27/12/2020

ரஜினிக்குக் காத்திருக்கும் சவால்கள் என்ன?

கால் நூற்றாண்டு காலமாக இதோ வருவார்; அதோ வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், ஒரு வழியாக அரசியல் போருக்குத்  தயாராகிவிட்டார். 2017-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று, ‘போருக்குத் தயாராக இருங்கள்’ என தன்னுடைய ரசிகர்களுக்கு கட்டளையிட்டார் ரஜினி. சரியாக 3 ஆண்டுகள் கழித்தே அதே டிசம்பர் 31 அன்று போருக்கு ஆயத்தமாகும் தேதியை உறுதியாக அறிவிக்க உள்ளார். ரஜினி எனும் தேர் அரசியல் எனும் களத்துக்குள் வந்துவிட்டது. தேர்தல் களத்தில் ரஜினிக்குக் காத்திருக்கும் சவால்கள் என்ன?


ரஜினி டிசம்பர் 2 அன்று வெளியிட்ட ட்விட்டர் செய்தி, தமிழகமெங்கும் தலைப்புச் செய்தியானது. “இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை.. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்” என்ற ஹாஷ்டேக்குடன் தொடங்கிய பதிவில், “வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்... நிகழும்!!!" என்று பதிவிட்டார் ரஜினி. ரஜினியின் இந்த அறிவிப்பு, அவரை இத்தனை ஆண்டுகளாக அரசியலுக்கு அழைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் அவரால் திராவிட கட்சிகளுக்கு சிக்கல் எழும் என நினைக்கும் கட்சிகளுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

முதல் சவால்

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், அந்தக் கட்சிகளை ரஜினியால் அசைத்துப் பார்க்க முடியுமா என்பதுதான் ரஜினி முன் நிற்கும் முதல் சவால். கடந்த மார்ச் மாதம் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ரஜினியே இதை வெளிப்படுத்தியிருந்தார். “திமுக, அதிமுக என்ற இரண்டு பெரும் ஜாம்பவான்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அசுர பலத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில், சினிமா புகழை மட்டும் வைத்துக்கொண்டு நான் ஜெயிக்க முடியுமா, தேர்தல் என்பது சாதாரண விஷயமா?” என்று இயல்பாகவே கேள்வி எழுப்பினார். அதில் உண்மை இல்லாமல் இல்லை. தமிழக தேர்தலில் பதிவாகும் மொத்த வாக்குகளில் திமுகவும் அதிமுகவும் மட்டுமே 50 முதல் 60 சதவீத வாக்குகளைப் பெறும் அளவுக்கு கட்டமைப்பு உள்ள கட்சிகள். வாக்காளார்களை விலைக்கு வாங்கும் வித்தைகளையும் கற்ற கட்சிகள். இந்த இரு கட்சிகளின் வாக்குகளையும் செல்வாக்கையும் தாண்டி ரஜினி நினைத்த அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டுமென்பது இமாலயப் பணி. 

ஆனால், அதேவேளையில் ‘தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் அதிக ஓட்டுகளைப் பெற அக்கட்சிகளின் தலைவர்களாக இருந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் காரணம். ஆட்சியின் மீது வெறுப்பு ஏற்பட்டாலும் மக்கள் மாறி மாறி இத்தலைவர்களுக்காக மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், அந்த இரு ஆளுமைமிக்க தலைவர்களும் இன்று இல்லை. அதனால், இயல்பாகவே அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்தத் தலைவர்கள் இல்லாமல் முதல் தேர்தலை தமிழகம் சந்திக்கும் நிலையில், எல்லோருக்குமே இது புதிய தேர்தல்தான். அவர்களின் இடத்தில் ரஜினியை வைத்து தமிழக மக்கள் பார்ப்பார்கள்’ என்பது ரஜினி ரசிகர்கள் சொல்லும் நம்பிக்கை. 

தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு கட்சி தேவை என்ற கருத்துகொண்டிருப்போர் அதிகம் உள்ளனர். தமிழக தேர்தல் நிலவரத்தை உற்று நோக்கினால், ஒரு விஷயம் நமக்கு புலப்படும். கடந்த 21 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக களமிறங்கிய கட்சிகள் 10 முதல் 19 சதவீதம் வரை வாக்குகளைப் பெற்றுள்ளன. ஆனால், கால ஓட்டத்தில் அந்தக் கட்சிகள் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தங்களைத் தொலைத்துகொண்டுவிட்ட போக்கையும் பார்க்க முடிகிறது. இந்த இடத்தில் ரஜினியின் அரசியல் வருகை மக்களைத் திரும்பி பார்க்க வைக்கும் என்று சொல்வதற்கு சாத்தியக்கூறுகளும் உள்ளன. மேலும் ரஜினி மீதுள்ள நல்லவர் என்ற இமேஜூம் எளிமையானவர் என்ற பிம்பமும் மிகப் பெரிய மாஸ் ஸ்டார் என்ற சினிமா புகழும் ரஜினிக்கு உதவக்கூடும்.

இரண்டாம் சவால்

ரஜினிக்கு உள்ள அடுத்த சவால், கால நேரமின்மை. கரோனா தொற்று பரவல் அவருடைய அரசியல் பிரவேசதுக்கு ஸ்பீடு பிரேக்காக அமைந்தது. எம்.ஜி.ஆர். போல ரஜினி ஜெயிப்பார் என்று ரஜினியின் ஆதரவாளர்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது. எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கும் முன்பே திமுகவில் பல ஆண்டுகாலம் டிராவல் செய்தவர். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய ஆண்டு 1972. தேர்தலை சந்தித்த ஆண்டு 1977. இடைப்பட்ட ஐந்து ஆண்டு காலம், அவர் தன்னுடைய கட்சியை வளர்க்கவும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் மிதமிஞ்சிய காலம் இருந்தது. ஆனால், ரஜினி கட்சி தொடங்கும் தேதியை டிசம்பர் 31 அன்றுதான் அறிவிக்கப்போகிறார். அதன்பிறகு ரஜினிக்கு இருக்கப்போவது வெறும் 4 மாதங்கள்தான்.

ஆந்திராவில் குறுகிய காலத்தில் கட்சித் தொடங்கி ஆட்சியைப் பிடித்த என்.டி. ராமராவையும் உதாரணமாக ரஜினி ரசிகர்களும் அவருடைய ஆதரவாளர்களும் கூறுகிறார்கள். என்.டி. ராமாராவுக்கும் கட்சி தொடங்கியதற்கும் ஆட்சியைப் பிடித்ததற்கும் இடையே 9 மாத காலம் அவகாசம் இருந்தது. அந்த அவகாசத்தில் ஆந்திரா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து எளிதில் வெற்றி பெற்றவர் என்.டி.ராமாராவ். கரோனா பரவல் இன்னும் முற்றுப்பெறாத நிலையிலும் ரஜினியின் உடல்நலனில் உள்ள சிக்கல்களும், அவர் மக்களை எந்த அளவில் அணுகி பிரசாரம் மேற்கொள்ள முடியும் என்பது நிச்சயமாகவே பெரும் சவால்தான். ஆனால், தன்னுடைய உயிரே போனாலும் அதற்காக கவலைப்பட மாட்டேன் என்று ரஜினி அறிவித்துள்ளது, அவர் எல்லாவற்றுக்கும் தயாராகிவிட்டார் என்பதையே காட்டுகிறது.

ஒரு வகையில் பார்த்தால், அந்தக் காலம் என்பது மக்களை நேரிடையாகச் சென்று சந்தித்து கட்சி வளர்க்கும் காலமாகவே இருந்தது. மக்களைத் தொடர்புகொள்ள நேரிடையாக சென்றுதான் ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டம் மக்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையே இருந்த இடைவெளியை தொழில்நுட்பங்கள் குறைத்துவிட்டன. குறிப்பாக, சமூக ஊடகங்கள் மக்களுடனான நெருக்கத்தை அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அதீதமாகவே வழங்கியுள்ளன.

வரும் தேர்தலில் சமூக ஊடகங்கள் குறிப்பிடத்தக்கப் பங்காற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அது ரஜினிக்கு மிகப் பெரிய அளவில் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். ரஜினி சமூக ஊடகத்தில் ஒரு கருத்திட்டால், அது கடைக்கோடி வாக்காளரையும் எளிதில் சென்றடைந்துவிடுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். 1996-ம் ஆண்டில் ‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்று டி.வி.யில் தோன்றி ரஜினி பேசியது, ஹிட் அடித்ததையும் இந்நேரத்தில் நினைவில் கொள்ளலாம். 

மூன்றாவது சவால்

ரஜினிக்கு உள்ள மூன்றாவது சவால், மிக முக்கியமானது. தமிழகத் தேர்தல் களத்தில் யார் முதல்வர் என்று பார்த்து வாக்களிப்போர்தான் இங்கே அதிகம். கடந்த 30 ஆண்டுகளாக கருணாநிதியா, ஜெயலலிதாவா என்று பார்த்துதான் மக்கள் வாக்களித்து வந்திருக்கிறார்கள். தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளரெல்லாம் இரண்டாம்பட்சம்தான். ஆனால், ரஜினியோ தான் முதல்வராக இருக்கப்போவதில்லை என்று ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். ரஜினி முதல்வர் வேட்பாளராக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு ஆலோசனை வழங்கும் குருமூர்த்தி, தமிழருவி மணியன் போன்றவர்களும், அவருடைய ரசிகர்களும் வலியுறுத்திவருகிறார்கள். தமிழகத்தில் சிறு வாக்கு வங்கி உள்ள கட்சிகள்கூட முதல்வர் வேட்பாளராக தங்களை அறிவித்துகொண்டுதான் தேர்தலை எதிர்கொள்கின்றன. எனவே, ரஜினிக்கு இந்த விவகாரம் அழுத்தம் தரும் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், 2001 சட்டப்பேரவைத் தேர்தல் உதாரணம், அந்தக் குறையை ரஜினிக்கு போக்கும் என்று நம்புவதற்கும் இடமுண்டு. அந்தத் தேர்தலில் ஊழல் வழக்கில்  தண்டனை பெற்றிருந்ததால், ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருந்தது. இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவால் முதல்வராக முடியாது என்றே திமுகவும் பிரசாரம் செய்தது. வெற்றி பெற்றாலும் முதல்வராக முடியாது என்ற திரிசங்கு நிலையில்தான் தேர்தலை எதிர்கொண்டார் ஜெயலலிதா. தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஜெயலலிதா முதல்வர் ஆக முடியாது என்று தெரிந்தே அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்கள். முதல்வர் வேட்பாளர் இல்லாத நிலையில் அதிமுக அன்று வெற்றி பெற்றது ரஜினிக்கான ஒரு பாசிட்டிவான சமிக்கைதான்.

நான்காம் சவால்

ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த நாள் முதலே, அவரை பாஜகவின் ஊதுகுழல், ஆர்.எஸ்.எஸின் இறக்குமதி, பாஜகவின் பி டீம் என்றெல்லாம் எதிர்க்கட்சிகளும் ரஜினியை எதிர்ப்போரும் தமிழகத்தில் கட்டமைத்திருக்கிறார்கள். அந்த மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் ரஜினிக்கு உண்டு. ரஜினியின் ஒவ்வொரு செயலையும் நகர்வையும் ஆரத் தழுவி வரவேற்கும் கட்சி என்றால் அது பாஜகதான். இதுவும் பாஜகவினரின் இயல்பான ஆதரவும், அவர் பாஜக ஆள் என்று நம்புவதற்கும் ஏதுவாகிவிட்டன. ஒரு கட்டத்தில், “என் மீது காவி வண்ணத்தைப் பூசப் பார்க்கிறார்கள். அது முடியாது” என்று ரஜினி வெளிப்படையாக அறிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஆனாலும், ரஜினி மீதான அந்த விமர்சனத்தை நீர்த்துப் போகாமல் எதிர்க்கட்சிகள் அப்படியே வைத்துள்ளன.

ரஜினி அறிவித்த ஆன்மிக அரசியல் என்பதை தமிழக கட்சிகள்  'மதவாத அரசியல்’ என்றே மாற்றுப் பெயரைச் சூட்டி ரஜினியைச் சீண்டிவருகின்றன. ‘ரஜினியின் அரசியல் செயல்பாடுகள், மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் சாதகமாகவே இருக்கும்’ எனவும் கடும் விமர்சனங்களை ரஜினி எதிர்ப்பாளர்கள் முனவைத்து வருகிறார்கள். அவற்றை தன் செயல்பாடுகள் மற்றும் பிரசாரங்கள், கொள்கைகள் வாயிலாக, முறியடிக்க வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு ஏற்பட்டுள்ளது. அது ரஜினிக்கு ஒரு வகையில் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாக இருக்கும்.

தமிழகத் தேர்தல் களத்தில் காத்திருக்கும் இந்த மிகப் பெரிய சவால்களை எல்லாம் ரஜினியும் அவருடைய ரசிகர்களும் (எதிர்கால தொண்டர்கள்) எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதில்தான் ரஜினியின் அரசியல் எதிர்காலமே அடங்கியிருக்கிறது!  


14/11/2020

Chennai's fish hub Kasimedu : உறங்கா நகரம் காசிமேடு!


ஒரு மாநகரமே உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில் வட சென்னையில் உள்ள காசிமேடு மட்டும் விழித்துக் கிடக்கிறது.   முன்னிரவு 11 மணியிலிருந்து வங்கக் கடலின் காசிமேடு கரையை நோக்கி படகுகள் அணிவகுத்துவருகின்றன. பின்னிரவு 2 மணிக்கு பிறகு காசிமேடு உச்சகட்ட பரபரப்பில் மூழ்கிக்கிடக்கிறது. விடியும் வரையிலும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஜனத்திரளால் நிறைந்துக்கிடக்கிறது காசிமேடு. மீன்களால் புகழ்பெற்ற நெய்தல் நிலமான காசிமேடு, மீனவர்களின் கதைகளை ஆர்ப்பரித்து சொல்கிறது.

ஆங்கிலேயர்களின் மிச்ச சொச்சங்கள் சற்று அதிகம் உள்ள வட சென்னையின் கடற்கரை நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் இருக்கிறது காசிமேடு. தொடக்கத்தில், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் சென்னை துறைமுகத்துக்கு உள்ளேதான் இருந்தது. துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டபோது காசிமேடு மீன்பிடித் துறைமுகம் உருவாகி, 1984 முதல்  தனித்து இயங்க ஆரம்பித்தது. சென்னையின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் இது. இந்த மீன் பிடித் துறைமுகத்தில் செயல்படும் மீன் சந்தைகள் சென்னையின் மீன் ‘ஹப்’ போல செயல்படுகின்றன. அந்த அளவுக்கு காசிமேட்டில் கிடைக்காத மீன் வகைகளே இல்லை.

ரேஷனுக்கு ஒதுக்கீடு

காசிமேட்டைச் சுற்றி பெரும்பாலும் மீனவர்கள்தான் வாசம் செய்கிறார்கள். காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பெரியது, சிறியதுமான விசைப்படகுகள், ஃபைபர் படகுகள், கட்டுமரங்கள் என சுமார் 4 ஆயிரம் படகுகளுக்கு மேல் உள்ளன. சுமார் 50 ஆயிரம் மீனவர்கள் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து கடலுக்குள் செல்வதும், கரை திரும்புவதுமாக தினந்தோறுமே திருவிழா கணக்காகக் காட்சியளிக்கிறது காசிமேடு. மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்வதையே பெரும் பயணத் திட்டத்துக்கு இணையாக வகுத்துக்கொண்டுதான் செல்கிறார்கள் மீனவர்கள். பெரும்பாலும் செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை நள்ளிரவு திரும்பும் வண்ணம்தான் பயணத்தை அமைத்துக்கொண்டு கடலுக்குள் செல்கிறார்கள் மீனவர்கள்.

கடலிலிருந்து கரைக்குத் திரும்பிய காசிமேடு மீனவர்கள், ஓரிறு நாள்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் கடலுக்குள் செல்ல ஆயத்தமாகிறார்கள். “ஒவ்வொரு பெரிய படகிலும் 10 பேர் என்ற அளவுல மீனவர்கள் செல்வோம். அதுல ஒருத்தர் சமைப்பதற்காக இருப்பாரு. படகை ஓட்ட டிரைவர், துணை டிரைவர்ன்னு இரண்டு பேர் இருப்பாங்க. மீதி பேரு மீன் பிடிப்பாங்க. ஒவ்வொரு முறையும் கரைக்குத் திரும்பிய பிறகு மீன்களை விற்று கிடைக்கிற காசில், ‘ரேஷ’னுக்கு காசு எடுத்து வைத்துவிடுவோம். ரேஷன் என்றால் மண்ணெண்ணெய், அரிசி, மளிகைச் சாமான், காய்கறிகள்தான். இதை வாங்கதான் காசை எடுத்து வைச்சுடுவோம். திரும்பவும் கடலுக்குள் போய், மீன்களைப் பிடிச்சுவர இதுதான் மூலதனம்.” என்கிறார் பல ஆண்டுகளாக விசைப் படகைச் செலுத்துபவரான மீனவர் விஜயராஜ்.

விதவிதமாக மீன்கள்

காசிமேட்டிலிருந்து மீனவர்கள் கிளம்பினால், பரந்துவிரிந்து கடலின் இருபுறங்களில் கிழக்கு, மேற்காக ஸ்ரீஹரிகோட்டா, நாகப்பட்டினம் வரை சென்று பெரும்பாலும் மீன் பிடிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் மீன் பிடிக்கச் செல்லும்போது எந்த இடத்தில் மீன்கள் அதிகம் கிடைக்கின்றன; இரவு நேரத்தில் எந்த இடத்தில் மீன்கள் அதிகம் வரும் போன்ற விவரங்களை எல்லாம் ஒரு தாளில் குறித்து வைத்துக்கொள்கிறார்கள் மீனவர்கள்.  மீன்களை கில்நெட், இழுவை வலை, தூண்டில் போன்றவற்றின் மூலமே மீன்பிடிக்கிறார்கள். இதில், கில்நெட் வலை மிகவும் பெரியது. சுமார் ஐந்து கி.மீ. தூரம் நீளம் கொண்டது இந்த வலை. மீன்கள் அதிகம் கிடைக்கும் இடத்தில் இந்த வலையை ஒரு நாள் முழுக்க விரித்துவிட்டு பார்த்தால், விதவிதமாக, ரகரகமாக வலையில் மீன்கள் துள்ளிக்கொண்டிருக்கும் என்கிறார்கள் மீனவர்கள்.

மீன்கள் அதிகம் கிடைக்கும் இடங்களை எல்லா மீனவர்களாலும் கணித்துவிட முடிவதில்லை. பல ஆண்டுகளாக கடலுக்குள் சென்றுவந்த அனுபவஸ்தர்களால் மட்டுமே கணிக்க முடியும். காசிமேடு மீனவர்கள் செல்லும் கடற்பகுதியில் பெரும்பாலும் வஞ்சிரம், வவ்வால், பாரை, கவளா, கடவரா, சுறா, கடம்பா, சங்கரா, அயிரை, முழியன், சீலா, காரப்பொடி, நெத்திலி, சூரை என மீன்களை அள்ளிக்கொண்டு வருகிறார்கள். இதேபோல இறால், நண்டுகளிலும் விதவிதமான வெரைட்டிகள் வலையில் நெளியும் என்கிறார்கள் மீனவர்கள். கடலில் 7 முதல் 10 நாட்கள் வரை உப்புக் காற்றை சுவாசித்து, உழைத்து, களைத்து பெட்டி பெட்டியாக மீன்களோடு திரும்புகிறார்கள் மீனவர்கள். பிடிக்கும் மீன்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக கையோடு பெரிய பெரிய ஐஸ்கட்டிகளையும் எடுத்து செல்கிறார்கள். பிடிக்கும் மீன்களை போட்டு வைப்பதற்காக படகின் அடிப்பாகத்தில் பெரிய கிடங்கு ஒன்றையும் கட்டி வைத்திருக்கிறார்கள். அந்த அறையைத் திறக்கும்போதே கவுச்சி


வாடையும் குளுமையும் ஆளைத் தூக்குகிறது.

தொடங்கும் ஏலம்

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இயங்கும் மீன்சந்தைகள் எல்லா நாளும் பரபரப்பாக இருந்தாலும் செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை இரவு மட்டும் பெரும் பரபரப்பாக  இயங்குகின்றன. ஒரு பெரிய விசைப்படகு மீனவர்கள் குறைந்தபட்சம் 5 டன் மீன்களையாவதுப் பிடித்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால், இதே அளவில் இது தினமும் கிடைக்கும் எனச் சொல்லிவிட முடியாது. சுமாராக, ஒரு நாளைக்கு 200 டன் மீன்கள் காசிமேட்டுக்கு வருகின்றன. ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் இது கொஞ்சம் அதிகரிக்கிறது.

மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற படகுகள், இரவு 10 மணி முதலே கரைக்குத் திரும்பத் தொடங்குகின்றன. வரிசையாக வந்து நிறகும் படகுகளில் உள்ள மீன்களைத் தரம் வாரியாகப் பிரித்து கூடை கூடையாக வைக்கிறார்கள். இரவு 12 மணிக்கு மேல் பெண்கள் கையில் பெரியபெரிய கூடையுடனும் பெரிய பிளாஸ்டிக் டப்பாக்களுடன் வரத் தொடங்குகிறார்கள்.  

கடலுக்குச் சென்று மீன்பிடிப்பது ஆண்கள் என்றாலும், கரையில் அதன் வணிகம் முழுவதையும் செய்வது பெண்கள்தான் என்று சொல்லுமளவுக்கு 12 மணிக்கு மேல் பெண்களின் கூட்டம் காசிமேட்டை நிறைக்கிறது.  சரியாக இரவு 2 மணி ஆனதும் மீன் பிடித் துறைமுகத்தில் உள்ள சங்கு ஒலிக்கிறது. 2 மணி முதல் மீன் ஏலம் தொடங்குகிறது. அதை வெளிப்படுத்துவதற்காகவே இந்த சங்கு சத்தம். அந்த சங்கு சத்தம் கேட்டதும் எங்கிருந்துதான் கூட்டம் வந்தது என்று தெரியாத அளவுக்கு பெண்களும் ஆண்களும் மீன் கூடைகளைச் சுற்றி மொய்க்கிறார்கள். மீனவர்கள் பிடித்துவரும் மீன்கள் அனைத்துமே ஏலம் விடப்பட்டுதான் விற்பனையே நடக்கிறது. ஏலத்தில் எடுக்கும் மீன்களை அங்கே உள்ள மீன்சந்தையில் விற்போரும் உண்டு; அருகே உள்ள ஊர்களிலிருந்து வந்தவர்கள் ஆட்டோ, டெம்போ மூலம் அள்ளிக்கொண்டு போவதும் உண்டு.

பெண்கள் ராஜ்ஜியம்

ஆனால், இங்கே ஏலம் விடப்படும்போது ஒவ்வொரு இடத்திலும் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டு ஏலம் கேட்கிறார்கள். படகிலிருந்து மீன்களைக் கொண்டுவந்து வைப்பதுமாக படபடக்கிறார்கள் ஆண்கள். பெரும்பாலும் பெண்கள்தான் ஏலம்விடுகிறார்கள். அந்த அளவுக்கு இங்கே கரைக்கு மேலே பெண்களின் ராஜ்ஜியம். நான் இரவு 2 மணிக்கு மேலே ஏலம் விடும் இடத்தில் வட்டமாகச் சுற்றி நிற்கும் கூட்டத்தை எட்டி எட்டிப் பார்த்தேன். ‘‘கூடை ஆயிரம்... கூடை ஆயிரம்...’’, “சங்கரா, கடம்பா, வஞ்சிரம், வவ்வாலு” என்று கூவியபடியே அழைக்கிறார்கள் பெண்கள். அந்தப் பெண்களைச் சுற்றி பேரம்பேசுகிறார்கள் சில்லறையில் மீன் விற்கும் பெண்களும் வியாபாரிகளும். ஏலம் விடும் பெண்கள் தங்கள் கைகளில் ரூபாய் நோட்டுகளை பஸ் கண்டக்டர் போல விரல் இடுக்குகளில் லாவகமாக வைத்துக்கொண்டு, அந்தப் பரபரப்புக்கு மத்தியிலும் கச்சிதமாக சில்லறையைக் கைமாற்றுகிறார்கள்.

ஒவ்வொரு ஏலத்திலும் ஐந்தாறு கூடைகளில் கிலோ கணக்காக மீன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதனை போட்டி போட்டு ஏலம் எடுக்கிறார்கள் மீன் வியாபாரிகள். இந்த ஏலத்தில் சென்னை முழுவதும் மீன் விற்கும் வியாபாரிகளும் பெண்களும் நள்ளிரவில் கலந்துகொண்டு போட்டிப் போட்டுக்கொண்டு மீன்களை வாங்குகிறார்கள். அப்படி மீன்களை வாங்குபவர்கள் தயாராக பிளாஸ்டிக் பெட்டியில் கொண்டுவந்திருக்கும் ஐஸ்கட்டிகளுடன் சேர்ந்து மீனை அடுக்குகிறார்கள். அதேபோல கையோடு வாங்கிவந்த கல் உப்பை மீன்கள் மீது தூவுகிறார்கள். பின்னர் காத்திருக்கும் வண்டியில் ஏறி பறக்கிறார்கள். இவர்கள் சென்னையையும், திருவள்ளூர், காஞ்சிபுரம் எனப் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூரில் இருந்தும்கூட இங்கே டெம்போக்களில் வந்து மீன்களை வாங்கிவிட்டு செல்லும் மீன் வியாபாரிகளையும் காசிமேட்டில்


பார்க்க முடிந்தது.

பரபர மீன் சந்தை

மீனை வாங்கி அங்கேயே விற்பனை செய்ய மீன் சந்தைகள் உள்ளன. அந்த வேலையை பெரும்பாலும் காசிமேடு பகுதியில் வாழும் மீனப் பெண்களே செய்கிறார்கள். நான் சனிக்கிழமை இரவுதான் காசிமேடு மீன் பிடித் துறைமுகத்துக்கு சென்றிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை பொழுதில் அந்தப் பகுதியே மனித தலைகளால் நிறைந்துகிடந்தன. உப்புக்காற்றை சுவாசித்தபடி  மீன்பிடித் துறைமுகத்தில் நடந்தேன். இது கடற்கரையா என்று சந்தேகப்படும் அளவுக்கு இரவில் நடந்த ஏல விற்பனையால் சேறும் சகதியுமாக காட்சியளித்தது மீன் பிடித் துறைமுகம். கூடவே கவுச்சி வாடையும் இன்னும் கொஞ்சம் தூக்கலாக இருந்தது. இன்னொரு புறம் அந்த காலை பொழுதிலும் சிறிய விசைப்படகுகள், கட்டுமரங்களில் மீன்கள் வந்துகொண்டேயிருந்தன. 

பெரிய விசைப் படகுகள் நள்ளிரவிலேயே வந்துவிட, அதிகாலையில் சிறிய படகுகள் கரையை முற்றுகையிடுகின்றன. சிறிய படகு, கட்டுமர படகுகளிலிருந்தும் மீன்களை இறக்கிக்கொண்டேயிருந்தார்கள். திரும்பவும் பின்னிரவில் பார்த்த அதே ஏல வியாபாரம் களைகட்டுகிறது. இப்படியாக புதன்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 7 மணி வரை மீன்களை இறக்கி ஏலம் விட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் காசிமேட்டில் 7 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது என்கிறார்கள் மீனவர்கள். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் இரவு ஒரு மணிக்கே வியாபாரம் தொடங்கிவிடுகிறது. அன்றைய தினத்தில் மட்டும் காசிமேடுக்கு சுமார் 40 ஆயிரம் பேராவது வந்து செல்கிறார்கள்.

குறைந்த விலையில் நிறைவாகவும் நல்ல மீன்களையும் வாங்க விரும்பும் சென்னைவாசிகள் காலை 5.30  மணிக்கெல்லாம் காசிமேடு மீன் சந்தையில் ஆஜராகிவிடுகிறார்கள். அந்த மீன் சந்தையிலும் கூடை கூடையாக மீன்களை வைத்திருக்கிறார்கள். பல மீன் கூடைகளில் பலதரப்பட்ட மீன்களும் கலந்துகிடக்கின்றன. “கூடை 100 ரூபாய், கூடை 200” ரூபாய் என்று பெண்கள் கூவி அழைக்கிறார்கள்.

பேரத்துக்கு அப்பால்...

ஒவ்வொரு கூடையிலும் ஒன்று முதல் இரண்டு கிலோ வரை மீன்கள் இருக்கின்றன. மீன் ஏலம் விடும் இடத்தில் பேரம் பேசி மீன்களை வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது. ஆனால், மீன் சந்தையில் அதற்கு நேர்மார். யாராவது பேரம் பேசினால், ‘‘போன வாரம் வந்திருந்தே... அதைவிட கம்மியா கொடுத்திருப்பேன். இன்னைக்கு படகு ரொம்ப கம்மி. அதான் ரேட்டு கூட. இஷடம் இருந்தா வாங்கிக்கினு நகரு... இல்லே ஒத்து..” என்று லாவகமாகப் பேசி மீன்களை விற்கிறார்கள் பெண்கள். ஆனால் , ஞாயிற்றுக்கிழமையை மீன் சமையலுடன் ருசிக்க விரும்புவோர் இந்த கூடை கடைகளைச் சுற்றி பெரும்பாலும் பேரம் எதுவும் பேசாமல் மீன்களை வாங்கிச் செல்கிறார்கள். ஒரு கிலோ மீன் 100 முதல் 200 ரூபாய்க்குள் கிடைப்பதே காரணம்.  

 இப்படி மீன் சந்தைகளில் மீன்களை வாங்கிக்கொண்டு வருவோரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது பெண்கள் கூட்டம். மீன்களை சைஸாக வெட்டிக் கொடுப்பதை வேலையாக செய்யும் பெண்கள் இவர்கள்.  மீன்களின் அளவுகளைப் பொறுத்து மீன்களை வெட்ட 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை பெற்றுக்கொள்கிறார்கள். இந்தப் பெண்களின் வசதிக்காகவே அந்த காலை வேளையில் அருவாமனை கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். இதேபோல பை விற்கும் கடைகளும் பிசியாக இருந்தன. காசிமேடு மீன்பிடித் தொழிலை நம்பியிருப்பது போலவே ஐஸ்கட்டி ஃபேக்டரிகளும் இங்கே அதிகம்.

இறால்கள் இடம்  


மீன் சந்தைக்கு எதிர்புறத்தில் இறால்களை சேமித்து வைக்கும் இடம் இருந்தது. அந்த இடத்தையும் கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். அங்கே விதவிதமாக இறால்கள் இருந்தன. சிவப்பு வண்ணத்தில் இருந்த அந்த இறாலைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. அது ‘ஆழ்கடல் இறால்’ என்று அறிமுகம் கொடுத்தார்கள் மீனவர்கள். ஆனால், “இந்த ஆழ்கடல் இறாலைவிட பழவேற்காடு முகத்துவாரத்தில் கிடைக்கும் இறால்களுக்குத்தான் ருசி அதிகம்” என்றார் ஒரு மீனவர். அதேபோல ஆத்து இறால்களும் இங்கே அதிகம் இருந்தன.  “இதை ‘ஃப்ளவர்’ன்னு சொல்வோம். இதன் ருசியை வேறு இந்த இறாலாலும் அடிச்சுக்க முடியாது. நீங்க வேணா வாங்கிபோய் சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க. கிலோ 400 ரூபாதான்” என்றார் இன்னொரு மீன் வியாபாரி. இங்கே உள்ள இறால்களை கேரளா வழியாக சவுதி அரேபியாவுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். காசிமேட்டிலிருந்து 15 வகையான இறால்களும், 15 வகையான மீன்களும் ஏற்றுமதியாகிது என்று பெருமையாகச் சொல்கிறார்கள் மீனவர்கள்.

மீன் பிடி செலவு

காசிமேட்டிலிருந்து மீன் பிடித்து வந்து நிறைய காசு பார்க்கிறார்கள் என்ற எண்ணம் பொதுவாக வரலாம். ஆனால், கடலுக்குள் சென்று மீன்களைப் பிடித்துவர லட்சக்கணக்கில் முதலீடு செய்கிறார்கள். ‘‘சிறிய படகுகள் எல்லாம் குறைந்த நாள் சென்றுவிட்டு திரும்பிவிடுவார்கள். ஆனால். பெரிய விசைப்படகுகள் எல்லாம் 10 - 15 நாட்கள் வரை கடல்ல தங்கியிருந்து மீன்பிடித்துவிட்டு வருவாங்க. அதுக்காகவே ஐஸ் கிடங்கு ஒவ்வொரு படகிலும் வச்சிருப்போம். ஒரு தடவை கடலுக்குப் போக பெரிய விசைப்படகுக்கு மட்டும் நாலரை லட்சம் ரூபாய் செலவாயிடும். டீசலே ஆறாயிரம் லிட்டர் கொண்டு போகணும். அதுக்கே, இன்னைய தேதிக்கு எவ்ளோ செலவாகும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

அதேபோல 8-10 பேர் சாப்பிட குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாயாவது செலவாகும். பிறகு ஐஸ்கட்டிகள் வாங்க 40 ஆயிரம் செலவாகிடும். அதனால, மீன் பிடிச்சு வந்த பிறகு வியாபாரம் ஆறேழு லட்சத்துக்கு நடந்தாதான் படகு ஓனர், மீனவத் தொழிலாளர்கள் என்று எல்லோருக்கும் ஓரளவுக்கு சம்பளம் கிடைக்கும். அதுக்கு நாங்க படுறபாடு இருக்கே, அதை சொல்லிமாளாது.” என்கிறார் மீனவர் விஜயராஜ்.

‘தரை மேல் பிறக்க வைத்தான்.. எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்... கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக் கண்ணீரில் துடிக்க வைத்தான்... - கடலில் படகுகளைப் பார்த்தாலே இந்தப் பாட்டு நம்மையறியாமல் முணுமுணுக்கத் தொடங்கிவிடும். காசிமேட்டை விட்டு கிளம்பும் வரை அந்தப் பாடல் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. காசிமேட்டைப் பொறுத்தவரை ,அது சென்னை மாநகரின் வரம். காசிமேட்டில் அள்ள அள்ள குறையாமல் விதவிதமாகவும் ரகரகமாகவும் மீன்களை சென்னை மாநகருக்கு அள்ளித்தரும் அட்சயம்பாத்திரம்!  

- இந்து தமிழ், தீபாவளி மலர், 2020

14/09/2020

Kalaivanar Arangam and the Tamil Nadu Legislative Assembly : தமிழக சட்டப்பேரவையும் கலைவாணர் அரங்கமும்..!

தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள இன்றைய சட்டப்பேரவைக் கட்டிடத்துக்கு வெளியே நடப்பது இது முதன் முறையல்ல. ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு இடங்களில் சட்டப்பேரவைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. 

கடந்த 1938-1939-ம் ஆண்டில் தமிழகச் சட்டப்பேரவை முதன்முதலாக சென்னைப் பல்கலைக்கழக செனட் ஹவுஸ் மற்றும் ராஜாஜி ஹாலில்தான் நடைபெற்றது. ஆனால், 1940-ம் ஆண்டில் சட்டப்பேரவை அறை (அசெம்பிளி ஹால்) செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தயாரான பிறகு அங்கே இடம் மாறியது.  சுதந்திரத்துக்குப் பிறகு ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளையும் உள்ளடக்கிய மெட்ராஸ் மாகாணத்துக்கென பெரிய சட்டப்பேரவைக் கட்டிடம் தேவைப்பட்டது. இதற்கென 10 லட்சம் ரூபாய் செலவில் வாலாஜா சாலையில் அமைந்துள்ள அரசினர் தோட்டப் பகுதியில் புதிய சட்டப்பேரவை மண்டபம் கட்டப்பட்டது. இதை அன்றைய ஆளுநர் ஸ்ரீ பிரகாசா 1952-ம் ஆண்டில் திறந்துவைத்தார். 

1952-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரை இங்கேதான் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வந்தது. 1956-ம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு ஆந்திரா பகுதிகள் மெட்ராஸ் மாகாணத்தில் குறைந்தன. இதனால், உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இதனால், மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே சட்டப்பேரவை இடம் மாறியது. வாலாஜா சாலையில் இருந்த சட்டப்பேரவைக் கட்டிடம் மாற்றியமைக்கப்பட்டு சிறுவர்கள் திரைப்படம் திரையிடும் கட்டிடமாக மாற்றப்பட்டது. பின்னர் 1974-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் அந்தக் கட்டிடம் அரங்கமாக மாற்றப்பட்டது. அந்த அரங்கத்துக்கு கலைவாணர் அரங்கம் என்ற பெயரும் சூட்டப்பட்டது. 

1956-ம் ஆண்டில் இன்றைய சட்டப்பேரவைக் கட்டிடத்துக்கு சட்டப்பேரவை மாறிய பிறகு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளி இடங்களிலும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடத்தப்பட்டுள்ளது. 1959-ம் ஆண்டு ஏப்ரல் 20 முதல் 30-ம் தேதி வரை ஊட்டியில் உள்ள அரண்மூர் மாளிகையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுள்ளது. கோடை காலத்தை கருத்தில்கொண்டு அப்போது குளிர்ப் பகுதியான ஊட்டியில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இது அரசியல் ரீதியாக அன்று விமர்சன பொருளானது. அதன் பிறகு தொடர்ந்து சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவைக் கட்டிடத்தில்தான் சட்டப்பேரவைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. 

கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்ட பிறகு 2010 -2011 பட்ஜெட் கூட்டத்தொடர் வரை சட்டப்பேரவைக் கூட்டங்கள் அங்கே நடைபெற்றன. 2011-ம் ஆண்டில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பழையபடி புனித ஜார்ஜ் கோட்டைக்கே சட்டப்பேரவை இடம் மாறியது. இன்று கரோனா வைரஸ் தந்த நெருக்கடி காரணமாக சட்டப்பேரவைக் கூட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முதன்முதலாக சென்னையில் சட்டப்பேரவை மண்டபம் (பழைய கலைவாணர் அரங்கம்) கட்டப்பட்ட அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்திலேயே சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. வரலாறு திரும்புகிறது!

06/08/2020

30 ஆண்டுகளில் நான்காவது எம்.எல்.ஏ... திமுக எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தி வரலாறு!

div>
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் பாஜக பக்கம் சாய்ந்திருக்கிறார். பாஜகவில் தான் இணையவில்லை என்று அவர் சொன்னாலும், அவருடைய செயல்களும் பேச்சுகளும் அதை எல்லோருக்கும் படம்போட்டு காட்டுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் சிட்டிங் திமுக எம்.எல்.ஏ.க்கள் முகாம் மாறுவது அல்லது அதிருப்தி காரணமாக முரண்பட்டு நிற்பது இது  நான்காவது முறையாகும்.

வழக்கமாக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் போட்டியிட மீண்டும் சீட்டு கிடைக்காத விரக்தியில் கட்சி மாறிய எம்.எல்.ஏக்கள் திமுகவில் உண்டு. இதேபோல சீட்டு கிடைக்காத ஆத்திரத்தில் கட்சி மாறிய திமுக நிர்வாகிகளும் நிறைய பேர் உண்டு. ஆனால், தேர்தல் இல்லாத நேரத்தில் கருத்து வேறுபாடு அல்லது அதிருப்தி காரணமாக கட்சி மாறிய அல்லது முரண்பட்டு நின்ற எம்.எல்.ஏ.க்கள் மிகவும் குறைவுதான். அந்த வகையில் கடந்த 30 ஆண்டுகளில் தேர்தல் அல்லாத காலத்தில்   மூன்று எம்.எல்.ஏ.க்கள் திமுகவிலிருந்து முகாம் மாறியிருக்கிறார்கள் அல்லது முரண்பட்டிருக்கிறார்கள்.  தற்போது நான்காவது முறையாக கு.க. செல்வம் பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது.

1991-ம் ஆண்டு தேர்தலில் எழும்பூர், துறைமுகம் என இரு தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்ற அன்றைய திமுக  தலைவர் மு.கருணாநிதி அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். இடைத்தேர்தலில் செல்வராஜ் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1993-ம் ஆண்டு கட்சியை விட்டு வைகோ நீக்கப்பட்டபோது, அவர் பக்கம் பல நிர்வாகிகள் சென்றனர். அப்போது துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த செல்வராஜும் வைகோ பக்கம் சென்றார். திமுகவின் இரண்டு எம்.எல்.ஏ.க்களில் ஒருவர், வைகோ பக்கம் சென்றதால், சட்டப்பேரவையில் திமுகவில் செங்குத்து பிளவு என்று வைகோ வர்ணித்தார். உதயசூரியன் சின்னத்தை வைகோ கோரியபோது தேர்தல் ஆணையத்திலும் சட்டப்பேரவையில் செங்குத்து பிளவு என்பதை வைகோ குறிப்பிட்டார். அதற்கு அப்போது மூலக்காரணமாக விளங்கியவர் செல்வராஜ்.

இவரைப் போல அல்லாமல் அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியிலும் கருத்து வேறுபாட்டாலும் திமுக எம்.எல்.ஏ. ஒருவர் அதிமுக பக்கம் தாவினார். அவர், ராஜ கண்ணப்பன். 2006-ம் ஆண்டில் இளையான்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ராஜகண்ணாப்பன். திமுக ஆட்சி அமைத்ததால், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், சிவகங்கை மாவட்டத்துக்கு பெரியகருப்பனுக்கு அமைச்சர் பதவியை ஒதுக்கியது திமுக மேலிடம். இதனால், ராஜகண்ணப்பன் அதிருப்தியில் இருந்துவந்தார். மேலும் பெரியகருப்பனுடன் கருத்து வேறுபாடும் இருந்துவந்தது. அந்த விரக்தியில், 2008-ம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி அதிமுக பக்கம் கரை ஒதுங்கினார் ராஜகண்ணப்பன். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக ராஜகண்ணப்பன் விலகியது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. (2001-ம் ஆண்டில் இளையான்குடி தொகுதி ராஜகண்ணப்பனுக்கு திமுக வழங்கியதால், அந்த அதிருப்தியில் அதிமுகவுக்கு தமிழ்குடிமகன் சென்றது தனிக்கதை).

கடந்த 2011-ம் ஆண்டில் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில்  பெரியசாமியின் அரசியலுக்கு முன் தாக்குபிடிக்க முடியாமல் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுக பக்கம் சாய முயற்சிகளை மேற்கொண்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் எம்.எல்.ஏ. பதவியை இழந்த ஜெயலலிதா, மீண்டும் தேர்தலில் போட்டியிட வசதியாக திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக பேட்டியெல்லாம் கொடுத்தார் அனிதா ராதாகிருஷ்ணன். ஆனால், அவருடைய எந்த ஆக்‌ஷன்களுக்கும் ஜெயலலிதா தரப்பிலிருந்து எந்த  ரியாக்‌ஷனும் வெளிப்படாததால், பின்னர் அப்படியே அமைதியாகி திமுகவில் சமாதனாமானார் அனிதா ராதாகிருஷ்ணன். 

தற்போது கிட்டத்தட்ட ராஜ கண்ணப்பனை போல விரக்தி காராணமாக கு.க. செல்வம் பாஜக பக்கம் சாயத் தொடங்கியிருக்கிறார். இந்த சட்டப்பேரவையின் காலம் முடிய 8 மாதங்களே உள்ள நிலையில் திமுகவிலிருந்து விலகி நிற்கத் தொடங்கியிருக்கிறார் கு.க. செல்வம். மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத நிலையில் ஏற்பட்ட அதிருப்தியால் கு.க. செல்வத்துக்கு அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் திமுகவிலிருந்து மாற்று முகாம் அல்லது அதிருப்தி காரணமாக திமுகவில் எம்.எல்.ஏ.க்கள் முரண்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தது இவை மட்டுமே.

12/07/2020

Kizhakku Vaasal and Anjali : ‘கிழக்கு வாசல்’, ‘அஞ்சலி’ 30 ஆண்டுகள்... ஒரே நாளில் வெளியாகி தடம் பதித்த படங்கள்!



இப்போது போல வாரந்தோறும் பல படங்கள் ரிலீசாகும் காலம் அல்ல அது. பண்டிகை நாட்களைக் கடந்து பிற நாட்களில் ஓரிரு படங்கள் அவ்வப்போது ரிலீசாகும். அப்படி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (12-07-1990) ரிலீசான இரு படங்கள், போட்டி போட்டுக்கொண்டு மாபெரும் வெற்றி பெற்றன. அந்த இரு படங்கள் ‘கிழக்கு வாசல்’, ‘அஞ்சலி’.

அப்போதெல்லாம் படங்கள் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் அடங்கிய கேசட் வெளியாகிவிடும். அந்தப் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்கும்போது, பாடல்கள் நம் மனத்தில் ஆழமாக ஊடுருவிவிடும். படம் எப்போது வரும், எப்போது பார்ப்போம் என்ற கேள்விகளைப் பாடல்களே உருவாக்கிவிடும். ‘கிழக்கு வாசல்’, ‘அஞ்சலி’ என இரு படங்களின் இசையும் இசைஞானி இளையராஜாதான். ‘கிழக்கு வாசல்’ முழுக்க முழுக்க கிராமிய பின்னணியோடு ஒரு பெண்ணின் வாழ்க்கை முறையையும் அதில் சாதியப் பின்னணியையும் திரைக்கதையாகக் கொண்ட படம்.

‘அஞ்சலி’ இதற்கு நேர்மாறான படம். நகர சூழலில் ஒரு குடும்பத்தில் மூன்று வயதுக் குழந்தைக்கும் தாய்க்கும் ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் இடையே நடக்கும் ஒரு கதைக்களம். இந்த நேர் எதிர்மாறான இந்தப் படங்களில் தன் டிரேட் மார்க் இசையை இளையராஜா வழங்கியிருந்தார். ‘தாங்கிடத்தத்த, தரிகிடதத்த என்று தொடங்கும் வீட்டுக்கு வீட்டுக்கு...’, ‘தளுக்கி தளுக்கி வந்து...’, ‘பாடிப் பறந்த கிளி...’ ‘வந்ததே ஓ...’, ‘பச்ச மல பூவு...’ என ஒவ்வொரு பாடலிலும் கிராமிய மனத்துடன் கூடிய இசைக் கோவை ‘கிழக்கு வாச’லைக் காணும் ஆவலை அதிகமாகவே தூண்டியிருந்தது.

இன்னொரு புறம் இளையராஜாவின் 500-ம் படமான ‘அஞ்சலி’யில், ‘மொட்டை மாடி மொட்டை மாடி...’,  ‘வீட்டுக்கு வீடு சம்திங்...’, ‘ராத்திரி நேரத்தில்...’, ‘இரவு நிலவு...’, ‘அஞ்சலி அஞ்சலி...’, ‘வானம் நமக்கு...’, ‘வேகம் வேகம் போகும் போகும்...’ என 7 ஸ்வரங்களும் டிஸ்கோ, ராப், ஸ்டீரியோ பின்னணியில் வேகமாகப் பயணிக்கும் பாடல்கள், படம் வருவதற்கு முன்பே முணுமுணுக்க வைத்தன.

‘கிழக்கு வாச’லில் கார்த்திக், ரேவதி, குஷ்பு, விஜயகுமார், ஜனகராஜ், மனோரமா, சின்னிஜெயந்த், சண்முகசுந்தரம், தியாகு என ஒரே நட்சத்திரக் கூட்டம். ‘அஞ்சலி’யில் பிரபு (கவுரவத் தோற்றம்), ரகுவரன், ரேவதி, வி.கே.ராமசாமி, ஜனகராஜ், பேபி ஷாமிலி மற்றும் குழந்தைகள் என சின்ன காம்போதான். திருச்சியில் ஒரே வளாகத்தில் 5 தியேட்டர்களைக் கொண்ட மாரீஸ் போர்ட் திரையரங்கில் ‘கிழக்கு வாசல்’ வெளியானது. ‘அஞ்சலி’ ரம்பா-ஊர்வசி வளாகத்தில் வெளியானது. படம் வெளியான பிறகு இரு படங்களைக் காணவும் ஒரே கூட்டம்.  12 வயது சிறுவனாக இருந்த நான் இரு படங்களையும் காணும் ஆவலில் இருந்தேன்.

ஆனால், ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகப் படம் ஓடியதால், ஒவ்வொரு முறையும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய நினைவுகள் நன்றாக உள்ளன. ஒரு வழியாக ‘அஞ்சலி’யைப் பார்த்துவிட்டாலும், ‘கிழக்கு வாச’லை உடனே காண முடியாமல் ஏமாந்து போனேன். ‘கிழக்கு வாசல்’ படம் 100 நாட்களுக்கு மேல் கடந்து ‘பி சென்டர்’ எனச் சொல்லப்படும் திருச்சி பேலஸ் தியேட்டரில் ஓடியபோதுதான், என்னுடைய தந்தை குடும்பத்தோடு அந்தப் படத்தைப் பார்க்க அழைத்துச் சென்றார். ஒருவழியாக ‘கிழக்கு வாச’லைப் பார்த்த மன நிறைவு அப்போதுதான் ஏற்பட்டது.

சிறு வயதில் இசைக்காகவும் நகைச்சுவைக்காகவும் நாயகனுக்காகவும் பார்த்த இந்த இரு படங்களையும், பின்னாளில் பல முறை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இந்த இரு படங்களுமே 1990-களில் மிகப் பிரம்மாண்டமாகவும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பெரும் வெற்றியைப் பெற்ற படங்கள். அப்போது வளர்ந்துகொண்டிருந்த இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் இசைஞானி இளையராஜாவுடன் கூட்டணி அமைத்த இரண்டாம் படம் ‘கிழக்கு வாசல்’. அதற்கு வஞ்சனையே இல்லாமல் இளையராஜாவின் ராஜ கீதம், கிழக்கு வாசலின் வெற்றியை உறுதி செய்தது. 

டி.எஃப்.டி. படித்து சினிமாவுக்கு வந்த இளைஞர்களுக்கு அப்போது நல்ல வரவேற்பு இருந்த காலத்தில் ஆர்.வி. உதயகுமாருக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைந்த படம் ‘கிழக்கு வாசல்’. ஏறுமுகத்தில் முன்னேறிக்கொண்டிருந்த நடிகர் கார்த்திக்குக்கு ‘பொன்னுரங்கம்’ கதாபாத்திரம் பெரும் திருப்புமுனையைத் தந்தது. ‘தாயம்மா’ என்ற கதாபாத்திரத்தில் தாசிகுலப் பெண்ணாகவும், தன் கற்பைக் காப்பாற்றிக்கொள்ளும் பெண்ணாகவும் ரேவதி அந்தக் கதாபாத்திரத்தில் வாழ்ந்துகாட்டிருந்தார்.

இந்தப் படத்தில் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் பரவலாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக, பெண்கள் போகப் பொருளாகக் காட்டப்படும் பெண்ணடிமைத்தனம், தாசிகுலம், சாதி பேதம் ஆகியவற்றோடு காதல், சென்டிமெண்ட், நகைச்சுவை, அதற்கும் மேல் இசை போன்ற அம்சங்கள் சேர்ந்து ‘கிழக்கு வாச’லைப் பிரம்மாண்ட வெற்றி படமாக்கியதில் வியப்பில்லை.
இதேபோல மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ படம் வழக்கம்போல ரசிகர்களை ஈர்த்தது.

 ‘நாயகன்’, ‘இதயத்தை திருடாதே’ படங்களைத்  தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய படம் ‘அஞ்சலி. கணவன் மேல் சந்தேகப்படும் மனைவி. அந்தச் சந்தேகம், அடுத்த கட்டத்துக்குத் திரைக்கதையை இட்டுச் செல்லும். முற்றிலும் புதுமையான, திருப்புமுனையாக ‘அஞ்சலி’ எனும் 3 வயது வயதுக் குழந்தையின் பக்கம் திருப்பி, அதன்பிறகு அந்தக் குழந்தையைச் சுற்றியே திரைக்கதை பயணிக்கும். கணவன் - மனைவியாக ரகுவரன் - ரேவதி. கவுரத் தோற்றத்தில் பிரபு. தொடக்கத்தில் ‘மெளன ராகம்’ படத்தின் சீக்வல்கள் அதிகம் காணப்படும் ‘அஞ்சலி’ படத்தில் நடிகர் ரகுவரன் பாத்திரத்தில் மோகன் நடிக்க இருந்ததும் ஒரு உபரித் தகவல்.

இந்தப் படத்தின் இயக்கம், இசை ஆகியவற்றைத் தாண்டி அந்தக் காலக்கட்டத்தில் பேச வைத்தது 3 வயதுக் குழந்தையான ஷாமிலி எப்படி நடித்தார் என்பதுதான். அதுவும் மனவளர்ச்சி குன்றிய குழந்தையாக. அதுவே படத்தின் வெற்றிக்கு முத்தாய்ப்பாகவும் அமைந்தது. பல விருதுகளை வென்ற ‘அஞ்சலி’, இந்தியாவிலிருந்து ஆஸ்கர் போட்டிக்கெனப் பரிந்துரைக்கப்பட்டது. ஒரே ஆண்டு, ஒரே நாளில் வெளியான இந்த இரு படங்களின் இன்னொரு ஒற்றுமையை நீங்கள் ஊகித்திருப்பீர்கள். ஆமாம், இந்த இரு படங்களின் கதாநாயகியும் ரேவதிதான். 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் தடம் பதித்த இந்த இரு படங்களும், 90-களில் தமிழ் சினிமாவின் போக்குக்கும் காரணங்களாக அமைந்தன.

- இந்து தமிழ் 

07/07/2020

‘தல’ தோனி - 7-ம் மனிதன்!

  


இந்திய கிரிக்கெட் அணியின் ஈடு இணையில்லா கேப்டன் ‘தல’ எம்.எஸ். தோனியின் 38-வது பிறந்த நாள் இன்று. கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பிங் என கிரிக்கெட்டில் அழுத்தமான தடங்களைப் பதித்தவர். அவரைப் பற்றிய சில அரிய தகவல்கள்.

* எம்.எஸ். தோனி ராஞ்சியில் உள்ள டிஏவி வித்யா மந்திர் பள்ளியில் படித்தபோது விளையாட்டுக்குள் ஆர்வமுடன் நுழைந்தவர். கிரிக்கெட்டை விளையாடத் தொடங்குவதற்கு முன்பு அவருடைய ஆர்வம் எல்லாம் கால்பந்தாட்டம் மற்றும் பாட்மிண்டன் விளையாட்டுகளின் மேல்தான் இருந்தது. கால்பந்து மற்றும் பாட்மிண்டன் விளையாட்டுகளில் மாவட்ட கிளப் அளவிலான போட்டிகளில் தோனி பங்கேற்று வந்தார். 

* தோனி கால்பந்து விளையாடியபோது அருமையான கோல்கீப்பராக விளங்கினார். அவருடைய பயிற்சியாளர் கேசவ் பானர்ஜியின் கீழ் கோல்கீப்பர் உத்திகளை நுணுக்கமாகக் கற்றுக்கொண்டார். ஆனால், அதே பயிற்சியாளர்தான் தோனியின் திறமைகளைப் பார்த்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற யோசனை கொடுத்து, தோனியை கிரிக்கெட் பக்கம் திருப்பிவிட்டார்.

* கிரிக்கெட்டில் நுழைந்து, அதன் மூலம் டிக்கெட் பரிசோதகர் பணியை கோரக்பூர் ரயில் நிலையத்தில் தோனி செய்துவந்தார். அப்போது நடந்த தியோடர் கோப்பையை கிழக்கு மண்டல அணி வென்றது. இந்த அணியில் தோனியை சேர்த்துக்கொள்ளவில்லை. வழக்கத்துக்கு மாறான அவருடைய பேட்டிங் ஸ்டைலே, அவரை அணியில் சேர்க்காததற்குக் காரணம் என்று கூறப்பட்டது. தன்னுடைய நண்பர் சந்தோஷ் லால் மூலம் கற்றுக்கொண்ட, அவருடைய ஃபேவரைட் ஹெலிகாப்டர் சிக்ஸர் சாகசங்களை அப்போது யாரும் ரசிக்கவில்லை. ஆனால், அதன்பின்பு சற்று அவருடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றிகொண்டபோதும், தனது அதிரடி ஆட்டத்திறனை மாற்றிக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் தன்னை நிலை நிறுத்திகொண்டார்.

* தோனியின் ஜெர்சி எண் 7 என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். ஜூலை 7-ல் பிறந்த அவருடைய, கிரிக்கெட் கரியரும் 7-ம் எண்ணில்தான் தொடங்கியது. ஆமாம், 2004-ம் ஆண்டில் ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக அறிமுகமானபோது, முதல் போட்டியின் முதல் பந்திலேயே ரன் அவுட் மூலம் அவுட் ஆனார். அந்தப் போட்டியில் அவர் 7-வது வீரராகத்தான் களமிறங்கினார். அன்று தொடங்கியது தோனியின் 7-ம் எண் கிரிக்கெட் வாழ்க்கை. அவர் முதன் முதலில் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதும் 2007-ம் ஆண்டில்தான்.

* 2007-ல் டி-20 கோப்பை, 2011-உ லகக் கோப்பை கிரிக்கெட், 2013-ல் ஐ.சி.சி. டிராபி என ஐ.சி.சி. நடத்திய 3 விதமான தொடர்களிலும் கோப்பை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. 

* புகழ்பெற்ற ஆஸ்திரேலியா முத்தரப்பு தொடரில் கோப்பை வென்று காட்டிய ஒரே இந்திய கேப்டன் தோனி. 2008-ம் ஆண்டில் நடந்த தொடரில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்த சாதனையை வெற்றியைப் பதிவு செய்தார் தோனி.

* உலகிலேயே மிக வேகமாகவும் துல்லியமாகவும் ஸ்டெம்பிங் செய்யும் விக்கெட் கீப்பர்களில் ‘தல’தான் நம்பர் ஒன். மூன்று வடிவங்களிலும் 155 முறை மிக வேகமாக ஸ்டெம்பிங் செய்து அசத்தியிருக்கிறார் தோனி. 
ஒரு நாள் போட்டிகளில் 100 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்று காட்டிய கேப்டன்கள் இதுவரை மொத்தமே மூன்று பேர்தான். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (165 வெற்றி), எம்.எஸ். தோனி (110), ஆலன் பார்டர் (107) ஆகியோர் மட்டுமே.

* ஒரு நாள் போட்டிகளில் 200 மற்றும் அதற்கு அதிகமான போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் தோனியும் ஒருவர். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (230 போட்டிகள்), நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளெம்மிங் (218), இந்தியாவின் தோனி (200).

* சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அடுத்தப்படியாக சர்வதேசப் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றவர் தோனி. இவர் மூன்று வடிவங்களிலும் சேர்த்து 538 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி உள்ளார். 

* மிடில் ஆர்டர் வரிசையில் இறங்கி ஒரு நாள் போட்டியில் 50.50 சராசரி வைத்திருந்த வீரர்களில் தோனியும் ஒருவர். விக்கெட் கீப்பர்களில் இந்த அளவுக்கு சராசரி வைத்திருந்த ஒரே வீரர் தோனி மட்டுமே. 

23/06/2020

தோல்வியும் சூப்பர் ஸ்டாராக்கும்!


கொரோனா பீதிக்கு மத்தியில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் (34) தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டது, கடந்த வாரம் பேசுபொருளானது. ‘எம்.எஸ்.தோனி-அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தின் மூலம் பாலிவுட் முதல் கிரிக்கெட் ரசிகர்கள்வரை அனைவருடைய மனதிலும் இடம்பிடித்தவர் சுஷாந்த் சிங். ஆனால், அவருடைய பட வாய்ப்புகளை பாலிவுட் மூத்த நடிகர்களும் வாரிசு நடிகர்களும் தட்டிப் பறித்ததாகவும், அதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் சிங் வாழ்க்கையை முடித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் காரணம் உண்மையென்றால் அது துரதிர்ஷ்டம். பல முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு, அதன்பின் தங்கள் துறையில் ஜொலித்து சூப்பர்ஸ்டாராக வலம்வந்தவர்கள் நம் கண் முன் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் மர்வன் அட்டப்பட்டு சிறந்த எடுத்துக்காட்டு.

‘டக் அவுட்' புகழ்

1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை இலங்கை அணி வென்ற பிறகு, அந்த அணியின் ஒவ்வொரு வீரரும் புகழ் வெளிச்சம் பெறத் தொடங்கினார்கள். அந்தப் புகழ் வெளிச்சத்தில் ஒருவராக இருந்திருக்க வேண்டியவர் அட்டப்பட்டு. ஆனால், இலங்கை அணி உலகக் கோப்பை வென்ற பிறகு, அந்த அணியில் அறிமுகமான ஜெயவர்த்தனே, சங்கக்கார, தில்சன் ஆகியோருடன் சேர்த்து அறியப்பட்டவராகவே அவர் இருக்கிறார். உண்மையில் அட்டப்பட்டு 1990-ம் ஆண்டே இலங்கை அணியில் அறிமுகமானவர்.

கத்துக்குட்டி அணியாக இலங்கை அறியப்பட்டபோதே தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியவர். அந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு எதிராக சண்டிகரில் விளையாடியதுதான் அவருடைய முதல் போட்டி. அந்தப் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் அட்டப்பட்டு ‘டக் அவுட்’ ஆனார். முதல் சர்வதேசப் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் ‘டக்’ ஆகும் வீரரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அந்தப் போட்டிக்கு பிறகு 21 மாதங்கள் அணியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்.

ஒரு நாள் போட்டியிலும்...

மீண்டும் 1992-ம் ஆண்டு ஆகஸ்டில் ஆஸ்திரேலிய அணி இலங்கை வந்தபோது அட்டப்பட்டுவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், துரதிர்ஷ்டம் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் அட்டப்பட்டு ‘டக் அவுட்’தான். அந்தப் போட்டியில் 181 ரன் என்ற எளிய இலக்கோடு இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது. 133 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று இலங்கை இருந்தபோது, பேட்டிங் செய்ய வந்தார் அட்டப்பட்டு. ஆனால், துரதிர்ஷ்டம் இந்த இன்னிங்ஸிலும் விளையாடியது.

ஒரு ரன் எடுத்த நிலையில் அட்டப்பட்டு அவுட். அதன்பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக 16 ரன்களில் இலங்கை தோற்றுப்போனது. இந்தப் போட்டிக்குப் பிறகு மீண்டும் அணியிலிருந்து அட்டப்பட்டு விலக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அட்டப்பட்டு, 6 போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆனார். டெஸ்ட் போட்டி மட்டுமல்ல, ஒரு நாள் போட்டிகளும் அவருடைய காலை வாரின.

வெளிச்சம் பிறந்தது

ஆனால், அவர் மனம் தளரவில்லை. மீண்டும் உள்ளூர்ப் போட்டிகளில் கவனம் செலுத்தினார். முதல்தரப் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். 23 மாதங்கள் கழித்து 1994-ம் ஆண்டில் அவர் மீது இலங்கை அணியின் பார்வை பட்டது. மீண்டும் ஒரு வாய்ப்பு. இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். ‘பட்டக் காலிலேயே படும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த முறையும் துரதிர்ஷ்டம் அவரை விடவில்லை. அந்த டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் அட்டப்பட்டு ‘டக் அவுட்’. எவ்வளவு நொந்துபோயிருப்பார்?

திறமை கொட்டிக் கிடந்தபோதும் வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் அவரைத் துரத்தியது. அணியிலிருந்து நீக்கப்பட்ட அட்டப்பட்டு, மீண்டும் அணிக்குள் வருவதே பெரும்பாடுதான் என்று நினைக்கப்பட்டது. ஆனால், மனம் தளராமல் உள்ளூர்ப் போட்டிகளில் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்ட அட்டப்பட்டு, 37 மாதங்கள் கழித்து 1997-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாய்ப்பைப் பெற்றார்.

நியூசிலாந்துக்கு எதிராக டூனிடின் நகரில் நடந்த போட்டியில் களமிறங்கினார். பதற்றமும் பயமும் கலந்து களமிறங்கிய அட்டப்பட்டு, இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 25, 22 ரன்களை எடுத்தார். அவர் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் ரணதுங்கா அடுத்தடுத்து வாய்ப்புகளை வழங்கினார். அந்தப் போட்டிக்குப் பிந்தைய 6-வது போட்டியில் தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை இந்தியாவுக்கு எதிராக எடுத்தார். அடுத்த இரு போட்டிகளில் முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்தார்.

மறக்கக்கூடாத கதை

அதன்பின்னர் இலங்கை அணியில் டெஸ்ட், ஒரு நாள் என இரு வடிவங்களிலும் அட்டப்பட்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தவிர்க்க முடியாத வீரரானார்; நம்பிக்கை நட்சத்திரமானார். அதிகபட்சமாக 2004-ம் ஆண்டு இலங்கை அணியின் கேப்டனாக உயர்ந்தார். தொடக்கத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் தோல்விகளையும் அவமானங்களையும் துரதிர்ஷ்டங்களையும் ஒருசேர சந்தித்த அட்டப்பட்டு, இலங்கை அணிக்காக பின்னாளில் 90 டெஸ்ட் போட்டிகள், 268 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி சிறந்த, ஸ்டைலிஷ் கிரிக்கெட் வீரர் என்ற பெயருடன் 2007-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.

வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. தடங்கல்கள் வரும்; சஞ்சலங்கள் வரும். ஆனால், அவற்றிலிருந்து ஒவ்வொரு முறையும் அனுபவம் கிடைக்கும். ஏன் சறுக்கினோம் என்ற அனுபவத்தை நேர்மறையாக அணுகி, விடா முயற்சியுடன் களமிறங்கும்போது வெற்றி ஒரு நாள் நம்மை நோக்கிவரும். 1990-97 வரை 8 ஆண்டுகள் அணியில் இடம் கிடைக்காமல் அல்லாடிய மர்வன் அட்டப்பட்டுவின் வாழ்க்கை நாம் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய நிஜக் கதை!

- இந்து தமிழ்

20/06/2020

சீனாவின் ஐந்து விரல்கள் உத்தி... அத்துமீறல்களின் பின்னணி கதை!


கரோனா பீதிக்கு அப்பால் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படை நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததுதான் தற்போது ஹாட் டாபிக். இதனால், எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. சீனப் பொருட்கள் புறக்கணிப்பு என்ற கோஷங்கள் ஆளும் பாஜகவினரால் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் நாடு கடந்த திபெத்திய தலைவர் லோப்சங் சங், இந்தியாவுக்கு விடுத்த எச்சரிக்கை பொதுவெளியில் கவனம் ஈர்த்துள்ளது. 

“லடாக்கில் சீனா மேற்கொண்ட அத்துமீறல் எதிர்பார்த்ததுதான். சீனாவின் தந்திரங்களில் இதுவும் ஒன்று. இந்தத் தந்திரத்தை ‘திபெத் உத்திகளின் ஐந்து விரல்கள்’ (Five Fingers of Tibet strategy) என்று கூறுவார்கள். திபெத்துக்கு எதிராக சீனா தலைவர் மாசே துங் இதைத்தான் பயன்படுத்தினார். இதைச் சொல்லித்தான் சீனர்கள் திபெத்தை ஆக்கிரமித்தார்கள். திபெத்தை முழுமையாக சீனா ஆக்கிரமித்த பிறகு அதன் தேசிய தலைவர் மாசே துங் ஒரு வாக்கியத்தைச் சொன்னார். ‘திபெத் என்பது சீனாவின் பாதம். அதை கைப்பற்றிவிட்டோம். இனி பாதத்தின் ஐந்து விரல்களை கைப்பற்ற வேண்டும்.’ என்று சொன்னார். திபெத்தின் ஐந்து விரல்கள் என்பது லடாக், நேபாளம், பூடான், சிக்கிம், அருணாசலப்பிரதேசம் ஆகிய ஐந்து பகுதிகள்தான்.” - லோப்சங் சங் விடுத்த எச்சரிக்கை இதுதான்.

சீனாவின் இந்த ‘ஐந்து விரல் உத்தி’ என்பது என்ன? அப்போது 1940. சீனப் புரட்சியின் மூலம் மாசேதுங் தேசிய தலைவராக உயர்ந்தார். அப்போதிருந்தே ‘ஐந்து விரல்’ உத்தியைப் பற்றி பேசிவந்திருக்கிறார் மாசேதுங். திபெத்தும் அதன் அருகிலுள்ள பகுதிகளும் ஒரு காலத்தில் சீனப் பேரரசின் ஓர் அங்கமாக இருந்தன என்று எப்போதும் நம்பினார் மாசேதுங். அதை அடைய வேண்டும் என்றும் விரும்பினார். 1950-களில் இருந்தே சீனா அண்டை நாடுகளின் பல பகுதிகளின் மீது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது. காலங்களும் அந்நாட்டின் தலைவர்களும் மாறியபோதும், தனது அதிகாரத்தை இப்போது வரை விடாமல் பயன்படுத்த முயற்சி செய்துவருகிறது சீனா.

ஒரு காலத்தில் ஆசியாவில் சீனாவின் அண்டை நாடான மங்கோலியாதான் மிகப் பெரிய பேரரசாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் திபெத் சீனாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை என்று வரலாற்று சான்றுகளும் உண்டு. ஆனால், சீனாவின் பேரரசில் திபெத் இருந்தது என்று சீனா விடாப்பிடியாக நம்பியது. சீனத் தலைவர் மாசேதுங் திபெத்தை சீனாவின் பாதம் என்றும், அந்தப் பாதத்தின் ஐந்து விரல்கள் லடாக், சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம், நேபாளம், பூடான் என்றும் வர்ணித்தார்.

சீனா தங்கள் பாதம் என்று வர்ணித்த திபெத்தில் சீனப் படைகள் 1959-ல் நுழைந்து, அந்தப் பகுதியை முழுமையாக கைப்பறியது. சீனாவின் அந்த அத்துமீறலை
லோப்சங் சங்
அப்போது உலக நாடுகள் கண்டுகொள்ளவில்லை. சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.   திபெத்தின் சீனப் படைகளின் இந்த ஆக்கிரமிப்பை அமைதியை விரும்பும் நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள் கூட ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்பவில்லை. அன்று அரசியல் அடைக்கலம் கோரிய திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவுக்கு இந்தியா தஞ்சம் அளித்தது. அவர் தனது மிகப் பெரும் ஆதரவாளர்களுடன் இந்தியாவுக்குள் வந்தார். அன்று திபெத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்ததைத் தடுத்திருந்தால், இன்று மற்ற பகுதிகளில் அதன் உரிமைக் கோரலை தடுத்திருக்க முடியும். 

ஐந்தாம் விரல் சிக்கிம்

இன்று இந்தியாவின் ஒரு மாநிலமாக உள்ள சிக்கிம், 1975-ம் ஆண்டுக்கு முன்புவரை தனி நாடு போல இருந்தது. சிக்கிமில் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி 1975-ல் சிக்கிம் இந்தியாவின் ஓர் அங்கமானது. சிக்கிம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அறிவிக்கப்பட்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது முதலே சிக்கிமில் ஊடுருவல் அல்லது எல்லையில் நடமாட்டம் மேற்கொள்வதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறது சீனா.
 
நான்காம் விரல் அருணாச்சல்

வடகிழக்கு எல்லைப்புற முகமை (North East Frontier Agency) என்று அழைக்கப்பட்ட வடகிழக்கு எல்லைப்புற பிரதேசங்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் ஒன்றியப் பகுதியாகவும், சுதந்திர இந்தியாவில் மாநிலங்களாகவும் மாறின. ஆனால், அருணாச்சலப்பிரதேசம் தங்களுடைய பகுதி என்று சீனா கூறத் தொடங்கியது. 1962-ம் ஆண்டில் இந்திய - சீனா இடையே போர் நடந்தபோது அருணாச்சலப்பிரதேசத்தில் மிக ஆழமாக ஊடுருவியது சீனா. அருணாச்சலப்பிரதேசத்தில் பல பகுதிகளை சீனா கைப்பற்றியது. இன்று வரையிலும் அருணாச்சலப்பிரதேசத்தில் தங்களுடைய ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது.

அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய  தலைவர்கள் செல்லும்போதெல்லாம், அதிகாரப்பூர்வமாக எதிப்பு தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது சீனா. அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ளவர்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதை சீனா ஏற்கவில்லை. அருணாச்சல்பிரதேசத்திலிருந்து சீனா செல்வோருக்கு விசா வழங்குவதில்லை. அருணாச்சலப்பிரதேசம் அருகே சீனப் படைகள் முகாமிட்டு தொந்தரவு தருவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது சீனா.

மூன்றாம் விரல் நேபாளம்

சீனா குறிப்பிடும் மூன்றாவது விரல் நேபாளம். ஒரு காலத்தில் நேபாளத்தின் பரம எதிரியாக சீனா இருந்தது. திபெத்தை சீனா கைப்பற்றியது முதலே, அது தங்களுக்கு ஏற்பட்ட காயமாக நேபாளம் நினைத்தது. நீண்ட காலமாகவே நேபாளத்தின் பல பகுதிகளை சீனா உரிமை கோரிவருகிறது. அப்போது முதலே நேபாளம் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்தியாவின் படைகள் நேபாளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சீனாவின் அச்சத்தி போக்கிவந்திருக்கின்றன. 

கடந்த 70 ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக நேபாளத்துக்கு இந்த உதவியை செய்துவருகிறது இந்தியா. ஆனால், இன்று நேபாளத்தின் எதிரி இந்தியா என்று அங்கே கட்டமைக்கப்படுகின்றன. இந்தியாவின் மூன்று பகுதிகளை  தங்கள் வரைப்படத்தில் இணைத்து சீண்டிப் பார்க்கிறது நேபாளம். இதில் சீனாவின் ஐந்து விரல் உத்தியை  நேபாளம் மறந்துவிட்டதுதான்  நகைமுரண்.

இரண்டாம் விரல் பூடான்

கிழக்கு இந்தியாவின் முடிவில் உள்ள ஓர் அழகிய நாடு பூடான். இந்த நாட்டின் மீதும் சீனா தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயன்றுவருகிறது. நீண்ட காலமாகவே பூடனை சீனா உரிமை கொண்டாடிவருகிறது. இதுவும் சீனாவின் ஐந்து விரல்கள் உத்திகளில் ஒன்றுதான். 
சீனாவும் அண்டை நாடுகளும்

இந்தியாவுக்கு பூடானுக்கும் ராணுவ ஒப்பந்தம் ஒன்று உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி பூடானுக்கு இந்தியா ஆதரவு வழங்கிவருகிறது. பூடானின் பாதுகாப்பில் இந்தியப் படைகள் பங்காற்றிவருகின்றன. நீண்ட காலமாகவே சிறிய நாடான பூடானில் கவர்ச்சிக்கரமான அன்னிய முதலீடுகளை வழங்கி அந்நாட்டை கவரும் முயற்சியில் சீனா ஈடுபட்டுவருகிறது. ஆனால், சீனாவின் இந்த உதவிகளை பூடான் இது நாள் வரை ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது.  

முதல் விரல் லடாக்

சீனாவின் முதலாவது விரல் லடாக். சீனாவால் அதிகம் உற்று நோக்கப்படும் பகுதி இது. கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பகுதிகளில் அதிகளவில் ஊடுருவல்களை சீனா நிகழ்த்தி உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளை இந்தப் பிராந்தியத்தில் சீனா ஆக்கிரமித்துள்ளது. சீனா ஆக்கிரமிப்பு செய்யும் வரை, அக்சாய்சின் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், இன்று அக்சாய்சின்னில் உட்கார்ந்துகொண்டு கல்வான் பள்ளத்தாக்கு வரை முன்னேறி வந்துள்ளது சீனா. கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்கு சொந்தம் என்று பகிரங்கமாக உரிமை கொண்டாடவும் செய்கிறது சீனா.

அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், லடாக், நேபாளம், பூடான் ஆகிய பகுதிகளில் சீனா எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்வும் இதன் அடிப்படையில்தான்.

- இந்து தமிழ் ஆன்லைன்
 

17/06/2020

1999: அதிர்ஷ்ட ஆஸ்திரேலியா; துரதிர்ஷ்ட தென் ஆப்பிரிக்கா!


உலகக் கோப்பை கிரிக்கெட் நாக் அவுட் போட்டிகளில் எத்தனையோ மறக்க முடியாத ‘கிளாஸிக்’ ஆட்டங்கள் இருந்தாலும், 2019 உலகக் கோப்பை இறுதியாட்டத்துக்கு முன்புவரை மகுடம் வைத்த ஆட்டம் என்றால், அது 1999-ல் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டிதான். மூட்டை முடிச்சுகளுடன் கிளம்ப வேண்டிய ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கும், கம்பீரமாக இறுதிப் போட்டிக்கு சென்றிருக்க வேண்டிய  தென் ஆப்பிரிக்க அணி தலை கவிழ்ந்து ஊருக்குக் கிளம்பியதும் நடந்த ஆட்டம் அது.

1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் வலுவான அணி, கோப்பை வெல்லும் அணி எனக் கணிக்கப்பட்டது தென் ஆப்பிரிக்கா. லீக் போட்டிகள், சூப்பர் சிக்ஸ் போட்டிகளைக் கடந்து அரையிறுதிக்கு வேகமாக முன்னேறியது தென் ஆப்பிரிக்கா. சூப்பர் சிக்ஸ் சுற்றில் கடைசி ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய நிலையில், தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது ஆஸ்திரேலியா. அதற்கு முன்பே தென் ஆப்பிரிக்காவுக்கு அரையிறுதி ‘பர்த்’ ரெடியாகிவிட்டது. என்றாலும் ஆஸ்திரேலியாவை வெல்லும் முனைப்போடு களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 272 ரன்களைக் குவித்தது. 

272 என்னும் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா, 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தட்டுத்தடுமாறியது. அப்போது களமிறங்கிய ஆபத்பாந்தவன் ‘கூல் கேப்டன்’ ஸ்டீவ் வா, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 120 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் தன்னுடைய அணி வெல்ல உதவினார். ஸ்டீவ் வா 56 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சை கிப்ஸ் தவறவிட்டார். ரீபிளேயில், அவர் பந்தைப் பிடித்த அடுத்த வினாடியே, அதை தூக்கிப்போட முயற்சித்து, அது கீழே விழும். ஆனால், ஆட்டப் போக்கோடு பார்க்கும்போது கிப்ஸ் அந்த கேட்சை தவறவிட்டது போலவே இருக்கும். கிப்ஸ் செய்த இந்தத் தவறு கடைசியில் அந்த அணி உலகக் கோப்பையிலிருந்தே வெளியேற வைக்கும் என்று அப்போது தென் ஆப்பிரிக்க அணி  நினைத்து பார்த்திருக்காது.

அந்த கேட்சை தவறவிட்டபிறகு, கிப்ஸிடம் ஸ்டீவ் வா இப்படி சொன்னார். “நண்பா.. நீ தவறவிட்டது கேட்ச்சை அல்ல. உலகக் கோப்பையை” என்று. அது உண்மையானது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, அரையிறுதிப் போட்டியில் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியைச் சந்தித்தது. எட்ஸ்பாஸ்டன் நகரில் இதே நாளில் (ஜூன் 17) நடைபெற்ற போட்டியில் அரையிறுதியில் இரு அணிகளும் மல்லுக்கட்டின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 213 ரன்களை மட்டுமே சேர்க்க, எளிதில் வெல்லும் வாய்ப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு இருந்தது. ஆனால், 61 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்த தடுமாறிய தென் ஆப்பிரிக்க அணியின் கிப்ஸ், காலீஸ், ரோட்ஸ், பொல்லாக் ஆகியோர் அமைத்த சிறுசிறு பார்ட்னர்ஷிப் அந்த அணியின் வெற்றி நம்பிக்கையை அதிகரித்தது.

கடைசி கட்டத்தில் அணியை வெற்றி பெற வைக்க வேண்டிய முழு பாரமும் குளூஸ்னர் தலையில் ஏறியது. கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் டேமியன் ஃப்ளெமிங்கை எதிர்கொண்டார் குளூஸ்னர். மறுமுனையில் கடைசி ஆட்டக்காரரான டொனால்ட் நின்றார். குளூஸ்னருக்கு 9 ரன்கள் மிகச் சாதாரணம் என அனைவரும் நினைத்தனர். அந்த உலகக் கோப்பையில் அதிரடி ஆட்டம் காட்டி அவர் நான்கு முறை ஆட்ட நாயகன் விருது வென்று மிரட்டியதால், குளூஸ்னர் அந்த ரன்னை எட்டிவிடுவார் என்று எதிர்பார்த்தனர். அதுபோலவே,முதல் இரு பந்துகளிலும் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து ஸ்கோரைச் சமன் செய்தார் குளூஸ்னர். 4 பந்துகளில் 1 ரன் மட்டுமே தேவை. தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றிவிடும் என ஆஸ்திரேலிய வீரர்களே நம்பத் தொடங்கிய நேரத்தில் அதிசயம் நிகழ்ந்தது.

3-வது பந்தில் ரன் இல்லை. 4-வது பந்தை அடித்துவிட்டு, வெற்றி ரன்னுக்காக குளூஸ்னர் ஓடினார். டொனால்டோ, அவரைப் பார்க்காமல் பந்தை பார்த்தபடி இருந்தார். குளூஸ்னர் ஓடிவந்துவிட்டதைக் தாமதமாகவே பார்த்த டொனால்ட், சுதாரித்து ஓடத் தொடங்கினார். வழியில் தடுமாறி டொனால்ட் மட்டையைக் கீழே போட்டு தடுமாறினார். அந்த இடைப்பட்ட நேரத்துக்குள் மார்க் வா, பந்தை பவுலரிடம் வீசினார். பவுலர் பதற்றப்படாமல் கீப்பர் கில்கிறிஸ்ட்டிடம் வேகமாக அதை உருட்டி விட்டார். அதைப் பிடித்து டொனால்ட்டை ரன்-அவுட் செய்தார் கில்கிறிஸ்ட். ஆட்டம் சமனில் முடிந்தது. ஏற்கனவே சூப்பர் சிக்ஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்ததால், அதன் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா ‘சர்ப்ரை’ ஸாக நுழைந்தது. தென் ஆப்பிரிக்க ஊருக்குக் கிளம்பியது. 

தொடக்கத்திலிருந்து அற்புதமாக விளையாடி, கடைசியில் நம்ப முடியாத வகையில் சொதப்பி ‘சோக்கர்ஸ்’ என்னும் அடைமொழியோடு தென் ஆப்பிரிக்கா வெளியேறிய நாள் இன்று. 21 ஆண்டுகள் கடந்துவிட்ட அந்தப் போட்டியை இப்போது யூடியூபில் பார்க்க நேர்ந்தாலும், அதே பரபரப்பும் பதற்றமும் தொற்றிக்கொள்வதை கிரிக்கெட் ரசிகர்கள் உணர்வார்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இந்த உலகக் கோப்பை நாக் அவுட் போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் பசையாக ஒட்டியிருக்கும்.

01/06/2020

சாக்‌ஷி எனும் சாகசம்!


ஒலிம்பிக் போட்டி நடைபெறும்போது தேசமே பதக்கத்துக்காகக் காத்திருக் கையில் கிடைக்கும் பதக்கத்துக்கு ஈடு இணையே இல்லை. ரியோ ஒலிம்பிக் போட்டி முடிவடைய மூன்று தினங்களுக்கு முன், அந்தப் பெண் வென்ற வெண்கலப் பதக்கமும் அப்படியானதுதான். அவர் வென்ற வெண்கலப் பதக்கம் இந்தியாவைப் பதக்கப் பட்டியலில் சேர்த்தது. அதோடு ஒலிம்பிக்கில் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்த அந்தப் பெண், சாக்‌ஷி மாலிக்.

ஹரியாணாவில் உள்ள ரோட்டக் என்ற நகரம்தான் சாக்‌ஷியின் சொந்த ஊர். அவருடைய தாத்தா, மல்யுத்த வீரர். சிறு வயதிலிருந்தே தனது மல்யுத்தப் பராக்கிரமங்களை பேத்தி சாக்‌ஷியிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் சொன்ன மல்யுத்தக் கதைகளால் சாக்‌ஷிக்கு அந்த விளையாட்டு மீது ஆர்வம் பிறந்தது. குஸ்தி, சண்டை என்றாலே ஒதுங்கிச் செல்லும் சிறுமிகளுக்கு மத்தியில் தாத்தா வழியில் மல்யுத்த விளையாட்டில் குதித்தார். மல்யுத்த பயிற்சியில் ஈடுபட்டபோது சாக்‌ஷிக்கு 12 வயது. “மல்யுத்த விளையாட்டைத் தேர்வுசெய்தது என் வாழ்வில் நான் எடுத்த மிகச் சிறந்த முடிவு” என்று பின்னாளில் சாக்‌ஷி குறிப்பிடும் அளவுக்கு அந்த விளையாட்டில் புகழ்பெற்றார்.

தடைகள் தாண்டி

மல்யுத்த விளையாட்டில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில், வீட்டில் அதற்குப் பெரிய அளவில் ஆதரவில்லை. மல்யுத்த விளையாட்டில் ஈடுபட அவருக்குப் பலவிதத் தடைகள் ஏற்பட்டன. அவற்றைத் தாண்டித்தான் சாக்‌ஷியால் பயிற்சியில் ஈடுபட முடிந்தது. தன் மீது அவருக்கு இருந்த அபாரமான நம்பிக்கையால், விடாமுயற்சியுடன் பயிற்சிசெய்து அந்த விளையாட்டில் முன்னேறிவந்தார். மாநில அளவிலும் தேசிய அளவிலும் விளையாடத் தொடங்கி பிறகு, அவர் பெற்ற வெற்றிகள், சர்வதேசப் போட்டிகளில் அவருக்குச் சிவப்புக் கம்பளத்தை விரித்துக்கொடுத்தன.

மறக்க முடியாத ஆண்டு

2010-ல் சர்வதேச அளவிலான போட்டிகளில் சாக்‌ஷி பங்கேற்கத் தொடங்கினார். ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற சாக்‌ஷி, 58 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்று கவனம் ஈர்த்தார். முதல் சர்வதேசத் தொடரையே அமர்க்களமாகத் தொடங்கிய சாக்‌ஷியின் பக்கம் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வெற்றிக் காற்று வீசியது. 2014-ல் அமெரிக்காவில் நடந்த சர்வதேச மல்யுத்தத் தொடரில் 60 கிலோ எடைப் பிரிவில் முதன் முறையாகத் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

அதே ஆண்டில் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் நைஜீரிய வீராங்கனையை வீழ்த்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். 2014-ல் தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார். ஒரே ஆண்டில் மூன்று சர்வதேசத் தொடர்களில் சாக்‌ஷி பெற்ற வெற்றி, அவரது ஒலிம்பிக் கனவை அதிகப்படுத்தியது.

ஒலிம்பிக் வாய்ப்பு

ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக 2015-ல் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி, பயிற்சியாக அமைந்தது. அந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று திரும்பினாலும், ஒலிம்பிக் போட்டிக்கு முழுமையாகத் தயாராக அது உதவியது. சாக்‌ஷி மாலிக் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறவில்லை. 2016 தொடக்கத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றுதான் ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற்றார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றபோது, யோகேஸ்வர் தத், வினேஷ் போகத் போன்ற நட்சத்திர வீரர், வீராங்கனைகள் மீதுதான் எல்லோருடைய கவனமும் குவிந்திருந்தது. ஆனால், இவர்கள் யாரும் பெரிதாகச் சோபிக்கவில்லை.

ஒலிம்பிக் பதக்கம்

மாறாக, மல்யுத்தப் போட்டிகளில் சாக்‌ஷி மாலிக் முன்னேறிவந்தார். காலிறுதிப் போட்டியில் சாக்‌ஷி மாலிக், ரஷ்யாவின் வெலெரியா கோப்லோவாவிடம் தோல்வியடைந்தார். வெலெரியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதால் ‘ரெபிசேஜ்’ சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு சாக்‌ஷிக்குக் கிடைத்தது.

இந்தச் சுற்றில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்குத் தகுதி பெற்றார். அந்தப் போட்டியில் கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் சாக்‌ஷி. கடைசிவரை போராடித்தான் பதக்கம் வென்றார். 2016-ல் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பெற சாக்‌ஷி வென்ற வெண்கலப் பதக்கம் உதவியது. இதன் பிறகுதான் பாட்மிண்டனில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 
இதற்கு முன்னர் பளு தூக்குதலில் கர்ணம் மல்லேஷ்வரி, குத்துச்சண்டையில் மேரிகோம், பாட்மிண்டனில் சாய்னா நேவால் என மூன்று பெண்கள் மட்டுமே ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருந்தனர். அந்தப் பட்டியலில் சாக்‌ஷியும் சேர்ந்தார்.

மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் சாக்‌ஷிக்குக் கிடைத்தது. இதற்கு முன்பு ஜே.டி.ஜாதவ், யோகேஷ்வர் தத், சுஷில் குமார் ஆகியோர் மட்டுமே மல்யுத்தத்தில் பதக்கம் வென்றிருந்தனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு, தனது 12 ஆண்டு காலக் கனவு நனவானதாக சாக்‌ஷி குறிப்பிட்டார். சாக்‌ஷி பெற்ற வெண்கலம் அவரை ஒரே நாளில் தேசத்தின் நாயகியாக்கியது. ஆனால், அதற்காகக் கடின உழைப்பு, விடா முயற்சி, எப்போதும் மனம் தளராதிருப்பது எனப் பல பாடங்களை அவர் பயின்றார். அந்தப் பாடங்களே சாக்‌ஷிக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல உறுதுணையாக இருந்தன. சாக்‌ஷியின் ஒலிம்பிக் வெற்றி அவருக்கு மட்டுமல்ல, இந்திய மல்யுத்தத்துக்கும் புதிய வாசலைத் திறந்துவைத்தது.

மல்லுக்கட்டி மோதும் இந்த விளையாட்டை நோக்கி இளம் பெண்கள் வரத் தொடங்கியிருக்கிறார்கள். அன்று தாத்தாவின் மல்யுத்தக் கதைகளைக் கேட்டு வளர்ந்த சாக்‌ஷியைப் போல, இன்று சாக்‌ஷியின் வெற்றிக் கதையைக் கேட்டு, வட இந்திய கிராமங்களில்கூட மல்யுத்த விளையாட்டில் இளம் பெண்கள் காலடி எடுத்துவைத்தவண்ணம் உள்ளார்கள். மல்யுத்தத்தில் பிரம்மாண்ட சாதனையைப் படைத்த சாக்‌ஷியைப் பெருமைப்படுத்தும் கவுரவிக்கும் வகையில், அவர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற 2016-ம் ஆண்டிலேயே ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மத்திய அரசு அவருக்கு வழங்கிக் கவுரவித்தது. 2017-ல் இந்தியாவின் நான்காவது பெரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் மத்திய அரசு வழங்கியது.

2017-ல் மல்யுத்த வீரர் சத்யவர்த்தை மணந்துகொண்ட பிறகு, இருவரும் சேர்ந்து மல்யுத்தப் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்கள். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கை மனத்தில் வைத்து சாக்‌ஷி உழைக்கத் தொடங்கியிருக்கிறார் வெற்றிக்கொடியைப் பறக்கவிடும் கனவோடு!

இந்து தமிழ்,  03-02-2019

21/05/2020

எம்.பி. பதவிக்காக உதயநிதி ஸ்டாலினிடம் கெஞ்சினேன்...வி.பி.துரைசாமி ஓபன் டாக்!

திமுக துணைப் பொதுச்செயலாளர்; முன்னாள் துணை சபாநாயகர் என்ற பெருமையோடு திமுக மேடைகளை அலங்கரித்துவருபவர் வி.பி.துரைசாமி. திடீரென தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை அவர் சந்தித்ததன் மூலம், பாஜகவுக்கு துரைசாமி தாவப்போகிறார்; திமுகவில் எம்.பி. பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கிறார் என அவரைச் சுற்றி அரசியல் வட்டாரத்தில் பல தகவல்கள் உலா வரத் தொடங்கிவிட்டன. இந்த வேளையில் வி.பி.துரைசாமி தொலைபேசி வாயிலாகப் பிரத்யேகமாக  நம்மிடம் பேசினார். 

தமிழக பாஜக  தலைவர் முருகனை திடீரென சந்தித்ததன் பின்னணியில் நீங்கள் பாஜகவுக்கு போவதாக சொல்லப்படுகிறதே?

நாங்க ரெண்டு பேரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவங்க. ஒரே ஊரைச் சேர்ந்தவங்க. அந்த வகையில் அவருக்கு வாழ்த்து சொல்லத்தான் சந்திச்சேன். கட்சியில் உள்ள ரெட்டியார், ரெட்டியார் மாநாட்டுக்கு போகலாம். ஒரு வன்னியர், வன்னியர் அமைச்சரைப் பார்க்கலாம். முக்குலத்தோர், கவுண்டரைப் பார்க்கலாம். நாங்க மட்டும் பார்க்கக்கூடாதா? இது அரசியல் ரீதியிலான சந்திப்பே இல்லை. முருகன் என்னுடைய சொந்தக்காரர். பிராமணர் கட்சியில் அருந்ததியருக்கு தலைவர் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதை வாழ்த்தப்போனால் என்ன தப்பு? 

சந்திப்புக்குப் பிறகு உங்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டீர்களே?

அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. தேவையற்ற அழைப்புகள் நிறைய வருகின்றன. அதைத் தவிர்க்கத்தான் சுவிட்ச் ஆப் செய்தேன். 

முருகன் தலைவராக பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது ஏன் சந்திக்க வேண்டும்?

ஏனென்றால், கரோனா வைரஸ்தான் காரணம். வீட்டு கேட்டைத் தாண்டி எங்கும் நான் போகவில்லை. கடைசியாக மார்ச் 20ம் தேதி வெளியில் வந்தேன். அதன் பிறகு எங்கும் சொல்லவில்லை. ஆனால், அம்பேத்கார் பிறந்த நாள், சின்னமலை பிறந்த நாள், மே தினம் நிகழ்ச்சிகளுக்கு திமுகவில் என்னை அழைத்தார்கள். நானும் சென்றுவந்தேன். 

உங்களுக்கு எம்.பி. பதவி கிடைக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறதே..?

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. தொடர்ந்து விடாமல் நான் கட்சி அலுவலகத்துக்கு வந்துகொண்டுதான் இருந்தேன். மார்ச் மாதம் வரை அலுவலகத்துக்கு வந்திருக்கிறேன். கட்சி அலுவலகத்தில் வருகைப் பதிவேட்டைப் பார்த்தால் அது தெரியும்.

பாஜக தலைவருடனான சந்திப்புக்குப் பிறகு திமுகவில் யாரும் உங்களை அணுகினார்களா?

யாரும் என்னை அணுகவில்லை. நான் என்ன முடிவெடுத்தாலும் அவரிடம் பேச வேண்டாம் என்று அவரு (ஸ்டாலின்) சொன்னதாக வாட்ஸ்அப்பில்தான் சில செய்திகளைப் பார்த்தேன்.

முரசொலி நில விவகாரத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் மூலம் திமுகவுக்குக் குடைச்சல் கொடுக்கப்பட்டது.. (கேள்வியை முடிப்பதற்குள் பேசுகிறார்)

அதுக்கும் இந்தச் சந்திப்புக்கும் என்ன தொடர்பு? முதலில் தலைவர் கோபத்தில் இருக்கிறார் என்பதே எனக்கு தெரியாது. முரசொலி விவகாரத்தில் சட்டத் துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி மூலம் வெற்றி பெறலாமே.. அது வேற; முரசொலியைப் பார்த்துதானே தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டோம்.
 
உங்களைச் சுற்றி பல தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. இப்போதைய நிலையில் என்ன செய்வதாக உத்தேசம்?

இப்போதைக்கு நான் அமைதியாக இருக்கப்போகிறேன். என் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.   

மாற்று முகாமுக்கு செல்வீர்களா?

இல்லை... இல்லை... அவர்களுடைய நடவடிக்கைகளைப் பொறுத்துதான் என்னுடைய முடிவு இருக்கும். நான் யதார்த்தமாகத்தான் போய் சந்தித்தேன். ஆனால், அவர் (ஸ்டாலின்) அருகில் உள்ள அரசியல் விற்பன்னர்கள் அவரிடம் என்ன சொல்கிறார்களோ, அதன்படி அவர்  நடப்பார்.

ஸ்டாலின் அருகில் உள்ளவர்கள், அவரைக் கெடுக்கிறார்கள் என்கிறீர்களா?

(ஆங்கிலத்தில் சொல்கிறார்: He is indiviually good; but collectively bad) அவரு தனிப்பட்ட முறையில் நல்லவர்; ஆனால், ஒரு கூட்டாக அவர் மோசம். என் மீது மரியாதை, அன்பு, பாசம் உள்ளவர்தான் தலைவர். அதெல்லாம் மறுப்பதற்கில்லை. அதேபோல என் மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டு வந்தது உண்டா? நாமக்கல் மாவட்டத்தில் திடீரென்று ஒருத்தரை நீக்குவார். இன்னொருத்தவரை போடுவார்; இவரை மாற்றலாமா என்றுகூட ஒரு வார்த்தை கேட்கமாட்டார். ஆனாலும், இதுவரை மாவட்ட நிர்வாகமாக இருந்தாலும் சரி; மாநில நிர்வாகமாக இருந்தாலும் சரி; கட்சி நிர்வாகத்தில் நான் தலையிட்டதே இல்லை.  இவருக்குப் பதவி கொடுங்க; இன்னாரை தூக்குங்கள் என்று நான் கேட்டதேயில்லை. 

 நாமக்கல் மாவட்ட செயலாளர்கள் மாற்றங்களில் உங்களுக்கு அதிருப்தி இருந்ததாக கூறப்படுகிறதே.

அது அவுங்க கட்சி. அதில் நான் ஒரு சர்வன்ட். என்றபோதும் சிலரை மாற்றும்போது என்னிடம் ஒரு வார்த்தைக்கூட கேட்பதில்லையே என்று சிறு வருத்தம் இருந்தது உண்மைதான். அது கட்சிக்கு வெளியே கூட எல்லோருக்கும்  தெரியும். இதே விஷயத்தில் கே.என். நேரு, ஐ.பெரியசாமி, துரைமுருகனை மீறி நடப்பார்களா?

இந்த விவகாரத்துக்குப் பிறகு நீங்கள் தலைவர் மு.க. ஸ்டாலினை தொடர்புகொள்ள முயற்சி செய்தீர்களா?

இல்லைங்க. செய்திகளில்தான் சில தகவல்களைப் பார்க்கிறேன். நோட்டீஸ் அனுப்பி என்னிடம் விளக்கம் கேட்க தலைவர் முடிவு செய்திருப்பதாகப் பார்த்தேன். இன்னும் சில செய்திகளில், நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல், கட்சியிலிருந்து நீக்கலாம் என்று அவர் சொன்னதாகவும் செய்திகளைப் பார்த்தேன்.

அதுபோல நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

அப்படியெல்லாம் சொல்கிறார்கள். அப்படியே நடவடிக்கை எடுத்தாலும் நான் என்ன செய்ய முடியும்?

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், இந்தச் சர்ச்சை எழுந்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கலைஞர்தான் எனக்குக் கடவுள். கட்சியில் என்னுடைய விசுவாசம் எல்லோருக்கும்  தெரியும். நான் எம்.பி. பதவியை தூக்கி எறிந்துவிட்டு கட்சிக்கு வந்தவன். என்னை நம்பி வந்தவனுக்குதான் சீட்டு கொடுப்பேன் என்று எனக்கு கலைஞர் சீட்டு கொடுத்திருக்கிறார். அந்த அளவுக்கு அவரிடம் நான் விசுவசமாகவும் நம்பிக்கையுள்ளவனகவும் இருந்திருக்கிறேன். இங்கே ஒரு விஷயத்தைக் கேட்க விரும்புகிறேன். இதுவரை எந்த முடிவை துரைசாமியை வைத்துக்கொண்டு எடுத்தார்கள். அதை துரைசாமி வெளியே சொன்னான் என்று யாராவது என்னை சொல்ல முடியுமா? எந்த நல்ல முடிவாக இருந்தாலும் சரி, எந்த கெட்ட முடிவாக இருந்தாலும் சரி, அதெல்லாம் வீட்டில்தான் எடுக்கப்பட்டது. அப்போதெல்லாம் என்னை யாரும் வீட்டுக்கு அழைத்ததில்லை.

உதயநிதியை இளைஞர் அணி தலைவராக நியமித்தபோது வரவேற்றிருந்தீர்களே..

வரவேற்றது மட்டும் இல்லைங்க.. இந்த எம்.பி. பதவிக்காக வயது வித்தியாசம் பார்க்காமல் உதயநிதியை நேரில் சந்தித்து கெஞ்சினேன். அது தப்பு இல்லை. ஏனென்றால், கட்சி அவுங்களுடையது.

 திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ப. தனபால் போல சபாநாகயராகும் வாய்ப்பு உங்களுக்கு இருந்ததே..?

எனக்கு யார் சீட்டு கொடுக்கப்போகிறார்கள். அப்படியே கொடுத்தாலும் கேட்ட தொகுதி கிடைக்காது. வெற்றி பெற்றாலும் அமைச்சர் பதவியெல்லாம் கிடைக்காது. சபாநாயகர் பதவிக்காக எனக்கு வெற்றிலையில் 10 ரூபாய் வைத்து கொடுத்தாலும் எனக்கு வேண்டாம். எனக்கும் கலைஞருக்கும் ஒரு விஷயத்தில் சண்டை வந்தது. கலெக்டரை தாசில்தாரை ஆக்குற மாதிரி, என்னை துணை சபாநாயகர் ஆக்கிட்டீங்களே என்று நான் கேட்டேன். இது எனக்கும் கலைஞருக்கும் மட்டுமே தெரியும். நான் அவரு (ஸ்டாலின்) மேலே மரியாதை வைத்திருக்கிறேன். இந்தப் பதவியெல்லாம் கலைஞர் கொடுத்தது. கலைஞருக்கு விசுவாசமாக இருந்தேன்; இப்போது விசுவாசமாக இல்லையா என்பதுதான் என்னுடைய ஒரே கேள்வி!

21-05-2020 இந்து தமிழ் இணையத்தில் எழுதிய பிரத்யேக நேர்க்காணலின் முழுவடிவம்.

மறக்க முடியுமா..? சென்னை சேப்பாக்கில் ருத்ரதாண்டவம் ஆடிய சயீத் அன்வர்!




சென்னை சேப்பாக்கம்  எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் என்றால், ஒவ்வொரு இந்தியருக்கும் ஒவ்வொருவிதமான நினைவலைகள் காலச்சக்கரமாக சுழலும். 1983-ல் வெஸ்ட்இண்டீஸுக்கு எதிரான் டெஸ்ட்டில் கவாஸ்கர் விளாசிய 236 ரன் (நாட் அவுட்), 1986-ல் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் டை; 1988-ல் வெஸ்ட்இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களில் நரேந்திர ஹிர்வானி தன் மந்திரச் சுழலில் வீழ்த்திய 16 விக்கெட்டுகள்; 1999-ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி விரட்டலில் சச்சின் எடுத்த 136 ரன்கள், 2008-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் சேவாக் அடித்த மறக்க முடியாத 319 ரன்கள்; 2016-ல் இங்கிலாந்துக்கு எதிராக கருண் நாயர் சேர்த்த 303 ரன்கள் என எத்தனையோ நினைவலைகளை வந்து செல்லும்.

அதுவே, சென்னையில் ஒரு நாள் போட்டி என்றால், ஒரே ஒரு மறக்க முடியாத இன்னிங்ஸ் எல்லார் மனதிலும் நினைவாக எட்டிப் பார்க்கும். அது, 1997-ம் ஆண்டில் சுதந்திர தினக் கோப்பைக்கான போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 194 ரன்கள் விளாசியதுதான். ஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை அரங்கேற காரணமாக இருந்த அந்த இன்னிங்ஸ் நிகழ்ந்த நாள் இன்று (21-05-1997).    

1980-90-களில் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு வீரரின் உச்சபட்ச ரன் என்றால், வெஸ்ட்இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ஸ் 1984-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த 189(நாட் அவுட்) ரன் மலைப்பை உண்டாக்கும். 1996-ல் தென்னாப்பிரிக்க வீரர் கேரி கிரிஸ்டன் 188 ரன்கள் எடுத்து விவியன் ரிச்சர்ஸின் சாதனையை வீழ்த்த முடியாமல் ஒரு ரன்னில் தவறவிட்டார். அதற்கு அடுத்த ஆண்டே விவியன் ரிச்சர்ஸின் சாதனையை உடைத்ததோடு மட்டுமல்லாமல், ஒரு நாள் கிரிக்கெட்டில் முதன் முறையாக 190 ரன்களைக் கடந்த வீரர் என்ற மைல்கல் சாதனையும் நிகழ்ந்தது. 1997-ல் வெயில் கொளுத்தும் கோடையான மே 21 அன்று சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சுதந்திர தினக் கோப்பைக்கான லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

அப்போது சச்சின் டெண்டுல்கர்தான் இந்திய அணியின் கேப்டன். பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரமீஸ் ராஜா. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் ரமீஸ் ராஜா. தொடக்க ஆட்டக்காரராக சயீத் அன்வரும் இளம் வீரரன ஷாகித் அப்ரிடியும் களமிறங்கினர். அப்ரிடி விரைவாக அவுட்டாகிவிட, ரமீஸ் ராஜா, இஜாஸ் அகமது, இன்சமாம் உல் ஹக் ஆகியோர் அன்வருடன் சுமாரான பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அவர்கள் எல்லோரும் சொற்ப ரன்களையே எடுக்க, தனி ஒருவனாக சயீத் அன்வர் மட்டும் சேப்பாக்கில் ருத்ரதாண்டவம் ஆடினார். வெங்கடேஷ் பிரசாத், அபய் குருவில்லா, கும்பளே, சுனில் ஜோஸி, ராபின் சிங், சச்சின்  டெண்டுல்கர் என பலருடைய பந்துவீச்சுகளையும் நொறுக்கினார் சயீத் அன்வர். 

போட்டி தொடங்கியது முதலே அன்வரின் அதிரடி ஆட்டத்தால் சென்னை ரசிகர்கள் வழக்கத்துக்கு மாறாக மயான அமைதியிலேயே இருக்க வேண்டியிருந்தது. நாலா புறமும் பந்துகள் பறக்க 26-வது ஓவரில் 100 ரன்களை எடுத்த சயீத் அன்வர், அதன்பின்னர் அவருடைய ஆட்டம் ஜெட் வேகம் பிடித்தது. பாகிஸ்தான் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.  அனில் கும்பளேவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை விளாசி 200 ரன்களை நோக்கி வேகமாக முன்னேறினார் சயீத் அன்வர். ரிச்சர்ஸின் 189 ரன் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரின் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து அன்வர் கடந்தபோது சென்னை ரசிகர்கள் வழக்கம்போல டிரேட் மார்க் பாராட்டை அன்வருக்கு வழங்கினார்கள்.

சயீத் அன்வர் 190 ரன்னைக் கடந்த பிறகு 2 ஓவர்கள் முழுமையாக  இருந்தன. எனவே, ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் என்ற புத்தம் புதிய சாதனை சென்னையில் படைக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். சச்சின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விளாசிய சயீத் அன்வர், 4-வது பந்தை ஸ்வீப் ஷாட் மூலம் அடிக்க முயன்றார், பந்து ‘டாப் எட்ஜ்’ ஆகி உயரமாக ‘கல்லி’ திசையில்  மேலே சென்றது. பகலிரவு போட்டி என்பதால், லைட்டுகள் ஒளிரவிடப்பட்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் உயரே சென்ற பந்தை சவுரவ் கங்குலி பிடிக்க முயன்றார். அவர் நிச்சயம் பிடிக்க மாட்டார் என்றே எல்லோரும் நினைத்திருப்பார்கள். ஆனால், பந்தைப் பிடித்து டைவ் அடித்து தலையில் கை வைத்தபடி தரையில் விழுந்தார் கங்குலி. அந்த விநாடி சேப்பாக்கம் அரங்கமே அதிர்ந்தது. கங்குலி பந்தைப் பிடித்ததும் ஒருசில விநாடிகள் அன்வரின் முகத்தில் ஏமாற்றம் தெரிய, அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பெவிலியன் நோக்கி நடக்கத் தொடங்கினார்.

ஆனால், ஒரு புதிய சாதனை அரங்கேற்றிய மகிழ்ச்சியோடு நடைபோட்டுவந்த அன்வரை அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் கைத்தட்டி பாராட்டினார்கள். 146 பந்துகளைச் சந்தித்து 22 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உதவியுடன் 194 ரன்களைச் சேர்த்த அன்வரின் மறக்க முடியாத ஆட்டத்தால், அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு பிறகு சயீத் அன்வரின் ரன் குவிப்பு பற்றி சுவாரசியமான ஒரு தகவல் வெளியானது. சயீத் அன்வர் புதிய உலக சாதனைப் படைத்த அந்தப் போட்டியில் பயன்படுத்திய பேட்டை, சென்னையில் உள்ள ஒரு ஸ்போர்ட்ஸ் ஷாப்பில் அவர் வாங்கியது என்பது தெரிய வந்தது. 

1997-ம் ஆண்டில் முதல் இரட்டை சதம் எடுக்க இருந்த சயீத் அன்வரின் சாதனையைப் பந்துவீச்சு மூலம் தடுத்து நிறுத்திய சச்சின், 2010-ம் ஆண்டில் முதல் இரட்டைச் சதம் அடித்ததும் இங்கே நினைவுக்கூரத்தக்கது.  

19/05/2020

தமிழகத்தின் குட்டிக் கோடம்பாக்கங்கள்!

Cinema cities

ஸ்டூடியோக்களில் மட்டுமே சினிமா என்ற காலம் ஒன்று இருந்தது. அப்போது வெளிப்புறப் படப்பிடிப்புகள் என்பதே அரிது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அசல் உலகத்துக்கு இடம் மாறத் தொடங்கின. அப்போது சென்னையைத் தாண்டி சினிமா நகரங்கள் உருவெடுத்தன. அந்த நகரங்கள் இன்றுவரை சினிமாக்காரர்களின் சொர்க்கப்புரியாகவே இருந்துவருகின்றன.

செட்டு சினிமா 

கனவுலக கதைகளைப் பேசும் சினிமாக்களின் கோயிலாக ஒரு காலத்தில் ஸ்டூடியோக்களே கோலோச்சின. தமிழ் சினிமா மிக அரிதாகவே ஸ்டுடியோக்களை விட்டு வெளியே வந்தது. தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில்கூட பெரும்பாலான படங்கள் ஸ்டுடியோக்களிலேயே எடுக்கப்பட்டன.  ஆறு, குளங்கள், மலைகள், வயல்வெளிகள், நிலவு, சூரியன் என இயற்கைக்காட்சிகள்கூட அந்தக் காலத்தில் அசலானவை அல்ல. பெரும்பாலும் ஸ்டூடியோ செட்டுகள்தான். காடு, மலை, வனாந்திரங்களில் நாயகன் குதிரையில் சாகசம் செல்வதுபோல காட்சிகள் தேவைப்பட்டாலும், சில விநாடிகள் நாயகனின் முகத்தை குளோசப்பில் காட்டுடிவிட்டு டெம்ப்ளேட்டாக காடு, மலையில் குதிரையில் நாயகன் செல்வதுபோலக் காட்டிவிடுவார்கள். சினிமா சாகச காட்சிகள் பெரும்பாலும் ‘டூப்’களாகவே இருந்தன.

குட்டிக் கோடம்பாக்கம் 

1970-களில் மாய பிம்பங்கள் விலகி நிஜ பிம்பங்கள் சினிமாவை ஆக்கிரமிக்கத் தொடங்கின. சினிமாவில் நிழல்களாகக் காட்டப்பட்டுவந்த ஆறுகள், குளங்கள், மலைகள், வயல்வெளிகள், வனாந்திரங்கள், தெருக்கள், வீடுகள், பங்களாக்கள் என அனைத்துமே நிஜமாயின. அப்போது சினிமாவுக்கேற்ற ரசனைமிக்க இடங்களைத் தேடி சினிமாக்காரர்கள் பயணப்பட்டார்கள். சென்னைக்கு வெளியே கோபிச்செட்டிப்பாளையம், பொள்ளாச்சி, காரைக்குடி, ஊட்டி எனப் பல சினிமா நகரங்கள் உருவாகத் தொடங்கின. இவற்றில் கோபிச்செட்டிபாளையமும் பொள்ளாச்சியும் ‘மினி கோலிவுட்’ எனச் சொல்லப்படும் அளவுக்கு நிலைபெற்றன.

தமிழ் சினிமாவில் கிராமிய சூழலில் ஒரு திரைப்படம் உருவாக்கப்படுகிறது என்றால் அதில் பொள்ளாச்சிக்கும் கோபிக்கும் நிச்சயம் இடம் இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள இந்த இரு ஊர்களிலும் அழகான வயல்வெளிகள், நீண்ட வரப்புகள், திரும்பும் இடமெல்லாம் ஓடும் கிளை ஓடைகள், ரம்மியமான ஆறு, பசுமையான புல்வெளிகள், பரவசமூட்டும் மலைகள், அச்சமூட்டும் காடுகள், கிராமக் குடியிருப்புகள், கோயில் குளங்கள், அணைக்கட்டுகள், இருபுறமும் அடர்ந்த மரங்களை கொண்ட குகை போன்ற சாலைகள் என இயற்கை அமைப்புகள் பொள்ளாச்சியும் கோபியும் சினிமா நகரங்களாக உருவாகக்  காரணங்களாக இருந்தன. 
கொடிவேரி
பொள்ளாச்சி சினிமா

எந்தப் பகுதியில் கேமராவை வைத்தாலும், அழகான ஒளிப்பதிவை கொடுக்கும் இடம் எனப் பொள்ளாச்சியைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள் சினிமாக்காரர்கள். அது உண்மைதான். பொள்ளாச்சியில் கேமராவை எந்தக் கோணத்தில் வைத்தாலும் மேற்குத் தொடர்ச்சி மலையை விட்டுவிட்டு படம் பிடிக்கவே முடியாது. மலைகள் மட்டுமல்ல அழகான சமவெளியும் பொள்ளாச்சிக்கு அருகே இருக்கும் அடர்த்தியான வனங்களும், அணைக்கட்டும், வால்பாறையின் தேயிலைத் தோட்டங்களும், டாப்- சிலிப்பின் அடர்ந்த காடுகளும் திரைத்துறையின் கேமராக்களை இங்கு கொண்டுவந்து நிறுத்தின.
பொள்ளாச்சியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சுமார் 1,500 திரைப்படங்கள் படமாக்கப்பட்டிருப்பதாக சினிமா தரவுகள் வியக்க வைக்கின்றன. சுமார் 5 ஆயிரம் பாடல்கள் அல்லது கிராமப் புற காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் அசரடிக்கின்றன. தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒடியா படங்களும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் சினிமா அறையை விட்டு வெளியே வந்த காலம் முதலே பொள்ளாச்சியில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.

சினிமாவின் மையம்

1970-களில் வெளிப்புறப் படப்பிடிப்புகள் பொள்ளாச்சியில் வேகம் பிடித்திருந்தாலும், அதற்கு முன்பே இங்கே படப்பிடிப்புகள் நடைபெற்றிருக்கின்றன. 1956-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான

 
ஆழியார் அணை

‘மலைக்கள்ளன்’ படம்தான் இங்கே முதன்முதலாகப் படம் பிடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். மலைக்காட்சிகள் இடம்பிடித்த அந்தப் படத்தின் பல காட்சிகள் இங்கேதான் எடுக்கப்பட்டிருக்கின்றன. 1964-ல் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ படக்காட்சிகளும் பொள்ளாச்சியில் அதிகமாகவே படமாக்கப்பட்டிருக்கின்றன. ‘விஸ்வநாதன் வேலை வேணும்...’ என்ற துள்ளல் பாடலை நினைத்தால், மனக்காட்சியில் அந்தப் பாடல் படமாக்கப்பட்ட ஆழியாறு அணையும் மனக்காட்சியில் ஓடும்.

1970-களுக்கு பிறகு பொள்ளாச்சி இல்லாத தமிழ் சினிமா என்பது அரிதாகவே மாறிபோனது.  1970-களின் இறுதியில் தொடங்கி 2000-ம் ஆண்டுவரை தமிழ் சினிமாவின் மையமாகப் பொள்ளாச்சி மாறியது. திரைத்துறையினர் பொள்ளாச்சியை நாடி வந்ததற்கு அங்கே இருக்கும் எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளும் கிராமிய சூழலும் மட்டுமே காரணமல்ல. ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்றால் வேறு எங்கும் போகத் தேவையில்லை. பொள்ளாச்சி அருகே டாப் சிலிப், ஆழியாறு, வால்பாறை,  அட்டகட்டி போன்ற பகுதிகளில் படமாக்கிவிட்டு வந்துவிடலாம். சற்று தொலைவாகப் போக வேண்டுமென்றால், கேரளாவில்  சாலக்குடி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சென்று பாடல்களைப் படமாக்கிவிட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு வந்துவிடலாம்.

கொங்கு இயக்குநர்கள்

பொள்ளாச்சியில் குறைந்த பட்ஜெட்டில் படங்களை எடுத்துவிட முடியும். படப்பிடிப்புக்குத் தேவையான இடவசதி, பொருட்கள், கிராமப்படங்களுக்கு தேவையான வீட்டு விலங்குகள், ஆட்கள் என அத்தனை தேவையையும் உள்ளூர் மக்களே பூர்த்தி செய்துகொடுத்துவிடுவார்கள். சினிமாக்காரர்களை தங்கள் வீட்டு உறவினர்களைப் போல அந்தப் பகுதி மக்கள் பார்க்கும் அளவுக்கு பொள்ளாச்சியும் சினிமாவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்தன. 
 “அந்தக் காலத்தில் பொள்ளாச்சி, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய ஊர்களில் ஓட்டல்கள் இல்லை. அதனால், நடிகர், நடிகைகள் பொதுமக்கள் வீடுகளில்தான் தங்குவார்கள். சற்று வசதி படைத்தவர்கள் தங்கள் வீட்டில் நடிகர், நடிகைகளை தங்க வைத்து உபசரித்து அனுப்புவார்கள். சினிமா நடிகர்கள் தங்கள் வீடுகளில் தங்குவதைக் கவுரமாக மக்கள் பார்த்தனர். அப்போது படப்பிடிப்பு நடத்த கட்டணம் எதுவும் இல்லை. எங்கே வேண்டுமானாலும் படப்பிடிப்பு நடத்திக்கொள்ளலாம். மக்களே தங்களுக்கு சொந்தமான இடங்களில் சூட்டிங் நடத்த விரும்பி அழைப்பார்கள்.” என்கிறார் சினிமா புரொடக்‌ஷன் எக்ஸிகியூடிவான பொள்ளாச்சி ராஜ்குமார்.

பொள்ளாச்சி மட்டுமல்ல, இந்த ஊரைச் சுற்றியுள்ள ஆழியாறு, சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர், உடுமலைப்பேட்டை, காளியாபுரம், ஊத்துக்குளி, நெகமம், கிணத்துக்கடவு, திருமூர்த்தி மலை, சர்க்கார்பதி, சூளிக்கல், வால்பாறை, அமராவதி, சோலையாறு அணைப்பகுதிகள் சினிமாவின் சொர்க்கபுரியாகவே இருந்துவருகின்றன. 1980 மற்றும் 90-களில் உருவான தமிழ் இயக்குநர்களின் ஒரே சாய்ஸாக பொள்ளாச்சியே இருந்தது. இந்தக் காலகட்டத்தில் கொங்கு பகுதி சார்ந்த கதைகளும் தமிழ் திரையில் ஆக்கிரமிக்கத் தொடங்கின. கொங்கு பகுதியிலிருந்து திரை உலகில் அடியெடுத்துவைத்த இயக்குநர்கள் ஆர். சுந்தர்ராஜன், மணிவண்ணன், பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், சுந்தர் சி போன்றவர்கள் தங்கள் படங்களை இந்தப் பகுதிகளில் அதிகமாகவே படமாக்கினார்கள்.

சினிமா அடையாளங்கள்
சிங்காரவேலன்... பம்பாய் வீடு

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்றும்கூட பல வீடுகள் சினிமா பெயரில் அழைக்கப்படுகின்றன. சிங்காநல்லூர்  ‘தேவர்மகன்’ வீடு, கெலக்காடு ‘சிங்காரவேலன்’ வீடு, சிங்காரம்பாளையம் ‘பசும்பொன்’ வீடு, சேத்துமடை ‘பம்பாய்’ வீடு, முத்தூர் ‘சின்னக்கவுண்டர்’ வீடு, நெய்க்காரப்பட்டி ‘சூரியவம்சம்’ வீடு, ‘எஜமான்’ வாணவராயர் பங்களா’ என சினிமா பெயர்களில் வீடுகளை அழைக்கும் அளவுக்கு சினிமா படப்பிடிப்பிகள் பொள்ளாச்சியில் கோலோச்சியிருக்கின்றன. நூற்றுக்கணக்கான படங்கள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டிருந்தாலும், சில படங்கள் பொள்ளாச்சியின் பெயரை உரக்கச் சொல்கின்றன.

 ‘பாகப்பிரிவினை’, ‘விடிவெள்ளி’, ‘முரட்டுக்காளை’,  ‘சகலகலா வல்லவன்’, ‘கரையெல்லாம் செண்பகப்பூ’, ‘தேவர் மகன்’, ‘சின்னக்கவுண்டர்’, ‘கிழக்கு வாசல்’, ‘பம்பாய்’ ‘அமைதிப்படை’, ‘எஜமான்’, ‘சூரியன்’, ‘சூரியவம்சம்’, தோழர் பாண்டியன்’,  ‘பொன்னுமணி’, ‘ராஜகுமாரன்’, ‘வானத்தைப்போல’,  ‘தூள்’, ‘ஜெயம்’, ‘காதலுக்கு மரியாதை’, ‘காசி’, ‘அரண்மனை’ உள்ளிட்ட பல ப்ளாக் பஸ்டர் படங்கள் இங்கே படமாக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சியை படப்பிடிப்புதளமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இங்கே எடுக்கப்பட்ட படங்களில் 80 சதவீத படங்கள் வெற்றி பெற்றதால், பொள்ளாச்சியை அதிர்ஷ்ட பகுதியாகவும் பார்க்கிறார்கள். எனவே பொள்ளாச்சி எப்போதுமே சினிமாக்காரர்களின் செண்டிமெண்ட் பகுதியாக இருப்பதில் வியப்பில்லை.

கோபி சினிமா

பொள்ளாச்சியைப் போலவே ‘குட்டிக் கோடம்பாக்கம்’ என்று அழைக்கப்படும் இன்னொரு ஊர் கோபிச்செட்டிப்பாளையம். பொள்ளாச்சியைப் போலவே தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்கள் இங்கே படமாக்கப்பட்டிருகின்றன. கோபியில் எடுக்கப்பட்ட முதல் படம் சிவாஜி கணேசன் நடித்து, 1959-ல் வெளியான ‘பாகப்பிரிவினை’. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜி.என். வேலுமணியின் சொந்த ஊர் கோபிச்செட்டிப்பாளையம்தான். ஊர்ப் பாசத்தால் ‘பாகப்பிரிவினை’ படக் காட்சிகளை கோபியில் எடுக்க அவர் விரும்பினார். ‘பாகப்பிரிவினை’ படத்திலிந்துதான் கோபியின் படப்பிடிப்பு பயணம் தொடங்கியது.

பாக்யராஜ் உபயம்


‘பாகப்பிரிவினை’க்குப் பிறகு 1963-ல் ‘இது சத்தியம்’, 1962-ல் ‘கண்ணாடி மாளிகை’, 1968-ல் ‘சோப்பு சீப்பு கண்ணாடி’, 1976-ல் ‘அன்னக்கிளி’, 1979-ல்  ‘திசை மாறிய பறவைகள்’ எனப் பல படங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் கோபியில் மையம் கொண்டன. பொள்ளாச்சியில் இருக்கும் எல்லா ரசனைகளும் கோபியில் இருந்தபோதும் 1980-க்கு பிறகுதான் கோபி தமிழ் சினிமாவின் பார்வை அழுத்தமாகப் பதிவானது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் என்ற கிராமம்தான் நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜின் சொந்த ஊர். 1980-களில் ‘தூறல் நின்னு போச்சு’, ‘முந்தானை முடிச்சு’ என இவருடைய பல படங்கள் கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே படமாக்கப்பட்டன. 

அதே காலகட்டத்தில் இயக்குநர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், மணிவண்ணன், ராமராஜன், ஆர். சுந்தர்ராஜன், பி. வாசு, மனோஜ்குமார், வி.சேகர், மணிவாசகம், கே.எஸ். ரவிக்குமார், சுந்தர். சி போன்ற இயக்குநர்களும் கோபி பகுதியில் தங்கள் படங்களைப் போட்டிப்போட்டுக்கொண்டு படமாக்கினார்கள். குறிப்பாக மணிவண்ணன், கே.எஸ். ரவிக்குமார். சுந்தர்.சி, பி. வாசு போன்ற இயக்குநர்கள் கொங்கு மண்ணுக்கேத்த கதைகளை உருவாக்கியதால், கோபிதான் அவர்களுடைய விருப்பத் தேர்வாக இருந்தது.

பஞ்சாயத்து ஆலமரங்கள்

கோபியில் படம்பிடிக்க ஏதுவான பகுதிகள் நிறைய உள்ளன. தமிழ் சினிமாவுக்கு பஞ்சாயத்து ஆலமரங்களை அறிமுகம் செய்துவைத்த பெருமை கோபிக்கே உண்டு. மேலும் கோபியில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பவானி ஆறு பயணிக்கிறது. கோபியில் வெப்பநிலை எப்போதும் மிதமாகவே இருக்கும். கணிக்க முடியாத வானிலை உள்ள பகுதி இது. இதுபோன்ற காரணங்களாலேயே படப்பிடிப்புகள் நடத்த கோபியை சினிமாக்காரர்கள் விரும்பி தேர்வு செய்தார்கள்.  
சின்னகவுண்டர் ஆலமர பஞ்சாயத்து..


தமிழ் சினிமாவில் ஆகப் பெரும் சாதனைப் படைத்த ‘சின்னத்தம்பி’ படம் முழுக்க முழுக்க கோபியில்தான் படமாக்கப்பட்டது. அந்தப் படத்தில் வரும் பிரபுவின் செட்டு வீடு பவானி ஆற்றங்கரையோரமும் குஷ்புவின் வீடு பவானிசாகர் அணையில் உள்ள கட்டிடத்திலும் படமாக்கப்பட்டன. பவானிசாகர் அணை இன்றுவரை ‘சின்னத்தம்பி’யின் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது. கள்ளிப்பட்டியில் ‘ராசுக்குட்டி’ வீடு, சி.கே.எஸ். பங்களா என கோபியில் சினிமா படப் பெயரை தாங்கி நிற்கும் வீடுகளுக்கும் பஞ்சமில்லை. பன்னாரியம்மன் கோயில், குண்டேரிப்பள்ளம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கொடிவேரி அணை, வயல்வெளிகள், சத்தியமங்கலம் வனப்பகுதிகள், கோயில்கள் எனப் படம் பிடிக்க ஏதுவான பகுதிகள் கோபியில் அதிகம் உள்ளன.
தமிழ்ப் படங்கள் மட்டுமல்ல, ஏராளமான பிற மொழி படங்களும் கோபியில் படமாக்கப்பட்டு அந்த ஊரின் பெருமையைப் பேசியது. இவற்றில் ‘சேரன் பாண்டியன்’, ‘ராசுக்குட்டி’, ‘மருதுபாண்டி’,  ‘சின்னத்தம்பி’, ‘எங்க சின்ன ராசா’ (இந்தி டப்பிங்), ‘செந்தமிழ் பாட்டு’ (ஒடியா டப்பிங்) ஆகிய படங்கள் முழுமையாக கோபியிலேயே படமாக்கப்பட்டதன் மூலம் கோபி  அகில இந்திய அளவில் சினிமாக்காரர்களை ஈர்த்தது. 

ஊட்டி சினிமா

தமிழ் சினிமாவின் அந்தக் காலம் தொடங்கி இப்போதுவரை இயக்குநர்கள்
ஊட்டி... அன்பே வா..

விரும்பும் இடம் என்றால், அது ஊட்டிதான். ‘மலைகளின் அரசி’ என்று வர்ணிக்கப்படும் ஊட்டியில் பசுமை நிறத்தை போர்த்திக்கொண்டு விரிந்து கிடக்கும் இயற்கை அழகும், ஓங்கி உயர்ந்த மலைகளும், சலசலத்து ஓடும் நீரோடைகளும், அழகழகான பூங்காக்களும், பூத்துக்குலுங்கும் பூக்களும், ரம்மியமான் சீதோஷணமும் சினிமாக்காரர்களை ஊட்டிக்கு அழைத்துவந்தது. தமிழ் சினிமாவில் ஒரு பாடல் காட்சியாவது ஊட்டியில் படமாக்குவதைப் பழக்கமாகவே வைத்திருந்தார்கள். தொடக்கத்தில் ஒரு பாடலுக்கான ஊராக மட்டுமே பார்க்கப்பட்டுவந்த ஊட்டி, பிறகு ‘ஊட்டி வரை உறவு’ என்று ஸ்ரீதர் படம் எடுக்கும் அளவுக்கு அந்த ஊர் சினிமாக்காரர்களின் ஆதர்சனமானது. ஸ்ரீதரின் 'காதலிக்க நேரமில்லை' படம் ஊட்டியை இன்னொரு பரிணாமத்தில் காட்டியது. அதன் பிறகே, பலரும் ஊட்டியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினார்கள். எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா’ படமும் ஊட்டி அழகை தனித்து அடையாளப்படுத்தியது.

பெரும்பாலான தமிழ் சினிமாக்களைப் பொருத்தவரை ஊட்டி என்றாலே தேயிலைத் தோட்டங்களும் மேடான புல்தரைகளும் அங்கு எடுக்கப்படும் பாடல் காட்சிகளும் என்றுதான் இருந்தது. ஆனால், அந்த எண்ணத்தை சிதறு தேங்காய்போல உடைத்துப்போட்டவர் இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. மலை ரயில் செல்லும் தண்டவாளங்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் குடியிருப்புகள், நீலகிரியின் மலை கிராமங்கள், பனியும் இளவெயிலும் கைகோர்க்கும் கிராமங்கள், வானுயர்ந்த மரங்கள், ஆளரவமற்ற உட்புறச் சாலைகள், ஆடம்பரமில்லாத அழகியல் என ஊட்டியை உயிர்ப்புடன் காட்டியவர்  பாலு மகேந்திராதான். குறிப்பாக அவருடைய‘மூன்றாம் பிறை’யும் ‘மூடுபனி’யும் ஊட்டியை அழகு பிறையாக மின்ன வைத்தது. ‘மூன்றாம் பிறை’யில் வரும் கேத்தி ரயில்வே ஸ்டேஷன் அவருடைய படங்களுக்கெல்லாம் சிகரம் வைத்த இடம்.

பாலிவுட்டும் ஊட்டியும்

ஒரு காலத்தில் குளுகுளு காட்சிகளைப் படம் பிடிக்க காஷ்மீருக்கும் சிம்லாவுக்கும் ஓடிக் கொண்டிருந்த பாலிவுட்காரர்கள், காஷ்மீரில் தீவிரவாதம் உச்சத்துக்குப் போனபோது ஊட்டிப் பக்கம் திரும்பினார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஊட்டியும் குளுமை தந்தது. இதனால், பிறமொழி இயக்குநர்களும் ஊட்டிக்கு வண்டியைத் திருப்பினார்கள். பொள்ளாச்சி, கோபியைப் போலவே ஊட்டியிலும் நூற்றுக்கணக்கான படங்கள் பிடிக்கப்பட்டுள்ள்ன. பொதுவாகப் பாடல் காட்சிகள் என்றில்லாமல், எழில் சார்ந்த சினிமா களமும் ஊட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கின்றன. 
1998-ல் வெளியான ‘உயிரே’ படத்தில் இடம்பெற்ற ‘ தக்க தைய.. தைய... தையா...’ பாடலில் ஊட்டி மலை ரயிலை புதிய கோணத்தில் காட்டியிருந்தார் இயக்குநர் மணிரத்னம். ஊட்டியில் நயின்த் மைல், பைன் மர காடு, பைக்காரா ஏரி, அப்பர் பவானி ஏரி, அவலாஞ்ச் ஏரி, எமரால்ட் ஏரி, தாவரவியல் பூங்கா, கேத்தி பள்ளத்தாக்கு, ரோஸ் கார்டன், ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா, ஃபெர்ன்ஹில்ஸ் அரண்மனை என படப்பிடிப்புகள் நடத்த ஏராளமான இடங்கள் ஊட்டியில் குவிந்துகிடக்கின்றன.

காரைக்குடி சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் படப்பிடிப்புகள் நடக்கும் பகுதியாகக் காரைக்குடி மாறியிருக்கிறது. மாறாத பழமை, வித்தியாசமான கட்டிடங்கள், பசுமையான கிராமங்கள் போன்ற அம்சங்கள் சினிமாக்காரர்களை காரைக்குடி ஈர்த்திருக்கிறது. ஆனால், காரைக்குடியில் ஒரு காலத்தில் சினிமா ஸ்டூடியோ இருந்தது இன்றைய தலைமுறையினர் அறிந்திராத சங்கதி. தமிழ் சினிமாவின் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் காரைக்குடியில்தான் முதன் முதலில் தங்களுடைய சினிமா ஸ்டுடியோவை உருவாக்கியது. காரைக்குடி ஸ்டூடியோவில்தான் புகழ்பெற்ற ‘வேதாள உலகம்’ படம் தொடங்கியது. காலப்போக்கில்தான் ஏவிஎம் சென்னைக்கு இடம் மாறி பிரபலமானது. 

ஏவிஎம் ஸ்டுடியோ சென்னைக்கு சென்ற பிறகு பல ஆண்டுகள் கழித்து முதன் முதலில் காரைக்குடி பகுதிகளையும் அதன் சுற்றுப்புற பகுதிகளையும் சினிமாவில் காட்டியவர் இயக்குநர் விசு. ‘சிதம்பர ரகசியம்’ என்ற படத்தைக் காரைக்குடியில்தான் அவர் படமாக்கினார். 1998-ல் ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’ படத்தின் காட்சிகள் அந்த ஊருக்கு சினிமா வெளிச்சத்தை அதிகமாக்கியது. காரைக்குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீட்டில் ஏராளமான படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பழமையைப் போற்றும் இதுபோன்ற வீடுகள் காரைக்குடியில் இருப்பதால் சினிமா படப்பிடிப்புக்கு அந்த ஊர் புகழ்பெற்று விளங்குகிறது.

காரைக்குடி செண்டிமெண்ட்
காரைக்குடி செட்டியார் அரண்மனை

தற்போது கிராமிய படங்கள் என்றாலே, பெரும்பாலும் காரைக்குடிக்குதான் செல்கிறார்கள். காரைக்குடியைச் சுற்றியுள்ள கானாடுகாத்தான் உள்ளிட்ட பல ஊர்களில் பழமையான கட்டிடக்கலையை நினைவுகூரும் விதமாக ஏராளமான வீடுகள் உள்ளன. காரைக்குடியில் ஒரு படம் எடுத்தால் ‘ஹிட்’ ஆகும் என்ற அரதபழசான சினிமா செண்டிமெண்ட் காரணமாகவும் நிறைய படங்கள் இங்கே படமாக்கப்பட்டுவருகின்றன. அந்த செண்டிமெண்டை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஹரி. இயக்குனர் ஹரி தன்னுடைய படத்தில் ஒரு காட்சியையாவது காரைக்குடியில் எடுக்காமல் இருக்க மாட்டார். அதேபோல் இயக்குனர் லிங்குசாமிக்கும் காரைக்குடி ஃபேவரைட். தமிழ்த் திரையுலகினர் மட்டுமல்லாமல் தெலுங்குத் திரையுலகினரும் தற்போது காரைக்குடிக்கு விரும்பிவருகிறார்கள். 

மீளுமா கனவுலக நகரங்கள்? 

ஒரு காலத்தில் பொள்ளாச்சி, கோபிச்செட்டிப்பாளையம், ஊட்டி போன்ற நகரங்களில் எப்போதும் சினிமா படப்பிடிப்புகளைப் பார்க்க முடியும். ஆனால், 2010-க்கு பிறகு பொள்ளாச்சி, கோபியில் சற்று குறையத் தொடங்கின. ஊட்டியில் சினிமா படப்படிப்பு நடப்பதே அரிது என்றாகிவிட்டாது. “சினிமா என்பது வியாபாரம் என்பதால், தொடக்கத்தில் இலவசமாக ஷூட்டிங் செய்ய இடம் கொடுத்த மக்கள் சற்று காசு கேட்க ஆரம்பித்தார்கள். காலத்துக்கு ஏற்ப கட்டணமும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. பிறகு போலீஸ் அனுமதி, கெடுபிடி என அதுவும் ஒரு பக்கம் அதிகமானது.  வனப்பகுதிகளில் சூட்டிங் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சினிமா சூட்டிங் லொகேஷன்கள் குறைந்தன. இதுபோன்ற காரணங்களால் இடையில் படப்பிடிப்புகள் இங்கே குறைந்தன. இப்போது மீண்டும் பழையபடி படப்பிடிப்புகள் தொடங்க ஆரம்பித்துள்ளன. தெலுங்கு படங்கள் இங்கே அதிகம் படம்பிடிக்கப்படுகின்றன.” என்கிறார் பொள்ளாச்சி ராஜ்குமார்.

ஸ்டுடியோக்களில் படப்பிடிப்புகள் நடந்தபோது, செயற்கைத்தனத்தோடு காட்சிகளைப் பார்த்துவந்த மக்களுக்கு வெளிப்புற படப்பிடிப்புகள்  காண்பதற்கினிய காட்சிகளையும் தந்தன. வெளிப்புற இடங்கள் மூலமே உலகக் காட்சிகளையும் தரிசிக்க முடிந்தது. ஆனால், இன்றோ சூட்டிங் நடத்த கட்டண உயர்வு, கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் போன்ற காரணத்தால், இந்த நகரங்கள் சினிமாக்காரர்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகின்றன. கடந்த ஒரிரு ஆண்டுகளாகத்தான் இந்த ஊர்களின் பக்கம் மீண்டும் சினிமாக்காரர்களின் பார்வை திரும்பியிருக்கிறது. பழையபடி  மீண்டும் சினிமா சொர்க்கங்களாக இந்த நகரங்கள் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. 

இந்து தமிழ், 2019 தீபாவளி மலர்