எத்தனை ஆண்டுகள் ஆனாலும், சில படங்களுக்கு
மட்டும் வரவேற்பும் அங்கீகாரமும் குறையவே குறையாது. அதற்கு இன்றும் சரியான உதாரணம்
‘பாட்ஷா’. 1990-களில் வந்த ரஜினியின் ப்ளாக்பஸ்டர் படங்களில் ஒன்று. ரஜினியின் படம்
என்றாலே தியேட்டர்கள் திருவிழாக் கோலம் காண்பதும், ரசிகர்களின் எல்லையில்லா ஆரவாரமும்
புதிதல்ல. ஆனால், 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல் பதிப்பில்
வெளியான ‘பாட்ஷா’வுக்கு கிடைக்கிறது என்றால் அதுதான் ‘பாட்ஷா’வின் சிறப்பு.
சத்யா மூவிஸின்
தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணாவின் விறுவிறு திரைக்கதை, ஸ்டைல், ஆக்ஷன், செண்டிமெண்ட்
என மிரட்டிய ரஜினியின் நடிப்பு, ரகுவரனுக்கே உரிய வில்லத்தனம், நாடி நரம்புகளை ஊடுருவிச்
செல்லும் தேவாவின் சூப்பர் இசை என ரசிகர்களின் மனங்களில் எப்போதும் சம்மணம் போட்டு
உட்கார்ந்திருக்கும் ‘பாட்ஷா’ பொங்கல் திருநாளையொட்டி 1995 ஜனவரி 12 அன்று வெளியானது.
சத்யா மூவிஸ் தொடங்கி 50 ஆண்டுகள் ஆனதன் ஒரு பகுதியாக, அந்த நிறுவனத்தின் மிகப் பெரிய
வெற்றி படமான ‘பாட்ஷா’ இப்போது 5.1 டிஜிட்டல் ஒலி அமைப்பில் மாறியது. மீண்டும் அந்தப்
படம் ரசிகர்களை தெறிக்கவிட வருகிறது. ‘பாட்ஷா’வின் டிஜிட்டல் பதிப்புக்கு ரசிகர்களிடம்
கிடைத்த பெரிய வரவேற்பை சென்னை சத்யம் சினிமாஸில் பார்க்க முடிந்தது.

படம் பார்க்க வந்திருந்தவர்களில்
பெரும்பாலோனர் 30 வயதுக்குட்பட்டவர்கள்தான். இந்தப் படம் வந்தபோது குழந்தைகளாகவோ சிறுவர்களாகவோ
அவர்கள் இருந்திருப்பார்கள். பாடல் காட்சி, ரஜினி அறிமுகக் காட்சி, ‘ஐயா எனக்கு இன்னொரு
பேரு இருக்கு’ என்று ரஜினி சொல்லும் காட்சி, பூட்ஸ் கால் ஓசையுடன் ரஜினி நடந்து வரும்
காட்சி, மாணிக்கம் பாட்ஷாவாக மாறும் காட்சி, ரஜினி-ரகுவரன் சந்திக்கும் காட்சிகள் வருவதற்கு
முன்பே ரசிகர்களின் ஆரவாரம் காதுகளைக் கிழித்தன. அந்த அளவுக்குத் தலைமுறைத் தாண்டி
ரசிகர்களின் மனங்களில் ‘பாட்ஷா’வின் ஒவ்வொரு காட்சியும் ஆழப் பதிந்திருக்கிறது. பாட்ஷாவை
பலமுறை பார்த்த ரசிகர்கள், இன்றும் அந்தத் திரைப்படத்தின் வசனங்களையும் பாடல்களையும்
கேட்டு அதீத உற்சாகம் அடைகிறார்கள் என்றால் அது ‘பாட்ஷா’வுக்கே உரிய தனிச் சிறப்பு.
ரஜினியைத் தாண்டி படத்தின் மிகப்
பெரிய பலம் தேவாவின் இசை. ஒவ்வொரு காட்சியிலும் தேவாவின் பின்னணி இசை, காட்சியின் தீவிரத்தையும்,
காட்சியின் உச்சக்கட்டத்தையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கும். படத்தையோ, காட்சியையோ
பார்க்காமல் ‘பாட்ஷா’ படத்தை நினைத்தாலே நம் மூளையில் அந்தப் படத்தின் பின்னணி
இசை கோவையாக ஒலிப்பதை பலரும் உணர்ந்திருப்பார்கள். அப்படி பதிந்துவிட்ட தேவாவின்
இசை, டிஜிட்டல் வடிவத்துக்கு ஏற்ப புதிதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக
தேவா மீண்டும் ‘பாட்ஷா’ படத்துக்கு டிஜிட்டல் இசையை அமைத்திருக்கிறார். அது டிஜிட்டல்
வடிவில் கேட்கும்போது அந்த வித்தியாசத்தை இன்னும் கூடுதலாக உணர முடிகிறது.
எம்.ஜி.ஆர்.
தொடங்கி பிரசாந்த்வரை பல நாயகர்களை வைத்து படம் தயாரித்துள்ளது சத்யா மூவிஸ். இதில்
‘பாட்ஷா’ படம் அந்த நிறுவனம் தயாரித்த மிகப் பெரிய வெற்றி படம். சத்யா மூவிஸுக்கு பெயர்
பெற்று கொடுத்த படம். 1996-ல் அரசியல் பரபரப்புக்கு பிள்ளையார் சுழிப் போட்ட படம்.
அந்த வகையில் எல்லா வகை ரசிகர்களையும் கட்டிப்போட ‘பாட்ஷா’வை சத்யா மூவிஸ் டிஜிட்டல்
வடிவத்துக்கு மாற்றியிருப்பது ரசிகர்களின் நாடித் துடிப்பை உணர்ந்து எடுக்கப்பட்ட
முன்முயற்சி.
இந்தப் படத்துக்குக் கிடைக்கும்
வரவேற்பு, காலத்தால் மறக்கடிக்க முடியாத பல படங்கள், டிஜிட்டல் வடிவில் வெளி வருவதற்கு
பிள்ளையார் சுழியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
(தி இந்து, 12 ஜனவரி
2017)
No comments:
Post a Comment