நவநாகரீக இளைஞர்கள், யுவதிகளின் விருப்ப உணவு என்ற அடையாளமாகிவிட்டது பீட்சா. லேட்டஸ்ட் உணவுகளின் பட்டியலில் இடம் பிடித்துவிட்ட இந்த உணவு குழந்தைகள், பெரியவர்களையும்கூட விட்டுவைக்கவில்லை. பீட்சா, பிசா, பிட்சா, பிச்சா என விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இது, உலகில் மிகவும் அரத பழசான உணவு வகைகளில் ஒன்று!
பீட்சா என்பது இத்தாலிய நாட்டு உணவு. பின்சா என்ற லத்தீன் மொழியிலிருந்து பீட்சா வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கி.மு. 3-ம் நூற்றாண்டிலேயே இந்த உணவை கிரேக்கர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். சுடுமண் அடுப்பில் மிகவும் கெட்டியாகத் தட்டையான ரொட்டியை செய்து கிரேக்கர்கள் சாப்பிட்டதுதான் பீட்சாவுக்கு முன்னோடி. கி.மு.வில் தொடங்கி கி.பி. வரை இந்த பீட்சா காலம்காலமாக சாப்பிடப்பட்டு வந்தாலும், ஓவர் நைட்டில் உலகப் புகழ் பெற்றது கி.பி. 1800-களில்தான். ‘ஏழைகளின் உணவு’ என்று இத்தாலியில் இதை அழைத்திருக்கிறார்கள். இன்றோ அது வசதிப்படைத்தவர்களின் உணவாகிவிட்டது.
இத்தாலியின் ராணியாக இருந்தவர் மெர்கரிட்டா. இவர் தனது கணவர் ராக் உம்பர்டோவுடன் நேப்பிள் நகருக்கு ஒரு முறை வந்தார். அரண்மனைக்கு வந்ததும், வழக்கமான உணவாக இல்லாமல் வித்தியாசமான உணவை செய்துதரும்படி அரண்மனையின் தலைமை சமையல் கலைஞர் ரஃபேலுக்கு உத்தரவிட்டார். இத்தாலியிலேயே நேப்பிள் நகரில்தான் பீட்சா ரொட்டி மிகவும் பிரபலமாக இருந்தது. உழைக்கும் மக்கள் இதை விரும்பிச் சாப்பிட்டு வந்தார்கள்.
வித்தியாசமான உணவு என்றதும் சமையல் கலைஞருக்கு பீட்சா ரொட்டிதான் ஞாபகத்துக்கு வந்தது. ஏழைகள் சாப்பிடும் உணவு போல இல்லாமல், கொஞ்சம் மாற்றி செய்ய முடிவு செய்தார். தட்டையான ரொட்டியைச் செய்து அதில் இறைச்சி, பாலடைக்கட்டி, தக்காளி, இலைதழைகள் ஆகியவற்றை ரொட்டியின் மீது பரப்பி தயார் செய்தார். தக்காளி, பாலாடைக்கட்டி, இலைகள் ஆகியவற்றை இத்தாலியின் தேசியக் கொடி வடிவத்தில் அடுக்கினார். இந்த உணவை ராணியிடம் கொடுத்தார். அதன் ருசி ராணிக்குப் பிடித்துப்போனது. ஒரு பிடிப்பிடித்தார்.
ராணி விரும்பிச் சாப்பிட்ட அந்த உணவு இத்தாலியில் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமானது. போதாக்குறைக்கு அதற்கு ‘மெர்கரிட்டா பிட்சா’ என ராணியின் பெயரை வைத்து அழைக்க ஆரம்பித்தார்கள். இப்படி இத்தாலியின் பிரபலமான பீட்சா, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகை சுற்ற ஆரம்பித்தது.
ஒவ்வொரு நாட்டுக்கு ஏற்றார்போல பீட்சாவில் வைக்கப்படும் உணவு வகைகள் மாறுகின்றன. இந்தியாவில் பெரும்பாலும் தந்தூரி சிக்கன், பன்னீர் ஆகியவற்றை வைத்தும் காரமாகவும் பீட்சாவை தருகிறார்கள். இன்று இந்தியாவில் பட்டிதொட்டிகளில்கூட பீட்சா கார்னர்கள் முளைத்துவிட்டன.
இந்தியாவில் பாரம்பரிய உணவையெல்லாம் எல்லோரும் மறந்துவிட்ட நிலையில், உலகின் மிகவும் பழைய உணவுகளில் ஒன்றான பீட்சாவுக்குக் கொடிபிடிப்பது நகைமுரண் அல்லவா?
- இந்து தமிழ், 03-06-2016
No comments:
Post a Comment