சென்னையைப் பூர்வீகமாகக்கொண்ட இளவழகி, பிறந்து வளர்ந்தது வியாசர்பாடியில்தான். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை இருதயராஜ் பிராட்வேயில் தள்ளுவண்டி ஓட்டி பிழைப்பு நடத்திய ஏழை கூலித் தொழிலாளி. வடசென்னைக்கே உரிய கேரம் விளையாட்டு மீதான ஆர்வம் அவருக்கும் இருந்தது. வடசென்னையில் எங்கே கேரம் போட்டி நடந்தாலும், அங்கே இருதயராஜ் ஆஜராகிவிடுவார்.
தந்தையிடமிருந்துதான் கேரம் விளையாட்டு மீது இளவழகிக்கும் ஆர்வம் பிறந்தது. ஆனால், சொந்தமாக ஒரு சிறிய கேரம் போர்டு வாங்கி விளையாடும் அளவுக்கு அவருடைய வீட்டில் பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை; வீடும் பெரியதில்லை. குடிசைமாற்று வாரிய வீட்டில்தான் சகோதரிகளுடன் வசித்துவந்தார்.
திருப்புமுனைப் பரிசு
ஆனால், கேரம் விளையாட்டு மீது இளவழகிக்குத் தணியாத தாகம். ஆறு வயது முதலே அக்கம் பக்கத்தில் கேரம் விளையாடத் தொடங்கிவிட்டார். அந்தப் பகுதியில் இருந்த ஒரு கிளப்பில் தன் தந்தையின் நண்பர் உதவியுடன் கேரம் பயிற்சியை இளவழகி மேற்கொண்டுவந்தார். காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து பயிற்சிக்குச் சென்றுவிடுவார். கேரம் காய்களைக் குறிபார்த்து ‘பாக்கெட்’ செய்யும் வித்தையைக் கற்றுக்கொண்ட இளவழகி, அந்த விளையாட்டின் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார்.
அந்த நேரத்தில் பள்ளிகள் அளவிலான கேரம் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இளவழகி வெற்றிபெற்றார். இளவழகியின் வெற்றிக்காக அவருக்குப் பரிசாக கிடைத்தது, ஒரு கேரம் போர்டு. அந்தப் பரிசு அவருக்குப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. நினைத்த நேரத்தில் கேரம் விளையாடவும் பயிற்சி மேற்கொள்ளவும் அது உதவியது.
கேரம் விளையாட்டில் முன்னேறிவந்த இளவழகி, பத்து வயதிலேயே போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிவிட்டார். முதன்முதலாக மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றபோது, இரண்டாவது இடத்தைத்தான் பெறமுடிந்தது. ஆனால், அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கேரம் போட்டிகளில் ஜொலிக்கத் தொடங்கினார். மாநில அளவிலான போட்டிகளைத் தாண்டி, தேசிய அளவிலும் முத்திரை பதிக்கத் தொடங்கினார்.
உலக சாம்பியன்
தேசிய அளவில் முன்னேற்றம்கண்ட இளவழகி, 13 வயதில் தேசிய சாம்பியனாக உருவெடுத்தார். இதனால், மாலத்தீவில் நடந்த கேரம் ஆசிய சாம்பியன் போட்டியில் பங்கேற்க இளவழகிக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் போட்டியில் இளவழகியின் பக்கம் வெற்றிக்காற்று வீசியது. கேரம் ஆசிய சாம்பியன் என்ற பெருமையோடு தமிழகம் திரும்பினார். கேரம் விளையாட்டில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் முன்னேறிவந்த இளவழகிக்கு, 2006 மிகப் பெரிய வெற்றி ஆண்டாக அமைந்தது.
தேசியப் போட்டிகளில் முன்னேறி தரவரிசைப் பட்டியலில் முன்னிலை வகித்துவந்ததால், 2006-ல் டெல்லியில் நடைபெற்ற ராஜீவ் காந்தி 2-வது கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இளவழகிக்குக் கிடைத்தது. இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஆயிஷா முகமதை வீழ்த்தி முதன்முறையாக உலக சாம்பியன் ஆனார் இளவழகி. தொடர்ந்து 2008-ல் பிரான்சில் நடைபெற்ற 5-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் பட்டம் வென்று அசத்தினார். இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
கஷ்டத்துக்கு மத்தியில்...
தொடர்ந்து கேரம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இளவழகி, 2010-ல் அமெரிக்காவின் ரிச்மாண்டில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் இரட்டையர் பிரிவில் சக நாட்டு வீராங்கனை ராஷ்மி குமாரியுடன் இணைந்து வெற்றிவாகை சூடினார். ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 2012-ல் பிரான்சில் நடைபெற்ற உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் வெற்றியைத் தட்டிவந்தார். மொத்தமாக மூன்று முறை கேரம் உலக சாம்பியன் பட்டம் வென்று தமிழகத்துக்குப் பெருமைசேர்த்தார் இளவழகி.
இளவழகி கேரம் விளையாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்றிருக்கிறார். அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, இலங்கை, மாலத்தீவு எனப் பல நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். மற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குக் கிடைத்ததுபோல் ஸ்பான்ஸர் யாரும் இளவழகிக்குக் கிடைக்கவில்லை.
இதனால், வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பல நேரம் செலவுக்குப் பணம் இல்லாமல் தவித்திருக்கிறார். நல்ல உள்ளங்களின் உதவியால்தான் அவரால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடிந்தது. அப்படிக் கிடைத்த உதவியாலும் கேரம் விளையாட்டில் அவருக்கு இருந்த தணியாத தாகத்தாலும் அந்த விளையாட்டில் இந்தியாவில் கோலோச்சும் பெண்ணாக மாறினார் இளவழகி.
கிடைக்காத அங்கீகாரம்
இதுவரை தேசிய கேரம் விளையாட்டில் ஒட்டுமொத்தமாக 260 பதக்கங்களை இளவழகி வென்றிருக்கிறார். இதில் 106 தங்கப் பதக்கங்கள் அடங்கும். இதேபோல் சர்வதேச அளவில் 125 பதக்கங்களை வென்றிருக்கிறார். தங்கப் பதக்கங்கள் மட்டும் 111. இந்த அளவுக்கு கேரம் விளையாட்டில் சாதித்த இளவழகிக்குப் பெரிய அங்கீகாரம் ஏதும் கிடைக்கவில்லை. கேரம் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்றபோது அவருக்கு ஒரு முறை தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் பரிசு அளித்தது. அப்படிக் கிடைத்த பணத்தில் தள்ளுவண்டியால் தன்னை வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கு மோட்டார் வண்டியை வாங்கிக் கொடுத்தார் இளவழகி.
இந்தியாவில் கேரம் விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற ஒரே வீரர் என்ற பெருமை வடசென்னையைச் சேர்ந்த மரிய இருதயத்துக்கு உண்டு. ஆனால், பெண்கள் பிரிவில் இந்தியாவுக்குப் பெருமைசேர்த்த இளவழகிக்கு அந்த விருதுகூடக் கிடைக்காமல்போனது. நல்லவேளையாக கேரம் விளையாட்டில் சாதித்ததற்காக ஓ.என்.ஜி.சி.யில் வேலை கிடைத்தது மட்டுமே அவருக்கான அங்கீகாரம்.
தேசிய முன்னாள் கேரம் சாம்பியனான சக்திவேலைத் திருமணம் செய்துகொண்ட இளவழகி, தற்போது மாதவரத்தில் வசித்துவருகிறார். தான் கற்றதைப் பிறருக்குக் கற்றுத்தர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ‘உலக கேரம் சாம்பியன்’ என்ற அமைப்பைத் தொடங்கி, ஏராளமான சிறுவர், சிறுமிகளுக்கு கேரம் விளையாட்டைக் கற்றுக்கொடுத்துவருகிறார்.
கேரம் என்பது செஸ் விளையாட்டைப் போலவே அறிவுப்பூர்வமான விளையாட்டு. வறுமை, புறக்கணிப்பு போன்றவற்றைத் தாண்டி தன்னிடம் இருந்த கேரம் திறமையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததற்கு இளவழகியின் மன உறுதியே காரணம்.
- இந்து தமிழ், 30/12/2018