்கனவே 32 நாடுகளில் ‘கட்டாய வாக்களிப்புச் சட்டம்’ அமலில் உள்ளது. இந்தியாவுக்கு இது சரிப்படுமா?

மக்களாட்சியின் அர்த்தமே மக்கள் முழுமையாக அதில் பங்கேற்கும் போதுதான் கிடைக்கிறது. இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளில் முக்கியமான ஒன்றுதான் வாக்குரிமை. 18 வயது நிரம்பியவர்கள் தங்களுக்குப் பிடித்த நபர்களை தங்களின் பிரதிநிதியாகப் பாராளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்க முடியும்.

70 கோடிக்கும் அதிக வாக்காளர்களைக் கொண்ட நம் நாட்டில் 30 கோடிப் பேர் வாக்குச்சாவடி பக்கமே தலைகாட்டுவதில்லை. பெரும்பான்மை மக்களின் ஆதரவு இல்லாமலேயே ஒருவர் மக்கள் பிரதிநிதியாகி விடுகிறார். நம் நாட்டில் வாக்களிப்பதற்காக விடப்படும் விடுமுறையைப் பொழுதுபோக்கு தினமாகவே பலர் கழிக்கின்றனர். வாக்களிக்காதவர்களில் மெத்தப் படித்தவர்களே அதிகம் இடம் பிடிப்பது அடுத்த வேதனை.

கடந்த சில தேர்தல்களை உற்றுநோக்கினால் தொடர்ந்து இந்தியாவில் வாக்குப்பதிவு சதவீதம் இறங்குமுகத்தில் இருப்பதை அறியலாம். இந்நிலையில்தான் குஜராத் மாநில அரசு இந்தச் சட்டத்தை இயற்றியுள்ளது.
உலகில் முதன் முதலில் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்துல் 1777-ம் ஆண்டில் கட்டாய வாக்களிப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த மக்கள் தொடர்ந்து வாக்களிக்காமலேயே இருந்துள்ளனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு, அப்போது இப்படி ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். சட்டத்தை மீறி தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. காலப்போக்கில் அங்கு இச்சட்டம் காலாவதியாகிவிட்டது. 1907-ல் ஸ்பெயினிலும் 1917-ல் ஹாலந்திலும் 1929-ல் ஆஸ்திரியாவிலும் கூட கட்டாய வாக்களிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. காலப்போக்கில் இந்நாடுகளிலும் இச்சட்டம் காணாமல் போய்விட்டன.

இப்போது உலகம் முழுவதும் 34 நாடுகளில் கட்டாய வாக்களிப்புச் சட்டங்கள் அமலில் உள்ளன. ஆனாலும் தீவிரமாக அமல்படுத்தும் நாடுகள் 14 மட்டுமே. அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சிலி, காங்கோ, ஈக்வெடார், பிஜி  தீவு, பெரு, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, துருக்கி, உருகுவே உள்பட சில நாடுகளில் மட்டுமே கட்டாய வாக்களிப்புச் சட்டம் மிகவும் கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது.

அர்ஜெண்டினாவில் 18 - 70 வயதுக்குட்பட்டவர்கள் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். 71 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பினால் வாக்களிக்கலாம். ஆஸ்திரேலியாவில் 18 வயது நிரம்பியவர்கள் மாநில மற்றும் தேசிய அளவிலான தேர்தல்களில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். பிரேசிலில் 18 வயதுக்குட்பட்டவர்களும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களையும் தவிர்த்து மற்ற அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். சிலியில் புதிதாக வாக்களர் பட்டியலில் இடம் பிடிப்பவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
ஈக்வெடாரில் 18 - 65 வயதுக்குட்பட்டவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.


இந்நாடுகளில் வாக்களிக்காதவர்கள் சரியாக காரணத்தை முறைப்படி தெரிவிக்க வேண்டும். காரணம் ஏறுக்கொள்ளும்படி இல்லாவிட்டால், அபராதம்தான்! துருக்கியில் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் வாக்களிக்காவிட்டால், 3 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, பிரேசில் நாடுகளில் வாக்களர் நோயாளியாகவோ வெளிநாட்டிலோ இருந்தால் அபராதம் விதிப்பதில்லை. அர்ஜெண்டினாவில் நோயுற்று இருந்தாலோ 500 கி.மீ. தொலைவில் இருந்தாலோ தண்டனை கிடையாது. நோயாளிகள் மருத்துவச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். வெளியூர் சென்றவர்கள் எந்த ஊரில் இருந்தேன்?, ஏன் சென்றேன்? போன்ற விவரங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.

கட்டாய வாக்களிப்புச் சட்டத்தை நிறைவேற்றிய பின் கண்டுகொள்ளாத நாடுகளும் உள்ளன. பெல்ஜியம், பொலிவியா, கோஸ்டாரிகா, டொமினிக்கன், எகிப்து, பிரான்ஸ், கிரீஸ், கவுதமாலா, இந்தோனேசியா, இத்தாலி, லக்‌ஷ்ம்பர்க், மெக்சிகோ, பனாமா, பராகுவே, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வெனிசுலா ஆகிய நாடுகளில் கட்டாய வாக்களிப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், கட்டாயப்படுத்துவதில்லை!

பெல்ஜியத்தில் தொடர்ந்து ஒருவர் வாக்களிக்காமல் இருந்தால், அவருடைய வாக்குரிமையைப் பறிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. பெரு, கிரீஸ், பொலிவியா ஆகிய நாடுகளில் வாக்களிக்கவில்லை என்றால், 3 மாத சம்பளத்தை அரசுக்கு அபராதமாகச் செலுத்தக் கூறுகிறது சட்டம். ஆனாலும் இதுபோன்ற தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. மாறாக இந்நாடுகளில் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.

வெளிநாடுகள் சிலவற்றில் ஒரு புறம் கண்டிப்புடனும், இன்னும் பல நாடுகளில் ஏட்டளவிலும் கட்டாய வாக்களிப்புச் சட்டங்கள் உள்ளன. குஜராத் மாநிலத்தில் கட்டாய வாக்களிப்புச் சட்டம் இயற்றப்பட்டதையடுத்து பாராளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலுக்கும் இதுபோன்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழவே செய்கின்றன. ஆனால், இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் ஒருவரை கட்டாயப்படுத்தி வாக்களிக்கச் செய்ய முடியாது. அதற்குப் பதிலாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யலாம் எறு தேர்தல் விதிகளை அமல்படுத்தும் அதிகாரிகளே கூறுகின்றனர்.

குஜராத் அரசின் சட்டம் எந்தளவு சாத்தியம்? இனிவரும் காலங்களிலேயே அது தெரியவரும். அதுவரையில் வாக்காளர் இஷ்டம்தான்!

எவ்ளோவ் ஓட்டு!

* உலகிலேயே ஆஸ்திரேலியாவில்தான் அதிக அளவில் வாக்களிக்கின்றனர். சராசரியாக அந்நாட்டில் 95 சதவீத வாக்குகள் பதிவாகின்றன. அடுத்த இடத்தைப் பிடிப்பது சிலி. அங்கு 93 சதவீதம். இந்த இரு நாடுகளிலும் கட்டாய வாக்களிப்புச் சட்டம் அமலில் உள்ளது. இச்சட்டம் அமலில் உள்ள பிரேசில் (83%), சுவிட்சர்லாந்து (86%) என நிறைய ஓட்டுகள் பதிவாகின்றன.
* இச்சட்டம் அமலில் இருந்தும் கண்டுகொள்ளப்படாத பெல்ஜியம் (91%), கோஸ்டாரிகா (81%), பிரான்ஸ் (76%), கிரீஸ் (86%), லக்ஸம்பர்க் (85%), இத்தாலி (90%) ஆகிய நாடுகளில் அதிக வாக்குகளே பதிவாகின்றன.
* இதுபோன்ற சட்டமே இயற்றப்படாத மால்டா (94%), டென்மார்க் (87%), ஜெர்மனி (86%), ஹாலந்து (83%), ருமேனியா (81%), பல்கேரியா (80%), இஸ்ரேல் (80%), போர்ச்சுக்கல் (79%), இங்கிலாந்து (76%), தென் கொரியா (75%) ஆகிய நாடுகளிலும் அதிகமாகவே வாக்குகள் பதிவாகின்றன.
* இந்தியாவில்..? வெறும் 54 சதவீதம்தான்! 

- முத்தாரம், 04/01/2010

No comments:

Post a Comment