26/03/2020

மிரட்டும் வைரஸ்கள்: தற்காப்பு சாத்தியமா?

ஊர் முழுக்க கொள்ளை நோய் பரவி வருவதைக் கண்டு மிரண்டு போன கண்கள்... பொது இடங்களில் முகமூடியை அணிந்த அச்சம் தோய்ந்த முகங்கள்... லேசான காய்ச்சல், இருமல், ஜலதோஷத்துக்குக்கூடப் பரிசோதனை மையங்களுக்குப் படையெடுக்கும் மக்கள் கூட்டம்... மெக்சிகோ உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்... இதெல்லாமே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக நிகழ்ந்த காட்சிகள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
இந்தக் காட்சிகளுக்குக் காரணம்? மெக்சிகோவில் பீதி கிளப்பிப் பரவிய ‘ஸ்வைன் புளூ’ எனப்படும் பன்றிக் காய்ச்சல்தான். அப்போது இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளும் அந்தக் காய்ச்சலைக் கண்டு பதறி அலறின.
யங்கர நோய்
அன்றைக்கு ஸ்வைன் ஃபுளூ, இன்றைக்கு அதைவிட பயங்கரமான ‘எபோலா’ வைரஸ். மேற்கு ஆப்பிரிக்காவில் லைபீரியா, கினியா, சியரா லியோன், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் பரவிவரும் இந்தப் பயங்கரமான தொற்றுநோய்க்கு, சுமார் ஆயிரம் பேர் மடிந்துவிட்டார்கள். இன்னும் ஏராளமானோருக்கு நோய்த் தொற்று பாதிப்பு இருக்கிறது.
நோய்த் தொற்று மிகத் தீவிரமாக இருப்பதால் பாதிக்கப்பட்ட பகுதி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள்கூட வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். லைபீரியா, கினியா, சியரா லியோன் நாடுகளின் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ள இந்த நோய், உலகின் மற்ற இடங்களுக்கும் பரவலாம் என உலக சுகாதார நிறுவனம் அபாய எச்சரிக்கையை அறிவித்துள்ளது.
என்ன காரணம்?
எபோலாவோ, பன்றிக் காய்ச்சலோ எதுவாக இருந்தாலும் சரி, வைரஸ் தொற்று நோய்கள் எப்படிப் பரவுகின்றன? இதுபற்றி பொதுநல மருத்துவர் எழிலன் என்ன சொல்கிறார்?
"கிருமிகள் மூலம் பரவும் நோய்கள் சளி, ரத்தம், மனிதக் கழிவுகள் மூலமே மனிதர்களுக்குப் பரவுகின்றன. நோயால் பாதிக்கப்பட்டவரை மிகவும் நெருக்கமாக அணுகுவதன் மூலமும் நோய் தொற்றலாம்.
இதுதவிர, பூச்சிகள் மூலம் பரவும் நோய்களும் உள்ளன. நோயால் பாதிக்கப்பட்டவரைக் கடிக்கும் கொசு மற்றவர்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா நோய்கள் பரவுகின்றன.
பொதுவாகத் தமிழ்நாட்டில் சுகாதாரம் இரண்டாம்பட்சமாகவே கருதப்படுகிறது. மேலை நாடுகளில் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தி, அதன் மூலம் நோய்களைத் தடுக்கிறார்கள். ஆனால், நம் ஊரில் அப்படியில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பதிலாக, நோய் வந்த பிறகு மருந்து மாத்திரை கொடுத்து, அதைச் சரி செய்யவே முயற்சிக்கிறோம். நோய்க்குக் காரணமான அடிப்படையை எதுவும் செய்வதில்லை. வரும் முன் காக்க முயற்சிப்பது பற்றி கவனமில்லை. நோய் வந்த பிறகே முயற்சிக்கிறார்கள்," என ஆதங்கப்படுகிறார் எழிலன்.
எப்படித் தடுப்பது?
அப்படியென்றால் தொற்றுநோய் களை எப்படித் தடுப்பது? அதற்கு வழியே இல்லையா என்ற கேள்வி எழலாம். தொற்றுநோய்  தாக்கப் படாமல் தடுத்துக்கொள்ளும் பொறுப்பு நம் கையில்தான் உள்ளது.
எழிலன்
"பொது இடங்களில் எச்சில் துப்புவதன் மூலமும், சிறுநீர் கழிப்பதன் மூலமும் பல நோய்கள் பரவுகின்றன. சாதாரணமாக நாம் துப்பும் சளி மூலம் டி.பி. எனப்படும் காசநோய்  அதிவேகமாகப் பரவுகிறது. நிமோனியா பரவுகிறது.
மழை நீர் தேங்குவதன் மூலமோ, குப்பை சேருவதன் மூலமோ உற்பத்தியாகும் கொசுக்கள் டெங்கு, மலேரியா போன்ற நோய்களைப் பரப்புகின்றன. இதைத் தடுக்க வேண்டுமென்றால் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
எப்படிச் சிறு வயதில் குழந்தைகளுக்குச் சாமி கும்பிடக் கற்றுக் கொடுக்கிறோமோ, அதுபோலச் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளக் கற்றுக் கொடுக்க வேண்டும். பொது இடங்களில் சிறுநீர் கழிக்கக் கூடாது, எச்சில் துப்பக் கூடாது, குப்பை கொட்டக் கூடாது என்று சொல்லித் தர வேண்டும்.
இதற்குப் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் முன்வர வேண்டும். கடுமையான சட்டங்கள் மூலம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சுத்தமான குடிநீர், முறையான கழிவுநீர் அகற்றுதலை முறைப்படி பராமரித்தால் கிருமிகள் மூலம் பரவும் தொற்று நோய்களைத் தடுக்க முடியும்" என்கிறார் மருத்துவர் எழிலன்.
நமக்கு என்ன ஆபத்து?
சரி, எபோலாவுக்கு வருவோம். எப்படிக் கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு நம் ஊரில் பரவுகிறதோ, அதுபோலவே ஆப்பிரிக்காவில் உள்ள குரங்குகள், வவ்வால்கள் மூலமே எபோலா நோய் மனிதர்களுக்குப் பரவியதாகக் கருதப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் வெளியேற்றும் எச்சில், சிறுநீர், ரத்தம் மூலம் கிருமிகள் இன்னொருவருக்குப் பரவுகின்றன. இந்நோயால் பாதிக்கப்பட்டவரை அணுகுவதன் மூலமும் பரவுகிறது.
ஒரே ஒரு ஆறுதல் இந்த நோய் இந்தியாவில் பரவ வாய்ப்புகள் குறைவு என்பதுதான். தும்மினாலோ, இருமினாலோ பன்றிக் காய்ச்சல் நோய் காற்றில் பரவும் அபாயம் இருந்தது. இந்தியாவில் அப்போதிருந்து பருவ காலநிலையும் நோய் பரவ வசதியாக இருந்தது.
அதேநேரம்,  எபோலா நோயைப் பரப்ப வாய்ப்புள்ள குரங்குகள், வவ்வால்கள் இந்தியாவில் இல்லை. பரவினால், அது மனிதர்கள் மூலமே நிகழ வேண்டும். ஆப்பிரிக்காவில் இருந்து வரும் நபர்களை விமான நிலையம், துறைமுகம் ஆகிய பகுதிகளில் கண்காணித்தாலே போதும் என்ற நிலையே இதில் நீடிப்ப தாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
முன்னேற்பாடுகள்
எபோலா நோயைத் தடுக்கத் தமிழக சுகாதாரத் துறை பல நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகக் கூறுகிறார் திருச்சி அண்ணல் காந்தி   தாக்கம் தெரிய ஆரம்பித்தவுடனேயே, இந்நோய் குறித்து சுகாதாரத் துறை மூலம் கருத்து பரிமாற்றம் மேற் கொள்ளப் பட்டு வருகிறது.
அலீம்
அரசு மருத்துவமனை மூளை நரம்பியல் நிபுணர் எம்.ஏ. அலீம். "மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா நோய்
எபோலா நோய்  மட்டுமல்ல, பொதுவாகச் சீசனில் வரும் தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகத் தனி வார்டுகள் அமைத்து, தனியாக வைத்துச் சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எபோலா நோய்  பாதிப்பு இல்லை என்பதால், அது குறித்துப் பெரிய கவலை தேவையில்லை" என்கிறார் அலீம்.
பன்றிக் காய்ச்சலோ, எபோலாவோ எந்தத் தொற்றுநோயாக இருந்தாலும் சரி, நமது சுய சுத்தத்தையும், சுற்றுப் புற சுகாதாரத்தையும் சரியாகப் பராமரித்தலே தொற்று நோய் பரவலைத் தடுக்கலாம். எல்லாமே நம் கையில்தான் இருக்கிறது.

- இந்து தமிழ், 19-08-2014

17/03/2020

அசுரகுரு விமர்சனம்

கூரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சக்தி (விக்ரம் பிரபு), பின்னணியில் கொள்ளையடிக்கும் வேலையையும் செய்கிறார். விக்ரம் பிரபுவின் கொள்ளைகளைக் கண்டுபிடிப்பதற்காக போலீஸ் உயரதிகாரியாக மணிவாசகம் (‘பாகுபலி’ சுப்பாராஜ்) நியமிக்கப்படுகிறார். கொள்ளையில் ஹவாலா பணத்தை இழந்த ஜமாலுதீன் ( நாகிநீடு) விக்ரம் பிரபுவைக் கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் பணியில் இருக்கும் தியாவை (மஹிமா நம்பியார்) அணுகுகிறார். இவர்கள் எல்லோரும் வெவ்வேறு திசைகளில் விக்ரம் பிரபுவைத் தேடுகிறார்கள். இந்தத் தேடலில் விக்ரம் பிரபு சிக்கினாரா இல்லையா? இந்தக் கொள்ளைகளை விக்ரம் பிரபு ஏன் அரங்கேற்றுகிறார்? என்பதே ‘அசுரகுரு’வின் திரைக்கதை.

ஒரு வழக்கமான கதையை கொஞ்சம் பரபரப்பாகச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ராஜ்தீப். முதல் காட்சியிலேயே ஓடும் ரயிலில் கொள்ளை நடக்கிறது. அந்தப் பரபரப்பான கொள்ளை முடிந்தவுடன், அடுத்தடுத்து கொள்ளையடிக்கிறார் விக்ரம்பிரபு. இந்தக் கொள்ளைக்காட்சிகளாலும், ஏன் கொள்ளையடிக்கிறார் என்று நம் மனதில் பிரதானமாக எழும் கேள்வியாலும் முதல் பாகம் விறுவிறுப்பாக கடந்துவிடுகிறது. அதற்கு நாயகன்  டெக்னிக்குகளாகக் கொள்ளையடிக்கும் நேர்த்தியான காட்சிகளும் கைகொடுக்கின்றன. திருடன் - போலீஸ் கதைக்குரிய நகர்த்தல்களோடு திரைக்கதை பயணிப்பதும் படத்துக்கு பிளஸ்.

முதல் பாகத்தில் எழும் அடுக்கடுக்கான கேள்விகளால் இரண்டாம் பாகத்தின்
மீது எதிர்பார்ப்புகள் அதிகரிக்கின்றன. ஆனால், இரண்டாம் பாகத்தில் இயக்குநர் சறுக்கிவிடுகிறார். விக்ரம் பிரபு ஏன் கொள்ளையடிக்கிறார் என்பதற்கு சொல்லப்படும் காரணம், ஊதி பெருக்கப்பட்ட பலூனை ஊசியால் குத்துவதைப் போல ஆகிவிடுகிறது. கோடிகோடியாகக் கொள்ளையடிக்கும் பணத்தை தன் வீட்டிலேயே அலங்காரம் செய்து வைத்திருப்பது நம்பும்படியாக இல்லை. மஹிமாவின் துப்பறியும் காட்சியும் சுப்பாராஜின் துப்பறியும் காட்சியும் புதுமை இல்லாமல் ஊசலாடுகின்றன. கடைசியில் வரும் ட்விஸ்ட்டையும்  கிளைமாக்ஸையும் ஊகிக்க முடிவது பெருங்குறை.

விநோத நோயால்  பாதிக்கப்பட்ட நண்பனை மருத்துவரிடம் அழைத்து செல்லாத நண்பன்,  நாயகன் - நாயகிக்கு ஏற்படும் காதல், அவ்வப்போது சண்டைப் போட ஆஜராகும் வில்லன், நல்லவர் போல நடிக்கும் போலீஸ் என படம் நெடுகிலும் டெம்ப்ளேட் சரடுகள் நம்மை சோதிக்கின்றன.

 நாயகனாக விக்ரம் பிரபு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். கொள்ளையடிக்கும் காட்சிகளிலும் சண்டைக்காட்சிகளிலும், கொள்ளையடிக்க நினைக்கும் காட்சிகளிலும் இயக்குநர் சொன்னதை அப்படியே செய்துகொடுத்திருக்கிறார். ஸ்டைலிஸ் துப்பறியும் நாயகியாக மஹிமா நம்பியார். கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். அவருக்கு கஷ்டப்பட்டு புகைபிடிக்கும் காட்சியை இயக்குநர்  ஏன் வைத்தார் என்றுதான்  தெரியவில்லை. யோகிபாபுக்கு பட எண்ணிக்கையில் ஒன்று கூடுவதைத் தவிர இப்படத்தில் வேறேதும் இல்லை.

போலீஸ் உயரதிகாரியாக சுப்பாராஜ் நல்ல தேர்வு. அவருடைய உயரமும் உடல் கட்டுக்கோப்பும் அதற்கு உதவுகிறது. நண்பனாக ஜெகன் அவ்வப்போது வந்து போகிறார்.  நாகிநீடு, குமரவேல், மனோபாலா உள்ளிட்டோரும் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். கனேஷ் ராகவேந்திராவின் இசையில் புதுமையில்லை. ராமலிங்கத்தின் ஒளிப்பதிவில் கொள்ளைக் காட்சிகள் நேர்த்தி. லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு கச்சிதம்.

கொள்ளையடிக்கும் காட்சிகளில் டெக்னிக்குகளைப் பயன்படுத்த நினைத்த இயக்குநர், திரைக்கதையில் அதைக் காட்டவில்லை. விளைவு, ‘அசுரகுரு’வின் சாகசங்கள் மேஜிக்கும் இல்லாமல்; லாஜிக்கும் இல்லாமல் தள்ளாடுகிறது.

மதிப்பெண் - 2 / 5

01/03/2020

திரெளபதி விமர்சனம்



சிலம்பம் வாத்தியாரான ருத்ரபிரபாகரன் (ரிச்சர்ட் ரிஷி) தன் மனைவி திரௌபதியையும் (ஷீலா ராஜ்குமார்) அவருடைய தங்கை லட்சுமியையும் ஆணவக்கொலை செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதானவர். அவர் ஜாமீனில் வெளிவருகிறார். சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள வழக்கறிஞர் கருணாவையும் அரசியல் பிரமுகர் செஞ்சி சேகரையும் அவர் அடுத்தடுத்து கொலைசெய்கிறார். இந்தச் சூழலில் அவருடைய மனைவி திரௌபதி உயிருடன் இருப்பதாக அவருக்குத் தகவல் கிடைக்கிறது. ருத்ர பிரபாகர் ஏன் இந்தக் கொலைகளைச் செய்கிறார்? ஆணவக் கொலைக்காளானதாகச் சொல்லப்படும் திரௌபதி எப்படி உயிருடன் உள்ளார், ருத்ர பிரபாகரன் குடும்பத்துக்கு என்ன நடந்தது போன்ற வினாக்களுக்கு விடை தருகிறது 'திரௌபதி'.

நாடகக் காதல், ஆணவக் கொலை, போலி பதிவுத் திருமணம் என மூன்று விஷயங்களை கையில் எடுத்து, அதுதொடர்பாகக் கேள்விபட்ட விஷயங்களைத் திரைக்கதையாக்கிப் படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஜி. மோகன். முதல் பாகத்தில் பழிக்குப் பழியாக நடக்கும் கொலைக் காட்சிகளை வேகம் குறையாமல் இயக்குநர் படமாக்கியிருக்கிறார். அந்த வகையில் விறுவிறுப்பாகவும் காட்சிகள் நகர்ந்துவிடுகின்றன. ஆனால், இரண்டாம் பாகம் முழுவதுமே முதல் பாகத்துக்கு மாறாக, நாடகத்தன்மையோடு படம் பயணிப்பதால், மனம் ஒன்றாமல் போய்விடுகிறது.

பதிவுத் துறையில் நடக்கும் திருமணங்கள் போலியானவை என்று இயக்குநர் காட்டியிருப்பது அதிர்ச்சி ரகம். அந்த வகையில் இளம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார். நாயகன் இரு கொலைகள் செய்வதற்கான பின்னணிக் காரணமாகக் காட்டப்படும் காட்சிக்கான திரைக்கதை வலுவாகப் பின்னப்படவில்லை. திரெளதி யார், அவருக்கு என்ன நடந்தது என நாயகனும்
வில்லன் கோஷ்டியில் ஒருவரும் என மாறிமாறி கதைச் சொல்கிறார்கள். என்ன நடந்ததே என்று தெரியாமல் இரண்டு பேரைக் கொலை செய்ய நாயகன் எப்படி முடிவு செய்தார் என்ற கேள்விக்குப் படத்தில் விடையில்லை.

திரெளபதி உயிரோடு இருக்கிறாரா இல்லையா எனத் தெரியாமலேயே கொலைகளைச் செய்கிறார்  நாயகன். அந்தக் கொலைகளைக் கண்டுபிடிக்க வரும் போலீஸும் ஃபிளாஸ்பேக்கில்  நடந்த குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டி,   நிழல் காலத்தில் நடந்த கொலைகளை மறந்துவிடுகிறார்கள். நாடகக் காதல் என்ற காட்சி அமைப்புகளும் மிகையாகக் காட்டப்பட்டுள்ளன. செல்போனிலேயே காதல் வளர்க்கும் இளம்பெண், காதலன் யார், குடிகாரானா என்றுகூட ஆராயமல் திருமணம் செய்துகொள்வதாகக் காட்டும் காட்சி உறுத்தல்.

பதிவு அலுவலகத்தில் நடக்கும் தகிடுத்தங்களைக் கிண்டலடிப்போர், கண்டிப்போரோ போலி திருமணங்கள் நடப்பதற்கு உதவியாக இருப்பது லாஜிக் ஓட்டை. படத்தில் பல வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன. மியூட் செய்யப்படாத வசனங்கள் எல்லாமே ஒரு நோக்கத்துக்காக எழுதப்பட்டுள்ளன என உணரவைக்கிறது. போலீஸ் வழக்கான ஒரு கொலை முயற்சியில் தப்பியவரை மூளை சாவு அடைந்ததாக அந்த ஆளையே ஒரு டாக்டர் மறைப்பது, ஜாமீனில் வெளிவந்தவர் என்ன ஆனார் என்று போலீஸூக்கே தெரியாமல் இருப்பது, மூன்று மணி நேரம் மகள் என்ன ஆனார் என்று தெரியாத தந்தை தற்கொலை செய்துகொள்வது, ‘இவங்களை இப்படித்தான் போட்டுத்தள்ளணும்’ என்று வழக்கறிஞரே பேசுவது எனப் படத்தில் தர்க்கப் பிழைகள் நிறைந்துகிடைக்கின்றன.

 தமிழில் நிலையான இடம் கிடைக்காமல் இருக்கும் நாயகன் ரிச்சர்டுக்கு இப்படம் நல்ல வாய்ப்பு. இயக்குநர் சொன்னப்படி நடித்துகொடுத்திருக்கிறார். திரெளபதியாக வரும் ஷிலா கிராமத்து கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். ஆனால், பல இடங்களில் மிகையான அவருடைய நடிப்பு துருத்தி நிற்கிறது.  ஆறுபாலா, கருணாஸ் போன்ற முகம் தெரிந்த சில நடிகர்கள் மட்டுமே படத்தில் இருக்கிறார்கள். ஜூபினின் இசையில் குக்கூக்கூ பாடல் ரசிக்க வைக்கிறது.

பழிக்குப் பழியாக எடுத்திருக்க வேண்டிய ஒரு கதைக்கு, வேறு வண்ணம் பூச முயன்ற திரைக்கதையால் இந்தத்‘திரெளபதி’ பெரிதாக மனம் கவரவில்லை.

மதிப்பெண் -  2 / 5