ஒரு மாநகரமே உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில் வட சென்னையில் உள்ள காசிமேடு மட்டும் விழித்துக் கிடக்கிறது. முன்னிரவு 11 மணியிலிருந்து வங்கக் கடலின் காசிமேடு கரையை நோக்கி படகுகள் அணிவகுத்துவருகின்றன. பின்னிரவு 2 மணிக்கு பிறகு காசிமேடு உச்சகட்ட பரபரப்பில் மூழ்கிக்கிடக்கிறது. விடியும் வரையிலும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஜனத்திரளால் நிறைந்துக்கிடக்கிறது காசிமேடு. மீன்களால் புகழ்பெற்ற நெய்தல் நிலமான காசிமேடு, மீனவர்களின் கதைகளை ஆர்ப்பரித்து சொல்கிறது.
ஆங்கிலேயர்களின் மிச்ச சொச்சங்கள் சற்று அதிகம் உள்ள வட சென்னையின் கடற்கரை நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் இருக்கிறது காசிமேடு. தொடக்கத்தில், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் சென்னை துறைமுகத்துக்கு உள்ளேதான் இருந்தது. துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டபோது காசிமேடு மீன்பிடித் துறைமுகம் உருவாகி, 1984 முதல் தனித்து இயங்க ஆரம்பித்தது. சென்னையின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் இது. இந்த மீன் பிடித் துறைமுகத்தில் செயல்படும் மீன் சந்தைகள் சென்னையின் மீன் ‘ஹப்’ போல செயல்படுகின்றன. அந்த அளவுக்கு காசிமேட்டில் கிடைக்காத மீன் வகைகளே இல்லை.
ரேஷனுக்கு ஒதுக்கீடு
காசிமேட்டைச் சுற்றி பெரும்பாலும் மீனவர்கள்தான் வாசம் செய்கிறார்கள். காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பெரியது, சிறியதுமான விசைப்படகுகள், ஃபைபர் படகுகள், கட்டுமரங்கள் என சுமார் 4 ஆயிரம் படகுகளுக்கு மேல் உள்ளன. சுமார் 50 ஆயிரம் மீனவர்கள் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து கடலுக்குள் செல்வதும், கரை திரும்புவதுமாக தினந்தோறுமே திருவிழா கணக்காகக் காட்சியளிக்கிறது காசிமேடு. மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்வதையே பெரும் பயணத் திட்டத்துக்கு இணையாக வகுத்துக்கொண்டுதான் செல்கிறார்கள் மீனவர்கள். பெரும்பாலும் செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை நள்ளிரவு திரும்பும் வண்ணம்தான் பயணத்தை அமைத்துக்கொண்டு கடலுக்குள் செல்கிறார்கள் மீனவர்கள்.
கடலிலிருந்து கரைக்குத் திரும்பிய காசிமேடு மீனவர்கள், ஓரிறு நாள்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் கடலுக்குள் செல்ல ஆயத்தமாகிறார்கள். “ஒவ்வொரு பெரிய படகிலும் 10 பேர் என்ற அளவுல மீனவர்கள் செல்வோம். அதுல ஒருத்தர் சமைப்பதற்காக இருப்பாரு. படகை ஓட்ட டிரைவர், துணை டிரைவர்ன்னு இரண்டு பேர் இருப்பாங்க. மீதி பேரு மீன் பிடிப்பாங்க. ஒவ்வொரு முறையும் கரைக்குத் திரும்பிய பிறகு மீன்களை விற்று கிடைக்கிற காசில், ‘ரேஷ’னுக்கு காசு எடுத்து வைத்துவிடுவோம். ரேஷன் என்றால் மண்ணெண்ணெய், அரிசி, மளிகைச் சாமான், காய்கறிகள்தான். இதை வாங்கதான் காசை எடுத்து வைச்சுடுவோம். திரும்பவும் கடலுக்குள் போய், மீன்களைப் பிடிச்சுவர இதுதான் மூலதனம்.” என்கிறார் பல ஆண்டுகளாக விசைப் படகைச் செலுத்துபவரான மீனவர் விஜயராஜ்.
விதவிதமாக மீன்கள்
காசிமேட்டிலிருந்து மீனவர்கள் கிளம்பினால், பரந்துவிரிந்து கடலின் இருபுறங்களில் கிழக்கு, மேற்காக ஸ்ரீஹரிகோட்டா, நாகப்பட்டினம் வரை சென்று பெரும்பாலும் மீன் பிடிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் மீன் பிடிக்கச் செல்லும்போது எந்த இடத்தில் மீன்கள் அதிகம் கிடைக்கின்றன; இரவு நேரத்தில் எந்த இடத்தில் மீன்கள் அதிகம் வரும் போன்ற விவரங்களை எல்லாம் ஒரு தாளில் குறித்து வைத்துக்கொள்கிறார்கள் மீனவர்கள். மீன்களை கில்நெட், இழுவை வலை, தூண்டில் போன்றவற்றின் மூலமே மீன்பிடிக்கிறார்கள். இதில், கில்நெட் வலை மிகவும் பெரியது. சுமார் ஐந்து கி.மீ. தூரம் நீளம் கொண்டது இந்த வலை. மீன்கள் அதிகம் கிடைக்கும் இடத்தில் இந்த வலையை ஒரு நாள் முழுக்க விரித்துவிட்டு பார்த்தால், விதவிதமாக, ரகரகமாக வலையில் மீன்கள் துள்ளிக்கொண்டிருக்கும் என்கிறார்கள் மீனவர்கள்.
மீன்கள் அதிகம் கிடைக்கும் இடங்களை எல்லா மீனவர்களாலும் கணித்துவிட முடிவதில்லை. பல ஆண்டுகளாக கடலுக்குள் சென்றுவந்த அனுபவஸ்தர்களால் மட்டுமே கணிக்க முடியும். காசிமேடு மீனவர்கள் செல்லும் கடற்பகுதியில் பெரும்பாலும் வஞ்சிரம், வவ்வால், பாரை, கவளா, கடவரா, சுறா, கடம்பா, சங்கரா, அயிரை, முழியன், சீலா, காரப்பொடி, நெத்திலி, சூரை என மீன்களை அள்ளிக்கொண்டு வருகிறார்கள். இதேபோல இறால், நண்டுகளிலும் விதவிதமான வெரைட்டிகள் வலையில் நெளியும் என்கிறார்கள் மீனவர்கள். கடலில் 7 முதல் 10 நாட்கள் வரை உப்புக் காற்றை சுவாசித்து, உழைத்து, களைத்து பெட்டி பெட்டியாக மீன்களோடு திரும்புகிறார்கள் மீனவர்கள். பிடிக்கும் மீன்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக கையோடு பெரிய பெரிய ஐஸ்கட்டிகளையும் எடுத்து செல்கிறார்கள். பிடிக்கும் மீன்களை போட்டு வைப்பதற்காக படகின் அடிப்பாகத்தில் பெரிய கிடங்கு ஒன்றையும் கட்டி வைத்திருக்கிறார்கள். அந்த அறையைத் திறக்கும்போதே கவுச்சி
வாடையும் குளுமையும் ஆளைத் தூக்குகிறது.
தொடங்கும் ஏலம்
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இயங்கும் மீன்சந்தைகள் எல்லா நாளும் பரபரப்பாக இருந்தாலும் செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை இரவு மட்டும் பெரும் பரபரப்பாக இயங்குகின்றன. ஒரு பெரிய விசைப்படகு மீனவர்கள் குறைந்தபட்சம் 5 டன் மீன்களையாவதுப் பிடித்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால், இதே அளவில் இது தினமும் கிடைக்கும் எனச் சொல்லிவிட முடியாது. சுமாராக, ஒரு நாளைக்கு 200 டன் மீன்கள் காசிமேட்டுக்கு வருகின்றன. ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் இது கொஞ்சம் அதிகரிக்கிறது.
மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற படகுகள், இரவு 10 மணி முதலே கரைக்குத் திரும்பத் தொடங்குகின்றன. வரிசையாக வந்து நிறகும் படகுகளில் உள்ள மீன்களைத் தரம் வாரியாகப் பிரித்து கூடை கூடையாக வைக்கிறார்கள். இரவு 12 மணிக்கு மேல் பெண்கள் கையில் பெரியபெரிய கூடையுடனும் பெரிய பிளாஸ்டிக் டப்பாக்களுடன் வரத் தொடங்குகிறார்கள்.
கடலுக்குச் சென்று மீன்பிடிப்பது ஆண்கள் என்றாலும், கரையில் அதன் வணிகம் முழுவதையும் செய்வது பெண்கள்தான் என்று சொல்லுமளவுக்கு 12 மணிக்கு மேல் பெண்களின் கூட்டம் காசிமேட்டை நிறைக்கிறது. சரியாக இரவு 2 மணி ஆனதும் மீன் பிடித் துறைமுகத்தில் உள்ள சங்கு ஒலிக்கிறது. 2 மணி முதல் மீன் ஏலம் தொடங்குகிறது. அதை வெளிப்படுத்துவதற்காகவே இந்த சங்கு சத்தம். அந்த சங்கு சத்தம் கேட்டதும் எங்கிருந்துதான் கூட்டம் வந்தது என்று தெரியாத அளவுக்கு பெண்களும் ஆண்களும் மீன் கூடைகளைச் சுற்றி மொய்க்கிறார்கள். மீனவர்கள் பிடித்துவரும் மீன்கள் அனைத்துமே ஏலம் விடப்பட்டுதான் விற்பனையே நடக்கிறது. ஏலத்தில் எடுக்கும் மீன்களை அங்கே உள்ள மீன்சந்தையில் விற்போரும் உண்டு; அருகே உள்ள ஊர்களிலிருந்து வந்தவர்கள் ஆட்டோ, டெம்போ மூலம் அள்ளிக்கொண்டு போவதும் உண்டு.
பெண்கள் ராஜ்ஜியம்
ஆனால், இங்கே ஏலம் விடப்படும்போது ஒவ்வொரு இடத்திலும் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டு ஏலம் கேட்கிறார்கள். படகிலிருந்து மீன்களைக் கொண்டுவந்து வைப்பதுமாக படபடக்கிறார்கள் ஆண்கள். பெரும்பாலும் பெண்கள்தான் ஏலம்விடுகிறார்கள். அந்த அளவுக்கு இங்கே கரைக்கு மேலே பெண்களின் ராஜ்ஜியம். நான் இரவு 2 மணிக்கு மேலே ஏலம் விடும் இடத்தில் வட்டமாகச் சுற்றி நிற்கும் கூட்டத்தை எட்டி எட்டிப் பார்த்தேன். ‘‘கூடை ஆயிரம்... கூடை ஆயிரம்...’’, “சங்கரா, கடம்பா, வஞ்சிரம், வவ்வாலு” என்று கூவியபடியே அழைக்கிறார்கள் பெண்கள். அந்தப் பெண்களைச் சுற்றி பேரம்பேசுகிறார்கள் சில்லறையில் மீன் விற்கும் பெண்களும் வியாபாரிகளும். ஏலம் விடும் பெண்கள் தங்கள் கைகளில் ரூபாய் நோட்டுகளை பஸ் கண்டக்டர் போல விரல் இடுக்குகளில் லாவகமாக வைத்துக்கொண்டு, அந்தப் பரபரப்புக்கு மத்தியிலும் கச்சிதமாக சில்லறையைக் கைமாற்றுகிறார்கள்.
ஒவ்வொரு ஏலத்திலும் ஐந்தாறு கூடைகளில் கிலோ கணக்காக மீன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதனை போட்டி போட்டு ஏலம் எடுக்கிறார்கள் மீன் வியாபாரிகள். இந்த ஏலத்தில் சென்னை முழுவதும் மீன் விற்கும் வியாபாரிகளும் பெண்களும் நள்ளிரவில் கலந்துகொண்டு போட்டிப் போட்டுக்கொண்டு மீன்களை வாங்குகிறார்கள். அப்படி மீன்களை வாங்குபவர்கள் தயாராக பிளாஸ்டிக் பெட்டியில் கொண்டுவந்திருக்கும் ஐஸ்கட்டிகளுடன் சேர்ந்து மீனை அடுக்குகிறார்கள். அதேபோல கையோடு வாங்கிவந்த கல் உப்பை மீன்கள் மீது தூவுகிறார்கள். பின்னர் காத்திருக்கும் வண்டியில் ஏறி பறக்கிறார்கள். இவர்கள் சென்னையையும், திருவள்ளூர், காஞ்சிபுரம் எனப் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூரில் இருந்தும்கூட இங்கே டெம்போக்களில் வந்து மீன்களை வாங்கிவிட்டு செல்லும் மீன் வியாபாரிகளையும் காசிமேட்டில்
பார்க்க முடிந்தது.
பரபர மீன் சந்தை
மீனை வாங்கி அங்கேயே விற்பனை செய்ய மீன் சந்தைகள் உள்ளன. அந்த வேலையை பெரும்பாலும் காசிமேடு பகுதியில் வாழும் மீனப் பெண்களே செய்கிறார்கள். நான் சனிக்கிழமை இரவுதான் காசிமேடு மீன் பிடித் துறைமுகத்துக்கு சென்றிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை பொழுதில் அந்தப் பகுதியே மனித தலைகளால் நிறைந்துகிடந்தன. உப்புக்காற்றை சுவாசித்தபடி மீன்பிடித் துறைமுகத்தில் நடந்தேன். இது கடற்கரையா என்று சந்தேகப்படும் அளவுக்கு இரவில் நடந்த ஏல விற்பனையால் சேறும் சகதியுமாக காட்சியளித்தது மீன் பிடித் துறைமுகம். கூடவே கவுச்சி வாடையும் இன்னும் கொஞ்சம் தூக்கலாக இருந்தது. இன்னொரு புறம் அந்த காலை பொழுதிலும் சிறிய விசைப்படகுகள், கட்டுமரங்களில் மீன்கள் வந்துகொண்டேயிருந்தன.
பெரிய விசைப் படகுகள் நள்ளிரவிலேயே வந்துவிட, அதிகாலையில் சிறிய படகுகள் கரையை முற்றுகையிடுகின்றன. சிறிய படகு, கட்டுமர படகுகளிலிருந்தும் மீன்களை இறக்கிக்கொண்டேயிருந்தார்கள். திரும்பவும் பின்னிரவில் பார்த்த அதே ஏல வியாபாரம் களைகட்டுகிறது. இப்படியாக புதன்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 7 மணி வரை மீன்களை இறக்கி ஏலம் விட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் காசிமேட்டில் 7 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது என்கிறார்கள் மீனவர்கள். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் இரவு ஒரு மணிக்கே வியாபாரம் தொடங்கிவிடுகிறது. அன்றைய தினத்தில் மட்டும் காசிமேடுக்கு சுமார் 40 ஆயிரம் பேராவது வந்து செல்கிறார்கள்.
குறைந்த விலையில் நிறைவாகவும் நல்ல மீன்களையும் வாங்க விரும்பும் சென்னைவாசிகள் காலை 5.30 மணிக்கெல்லாம் காசிமேடு மீன் சந்தையில் ஆஜராகிவிடுகிறார்கள். அந்த மீன் சந்தையிலும் கூடை கூடையாக மீன்களை வைத்திருக்கிறார்கள். பல மீன் கூடைகளில் பலதரப்பட்ட மீன்களும் கலந்துகிடக்கின்றன. “கூடை 100 ரூபாய், கூடை 200” ரூபாய் என்று பெண்கள் கூவி அழைக்கிறார்கள்.
பேரத்துக்கு அப்பால்...
ஒவ்வொரு கூடையிலும் ஒன்று முதல் இரண்டு கிலோ வரை மீன்கள் இருக்கின்றன. மீன் ஏலம் விடும் இடத்தில் பேரம் பேசி மீன்களை வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது. ஆனால், மீன் சந்தையில் அதற்கு நேர்மார். யாராவது பேரம் பேசினால், ‘‘போன வாரம் வந்திருந்தே... அதைவிட கம்மியா கொடுத்திருப்பேன். இன்னைக்கு படகு ரொம்ப கம்மி. அதான் ரேட்டு கூட. இஷடம் இருந்தா வாங்கிக்கினு நகரு... இல்லே ஒத்து..” என்று லாவகமாகப் பேசி மீன்களை விற்கிறார்கள் பெண்கள். ஆனால் , ஞாயிற்றுக்கிழமையை மீன் சமையலுடன் ருசிக்க விரும்புவோர் இந்த கூடை கடைகளைச் சுற்றி பெரும்பாலும் பேரம் எதுவும் பேசாமல் மீன்களை வாங்கிச் செல்கிறார்கள். ஒரு கிலோ மீன் 100 முதல் 200 ரூபாய்க்குள் கிடைப்பதே காரணம்.
இப்படி மீன் சந்தைகளில் மீன்களை வாங்கிக்கொண்டு வருவோரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது பெண்கள் கூட்டம். மீன்களை சைஸாக வெட்டிக் கொடுப்பதை வேலையாக செய்யும் பெண்கள் இவர்கள். மீன்களின் அளவுகளைப் பொறுத்து மீன்களை வெட்ட 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை பெற்றுக்கொள்கிறார்கள். இந்தப் பெண்களின் வசதிக்காகவே அந்த காலை வேளையில் அருவாமனை கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். இதேபோல பை விற்கும் கடைகளும் பிசியாக இருந்தன. காசிமேடு மீன்பிடித் தொழிலை நம்பியிருப்பது போலவே ஐஸ்கட்டி ஃபேக்டரிகளும் இங்கே அதிகம்.
இறால்கள் இடம்
மீன் சந்தைக்கு எதிர்புறத்தில் இறால்களை சேமித்து வைக்கும் இடம் இருந்தது. அந்த இடத்தையும் கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். அங்கே விதவிதமாக இறால்கள் இருந்தன. சிவப்பு வண்ணத்தில் இருந்த அந்த இறாலைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. அது ‘ஆழ்கடல் இறால்’ என்று அறிமுகம் கொடுத்தார்கள் மீனவர்கள். ஆனால், “இந்த ஆழ்கடல் இறாலைவிட பழவேற்காடு முகத்துவாரத்தில் கிடைக்கும் இறால்களுக்குத்தான் ருசி அதிகம்” என்றார் ஒரு மீனவர். அதேபோல ஆத்து இறால்களும் இங்கே அதிகம் இருந்தன. “இதை ‘ஃப்ளவர்’ன்னு சொல்வோம். இதன் ருசியை வேறு இந்த இறாலாலும் அடிச்சுக்க முடியாது. நீங்க வேணா வாங்கிபோய் சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க. கிலோ 400 ரூபாதான்” என்றார் இன்னொரு மீன் வியாபாரி. இங்கே உள்ள இறால்களை கேரளா வழியாக சவுதி அரேபியாவுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். காசிமேட்டிலிருந்து 15 வகையான இறால்களும், 15 வகையான மீன்களும் ஏற்றுமதியாகிது என்று பெருமையாகச் சொல்கிறார்கள் மீனவர்கள்.
மீன் பிடி செலவு
காசிமேட்டிலிருந்து மீன் பிடித்து வந்து நிறைய காசு பார்க்கிறார்கள் என்ற எண்ணம் பொதுவாக வரலாம். ஆனால், கடலுக்குள் சென்று மீன்களைப் பிடித்துவர லட்சக்கணக்கில் முதலீடு செய்கிறார்கள். ‘‘சிறிய படகுகள் எல்லாம் குறைந்த நாள் சென்றுவிட்டு திரும்பிவிடுவார்கள். ஆனால். பெரிய விசைப்படகுகள் எல்லாம் 10 - 15 நாட்கள் வரை கடல்ல தங்கியிருந்து மீன்பிடித்துவிட்டு வருவாங்க. அதுக்காகவே ஐஸ் கிடங்கு ஒவ்வொரு படகிலும் வச்சிருப்போம். ஒரு தடவை கடலுக்குப் போக பெரிய விசைப்படகுக்கு மட்டும் நாலரை லட்சம் ரூபாய் செலவாயிடும். டீசலே ஆறாயிரம் லிட்டர் கொண்டு போகணும். அதுக்கே, இன்னைய தேதிக்கு எவ்ளோ செலவாகும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
அதேபோல 8-10 பேர் சாப்பிட குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாயாவது செலவாகும். பிறகு ஐஸ்கட்டிகள் வாங்க 40 ஆயிரம் செலவாகிடும். அதனால, மீன் பிடிச்சு வந்த பிறகு வியாபாரம் ஆறேழு லட்சத்துக்கு நடந்தாதான் படகு ஓனர், மீனவத் தொழிலாளர்கள் என்று எல்லோருக்கும் ஓரளவுக்கு சம்பளம் கிடைக்கும். அதுக்கு நாங்க படுறபாடு இருக்கே, அதை சொல்லிமாளாது.” என்கிறார் மீனவர் விஜயராஜ்.
‘தரை மேல் பிறக்க வைத்தான்.. எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்... கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக் கண்ணீரில் துடிக்க வைத்தான்... - கடலில் படகுகளைப் பார்த்தாலே இந்தப் பாட்டு நம்மையறியாமல் முணுமுணுக்கத் தொடங்கிவிடும். காசிமேட்டை விட்டு கிளம்பும் வரை அந்தப் பாடல் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. காசிமேட்டைப் பொறுத்தவரை ,அது சென்னை மாநகரின் வரம். காசிமேட்டில் அள்ள அள்ள குறையாமல் விதவிதமாகவும் ரகரகமாகவும் மீன்களை சென்னை மாநகருக்கு அள்ளித்தரும் அட்சயம்பாத்திரம்!
- இந்து தமிழ், தீபாவளி மலர், 2020
No comments:
Post a Comment