25/04/2020

ஹிட்லர் - சர்வாதிகாரத்தின் புதிய வரலாறு!


மனிதனுக்கு இனவெறியும் குரூர எண்ணமும் ரத்த வேட்கையும் ஏற்பட்டால், என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்கள் உண்டு. இதன் விளைவான சர்வாதிகாரம், ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் சக்தி உடையது. சர்வாதிகாரி என்றால் ஞாபகத்துக்கு வரும் முதல் பெயர், ஹிட்லர்! இவரது ஆட்சிக்காலம் ஏதோ சினிமாவில் வரும் சம்பவக் கோர்வை போலவே இருக்கிறது. ஆனால், அத்தனையும் நடுநடுங்க வைக்கும் உண்மைகள்.

ஜெர்மனியில் 12 ஆண்டுகள் நீடித்த இவரது சர்வாதிகார ஆட்சியில் ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுத்து பல நாடுகளை சுனாமியாகக சுருட்டி பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60 லட்சம் யூத மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தார். தன்னை வெல்ல உலகில் யாரும் இல்லை என்ற இறுமாப்பில் போலந்து மீது படையெடுத்து இரண்டாம் உலகப் போருக்கு பிள்ளையார் சுழி போட்டார். 20-ம் நூற்றாண்டின் மத்தியில் உலகையே நடுங்க வைத்த ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி, 1946 ஏப்ரல் 30 அன்று முடிவுக்கு வந்தது. ஹிட்லர் இறந்து இந்த வாரத்தோடு 64 (2020-ம் ஆண்டோடு ஹிட்லர் இறந்து 75 ஆண்டுகள் ஆகின்றன) ஆண்டுகள் உருண்டோடுவிட்டன.

ஜெர்மனி - ஆஸ்திரிய எல்லையான பிரானோவில் 1889 ஏப்ரல் 20 அன்று பிறந்தார் அடால்ப் ஹிட்லர். அவரது தந்தை அலாய்ஸ் ஹிட்லர். தாய் கிளாரா. குட்டிப்பையன் ஹிட்லர் ரொம்பவே சாது. ஓவியன் ஆவதே அவனுடைய கனவு. 1903-ம் ஆண்டில் தந்தையையும், அடுத்த 4 ஆண்டுகளில் தாயையும் பறிகொடுத்த ஹிட்லரின் வாழ்க்கை திசை மாறியது. பிழைப்புக்காக ஆஸ்திரியா தலைநகர் வியன்னா சென்றார். தினக்கூலி சாயப்பட்டறை வேலை. வாழ்த்து அட்டைகளுக்கு ஓவியம் வரைவது ஆகியவைதான் ஹிட்லரின் ஆரம்ப கால வேலைகள்.

ஐரோப்பிய நாடுகளில் அப்போது யூதர்கள் அதிகளவில் வாழ்ந்துவந்தனர். ஆஸ்திரியாவிலும் யூதர்கள் முக்கியத்துவம் பெற்று விளங்கினர். யூதர்களுக்கு என்று தனியாக நாடு இல்லை என்றாலும், பரந்து விரிந்து இருந்தனர் (1948-ல் தான் இஸ்ரேல் உருவானது). அதுவும் பணக்காரர்களாகவும் உயர் பதவிகளிலும்.. ஆனால், மண்ணின் மைந்தர்கள்
ஏழைகளாகவும் கூலிகளாகவும் இருந்தனர். சொகுசு வாழ்க்கை வாழ்ந்த யூதர்களுக்கே எதிலும் முன்னுரிமை. இது ஹிட்லருக்குப் பிடிக்கவில்லை. ஐரோப்பாவில் பாராளுமன்ற நடைமுறையும் ஹிட்லருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இவை அனைத்துக்கும் மேல்மட்ட அளவில் பரவியுள்ள யூதர்களே காரணம் என்று எண்ணினார் ஹிட்லர்.

1914-ல் முதல் உலகப் போரின்போது வியன்னாவில் இருந்து வெளியேறி ஜெர்மனி சென்ற ஹிட்லர், ராணுவத்தில் இணைந்தார். போரில் ஜெர்மனி அடிவாங்கியது. ஆனால், அகண்ட ஜெர்மனி கனவு ஹிட்லருக்குள் புகைந்துகொண்டே இருந்தது. அப்போது ஜெர்மன் தொழிலாளர் கட்சி யூத எதிர்ப்பைக் கொண்டிருந்தது. ஆனால், இந்தக் கட்சியில் மக்களைக் கவரக்கூடிய அளவில் பேச்சாளர்கள் இல்லை. இந்தக் கட்சியில் சேர்ந்த ஹிட்லர், குறுகிய காலத்திலேயே பேச்சுத்திறமையால் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் பெற்றார். கட்சியின் பெயரை தேசிய சோஷலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி என மாற்றினார். சுருக்கமாக ‘நாஜி’.

1928-ல் நடந்த தேர்தலில் நாஜிகள் தோல்வியைத் தழுவினர். 1933-ல் அரசுக்கு எதிராக மக்களை புரட்சி செய்ய நாஜிகள் தூண்டினர். இதில் ஹிட்லர் வெற்றியும் பெற்றார். ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பக் புரட்சிக்கு தலைவணங்கி ஹிட்லரை பிரதமராக அறிவித்தார். அடுத்த சில மாதங்களிலேயே ஹிண்டன்பக் இறந்துபோக, ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக்கொண்டார் ஹிட்லர். ஜனநாயகத்தைத் தூக்கி எறிந்து தன்னை ஜெர்மனியின் சர்வாதிகாரியாக அறிவித்தார் ஹிட்லர்.

ஹிட்லர் சர்வாதிகாரியாக ஆனதுமே யூதர்கள் எதிர்ப்பு அரசின் திட்டத்திலேயே இடம் பெற்றது. 1935-ல் நியூரெம்பர்க் சட்டத் திருத்தம் மூலம் யூதர்களுக்கு வழங்கப்பட்ட எல்லா சலுகைகளையும் பறித்தார். யூதர்கள் இரண்டாம் கட்ட குடிமக்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்களது சொத்தகள் பறிக்கப்பட்டன. ஜெர்மனியர் யூதரை திருமணம் செய்ய தடை... இப்படி அதிரடியில் இறங்கினார் ஹிட்லர்.

1939-ல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. இந்தப் போரில் ஐரோப்பா முழுவதும் யூதர் ஒழிப்பு என்ற சிந்தனை அவரிடம் எழுந்தது. போர் மூலம் ஆஸ்திரியா, செக்கோஸ்லோவேகியா ஆகிய நாடுகளை ஜெர்மனியுடன் இணைத்தார். அந்நாடுகளிலும் யூதர்களைக் கொன்றுகுவித்தனர் நாஜி படையினர். பிடிபட்ட யூதர்களை விஷவாயு செலுத்தி கொலை செய்தனர். பல யூதர்கள் மருத்துவப் பரிசோதனை  விலங்குகளாக ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போருக்கு முன்புவரை ஹிட்லருக்கு எல்லாமே சாதகமாக இருந்தது. முடிந்தவரை யூதர்கள் அனைவரையும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று இனவெறியும் ரத்த வேட்கையும் ஹிட்லரை ஆட்டிப்படைத்தது. இக்காலகட்டத்தில் மட்டும் 57 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்குக் காரணமான இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளை பழிவாங்க நினைத்தார். முன் அறிவிப்பு இல்லாமல் போலந்து மீதும் போர் தொடுத்தார். அப்போதுதான் நேச நாடுகள் என்ற பெயரில் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து ஜெர்மனிக்கு எதிராகக் களம் இறங்கின. இன்னொருபுறம் ரஷ்யாவும் ஜெர்மனி மீது போர் தொடுத்தது. இது இரண்டாம் உலகப் போராக உருவெடுத்தது.

தொடக்கத்தில் ஜெர்மனிக்கு சாதகமாக இருந்த போர் மெல்லமெல்ல எதிராக மாறியது. ரஷ்யப் படையின் தாக்குதலுக்கு நாஜிகளால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ரஷ்யப் படைகள் எதிர்ப்பே இல்லாமல் நுழையும் தருணம். தப்பிச் செல்ல பலர் ஆலோசனை வழங்கியும், அதை ஹிட்லர் ஏற்கவில்லை.  ‘கடைசி மூச்சுவரை பெர்லினில்தான்
இருப்பேன்’ என்று உறுதியாக இருந்தார்.

1945 ஏப்ரல் 20, ஹிட்லருக்கு 56-வது பிறந்த தினம். தொடர்ந்து வந்த தோல்விகளால் உற்சாகமே இல்லாத கொண்டாட்டம். ஏற்கனவே இருவரை திருமணம் செய்திருந்த ஹிட்லர், ஏப்ரல் 28 அன்று 3-வது காதலி ஈவா பிரானை திடீர் மனம் புரிந்துகொண்டார். ஏப்ரல் 30 அன்று ரஷ்யப் படைகள் பெர்லினில் புகுந்தன. அனைவரிடம் இருந்தும் விடைபெறுவதாகக் கூறி ஓர் அறைக்குச் சென்றார் ஹிட்லர். ஈவாவுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஹிட்லரின் சர்வாதிகாரம் மட்டுமல்ல, அடுத்த ஒரு வாரத்தில் இரண்டாம் உலகப் போரும் முடிவுக்கு வந்தது. ஹிட்லரின் வாழ்க்கை ரத்த சகதியால் ஆனது. அவருக்கு மனநோய் ஏற்பட்டதால்தான் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  ஆண்டுகள் பல ஆனாலும், அவர் ஆடிய பேயாட்டத்தின் தாக்கம் இன்னமும் குறையவில்லை. சர்வாதிகாரம் என்ற குரூரத்துக்கு புதிய இலக்கணம் படைத்தவர் ஹிட்லர்!

- முத்தாரம், 30-04-2009 

21/04/2020

கவுண்டமணி - செந்தில் காலம்... விலா நோக வைத்த இரட்டையர்கள்!


 தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கென எப்போதுமே தனி இடம் உண்டு. அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு நகைச்சுவை நடிகரும் தங்களுடைய தனித் திறமையால் தமிழ் சினிமாவில் கோலோச்சினார்கள்; கோலோச்சிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்,  தமிழ்ப் பட நகைச்சுவைக் காட்சிகளில் இரட்டையர்களாகத் தோன்றி தமிழ் ரசிர்களைக் கலகலப்பூட்டி, வயிறைக் குலுங்க வைத்து ரசிகர்களின் மனதில் பசை போட்டு உட்கார்ந்தவர்கள் அந்த இரட்டையர்கள். அவர்கள், கவுண்டமணி- செந்தில்!

உலக அளவில் இரட்டை காமெடியர்களாக காலங்கள் கடந்தும் ஆராதிக்கப்படுபவர்கள் அமெரிக்காவின் லாரல் - ஹார்டி. இவர்களில் லாரல் குண்டாகவும் கொஞ்சம் அப்பாவியாகவும், ஹார்டி ஒல்லியான குறும்புக்காரராகவும் இருப்பார். இவர்கள் இருவரும் சேர்ந்து வயிறு குலுங்க செய்த சேட்டைகளால் உலகப் புகழ் பெற்றவர்கள். இந்த இரட்டையர்களே போலவே தமிழ் ரசிகர்களின் விலா எலும்பை நோக வைத்தவர்கள் கவுண்டமணி - செந்தில் ஜோடி.

பெரும்பாலான படங்களில் கவுண்டமணிக்கு விஷயம் தெரிந்தவர் என்ற அடையாளம்.. செந்திலுக்கு அப்பாவித் தோற்றம். ‘அண்ணே... அண்ணே’ என வளைய வரும் செந்திலை, ‘டேய் கோமுட்டித்தலையா, பேரிக்காய் தலையா, பரங்கிக்காய் மண்டையா’ என திட்டியும், அடிப்பதே கவுண்டமணியின் பாணியாக இருந்தது. விதவிதமான வார்த்தைகளில் ஒருவர் திட்டி அடிப்பதையும் இன்னொருவர் அதை ஏற்பதும் தமிழ் காமெடி உலகில் புதிதாய் இருக்கவே கவுண்டமணி – செந்தில் ஜோடி தமிழ் சினிமா உலகில் கொடிக் கட்டிப் பறக்க ஆரம்பித்தது. கவுண்டமணியும் செந்திலும்  இணைந்து நடித்தால் அந்தப் படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது என்று நிலையை குறுகிய காலத்திலேயே இருவரும் ஏற்படுத்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட காமெடி நடிகர்கள்  ஒன்றாக இணைந்து நடிப்பது தமிழ்ப் படங்களில் புதிது அல்ல. ஆனாலும், தங்களின் தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் நடிக்கவே செய்தார்கள். ஆனால், ஒருவர் திட்டி அடிக்கவும், இன்னொருவர் அதை வாங்கிக் கொள்வதையும் எந்த ஈகோவும் இல்லாமல் செய்து ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து படைத்தவர்கள் கவுண்டமணியும் செந்தில் மட்டுமே. இந்த இணை எப்படி உருவானது? யார் உருவாக்கியது?

1970-களின்  தொடக்கத்தில் அறிமுகமாகி பாரதிராஜா கைவண்ணத்தில் உருவான ‘பதினாறு வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமானார் கவுண்டமணி . அதே 1970-களின் இறுதியில் அறிமுகமாகி ‘மலையூர் மம்பட்டியான்’ படம் மூலம் பிரபலமானவர் செந்தில். 1980-களில் கவுண்டமணியும், செந்திலும் தனித்தனி காமெடியர்களாகவும், குணச்சித்திர நடிகர்களாகவும், சில நேரங்களில் காமெடி கலந்த வில்லன் வேடங்களிலும் தங்களுக்குரிய ஸ்டைலில் நடித்து வந்தனர்.  தனித்தனி நாயனம் வாசித்து வந்த இருவரையும் செட் தோசை போல ஒன்றாக்கியவர் காமெடிக்கென தனி ட்ராக் வசனங்களை எழுதி புகழ்பெற்ற ஏ. வீரப்பன் (கரகாட்டக்காரன் உள்பட பல படங்களுக்குத் தனி காமெடி ட்ராக் எழுதியவர்) என்பவர்தான்.

கவுண்டமணி - செந்தில் ஜோடி பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு இவர் எழுதிய காமெடி டிராக் வசங்களும் ஒரு காரணம்.  இருவருடைய நகைச்சுவை நடிப்பையும் கண்காணித்து,  இருவருடைய தமாஷான உடல்மொழிகளை உள்வாங்கி வீரப்பன் எழுதிய காமெடி டிராக் மிகப் பெரிய ஹிட் ஆனது. ‘ நான் பாடும் பாடல்’, ‘உதயகீதம்’, ‘வைதேகி காத்திருந்தாள்’ படங்களைத் தொடர்ந்து கவுண்டமணி- செந்திலை வைத்து வீரப்பன்  எழுதிய காமெடி டிராக் பெரிய ஹிட் ஆயின.

முதன் முதலில் கவுண்டமணி - செந்தில் ஜோடி இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் படங்களில்தான் ஒன்றாகச் சேர்ந்து தலைக்காட்ட ஆரம்பித்தது. ‘வைதேகி காத்திருந்தாள்’ படம் அதற்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது. இந்தப் படத்தில் இவர்களின் காமெடிக்குக் கிடைத்த அங்கீகாரமும் வரவேற்பும் இந்த ஜோடியை காமெடி ராஜாக்களாக தமிழ் சினிமாவில் அடையாளம் காட்டியது. இந்தப் படத்தில் கவுண்டமணி ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’வாகவும் செந்தில் ‘கோமுட்டித் தலையன்’ ஆகவும் நடித்து புகழ்பெற்றனர். இதன்பிறகு 90-களின் இறுதிவரை இந்த ஜோடி அடித்த காமெடி லூட்டி தமிழ் ரசிகர்கள் காலத்தால் மறக்க முடியாதவை.

கவுண்டமணி செந்தில் ஜோடியின் மிகப் பெரிய வெற்றிக்கு செந்திலின் அப்பாவித்தனமும் எடக்குமடக்கான கேள்வியும், கவுண்டமணியை வம்பில் மாட்டிவிட்டு அப்பாவியாக வேடிக்கைப் பார்ப்பது போன்றவை காரணம் என்றால்,  செந்திலை கவுண்டமணி குசும்பும் நக்கலும் கலந்த வார்த்தைகளால் திட்டுவது, விரட்டி விரட்டி உதைப்பதுடன், அவருக்கெ உரிய உடல்மொழியும், வசனங்களை உச்சஸ்தாயில் கேலியாகவும் கிண்டலாகவும் வெளிப்படுத்தும் தோரணையும் முக்கிய காரணமாக இருந்தது உண்மை. இவை இந்த ஜோடியின் தனித்த அடையாளமாக மாறவும் செய்தது.

கவுண்டமணியும் செந்திலும் சக்கைப்போடு போட்ட காலத்தில் செந்திலை அடிப்பதும், உடல் உருவத்தின் அடிப்படையில் கிண்டல் செய்வதும் காமெடியா என்ற விமர்சனம்கூட எழுந்தது. ஆனாலும், கவுண்டமணி-செந்தில் இணைக்கு வரவேற்பும் குறையவில்லை; ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை. கவுண்டமணி செந்திலை திட்டி, அடித்தும்கூட இந்த ஜோடி தொடர்ந்து சினிமாவில் ஜொலிக்க கவுண்டமணி மற்றும் செந்திலின் ஜோடிக்கு இருந்த மவுசும் அவர்களைத் திரையில் பார்த்தாலே தங்களை மறந்து ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை பாணியே முக்கிய காரணமாக அமைந்தது. சினிமாவைத் தாண்டி கவுண்டமணி-செந்தில் இடையே இருந்த அண்ணன் - தம்பி என்ற பாசப் பிணைப்பும் இதுபோன்ற விமர்சனங்களை இருவரும்  புறந்தள்ள  ஒரு காரணமாக இருந்தது.

1980-களில் ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய ‘நான் பாடும் பாடல்’, ‘வைதேகி காத்திருந்தாள்’ போன்றவற்றில் கவுண்டமணி மற்றும் செந்திலின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் ரசிகர்களால் விரும்பப்படுகின்றன. ‘வைதேகி காத்திருந்தாள்’  படத்தில், “கோழி முட்ட மாதிரி இருக்கு, இதுல
எப்படிண்ணே லைட் எரியும்... என்னண்ணே உடைச்சிட்டீங்க!” என்று செந்தில் அப்பாவியாகப் பேசும் வசனத்துக்கு கவுண்டமணி பதில் வசனம் எதுவும் பேசாமல் ஓரக்கண்ணாலேயே செந்திலை முறைக்கும் காட்சியை இன்று பார்த்தாலும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்பது நிதர்சனம். கவுண்டமணி வசனம் பேசாமலேயேகூட உடல்மொழியில் மட்டுமே நடித்து அதகளப்படுத்தினார் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம்.

இருவரும் ஒன்றாக நடித்த படங்களில் இருவருடைய டைமிங்கிற்கும் முக பாவங்களுக்கும் இணையாக வேறெந்த காமெடியர்களும் செய்திருப்பார்கள் என்று நிச்சயம் சொல்லிவிட முடியாது. காமெடிக் காட்சிகளில் கவுண்டமணியிடம் செந்தில் எப்போதும் அடிவாங்கினாலும், செந்தில் அடிவாங்குவதற்கு முன்னர் செய்திருக்கும் சேட்டைகளும் அடிவாங்கிய பிறகு காட்டும் ரியாக்சனும் கவுண்டமணி மேல் கோபமே ஆத்திரம் வராமல் அந்த காட்சிகள் கையாளப்பட்டிருக்கும்.  பெரும்பாலும் கவுண்டமணி செந்திலைப் போட்டுத்தாக்கினாலும் கவுண்டரைவிட செந்திலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் நடிப்பதற்கு கவுண்டமணி ஒருபோதும் தயங்கியதில்லை என்றும் கூறலாம். இதற்கு ‘ராஜகுமாரன்’ உள்பட ஏராளமான படங்களை உதாரணமாக கூறலாம்.

கவுண்டமணி-செந்தில் ஜோடி சுமார் 400 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். 1980 மற்றும் 90-களில் இவர்களின் காமெடியை நம்பி படங்களில் நடித்த நாயகர்கள் பலர் உண்டு. 1950-60களில் நாயகர்களோடு இணைந்தே பெரும்பாலும் காமெடி காட்சிகள் நகரும்.  ஆனால், கவுண்டமணி-செந்தில் ஜோடி பல படங்களில் நாயகர்களோடு பெரிய அளவில் தொடர்பில்லாமல் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களின் வயிறைப் புண்ணாக்கியிருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் நாயகர்களுக்கு இணையாக இருவரும் ஜொலித்திருக்கிறார்கள். கவுண்டமணி-செந்தில் இருவரின் ஒருசேர கால்சீட்டுக்காக பல நாயகர்கள் காத்திருந்த காலங்கள் கூட உண்டு.

அந்தக் காலட்டங்களில் ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்த காட்சிகளிலும் கவுண்டமணி தனக்குரிய ஆளுமையை விட்டுக்கொடுக்காமல் நடித்திருக்கிறார். ‘மன்னன்’,  ‘உழைப்பாளி’ ஆகிய படங்களில் நடிகர் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தைச் சர்வசாதாரணமாக முந்திச் சென்றிருப்பார் கவுண்டமணி. ‘சிங்காரவேலன்’ படத்தில் கமலையும் கலாய்த்து சிரிக்க வைத்திருப்பார்.  ரஜினி, கமலைக் கிண்டல் செய்ய வேறு நகைச்சுவை நடிகர்களால் முடிந்திருக்குமா என்பது சந்தேகமே. இதேபோல ‘வீரா’, ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’ போன்ற ரஜினியின் படங்களின் சில காட்சிகளில் ரஜினியை ஓவர் டேக் செய்திருப்பார் செந்தில். அது கவுண்டமணி மற்றும் செந்திலுக்கே உரிய நகைச்சுவை ஆளுமையின் அடையாளம்.

பொதுவாக சக நடிகர்கள் வெளிப்படுத்தும் வசனங்களுக்கு இயல்பான எதிர் வசனங்கள் பேசுவதில் கவுண்டமணி மன்னாதிமன்னர். சில சமயங்களில் அது மிகவும் சாதாரணமான வசனமாககூட இருக்கும். ஆனால், சிரிப்புக்கு உத்தரவாதம் இருக்கும். செந்திலோடு இணைந்து நடித்தபோது அப்பாடியான ஏராளமான வசனங்களை கவுண்டமணி வெளிப்படுத்தியிருப்பார்.  ‘உதய கீதம்’ படத்தில் செந்தில், “அண்ணே, நீங்க அறிவுக் கொழுந்துண்ணே” என்பார். பதிலுக்குக் கவுண்டமணி “கிள்ளி வாயில போட்டுக்கோடா” என மிகச் சாதாரணமாகப் பேசி ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார்.

ஏராளமான படங்களில் கவுண்டமணி - செந்தில் நடித்திருந்தாலும் அவர்களின் சில காமெடிகள் மட்டும் இன்றும் தலைமுறை தலைமுறையாக ஆராதிக்கப்பட்டு வருகின்றன.  குறிப்பாகக் ‘கரகாட்டக்காரன்’  படத்தில் இவர்கள் சேர்ந்து அதகளப்படுத்திய வாழைப்பழ காமெடியை  யாராவது மறக்க முடியுமா?  “நான் என்ன வாங்கிட்டு வரச் சொன்னேன்” என கவுண்டமணி பல மாடுலேஷ்ன்களில் செந்திலிடம் கேட்கும் காட்சிகளும், செந்தில் ஒரே முக பாவத்தில் அப்பாவித்தனமாக ‘அந்த இன்னொன்னுத்தாண்ணே இது’ என்று பேசும் காட்சியும் காமெடி உள்ள வரை இந்தக் காட்சிகள் நிலைத்திருக்கும்.

கவுண்டமணியும் செந்திலும் சேர்ந்து நடித்த பல படங்களின் வசனங்களை நினைத்தால் கூட அந்தக் காட்சிகள் கண் முன்னே தோன்றி இன்றும் வயிறைப் புண்ணாக்கும்.  ‘வைதேகி காத்திருந்தால்’ படத்தில் ‘ஏண்டா எப்ப பாத்தாலும் எருமச் சானிய மூஞ்சில அப்புண மாதிரியே திரியிற’, ‘நாட்டாமை’ படத்தில் ‘இந்த டகால்டிதானே வேணாங்கிறது’, ‘டேய் தகப்பா, இது ஞாயமாடா’, ‘சின்னக்கவுண்டர்’படத்தில் ‘ஆத்தா! வாய மூடு ஆத்தா! குழந்தபய பயப்புடுறான்’ என மேலும் பல திரைப்படங்களில் வெளிவந்த நகைச்சுவை காட்சிகளை நினைத்தாலே உதட்டில் சிரிப்பு எட்டிப் பார்க்கும். ‘ராஜகுமாரன்’ படத்தில் கவுண்டமணியும் செந்திலும் வடிவேலின் தங்கையைத் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்காக, ‘ நான் ஒரு முடிச்சவிக்கிம்மா’,  ‘நான் ஒரு மொள்ளமாரிம்மா’ என்று மாறிமாறி பேசும் காட்சிகளும் இருவரின் காமெடி கலாட்டக்களுக்கு மட்டுமின்றி, இருவரும் உச்சத்தில் இருந்தபோது ஈகோ பார்க்காமல் நடித்ததற்கு ஓர் உதாரணம்.

நடிகர்களுக்காக, பாட்டுக்காக, வசனத்துக்காக, கிளாமருக்காகப் பல  திரைப்படங்கள் வெற்றிகரமாக 1980-90களில் ஓடியதுண்டு. அதைப்போலவே காமெடிக்காக மட்டும், படங்கள் ஓடியது கவுண்டமணி- செந்திலுக்காக மட்டுமே. சுமார் 10 முதல் 12 ஆண்டுகள் வரை கோலோச்சிய இந்த இரட்டையர்கள், 1990-களின் இறுதியில் சேர்ந்து நடிப்பது குறைய ஆரம்பித்தது.  புதுப்புது காமெடி வரவுகளும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது.

எப்படி இருந்தாலும் இப்போது காமெடி தொலைக்காட்சிகள் வழியாக கவுண்டமணியும் செந்திலும் தினந்தோறும் நம் வீட்டு வரவேற்பையை நகைச்சுவையால் நிறைத்துக்கொண்டுதான் உள்ளார்கள்.  இந்த ஜோடிகளால் உச்சரிக்கப்பட்ட காமெடி வசனங்கள் இல்லாத சமூக ஊடங்கள் மற்றும் மீம்ஸ்களால் இளையதலைமுறையினரின் உள்ளங்களில் ஊடுருவியிருக்கிறார்கள். சினிமாவில் இப்போது இவர்களை ஒன்றாகப் பார்க்க முடியாவிட்டாலும் இந்த இரட்டையர்கள் இல்லாமல் தமிழ்  நகைச்சுவை வரலாற்றை யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

- தி இந்து 2017 தமிழ்ப் புத்தாண்டு மலர்

12/04/2020

ப. ரஞ்சித் படம் எனக்கு பாசிட்டிவ்!

சில நடிகர்களின் பெயர்களைச் சொன்னால், சட்டென ஞாபகத்துக்கு வரவே மாட்டார்கள். ஆனால், அவர்கள் நடித்த கதாபாத்திரத்தைச் சொன்னால், சட்டென ஞாபகத்துக்கு வந்துவிடுவார்கள். விநோத்தும் அந்த ரகம்தான். ‘மெட்ராஸ்’ படத்தில்  மாரி என்ற கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் புரூட்டோஸ் வரிசையில் சேர்ந்தார். இன்று ‘மெட்ராஸ் விநோத்’ என்று உருவெடுத்திருக்கும் இவர், அடிப்படையில் நாடகக் கலைஞர்!

சென்னைக்குப் பக்கத்தில் உள்ள திருநின்றவூர்தான் விநோத்தின் சொந்த ஊர். கல்லூரி முடித்துவிட்டு ஒரு ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். விநோத் அடிப்படையில் கால்பந்தாட்ட வீரர்.  உடலைக் கட்டுக்கோப்பாகவும் வைத்திருப்பார். அந்தத் தோற்றத்தில் ஈர்க்கப்பட்ட அவருடைய நண்பரான சினிமா உதவி இயக்குநர் சிவன்தான் சினிமா ஆசையை விநோத்துக்குள் விதைத்தார். விநோத்துக்கு இருந்த கூச்ச சுபாவமும் திக்குவாய் பாதிப்பும் சினிமா ஆசையைப் பற்றி அவரை யோசிக்ககூட வைக்கவில்லை.

அந்த நேரத்தில்தான் விநோத்தின் வாழ்க்கையில் ஒரு மாற்றம். பார்த்துக்கொண்டிருந்த ஷிப்பிங் வேலையைவிட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. வேலையிலிருந்து வந்த விநோத்தக்கு என்ன செய்வது என்ற பல யோசனைகள். அப்போதுதான் சினிமாவுக்குள் செல்லும் முடிவை எடுத்தார் விநோத்.  “எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. சினிமா குடும்பத்திலிருந்து வந்தவனும் இல்லை. அதனால், நடிப்பைக் கற்றுக்கொண்டு சினிமாவுக்குள் காலடி எடுத்து வைக்கணும்னு நினைச்சேன். அப்போதான் வீதி நாடகம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அதுல நல்லா நடிச்சதா எல்லோரும் பாராட்டுனாங்க. அந்தப் பாராட்டு சினிமாவில் காலடி எடுத்து வைக்க தைரியத்தைக் கொடுத்துச்சு” என்கிறார் விநோத்.

சினிமா கனவை மனதில் நிறுத்தி வீதி நாடகம், பிறகு மேடை நாடகம் கொஞ்சம் கொஞ்சமாக விநோத் முன்னேறிக்கொண்டிருந்தார். தொடர்ந்து நாகடங்களில் புழங்கிகொண்டிருந்தபோதுதான் அவருக்கு பிரபு சாலமன் இயக்கிய ‘கொக்கி’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. “அந்தப் படத்தில் ஒரு சின்ன ரோல் பண்ணேன். படத்தில் நடிக்கும்போது இயக்குநருடன் மனஸ்தாபம் ஏற்பட்டது. அதனால, நான் ஷூட்டிங் போகல. ஆனாலும், படம் வெளியானபோது ஒரு சீன்ல நான் வந்தேன். அதுதான் எனக்கு சினிமாவில் முதல் ஷாட்” என்கிறார் விநோத்.

சினிமாவில் வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த வேளையிலும் நாடகங்களில் விடாமல் நடித்துக்கொண்டிருந்தார் விநோத். 2006-ல் ஒரு பிரெஞ்சு குழுவோடு சேர்ந்து நாடகங்களில்  இயங்கிக்கொண்டிருந்தார். நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தவேளையில், 2012-ம் ஆண்டில் ‘அட்டக்கத்தி’ வாய்ப்பு விநோத்துக்கு வந்தது.

 “இயக்குநர் பா. ரஞ்சித்தை எனக்கு நல்லா தெரியும். தினேஷும்
எனக்கு நெருங்கிய நண்பர். ‘அட்டக்கத்தி’யில் தினேஷுக்கு வாய்ப்பு வந்ததும், பா. ரஞ்சித்தைப் போய் பாருன்னு என்னை தினேஷ் நெருக்கினார். ரஞ்சித்தைப் பார்ப்பதற்குள் பெரும்பாலான கதாபாத்திரங்களை ஃபிக்ஸ் செய்துவிட்டார். இருந்தாலும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க ரஞ்சித் வாய்ப்பு அளித்தார். அடுத்தப் படத்தில் நல்ல வாய்ப்பு தருகிறேன் என்று பா. ரஞ்சித் உறுதிகொடுத்தார்.  அவர் சொன்னப்படி அடுத்த ஆண்டே ‘மெட்ராஸ்’ படத்தில் நடிக்க என்னை அழைத்தார்.” என்று ப. ரஞ்சித்தைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் விநோத்.

அந்தப் படத்தில் மிக முக்கியமான ‘மாரி’ என்ற கதாபாத்திரத்தை விநோத்துக்கு ரஞ்சித் வழங்கினார். அந்தப் படத்தின் திருப்புமுனையாக அவருடைய கதாபாத்திரம் அமைந்திருந்தது.   புரூட்டோஸ் வேலை பார்க்கும் விநோத்தின் கதாபாத்திரம் ரசிகர்களுக்குப் பதிந்தது. விநோத்தின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத முக்கிய படமாகவும் அமைந்தது ‘மெட்ராஸ்’. ஆனால், அந்தப் படத்துக்குப் பிறகு பெரிய அளவில் விநோத்துக்கு சினிமா வாய்ப்பு வந்திருக்க வேண்டும். ஆனால், அதில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 “மெட்ராஸ் படத்துக்கு பிறகு வாய்ப்புகள் வராமல் போனது பெரிய ஏமாற்றமாகத்தான் இருந்துச்சு. ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால், தொடர்ந்து ஸ்டீரீயோ டைப் போல அந்தக் கதாபாத்திரம் மாதிரியே வாய்ப்புகள் வரும். அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடியாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால், ரஞ்சித் மூலமே எனக்கு மீண்டும் வாய்ப்பு வந்தது. ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த காம்போவை அப்படியே தூக்கி ‘கபாலி’ படத்தில் வைத்தார். அது ரஞ்சித்தின் பெருந்தன்மை. என்னைப் போன்ற நடிகர்கள் ரஜினி படத்தில் நடித்தால், அது எங்களுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் என்ற எண்ணத்தில் ரஞ்சித் செய்தார்.” என்கிறார் விநோத். ‘கபாலி’ படத்தில் நாசரின் மகனாக ரஜினியின் நண்பனாக நடித்தேன்.

ரஜினியுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? “ரஜினியை நேரில் பார்ப்பதே எங்களுக்கு பெரிய விஷயம். அவர் கூடவே பக்கத்தில் இருந்தது, உடன் நடித்தது எல்லாமே பெரிய அனுபவம். படப்பிடிப்பில் என்னைப் பற்றி கேட்டு அறிந்துகொண்டார். நாடக நடிகர்கள் என்றால் ரொம்ப கஷ்டம் இல்லை என்று என்னிடம் கேட்ட ரஜினி, பத்திரிகைகளுக்கு நிறைய பேட்டி கொடுங்கள் என்று அட்வைஸ் செய்தார். அதெல்லாம் நிச்சயம் மறக்க முடியாது” என்கிறார் விநோத்.

தொடர்ந்து ப. ரஞ்சித்தின் படங்களில் விநோத் நடித்தன் மூலம் உங்கள் மீது ஏதேனும் முத்திரை விழுந்ந்துள்ளதா என்று கேட்டதும் சற்று யோசித்தார் விநோத். “கண்டிப்பா அது விழத்தான் செய்யும். அது எனக்கு பாசிட்டிதான். அவர் படத்தில் நடிப்பதன் மூலம் ஒடுக்கப்பட்ட, தமிழ் தேசிய கருத்துடையவர்கள் என்ற பிம்பம் சினிமா வட்டாரத்தில் விழுந்துள்ளது உண்மைதான். ரஞ்சித் படங்களில் நடிப்பதை வைத்து ஓர் இயக்குநர் என்னிடம் பேசும்போது, உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? என் படத்தில் ஆங்கில வசன காட்சிகளும் இருக்கு சொன்னார். ரஞ்சித்  படங்களில் நடிப்பதற்கும் ஆங்கிலம் பேசுவதற்கும் என்ன தொடர்பு? எப்படி இப்படி யோசிக்க முடிகிறது என்றுதான் எண்ண வைத்தது.” என்று வருத்தப்படுகிறார் விநோத்.

கபாலிக்கு பிறகு ‘எட்டு தோட்டாக்கள்’, ‘எய்தவன்’, ‘டிராபிக் ராமசாமி’, ‘மாஸ் என்கிற மாசிலாமணி’, ‘கோலமாவு கோகிலா’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என டஜன் கணக்கில் படங்களில் நடித்துவிட்டார் விநோத். ‘சைத்தான் கி பச்சா’ என்ற படத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் சொன்னார் விநோத். “ 2015-ல் தொடங்கிய படம் இது. கிட்டத்தட்ட அது ஹீரோ வேடம்தான். 85 சதவீதம் படம் முடிஞ்சிடுச்சி. கிளைமாக்ஸ் மட்டும்தான் பாக்கி. சித்தார்த், யோகிபாபு, நான் மட்டும்தான் படத்தில். வேற மாதிரி என்னைக் காட்டியிருக்கிறார்கள். அந்தப் படம் வந்தால், அது என்னை வேறு தளத்துக்குக் கொண்டுசெல்லும்.” என்று நம்பிக்கை குறையாமல் பேசுகிறார் விநோத்.


பெயர் வாங்கிய படம்?
 ‘மெட்ராஸ்’, ‘கோலமாவு கோகிலா’.  

 வர உள்ள படங்கள்?
ரெண்டு, மூனு படங்கள் முடிச்சிட்டேன். விரைவில் வெளியாகிவிடும்.

 நாடகம்?
கடைசியாக 2017-ல் பிரான்ஸில் ஒரு நாடகத்தில் நடித்தேன்.

 நாடகத்திlன் ஏன் பிரேக்?
சினிமா அல்லது நாடகம் என்று ஏதாவது ஒன்றுக்கு உண்மையாக இருக்க வேண்டும். தற்போது சினிமாவில் மட்டுமே கவனம் உள்ளது.

விரும்பும் கதாபாத்திரம்?
காமெடி. கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் செய்ய வேண்டும்.

ஆசை?
நண்பர்களுடன் சேர்ந்து ஒரு படத்தை இயக்கும் ஆசை உள்ளது.

இந்து தமிழ், 07-02-2020

06/04/2020

பீட்சா வந்த கதை!


நவநாகரீக இளைஞர்கள், யுவதிகளின் விருப்ப உணவு என்ற அடையாளமாகிவிட்டது பீட்சா.   லேட்டஸ்ட் உணவுகளின் பட்டியலில் இடம் பிடித்துவிட்ட இந்த உணவு குழந்தைகள், பெரியவர்களையும்கூட விட்டுவைக்கவில்லை. பீட்சா, பிசா, பிட்சா, பிச்சா என விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இது, உலகில் மிகவும் அரத பழசான உணவு வகைகளில் ஒன்று!

பீட்சா என்பது இத்தாலிய நாட்டு உணவு. பின்சா என்ற லத்தீன் மொழியிலிருந்து பீட்சா வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  கி.மு. 3-ம் நூற்றாண்டிலேயே இந்த உணவை கிரேக்கர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். சுடுமண் அடுப்பில் மிகவும் கெட்டியாகத் தட்டையான ரொட்டியை செய்து கிரேக்கர்கள் சாப்பிட்டதுதான் பீட்சாவுக்கு முன்னோடி.  கி.மு.வில் தொடங்கி கி.பி. வரை இந்த பீட்சா காலம்காலமாக சாப்பிடப்பட்டு வந்தாலும், ஓவர் நைட்டில் உலகப் புகழ் பெற்றது கி.பி. 1800-களில்தான். ‘ஏழைகளின் உணவு’ என்று இத்தாலியில் இதை அழைத்திருக்கிறார்கள். இன்றோ அது வசதிப்படைத்தவர்களின் உணவாகிவிட்டது.

சரி, இந்த உணவு உலகப் புகழ் பெற்றது எப்படி? அதற்கு ஒரு சுவையான ஃபிளாஷ்பேக் இருக்கிறது.

இத்தாலியின் ராணியாக இருந்தவர் மெர்கரிட்டா. இவர் தனது கணவர் ராக் உம்பர்டோவுடன்  நேப்பிள் நகருக்கு ஒரு முறை வந்தார். அரண்மனைக்கு வந்ததும், வழக்கமான உணவாக இல்லாமல் வித்தியாசமான உணவை செய்துதரும்படி அரண்மனையின் தலைமை சமையல் கலைஞர் ரஃபேலுக்கு உத்தரவிட்டார். இத்தாலியிலேயே நேப்பிள் நகரில்தான் பீட்சா ரொட்டி மிகவும் பிரபலமாக இருந்தது. உழைக்கும் மக்கள் இதை விரும்பிச் சாப்பிட்டு வந்தார்கள்.

வித்தியாசமான உணவு என்றதும் சமையல் கலைஞருக்கு பீட்சா ரொட்டிதான் ஞாபகத்துக்கு வந்தது. ஏழைகள் சாப்பிடும் உணவு போல இல்லாமல், கொஞ்சம் மாற்றி செய்ய முடிவு செய்தார். தட்டையான ரொட்டியைச் செய்து அதில் இறைச்சி, பாலடைக்கட்டி, தக்காளி, இலைதழைகள் ஆகியவற்றை ரொட்டியின் மீது பரப்பி தயார் செய்தார். தக்காளி, பாலாடைக்கட்டி, இலைகள் ஆகியவற்றை இத்தாலியின் தேசியக் கொடி வடிவத்தில் அடுக்கினார். இந்த உணவை ராணியிடம் கொடுத்தார். அதன் ருசி ராணிக்குப் பிடித்துப்போனது. ஒரு பிடிப்பிடித்தார்.

ராணி விரும்பிச் சாப்பிட்ட அந்த உணவு இத்தாலியில் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமானது. போதாக்குறைக்கு அதற்கு  ‘மெர்கரிட்டா பிட்சா’ என ராணியின் பெயரை வைத்து அழைக்க ஆரம்பித்தார்கள்.  இப்படி இத்தாலியின் பிரபலமான பீட்சா, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகை சுற்ற ஆரம்பித்தது.
இத்தாலிக்குள் நுழைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய படை வீரர்கள் மூலம் பீட்சா அந்த நாடுகளுக்கும் சென்றது. இப்படி உலகம் முழுவதும் பிரபலமானது பீட்சா. 1991-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த பொருளாதார சீர்திருத்தம், உலகமயமாக்கல் காரணமாக இங்கேயும் பீட்சா காலடி எடுத்து வைத்தது.

ஒவ்வொரு நாட்டுக்கு ஏற்றார்போல பீட்சாவில் வைக்கப்படும் உணவு வகைகள் மாறுகின்றன. இந்தியாவில் பெரும்பாலும் தந்தூரி சிக்கன், பன்னீர் ஆகியவற்றை வைத்தும் காரமாகவும் பீட்சாவை தருகிறார்கள். இன்று இந்தியாவில் பட்டிதொட்டிகளில்கூட பீட்சா கார்னர்கள் முளைத்துவிட்டன.

 இந்தியாவில் பாரம்பரிய உணவையெல்லாம் எல்லோரும் மறந்துவிட்ட நிலையில், உலகின் மிகவும் பழைய உணவுகளில் ஒன்றான பீட்சாவுக்குக் கொடிபிடிப்பது நகைமுரண் அல்லவா?

- இந்து தமிழ், 03-06-2016