14/09/2020

Kalaivanar Arangam and the Tamil Nadu Legislative Assembly : தமிழக சட்டப்பேரவையும் கலைவாணர் அரங்கமும்..!

தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள இன்றைய சட்டப்பேரவைக் கட்டிடத்துக்கு வெளியே நடப்பது இது முதன் முறையல்ல. ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு இடங்களில் சட்டப்பேரவைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. 

கடந்த 1938-1939-ம் ஆண்டில் தமிழகச் சட்டப்பேரவை முதன்முதலாக சென்னைப் பல்கலைக்கழக செனட் ஹவுஸ் மற்றும் ராஜாஜி ஹாலில்தான் நடைபெற்றது. ஆனால், 1940-ம் ஆண்டில் சட்டப்பேரவை அறை (அசெம்பிளி ஹால்) செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தயாரான பிறகு அங்கே இடம் மாறியது.  சுதந்திரத்துக்குப் பிறகு ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளையும் உள்ளடக்கிய மெட்ராஸ் மாகாணத்துக்கென பெரிய சட்டப்பேரவைக் கட்டிடம் தேவைப்பட்டது. இதற்கென 10 லட்சம் ரூபாய் செலவில் வாலாஜா சாலையில் அமைந்துள்ள அரசினர் தோட்டப் பகுதியில் புதிய சட்டப்பேரவை மண்டபம் கட்டப்பட்டது. இதை அன்றைய ஆளுநர் ஸ்ரீ பிரகாசா 1952-ம் ஆண்டில் திறந்துவைத்தார். 

1952-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரை இங்கேதான் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வந்தது. 1956-ம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு ஆந்திரா பகுதிகள் மெட்ராஸ் மாகாணத்தில் குறைந்தன. இதனால், உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இதனால், மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே சட்டப்பேரவை இடம் மாறியது. வாலாஜா சாலையில் இருந்த சட்டப்பேரவைக் கட்டிடம் மாற்றியமைக்கப்பட்டு சிறுவர்கள் திரைப்படம் திரையிடும் கட்டிடமாக மாற்றப்பட்டது. பின்னர் 1974-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் அந்தக் கட்டிடம் அரங்கமாக மாற்றப்பட்டது. அந்த அரங்கத்துக்கு கலைவாணர் அரங்கம் என்ற பெயரும் சூட்டப்பட்டது. 

1956-ம் ஆண்டில் இன்றைய சட்டப்பேரவைக் கட்டிடத்துக்கு சட்டப்பேரவை மாறிய பிறகு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளி இடங்களிலும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடத்தப்பட்டுள்ளது. 1959-ம் ஆண்டு ஏப்ரல் 20 முதல் 30-ம் தேதி வரை ஊட்டியில் உள்ள அரண்மூர் மாளிகையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுள்ளது. கோடை காலத்தை கருத்தில்கொண்டு அப்போது குளிர்ப் பகுதியான ஊட்டியில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இது அரசியல் ரீதியாக அன்று விமர்சன பொருளானது. அதன் பிறகு தொடர்ந்து சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவைக் கட்டிடத்தில்தான் சட்டப்பேரவைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. 

கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்ட பிறகு 2010 -2011 பட்ஜெட் கூட்டத்தொடர் வரை சட்டப்பேரவைக் கூட்டங்கள் அங்கே நடைபெற்றன. 2011-ம் ஆண்டில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பழையபடி புனித ஜார்ஜ் கோட்டைக்கே சட்டப்பேரவை இடம் மாறியது. இன்று கரோனா வைரஸ் தந்த நெருக்கடி காரணமாக சட்டப்பேரவைக் கூட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முதன்முதலாக சென்னையில் சட்டப்பேரவை மண்டபம் (பழைய கலைவாணர் அரங்கம்) கட்டப்பட்ட அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்திலேயே சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. வரலாறு திரும்புகிறது!

No comments:

Post a Comment