ராஜிவ் கொலையாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தபோதே மூவரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே இப்போது நடந்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இது வரவேற்கத்தக்க ஒரு விஷயமே. ஆனால், இந்த முடிவின் பின்னணியில் உள்ளார்ந்த அரசியல் பொதிந்துக் கிடக்கிறது என்பதே உண்மை.
ஈழ பிரச்சினை, ஈழ தமிழர் விவகாரங்களில் திடீர் ஆதரவு அவதாரம் எடுத்த அதிமுக, ஆட்சி பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆதரவு தீர்மானங்களை நிறைவேற்றியதையும் முடிச்சு போட்டுத்தான் பார்க்க வேண்டும். ஈழ விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிரானது காங்கிரஸ் கட்சி என்பதை இங்குள்ள அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் ஏற்படுத்திய தீயை அதிமுக அரசு அணையாமல் பார்த்துக்கொண்டது என்றே சொல்லலாம். அதிமுகவின் முக்கிய அரசியல் எதிரியான திமுக, காங்கிரஸோடு கூட்டணி வைத்திருந்ததும், மத்திய அரசில் பங்கு பெற்றதும் அதிமுகவுக்கு சாதகமாக போனது. மத்திய காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுத்து நிறைவேற்றப்பட்ட சட்டப்பேரவை தீர்மானங்கள் ஒருவிதத்தில் திமுகவையும் சேர்த்தே குறி வைத்து நிறைவேற்றப்பட்டன.
இப்போது விஷயத்துக்கு வருவோம். 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரைப்பதாக 110 அறிக்கையின் கீழ் சட்டப்பேரவையில் ஜெயலலிதா வாசித்த அறிக்கை அப்பட்டமான அரசியல் என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்த அறிக்கையில், 1999ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது 3 பேரின் தண்டனையை குறைக்க நடவடிக்கை எடுக்காதது பற்றியும் விலாவாரியாக குறிப்பிட்டிருந்தார் முதலமைச்சர் ஜெயலலிதா.
இந்த விஷயத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கருத்து மாறுபாடு கொண்டவர்கள் அல்லர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. 1998ஆம் ஆண்டில் குஜ்ரால் அரசு கவிழ்க்கப்பட்டதற்கு என்ன காரணம்? ராஜிவ் கொலையில் திமுக மீது ஜெயின் கமிஷன் குற்றம் சாட்டியதாகக் கூறி குஜ்ரால் அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்டது. இந்த சூழ்நிலையில் 1999ஆம் ஆண்டில் கருணாநிதி தண்டனை குறைப்பு முடிவை எடுக்காதது பெரிய ஆச்சர்யமான விஷயமாகத் தெரியவில்லை.
2008ஆம் ஆண்டும் திமுக ஆட்சியின் போது நீண்ட காலம் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் தன்னை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், ‘’ நளினியை விடுதலை செய்தால், ராயப்பேட்டையில் தங்குவார் என்றும், இதனால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்’’ என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் அப்போது ஆட்சி நடத்திய கருணாநிதியிடம் இருந்து இதை எதிர்பார்ப்பது நியாயமில்லைதான்.
இதோ இப்போது ஜெயலலிதா முறை. இதே நளினி இப்போது, சில நாட்களுக்கு முன்பு, பரோல் கேட்டு தாக்கல் செய்த மனு என்ன ஆனது? வயதான தன் தந்தையை பார்க்கவும், அவரோடு ஒரு மாதம் தங்கி பராமரிக்க நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் செல்ல 1 மாதம் பரோல் கேட்டு நளினி தாக்கல் செய்த மனு மீது வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் என்ன பதில் மனுத்தாக்கல் செய்தார். திமுக ஆட்சியில் என்ன காரணம் சொல்லப்பட்டதோ, அதே காரணம், நளினியை பரோலில் விட்டால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று பதில் மனுவில் சொல்லப்பட்டது.
இது நடந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. இப்போது என்ன ஞானோதயம்
(தேர்தல் ஞானோதயம்) ஏற்பட்டதோ 7 பேரை விடுவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை. மூவர் தண்டனையைக் குறைக்க உச்ச நீதிமன்றத்திலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசுக்கு 3 நாட்கள் கெடு வேறு. இதை மத்திய அரசு எதிர்த்தால், தமிழின விரோதப்போக்கு என்று காங்கிரஸையும், அதோடு கூட்டணி சேர நினைக்கும் கட்சிகளையும் பிரச்சாரத்தின் போது வறுத்தெடுக்கலாம். இப்படி நுட்பமான அரசியல் இதில் பொதிந்துக் கிடக்கிறது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பொறுத்தவரை, திமுகவையும் காங்கிரஸையும் குறி வைத்து தாக்குவதற்கும், தேர்தல் நேரத்தில் தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும், வாக்காளர்கள் மத்தியிலும் தன் நிலையை உயர்த்திக்கொள்ளவும் இந்த முடிவு பயன்படலாம்.
தி இந்து நடுப்பக்கம், 21-02-2014