திருச்சிக்குப் பெருமை சேர்க்கும் மலைக்கோட்டையில் குடிகொண்டு பொதுமக்களுக்கு அருள்பாலித்து வரும் தாயுமானவருக்கு வாழைத்தார் வைத்து வழிபாடு நடத்துவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எதற்காக இந்த வாழைத்தார் வழிபாடு என்று உங்களுக்குத் தெரியுமா? தாயுமானவர் புராணக் கதையைத் தெரிந்துகொண்டால் உங்களுக்கு விடை கிடைத்து விடும்.
பூம்புகாரில் வணிகர் குலத்தில் பிறந்தவர் ரத்தினக் குப்தன். இவருக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை பேறு இல்லை. குழந்தை வேண்டி இறைவனை வழிபட்டு வந்தார். இறைவன் அருளால் ஓர் அழகிய புதல்வியைப் பெற்றார் இவர். அக்குழந்தைக்கு ரத்னாவதி எனப் பெயரிட்டார்.
ரத்னாவதி பெரியவளாகித் திருமணப் பருவத்தை அடைந்தவுடன் வரன் தேடத் தொடங்கினார். திருசிராமலையில் வாழ்ந்த தனகுப்தன் என்ற வணிகனுக்கு மகளை மணம் செய்து வைத்தார் ரத்தினகுப்தன். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் சென்றது. தாயாகும் பேறும் அடைந்தாள் ரத்னாவதி. திருசிராமலையில் அமர்ந்து அருள்பாலிக்கும் செவ்வந்தி நாதரைத் தினந்தோறும் வழிபட்டு வந்தாள் ரத்னாவதி.
மகப்பேறு காலம் நெருங்கியது. இந்தத் தகவலைப் பூம்புகாரில் இருக்கும் தன் தாய்க்குத் தெரியப்படுத்தி உடனே வரும்படி தகவல் சொல்லி அனுப்பினாள் ரத்னாவதி. தாயும் மகளுக்கு வேண்டிய மருந்துகள் எண்ணெய் போன்ற பொருட்களுடன் பூம்புகாரிலிருந்து திருசிராமலைக்குப் பயணமானாள்.
காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எனவே, அந்தத் தாயால் திருசிராமலைக்கு வர இயலவில்லை. மகள் ரத்னாவதியோ தன் தாயின் வரவை நோக்கி வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள். இன்று வருவாள், நாளை வருவாள் எனக் காத்திருந்த மகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஏக்கத்தில் தவித்த மகள், தாயைக் காணவில்லையே எனக் கவலை கொண்டாள். தன் கவலையைச் செவ்வந்தி நாதரிடம் கண்ணீருடன் முறையிட்டாள் ரத்னாவதி. இறைவன் தனது பக்தையின் கண்ணீரைக் கண்டு கவலையையும், வேதனையையும் அடைந்தார். அவர் மனம் கரைந்தது. உடனே, ரத்னாவதியின் தாய்வேடம் பூண்டார் இறைவன். செவ்வந்தி நாதர் ரத்னாவதியின் வீட்டை அடைந்தார். தாயைக் கண்ட மகளுக்குப் பூரிப்பும். ஆனந்தமும் தாங்கவில்லை. தாயாக வந்த இறைவன் ரத்னாவதியுடன் தங்கினார்.
பிரசவத்துக்கான உரிய நேரம் வந்தது. தாய் வேடத்தில் இருந்த இறைவன் மகளுக்கு மருத்துவம் பார்த்தார். மகள் ஓர் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மகளோடு சில நாட்கள் தங்கிய இறைவன் தாயையும், சேயையும் பராமரித்து வந்தார்.
இடையில், காவிரியில் வெள்ளம் வடிந்தது. உண்மையான தாய் ஆற்றைக் கடந்து தன் மகள் வீட்டிற்கு வந்தாள். அவளைக் கண்ட ரத்னாவதி திகைத்தாள். இதென்ன இரண்டு தாய்கள். இதில் உண்மையான தாய் யார்? அவள் குழப்பம் நீங்குவதற்குள் இறைவன் மறைந்தார். வானில் இறைவி மட்டுவார் குழலம்மையுடன் இடப வாகனத்தில் தோன்றிக் காட்சியளித்தார்.
அன்று முதல் திரிசிராமலை செவ்வந்தி நாதர் தாயுமானவர் என்ற திருப்பெயரோடு அழைக்கப் பெற்றார். அதாவது, தாயும் ஆன இறைவனே தாயுமானவர். இறைவனை மனமுருக வேண்டி வழிபட்ட ரத்னாவதியும் தல அடியார்களுள் ஒருவராக இத்தலத்தில் விளங்குகிறாள். இந்தப் புராணக் கதையின் நம்பிக்கை படி குழந்தை வரம் கிடைக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் தாயுமானவருக்கு வாழைத்தார் படைத்து, பாலாபிஷேகம் செய்து வழிபடுவது பக்தர்களின் வாடிக்கை. வாழையடி வாழையாகக் குடும்பம் தழைக்க வேண்டும் என்ற அடிப்படையில், வாழையைக் கருவறையில் வைத்துப் பூஜித்து, பின்பு அதைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.
சுகப்பிரசவ வழிபாடு: மட்டுவார்குழலி அம்பாள் தனிச் சந்நிதியில் இருக்கிறாள். கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் வந்து, இந்த அம்பிகைக்கு 21 கொழுக்கட்டை, 21 அப்பம் படைத்து, ஒரு துணியில் மஞ்சள், குங்குமம், வெற்றிலையைக் கட்டி அர்ச்சனை செய்து வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
இந்தப் புராணக் கதையை விளக்கும் வகையில், செட்டிப் பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த லீலை, திருச்சி தாயுமானவர் ஆலயச் சித்திரைப் பெருவிழாவில் 5ம் நாள் விழாவாக நடைபெறுகிறது.
No comments:
Post a Comment