21/05/2020

எம்.பி. பதவிக்காக உதயநிதி ஸ்டாலினிடம் கெஞ்சினேன்...வி.பி.துரைசாமி ஓபன் டாக்!

திமுக துணைப் பொதுச்செயலாளர்; முன்னாள் துணை சபாநாயகர் என்ற பெருமையோடு திமுக மேடைகளை அலங்கரித்துவருபவர் வி.பி.துரைசாமி. திடீரென தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை அவர் சந்தித்ததன் மூலம், பாஜகவுக்கு துரைசாமி தாவப்போகிறார்; திமுகவில் எம்.பி. பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கிறார் என அவரைச் சுற்றி அரசியல் வட்டாரத்தில் பல தகவல்கள் உலா வரத் தொடங்கிவிட்டன. இந்த வேளையில் வி.பி.துரைசாமி தொலைபேசி வாயிலாகப் பிரத்யேகமாக  நம்மிடம் பேசினார். 

தமிழக பாஜக  தலைவர் முருகனை திடீரென சந்தித்ததன் பின்னணியில் நீங்கள் பாஜகவுக்கு போவதாக சொல்லப்படுகிறதே?

நாங்க ரெண்டு பேரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவங்க. ஒரே ஊரைச் சேர்ந்தவங்க. அந்த வகையில் அவருக்கு வாழ்த்து சொல்லத்தான் சந்திச்சேன். கட்சியில் உள்ள ரெட்டியார், ரெட்டியார் மாநாட்டுக்கு போகலாம். ஒரு வன்னியர், வன்னியர் அமைச்சரைப் பார்க்கலாம். முக்குலத்தோர், கவுண்டரைப் பார்க்கலாம். நாங்க மட்டும் பார்க்கக்கூடாதா? இது அரசியல் ரீதியிலான சந்திப்பே இல்லை. முருகன் என்னுடைய சொந்தக்காரர். பிராமணர் கட்சியில் அருந்ததியருக்கு தலைவர் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதை வாழ்த்தப்போனால் என்ன தப்பு? 

சந்திப்புக்குப் பிறகு உங்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டீர்களே?

அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. தேவையற்ற அழைப்புகள் நிறைய வருகின்றன. அதைத் தவிர்க்கத்தான் சுவிட்ச் ஆப் செய்தேன். 

முருகன் தலைவராக பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது ஏன் சந்திக்க வேண்டும்?

ஏனென்றால், கரோனா வைரஸ்தான் காரணம். வீட்டு கேட்டைத் தாண்டி எங்கும் நான் போகவில்லை. கடைசியாக மார்ச் 20ம் தேதி வெளியில் வந்தேன். அதன் பிறகு எங்கும் சொல்லவில்லை. ஆனால், அம்பேத்கார் பிறந்த நாள், சின்னமலை பிறந்த நாள், மே தினம் நிகழ்ச்சிகளுக்கு திமுகவில் என்னை அழைத்தார்கள். நானும் சென்றுவந்தேன். 

உங்களுக்கு எம்.பி. பதவி கிடைக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறதே..?

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. தொடர்ந்து விடாமல் நான் கட்சி அலுவலகத்துக்கு வந்துகொண்டுதான் இருந்தேன். மார்ச் மாதம் வரை அலுவலகத்துக்கு வந்திருக்கிறேன். கட்சி அலுவலகத்தில் வருகைப் பதிவேட்டைப் பார்த்தால் அது தெரியும்.

பாஜக தலைவருடனான சந்திப்புக்குப் பிறகு திமுகவில் யாரும் உங்களை அணுகினார்களா?

யாரும் என்னை அணுகவில்லை. நான் என்ன முடிவெடுத்தாலும் அவரிடம் பேச வேண்டாம் என்று அவரு (ஸ்டாலின்) சொன்னதாக வாட்ஸ்அப்பில்தான் சில செய்திகளைப் பார்த்தேன்.

முரசொலி நில விவகாரத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் மூலம் திமுகவுக்குக் குடைச்சல் கொடுக்கப்பட்டது.. (கேள்வியை முடிப்பதற்குள் பேசுகிறார்)

அதுக்கும் இந்தச் சந்திப்புக்கும் என்ன தொடர்பு? முதலில் தலைவர் கோபத்தில் இருக்கிறார் என்பதே எனக்கு தெரியாது. முரசொலி விவகாரத்தில் சட்டத் துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி மூலம் வெற்றி பெறலாமே.. அது வேற; முரசொலியைப் பார்த்துதானே தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டோம்.
 
உங்களைச் சுற்றி பல தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. இப்போதைய நிலையில் என்ன செய்வதாக உத்தேசம்?

இப்போதைக்கு நான் அமைதியாக இருக்கப்போகிறேன். என் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.   

மாற்று முகாமுக்கு செல்வீர்களா?

இல்லை... இல்லை... அவர்களுடைய நடவடிக்கைகளைப் பொறுத்துதான் என்னுடைய முடிவு இருக்கும். நான் யதார்த்தமாகத்தான் போய் சந்தித்தேன். ஆனால், அவர் (ஸ்டாலின்) அருகில் உள்ள அரசியல் விற்பன்னர்கள் அவரிடம் என்ன சொல்கிறார்களோ, அதன்படி அவர்  நடப்பார்.

ஸ்டாலின் அருகில் உள்ளவர்கள், அவரைக் கெடுக்கிறார்கள் என்கிறீர்களா?

(ஆங்கிலத்தில் சொல்கிறார்: He is indiviually good; but collectively bad) அவரு தனிப்பட்ட முறையில் நல்லவர்; ஆனால், ஒரு கூட்டாக அவர் மோசம். என் மீது மரியாதை, அன்பு, பாசம் உள்ளவர்தான் தலைவர். அதெல்லாம் மறுப்பதற்கில்லை. அதேபோல என் மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டு வந்தது உண்டா? நாமக்கல் மாவட்டத்தில் திடீரென்று ஒருத்தரை நீக்குவார். இன்னொருத்தவரை போடுவார்; இவரை மாற்றலாமா என்றுகூட ஒரு வார்த்தை கேட்கமாட்டார். ஆனாலும், இதுவரை மாவட்ட நிர்வாகமாக இருந்தாலும் சரி; மாநில நிர்வாகமாக இருந்தாலும் சரி; கட்சி நிர்வாகத்தில் நான் தலையிட்டதே இல்லை.  இவருக்குப் பதவி கொடுங்க; இன்னாரை தூக்குங்கள் என்று நான் கேட்டதேயில்லை. 

 நாமக்கல் மாவட்ட செயலாளர்கள் மாற்றங்களில் உங்களுக்கு அதிருப்தி இருந்ததாக கூறப்படுகிறதே.

அது அவுங்க கட்சி. அதில் நான் ஒரு சர்வன்ட். என்றபோதும் சிலரை மாற்றும்போது என்னிடம் ஒரு வார்த்தைக்கூட கேட்பதில்லையே என்று சிறு வருத்தம் இருந்தது உண்மைதான். அது கட்சிக்கு வெளியே கூட எல்லோருக்கும்  தெரியும். இதே விஷயத்தில் கே.என். நேரு, ஐ.பெரியசாமி, துரைமுருகனை மீறி நடப்பார்களா?

இந்த விவகாரத்துக்குப் பிறகு நீங்கள் தலைவர் மு.க. ஸ்டாலினை தொடர்புகொள்ள முயற்சி செய்தீர்களா?

இல்லைங்க. செய்திகளில்தான் சில தகவல்களைப் பார்க்கிறேன். நோட்டீஸ் அனுப்பி என்னிடம் விளக்கம் கேட்க தலைவர் முடிவு செய்திருப்பதாகப் பார்த்தேன். இன்னும் சில செய்திகளில், நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல், கட்சியிலிருந்து நீக்கலாம் என்று அவர் சொன்னதாகவும் செய்திகளைப் பார்த்தேன்.

அதுபோல நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

அப்படியெல்லாம் சொல்கிறார்கள். அப்படியே நடவடிக்கை எடுத்தாலும் நான் என்ன செய்ய முடியும்?

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், இந்தச் சர்ச்சை எழுந்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கலைஞர்தான் எனக்குக் கடவுள். கட்சியில் என்னுடைய விசுவாசம் எல்லோருக்கும்  தெரியும். நான் எம்.பி. பதவியை தூக்கி எறிந்துவிட்டு கட்சிக்கு வந்தவன். என்னை நம்பி வந்தவனுக்குதான் சீட்டு கொடுப்பேன் என்று எனக்கு கலைஞர் சீட்டு கொடுத்திருக்கிறார். அந்த அளவுக்கு அவரிடம் நான் விசுவசமாகவும் நம்பிக்கையுள்ளவனகவும் இருந்திருக்கிறேன். இங்கே ஒரு விஷயத்தைக் கேட்க விரும்புகிறேன். இதுவரை எந்த முடிவை துரைசாமியை வைத்துக்கொண்டு எடுத்தார்கள். அதை துரைசாமி வெளியே சொன்னான் என்று யாராவது என்னை சொல்ல முடியுமா? எந்த நல்ல முடிவாக இருந்தாலும் சரி, எந்த கெட்ட முடிவாக இருந்தாலும் சரி, அதெல்லாம் வீட்டில்தான் எடுக்கப்பட்டது. அப்போதெல்லாம் என்னை யாரும் வீட்டுக்கு அழைத்ததில்லை.

உதயநிதியை இளைஞர் அணி தலைவராக நியமித்தபோது வரவேற்றிருந்தீர்களே..

வரவேற்றது மட்டும் இல்லைங்க.. இந்த எம்.பி. பதவிக்காக வயது வித்தியாசம் பார்க்காமல் உதயநிதியை நேரில் சந்தித்து கெஞ்சினேன். அது தப்பு இல்லை. ஏனென்றால், கட்சி அவுங்களுடையது.

 திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ப. தனபால் போல சபாநாகயராகும் வாய்ப்பு உங்களுக்கு இருந்ததே..?

எனக்கு யார் சீட்டு கொடுக்கப்போகிறார்கள். அப்படியே கொடுத்தாலும் கேட்ட தொகுதி கிடைக்காது. வெற்றி பெற்றாலும் அமைச்சர் பதவியெல்லாம் கிடைக்காது. சபாநாயகர் பதவிக்காக எனக்கு வெற்றிலையில் 10 ரூபாய் வைத்து கொடுத்தாலும் எனக்கு வேண்டாம். எனக்கும் கலைஞருக்கும் ஒரு விஷயத்தில் சண்டை வந்தது. கலெக்டரை தாசில்தாரை ஆக்குற மாதிரி, என்னை துணை சபாநாயகர் ஆக்கிட்டீங்களே என்று நான் கேட்டேன். இது எனக்கும் கலைஞருக்கும் மட்டுமே தெரியும். நான் அவரு (ஸ்டாலின்) மேலே மரியாதை வைத்திருக்கிறேன். இந்தப் பதவியெல்லாம் கலைஞர் கொடுத்தது. கலைஞருக்கு விசுவாசமாக இருந்தேன்; இப்போது விசுவாசமாக இல்லையா என்பதுதான் என்னுடைய ஒரே கேள்வி!

21-05-2020 இந்து தமிழ் இணையத்தில் எழுதிய பிரத்யேக நேர்க்காணலின் முழுவடிவம்.

மறக்க முடியுமா..? சென்னை சேப்பாக்கில் ருத்ரதாண்டவம் ஆடிய சயீத் அன்வர்!




சென்னை சேப்பாக்கம்  எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் என்றால், ஒவ்வொரு இந்தியருக்கும் ஒவ்வொருவிதமான நினைவலைகள் காலச்சக்கரமாக சுழலும். 1983-ல் வெஸ்ட்இண்டீஸுக்கு எதிரான் டெஸ்ட்டில் கவாஸ்கர் விளாசிய 236 ரன் (நாட் அவுட்), 1986-ல் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் டை; 1988-ல் வெஸ்ட்இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களில் நரேந்திர ஹிர்வானி தன் மந்திரச் சுழலில் வீழ்த்திய 16 விக்கெட்டுகள்; 1999-ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி விரட்டலில் சச்சின் எடுத்த 136 ரன்கள், 2008-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் சேவாக் அடித்த மறக்க முடியாத 319 ரன்கள்; 2016-ல் இங்கிலாந்துக்கு எதிராக கருண் நாயர் சேர்த்த 303 ரன்கள் என எத்தனையோ நினைவலைகளை வந்து செல்லும்.

அதுவே, சென்னையில் ஒரு நாள் போட்டி என்றால், ஒரே ஒரு மறக்க முடியாத இன்னிங்ஸ் எல்லார் மனதிலும் நினைவாக எட்டிப் பார்க்கும். அது, 1997-ம் ஆண்டில் சுதந்திர தினக் கோப்பைக்கான போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 194 ரன்கள் விளாசியதுதான். ஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை அரங்கேற காரணமாக இருந்த அந்த இன்னிங்ஸ் நிகழ்ந்த நாள் இன்று (21-05-1997).    

1980-90-களில் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு வீரரின் உச்சபட்ச ரன் என்றால், வெஸ்ட்இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ஸ் 1984-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த 189(நாட் அவுட்) ரன் மலைப்பை உண்டாக்கும். 1996-ல் தென்னாப்பிரிக்க வீரர் கேரி கிரிஸ்டன் 188 ரன்கள் எடுத்து விவியன் ரிச்சர்ஸின் சாதனையை வீழ்த்த முடியாமல் ஒரு ரன்னில் தவறவிட்டார். அதற்கு அடுத்த ஆண்டே விவியன் ரிச்சர்ஸின் சாதனையை உடைத்ததோடு மட்டுமல்லாமல், ஒரு நாள் கிரிக்கெட்டில் முதன் முறையாக 190 ரன்களைக் கடந்த வீரர் என்ற மைல்கல் சாதனையும் நிகழ்ந்தது. 1997-ல் வெயில் கொளுத்தும் கோடையான மே 21 அன்று சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சுதந்திர தினக் கோப்பைக்கான லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

அப்போது சச்சின் டெண்டுல்கர்தான் இந்திய அணியின் கேப்டன். பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரமீஸ் ராஜா. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் ரமீஸ் ராஜா. தொடக்க ஆட்டக்காரராக சயீத் அன்வரும் இளம் வீரரன ஷாகித் அப்ரிடியும் களமிறங்கினர். அப்ரிடி விரைவாக அவுட்டாகிவிட, ரமீஸ் ராஜா, இஜாஸ் அகமது, இன்சமாம் உல் ஹக் ஆகியோர் அன்வருடன் சுமாரான பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அவர்கள் எல்லோரும் சொற்ப ரன்களையே எடுக்க, தனி ஒருவனாக சயீத் அன்வர் மட்டும் சேப்பாக்கில் ருத்ரதாண்டவம் ஆடினார். வெங்கடேஷ் பிரசாத், அபய் குருவில்லா, கும்பளே, சுனில் ஜோஸி, ராபின் சிங், சச்சின்  டெண்டுல்கர் என பலருடைய பந்துவீச்சுகளையும் நொறுக்கினார் சயீத் அன்வர். 

போட்டி தொடங்கியது முதலே அன்வரின் அதிரடி ஆட்டத்தால் சென்னை ரசிகர்கள் வழக்கத்துக்கு மாறாக மயான அமைதியிலேயே இருக்க வேண்டியிருந்தது. நாலா புறமும் பந்துகள் பறக்க 26-வது ஓவரில் 100 ரன்களை எடுத்த சயீத் அன்வர், அதன்பின்னர் அவருடைய ஆட்டம் ஜெட் வேகம் பிடித்தது. பாகிஸ்தான் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.  அனில் கும்பளேவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை விளாசி 200 ரன்களை நோக்கி வேகமாக முன்னேறினார் சயீத் அன்வர். ரிச்சர்ஸின் 189 ரன் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரின் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து அன்வர் கடந்தபோது சென்னை ரசிகர்கள் வழக்கம்போல டிரேட் மார்க் பாராட்டை அன்வருக்கு வழங்கினார்கள்.

சயீத் அன்வர் 190 ரன்னைக் கடந்த பிறகு 2 ஓவர்கள் முழுமையாக  இருந்தன. எனவே, ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் என்ற புத்தம் புதிய சாதனை சென்னையில் படைக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். சச்சின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விளாசிய சயீத் அன்வர், 4-வது பந்தை ஸ்வீப் ஷாட் மூலம் அடிக்க முயன்றார், பந்து ‘டாப் எட்ஜ்’ ஆகி உயரமாக ‘கல்லி’ திசையில்  மேலே சென்றது. பகலிரவு போட்டி என்பதால், லைட்டுகள் ஒளிரவிடப்பட்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் உயரே சென்ற பந்தை சவுரவ் கங்குலி பிடிக்க முயன்றார். அவர் நிச்சயம் பிடிக்க மாட்டார் என்றே எல்லோரும் நினைத்திருப்பார்கள். ஆனால், பந்தைப் பிடித்து டைவ் அடித்து தலையில் கை வைத்தபடி தரையில் விழுந்தார் கங்குலி. அந்த விநாடி சேப்பாக்கம் அரங்கமே அதிர்ந்தது. கங்குலி பந்தைப் பிடித்ததும் ஒருசில விநாடிகள் அன்வரின் முகத்தில் ஏமாற்றம் தெரிய, அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பெவிலியன் நோக்கி நடக்கத் தொடங்கினார்.

ஆனால், ஒரு புதிய சாதனை அரங்கேற்றிய மகிழ்ச்சியோடு நடைபோட்டுவந்த அன்வரை அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் கைத்தட்டி பாராட்டினார்கள். 146 பந்துகளைச் சந்தித்து 22 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உதவியுடன் 194 ரன்களைச் சேர்த்த அன்வரின் மறக்க முடியாத ஆட்டத்தால், அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு பிறகு சயீத் அன்வரின் ரன் குவிப்பு பற்றி சுவாரசியமான ஒரு தகவல் வெளியானது. சயீத் அன்வர் புதிய உலக சாதனைப் படைத்த அந்தப் போட்டியில் பயன்படுத்திய பேட்டை, சென்னையில் உள்ள ஒரு ஸ்போர்ட்ஸ் ஷாப்பில் அவர் வாங்கியது என்பது தெரிய வந்தது. 

1997-ம் ஆண்டில் முதல் இரட்டை சதம் எடுக்க இருந்த சயீத் அன்வரின் சாதனையைப் பந்துவீச்சு மூலம் தடுத்து நிறுத்திய சச்சின், 2010-ம் ஆண்டில் முதல் இரட்டைச் சதம் அடித்ததும் இங்கே நினைவுக்கூரத்தக்கது.  

19/05/2020

தமிழகத்தின் குட்டிக் கோடம்பாக்கங்கள்!

Cinema cities

ஸ்டூடியோக்களில் மட்டுமே சினிமா என்ற காலம் ஒன்று இருந்தது. அப்போது வெளிப்புறப் படப்பிடிப்புகள் என்பதே அரிது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அசல் உலகத்துக்கு இடம் மாறத் தொடங்கின. அப்போது சென்னையைத் தாண்டி சினிமா நகரங்கள் உருவெடுத்தன. அந்த நகரங்கள் இன்றுவரை சினிமாக்காரர்களின் சொர்க்கப்புரியாகவே இருந்துவருகின்றன.

செட்டு சினிமா 

கனவுலக கதைகளைப் பேசும் சினிமாக்களின் கோயிலாக ஒரு காலத்தில் ஸ்டூடியோக்களே கோலோச்சின. தமிழ் சினிமா மிக அரிதாகவே ஸ்டுடியோக்களை விட்டு வெளியே வந்தது. தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில்கூட பெரும்பாலான படங்கள் ஸ்டுடியோக்களிலேயே எடுக்கப்பட்டன.  ஆறு, குளங்கள், மலைகள், வயல்வெளிகள், நிலவு, சூரியன் என இயற்கைக்காட்சிகள்கூட அந்தக் காலத்தில் அசலானவை அல்ல. பெரும்பாலும் ஸ்டூடியோ செட்டுகள்தான். காடு, மலை, வனாந்திரங்களில் நாயகன் குதிரையில் சாகசம் செல்வதுபோல காட்சிகள் தேவைப்பட்டாலும், சில விநாடிகள் நாயகனின் முகத்தை குளோசப்பில் காட்டுடிவிட்டு டெம்ப்ளேட்டாக காடு, மலையில் குதிரையில் நாயகன் செல்வதுபோலக் காட்டிவிடுவார்கள். சினிமா சாகச காட்சிகள் பெரும்பாலும் ‘டூப்’களாகவே இருந்தன.

குட்டிக் கோடம்பாக்கம் 

1970-களில் மாய பிம்பங்கள் விலகி நிஜ பிம்பங்கள் சினிமாவை ஆக்கிரமிக்கத் தொடங்கின. சினிமாவில் நிழல்களாகக் காட்டப்பட்டுவந்த ஆறுகள், குளங்கள், மலைகள், வயல்வெளிகள், வனாந்திரங்கள், தெருக்கள், வீடுகள், பங்களாக்கள் என அனைத்துமே நிஜமாயின. அப்போது சினிமாவுக்கேற்ற ரசனைமிக்க இடங்களைத் தேடி சினிமாக்காரர்கள் பயணப்பட்டார்கள். சென்னைக்கு வெளியே கோபிச்செட்டிப்பாளையம், பொள்ளாச்சி, காரைக்குடி, ஊட்டி எனப் பல சினிமா நகரங்கள் உருவாகத் தொடங்கின. இவற்றில் கோபிச்செட்டிபாளையமும் பொள்ளாச்சியும் ‘மினி கோலிவுட்’ எனச் சொல்லப்படும் அளவுக்கு நிலைபெற்றன.

தமிழ் சினிமாவில் கிராமிய சூழலில் ஒரு திரைப்படம் உருவாக்கப்படுகிறது என்றால் அதில் பொள்ளாச்சிக்கும் கோபிக்கும் நிச்சயம் இடம் இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள இந்த இரு ஊர்களிலும் அழகான வயல்வெளிகள், நீண்ட வரப்புகள், திரும்பும் இடமெல்லாம் ஓடும் கிளை ஓடைகள், ரம்மியமான ஆறு, பசுமையான புல்வெளிகள், பரவசமூட்டும் மலைகள், அச்சமூட்டும் காடுகள், கிராமக் குடியிருப்புகள், கோயில் குளங்கள், அணைக்கட்டுகள், இருபுறமும் அடர்ந்த மரங்களை கொண்ட குகை போன்ற சாலைகள் என இயற்கை அமைப்புகள் பொள்ளாச்சியும் கோபியும் சினிமா நகரங்களாக உருவாகக்  காரணங்களாக இருந்தன. 
கொடிவேரி
பொள்ளாச்சி சினிமா

எந்தப் பகுதியில் கேமராவை வைத்தாலும், அழகான ஒளிப்பதிவை கொடுக்கும் இடம் எனப் பொள்ளாச்சியைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள் சினிமாக்காரர்கள். அது உண்மைதான். பொள்ளாச்சியில் கேமராவை எந்தக் கோணத்தில் வைத்தாலும் மேற்குத் தொடர்ச்சி மலையை விட்டுவிட்டு படம் பிடிக்கவே முடியாது. மலைகள் மட்டுமல்ல அழகான சமவெளியும் பொள்ளாச்சிக்கு அருகே இருக்கும் அடர்த்தியான வனங்களும், அணைக்கட்டும், வால்பாறையின் தேயிலைத் தோட்டங்களும், டாப்- சிலிப்பின் அடர்ந்த காடுகளும் திரைத்துறையின் கேமராக்களை இங்கு கொண்டுவந்து நிறுத்தின.
பொள்ளாச்சியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சுமார் 1,500 திரைப்படங்கள் படமாக்கப்பட்டிருப்பதாக சினிமா தரவுகள் வியக்க வைக்கின்றன. சுமார் 5 ஆயிரம் பாடல்கள் அல்லது கிராமப் புற காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் அசரடிக்கின்றன. தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒடியா படங்களும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் சினிமா அறையை விட்டு வெளியே வந்த காலம் முதலே பொள்ளாச்சியில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.

சினிமாவின் மையம்

1970-களில் வெளிப்புறப் படப்பிடிப்புகள் பொள்ளாச்சியில் வேகம் பிடித்திருந்தாலும், அதற்கு முன்பே இங்கே படப்பிடிப்புகள் நடைபெற்றிருக்கின்றன. 1956-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான

 
ஆழியார் அணை

‘மலைக்கள்ளன்’ படம்தான் இங்கே முதன்முதலாகப் படம் பிடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். மலைக்காட்சிகள் இடம்பிடித்த அந்தப் படத்தின் பல காட்சிகள் இங்கேதான் எடுக்கப்பட்டிருக்கின்றன. 1964-ல் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ படக்காட்சிகளும் பொள்ளாச்சியில் அதிகமாகவே படமாக்கப்பட்டிருக்கின்றன. ‘விஸ்வநாதன் வேலை வேணும்...’ என்ற துள்ளல் பாடலை நினைத்தால், மனக்காட்சியில் அந்தப் பாடல் படமாக்கப்பட்ட ஆழியாறு அணையும் மனக்காட்சியில் ஓடும்.

1970-களுக்கு பிறகு பொள்ளாச்சி இல்லாத தமிழ் சினிமா என்பது அரிதாகவே மாறிபோனது.  1970-களின் இறுதியில் தொடங்கி 2000-ம் ஆண்டுவரை தமிழ் சினிமாவின் மையமாகப் பொள்ளாச்சி மாறியது. திரைத்துறையினர் பொள்ளாச்சியை நாடி வந்ததற்கு அங்கே இருக்கும் எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளும் கிராமிய சூழலும் மட்டுமே காரணமல்ல. ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்றால் வேறு எங்கும் போகத் தேவையில்லை. பொள்ளாச்சி அருகே டாப் சிலிப், ஆழியாறு, வால்பாறை,  அட்டகட்டி போன்ற பகுதிகளில் படமாக்கிவிட்டு வந்துவிடலாம். சற்று தொலைவாகப் போக வேண்டுமென்றால், கேரளாவில்  சாலக்குடி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சென்று பாடல்களைப் படமாக்கிவிட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு வந்துவிடலாம்.

கொங்கு இயக்குநர்கள்

பொள்ளாச்சியில் குறைந்த பட்ஜெட்டில் படங்களை எடுத்துவிட முடியும். படப்பிடிப்புக்குத் தேவையான இடவசதி, பொருட்கள், கிராமப்படங்களுக்கு தேவையான வீட்டு விலங்குகள், ஆட்கள் என அத்தனை தேவையையும் உள்ளூர் மக்களே பூர்த்தி செய்துகொடுத்துவிடுவார்கள். சினிமாக்காரர்களை தங்கள் வீட்டு உறவினர்களைப் போல அந்தப் பகுதி மக்கள் பார்க்கும் அளவுக்கு பொள்ளாச்சியும் சினிமாவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்தன. 
 “அந்தக் காலத்தில் பொள்ளாச்சி, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய ஊர்களில் ஓட்டல்கள் இல்லை. அதனால், நடிகர், நடிகைகள் பொதுமக்கள் வீடுகளில்தான் தங்குவார்கள். சற்று வசதி படைத்தவர்கள் தங்கள் வீட்டில் நடிகர், நடிகைகளை தங்க வைத்து உபசரித்து அனுப்புவார்கள். சினிமா நடிகர்கள் தங்கள் வீடுகளில் தங்குவதைக் கவுரமாக மக்கள் பார்த்தனர். அப்போது படப்பிடிப்பு நடத்த கட்டணம் எதுவும் இல்லை. எங்கே வேண்டுமானாலும் படப்பிடிப்பு நடத்திக்கொள்ளலாம். மக்களே தங்களுக்கு சொந்தமான இடங்களில் சூட்டிங் நடத்த விரும்பி அழைப்பார்கள்.” என்கிறார் சினிமா புரொடக்‌ஷன் எக்ஸிகியூடிவான பொள்ளாச்சி ராஜ்குமார்.

பொள்ளாச்சி மட்டுமல்ல, இந்த ஊரைச் சுற்றியுள்ள ஆழியாறு, சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர், உடுமலைப்பேட்டை, காளியாபுரம், ஊத்துக்குளி, நெகமம், கிணத்துக்கடவு, திருமூர்த்தி மலை, சர்க்கார்பதி, சூளிக்கல், வால்பாறை, அமராவதி, சோலையாறு அணைப்பகுதிகள் சினிமாவின் சொர்க்கபுரியாகவே இருந்துவருகின்றன. 1980 மற்றும் 90-களில் உருவான தமிழ் இயக்குநர்களின் ஒரே சாய்ஸாக பொள்ளாச்சியே இருந்தது. இந்தக் காலகட்டத்தில் கொங்கு பகுதி சார்ந்த கதைகளும் தமிழ் திரையில் ஆக்கிரமிக்கத் தொடங்கின. கொங்கு பகுதியிலிருந்து திரை உலகில் அடியெடுத்துவைத்த இயக்குநர்கள் ஆர். சுந்தர்ராஜன், மணிவண்ணன், பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், சுந்தர் சி போன்றவர்கள் தங்கள் படங்களை இந்தப் பகுதிகளில் அதிகமாகவே படமாக்கினார்கள்.

சினிமா அடையாளங்கள்
சிங்காரவேலன்... பம்பாய் வீடு

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்றும்கூட பல வீடுகள் சினிமா பெயரில் அழைக்கப்படுகின்றன. சிங்காநல்லூர்  ‘தேவர்மகன்’ வீடு, கெலக்காடு ‘சிங்காரவேலன்’ வீடு, சிங்காரம்பாளையம் ‘பசும்பொன்’ வீடு, சேத்துமடை ‘பம்பாய்’ வீடு, முத்தூர் ‘சின்னக்கவுண்டர்’ வீடு, நெய்க்காரப்பட்டி ‘சூரியவம்சம்’ வீடு, ‘எஜமான்’ வாணவராயர் பங்களா’ என சினிமா பெயர்களில் வீடுகளை அழைக்கும் அளவுக்கு சினிமா படப்பிடிப்பிகள் பொள்ளாச்சியில் கோலோச்சியிருக்கின்றன. நூற்றுக்கணக்கான படங்கள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டிருந்தாலும், சில படங்கள் பொள்ளாச்சியின் பெயரை உரக்கச் சொல்கின்றன.

 ‘பாகப்பிரிவினை’, ‘விடிவெள்ளி’, ‘முரட்டுக்காளை’,  ‘சகலகலா வல்லவன்’, ‘கரையெல்லாம் செண்பகப்பூ’, ‘தேவர் மகன்’, ‘சின்னக்கவுண்டர்’, ‘கிழக்கு வாசல்’, ‘பம்பாய்’ ‘அமைதிப்படை’, ‘எஜமான்’, ‘சூரியன்’, ‘சூரியவம்சம்’, தோழர் பாண்டியன்’,  ‘பொன்னுமணி’, ‘ராஜகுமாரன்’, ‘வானத்தைப்போல’,  ‘தூள்’, ‘ஜெயம்’, ‘காதலுக்கு மரியாதை’, ‘காசி’, ‘அரண்மனை’ உள்ளிட்ட பல ப்ளாக் பஸ்டர் படங்கள் இங்கே படமாக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சியை படப்பிடிப்புதளமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இங்கே எடுக்கப்பட்ட படங்களில் 80 சதவீத படங்கள் வெற்றி பெற்றதால், பொள்ளாச்சியை அதிர்ஷ்ட பகுதியாகவும் பார்க்கிறார்கள். எனவே பொள்ளாச்சி எப்போதுமே சினிமாக்காரர்களின் செண்டிமெண்ட் பகுதியாக இருப்பதில் வியப்பில்லை.

கோபி சினிமா

பொள்ளாச்சியைப் போலவே ‘குட்டிக் கோடம்பாக்கம்’ என்று அழைக்கப்படும் இன்னொரு ஊர் கோபிச்செட்டிப்பாளையம். பொள்ளாச்சியைப் போலவே தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்கள் இங்கே படமாக்கப்பட்டிருகின்றன. கோபியில் எடுக்கப்பட்ட முதல் படம் சிவாஜி கணேசன் நடித்து, 1959-ல் வெளியான ‘பாகப்பிரிவினை’. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜி.என். வேலுமணியின் சொந்த ஊர் கோபிச்செட்டிப்பாளையம்தான். ஊர்ப் பாசத்தால் ‘பாகப்பிரிவினை’ படக் காட்சிகளை கோபியில் எடுக்க அவர் விரும்பினார். ‘பாகப்பிரிவினை’ படத்திலிந்துதான் கோபியின் படப்பிடிப்பு பயணம் தொடங்கியது.

பாக்யராஜ் உபயம்


‘பாகப்பிரிவினை’க்குப் பிறகு 1963-ல் ‘இது சத்தியம்’, 1962-ல் ‘கண்ணாடி மாளிகை’, 1968-ல் ‘சோப்பு சீப்பு கண்ணாடி’, 1976-ல் ‘அன்னக்கிளி’, 1979-ல்  ‘திசை மாறிய பறவைகள்’ எனப் பல படங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் கோபியில் மையம் கொண்டன. பொள்ளாச்சியில் இருக்கும் எல்லா ரசனைகளும் கோபியில் இருந்தபோதும் 1980-க்கு பிறகுதான் கோபி தமிழ் சினிமாவின் பார்வை அழுத்தமாகப் பதிவானது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் என்ற கிராமம்தான் நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜின் சொந்த ஊர். 1980-களில் ‘தூறல் நின்னு போச்சு’, ‘முந்தானை முடிச்சு’ என இவருடைய பல படங்கள் கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே படமாக்கப்பட்டன. 

அதே காலகட்டத்தில் இயக்குநர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், மணிவண்ணன், ராமராஜன், ஆர். சுந்தர்ராஜன், பி. வாசு, மனோஜ்குமார், வி.சேகர், மணிவாசகம், கே.எஸ். ரவிக்குமார், சுந்தர். சி போன்ற இயக்குநர்களும் கோபி பகுதியில் தங்கள் படங்களைப் போட்டிப்போட்டுக்கொண்டு படமாக்கினார்கள். குறிப்பாக மணிவண்ணன், கே.எஸ். ரவிக்குமார். சுந்தர்.சி, பி. வாசு போன்ற இயக்குநர்கள் கொங்கு மண்ணுக்கேத்த கதைகளை உருவாக்கியதால், கோபிதான் அவர்களுடைய விருப்பத் தேர்வாக இருந்தது.

பஞ்சாயத்து ஆலமரங்கள்

கோபியில் படம்பிடிக்க ஏதுவான பகுதிகள் நிறைய உள்ளன. தமிழ் சினிமாவுக்கு பஞ்சாயத்து ஆலமரங்களை அறிமுகம் செய்துவைத்த பெருமை கோபிக்கே உண்டு. மேலும் கோபியில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பவானி ஆறு பயணிக்கிறது. கோபியில் வெப்பநிலை எப்போதும் மிதமாகவே இருக்கும். கணிக்க முடியாத வானிலை உள்ள பகுதி இது. இதுபோன்ற காரணங்களாலேயே படப்பிடிப்புகள் நடத்த கோபியை சினிமாக்காரர்கள் விரும்பி தேர்வு செய்தார்கள்.  
சின்னகவுண்டர் ஆலமர பஞ்சாயத்து..


தமிழ் சினிமாவில் ஆகப் பெரும் சாதனைப் படைத்த ‘சின்னத்தம்பி’ படம் முழுக்க முழுக்க கோபியில்தான் படமாக்கப்பட்டது. அந்தப் படத்தில் வரும் பிரபுவின் செட்டு வீடு பவானி ஆற்றங்கரையோரமும் குஷ்புவின் வீடு பவானிசாகர் அணையில் உள்ள கட்டிடத்திலும் படமாக்கப்பட்டன. பவானிசாகர் அணை இன்றுவரை ‘சின்னத்தம்பி’யின் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது. கள்ளிப்பட்டியில் ‘ராசுக்குட்டி’ வீடு, சி.கே.எஸ். பங்களா என கோபியில் சினிமா படப் பெயரை தாங்கி நிற்கும் வீடுகளுக்கும் பஞ்சமில்லை. பன்னாரியம்மன் கோயில், குண்டேரிப்பள்ளம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கொடிவேரி அணை, வயல்வெளிகள், சத்தியமங்கலம் வனப்பகுதிகள், கோயில்கள் எனப் படம் பிடிக்க ஏதுவான பகுதிகள் கோபியில் அதிகம் உள்ளன.
தமிழ்ப் படங்கள் மட்டுமல்ல, ஏராளமான பிற மொழி படங்களும் கோபியில் படமாக்கப்பட்டு அந்த ஊரின் பெருமையைப் பேசியது. இவற்றில் ‘சேரன் பாண்டியன்’, ‘ராசுக்குட்டி’, ‘மருதுபாண்டி’,  ‘சின்னத்தம்பி’, ‘எங்க சின்ன ராசா’ (இந்தி டப்பிங்), ‘செந்தமிழ் பாட்டு’ (ஒடியா டப்பிங்) ஆகிய படங்கள் முழுமையாக கோபியிலேயே படமாக்கப்பட்டதன் மூலம் கோபி  அகில இந்திய அளவில் சினிமாக்காரர்களை ஈர்த்தது. 

ஊட்டி சினிமா

தமிழ் சினிமாவின் அந்தக் காலம் தொடங்கி இப்போதுவரை இயக்குநர்கள்
ஊட்டி... அன்பே வா..

விரும்பும் இடம் என்றால், அது ஊட்டிதான். ‘மலைகளின் அரசி’ என்று வர்ணிக்கப்படும் ஊட்டியில் பசுமை நிறத்தை போர்த்திக்கொண்டு விரிந்து கிடக்கும் இயற்கை அழகும், ஓங்கி உயர்ந்த மலைகளும், சலசலத்து ஓடும் நீரோடைகளும், அழகழகான பூங்காக்களும், பூத்துக்குலுங்கும் பூக்களும், ரம்மியமான் சீதோஷணமும் சினிமாக்காரர்களை ஊட்டிக்கு அழைத்துவந்தது. தமிழ் சினிமாவில் ஒரு பாடல் காட்சியாவது ஊட்டியில் படமாக்குவதைப் பழக்கமாகவே வைத்திருந்தார்கள். தொடக்கத்தில் ஒரு பாடலுக்கான ஊராக மட்டுமே பார்க்கப்பட்டுவந்த ஊட்டி, பிறகு ‘ஊட்டி வரை உறவு’ என்று ஸ்ரீதர் படம் எடுக்கும் அளவுக்கு அந்த ஊர் சினிமாக்காரர்களின் ஆதர்சனமானது. ஸ்ரீதரின் 'காதலிக்க நேரமில்லை' படம் ஊட்டியை இன்னொரு பரிணாமத்தில் காட்டியது. அதன் பிறகே, பலரும் ஊட்டியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினார்கள். எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா’ படமும் ஊட்டி அழகை தனித்து அடையாளப்படுத்தியது.

பெரும்பாலான தமிழ் சினிமாக்களைப் பொருத்தவரை ஊட்டி என்றாலே தேயிலைத் தோட்டங்களும் மேடான புல்தரைகளும் அங்கு எடுக்கப்படும் பாடல் காட்சிகளும் என்றுதான் இருந்தது. ஆனால், அந்த எண்ணத்தை சிதறு தேங்காய்போல உடைத்துப்போட்டவர் இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. மலை ரயில் செல்லும் தண்டவாளங்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் குடியிருப்புகள், நீலகிரியின் மலை கிராமங்கள், பனியும் இளவெயிலும் கைகோர்க்கும் கிராமங்கள், வானுயர்ந்த மரங்கள், ஆளரவமற்ற உட்புறச் சாலைகள், ஆடம்பரமில்லாத அழகியல் என ஊட்டியை உயிர்ப்புடன் காட்டியவர்  பாலு மகேந்திராதான். குறிப்பாக அவருடைய‘மூன்றாம் பிறை’யும் ‘மூடுபனி’யும் ஊட்டியை அழகு பிறையாக மின்ன வைத்தது. ‘மூன்றாம் பிறை’யில் வரும் கேத்தி ரயில்வே ஸ்டேஷன் அவருடைய படங்களுக்கெல்லாம் சிகரம் வைத்த இடம்.

பாலிவுட்டும் ஊட்டியும்

ஒரு காலத்தில் குளுகுளு காட்சிகளைப் படம் பிடிக்க காஷ்மீருக்கும் சிம்லாவுக்கும் ஓடிக் கொண்டிருந்த பாலிவுட்காரர்கள், காஷ்மீரில் தீவிரவாதம் உச்சத்துக்குப் போனபோது ஊட்டிப் பக்கம் திரும்பினார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஊட்டியும் குளுமை தந்தது. இதனால், பிறமொழி இயக்குநர்களும் ஊட்டிக்கு வண்டியைத் திருப்பினார்கள். பொள்ளாச்சி, கோபியைப் போலவே ஊட்டியிலும் நூற்றுக்கணக்கான படங்கள் பிடிக்கப்பட்டுள்ள்ன. பொதுவாகப் பாடல் காட்சிகள் என்றில்லாமல், எழில் சார்ந்த சினிமா களமும் ஊட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கின்றன. 
1998-ல் வெளியான ‘உயிரே’ படத்தில் இடம்பெற்ற ‘ தக்க தைய.. தைய... தையா...’ பாடலில் ஊட்டி மலை ரயிலை புதிய கோணத்தில் காட்டியிருந்தார் இயக்குநர் மணிரத்னம். ஊட்டியில் நயின்த் மைல், பைன் மர காடு, பைக்காரா ஏரி, அப்பர் பவானி ஏரி, அவலாஞ்ச் ஏரி, எமரால்ட் ஏரி, தாவரவியல் பூங்கா, கேத்தி பள்ளத்தாக்கு, ரோஸ் கார்டன், ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா, ஃபெர்ன்ஹில்ஸ் அரண்மனை என படப்பிடிப்புகள் நடத்த ஏராளமான இடங்கள் ஊட்டியில் குவிந்துகிடக்கின்றன.

காரைக்குடி சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் படப்பிடிப்புகள் நடக்கும் பகுதியாகக் காரைக்குடி மாறியிருக்கிறது. மாறாத பழமை, வித்தியாசமான கட்டிடங்கள், பசுமையான கிராமங்கள் போன்ற அம்சங்கள் சினிமாக்காரர்களை காரைக்குடி ஈர்த்திருக்கிறது. ஆனால், காரைக்குடியில் ஒரு காலத்தில் சினிமா ஸ்டூடியோ இருந்தது இன்றைய தலைமுறையினர் அறிந்திராத சங்கதி. தமிழ் சினிமாவின் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் காரைக்குடியில்தான் முதன் முதலில் தங்களுடைய சினிமா ஸ்டுடியோவை உருவாக்கியது. காரைக்குடி ஸ்டூடியோவில்தான் புகழ்பெற்ற ‘வேதாள உலகம்’ படம் தொடங்கியது. காலப்போக்கில்தான் ஏவிஎம் சென்னைக்கு இடம் மாறி பிரபலமானது. 

ஏவிஎம் ஸ்டுடியோ சென்னைக்கு சென்ற பிறகு பல ஆண்டுகள் கழித்து முதன் முதலில் காரைக்குடி பகுதிகளையும் அதன் சுற்றுப்புற பகுதிகளையும் சினிமாவில் காட்டியவர் இயக்குநர் விசு. ‘சிதம்பர ரகசியம்’ என்ற படத்தைக் காரைக்குடியில்தான் அவர் படமாக்கினார். 1998-ல் ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’ படத்தின் காட்சிகள் அந்த ஊருக்கு சினிமா வெளிச்சத்தை அதிகமாக்கியது. காரைக்குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீட்டில் ஏராளமான படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பழமையைப் போற்றும் இதுபோன்ற வீடுகள் காரைக்குடியில் இருப்பதால் சினிமா படப்பிடிப்புக்கு அந்த ஊர் புகழ்பெற்று விளங்குகிறது.

காரைக்குடி செண்டிமெண்ட்
காரைக்குடி செட்டியார் அரண்மனை

தற்போது கிராமிய படங்கள் என்றாலே, பெரும்பாலும் காரைக்குடிக்குதான் செல்கிறார்கள். காரைக்குடியைச் சுற்றியுள்ள கானாடுகாத்தான் உள்ளிட்ட பல ஊர்களில் பழமையான கட்டிடக்கலையை நினைவுகூரும் விதமாக ஏராளமான வீடுகள் உள்ளன. காரைக்குடியில் ஒரு படம் எடுத்தால் ‘ஹிட்’ ஆகும் என்ற அரதபழசான சினிமா செண்டிமெண்ட் காரணமாகவும் நிறைய படங்கள் இங்கே படமாக்கப்பட்டுவருகின்றன. அந்த செண்டிமெண்டை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஹரி. இயக்குனர் ஹரி தன்னுடைய படத்தில் ஒரு காட்சியையாவது காரைக்குடியில் எடுக்காமல் இருக்க மாட்டார். அதேபோல் இயக்குனர் லிங்குசாமிக்கும் காரைக்குடி ஃபேவரைட். தமிழ்த் திரையுலகினர் மட்டுமல்லாமல் தெலுங்குத் திரையுலகினரும் தற்போது காரைக்குடிக்கு விரும்பிவருகிறார்கள். 

மீளுமா கனவுலக நகரங்கள்? 

ஒரு காலத்தில் பொள்ளாச்சி, கோபிச்செட்டிப்பாளையம், ஊட்டி போன்ற நகரங்களில் எப்போதும் சினிமா படப்பிடிப்புகளைப் பார்க்க முடியும். ஆனால், 2010-க்கு பிறகு பொள்ளாச்சி, கோபியில் சற்று குறையத் தொடங்கின. ஊட்டியில் சினிமா படப்படிப்பு நடப்பதே அரிது என்றாகிவிட்டாது. “சினிமா என்பது வியாபாரம் என்பதால், தொடக்கத்தில் இலவசமாக ஷூட்டிங் செய்ய இடம் கொடுத்த மக்கள் சற்று காசு கேட்க ஆரம்பித்தார்கள். காலத்துக்கு ஏற்ப கட்டணமும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. பிறகு போலீஸ் அனுமதி, கெடுபிடி என அதுவும் ஒரு பக்கம் அதிகமானது.  வனப்பகுதிகளில் சூட்டிங் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சினிமா சூட்டிங் லொகேஷன்கள் குறைந்தன. இதுபோன்ற காரணங்களால் இடையில் படப்பிடிப்புகள் இங்கே குறைந்தன. இப்போது மீண்டும் பழையபடி படப்பிடிப்புகள் தொடங்க ஆரம்பித்துள்ளன. தெலுங்கு படங்கள் இங்கே அதிகம் படம்பிடிக்கப்படுகின்றன.” என்கிறார் பொள்ளாச்சி ராஜ்குமார்.

ஸ்டுடியோக்களில் படப்பிடிப்புகள் நடந்தபோது, செயற்கைத்தனத்தோடு காட்சிகளைப் பார்த்துவந்த மக்களுக்கு வெளிப்புற படப்பிடிப்புகள்  காண்பதற்கினிய காட்சிகளையும் தந்தன. வெளிப்புற இடங்கள் மூலமே உலகக் காட்சிகளையும் தரிசிக்க முடிந்தது. ஆனால், இன்றோ சூட்டிங் நடத்த கட்டண உயர்வு, கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் போன்ற காரணத்தால், இந்த நகரங்கள் சினிமாக்காரர்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகின்றன. கடந்த ஒரிரு ஆண்டுகளாகத்தான் இந்த ஊர்களின் பக்கம் மீண்டும் சினிமாக்காரர்களின் பார்வை திரும்பியிருக்கிறது. பழையபடி  மீண்டும் சினிமா சொர்க்கங்களாக இந்த நகரங்கள் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. 

இந்து தமிழ், 2019 தீபாவளி மலர்

15/05/2020

அபாரமான சச்சின் - கங்குலி இணை உருவானது எப்படி?




சச்சின் டெண்டுல்கர் + சவுரவ் கங்குலி

பார்ட்னர்ஷிப்புகள்: 176

மொத்த ரன்: 8,227

சராசரி: 47.55

- 'ஒரு நாள் போட்டிகளில் வேறு எந்த இணையும் 6 ஆயிரம் ரன்களைக் கூட கடந்ததில்லை' என்று இரு நாட்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இட்ட ஒரு ட்வீட்தான் கடந்த இரு தினங்களாக சமூக ஊடங்களில் ட்ரெண்டிங். ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் - கங்குலி இணைக்கு ஈடு இணை ஏதும் இதுவரை இல்லை என்பதே நிதர்சனம். இந்திய ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் - கங்குலி இணை, ஓபனிங் இடத்தை எப்படிப் பிடித்தது?

1980-களில் ஒரு நாள் போட்டிகளில் ஆபத்தான ஓப்பனர்கள் என்றால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கார்டன் கிரீனீச் - டெஸ்மன்ட் ஹெய்ன்ஸ்தான். உலகின் எந்தப் பந்துவீச்சையும் துவம்சம் செய்து இந்த இணை அணியை வெற்றிக்குப் பக்கத்தில் கொண்டுவந்துவிடும்.

இவர்களுக்குப் பிறகு, அந்தக் காலகட்டத்தில் ஓரளவுக்கு அச்சுறுத்திய இணை என்றால், அது ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன் - ஜெஃப் மார்ஷ் இணைதான். 1980-களில் இந்தியாவின் சிறந்த ஓப்பனர்களாக கவாஸ்கர் - ஸ்ரீகாந்த் இணை கவனம் பெறத் தொடங்கின. ஆனால், 1987 உலகக் கோப்பையோடு கவாஸ்கர் ஓய்வு பெற, தொடக்க ஆட்டக்காரர்களாக, ஸ்ரீகாந்த், சித்து, ராமன் லம்பா, ரவி சாஸ்திரி, மனோஜ் பிரபாகர் என மாறிமாறி பலரும் ஓப்பனர்களாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அந்தக் கோதாவில் 1980-களின் இறுதியில் அறிமுகமான டபுள்யு ராமன், வினோத் காம்பிளி, 1990-களின் தொடக்கத்தில் அறிமுகமான அஜய் ஜடேஜா போன்றோரும்கூட சோதித்துப் பார்க்கப்பட்டார்கள். 1992-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ஸ்ரீகாந்த்-ரவி சாஸ்திரி-அஜய் ஜடேஜா குழுதான் ஓப்பனர்களாக இருந்தது. ஆனால், எத்தனை வீரர்கள் மாறினாலும் இந்திய அணிக்கு சிறந்த ஓப்பனர்கள் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகவும் கனவாகவுமே இருந்தது. சிறந்த ஓப்பனர் ஒருவர் உருவாகமாட்டாரா என்ற கேள்வி ஒவ்வொரு ரசிகரையும் துளைத்தெடுத்தது.

அப்போது 1994. இந்திய அணி நியூசிலாந்து சென்றது. இந்திய அணியின் ஓப்பனர்களாக சித்து-ஜடேஜா இணைதான் விளையாடியது. ஆக்லாந்தில் நடந்த ஒரு போட்டியில் சித்து விளையாட முடியாமல் போகவே, அந்த இடத்தில்தான் சச்சின் முதன் முதலாக ஓப்பனராக களமிறங்கினார். அதற்கு முன்பு 5 ஆண்டுகள் 4, 5, 6-ம் நிலைகளில்தான் சச்சின் விளையாடி வந்தார். இந்த ஓப்பனர் வாய்ப்புகூட சச்சினுக்கு எளிதில் கிடைக்கவில்லை. கேப்டன் அசாரூதினிடமும் பயிற்சியாளர் கெய்க்வாட்டிடமும் கெஞ்சி, கூத்தாடி வாய்ப்பைப் பெற்றார் சச்சின். முதல் பரிசோதனையில் தேறவில்லையென்றால், எக்காரணம் கொண்டும் ஓப்பனர் வாய்ப்பு கேட்டு வரமாட்டேன் என்று உறுதியளித்துதான் சச்சின் ஓப்பனர் வாய்ப்பைப் பெற்றார். முதல் போட்டியில் ஜடேஜாவுடன் இணைந்து களமிறங்கினார் சச்சின். அந்தப் போட்டியில் 143 என்ற இலக்கை விரட்டும்போது சச்சின் மட்டும் அதில் 82 ரன்களை விளாசினார். அதுவும் 49 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு. அந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் தொடக்க வீரர் என்ற அந்தஸ்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் சச்சின்.

1994-ம் ஆண்டு தொடங்கி, ஒரு முனையில் சச்சின் மட்டுமே நிரந்தர ஓப்பனராக
இருந்தார். அவருடன் சித்து, ஜடேஜா, மனோஜ் பிரபாகர் என வீரர்கள் மாறிக்கொண்டிருந்தார்கள். 1996 உலகக் கோப்பையில் சச்சின் - ஜடேஜா- சித்து ஆகியோர் ஓப்பனர்களாகக் களமிறங்கினார்கள். அந்தத் தொடருக்குப் பிறகு சில சமயங்களில் நயன் மொங்கியா, டபுள்யு ராமன், சோமசுந்தர், மஞ்சரேக்கர் என வேறு சிலரும் சச்சினோடு ஓப்பனராக களமிறங்கிப் பார்த்தார்கள். ஆனால், சச்சினுக்கு இணையாக வேறு எந்த ஒரு வீரரும் ஓப்பனராக உருவாகவில்லை.

அந்த சமயத்தில்தான் 1992-ம் ஆண்டிலேயே அறிமுகமாகி அணியில் ஓரங்கட்டப்பட்டிருந்த சவுரவ் கங்குலி மீண்டும் 1996-ம் ஆண்டில் வாய்ப்பு பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்த சவுரவ் கங்குலி, ஒரு நாள் போட்டிகளிலும் வாய்ப்பு பெற்றார். கங்குலியும் எடுத்த எடுப்பிலேயே ஓப்பனர் வாய்ப்பைப் பெறவில்லை. 5, 6-ம் நிலைகளில்தான் விளையாடி வந்தார். 1996-ம் ஆண்டின் மத்தியில் சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக உயர்ந்தார். 1997-ம் ஆண்டில் தொடக்கத்தில் பலம் பொருந்திய தென் ஆப்பிரிக்காவுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்தத் தொடரில் முக்கிய மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. வலுவான தொடக்க ஜோடி தேவை என்ற அடிப்படையில் சச்சின் டெண்டுல்கருடன் சவுரவ் கங்குலி ஓப்பனராக களமிறங்கினார். அந்தத் தொடரில்தான் சச்சின் - சவுரவ் ஓப்பனிங் சாம்ராஜ்ஜியம் தொடங்கியது.

ஆனால், அந்தக் காலகட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற தடுமாறிக்கொண்டிருந்தது. சில சந்தர்ப்பங்களில் கேப்டனாக இருந்த சச்சின் டெண்டுல்கர் 4-ம் நிலையில் விளையாட நேர்ந்தது. அப்போதெல்லாம் சவுரவ் கங்குலியுடன் ஜடேஜா, சித்து ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். ஆனால், 1998 ஜனவரியில் கேப்டன் பொறுப்பைத் துறந்த சச்சின் டெண்டுல்கர், மீண்டும் கங்குலியுடன் தொடக்க வீரராக களமிறங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு சச்சினும் கங்குலியும் களத்தில் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் மாயாஜாலங்கள்தான். எதிரணிகளைக் களங்கடிக்கும் வகையில் இருவரும் ஓப்பனராக அதிரடி பாணிகளைக் கையாண்டார்கள். சச்சினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்களும், கங்குலியின் கிளாசிக் ஸ்கொயர் கட்களும் அவர்களுடைய ஓப்பனிங் கேரியரை அடுத்தடுத்த ஆண்டுகளில் எங்கோ கொண்டு சென்றன. 1997-ம் ஆண்டு தொடங்கி 2002-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இந்திய அணியின் ஓப்பனர்களாக இருவரும் நிலைப் பெற்றார்கள். 2001-ம் ஆண்டில் சேவாக் இந்திய அணியில் அறிமுகமாகி, அவரும் தொடக்க வீரராக உருவான பிறகே, சச்சின் - சவுரவ் கங்குலி ஓப்பனிங்கிற்கு மாற்று வந்தது.

அதன் பிறகும்கூட 2007-ம் ஆண்டு வரை சச்சினும் - கங்குலியும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஓப்பனராக களமிறங்கியிருக்கிறார்கள். ஆனாலும் 1997-2002ம் ஆண்டு காலகட்டத்தில் இவர்கள் ஓப்பனர்களாக நிகழ்த்திய காட்டிய வாணவேடிக்கைகள் ரசிகர்களின் மனங்களில் நங்கூரமிட்டு நினைவில் நிற்கின்றன; அது என்றும் மனதில் நிலைத்து நிற்கும்!

06/05/2020

ஊர் கூடி மீன் பிடி!





















வற்றும் நிலையில் உள்ள பெரிய குளம். குளத்தைச் சுற்றி திரண்டு நிற்கும் ஊர் மக்கள். ஊர்ப் பெரியவர்கள் வந்தவுடன் தொடங்குகிறது பரபரப்பு. குளத்தில் இறங்கி குஸ்தி போடாத குறையாக ஒருவரையொருவர் முட்டி மோதி முன்னேறுகிறார்கள். இதில் சிறுவர் முதல் பெரியவர் வரை என எந்தப் பாகுபாடும் இல்லை. இத்தனை களேபரமும் எதற்குத் தெரியுமா?

மீன்களைப் பிடித்து, அதை விதவிதமாகச் சமைத்து, ஆசை தீர சாப்பிடுவதற்குத்தான். விநோதமாக இருக்கிறதா? இதைத்தான் இன்று மீன்பிடித் திருவிழா என்று பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக மக்கள் கொண்டாடுகிறார்கள்.

பொதுவாகக் கடலோரங்களில் மீன்பிடித் திருவிழாக்கள் நடப்பது பெரிய விஷயமல்ல. எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் கடலோரங்களில் இத்திரு விழாவை நடத்த வசதியும் வாய்ப்பும் உண்டு. ஆனால், ஊர்ப்புறங்களில் நடக்கும் மீன்பிடித் திருவிழாக்கள் அந்த ரகத்தைச் சேர்ந்தவை அல்ல. ஆண்டில் ஓரே ஒரு முறை மட்டுமே கொண்டாட முடியும். அதுவும் மார்ச் முதல் மே மாதங்களுக்குள்தான்.

ஊரில் உள்ள குளத்திலோ, ஊருணியிலோ, குட்டையிலோ நீர் இருப்புக் குறைந்து கொண்டே வருவதுதான் மீன் பிடித் திருவிழாவுக்கான முதல் அறிகுறி. பொதுவாக நீர் நிலைகள் மார்ச்சில் தொடங்கி மே மாதத்திற்குள் முழுவதுமாக வற்றிவிடும். நீர் வற்றும்போது அதில் வாழும் மீன்களைப் பிடிக்காமல்விட்டால்,அது இறந்து, கருவாடாகி, மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும். இப்படி மீன்கள் வீணாக மடிவதைத் தடுக்க கொண்டாடப்படுவதே மீன்பிடித் திருவிழா என்று சிலர் திருவிழா கொண்டாடக் காரணம் சொல்கிறார்கள்.

ஆனால், இந்த விழாவை ஊர் கூடி சாதாரணமாக முடி வெடுத்துவிட முடியாது. கிராமங்களில் நீர்நிலைகளுக்கென்று சட்டத் திட்டங்கள் உள்ளன. ஊரில் உள்ள கோயில் குளமாக இருந்தாலும் சரி, ஊர் பொதுக் குளமாக இருந்தாலும் சரி, அவை கோயிலுக்கோ, பஞ்சாயத்துக்கோ சொந்த மானதாகவே இருக்கும். குளத்தில் நீர் வற்றும்போது கோயில் நிர்வாகமோ, பஞ்சாயத்தோ கூடி மட்டுமே மீன்பிடித் திருவிழா நடத்த முடியும். அவர்கள் முடிவு செய்த பிறகு, மக்களோடு கூடி ஆலோசிப்பார்கள். இதில் தேதி முடிவானதும் திருவிழாவுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கும்.

கிராமங்களில் நடைபெறும் கோயில் திருவிழாவுக்குரிய மரியாதை இன்று மீன் பிடித் திருவிழாவுக்கும் கொடுக்கப் படுகிறது. இதற்காகவே ஊரில் உள்ள சொந்த பந்தங்கள் அழைக்கப்படுகிறார்கள். குடும்பமே ஒன்று கூடுகிறது. முன்னேற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். அன்றைய தினத்தின் அதிகாலையிலேயே ஊர் மக்கள் திரண்டு குளத்தில் குழுமி விடுகிறார்கள். ஊர்ப் பெரியவர்கள் குளத்தில் இறங்கி மீனைப் பிடிக்கும் விழாவை தொடங்கியதும் அந்த இடமே களேபரமாகிவிடுகிறது.

மீனைப் பிடிக்க வலை, துணி, தடி, தூண்டிலுடன் வரும் மக்கள் மீனைக் குறி பார்த்துப் பிடிக்கிறார்கள். கையில் எல்லோருக்கும் மீன் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. அதிர்ஷ்டமும் தேவை. விரைவாக மீன் அகப்பட்டால், கரையேறிவிடுவார்கள். பெண்கள் அதை விருந்தாக்குவதில் மூழ்கிவிடுவார்கள். சுண்டியிழுக்கும் மீன் குழம்பு, நாக்கில் எச்சில் ஊற வைக்கும் மீன் வறுவல் என விதவிதமாக விருந்து தயாராகும். அப்புறமென்ன? சொந்தங்களும் பந்தங்களும் கூடி மீனை ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான்.

இந்த விழா புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை எனத் தமிழ் நாட்டின் சில மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் சிலவற்றில் தொன்றுதொட்டுக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இன்றோ கேளிக்கை நிகழ்ச்சியாகப் பார்க்கப்படும் இந்த விழா, பல்வேறு கிராமங்களிலும் பரவி விமர்சையாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

தமிழகத்தில் இனிவரும் கோடைக் காலங்களில் கிராமங்கள்தோறும் மீன் பிடித் திருவிழா நடந்தாலும் நடக்கலாம். யார் கண்டது?

- தி இந்து, 2014 மே

04/05/2020

1918-ல் ஸ்பானிஷ் ஃபுளூ... 2020-ல் கொரோனா.. இரு தொற்றுகளை வென்றவர்!

ரலாற்றைப் புரட்டிப் போட்ட நூற்றாண்டு கடந்த நிகழ்வுகளில் வாழும் உதாரணங்கள் இருப்பது மிகமிக அரிது. அதை மாற்றி காட்டியிருக்கிறது இந்த கொரோனா காலம். உலகையே கதி கலங்க வைத்திருக்கும் இந்த கொரோனா காலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த மூதாட்டி ஏனா டெல் வெல்லா என்பவர் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்.  நூறு வயதைக் கடந்த இந்த மூதாட்டி சாதாரணமாகக் கவனத்துக்கு வரவில்லை. இரு தொற்றுநோய்களை வென்றெடுத்த மூதாட்டி என்ற பெரும் பெயரோடு உலக அளவில் கவனம் ஈர்த்திருக்கிறார்.

இன்று உலகையே பாடாய்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று நோயைப் போலவே, நூறு ஆண்டுகளுக்கு முன்பும் உலகம் ஒரு தொற்றுநோயால் உறைந்துபோய் கிடந்தது. முதலாம் உலகப் போரால் உலகம் திண்டாடிக்கொண்டிருந்த வேளையில், 1918-ம் ஆண்டில் உலகை பீதியில் உறைய வைக்க ஸ்பானிஷ் ஃப்ளூவும் கிளம்பியது. இன்று கொரோனா தொற்றுநோயைப் போலவே, அன்று பெரும்பாலான உலக நாடுகளில் ஸ்பானிஷ் ஃபுளூ ஜெட் வேகத்தில் பரவியது. 1918-ம் ஆண்டு முதல் 1920-ம் ஆண்டு வரை நீடித்த இந்த ஸ்பானிஷ் ஃபுளூ வைரஸால் உலகம் முழுவதும் 50 கோடி மக்கள் மாண்டார்கள் என்கின்றன பதிவுகள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு உலகையே அசைத்துபார்த்த ஸ்பானிஷ் ஃபுளூ தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் ஸ்பெயினைச் சேர்ந்த ஏனா டெல் வெல்லா. 1913-ம் ஆண்டில் பிறந்த இவர், 5 வயது சிறுமியாக இருந்தபோது ஸ்பானிஷ் ஃபுளூ தொற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ஏனா டெல், சிகிச்சைக்கு பிறகு ஸ்பானிஷ் ஃபுளூ தொற்று நோயிலிருந்து மீண்டு வந்தார். அன்று சிறுமியாக நோய்தொற்றுக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்டு வந்த ஏனா டெல், 2013-ம் ஆண்டில் நூற்றாண்டைக் கடந்தார்.

ஆனால், தற்போது 107-வது வயதை  எட்ட உள்ள ஏனா டெல்லுக்கு கொரோனா வடிவில் பெரும் சோதனை வந்தது. இத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயினில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிய வேளையில், ஏனா டெல் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மாட்ரிட்டில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஏனா டெல், கொரோனா நோய்தொற்றிலிருந்து மீண்டு வருவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. வயதானவர்களை கொரோனா ஒரு வழி பார்த்துவிடுகிறது என்பதால் ஏற்பட்ட சந்தேகம் இது.

ஆனால், மருத்துவமனையில் நீண்ட உயிர்ப் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவிலிருந்து பரிபூரணமாக மீண்டுவந்திருக்கிறார் ஏனே டெல்.  நலத்தோடு வீடும் திரும்பிவிட்டார். அவரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர் மருத்துவர்களும் ஊழியர்களும். முதியவர்களுக்கு கொரோனா நோய்தொற்று வந்தால் அவ்வளவுதான் என்று கூறப்படும் நிலையில், 107 வயதான டெல், அதிலிருந்து மீண்டுவந்து உலகுக்குப் புதிய செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்.

அதோடு, நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பானிஷ் ஃபுளூ, இப்போது கொரோனா என இரு பெரும் தொற்றுநோய்களிலிருந்து மீண்டு, ஒரு நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த இரு தொற்றுநோய்களிலும் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டவர் என்று வாழும் உதாரணமாகியிருக்கிறார். வரலாற்றில் அரிதான நிகழ்வுகள் எப்போதாவது நிகழும். அந்த வகையில் ஏனா டெல் வெல்லா நிகழ்த்தி காட்டியிருப்பது அரிதிலும் அரிதான ஒன்று!