01/02/2014

பண்ணையாரும் பத்மினியும் விமர்சனம்

உயிரற்ற ஒரு பொருள் மீது மனிதர்களுக்கு ஏற்படும் இனம் தெரியாத மோகத்தையும், காமெடியையும், பரிதவிப்பையும், உண்மையான அன்யோன்யமான காதலையும் சம விகிதத்தில் கலந்துச் சொல்ல வந்திருக்கிறது பண்ணையாரும் பத்மினியும் படம்.

வசதிகள் எதுவும் இல்லாத அந்தக் கிராமத்து மக்களுக்கு பண்ணையார் ஜெயப்பிரகாஷ்தான் எல்லாமே. கேட்கும்போது உதவி மட்டுமல்ல, தன் வீட்டில் டி.வி., போன் போன்ற எல்லாப் பொருட்களையும் கிராமத்து மக்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் அளவுக்கு பாசக்கார பண்ணையார். தன் பெண்ணின் பிள்ளைப்பேறுக்காக ஊருக்குச் செல்லும்  மகாதேவன், காரை  பண்ணையார் வீட்டில் விட்டுச் செல்கிறார். பாம்பு கடித்த சிறுவனை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல ஊரே திரண்டு வந்து பண்ணையாரிடம் உதவி கேட்கிறது. ‘’வண்டியை எடுங்கள்’’ என்று பண்ணையார் உத்தரவிடும் போது காரை ஒட்ட ஆளில்லாமல் தவிக்கிறார்கள். அந்த ஊரிலே டிராக்டர் ஓட்டத் தெரிந்த விஜய் சேதுபதியை அழைத்து வருகிறார்கள். அதன் பிறகு கிராமத்தின் நல்லது கெட்டது அனைத்திலும் காரும் ஒன்றாகி விடுகிறது. வீட்டில் எந்தப் பொருள் இருந்தாலும், அதை சாதுர்யமாக தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடும் பண்ணையாரின் மகள் நீலிமா ராணி காரையும் எடுத்து சென்று விடுகிறார். அதன் பிறகு கார் மீண்டும் பண்ணையாரிடம் வந்ததா? இல்லையா என்பதுதான் மீதிக் கதை.

கார் மீது மோகம் என்பதைத் தாண்டி அன்பை பொழிகிறார்கள் பண்ணையாரும் விஜய்சேதுபதியும். காருக்கு ஒன்று என்றால் உருகிறார்கள். தன் திருமண நாளுக்குள் காரை ஓட்டக் கற்றுக் கொண்டு மனைவியை கோயிலுக்கு அழைத்து செல்ல மெனக்கெடும் ஜெயப்பிரகாஷூம், காரை ஓட்டினால்தான் கோயிலுக்கு வருவேன் என்று உசுப்பேத்தும் பண்ணையார் மனைவியும், கார் ஓட்ட கற்றுக் கொடுத்தால், பண்ணையார் தன்னை காரிடம் இருந்து பிரித்து விடுவார் என்று விஜய் சேதுபதி அச்சமடைவதும் என சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதியின் ஜோடி ஐஸ்வர்யா ராஜேஷ்.   அவ்வப்போது வருவதும் போவதுமாக இருக்கிறார். இளம்ஜோடி படத்தில் இருந்தாலும், வயதான ஜோடியான பண்ணையாரும் அவரது மனைவிக்கும் இடையிடையே ஏற்படும் ஊடல், ஒரே விஷயத்துக்காக  கணவனும் மனைவியும் மாறி மாறி விஜய் சேதுபதியிடம் உருகுவது, கோபித்துக்கொள்வது, விட்டுக்கொடுப்பது ஆகிய காட்சிகள் இதுதான் உண்மையான காதல் என்பதை உணர்த்துகிறது.  கதாநாயகன்-நாயகி என்று சொல்லுமளவுக்கு இருவரையும் படம் முழுக்க காட்டியிக்கும் இயக்குநர் அருண்குமாருக்கு சபாஷ் போடலாம்.
பண்ணையாரின் திருமண நாளுக்கு முன்பாகவே காரை  நீலிமா ராணி எடுத்துக் செல்லும் போது அனைவரும் செய்வதறியாது தவிப்பதில் ஒவ்வொருவரும் சிறப்பாக  நடித்திருக்கிறார்கள்.

பண்ணையாரின் வீட்டுவேலைக்காரனாகவும், காருக்கு கிளீனராகவும் வரும்   ‘கனாகாணும் காலங்கள்’ பால சரவணன் பீடை என்ற கதாபாத்திரத்தில் கிச்சுகிச்சு மூட்டுகிறார். தமிழ்ப் படத்தில் கதாநாயகியை எப்போதும் அழகு பதுமையாகவும், சிரித்த முகத்துத்துடனும், மங்களகரமாகவும் காட்டும் இயக்குநர்களுக்கு மத்தியில், இழவு காட்சியில் அழுகை முகத்துடன் காட்டி தமிழ் சினிமா சென்டிமெண்டை உடைத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். ஒருபக்கம் செண்டிமெண்டை உடைத்த அவர், இன்னொரு புறம் மூட நம்பிக்கையை காமெடி என்ற பெயரில் தூக்கி பிடித்திருப்பது முரண். பீடை.. பீடை என்று படம் முழுக்க சொல்லி விட்டு ‘ நான் தொட்டால் எதுவும் விளங்காது’ என்று அந்த கதாபாத்திரம் மூலமே சொல்ல வைத்திருப்பது மூட நம்பிக்கையின் உச்சம்.

படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். "எங்க ஊரு வண்டி",  "உனக்காகப் பொறந்தேனே", "பேசுறேன் பேசுறேன்" ஆகிய பாடல்கள்  மனதை வருடுகின்றன. பின்னணி இசையமைப்பிலும் தேர்ந்த இசைக் கலைஞராக மின்னியிருக்கிறார்.  ஏற்கனவே குறும்படமாக வெளிவந்து பாராட்டை பெற்ற நம்பிக்கையின் அடிப்படையில்  இப்பட்டத்தை அருண்குமார் இயக்கியிருக்கிறார். பிரமாண்டம், அடிதடி, வெட்டு, குத்து, பஞ்ச் வசனங்கள் எதுவும் இல்லாம படம் எடுத்துள்ளதற்காகவே அவரை எவ்வளவு பாராட்டலாம்.

கார் ஓட்ட கற்பதற்காக எப்போதும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது, செயற்கைத்தனமாக நடந்துக் கொள்ளும் பண்ணையார் மகளின் நடவடிக்கைகள் போன்ற காட்சிகள்  இடையில் அழுப்பைத் தட்டுகின்றன.  விஜய் சேதுபதி சம்பளத்துக்கு கார் ஓட்டுகிறாரா இல்லையா என்பதை படம் முழுக்கவே கண்டுபிடிக்க முடியவில்லை. பொதுமக்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் பொதுமக்களின் உயிரை பற்றி துளியும் மதிக்காமல் காரோடு ரேஸூக்கு போவது நம்பும்படியாக இல்லை.

படத்தில் இப்படி சில வழுக்கல்கள் இருந்தாலும்,  பண்ணையாரும் பத்மினியும் உணர்வுகளின் சங்கமம்.

மதிப்பெண்: 3 / 5

No comments:

Post a Comment