12/08/2017

வேலையில்லா பட்டதாரி 2 விமர்சனம்

பொறியாளராக ஜொலிக்கும் நாயகனின் வாழ்க்கையில் ஒரு பெண் ஏற்படுத்தும் பகையை அவன் எப்படித் தீர்க்கிறான் என்பதைச் சொல்லும் படம்தான் ‘வேலையில்லா பட்டதாரி 2’.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக ஆண்டின் சிறந்த பொறியாளராக விருது பெறுகிறார் நாயகன் ரகுவரன் (தனுஷ்). மற்ற எல்லா விருதுகளையும் மிகப் பெரிய நிறுவனமான வசுந்திராவின் (கஜோல்) நிறுவனம் பெறுகிறது. அதைப் பார்த்து வெறுப்படையும் திமிரும் ஆணவமும் கொண்ட கஜோல், தனுஷை தன் நிறுவனத்தில் வேலையில் சேர்க்க உத்தரவு போடுகிறார். ஆனால், அதற்கு மசியாத தனுஷ், கஜோலை வார்த்தையால் சீண்டுகிறார். கோபத்தில் தனுஷ் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு கட்டுமான ஆர்டர்கள் எதுவும் கிடைக்காத அளவுக்கு செய்கிறார் கஜோல். ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி திரும்பவும் ‘வேலையில்லா பட்டாதாரி’யாகிறார் தனுஷ். பிறகு ‘விஐபி’ டீமை வைத்துக்கொண்டு கஜோலை எப்படி வழிக்கு கொண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை.

முதல் பாகம் தந்த சுவாரசியங்களையும் வெற்றியையும் இரண்டாம் பாகத்தில் தக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த். முதல் பாகத்துடன் இரண்டாம் பாகத் தொடர்பைக் கச்சிதமாகப் பொருத்தியிருக்கிறார். அதே வீடு, முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான கலைஞர்கள் இதிலும் டெம்பிளேட்டாக வருகிறார்கள். ஆனால், முதல் பாகத்தில் இருந்த வேகம், சுவாரசியங்கள், எதிரியைச் சமாளிக்கும் சவால்கள் என எதுவும்  படத்தில் இல்லை.

முதல் பாதியில் படத்தோட ஒட்டாத பாடல்கள், காட்சியமைப்புகள் இருந்தாலும் தனுஷ்-கஜோலுக்கு இடையேயான மோதல் காட்சிகள் எதிர்பார்ப்பை கூட்டவே செய்கின்றன. இந்த எதிர்பார்ப்பால் இரண்டாம் பாதி சுவாரசியமாகவும் பரப்பரப்பாகவும் இருக்கும் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தனுஷ்- கஜோல் இடையேயான தொழில் போட்டியில் எந்த புத்திசாலித்தனமும் பரபரப்பைக் கூட்டக்கூடிய காட்சியமைப்புகளும் இல்லாமல் கதை சலிப்பை உண்டாக்குகின்றன.

தனுஷ் - கஜோல் எதிரிகளாகக் காட்டும் அளவுக்கு திரைக்கதையில் வலுவான காரணங்களையும் சொல்லவில்லை. மிகப் பெரிய நிறுவனத்தின் தலைவர் ஒருவருக்கு சாதாரண பொறியாளருடன் மல்லுக்கட்டுவதுதான் வேலையா என்ன? சமகாலத்தில் நிலவும் ரியல் எஸ்டேட் தகித்தத்தங்களைக் காட்டும் காட்சிகள் பாராட்டும்படி உள்ளன. தனுஷ்-கஜோல் மோதல் காட்சிகள் உச்சமடையும்போது, வெள்ளக் காட்சிகளை வைத்து அவர்களை நண்பர்களாக்கி படத்தை முடிப்பதும் அயர்ச்சியைத்தான் தருகிறது.

 நாயகன் தனுஷ்தான் படத்துக்கு வசனம். அதனால் முத்தாய்ப்பான வசனங்களை அடிக்கடி பேசுகிறார், எதிரிகளை ஓடவிடுகிறார், பழைய வண்டியில் பயணிக்கிறார். நடு ரோட்டில் நடனம் ஆடுகிறார், கஜோலுடன் வார்த்தையால் விளையாடுகிறார், சிகரெட்டை ஸ்டைலாக ஊதுவது என வழக்கம் போல நடித்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் படத்தில் நடித்துள்ள கஜோல் குறையில்லாமல் நடித்திருக்கிறார். ஆனால், பெரிய நிறுவனத்தின் திமிர் பிடித்த தலைவராக வரும் அவரது பாத்திர வார்ப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தனுஷின் மனைவியாக வரும் அமலா பால் குடும்பப் பெண்ணாகவும் சண்டை போடுவதுமாக இருக்கிறார். விவேக் தனது பாத்திரத்தைச் சரியாகச் செய்திருக்கிறார். முதல் பாகத்தில் அறிவுரையாகப் பேசும் சமுத்திரகனி, இந்தப் படத்தில் அமைதியாக நடித்திருக்கிறார். வலிமையே இல்லாத வில்லனாக வருகிறார் சரவணா சுப்பையா. சரண்யா பொன்வண்ணன், ரீத்து வர்மா, பாலாஜி மோகன், செல் முருகன் எனப் பலரும் அவ்வப்போது வந்துபோகிறார்கள்.

படத்துக்கு இசை ஷான் ரோல்டன். பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையிலும் புதுமையில்லை. படத்துக்கு ஏற்ப ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஷமீர். ஆனால், சண்டைக் காட்சிகளை ஸ்லோமோஷனில் காட்டுவதைத் தவிர்த்திருக்கலாம்.

நல்ல பொழுதுபோக்குள்ள படமாக்க எல்லா விஷயங்கள் இருந்தும், வலுவில்லாத திரைக்கதையால் ‘வேலையில்லா பட்டாதாரி’ தள்ளாடுகிறான்.

மதிப்பெண் 2 / 5

No comments:

Post a Comment