14/07/2017

திரி விமர்சனம்


கல்விக் கொள்ளை, கல்லூரிகள் செய்யும் நூதன திருட்டுகளைச் சொல்லும் ‘திரி’ பற்றி வெடித்ததா,  நமத்துப் போனதா?

ஒழுக்கத்தை ஒரு கடமையாக கடைபிடிக்கும் ஆசிரியர் ஜெயபிரகாஷின் மகன் நாயகன் அஸ்வின் கக்குமனு. அவர் எம்.இ. படித்து பேராசிரியராக வேண்டும் என்பது ஜெயபிரகாஷின் ஆசை. பொறியியல் இறுதியாண்டை முடித்து வெளியே வரும் தருவாயில் நன்னடத்தை சான்றிதழில் ‘மோசம்’ என்று குறிப்பிட்டு அஸ்வின் கக்குமனுவுக்கு தருகிறது கல்லூரி நிர்வாகம். அடாவடி அரசியல்வாதியான கல்லூரி தாளாளர் ஏ.எல். அழகப்பன் மகன் அர்ஜைஸ்னுடனான சிறு மோதலே இதன் பின்னணிக்குக் காரணம் என்பதை அஸ்வின் உணருகிறார். அதை மாற்ற  அஸ்வின் கல்லூரிக்கும் தாளாளர் வீட்டுக்கும் நடையாய் நடக்கிறார். ஆனால், சான்றிதழை மாற்றி தர அழகப்பன் மறுக்கிறார்.  இதன்பிறகு அழகப்பனுடன் அஸ்வின் நடத்தும் மல்லுக்கட்டுதான் படத்தின் கதை.

படத்தின் டைட்டிலில் கல்வி தொடர்பாக வந்த நெகட்டிவ் செய்திகளைக் காட்டும்போது கல்வி தொடர்பான விழிப்புணர்வு படமாக இருக்கும் என்று பார்த்தால் அதிலும் ஏமாற்றமே கிடைக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் எதற்கு வம்பு என்று படித்தவர்கள் ஒதுங்கிக்கொள்ளக் கூடாது, பள்ளி, கல்லூரிகளில் ஒரு விண்ணப்பம் விற்பதில்கூட எப்படி நூதனமாகச் சுரண்டுகிறார்கள் என்ற அழுத்தமான கதைக் கருவை வைத்துக் கொண்டு திரைக்கதையாக்குவதில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் அசோக் அமிர்தராஜ். முதல் பாகம் முழுவதுமே கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதை உணரவே முடியாத அளவுக்கு தள்ளாடுகிறது திரைக்கதை.

ஒழுக்கமான அப்பாவுக்கும் அதை கடைபிடிக்க போராடும் மகனுக்கும் இடையேயான உறவு, சொல்லாமலே வளரும் அஸ்வின் - ஸ்வாதி ரெட்டிக்கு  இடையேயான காதல், அரசியல்வாதிகளின் பிடியில் உள்ள கல்வி நிறுவனங்கள் செய்யும் தகிடுதத்தங்கள் என எல்லாவற்றையுமே  நுனி புல் மேய்ந்ததைப் போலவே சொல்லிவிட்டு போகிறார்கள். முத்தாய்ப்பாகச் சில வசனங்கள் இடம் பெற்றிருந்தாலும் மனதில் ஒட்டாத காட்சியமைப்புகளால் வசனங்களும் எடுபடாமலேயே நகர்கின்றன. கதையோட்டத்தின்படி மருந்துக்கூட நாயகன் - நாயகிக்கு டூயட் பாட்டு வைக்காத விதத்தில் இயக்குநரைப் பாராட்டலாம். ஆனால், சம்பந்தமே இல்லாமல் வரும் அந்த இரண்டு குத்துப் பாட்டுகள் ஏன் சார்? அஸ்வின் - அழகப்பன் இடையேயான சடுகுடு மோதல் காட்சிகளை காமெடி ரகத்தில் காட்டுவது சரியா?

படத்தின் ஒரே பலம் ஆசிரியராகவும், ஒழுக்கமான தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷ். நாயகனுக்கு நிகரான அவரது பாத்திரம் மனதில் நிற்கிறது. முழு கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கும் அஸ்வின் கக்குமனுவுக்கு நடிக்க வாய்ப்புள்ள படம்தான். அப்பாவுக்கு அடங்கிய பிள்ளையாக வரும்போது சாந்தமாவது தனக்கு கெட்டபெயர் வந்தபிறகு ஆக்ரோஷமாவது என நடிப்பிலும் வெரைட்டி காட்டியிருக்கிறார். ஆனால், உடல்மொழியில் கொஞ்சம் கவனம் தேவை.

தொலைக்காட்சி நிருபராக வரும் ஸ்வாதி ரெட்டி தெற்றுப் பல் தெரிய சிரிப்பது, அவ்வப்போது நாயகனை ரொமான்ஸ் பார்வையில் பார்ப்பது என வந்துவந்து போகிறார். அடாவடி அரசியல்வாதியாக வரும் ஏ.எல். அழகப்பன் அலட்டிக்கொள்ளாமலேயே  நடித்திருக்கிறார். அழகப்பனின் பி.ஏ.வாக வரும் சென்ட்ராயன் செய்யும் சேட்டைகளை காமெடி கணக்கில் சேர்த்தால் அது சாமி குத்தம் ஆகிவிடும். படத்தில் கருணாகரன் இருக்கிறார். அவரை வைத்து கொஞ்சமாவது கலகலப்பாக்கியிருக்கலாம். சேரன்ராஜ், அனுபமா குமார் போன்றோர் அவர்களது வழக்கமான பாணியில் நடித்திருக்கிறார்கள்.
படத்துக்கு இசை அஜெஸ். பாடல்கள் எதுவும் கேட்கும்படி இல்லை. வெங்கடேஷின் ஒளிப்பதிவில் குறையில்லை.

கல்வி சம்பந்தப்பட்ட ஒரு கதைக் கருவை விறுவிறுப்பாகவும் தொய்வில்லாமலும் திரைக்கதையாக்காமல் கோட்டை விட்டதால் ‘திரி’ நமத்துபோய் கிடக்கிறது.

மதிப்பெண்: 2 / 5

No comments:

Post a Comment