
இப்போதும், ‘எரிபொருட்களின் விலை எந்த நேரத்திலும் உயரலாம்’ என்று அலாரம் அடிக்கின்றன எண்ணெய் நிறுவனங்கள். சொல்லியடிக்கும் விலை உயர்வால் சோர்ந்துபோன ஐரோப்பிய நாடுகள் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக தாவர வித்துகளிலிருந்து கிடைக்கும் பயோ டீசல் தயாரிப்புக்கு எப்போதோ மாறிவிட்டன. ஆனால், ஏராளமான தாவர வித்துகள் கொட்டிக்கிடக்கும் இந்தியாவிலோ, இப்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது பயோ டீசல் உற்பத்தி!
பெட்ரோல், டீசல் விலையை வைத்துதான் நம் நாட்டில் விலைவாசியே பட்டியலிடப்படுகிறது. டீசல் விலை ஏறினாலே ஆட்டோ கட்டணம் முதல் காய்கறி வரை எல்லாப் பொருட்களின் விலையும் விர்ர்ர்.. என உயரத்தில் பறந்துவிடுகிறது. அமுதசுரபியாக எரிபொருளை அள்ளித் தரும் வளைகுடா நாடுகளில் ஒரு நாள் எண்ணெய் ஊற்றுகள் வற்றினால்..? எல்லோரும் ஏதாவது ஒரு மாற்று வழியைப் பின்பற்றிதானே ஆக வேண்டும். இப்படி ஒரு தொலைநோக்குப் பார்வையோடு பயோ டீசல் உற்பத்தியைக் கச்சிதமாகச் செய்துவருகின்றன ஐரோப்பிய நாடுகள்.
அதென்ன பயோ டீசல்?
எஸ்டர்கள் என்றழைக்கப்படும் எத்தனாலைக் கொண்டிருக்கும் தாவர எண்ணெய் அல்லது விலங்குக் கொழுப்பிலிருந்து கிடைக்கும் எண்ணெயைக் குறிப்பிடுவதே உயிரி எரிபொருள் (பயோ எரிபொருள்). இந்த எண்ணெயை வேதியியல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் கிடைப்பதே பயோ டீசல்!
உலக அளவில் மாற்று டீசல் தயாரிப்புக்காகச் சோதனைச் சாலைகள் பெருகியிருக்கின்றன. நாதியே இல்லாமல் சாலைகளில் வளரும் காட்டாமணக்கு விதை முதல் பாட்டி சுட்ட வடையில் மீந்துபோன எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு, வேம்பு, புங்கம், இலுப்பை, சோளம் என எந்தெந்த தாவர வித்துகளையெல்லாம் எண்ணெயாக மாற்ற முடிகிறதோ, அவை அனைத்தையுமே பயோ டீசலாக மாற்றிவிடலாம். நம் தேவைக்கு தகுந்த அளவு டீசலை வெளிநாட்டினரிடம் கையேந்தாமல், நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.
நம் நாட்டின் சராசரி ஆண்டுத் தேவை, 380 லட்சம் டன் டீசல். எரிபொருள் இறக்குமதிக்காக 90 ஆயிரம் கோடி ரூபாயை
செலவிடுகிறது நம் தேசம். தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. எனவே, விலை ஏற்றத்தையும் தவிர்க்க முடியவில்லை. இப்படி எரிபொருட்களின் தேவையும் விலையும் ஏறுமுகமாகவே இருப்பதால், பயோ டீசலுக்கு ஆதரவான குரல் நம் தேசத்தில் ஓங்கி ஒலிக்கவே செய்கிறது.

தாய்லாந்து, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் காட்டாமணக்கு, கரும்பு, சோளாம், வேம்பு எனப் பல தாவரங்களைக் கொண்டு ஜோராக பயோ டீசல் தயாரித்துவருகின்றனர். நம் தேசத்தில் மட்டும் 17 ஆயிரம் வகையான தாவரங்கள் இருக்கின்றன. இந்தத் தாவரங்கள் மூலம் ஆண்டுக்கு 60 லட்சம் டன் தாவர வித்துகள் வரை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றிலிருந்தே 45 மில்லியன் டன் பயோ டீசலை சுலபமாக உருவாக்கலாம் என்கின்றனர் பயோ டீசல் உற்பத்தியாளர்கள்.
கடந்த 2007-ம் ஆண்டில்தான் ஆண்டுக்கு 2 லட்சம் டன் பயோ டீசலை உருவாக்க மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்தது. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் பாமாயில் எண்ணெய் மற்றும் புங்க எண்ணெயிலிருந்தே பயோ டீசல் தயாரிக்கப்படுகிறது. இதுபோன்ற எண்ணெய்களை எக்காரணம் கொண்டும் இறக்குமதி செய்து பயோ டீசலை தயாரிக்கக்கூடாது என்பது அரசின் கொள்கைகளில் ஒன்று. அதேவேளையில் 2017-ம் ஆண்டுக்குள் 20 சதவீதம் அளவுக்கு பயோ டீசலை பயன்படுத்த இலக்கு நிர்ணயித்து தேசிய உயிரி எரிபொருள் கொள்கையும் வெளியிடப்பட்டிருக்கிறது.
தரிசு நிலங்களில் காட்டாமணக்கு உற்பத்தி செய்து, அதிலிருந்து பயோ டீசல் தயாரிக்க பச்சைக் கொடியும் காட்டியிருக்கிறது அரசு. கடந்த சில ஆண்டுகளாகத்தான் மாநில அரசுகள் தரிசு நிலங்களில் காட்டாமணக்கு பயிரிட்டு பயோ டீசலுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியிருக்கின்றன. ஆனால், இதற்கு முன்பே இந்தியாவில் தனி நபர்கள் பலர், பயோ டீசலை உருவாக்கும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 48 பெரிய பயோ டீசல் நிலையங்கள் நம் நாட்டில் தனியாரால் இயங்கிவருகின்றன. ஆனால், இவர்கள் உருவாக்கும் பயோ டீசல் இன்னும் வணிக ரீதியாக விற்பனைக்கு வரவில்லை!
தமிழகத்தில் சென்னை ஐ.சி.எஃப்.-பில் பயோ டீசல் மூலம் இயங்கும் ரயில் என்ஜின் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திருச்சி-லால்குடி, தஞ்சை-நாகூர் வழித்தடங்களில் பயோ டீசல் மூலம் ரயில்களே இயக்கப்படுகின்றன. இந்திய ரயில்வேயும் இந்தியன் ஆயின் கார்ப்பரேஷனும் பெட்ரோல், டீசல் எரிபொருட்களில் 10 சதவீதம் பயோ டீசலைக் கலந்து பயன்படுத்த இப்போது முன்வந்திருக்கின்றன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது வருங்காலம் பயோ டீசல் காலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!
பயோ வரலாறு
தாவர எண்ணெயிலிருந்து பயோ எரிபொருள் தயாரிக்கும் முறையை 1853-ம் ஆண்டிலேயே இங்கிலாந்து தொடங்கிவிட்டது. 1900-ம் ஆண்டில் பிரான்ஸில் கடலை எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருள் (பயோ டீசல்) மூலம் இயந்திரம் சுழற்றிக் காட்டப்பட்டது. இதன்பின் 1920 முதல் 1930 வரை பெல்ஜியம் , பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், ஜெர்மனி, பிரேசில், அர்ஜெண்டினா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் பயோ டீசல் தயாரிக்கும் முயற்சியில் இறங்கின. 1980-ல் தாய்லாந்தில் காட்டாமணக்கு மூலம் பயோ டோசல் வெற்றிகரமாக உருவாக்கிக் காட்டப்பட்டது. இதையடுத்தே உலகம் முழுவதும் பயோ டீசல் உற்பத்தி களைகட்டியது.

தாவர வித்துகளிலிருந்து பயோ டீசல் தயாரிப்பதைப் போலவே, கறிக்கோழி, வாத்துகளின் இறகுகளைப் பயன்படுத்தியும் புதிய வகையான பயோ டீசலைத் தயாரிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள். அந்நாட்டு நெவாடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரசாயன மற்றும் உலோகவியல் பொறியியல் மாணவர்கள் இதைச் சாதித்திருக்கின்றனர். கறிக்கோழிகள் மற்றும் வாத்துகளை இறைச்சியாகப் பயன்படுத்தும்போது இறகுகள் மற்றும் சில பாகங்கள் கழிக்கப்படுகின்றன. இவற்றில் 11 சதவீதம் கொழுப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக் கழிவுகளை தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து வேதியியல் மாற்றம் மூலம் பயோ டீசலாக மாற்ற முடியுமாம்!
எண்ணெய் டூ டீசல்
இயற்கையாகவே கிடைக்கும் பெட்ரோல், டீசலில் வழவழப்புத் தன்மை இருக்காது. ஆனால், தாவர எண்ணெய்களில் வழவழப்பு அதிகம். எனவே இவற்றை நேரடியாக எரிபொருளாகப் பயன்படுத்த முடியாது. இந்த வழவழப்பைப் பிரித்தெடுக்கும் முறைக்கு பெயர்தான் ‘டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன்’. இந்த வேதியியல் முறையில்தான் பயோ டீசல் தயாராகிறது. தாவர எண்ணெயுடன் கிரியா ஊக்கியாக மெத்தனால் கலந்து சூடாக்கும்போது, கிளிசரின் மற்றும் பயோ டீசல் கலவை உருவாகிறது. இதைச் சுத்திகரித்து பயோ டீசல் தனியாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. கிளிசரினை சோப்பு தயாரிக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.
உதாரணமாக, 25 ஹெக்டேரில் காட்டாமணக்கு செடி வளர்த்தால், நாள்தோறும் சராசரியாக 250 லிட்டர் பயோ டீசலை உருவாக்கலாம். ஒரு லிட்டர் பயோ டீசல் தயாரிக்க உற்பத்திச் செலவு (எண்ணெய் விலையைத் தவிர்த்து) 4.50 ரூபாய்தான். தவிர 35 கிலோ கிளிசராலும் கிடைக்கும். சிறிய மாதிரி பயோ டீசல் பிளான்ட் அமைக்க ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை செலவாகும்.
முத்தாரம், 05-07-2010
No comments:
Post a Comment