15/03/2018

சோனியாவின் டின்னர் பார்ட்டியால் மாற்றம் ஏற்படுமா?

  நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஓராண்டு இருக்கிறது. அதற்குள் தேர்தல் முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக எம்பிகளோடு ஆலோசனை செய்கிறார்; தேர்தலுக்குத் தயாரகுமாறு அறைகூவல் விடுக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பலப்படுத்தும் முயற்சியாக மாநில கட்சிகளின் தலைமையை அழைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி விருந்துவைக்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக தன்னுடைய பலத்தைப் பெருக்கிவரும் நிலையில், சோனியா காந்தியின் இந்த முயற்சிக்குப் பலன் கிடைக்குமா?

பொதுவாக காங்கிரஸ் தலைமையில் செயல்படும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பாஜக தலைமையில் இயங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி என இரண்டு கூட்டணிகளிலுமே மாநில கட்சிகள் அங்கம் வகித்துவருகின்றன. பெரும்பாலும் மாநிலத்தில் பலமாக உள்ள பிராந்தியக் கட்சிகள் இந்த இரண்டு கூட்டணியில் ஒன்றில் இடம்பெற்று தேர்தலைச் சந்திக்கின்றன. சில பிராந்திய கட்சிகள் இந்த இரண்டு கூட்டணியிலுமே இடம் பெறாமல் தேர்தலைச் சந்திப்பதும் உண்டு. கடந்த 20 ஆண்டு காலமாக   நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் இந்தப் பாணியில்தான் போட்டியிட்டுவருகின்றன.

ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி உருவாக்கம் பற்றிய பேச்சு எழுவது வாடிக்கை. வழக்கமாக இந்தக் குரல் இடதுசாரிகளிடமிருந்து வெளிப்படும். ஆனால், இந்த முறை திரினாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரிடமிருந்து அண்மையில் வெளிப்பட்டது. இந்தக் கருத்தை வெளிப்படுத்தியதோடு அல்லாமல் ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம், தமிழகத்தில் திமுக, மகாராஷ்டிராவில் சிவசேனா உள்ளிட்ட கட்சி தலைமைகளுடன் மம்தா பானர்ஜி பேசினார்ர். மூன்றாவது அணி தொடக்கம் குறித்த இந்தப் பேச்சுவார்த்தை தேசிய அரசியலில் ஹாட் டாபிக் ஆனது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவும் 3-வது அணி உருவாக்க ஏற்கெனவே குரல் கொடுத்துவருகிறார். 

மம்தா பானர்ஜியின் 3-வது அணி முயற்சி காங்கிரஸ் கட்சியை அசைத்து பார்த்திருக்கிறது. மம்தா, சந்திரசேகர ராவ் போன்றோரின் 3-வது அணி குரலையடுத்து, காங்கிரஸ் கட்சி விழித்துக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே பல மாநிலங்களில் ஆட்சியை இழந்திருக்கும் காங்கிரஸ் கட்சி, பலம் குன்றியே காணப்படுகிறது. 2019 மக்களவைத் தேர்தலும் அந்தக் கட்சிக்கு அக்னீப் பரீட்சையாக இருக்கக்கூடும். எனவே மாநிலக் கட்சிகளோடும், பிற தேசிய கட்சிகளோடும் கூட்டணி சேரும் நிர்பந்தம் அந்தக் கட்சிக்கு இருக்கிறது.

இந்தச் சூழலில் மம்தா, சந்திரசேகர ராவ் ஆகியோரின் மூன்றாவது அணி முயற்சி, பாஜகவுக்கு லாபமாக முடியும் சூழல் உண்டாகலாம். அந்த முயற்சியை உடனடியாகக் கிள்ளியெறிய வேண்டிய அவசியம் காரணமாகவே திமுக, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி, ஆர்ஜேடி, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி உள்பட 20 கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் விருந்து வைத்து, புதிய கூட்டணி உறவை உருவாக்க முயற்சித்திருக்கிறது காங்கிரஸ்.

காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக 3-வது அணிக்குக் குரல் கொடுத்த மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியும் இந்த விருந்தில் பங்கேற்றது பலரது புருவத்தையும் உயர செய்தது. அதேநேரம் 3-வது அனிக்குக் குரல் கொடுத்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை காங்கிரஸ் அழைக்கவில்லை. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியுடன் சந்திரசேகர ராவ் மோதல் போக்கை கடைபிடிப்பதால், அவரை அழைக்கவில்லை.
காங்கிரஸைப் பொறுத்தவரை பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைத்தால்தான் வெற்றி அருகே செல்ல முடியும். இதை காங்கிரஸ் கட்சியும் நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2004-ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு காங்கிரஸ் தலைமையில் அமைந்த கூட்டணிதான் காரணம். 2009-ல் ஆட்சியைத் தக்க வைக்கவும் கூட்டணிதான் காரணம். 2004-ம் ஆண்டிலும் இதேபோல கட்சிகளை அழைத்து சோனியா காந்தி மதிய விருந்து ஒன்றை வைத்தார் சோனியா. அப்போதாவது தேர்தலுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் விருந்துவைத்தார். ஆனால், இந்த முறை ஓராண்டுக்கு முன்பே சோனியா விருந்து வைத்திருப்பது, மூன்றாவது அணிக்கான முயற்சியை முளையிலேயே கிள்ளி எறியத்தான்.

2004, 2009-ம் ஆண்டு  ஃபார்மூலாபடிதான் 2019 தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவருகிறது காங்கிரஸ். உத்தரப்பிரதேசத்தில் முக்கிய கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இதுவரை இடம்பெற்றதில்லை. ஆனால், மறைமுகமாக சில சந்தர்ப்பங்களில் காங்கிரஸுடன் கைகோர்த்திருக்கின்றன. திரினாமூல் காங்கிரஸ் கட்சி 2004-ல் பாஜக தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்டது. ஆனால், 2009-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மாறியது. இந்த மூன்று கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வருவதுதான் காங்கிரஸின் பெரும் பணியாக இனி இருக்கக்கூடும். அதற்கு முன்னோட்டமாகவே விருந்து நிகழ்ச்சியை காங்கிரஸ் முன்னெடுத்திருக்கிறது.

2019-ம் ஆண்டு தேர்தலுக்காக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த விருந்து அளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாகவே இந்த விருந்து நிகழ்ச்சியைப் பார்க்க முடிகிறது. காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி என்று மம்தா பானர்ஜி கூறிய பிறகு, அந்தக் கட்சியையும் கூட்டணிக்குள் கொண்டு வரும் உத்தியாகவே இது பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி பங்கேற்ற 1998-ம் ஆண்டு டீ பார்ட்டி, 2004-ல் காங்கிரஸ் கட்சி வைத்த லஞ்ச் பார்ட்டி போன்றவை அன்று ஆளுங்கட்சியாக இருந்த பாஜகவை எதிர்க்கட்சியாக்கியது. இன்று காங்கிரஸ் கட்சி வைத்திருக்கும் டின்னர் பார்ட்டியால், மாற்றம் ஏற்படுமா? தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


- காமதேனு, 14/03/18

http://www.kamadenu.in/news/politics/752-sonia-gandhi-party.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

No comments:

Post a Comment