
17 வயதில் இடம்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில்தான் மித்தாலி ராஜ் பிறந்துவளர்ந்தார். ஆனால், அடிப்படையில் அவர் ஒரு தமிழர். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மித்தாலி ராஜின் தந்தை துரைராஜ் விமானப்படை அதிகாரியாகப் பணியாற்றியவர். இன்று மகளிர் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீராங்கனையாக இருக்கும் மித்தாலி, சிறுமியாக இருந்தபோது கிரிக்கெட்டில் பெரிய ஆர்வமில்லாதவர். மித்தாலியை ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவரது பெற்றோர் கிரிக்கெட் பக்கம் அவரை தள்ளிவிட்டனர். மித்தாலி கிரிக்கெட் பேட்டைப் பிடித்து விளையாடியபோது 10 வயது. ஆனால், 17 வயதிலேயே இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு தன்னை மெருக்கேற்றிக் கொண்டார்.
அறிமுகப் போட்டியில் சதம்
1999-ம் ஆண்டில் அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிதான் அவரது முதல் சர்வதேச ஆட்டம். முதல் போட்டியிலேயே 114 ரன்கள் விளாசி மகளிர் கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். முதல் போட்டியே அவருக்கு நிச்சயம் மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. அந்தப் போட்டியில் மித்தாலியும் மற்றொரு அறிமுக வீராங்கனையான ரேஸ்மா காந்தியும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இந்தப் போட்டியில் இருவருமே சதம் அடித்தார்கள். மித்தாலி ராஜ்க்கு முன்பாக ரேஷ்மா காந்தி சதம் அடித்ததால், அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த இரண்டாவது வீராங்கனை என்ற சிறப்புதான் மித்தாலிக்குக் கிடைத்தது. இந்தப் போட்டிதான் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மித்தாலிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அபாயகரமான வீராங்கனை
இதேபோல 2002-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார். முதல் டெஸ்ட் போட்டியில் அவர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். ஆனால், மூன்றாவது போட்டியில் 214 ரன்களைக் குவித்து கவனத்தை ஈர்த்தார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் இதுவரை இதுதான் இரண்டாவது அதிகபட்ச ரன். சச்சின் டெண்டுல்கரைப்போல சூழ்நிலைக்கு தகுந்தார்போல விளையாடும் அற்புதமான வீராங்கனை மித்தாலி ராஜ். பார்ப்பதற்கு அவர் நிதானமாக விளையாடுவதைப்போல தெரிந்தாலும், ரன் குவிப்பதில் வல்லவர். மித்தாலி எந்த நிலையில் களமிறங்கினாலும் எதிரணியினருக்கு அச்சம் தரும் வீராங்கனையாகவே விளங்கினார். அதன் காரணமாகவே ‘அபாயகரமான கிரிக்கெட் வீராங்கனை’ என்ற சிறப்பையும் பெற்றார் மித்தாலி ராஜ்.
சாதனை மேல் சாதனை
சர்வதேச அரங்கில் டெஸ்ட் போட்டிகளே பெண்களுக்கு நடத்தப்படுவது
நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், ஒரு நாள் கிரிக்கெட்டில் முடி சூடா ராணியாகக் கோலோச்சிவருகிறார் மித்தாலி ராஜ். இதுவரை 198 ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ள 6,550 ரன்களை இதுவரை குவித்திருக்கிறார். இதில் 7 சதங்கள், 51 அரைசதங்கள் அடங்கும். பேட்டிங் சராசரி 51. உலக அளவில் எந்த வீராங்கனையுமே 6 ஆயிரம் ரன் என்ற மைல்கல்லை இதுவரை தொட்டதில்லை. 2017-ம் ஆண்டில் அந்தச் சாதனையைப் படைத்த முதல் வீராங்கனையானார் மித்தாலி. அதே ஆண்டில் மித்தாலி ராஜ் கிரிக்கெட் ராணியாக உச்சம் தொட்டார். அவர் தொடர்ச்சியாக அடித்த 7 அரை சதங்கள் இந்தப் பெயரை அவருக்குப் பெற்று தந்தது. ஆண்கள் அணியில்கூட எந்த வீரரும் செய்யாத சாதனை இது. இந்திய அணியின் வெற்றிகரமான சேஷிங்குகளில் மித்தாலியின் பங்கு இல்லாமல் இருந்ததில்லை. சேஷிங்குகளி மட்டும் அவரது சராசரி 109.68 ரன்.
டி20 முத்திரை
ஒரு நாள் போட்டிகளைபோலவே விரைவாக ரன் சேர்க்கக்கூடிய டி20 போட்டியிலும் மித்தாலி ராஜ் தன் ராஜ்ஜியத்தைப் படரவிட்டிருக்கிறார். 2006-ம் ஆண்டு முதல் டி20 போட்டியில் விளையாடினார். 35 வயதை எட்டியபோதும் டி20 போட்டியில் இப்போதுவரை அணியின் முக்கிய வீராங்கனையாக மித்தாலி ராஜ் தொடர்கிறார். 85 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் மித்தாலி, 2,283 ரன்களைக் குவித்தார். ஒட்டுமொத்தமாக டி20 ரன் குவிப்பில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள்கூட மித்தாலிக்குக் கீழ்தான் இருக்கிறார்கள். டி20 போட்டியில் 18 அரைசதங்களும் இதில் அடங்கும். எவ்வளவோ சந்தர்ப்பங்களில் ஒரு நாள் போட்டியிலும் டி20 போட்டியிலும் தனி ஆளாக நின்று இந்திய அணியை மீட்டிருக்கிறார்.
வெற்றிகரமான கேப்டன்
வீராங்கனையாக மட்டுமல்லாமல், கேப்டனாகவும் மித்தாலி ராஜ் வெற்றிகரமானவராகத் திழந்துவருபவர். மகளிர் கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மட்டுமே கோலோச்சிய காலத்தில், இந்திய அணியையும் அந்த அணிகளுக்கு இணையாகப் பேச வைத்தவர் மித்தாலி ராஜ். உச்சகட்டமாக இவரது தலைமையின் கீழ் 2016 முதல் 2017-ம்
ஆண்டுவரை தொடர்ச்சியாக 16 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியை ருசித்ததை இதற்கு உதாரணமாக்ச் சொல்லலாம். சுமார் 19 ஆண்டுகளாக இந்திய அணியில் நீடித்துவரும் மித்தாலி ராஜூக்கு மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அவரது தலைமையின் கீழ் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு கடந்த ஆண்டு வந்தும், நூலிழையில் மித்தாலி ராஜ் கோட்டைவிட்டார். ஆனாலும், இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பறியது.
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மித்தாலியின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் 2013-ல் மத்திய அரசு அர்ஜுனா விருதையும் 2015-ல் பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கவுரவித்தது. இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம்; வீரர்கள் ஒவ்வொருவரும் ஒரு கடவுள் எனப் போற்றப்பட்டபோதும், கிரிக்கெட் வீராங்கனைகள் அதில் ஒரு பங்கு அளவுக்குக்கூடப் போற்றப்பட்டதில்லை. ஆனால், அந்த ஓரவஞ்சனையைக்கூட தனது பேட்டால் விரட்டி, மகளிர் கிரிக்கெட்டுக்கும் விசாலமான பார்வையைக் குவியத் தொடங்கி வைத்ததில் மித்தாலி ராஜூக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது.
- இந்து தமிழ், 06/12/18
No comments:
Post a Comment