டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத்
தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி பெற்ற கையோடு அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த்
கெஜ்ரிவால் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று கோரிக்கையையும்
வைத்தார். டெல்லியில் மட்டுமல்ல, புதுச்சேரி
யூனியன் பிரதேசத்திலும்கூட அந்தக் கோரிக்கை அடிக்கடி எழுப்பப்படுவதுண்டு. யூனியன் பிரதேசங்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன?
ஏன் தனி மாநில அந்தஸ்து இங்கே எழுப்பப்படுகிறது?
யூனியன் பிரதேசங்களின் கதை
முதலில் இந்தியாவில் யூனியன் பிரதேசங்கள் எப்படி வந்தன என்பதைத் தெரிந்து கொண்டால்தான்
இதற்கான முழு விடையும் கிடைக்கும். ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் அடைந்தபோது 563 சமஸ்தானங்கள் இங்கே
இருந்தன. இந்தச் சமஸ்தானங்களை இந்தியா என்ற
ஒரே நாடாக இணைக்கப்பட்டன. ஆனால், இந்தியாவுக்குள் இருந்தாலும் சிலப் பகுதிகள் வெவ்வேறு நாடுகளின் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. புதுச்சேரி,
மாஹி, ஏனம், காரைக்கால் ஆகிய பகுதிகள் பிரெஞ்சு
காலணியிலும், கோவா, டையூ, டாமன், தாத்ரா- நாகர்ஹவேலி ஆகிய பகுதிகள் போர்ச்சுகீசியர்
காலணி ஆதிக்கத்திலும் இருந்தன.

ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது அந்தமான்
நிக்கோபார் தீவுகள். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஆங்கிலோ பர்மியர்கள் அந்தமானை
தனி நாடாக அமைத்துக் கொள்ள ஆங்கிலேயர்கள் அனுமதி வழங்கினார்கள். ஆனால், அது நடைமுறைக்கு
வரவில்லை. பின்னர் அந்தமான் இந்தியாவோடு இணைக்கப்பட்டது. இதேபோல லட்சத்தீவுகள் ஆங்கிலேயர்
கட்டுப்பாட்டில் இருந்தபோது சென்னை மாகாணத்துக்கு
உட்பட்ட மலபார் மாவட்டத்தில் இடம் பெற்றிருந்தது. இப்படி ஏதோ ஒரு வகையில் வெவ்வேறு
ஆளுகைகளின் கீழும், நிர்வாக ரீதியாக சிக்கல்களும் உள்ள பகுதிகள்தான் வெவ்வேறு காலகட்டங்களில்
இந்தியாவின் யூனியன் பிரதேசங்களாக (ஒன்றியப் பகுதி) அறிவிக்கப்பட்டன.
இவைத்தவிர திட்டமிட்டு யூனியன் பிரதேசங்களாக
அறிவிக்கப்பட்ட பகுதிகளும் உள்ளன. பஞ்சாப்பில் இருந்து ஹரியானா பிரிக்கப்பட்டபோது இரு
மாநிலங்களும் சண்டிகரை கேட்டன. எனவே இரு மாநிலங்களுக்கும் பொதுவானப் பகுதியாக
1966-ல் யூனியன் பிரதேசமாக சண்டிகர் அறிவிக்கப்பட்டது. (அண்மையில்கூட ஆந்திராவையும்
தெலங்கானாவையும் பிரித்தபோது ஐதராபாத்தை இரண்டு மாநிலங்களும் கோரின. அப்போது இரு மாநிலங்களுக்கும்
பொதுவான யூனியன் பிரதேசமாக ஐதராபாத்தை அறிவிக்கலாம் என்ற யோசனை வைக்கப்பட்டது போல).
டெல்லி என்பது நாட்டின் தலைநகரப் பகுதியாக
இருந்ததால் யூனியன் பிரதேசமாக இருந்தது. இப்படி யூனியன் பிரதேசங்களுக்கு ஒவ்வொரு கதை
இருக்கிறது. இவற்றில் கோவா 1987-ம் ஆண்டில்
தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. கோவாவுடன் இணைந்திருந்த டையூ, டாமன் இப்போது யூனியன்
பிரதேசமாகவே தொடர்கிறது. யூனியன் பிரதேசமாக இருந்த டெல்லி, தேசிய தலை நகரப் பகுதியாக
அறிவிக்கட்டு, வரையறுக்கப்பட்ட அதிகாரத்துடன்கூடிய சட்டப்பேரவையும் அமைக்கப்பட்டது.
ஆட்சித் தலைவர்கள்
இந்த யூனியன் பிரதேசங்கள் எல்லாம் குடியரசுத் தலைவரின் (மத்திய அரசு) நேரடிக் கட்டுப்பாட்டிலேயே செயல்படும். இங்கெல்லாம்
துணைநிலை ஆளுநர்கள், நிர்வாக அதிகாரிகள் எனப் பதவிகள் உண்டு. குடியரசு தலைவர் மூலம்
நியமிக்கப்படும் இவர்கள்தான் இந்தப் பகுதிகளின் ஆட்சித் தலைவர்கள். இதில் டாமன், டையூ,
அந்தமான், லட்சத்தீவுகள், நாகர்-ஹவேலி, சண்டிகர் ஆகியப் பகுதிகளை நிர்வாக அதிகாரிகள் நிர்வகித்து வருகிறார்கள். புதுச்சேரி, டெல்லியில் துணை நிலை ஆளுநர்கள் இருக்கிறார்கள்.
இந்த இரு பகுதிகளிலும் மட்டும் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசுகள் அமைப்படுகின்றன.
அதற்கான சிறப்பு அதிகாரம் இந்த இரு பகுதிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன. மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அமைக்கப்படுவடுவதால், மற்ற மாநிலங்களில் உள்ள அதிகாரங்களை
புதுச்சேரியிலும் டெல்லியிலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.
அதிகாரங்கள் என்ன?
சரி, யூனியன் பிரதேசங்களுக்கு உள்ள அதிகாரங்கள் என்னென்ன? மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பற்றி இந்திய
அரசியலமைச் சட்டத்தில் பட்டியலிடப்படுள்ளன. இதில் மத்திய அரசுக்கு என்னென்ன அதிகாரங்கள்,
மாநில அரசுக்கு என்னென்ன அதிகாரங்கள் என்பதெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் யூனியன்
பிரதேசம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகள் என்பதால் பெரிய
அளவில் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. ஒரு மாநிலத்துக்கு உள்ள அதிகாரங்களில் பாதி அளவுக்குக்குகூட
அதிகாரங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு இல்லை. முதலில் எந்தத் திட்டத்தையும் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேசத்தால் செய்துவிட முடியாது. எல்லாத் திட்டத்துக்கும்
துணைநிலை ஆளுநர் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும்.
கடிவாளம் மத்திய அரசிடம்...
மாநிலங்களில் அரசு அதிகாரிகள் பதவி
உயர்வு, பணியிடம் மாற்றம் ஆகியவற்றை சுலமபாக அந்த மாநில அரசே மேற்கொள்வதைப் பார்த்திருக்கிறோம்
அல்லவா? யூனியன் பிரதேசத்திலோ அது முடியாது. எந்த அரசு அதிகாரிக்கும் பதவி உயர்வு,
பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்றால் மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டும். டெல்லி தலைநகரப்
பகுதியாக இருப்பதால் காவல் துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ்தான் செயல்படும்.
புதுச்சேரியில் காவல் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில்
இருந்தாலும், உயரதிகாரிகள் பணியிட மாற்றம், நியமனம் ஆகியவற்றை மத்திய அரசே மேற்கொள்ள
முடியும். இப்படி காவல்துறைகூட யூனியன் பிரதேச அரசின் கைகளில் இல்லை. இப்படி எதற்கும்
அதிகாரம் இல்லாததால் எல்லாவற்றுக்கும் மத்திய
அரசையே யூனியன் பிரதேசங்கள் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
சிறப்பு சட்டங்கள் மூலம் சட்டசபை, முதல்வர், அமைச்சர்கள் என சில யூனியன் பிரதேசங்களில்
இருந்தாலும், எல்லா அதிகாரங்களும், உரிமைகளும் மத்திய அரசிடமே இருப்பதால்தான் டெல்லியிலும்,
புதுச்சேரியிலும் மா நில அந்தஸ்து கோரிக்கைகள்
தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.
உரிமைகள் என்ன?
யூனியன் பிரதேசங்களுக்கு இல்லாத அதிகாரங்கள்
இன்னும் நிறைய இருக்கின்றன.
* சட்டம், நீதித் துறைச் சார்ந்த நியமங்களை யூனியன் பிரதேச அரசால் செய்ய முடியாது.
* யூனியன் பிரதேசங்களுக்கு என பள்ளி
பாடத்திட்டம் எதுவும் கிடையாது. (உதாரணமாக புதுச்சேரியில் தமிழக பாடத் திட்டங்களைத்தான்
பின்பற்றுகிறார்கள்.)
* வேலைவாய்ப்புத் திட்டங்கள் எதுவும் கிடையாது. நியமங்கள் அனைத்தும் யு.பி.எஸ்.சி.
மூலம் நடைபெறுவதால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது அரிது.
* யூனியன் பிரதேசங்களில் ஈட்டப்படும் வருவாய் மத்திய அரசுக்கே செல்லும். யூனியன்
பிரதேசம் அவற்றை கையாள முடியாது.
* திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கு
மத்திய உள்துறை, நிதித் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும்.
* நிதிக் குழுவில் யூனியன் பிரதேசங்களுக்கு நிரந்தர இடம் கிடையாது.
* மாநிலங்களில் இருப்பது போல உயர் நீதிமன்றம் கிடையாது. அருகில் உள்ள உயர் நீதிமன்ற
எல்லைக்கு உட்பட்டதாக யூனியன் பிரதேசம் இருக்கும்.
பொறுப்புகள் யார் வசம்?
மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள், செயல்பாடுகள் பற்றி அரசியல் சட்டத்தில்
ஏழாவது பட்டியலில் குறிப்பிடப்படுள்ளது. இதில் மூன்று பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன.
மத்திய அரசின் பட்டியல்: இது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. மத்திய
அரசின் பட்டியலில் மொத்தம் 97 துறைகள் உள்ளன. சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது மத்திய
அரசு. பாதுகாப்பு, அணுசக்தி, தேசிய நெடுஞ்சாலைகள், விமானம், கப்பல், ரயில் போக்குவரத்துகள்,
காப்பீட்டுக் கழகங்கள், மக்கள்தொகை, நதிகள், தொலைபேசி, பண அச்சடிப்பு உள்ளிட்டவை முக்கியமானவை.
மாநில அரசின் பட்டியல் : இது மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. ஆரம்பத்தில்
மாநிலப் பட்டியலில் 66 துறைகள் இருந்தன. இவற்றில் கல்வியும், விளையாட்டும் பொதுப்பட்டியலுக்குக்
கொண்டு செல்லப்பட்டதால், தற்போது 64 துறைகள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள்
வருகின்றன. வேளாண்மை வருமான வரி, நகராட்சி. சிறைச்சாலைகள், சுங்கக் கட்டணம், கேளிக்கை
வரி உள்ளிட்டவை இதில் முக்கியமானவை.
பொதுப்பட்டியல்: இது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ள பொதுவான அதிகாரங்களைப்
பற்றியது. பொதுப் பட்டியலில் தொடக்கத்தில் 47 துறைகள் இருந்தன. கல்வியும் விளையாட்டும்
பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டதால் தற்போது 49 துறைகள் உள்ளன. காடுகள், மின்சாரம்,
தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள், திருமணம், கல்வி, விளையாட்டு இவற்றில் முக்கியமானவை.
- தி இந்து, 14/2/2015