ஒரு கிடார் இசை கலைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் ஒரு திருட்டு சம்பவமும் அதையொட்டி நடக்கும் நகைச்சுவை கலந்த காட்சிகளும்தான் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’.
ஒரு பங்களாவில் வேலை பார்க்கும் காவலாளிக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தையைப் பார்க்க போகும் காவலாளி நண்பனுக்காக சிறிது நேரம் வீட்டை காவல் காக்க வருகிறார் கிடாரிஸ்ட் கலைஞனான உமாபதி. அந்தச் சமயத்தில் வீட்டில் திருட்டு சம்பவம் ஒன்று நடைபெறுகிறது. விஷயம் போலீஸூக்குத் தெரிந்தால் சிக்கலாகும் என்பதால் உமாபதியை காவலாளி நண்பர் அனுப்பிவிடுகிறார். அங்கிருந்த வந்தபிறகுதான் தன்னுடைய கிடாரை அங்கேயே விட்டுவிட்டு வந்ததை உமாபதி உணர்கிறார்.
கிடாரில் பெயர், விலாசம் என எல்லா விவரங்களும் இருப்பதால் அதை எடுக்க திரும்பவும் பங்காளவுக்கு வருகிறார் உமாபதி. ஆனால், கிடார் காணாமல் போகிறது. அந்த கிடாரைக் கண்டுபிடிக்க தனது நண்பர் கருணாகரன் உதவியுடன் அதே வீட்டுக்கு துப்புறியும் நிபுணராக வருகிறார் உமாபதி. காணாமல் போன கிடார் கிடைத்ததா, உண்மையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பதைக் கண்டுபிடிப்பதுதான் மீதிக் கதை.
உமாபதி கிட்டாரை தேடிச்செல்லும் இடம், அதனால், அவர் சந்திக்கும் பிரச்சினையும் காமெடி கலந்த கதைகளமாக்கி நகர்த்திச் செல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் இன்பசேகர். அதற்கு கருணாகரனையும் உதவிக்கு அழைத்துள்ளார். கருணாகரனை செம பில்டப் செய்து அவரை
துப்புறியும் நிபுணராக ஆள் மாறாட்டத்தில் வருகிறார் உமாபதி. ஆனால், ஆள் மாறாட்டம் பற்றி அடுத்தடுத்த காட்சியமைப்புகள் எதுவும் இல்லாமல் பார்ப்பவர்களின் காதில் பூ சுற்றுகிறார்கள். ‘ஆடுகளம் நரேன்’ வீட்டில் உள்ள ரகசிய பொருளைத் திருட வரும் வில்லன் கோஷ்டியும்கூட காமெடி பீஸூகளாக வருகிறார்கள். துப்புறியும் படத்தில் திருப்பங்களே இல்லை என்று பார்த்தால் திடீரென்று வில்லன் அவதாரத்தில் வந்து மனோபாலாவும் கிச்சுசிக்சு மூட்டுகிறார். பெரிய பில்டப்போடு வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் யோக்ஜேபியையும் போலீஸையும் சிரிப்பு போலீஸ்களாகக் காட்டுவது நியாயமா?
காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து, திருப்பங்களும் லாஜிக்கும் இல்லாமல் பயணிக்கும் திரைக்கதையோட்டம் படத்துக்கு வேகத் தடையைப் போட்டு விடுகிறது. திருட்டு சம்பவத்தின் பின்னணி த்ரில்லிங்காக இருக்கும் என்று பார்த்தால் அதை புஷ்வானமாக்கிவிடுகிறார்கள். கிடார் காணமால் போனதையும்கூட கடைசியில் மொக்கையாகக் காட்டி முடித்துவிடுகிறார்கள். கடைசியில் ‘தொலைத்த பொருளை தொலைத்த இடத்தில் தேடுங்கள்’ என்று மெசேஜ் சொல்லி போங்குக் காட்டுகிறார்கள்.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் உமாபதி நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன். படத்துக்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறார். உடல் மொழியும் முதிர்ச்சியற்ற பேச்சும் அவரது பாத்திரத்தோடு ஒத்துப்போக மறுக்கிறது. ஆனால், இந்தக் குறைகளை நடனத்தின் மூலம் நேர் செய்துவிடுகிறார். நாயகியாக வரும் தெலுங்கு நடிகை ரேஷ்மா ரத்தோர் த்ரிஷா சாயலில் இருக்கிறார். கனவில் டூயட் பாடுது மட்டும்தான் அவருக்கு வேலை. படம் முழுவதும் வரும் கருணாகரனின் காமெடிகள் கொஞ்சம் அபத்தமாக இருந்தாலும் பல இடங்களில் ரசிக்க வைக்கின்றன.
பாண்டியராஜன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டவர்கள் பாத்திரத்துக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள். தம்பி ராமையாவும் ஒரு காட்சியில் வந்துபோகிறார்.
படத்துக்கு பலமே டி. இமானின் இசைதான். எல்லா பாடல்களுமே தாளம் போட வைக்கின்றன. பி.கே. வர்மாவின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
ஒரு கிடாருக்கா இத்தனை களேபரங்களை காட்டுவதில் காட்டிய வேகத்தை திரைக்கதையில் காட்டியிருந்தால் பொதுஜனங்கள் கைத்தட்டியிருப்பார்கள்.
மதிப்பெண்: 2 / 5
No comments:
Post a Comment