12/01/2019

பேட்ட விமர்சனம்

ஒரு கல்லூரிக்கு வார்டனாக வருகிறார் ரஜினி. கல்லூரியில் ராகிங் செய்து தொந்தரவு செய்யும் பாபி சிம்ஹாவையும் முறைகேடு செய்து ஊழல் செய்யும் பாபி சிம்ஹாவின் அப்பா ‘ஆடுகளம்’ நரேனையும் கல்லூரியிலிருந்து துரத்துகிறார். இதனால், ரஜினியை அழிக்க அவர்கள் முயல்கிறார்கள். அதே நேரத்தில் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் சனந்த் ரெட்டியைக் கொல்ல வட இந்திய கும்பல் முயற்சி செய்கிறது. தன் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி சனந்த் ரெட்டியை ரஜினி காப்பாற்றுகிறார்.

அப்போதுதான் சனந்த் ரெட்டிக்கும் ரஜினிக்கும் உள்ள மறைமுகமான நெருக்கம் தெரியவருகிறது. சனந்த் ரெட்டியை வட இந்திய கும்பல் ஏன் கொல்ல நினைக்கிறது என ரஜினி ஆராய்கிறார். இன்னொரு புறம் அந்தக் கொலையைத் தடுத்தது யார் என்று அந்தக் கும்பலும் ஆராய்கிறது. அந்தக் கும்பலுக்கும் சனந்த் ரெட்டிக்கும் ரஜினிக்கும் என்ன தொடர்பு, ரஜினி ஏன் வார்டனாக வந்தார், அந்தக் கும்பலை ரஜினி என்ன செய்தார் போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘பேட்ட’.

முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்கள் விரும்பும் ஒரு படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ரஜினியை எப்படியெல்லாம் காட்டினால், அவரது ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதையெல்லாம் யோசித்து காட்டியிருக்கிறார் இயக்குநர். சுமார் 3 மணி நேரம் நீளம் கொண்ட படம் முழுவதுமே நீக்கமற நிறைந்திருக்கிறார் ரஜினி. வார்டனாக வரும் காளி ரஜினியின் ஸ்டைலும் மேனரிசமும் கவர்கிறது. மாணவர்களின் ஒழுங்கீனங்களைக் களைவது, அவ்வப்போது சிம்ரனுடன் ரொமான்ஸ் செய்வது, மூனிஸ்காந்தை கலாய்ப்பது, வில்லன் வீட்டுக்கே சென்று அவரை கூலாக எதிர்கொள்வது என முதல் பாதியில் ரஜினி ஒவ்வொரு ஃபிரேமிலும் கவர்கிறார்.

தன் ரசிகர்கள் விரும்பும் வகையில் சில சமகால அரசியல் வசனங்களையும் தொட்டு பேசுகிறார் ரஜினி. இதேபோல காதலர் தினம் கொண்டாடுவோரை உதைப்பது, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பது போன்ற சில சமகால அரசியல் நிகழ்வுகளை நினைவூட்டுவது ரசிக்க வைக்கிறது. முதல் பாதி ரகளையும் சேட்டையுமாகப் போகிறது. அதற்கு ரஜினியின் கலகலப்பும் அவரது இயல்பான சுறுசுறுப்பும் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன. 

ரஜினி ரசிகர்கள் விரும்பும் ‘பாட்ஷா’ படம் போல எடுக்கப்பட்ட படம்தான் இது. அதற்காக ‘பாட்ஷா’வையே உல்டா செய்வது? அந்தப் படத்திலிருந்த பாத்திர வார்ப்புகளை பட்டி, டிங்கரிங் செய்து இந்தப் படத்தில் இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். முதல் பாதியின் முடிவில் எழும்  திருப்பங்களுக்கு இரண்டாம் பாதி திரைக்கதையில் தரமான, சிறப்பான சம்பவங்கள் எதுவும் இல்லாமல் போவது படத்துக்கு பலவீனமாகிறது. பழிவாங்கலுக்காகக் காட்டப்படும் காட்சிகள் எல்லாமே போகிற போக்கிலேயே சொல்லப்படுகின்றன. படத்தில் காட்டப்படும் நடப்பு காட்சிகளுக்கும் ஃபிளாஸ்பேக் காட்சிகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் ரஜினி என்ன செய்கிறார் என்று எழும்  கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை.

மதுரையில் ரஜினியைப் பார்த்தாலே பயப்படும் வில்லன் நவாஸுதீன் சித்திக்கை  உத்தரப்பிரதேசத்தில் பெரிய அரசியல் பின்னணி உள்ள வில்லனாகக் காட்டுகிறார்கள். அவர் பெரிய வில்லனாக காட்டுவதற்கான ஒருசில நியாயமான காட்சிகளைப் படத்தில் வைத்திருக்கலாம். இறந்துகிடக்கும் தன் மனைவியையும் மகனையும் அம்போவென விட்டுவிட்டு நண்பனின் மனைவியை ரஜினி காப்பற்றுவது என மனதில் ஒட்டாத காட்சிகளும் படத்தில் வந்துசெல்கின்றன.  ரஜினி - சசிகுமார் நட்பின் பின்னணியிலும் சுவாரசியம் இல்லை. எல்லோரும் ஊகிக்கக்கூடிய ஒரு திருப்பத்தைப் படத்தில் வைத்துவிட்டு, அந்தத் திருப்பத்துக்கு இன்னொரு திருப்பத்தை கிளைமாக்ஸில் காட்டுவது ஆச்சரியம் மூட்டினாலும், அதற்காகச் சொல்லப்படும் காரணங்களில் கொஞ்சமும் வலுவில்லை.

வில்லனின் மகனாக வரும் விஜய் சேதுபதி கச்சிதமாக நடித்திருக்கிறார். வில்லனாக வரும் நவாஸுத்தின் சித்திக் அடாவடி காட்டாமல் அமைதியாக நடித்திருக்கிறார். படத்தில் சிம்ரனும் த்ரிஷாவும் இருக்கிறார்கள். இருவரையுமே சரியாகப் படத்தில் பயன்படுத்தவில்லை. கெட்ட மாணவனாக வந்து பின்னர் திருந்துபவராக வருகிறார் பாபி சிம்ஹா. இயக்குநர் மகேந்திரன், ஆடுகளம் நரேன், மேகா ஆகாஷ், முனீஸ்காந்த், குரு சோமசுந்தரம் எனப் பலருக்கும் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
படத்துக்கு இசை அனிருத். ‘வரணும்.. மாசு வரணும்..’ பாடல் ரசிக்க வைக்கிறது. திருவின் கேமரா மலைக்காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறது.

ரஜினியை மாஸாகக் காட்ட இயக்குநர் மெனக்கெட்டதை  திரைக்கதையிலும் கொஞ்சம் காட்டியிருந்தால் ‘பேட்ட’ ரசிகர்களுக்கு ‘வேட்ட’யாக இருந்திருக்கும்.

மதிப்பெண்: 2.5 / 5

04/01/2019

இயக்குநர் ராம்குமார் - ராட்சச அவதாரம்

ராம்குமார்
‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ என முதல் இரு படங்களை அசல் கிராமத்து படங்களாக இயக்கிய பாரதிராஜா, மூன்றாவது படமாக சைக்கோ த்ரில்லர் படைப்பான ‘சிவப்பு ரோஜாக்கள்’ கதையைக் கையில் எடுத்தபோது, அவரது மாறுபட்ட ரசனையை ஆராதித்தது தமிழ்த் திரையுலகம். நாற்பது ஆண்டுகள் கழித்து இப்போது இயக்குநர் ராம்குமாரின் ‘ராட்சசன்’ படத்தைப் பார்த்து தமிழ்த் திரையுலகம் அதேபோல லயித்துபோயி இருக்கிறது. மூடநம்பிக்கையையும் அதற்குள் ஒரு காதலையும் கலந்து கிராமத்து பின்னணியோடு சொன்ன‘முண்டாசுப்பட்டி’  இயக்குநரின் படம்தான் ‘ராட்சசன்’ என்பதையே நம்ப மறுத்தவர்கள் பலர். இந்த இரு படங்களின் மூலம் இயக்குநருக்கு மாறுபட்ட ரசனைகளும் சிந்தனைகளும் எப்போதும் இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் ராம்குமார்.

புதிய ரசனை

ஒரு திரைப்பட இயக்குநர் வெளிப்படுத்தும் வெவ்வேறுவிதமான ரசனைகளின் சங்கமம்தான் சினிமா. அந்த ரசனைகள் மெருகேறி கதைக்கான கருவாக உருவாகி பிறக்கும்போது அழகிய திரைக்கதையுடன் கூடிய சினிமா கிடைக்கிறது. அப்படி ராம்குமாருக்குள் எழுந்த கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு ரசனையாக எடுக்கப்பட்ட இரு படங்கள்தான் ‘முண்டாசுப்பட்டி, ‘ராட்சசன்’. இரண்டு படங்களுக்கும் இரு துருவ வித்தியாசம். பாமர மக்களின் மனங்களில் காலங்காலமாகப் பசைபோட்டு ஒட்டியிருக்கும் ஒரு மூடநம்பிக்கையை எளிய கிராமிய பின்னணியில் முழு நீள நகைச்சுவை படமாகக் கொடுத்த ராம்குமார், அடுத்தப் படமாக ‘ராட்சச’னை கண் முன்னே கொண்டுவந்து பார்வையாளர்களை மிரட்டினார்.

ஒரு வரிக் கதைக்கு நேர்த்தியான திரைக்கதை, அதையொட்டி கிளைக் கதைகளை அச்சுபிசகாமல் அமைக்கும்போது  நல்ல படம் நிச்சயம் கிடைத்துவிடும். ‘முண்டாசுப்பட்டி’ அப்படி கிடைத்த படம்தான். திருப்பூரை சொந்த ஊராகக் கொண்ட ராம்குமார், சினிமாவுக்கென இருக்கக்கூடிய வழக்கமான நடைமுறைகளைத் தகர்த்தெறிந்து இயக்குநரானவர். எந்த இயக்குநரிடம் உதவி இயக்குநராகவோ அசோசியேட் இயக்குநராகவோ பணியாற்றாமல் நேரடியாக இயக்குநராகி, சினிமா களத்துக்கு வந்தவர். ‘நாளைய இயக்குநர்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் அவர் சினிமாவுக்குள் நுழைவதற்கான முகவரி. அந்த நிகழ்ச்சியில் அவர் கட்டிய ‘முண்டாசுப்பட்டி’ எனும் குறும்படம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. அதுதான் ‘முண்டாசுப்பட்டி’யை சினிமாவாக எடுக்க அவருக்கு துணிச்சலைத் தந்தது.

 வெவ்வேறு கதைக்களம்

எண்பதுகளில் திரைப்படக் கல்லூரி மாணவர்களை நம்பி விஜயகாந்த் வாய்ப்பு தந்ததைபோல குறும்பட இயக்குநராக இருந்தாலும்  நம்பிக்கையோடு வாய்ப்பு தந்தார் தயாரிப்பாளர் சி.வி. குமார். ‘முண்டாசுப்பட்டி’ படத்துக்கு திரைக்கதை அமைக்கவே ஓராண்டு தேவைப்பட்டது என்கிறார் ராம்குமார். 

முண்டாசுப்பட்டி
‘முண்டாசுப்பட்டி’யை  சினிமாவாக எடுக்க அவர் முயற்சித்தபோது ஏராளமான கிளைக்கதைகள் தேவைப்பட்டன. மூடநம்பிக்கைக்குரிய அம்சங்களையும் கிராமத்து மக்களின் வெகுளித்தனத்தையும் அதில் இளையோடிய நகைச்சுவைக் கலந்த காதலையும் எண்பதுகளின் காலச் சக்கரத்தையும் ரசனை மாறாமல் படம் பிடித்துக்காட்டியதால் பட்டித் தொட்டி தாண்டி, நகரங்களின் ‘ஏ’ கிளாஸிலும் ‘முண்டாசுப்பட்டி’ மார்த்தட்டியது.
‘முண்டாசுப்பட்டி’ எனும் வெற்றிப் படத்துக்குப் பிறகு ராம்குமாரை சினிமாவில் காணவேயில்லை. நான்கு ஆண்டுகள் கழித்து ‘ராட்சச’ அவதாரம் எடுத்து களத்துக்கு வந்தார். இந்த டிஜிட்டல் யுகத்தில் 60 நாட்களைக் கடந்து தியேட்டரில் ஓடியதே இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கான அத்தாட்சி. அண்மைக் காலத்தில் வெளிவந்த சிறந்த த்ரில்லர் படம் என்ற பெயரையும் ‘ராட்சசன்’ எடுத்தது. ரஷ்யாவில் நடந்த உண்மைக் கதையை அடிப்படையாக வைத்துதான் இந்தக் கதையை எழுதத் தொடங்கினார் ராம்குமார். தனது கனவுப் படமாக நினைத்த ராம்குமார், இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்குவதற்கு மட்டும் நான்கு ஆண்டுகளை செலவழித்திருக்கிறார்.

வாய்ப்புத் தேடி..

முதல் படத்துக்காக அலையாய் அலையும் இயக்குநர்கள் ஏராளம் உண்டு. ஆனால், பெரிய வெற்றிப் படத்தை எடுத்துவிட்டு அடுத்த படத்துக்காக புதுமுக இயக்குநரைப்போல அலைவதெல்லாம் தமிழ் சினிமாவில் மட்டுமே நடக்கும் விசித்திரம். ராம்குமாருக்கு இப்படித்தான் நடந்தது. வெற்றிப் படமான ‘முண்டாசுப்பட்டி’யை எடுத்த ராம்குமார், தொடர்ச்சியாக கொலைகளை செய்யும் சைக்கோ பற்றிய கதைக்கான கருவுடன் ஒரு புதுமுக இயக்குநரைப் போல வாய்ப்புத் தேடி அலைந்தார். ‘ராட்சசன்’ படத்தில் நாயகன் விஷ்ணு இயக்குநராக வாய்ப்புத் தேடி அழையும் காட்சிகள் எல்லாமே ராம்குமாரின் அனுபவங்கள்தாம்.

இதுபற்றி இயக்குநர் ராம்குமார் இப்படிச் சொன்னார். “‘முண்டாசுப்பட்டி’யின் பிம்பம் என் மீது விழுந்ததால், ‘ராட்சசன்’ படத்தைத் தயாரிக்க எந்தத் தயாரிப்பாளரும் முன்வரவில்லை.  ‘ராட்சசன்’ கதையை 15-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருப்பேன். பலருக்கும் நம்பிக்கையே வரவில்லை. நிராகரிக்கும்போதுதான் படைப்பின் மீது தீவிரமான காதல் உண்டாகும். எனக்கும் ‘ராட்சசன்’ படத்தின் மீதான காதல் தீவிரமானது அப்படித்தான். அதனால்தான் அந்தப் படம் எனது கனவுப் படமானது.” என்கிறார் ராம்குமார். அந்தப் படத்தை முடித்த பிறகுதான் வேறு படத்தை இயக்க வேண்டும் எனும் அளவுக்கு ‘ராட்சசன்’ படம் ராம்குமாரின் லட்சியப்

ராட்சசன்
படமானது.
ராட்சசன் மேஜிக்

சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் நீளம் கொண்ட ‘ராட்சசன்’ படத்தை தொடக்கம் முதல் கடைசிவரை த்ரில்லிங் குறையாமல் பார்த்துகொண்டதில் இயக்குநர் ராம்குமார் ஜெயித்துகாட்டினார். உளவியல் கலந்த த்ரில்லர் படம் என்பதால், அதற்கேற்ப வேகத்தடை இல்லாத திரைக்கதையை அமைத்ததும் படம் மிகப் பெரிய வெற்றியடைய காரணமானது. சிதைக்கப்படும் பொம்மை, காது கேளா கருவி, பியானோ இசை, மேஜிக் என விடை தெரியாமல் கிடைக்கும் தடயங்களை வைத்துகொண்டு கொலையாளியை நாயகன் அடையாளம் காணும் காட்சிகள் ரசிகர்களின் மனதில் ‘ராட்சசன்’ படத்தை ஹாலிவுட் அளவுக்கு உயர்த்தியது.

எப்போதுமே முதல் படத்தின் பாணியிலேயே தனது அடுத்தடுத்தப் படங்களை இயக்குவது இயக்குநர்களுக்கே உரித்தானது . சில இயக்குநர்கள்தாம் இரண்டாம் படத்திலேயே தனது டிராக்கை விட்டு இறங்கி அடுத்த ரசனைக்கு செல்வார்கள். ராம்குமாரும் அப்படி தமிழ் சினிமாவில் காலங்காலமாகத் தொடரும் அழுத்தங்களுக்குப் படியாமல் மாறி சென்றதால்தான் மாறுபட்ட  ரசனைகளைக் கொண்ட இரு படங்களை அவரால் கொடுக்க முடிந்தது.

தரமான சினிமா லட்சியம்

ஒரு இயக்குநர் என்பவர் எதுவும் வராது என்று சொல்லக் கூடாது. எல்லாவற்றையும் செய்துகாட்ட வேண்டும். எப்போதும் சினிமா என்பதை மறந்து, அந்தக் கதைக்குள் பார்வையாளர்களை இழுத்து செல்லும்போதுதான் படைப்பாளிக்கு வெற்றி கிடைக்கிறது. இந்த உத்தி ராம்குமாருக்கு நன்றாகவே வாய்த்திருக்கிறது. ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களுக்குள் பார்வையாளர்களை இழுத்து சென்றுவிட்டதில் அவரது வேகமான, விறுவிறுப்பான திரைக்கதைக்கும் முக்கிய பங்குண்டு. பார்வையாளர்களை சினிமாவுக்குள் லயிக்க வைத்தால்தான் அது நல்ல திரைக்கதை. எல்லா உணர்வுகளையும் படத்துக்குள் கொண்டுவரும்போது பார்வையாளர்களை அது பரவசப்படுத்தும். ஆனால், அதற்கு மெனக்கெட வேண்டும். இந்த விஷயத்தில் ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ என இரு படங்களுக்கும் அதிகமாகவே மெனக்கெட்டிருக்கிறார் ராம்குமார்.

தரமான, ரசனையான படங்களுக்கு ரசிகர்கள் தார்மீக ஆதரவை எப்போதுமே தர தவறுவதில்லை.  வெவ்வெறு கதை அம்சங்கள் உள்ள படங்களைத்தாம் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்போதுவரும் புதிய இயக்குநர்கள் பலரும் அதை நன்றாகவும் உணர்ந்திருக்கிறார்கள்.  இயக்குநர் ராம்குமாரும் இதையே எதிரொலிக்கிறார். “தன்னுடைய காசை செலவு செய்து, இரண்டரை மணி நேரத்தையும் சினிமாவுக்காக ரசிகர்கள் தருகிறார்கள். அப்படி வரும் ரசிகர்களை ஏமாற்றாமல், பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் அது மிகச் சிறந்த படைப்பாக வரும். நல்ல படைப்பை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். குறைந்தபட்சம் நல்ல பொழுதுபோக்கை கொடுத்தால்தான், ரசிகர்கள் திருப்தி அடைவார்கள்.” என்கிறார் ராம்குமார்.

தொடரட்டும் மாற்று சிந்தனை

இன்றைய இயக்குநர்கள் பலரும் சமூகக் கருத்துடன் கூடிய சினிமாவை எடுக்க அதிக அக்கறை காட்டுகிறார்கள். இந்த விஷயத்தில் ராம்குமார் சற்று மாற்று சிந்தனை உள்ளவராகவே இருக்கிறார். சினிமாவில் பொழுதுப்போக்கிற்குதான் முக்கியத்துவம் தர வேண்டும் என்றே அவர் எப்போதும் வலியுறுத்துகிறார்.  ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் கேமராவில் படம் பிடித்தால் இறந்துவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கையை ராம்குமார் சொல்லியிருந்தார். காலங்காலமாக எளிய கிராமத்து மக்களிடம் பரவியிருக்கும் மூட நம்பிக்கை அது. அதை அதிக மிகையில்லாமல் அந்தப் படத்தின் கதையோட்டத்தோடு ராம்குமார் சொல்லியிருப்பார்.   "வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி சமூகக் கருத்துகளை அளவாகச் சொன்னால் போதும்” என்பதுதான் ராம்குமாரின் தீர்க்கமான எண்ணம்.

இந்தத் தலைமுறை இயக்குநர்களை இரண்டு விதமாகப் பிரித்துவிடலாம். வெளி நாட்டு படங்களைக் கண்டு அதன் பாதிப்பை உள்வாங்கி, அந்தக் கதையை நம்முடைய மண்ணுக்குப் தகுந்தார்போல உல்டாவாக்கி படத்தை இயக்குபவர்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அயல்நாட்டுக் கதைகளின்  தாக்கம் இல்லாமல் மண் சார்ந்த கதைகளை ரசனையுடன் சொல்வோர் இரண்டாவது ரகம். இந்த இரண்டு வகை இயக்குநர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. முந்தைய தமிழ் சினிமா இயக்குநர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அது. இவர்களில் ராம்குமாரும் ஒருவர். மண்ணின் மனம் வீசும் கதையையும் சொல்கிறார். ஹாலிவுட் பாணியிலான கதையையும் சொல்கிறார். இரண்டுமே ரசிகர்களின் ரசனைக்குத் தீனிபோடுகின்றன. தமிழ் சினிமாவுக்கு இது ஆரோக்கியமான, புதுமையான விஷயம். இது என்றும் தொடர வேண்டும்! 

ராம்குமார் கேள்வி - பதில்


இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சினிமா விமர்சனத்தின் தரம் மேம்பட்டிருக்கிறதா தாழ்ந்திருக்கிறதா?

சினிமா விமர்சனம் என்பது எப்போதும் நிறை, குறைகளைப் பற்றி பேச வேண்டும். குறைகளை மட்டுமே சொல்வது என்பது இப்போது அதிகரித்துவிட்டது. குறைகளை மட்டும் அடுக்கி படத்தை மதிப்பீட்டு சொல்வது தவறு. அந்தவகையில் தரம் தாழ்ந்திருக்கிறது. ‘ராட்சசன்’ படத்தையும் இப்படி குறைகளை மட்டும் பட்டியலிட்டு விமர்சனம் செய்தார்கள். ஆனால், அந்த விமர்சனத்துக்கு எதிராக ரசிகர்கள் கருத்து சொல்லி வாயை அடைத்தார்கள். எப்போதும் சினிமா விமர்சனம் நடுநிலையுடன் இருக்க வேண்டும்.

தமிழ் சினிமாவின் உள்ளடக்கத்தில் என்ன மாறுதலைச் செய்ய வேண்டும்?

ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை திரை மொழி  மாறிகொண்டிருப்பதாக எனக்கு ஓர் எண்ணம். பார்வையாளர்களிடம் வெளிப்படுத்தும் விஷயம் மாறிக்கொண்டிருப்பதாக நினைக்கிறேன். அந்த மாற்றத்தை ஒவ்வொரு இயக்குநர்களும் கற்றுக்கொண்டால்தான் நிலைத்து நிற்க முடியும். திரை மொழியைக் கற்றுக்கொண்டால்தான் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். அதில் எனக்கு விருப்பம் நிறைய இருக்கிறது. அப்படி மாற்றிக்கொண்டால், உலகப் படங்களுக்கு இணையாககத் தமிழ்ப் படங்களும் போட்டிப்போட முடியும்.



- இந்து தமிழ் பொங்கல் மலர், 2019

02/01/2019

திருவாரூர் இடைத்தேர்தல்: ஸ்டாலினுக்கு அக்னீப் பரீட்சையா?

திருவாரூர் இடைத்தேர்தல் மற்ற கட்சிகளைவிட திமுகவுக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும் தேர்தலாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில், அவர் என்னென்ன நெருக்கடிகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன?

திருவாரூர் திமுகவின் கோட்டை. 1967-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு தேர்தல் வரை திமுக ஆதிக்கம் செலுத்தி வரும் தொகுதி. இந்திரா காந்தி மரணம், எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1984-ம் ஆண்டு தேர்தலில்கூட இங்கே திமுக கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இதேபோல 1991-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அலையிலும்கூட திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றிருக்கிறது. திமுக 1980-ம் ஆண்டு தேர்தலில் மட்டுமே இங்கே தோல்வியடைந்தது. அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவை 1,528 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது.

நீண்ட நாட்களாகத் தனித்தொகுதியாக இருந்த திருவாரூர், 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் பொதுத் தொகுதியாக மாறியது. இந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது கருணாநிதியின்  நீண்ட நாள் கனவு. தொகுதி மறுசீரமைப்புக்கு அது நனவானது. 2011-ம் ஆண்டில் இங்கே போட்டியிட்ட கருணாநிதி, 50, 249 வாக்குகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றார். இதேபோல 2016 திருவாரூர் சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் கருணாநிதி 1,21,473 வாக்குகளைப் பெற்றார். அதிமுக 53,107 வாக்குகள் மட்டுமே பெற்றது. கருணாநிதி  68, 366 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமாக வெற்றிபெற்றார்.

இப்படி பாரம்பரியமாக திருவாரூர் தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்துவருகிறது. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், அனுதாப அலை திமுகவுக்கு சாதகமாக வீச வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமல்ல, எம்ஜிஆர், ஜெயலலிதா என அதிமுகவின் இரு பெரும் தலைவர்கள் இருந்த காலத்திலேயே அவர்களால் திமுகவை இங்கே அசைத்து பார்க்க முடியவில்லை. ஆனால், தமிழகத்தில் நிலவும் மாறுபட்ட  இடைத்தேர்தல் அணுகுமுறையால், முந்தைய காலத்தைப்போல திருவாரூர் தொகுதி திமுகவுக்கு மிக சாதகமான தொகுதியாக  இருக்குமா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. அதிமுக, அமமுகவைவிட திமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதே நிதர்சனம். அதற்கு பல காரணங்கள் உண்டு. 

திமுகவின் சிட்டிங் தொகுதி என்பதால், மற்ற கட்சிகளைவிட திமுகவுக்குத்தான் இந்த இடைத்தேர்தல் ஆசிட் டெஸ்ட்டாக இருக்கக்கூடும். திமுகவை 50 ஆண்டு காலம் கட்டிக் காத்த கருணாநிதியின் தொகுதியைத் தக்கவைக்க வேண்டும் என்ற நெருக்கடி திமுகவுக்கு இயல்பாகவே ஏற்படக்கூடும். 

2017-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது. அந்தத் தொகுதி அதிமுகவின் கோட்டை என்றாலும், அதிமுகவும் தினகரனும் முட்டிக்கொண்ட போதிலும், அந்தத் தேர்தலில் திமுகவின் பாரம்பரிய வாக்குகள் காணாமல் போயிருந்தன. இது ஸ்டாலின் தலைமைக்கு சோதனையை ஏற்படுத்தியது. அப்போது முதலே ஆர்.கே. நகரில் திமுக டெபாசிட் இழந்ததைக் குறிப்பிட்டு பேசுவதை திமுகவை விமர்சிப்போர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்த இடைத்தேர்தலில் அந்தக் கறையைப் போக்க வேண்டிய பெரும் பொறுப்பு திமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், இந்தத் தேர்தல் அவருடைய தலைமையை மதிப்பிடும் தேர்தலாகவும் அமைய வாய்ப்புகள் உள்ளன. அதையும் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி இயல்பாகவே திமுகவுக்கு தொற்றிக்கொள்ளக்கூடும். ஒருவேளை ஸ்டாலினின் சகோதரர் அழகிரி திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டால், அந்த இடையூறையும் திமுக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வழக்கமாகவே பொதுத்தேர்தலுக்கும் இடைத்தேர்தலுக்கும் உள்ள அணுகுமுறை மாற்றம் திருவாரூரிலும் எதிரொலிக்க வாய்ப்புகள் உண்டு. ஆட்சி, அதிகாரத்தோடு தேர்தலை எதிர்கொள்வதற்கும் ஆட்சியில் இல்லாதபோது தேர்தலை எதிர்கொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தை திமுக நன்றாகவே உணர்ந்திருக்கும். அதையும் இந்த இடைத்தேர்தலின்போது திமுக சமாளிக்க வேண்டியதிருக்கும்.

அதிமுக, அமமுகவைப் பொறுத்தவரை அவர்களுக்குள் யார் அதிகமாக வாக்குகள் வாங்குகிறார்கள்; தொண்டர்களும் மக்களும் யாரை ஆதிரிக்கிறார்கள் என்ற போட்டியோட மட்டுமே இங்கே தேர்தலை எதிர்கொள்ள வாய்ப்புகள் உண்டு. இந்த இரு கட்சிகளும் தோல்வியடைந்தால், அது அவர்களைப் பெரிய அளவில் பாதிக்காது. யார் அதிகமாக வாக்குகள் பெற்றார்களோ, அதை வைத்து அவர்களுக்குள் அரசியல் நகர்வுகள் மட்டுமே மாறுபடும். ஆனால், திமுகவுக்கு சறுக்கல் ஏற்பட்டால், ஸ்டாலினின் தலைமை பற்றிய விவாதம் சூடுபிடிக்கும். அது அடுத்த மூன்று மாதங்களில் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சிக்கு அவநம்பிக்கையைக் கொடுத்துவிடும்.

அதனால்தான் இந்த இடைத்தேர்தல் பலவகையில் மற்ற கட்சிகளைவிட திமுகவுக்கு அக்னிப் பரீட்சையாக இருக்கலாம்.

- இந்து தமிழ், 02/01/2019

01/01/2019

கிரிக்கெட்டில் சிறப்பான தரமான சம்பவம்




வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களைப்போல இந்தியாவில் யாரும் இல்லையே என்ற ஏங்கிய காலம் ஒன்று இருந்தது. இன்றோ வேகப்பந்து வீச்சில் அசத்தும் நாட்டினரைக்கூட ஓரங்கட்டிவிட்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சாதனை மேல் சாதனை படைத்துவருகிறார்கள். அவற்றில் பும்ரா, முகம்மது ஷமி, இஷாந்த் சர்மா கூட்டணி ஓராண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அணி என்ற முத்தாய்ப்பான சாதனையைப் படைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளில் இருந்ததைப்போல இந்தியாவில் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சு கூட்டணி என்ற ஒன்று எந்தக் காலத்திலும் அமைந்ததே கிடையாது. பல்வேறு சந்தர்ப்பங்களில் டெஸ்ட் போட்டிகளில் இரண்டே வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியிருக்கிறது. ஆனால், தற்போது மற்ற நாட்டு வேகப்பந்து வீச்சாளார்களுக்கு இணையாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் உயர்ந்தது இந்த ஆண்டு நடந்தேறியது.

குறிப்பாக இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களைத் தொடர்ந்து, தற்போது ஆஸ்திரேலியாவிலும்ல் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் அமர்க்கப்படுத்திவருகிறார்கள். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வெளிநாடுகளில், அந்த நாட்டு வீரர்களை இந்தியாவின் வேகங்கள் சாய்த்து அதிரடித்துவருகிறார்கள். இந்தியாவின் பும்ரா, முகம்மது ஷமி, இஷாந்த சர்மா கூட்டணி தொடர்ச்சியாகவே விக்கெட்டுகளை அறுவடை செய்து ஆதிக்கம் செலுத்திவருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர்களான கார்னர், ஹோல்டிங், மார்ஷல் கூட்டணிதான் இதுவரை ஓராண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய கூட்டணி என்ற சிறப்பை பெற்றிருந்தது. இந்தக் கூட்டணி 1984-ம் ஆண்டில் 130 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் வகித்துவந்தது. 34 ஆண்டுகால சாதனையை தற்போது இந்தியாவின் பும்ரா, ஷமி, இஷாந்த் கூட்டணி முறியடித்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 135 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்திருக்கிறது.

இந்த ஆண்டில் மட்டும் பும்ராவும் ஷமியும் தலா 47 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்த வரிசையில் தென் ஆப்பிரிக்காவின் மோர்க்கல், மக்காயா நிட்னி, ஸ்டெயின் கூட்டணி 2008-ம் ஆண்டில் 123 விக்கெட்டுகளை மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டு பெரும்பாலும் இந்திய அணி வெளிநாடுகளில்தான் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான அந்நிய மண் டெஸ்ட் போட்டிகளின் மூலமே இந்திய வேகங்கள் இந்தச் சாதனையைப் படைத்திருப்பது, இந்திய கிரிக்கெட்டில் சிறப்பான தரமான ஒரு சம்பவம்தானே!
- இந்து தமிழ், 01/01/2019