28/02/2019

எல்.கே.ஜி. விமர்சனம்

அரசியலில் தோற்றுபோன நாஞ்சில் சம்பத் மகனான (லால்குடி கருப்பையா காந்தி - எல்கேஜி) ஆர்.ஜெ. பாலாஜி வார்டு கவுன்சிலராக இருக்கிறார். தன் அப்பாவைப் போல இல்லாமல் பெரிய பதவியைப் பிடிப்பதே லட்சியமாகக் கொண்டிருக்கிறார். அந்தத் தருணத்தில் முதல்வருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துபோகிறார். அந்தப் பதவிக்கு ராம்குமார் சிவாஜி வருகிறார்.
இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் ஆர்.ஜெ.பாலாஜி, தேர்தலுக்கு ஆட்களை புரமோட் செய்யும் கார்ப்பரேட் நிறுவனத்தை அணுகுகிறார். அவர்கள் செய்யும் தகிடுதத்தத்தால் ஆர்.ஜெ.பாலாஜிக்கு இடைத்தேர்தலில் சீட்டு கிடைக்கிறது. ஆனால், ஆர்.ஜெ.பாலாஜிக்குப் போட்டியாக மக்கள் ஆதரவு பெற்ற ஜெ.கே.ரித்தீஸ் களத்தில் குதிக்கிறார். இறுதியில் யார் வெற்றி பெற்றது? ஆர்.ஜெ.பாலாஜியின் லட்சியம் நிறைவேறியதா? இதுதான் எல்.கே.ஜி. படத்தின் கதை.

கடந்த இரண்டு கால தமிழக அரசியல் நிகழ்வுகளை கொத்து பரோட்டாவாகப் போட்டு நையாண்டி செய்திருக்கும் படம் இது. தன்னை வளர்த்துக்கொள்ள நினைக்கும் அரசியல்வாதி எப்படியெல்லாம் ஏமாற்றுவார்; என்னென்ன தகிடுதத்தங்கள் செய்வார்கள் என்பதையெல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் இயக்குநர். ஆனால், அதை முழுமையான ‘ஸ்பூஃப்’பாகக் காட்சிப்படுத்தாமல் நடந்த விஷயங்களையே காமெடியாக்கியிருக்கிறார்கள்.

மருத்துவமனையில் அமைச்சர்கள் தங்குவது, முதல்வர் இறப்பது, நள்ளிரவு பதவியேற்பு, இடைத்தேர்தல், ஆற்றில் தெர்மோகோல் விடுவது, 20 ரூபாய் டோக்கன் என சமகால அரசியல் நிகழ்வுகளைப் படம் முழுவதுமே அச்சு பிசகாமல் தூவியிருக்கிறார் இயக்குநர். ஆனால், இந்தக் காட்சிகள் மிகையில்லாமல் படத்தோடு பொருந்திபோவது ரசிக்க வைக்கின்றன. 

தேர்தல் வேலை செய்யும் கார்ப்பரேட்டுகள் சமூக வலைதளங்களில் செய்யும் ஜித்து வேலைகளையும் தோலுரித்துகாட்டியிருக்கிறார் இயக்குநர். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் டிரெண்ட்டிங் விஷயங்களைக் கலாய்த்திருப்பதும் நேர்த்தி. முழுமையான அரசியல் படம் என்ற வரையறைக்குள் இந்தப் படம் வராது. என்றாலும்,  அரசியல் காமெடி படம் என்ற வகையில், சமகால அரசியலை நுனிபுல்லாக அணுகுபவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். மீம்ஸ் கிரியேட்டர்கள் நினைத்தால் வள்ளுவனைக்கூட தாலிபன்கள் ஆக்கி விடுவார்கள்; யார் பணம் கொடுத்தாலும் கார்ப்பரேட்டுகள் வேலை செய்வார்கள் போன்ற வசனங்கள் ஈர்க்கின்றன.

வெறுமனவே அரசியலை கலாய்க்கும் படமாக மட்டும் இல்லாமல் மெசேஜ் சொல்ல வேண்டும் என்பதற்காக கிளைமாக்ஸில் அறிவுரைகளை அள்ளிவிடுகிறார் நாயகன். படம் முழுவதுமே அரசியல் ஜித்து வேலைகளைக் காட்டிவிட்டு, கிளைமாக்ஸில் அறிவுரை சொல்வது அலுப்பூட்டிவிடுகிறது. காமெடிக்காகத் திணிக்கப்பட்ட அபத்தமான பத்திரிகை சந்திப்பு காட்சி, நோய் எதிர்ப்பு போராட்டம் போன்ற காட்சிகள் படத்துக்கு வேகத்தடையை ஏற்படுத்திவிடுகின்றன. ஒரு கவுன்சிலரை புரமோட் செய்யும் அளவுக்கு தேர்தல் வேலை செய்பவர்களாக கார்ப்பரேட்டுகளைக் காட்டியிருப்பது மிகையான கற்பனை.    

தேர்தலில் எதிர்த்து போட்டியிடும் ஒரே ஊர்க்காரரான ஜெ.கே. ரித்திஷைப் பற்றி எதுவுமே தெரியாத உள்ளூர் அரசியல்வாதியாக ஆர்.ஜெ.பாலாஜி

இருப்பது நெருடல். சாதாரண வார்டு கவுன்சிலரை கூட சமூக வலைத்தளம் மூலம் முதல்வராக்கிவிடலாம்; மக்கள் ஆதரவு பெற்ற ஒருவரை சமூகவலைதள உதவியுடன் வீழ்த்திவிடலாம் என்று காட்டுவதெல்லாம் நம்பும்படியாக இல்லை.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்.ஜே. பாலாஜி முழு எனர்ஜியுடன் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்துக்கு அழகாகப் பொருந்துகிறார். ஏமாற்று அரசியல்வாதிக்கான அவரது உடல்மொழியும் கச்சிதம். படத்தில் பல இடங்களில் அவர் கத்துவது காது ஜவ்வை கிழித்துவிடுகிறது. நாயகியாக வரும் பிரியா ஆனந்த் தேர்தல் வேலை செய்யும் கார்ப்பரேட்டாக வருகிறார். அந்தப் பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார்.

ஆர்.ஜெ. பாலாஜியின் அப்பாவாக அறிமுகமாகியிருக்கும் நாஞ்சில் சம்பத் நடிக்க வாய்ப்பு குறைவுதான் என்றாலும், படத்தில் திருக்குறள் சொல்லி சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். முதல்வராக வரும் ராம்குமார் சிவாஜி, போட்டி அரசியல்வாதியாக வரும் ஜெ.கே. ரித்திஷ், உதவியாளராக வரும் மயில்சாமி ஆகியோர் கதாபாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள்.

படத்துக்கு இசை லியேன் ஜேம்ஸ். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்.. என்ற ரீமிக்ஸ் பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. சென்னையை அழகாகப் படம் பிடித்து காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விது அய்யணா. அந்தோணியின் படத்தொகுப்பும் படத்துக்கு பக்கபலம். சமகால அரசியலை நையாண்டியாகச் சொன்னதைத் தாண்டி, கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால், அரசியல் ஆடுபுலி ஆட்டமாக ‘எல்.கே.ஜி.’ கவர்ந்திருக்கும்.

மதிப்பெண் 2.5 / 5

19/02/2019

ஒரு அடார் லவ் விமர்சனம்


காதலிக்க பெண் வேண்டும், அரட்டை அடிக்கவும் ஊர் சுற்றவும் தோழி வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் பதினொறாம் வகுப்பு பிரஸ்ஸர் தினத்தில் காத்திருக்கிறார்கள் மாணவர்கள். பார்த்த மாத்திரத்தில் ரோஷனும் பிரியா வாரியரும் காதல் கொள்கிறார்கள். ஒரு சிறிய மனஸ்தாபத்தில் இருவரும் பிரிய நேரிடுகிறது. காதலைச் சேர்த்து வைக்க களத்தில் குதிக்கும் நண்பர்கள், ரோஷனையும் பள்ளித் தோழியாக இருக்கிற நூரின் ஷெரீஃப்பையும் காதலிப்பதுபோல நடிக்கச் சொல்கிறார்கள். அப்படிச் செய்தால், பிரியா வாரியர் வழிக்கு வருவார் என்றும் யோசனை சொல்கிறார்கள். இதன்படி காதலிக்க நடிக்கத் தொடங்கும் இருவருமே ஒரு கட்டத்தில் நிஜமாகவே காதல் வயப்படுகிறார்கள். அதே நேரத்தில் பிரியா வாரியரும் திரும்பிவருகிறார். இறுதியில் யாருக்கு காதல் கைகூடியது என்பதுதான் ‘ஒரு அடார் லவ்’வின் கதை.

இளைஞர்களைக் கவரும் விதத்தில் படத்தை எடுக்க இயக்குநர் ஒமர் லுலு முயற்சித்திருக்கிறார். முதல் பாகம் முழுவதுமே மாணவர்கள் அடிக்கும் லூட்டிகளால் காட்சிகள் நகருகின்றன. ஒரு சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும் ஒரே மாதிரியாக வரும் காட்சிகள் திகட்ட வைத்துவிடுகின்றன. பள்ளிக்கூட கலகலப்பு, மாணவிகளைக் கவர மாணாவர்கள் போடும் மொக்கை உத்திகள், நாயகன் நாயகியின் காதல் விளையாட்டு, முரட்டு முகத்துடன் அவ்வப்போது வந்து ஜூனியர்களை மிரட்டும் சீனியர் மாணவர்கள் என முதல் பாகத்தில் கதைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் திரைக்கதைப் பயணிக்கிறது.

விடலைப் பருவத்துக் காதல் கதைக்குள் இருக்கும் காமம், வன்மம், சோகம் என எல்லா பக்கங்களையும் தொட்டு செல்கிறார் இயக்குநர். ஆனால், வளர் இளம் பருவத்தில் ஏற்படும் இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் அர்த்தம் தெரியாத பதின் பருவத்தினரைப் போல இயக்குநரும் குழம்பியிருப்பார் போலும். விளைவு, பள்ளிக் கூட மாணவர்களையும் மாணவிகளையும் காதல் பித்து பிடித்தவர்களாக படம் முழுக்க காட்டுகிறார்.  வகுப்பில் உள்ள மாணவர்கள் எல்லாருமே மாணவிகளுடன் ‘கமிட்’ ஆகத் துடிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் போட்டி போடுகிறார்கள். எந்தப் பயமும் இன்றி பள்ளிக்கூடத்திலேயே நாயகனும் நாயகியும் முத்தத்தைப் பரிமாறிகொள்கிறார்கள். போதாக்குறைக்கு எந்த மாணவியும் கிடைக்காத மாணவன் ஒருவன், ஆசிரியைக்கே காதல் இம்சை கொடுக்கிறான்.

இப்படி ஒரு பள்ளிக்கூடம் எங்கே இருக்கிறது என்று கேட்கும் அளவுக்கு பதின்பருவத்து காதல் நச்சுகளை படம் முழுவதும் இயக்குநர் படரவிட்டிருக்கிறார். எல்லோரையும் ஈர்க்கும் என்ற நம்பிக்கையில் இயக்குநர் வைத்திருக்கும்  கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஊகிக்கும் வகையில் இருப்பதால், மனதைத் தொடாமலேயே ஒரு காட்சியாகக் கடந்துவிடுகிறது. படத்தைத் திரைக்கதையாக்கிய வகையில் இயக்குநர் சொதப்பியிருந்தாலும் படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

அறிமுக நாயகன் ரோஷன் அப்துல் ரஹூஃப் பதின்பருவத்து வயது கோளாறுகளை அப்படியே உள்வாங்கி நடித்திருக்கிறார். அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ப அவரது உடல்மொழியும் கச்சிதம். படம் முழுவதுமே அவர் புருவத்தை உயர்த்திக்கொண்டே இருப்பது மட்டுமே ஒரே உறுத்தல். நாயகியாக வரும் பிரியா வாரியர் ஃபிரெஸ்ஸாக இருக்கிறார். முதல் பார்வையிலேயே கண்ணடித்து நாயகனை ஈர்ப்பதுபோல ரசிகர்களையும் ஈர்த்துவிடுகிறார். கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நடிக்கவும் செய்திருக்கிறார். தோழியாக வரும் நூரின் ஷெரீஃப் படம் முழுவதும் வருகிறார். அவரது கொள்ளை அழகும் ரசிக்க வைக்கும் அவரது முக  பாவனைகளும் ஈர்க்கின்றன.

 நண்பனாக வரும் ஷாஜஹான், ஆசிரியர்களாக வரும் ரோஷன் அன் ராய், அனீஸ் மேனன், சிவாஜி குருவாயூர், பிரதீப் கோட்டயம் ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். ஷான் ரஹ்மானின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். சீனு சித்தார்த்தின் கேமரா காட்சிகளை அழகாகப் படம் பிடித்துள்ளது.

விடலைப் பருவத்து காதல் கதையை அடர்த்தியோடு சொல்லியிருந்தால் ‘ஒரு அடார் லவ்’ இன்னும் அழகாக இருந்திருக்கும்.

மதிப்பெண் 2.5 / 5
 

15/02/2019

கதி கலங்க வைத்த தாத்தா!


'பரியேறும் பெருமாள்’ படம் பார்த்தவர்களைக் கதி கலங்க வைத்த கொலைக்கார தாத்தாவைப் பார்க்கப் போயிருந்தேன். போனபோது சட்டப் புத்தகங்களைத் துலாவிக்கொண்டிருந்தார். ‘நான் ஒரு வழக்கறிஞர்..’ என்று சொல்லிக்கொண்டே வழக்கில் பேச வேண்டிய குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் ஆணவக் கொலை செய்த தாத்தாவா இவர் என்று ஆச்சரியம்தான் ஏற்பட்டது.

கொடூரமாக ஆணவ கொலை செய்யும் தாத்தாவாகப் பரிட்சயம் ஆகிவிட்ட அவரது பெயர் கராத்தே வெங்கடேசன். 65 வயதான அவர் தமிழ் சினிமாவுக்கு புதிய முகம் அல்ல. 40 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஆனால், 4 தசாப்தங்கள் கழித்து இப்போதுதான் சினிமாவில் புகழ் வெளிச்சம் கிடைத்திருக்கிறது. திறமைக்கான அங்கீகாரம் ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும் என்பதற்கு உதாரண புருஷராகியிருக்கிறார்.

கராத்தே மாஸ்டராகத்தான் தொழிலை தொடங்கியிருக்கிறார் கராத்தே வெங்கடேசன். ‘அன்புக்கு நான் அடிமை’, ‘ரங்கா’ போன்ற ரஜினி படங்களில் நடித்த கராத்தே மணியின் உதவியாளர் இவர். 1978-ம் ஆண்டில் சண்டைக் கலைஞராக கராத்தே தியாகராஜன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார். படத் தயாரிப்பாளரும் சண்டை இயக்குநருமான கோபாலன் குருக்களின் ஆதரவால் சுமார் 60 தமிழ்ப் படங்களில் சண்டைக் கலைஞராக நடித்திருக்கிறார்.

1980-களில் சண்டைக் கலைஞராக நடித்த வேளையில் சட்டம் படிக்க ஆசை வரவே, அதையும் கராத்தே வெங்கடேசன் முடித்தார். சண்டைக் கலைஞராகவும் வழக்கறிஞராகவும் ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரை சாவரி செய்ய கராத்தே வெங்கடேசனால் முடியவில்லை. பட வாய்ப்புகள் குறைந்தபோது வழக்கறிஞர் பணி முழு நேரப் பணியானது. பல ஆண்டுகள் கழித்து 2003-ம் ஆண்டில் ‘வெயில்’ படம் மூலமே மீண்டும் சினிமாவில் காலடி எடுத்துவைத்தார் கராத்தே வெங்கடேசன். அதன்பிறகு நடிக்கக்கூடிய சில படங்களில் வாய்ப்பு கிடைத்தபோதும், சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கராத்தே வெங்கடேசனுக்கு பெயர் கிடைக்கவில்லை.

ஆனால், வெங்கடேசனின் 40 ஆண்டு கால ஏக்கத்தை ‘பரியேறும் பெருமாள்’ என்ற ஒற்றைப் படம் தீர்த்து வைத்துவிட்டது. கொலைக்கார தாத்தா கதாபாத்திரத்துக்காக 60 வயதுக்கு மேற்பட்ட, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிற ஆளை இயக்குநர் மாரி செல்வராஜ் தேடிக்கொண்டிருந்தார். ஸ்டண்ட் யூனியனில் 30-க்கும் மேற்பட்டோரை அழைத்து போட்டோ ஷூட் செய்தபோது அதில் கராத்தே வெங்கடேசனும் கலந்துகொண்டார். அவர்களில் வெங்கடேசனை மட்டும் இயக்குநர் செல்வராஜ் தேர்வு செய்திருக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ பட வாய்ப்பு இப்படித்தான் இவருக்குக் கிடைத்திருக்கிறது.

ஆணவக் கொலை செய்யும் கதாபாத்திரத்தில் எப்படி துணிச்சலாக நடித்தீர்கள் என்று கேட்டால், சாந்தமாகச் சிரிக்கிறார் கராத்தே வெங்கடேசன். “கொலைக்காரா தாத்தா கதாபாத்திரம் பற்றி இயக்குநர் மாரி செல்வராஜ் முதலிலேயே சொல்லிவிட்டார். அதனால் எனக்கு எந்த உறுத்தலும் ஏற்படவில்லை. ஆணவக் கொலை செய்யும் கதாபாத்திரத்தைப் பார்த்து சிலராவது திருந்துவார்கள் என்று நினைத்தேன். எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.” என்கிறார் கராத்தே வெங்கடேசன்.

வழக்கறிஞராக இருந்ததால், ஆணவக் கொலைகள் பற்றிய விஷயங்கள் இவருக்கு அத்துபடி. அதனால், இந்தக் கதாபாத்திரத்துக்காக எந்த ஹோம்வொர்க்கும் செய்யாமலேயே நடித்திருக்கிறார் வெங்கடேசன். கிளைமாக்ஸ் காட்சியில் ரயில்வே கிராஸ் அருகே வெங்கடேசன் விழுந்து
எழுந்து நடித்த காட்சி பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது. கராத்தே, சிலம்பம், யோகா போன்ற உடற்பயிற்சிகளை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்ததால், கிளைமாக்ஸ் காட்சியில் விழுந்து எழ முடிந்திருக்கிறது. அந்தக் காட்சியில் நடித்தபோது கால் இடறி விழுந்து வெங்கடேசனின் முழங்காலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்காக வெங்கடேசன் இன்னும் சிகிச்சை எடுத்துக்கொண்டுவருகிறார்.

சண்டைக் கலைஞர்கள் எல்லோருக்குமே படத்தில் பேசக்கூடிய கதாபாத்திரங்கள் அமைந்துவிடாது. சிலருக்கு மட்டுமே அது அமையும். பல ஆண்டுகள் கழித்து ‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் நல்ல கதாபாத்திரம் அமைந்ததால், புகழ் வெளிச்சம் கரத்தே வெங்கடேசனுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. கொலைகார தாத்தா கதாபாத்திரத்தைப் பார்த்து திட்டியவர்கள்கூட தற்போது, அவரைப் பாராட்டுவதாகப் புளங்காகிதம் அடைகிறார் வெங்கடேசன்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகள் கழித்து ஒருவர் பேசப்படுவது அதிசயம்தான். அதுவும் சண்டைக் கலைஞருக்கு பெயர் கிடைப்பது பேரதியசம். ‘பரியேறும் பெருமாள்’ படம் வெங்கடேசனுக்கு மட்டும் சினிமாவில் புதிய வாசலைத் திறக்கவில்லை. அவரைப்போல சினிமாவில் புகழ் வெளிச்சத்துக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள், சண்டைக் கலைஞர்கள் போன்றோருக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.


காமெடிக்கு தயார்!

உங்களுடைய முதல் படம்?

சுமன் கதாநாயகனாக நடித்த ‘அன்புக்கரங்கள்’.


உங்களுடைய திருப்புமுனை படம்?

‘2003-ம் ஆண்டில் வெளியான ‘வெயில்’. ஒரு நடிகராக அடையாளம் காட்டிய படம்.
 

பெயர் சொல்ல வைத்த படங்கள்?

‘மிளகா’, ‘நர்த்தகி’, ’வால்மீகி’, ‘சண்டியர்’ போன்ற படங்களில் நடிக்கக்கூடிய கதாபாத்திரங்கள் அமைந்தன.


புதிய பட வாய்ப்புகள் வந்துள்ளனவா?

‘ராஜ பீமா’, ‘எல்.கே.ஜி.’ போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டேன். இன்னும் இரண்டு படங்களில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
 

நடிக்க ஆசைப்படும் கதாபாத்திரம்?

எனக்கு காமெடி சென்ஸ் நிறைய உண்டு. யாராவது வாய்ப்புக் கொடுத்தால் ஜமாய்த்துவிடுவேன்.


 - இந்து தமிழ் (15/02/2019)

01/02/2019

ஒரு ‘பேச்சுலர்’ தவளையின் காதல் கதை

திருமணத்துக்காக மாப்பிள்ளை, பெண் தேடுவதைப் போல ஒரு ஆண் தவளையின் ஜோடிக்காக பொலிவியாவில் 10 ஆண்டுகாலமாக நடந்து வந்த பெண் தவளைத் தேடும் படலம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ரோமியோ என்ற அந்த ஆண் தவளைக்காக நடந்த தேடுதல் வேட்டையில் ஜூலியட் என்ற பெண் தவளை கிடைத்துவிட்டது. ரோமியோவோடு அந்த இனமே அழிய இருந்த நிலையில், ஜூலியட் மூலம் அந்தத் தவளை இனம் பெருக வழிகிடைத்திருப்பதால் ஆய்வாளர்கள் ஆனந்த கூத்தாடிவருகிறார்கள்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில்  10 ஆண்டுகளுக்கு முன்பு செஹியூன்காஸ் (Sehuencas) என்ற தவளையை விலங்கியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள். நீர்த் தவளை இனத்தைச் சேர்ந்த இந்தத் தவளையை வைத்து ஆராய்ச்சி செய்ததில், இது அபூர்வமான வகையைச் சேர்ந்தது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த இனத்தைச் சேர்ந்த தவளைகள் வேறு எங்குமே இல்லை என்பதால், மிகவும் அரிய வகை தவளை பட்டியலில் இது சேர்க்கப்பட்டது. ‘ரோமியோ’ என பெயர் சூட்டப்பட்ட இந்தத் தவளையை பொலிவியாவில் கோச்சபாம்பா நகரில் உள்ள நீர்வாழ் உயிரின காட்சியகத்தில் வைத்து பராமரித்துவந்தனர்.

பிற தவளைகளோடு சேர்த்து வைக்காமல், தனித்து இந்தத் தவளையைப் பராமரித்தனர். செஹியூன்காஸ் தவளையின் வாழ்நாள் சராசரியாக 15 ஆண்டுகாலம் என்பதால், ரோமியோவோடு இந்தத் தவளை இனம் அழிந்துவிடும் அபாயம் இருந்துவந்தது. இந்த அபாயத்தைப் போக்கி ரோமியோவின் சந்ததிகளை உருவாக்க விலங்கியல் ஆய்வாளர்கள் தீவிரமாக முயற்சி செய்துவந்தார்கள். இதே இனத்தைச் சேர்ந்த பெண் தவளை தேடும் முயற்சியில் ஆய்வாளர்கள் குதித்தார்கள். இதற்காக பொலியாவில் காடு, மலை என வெவ்வேறு இடங்களுக்கு ஆய்வாளர்கள் குழு சென்றது.
இதன் காரணமாக ஒரு பக்கம் செலவும் எகிறியது. ரோமியோவுக்கு பெண் தவளை தேடும் முயற்சிக்கு மக்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே சாத்தியம் என்ற நிலை உருவானது.

 இதன் காரணமாக   ‘ரோமியோ டேட்டிங்’கிற்காக அது பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன. இணைய செய்தியால் ரோமியோ தவளை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. ரோமியோவுக்கு ஏற்ற ஜூலியட்டைத் தேடுவதற்காக நிதி உதவியும் குவிந்தது. கோச்சபாம்பா நகர கண்காட்சியக நீர், நில வாழ்வன, ஊர்வன குறித்த படிப்பான ஹெர்படாலஜி துறையின் தலைவர் தெரீசா கமாச்சோ படானி தலைமையில் தேடுதல் வேட்டை தீவிரமடைந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக ரோமியோவுக்கு பெண் தவளையைத் தேடிவந்திருந்தாலும், கடந்த ஆண்டு முதல்தான் தேடுதல் வேட்டை தீவிரமானது. பொலிவியாவின் மழைக் காட்டில் பயணம் மேற்கொண்ட ஆய்வாளர் குழு, நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஓர் ஓடையில் ரோமியோவுக்கு ஏற்ற ஜூலியட்டை ஒரு வழியாகக் கண்டுபிடித்தனர். அந்த ஓடையில் 5 செஹியூன்காஸ் தவளைகளைப் பிடித்து கொண்டுவந்தது ஆய்வாளர் குழு. பிடித்து வரப்பட்ட ஐந்து தவளைகளில் மூன்று ஆண் தவளைகள்,  இரண்டு பெண் தவளைகள் இருந்தன.

ஏற்கனவே இதே பகுதியில் விலங்கியல் ஆய்வாளர்கள் தேடியபோது கிடைக்காத செஹியூன்காஸ் தவளைகள், இப்போது கிடைத்ததால் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது ஆய்வாளர் குழு. தற்போது 10 வயதான ரோமியோ, இன்னும் 5 ஆண்டுகள்வரை வாழக்கூடும் என்று கணித்திருக்கிறார்கள். இதுவரை ‘பேச்சுல’ராகவே இருந்துவிட்ட ரோமியோவுக்கு இப்போதுதான் ஜூலியட் கிடைத்திருக்கிறது. ரோமியோவோடு செஹியூன்காஸ் தவளைகள் முடிவுக்கு வந்துவிடும் என்ற கவலையில் இருந்த ஆய்வாளர்கள், ஜூலியட் கிடைத்ததால் அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிட்டது.
கிடைத்த இரண்டு பெண் தவளைகளில் ரோமியோவுக்கு ஏற்ற ஜூலியட்டையும் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள்.  நோய் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஜூலியட்டை தனியாக வைத்து பராமரித்துவருகிறார்கள் ஆய்வாளர்கள். அதற்கான சிகிச்சையும் ஜூலியட்டுக்கு வழங்கப்பட்டுவருகிறது. சிகிச்சை முடிந்த பிறகு ரோமியோவும் ஜூலியட்டும் சந்திக்க உள்ளன.

ரோமியோவும் ஜூலியட்டும் ஜோடி சேரும் நாளுக்காக ஒட்டுமொத்த விலங்கியல் ஆய்வாளர்கள் குழுவும் காத்திருக்கிறது!

 - இந்து தமிழ், 26/01/2019