03/11/2013

ஒரு நடிகர், ஒரு நடிகை, ஒரு இயக்குநர்

ஒரு நிஜக் கலைஞன்
 

"நான் சினிமாவிற்குள் வரும் போது வசந்தம் என்னை வரவேற்கலை. சினிமா உலகின் போட்டி ரேஸில் என்றைக்கும் நான் இருந்ததில்லை. ஏனெனில், ஹிட் என்பதைவிட திறமைதான் எப்போதும் நிற்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படமும் போராடி வந்த வாழ்க்கை இது" - நடிகர் விக்ரம் தன்னைப் பற்றியும், தனது திரையுலகப் போராட்டம் பற்றியும் ஒரு விழாவில் பேசிய கருத்துகள் இவை.
 

உண்மைதான்.  1990-ம் ஆண்டு அறிமுகமாகி பல படங்களில் விக்ரம் நடித்திருந்தாலும், 2000-ம் ஆண்டில் வெளியான 'சேது' படமே அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அவரைச் சிறந்த நடிகராகவும் அடையாளம் காட்டியது. சினிமாவில் ஓர் இடத்தைப் பிடிக்க ஒரு நடிகருக்கு 10 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்றால், அது சாதாரண விஷயமல்ல.
 

ஆரம்ப காலத்தில் தொடர்ந்து தோல்விகளைத் தந்தவர் நடிகர் விக்ரம். ஆனால், அந்தத் தோல்விகளையே படிக்கற்களாக்கி தொடர் வெற்றிகளைக் கொடுத்தவரும் அவர்தான்.  பாலா இயக்கிய ‘சேது’ ஒரு நல்ல நடிகராக விக்ரமை அடையாளப்படுத்திய விதத்தில் இதுவே அவருக்கு முதல் படம் எனலாம். பாக்ஸ் ஆபீசிலும் பாராட்டப்பட்ட இந்தப் படத்தை திரையிட ஆளில்லாமல் 6 மாதங்கள் இயக்குனர் பாலா தவித்தது தனிக்கதை.
 

‘சேது’வுக்குப் பிறகு  ‘தில்’, ‘காசி’, ‘தூள்’, ‘சாமி’, ‘ஜெமினி’, ‘பிதாமகன்’, ‘அந்நியன்’, ‘தெய்வத்திருமகள்’ ஆகியவை விக்ரம் முத்திரைப் பதித்த படங்கள். சிவாஜி, கமல் போன்ற நடிகர்களுக்குப் பிறகு அந்தக் கதாபாத்திரமாகவே மாறும் அற்புத கலைஞர் விக்ரம். ‘காசி’ படத்தில் நடிப்பையும் தாண்டி நிஜமாகப் பார்வையில்லாதவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதை கண் முன்னே நிறுத்தியவர் விக்ரம். அந்தளவுக்கு நடிப்பிற்காக மெனக்கெடும் கலைஞன்.
 

‘தில்’, ‘தூள்’, ‘சாமி’ போன்ற படங்களில்  பரபரவென ஓடிய திரைக்கதைக்கு உயிர் கொடுத்தவரும் அவரே. ‘பிதாமக’னின் சித்தன் கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் நடித்திருந்தால், பொருந்தியிருப்பாரா எனக் கேள்வி கேட்கும் அளவுக்கு படத்தில் வசனம் பேசாமலே தன்  திறமையை நிரூபித்துக் காட்டியவர் இந்த சினிமா ‘பிதாமகன்’. இப்படி விக்ரமை பற்றியும் அவரது  நடிப்பைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.
 

சமீபகாலமாக விக்ரமின் சில படங்கள் சரிவர போணியாகமல் போயிருந்தாலும், இவரது அடுத்தடுத்தப் படங்களுக்கு எதிர்பார்ப்பு மட்டும் குறையவில்லை.  ஏனெனில் நடிகர் விக்ரம் சொன்னது போல, ஹிட் என்பதைவிட திறமைதான் எப்போதும் நிற்கும். விக்ரமின் அந்தத் திறமைதான் அவரை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.
 

சர்ச்சைகளுக்கு அப்பால்...
 

“யானை கீழே விழுந்தால் உடனே எழுந்திருக்க முடியாது; ஆனால், குதிரை விழுந்தால் உடனே எழுந்து ஓடும், நான் குதிரை மாதிரி’’ என்று சில
ஆண்டுகளுக்கு முன்பு விழா ஒன்றில் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அது அவருக்கு மட்டுமல்ல, நடிகை நயன் தாராவுக்கும் பொருந்தும். காதல் சர்சைகளுக்குப் பிறகு சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டு, மீண்டும் ஃபீல்டில் பிஸியாக  நடிக்க முடியும் என்றால், அதுதான்  நயன் தாரா.
 

2003-ம் ஆண்டில் மலையாளப் படத்தில் அறிமுகமான நயன் தாரா தமிழில் ‘ஐயா’ படம் மூலம் அறிமுகமானார். குண்டாக இருந்த நயன் தாராவைப் பார்த்து, தமிழில் தாக்குப்பிடிக்க முடியாது என்று ஏளனம் செய்தவர்கள் ஏராளம். ஆனால், அடுத்தப் படத்திலேயே குண்டு உடலை ஸ்லிம்மாக்கி, ‘சந்திரமுகி’யில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து அப்போதைய முன்னணி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்தளவுக்கு தன்னம்பிக்கை நடிகை நயன் தாரா.
 

‘ஏகன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘வில்லு’ என சீரான வேகத்தில் முன்னேறிய நயன் தாராவுக்கு ஸ்பீடு ப்ரேக்கர்களாக அமைந்தன அவரது காதல் சர்ச்சைகள். சிம்புடன் காதல் முறிவு, பிரபுதேவாவுடன் காதல், காதலுக்காக மத மாற்றம், மீண்டும் காதல் முறிவு என நயன் தாராவின் பர்சனல் பக்கங்கள் முழுவதும் சர்ச்சை மயம்தான். இந்தச் சர்ச்சைக்கு மத்தியிலும் பழைய சம்பவங்களை நினைத்து கலங்காமல் அடுத்த இன்னிங்ஸிற்காகக் களத்தில் இறங்கி கில்லி ஆடி வருகிறார் என்றால், அதுதான் நயன் தாராவின் ஸ்பெஷாலிட்டி.
 

யார் அன்புக் காட்டினாலும் இளகிய மனதுடன் அதை நம்புவது நயன் தாராவின் பலவீனம் என்று பொதுவாக அவரைப் பற்றி சினிமா வட்டாரத்தில் கூறுவார்கள். ஆனால், அதற்காக அந்தப் பண்பை நயன் தாரா இதுவரை மாற்றிக்கொள்ளவே இல்லை. ஓர் இடைவெளி விட்டு மீண்டும் நடிக்க வந்துள்ள நயன் தாரா கைவசம் 5 படங்கள் இருக்கிறது என்றால்,  மேலே சொன்னது போல அவர் குதிரை மாதிரி.
 

இலக்கண இயக்குநர்

மதுரை மாவட்டம் எத்தனையோ சினிமா இயக்குநர்களை தமிழ்
திரையுலகிற்கு வழங்கியுள்ளது. அவர்களில் இயக்குநர் அமீர் சுல்தான் என்ற அமீரும் ஒருவர்.  முதல் படத்தில் மட்டுமல்ல; தன் ஒவ்வொரு படத்திலும் முந்தைய படத்தைவிட தன்னை இன்னும் அழுத்தமாக நிரூபிப்பதுதான் ஒரு இயக்குநருக்கான மிகச் சிறந்த இலக்கணமாக இருக்க முடியும். அந்த இலக்கணத்துக்குரியவர் அமீர்.
 

‘சேது’ படத்தில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி சினிமா பாடம் கற்றவர் அமீர். பாலாவின் சிஷ்யன் என்ற தகுதியுடன் 2002-ம் ஆண்டில் ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் இவர். காதல் என்றாலே வெறுக்கும் இளைஞன், கடைசியில் காதலில் விழுவதுதான் கதை. இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லையென்றாலும், பலரது பாரட்டுக்களைப் பெற தவறவில்லை.
 

இயக்குனர் பாலாவின் சிஷ்யன் என்பதாலோ என்னவோ அவரது அடுத்தப் படமான ‘ராம்’ படத்தில் அவரது பாதிப்புகளும் முத்திரையும் படத்தில் தெரிந்தது. 2005-ம் ஆண்டில் வெளியான ‘ராம்’ படம் அமீருக்கு  நல்லப் பெயரை பெற்றுத் தந்தது. ஒரு மன நோயாளியாக ஜீவாவை நடிக்க வைத்து மிகச் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்தார். மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கும் அவனை வாஞ்சையோடு வளர்க்கும் தாயிக்குமானப் பாசத்தை காட்சிக்குக் காட்சி செதுக்கியிருந்தார் அமீர். பாசத்தையும்  சஸ்பென்ஸையும் கலந்து கொடுத்ததில் ‘ராம்’ படத்துக்கு ரசிகர்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பரிசாகத் தந்தனர். சைபிரஸ் திரைப்பட விழாவிலும் ‘ராம்’ படம் விருதை தட்டிச் சென்றது.
 

அமீரை முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் அங்கீகரித்த படம் ‘பருத்தி வீரன்’. 2007-ம் ஆண்டில் வெளியான இப்படம் மூலம் கார்த்தி என்ற பட்டைத் தீட்டப்பட்ட நடிகரை தமிழ் திரையுலகிற்கு வழங்கினார் அமீர். சாதிய சாயலை இலைமறை காயாகக் கூறி கதாநாயகனின் காதல், நய்யாண்டி, சண்டியர்தனத்தை படத்தில் அழகாக சொல்லியிருந்தார் அமீர். படத்தின் முடிவு விமர்சனத்துக்கு ஆளானாலும்,  தமிழக ரசிகர்கள் இப்படத்தைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது, பெர்லின் சர்வதேச திரைப்பட விருது உள்பட பல விருதுகளை இப்படம் வென்றது.
 

அமீர் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவியை வைத்து வெளியான ‘ஆதிபகவன்’ படம், தனது பாணியிலிருந்து மாறுபட்டு கமர்ஷியல் ஃபார்முலாவுக்குட்பட்டு  இயக்கினார் அமீர். அவருக்கே உரித்தான ஒரிஜினாலிடி இந்தப் படத்தில் மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும். கதை சொன்ன பாணியிலும் தொய்வு ஏற்பட்டதால் படம் வெ
ற்றி பெறாமல் போனது. கடந்த 16 ஆண்டுகளில் வெறும் 4 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் அமீர். ஆனால், முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் என்றால் அது  சாதாரண விஷயமல்ல.
 

- ‘தி இந்து’ தீபாவளி மலர், 2013

01/11/2013

பாலாஜி சக்திவேல்: யதார்த்த கதைச் சொல்லி

வருடத்துக்கொரு படம்கூட இல்லை. தன் மனதில் உள்ள கதைக் கருவுக்காக முழுமையான வடிவம் கிடைக்கும்வரை காத்திருந்து, ஆத்மார்த்தமாகப் படம் பண்ணும் இயக்குநர்களில் ஒருவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.  2002-ம் ஆண்டில் தொடங்கி 2012-ம் ஆண்டுவரை நான்கே படங்கள். ‘சாமுராய்’, ‘காதல்’, ‘கல்லூரி’ மற்றும்  ‘வழக்கு எண் 18/9’. இவை அனைத்துமே ஒருவகையில் சமூக பிரச்சனைகள் பற்றி பேசிய யதார்த்தமான படங்கள்.

வழக்கமான தமிழ் சினிமா கலாச்சாரத்திலிருந்து மாறி,  எளிய மக்களின் போராட்ட வாழ்வின் மறுபக்கத்தை முகத்தில் அடித்தாற்போல சொல்வது பாலாஜி சக்திவேலின் ஸ்டைல். விக்ரம் நடித்து, அவர் இயக்கிய ‘சாமுராய்’ படம் மட்டும் கொஞ்சம் ஹீரோயிசம் கலந்த பாணியில் சொல்லப்பட்ட கதை. அதை  நடிகர் விக்ரமுக்காக செய்தாரோ என்னவோ! 

‘சாமுராய்’ படம் நன்றாக வந்திருந்தாலும், சரியாக ஓடாமல் போனதால் தமிழ் சினிமா உலகில் இவரது அடையாளம் வெளிப்படாமலேயே இருந்தது. வணிக ரீதியாக வெற்றிபெற முடியாததாலேயே இவரது திறமையை வெளிக்காட்ட
சத்திய சோதனைக்கும் ஆளாக வேண்டியிருந்தது.  சினிமா வாழ்க்கைக்காக கமர்ஷியல் சினிமா சூழலில், இவர் சிக்காமலிருந்தது தமிழ் சினிமாவின் புண்ணியம்.

மூன்று ஆண்டுகள் கழித்து இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் ‘காதல்’ படம் வெளியானது. படத்தில் பெரிய  நட்சத்திரங்கள் இல்லை. ‘பாய்ஸ்’ படத்தில் நடித்திருந்த பரத் தவிர ஏறக்குறைய அனைவரும் புதுமுகங்கள். உண்மை சம்பவம் என்ற அறிமுகத்துடன்
வெளியானது அந்தப் படம். இருவேறு சமூகத்தைச் சேர்ந்த ஜோடி காதலித்து திருமணம் செய்த பிறகும், அந்த இளைஞனை அடித்து உதைத்து மனநலம் பாதிக்கப்பட்டவனாக மாற்றும் சாதிய கொடூரத்தை சோகத்துடன் காட்டியிருந்தார் பாலாஜி சக்திவேல். சாதிய சதியால் காதலனை மறந்து வேறு ஒருவரை திருமணம் செய்யும் காதலி, மனநலம் பாதிக்கப்பட்ட காதலனை அரவணைத்து செல்லும் காதலியின் கணவன் மூலம் மனிதநேயத்தை சொன்ன பாணி பாலாஜி சக்திவேலுக்கு மட்டுமே வாய்த்த வரம். மிக வலிமையான கதையை இப்படத்தில் சொல்லியதன் மூலம், பங்கேற்ற எல்லாருக்கும் மிகப்பெரிய வாழ்வு கிடைத்தது. முதல் வாய்ப்பைத் தவற விட்ட பாலாஜி சக்திவேல், இந்தமுறை மிகச் சரியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.

‘காதல்’ படம் தமிழ் ரசிர்களை உலுக்கியெடுத்தது என்றால், அவரது அடுத்தப் படமான ‘கல்லூரி’ மனதைப் பிசைந்தது. இந்தப் படமும் சமூகத்தில் நல்ல அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் படத்தில் ஒரு சிறு நகரில் இருக்கும் அரசு கல்லூரி பற்றியும் அங்கு படிக்கும் மாணவர்களின் பின்புலம் பற்றியும் சொல்லப்படாத பல செய்திகளைப் பதிவு
செய்தது ‘கல்லூரி’ படம். படத்தின் கிளைமாக்ஸ், உண்மையாக நடந்த ஓர் அரசியல் கேவலத்தை யதார்த்தமாக உணர்த்தியிருந்தது.

‘காதல்’ படத்திற்கு பிறகு மீண்டும் ஓர் இடைவெளி. 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அழுத்தமான கதையுடன் மீண்டும் களத்திற்குள் வந்தார். ஒரு அடித்தட்டு இளைஞன், அவனை நித்தமும் கடந்து செல்லும் அவனது காதலி, அவள் வேலை செய்யும் வீட்டு பெரிய இடத்துப் பெண், அவளை போகப் பொருளாக மட்டும் பார்க்கும் அதைவிட பெரிய இடத்துப் பையன். இவர்கள் நால்வருக்கும் பொதுவாக ஒரு சம்பவம். படம் அந்தப் புள்ளியில் இருந்துதான் விரிகிறது. ஐந்தாவது கதாபாத்திரமாகக் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் காவல் துறை அதிகாரி.  அதுதான் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் கதைக் கரு.

குடும்பங்களின் ஏழ்மை நிலை, உயர்தட்டு குடும்பப் பிள்ளைகளின் பாலியல் ஒழுக்கக்கேடு, ஏழை பெண் மீதான புனிதமான காதல், தன் இச்சைக்கு அடங்க மறுக்கும் பெண்ணுக்கு அமில வீச்சை பரிசாகத் தரும் இளைஞன், எளிய மக்களை ஏமாற்றும் நயவஞ்சக காவல் அதிகாரி என சமூகத்தின் அங்கங்களையும் சீரழிவுகளையும் பாலாஜி சக்திவேல் காட்சிப்படுத்தியிருந்த விதம் சிக்ஸர் ரகங்கள்.

இவரது எல்லாப் படங்களையும் உற்று கவனித்தால், ஒன்று புலப்படும். எல்லாப் படங்களிலும் ஏழை எளிய மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களின் அவலநிலைக்கு, சினிமாவுக்கே உரிய மகிழ்ச்சிகரமான, நம்பமுடியாத முடிவைத் தராமல், யதார்த்தத்தை முடிவாக தந்திருப்பார் பாலாஜி சக்திவேல். அதானால்தான் என்னவோ இவரது படைப்புகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதில்லை.

சினிமா வெறும் பொழுதுபோக்கை தருவது மட்டுமல்ல; வெகுஜனமக்களின் சிந்தனைப் போக்கையும் வளர்க்க வேண்டும். அந்த வகையில் பாலாஜி சக்திவேல், தொடர்ந்து நம்பிக்கையளிக்கும் இயக்குனராகப் பரிணமித்து வருகிறார்.

(2013, தி இந்து தீபாவளி மலர்)

தென் தமிழகத்தின் சிறப்புகள்

தமிழ்நாட்டுக்குள் ஒரு நாடு (சிவகங்கை)
 

 தமிழ்நாட்டுக்குள் புகழும் பெருமையும் கொண்ட ஒரு நாடு இருப்பது தெரியுமா? ஆமாம், தமிழகத்தின் பாரம்பரியக் கட்டிடக் கலையை உலகுக்கு பறைசாற்றும் நாடு. சர்வதேச கட்டிடக் கலைக்கு முன்னோடியாக திகழும் நாடு அது. இன்னும் கணிக்க முடியவில்லையா? அதுதான் செட்டிநாடு!

 தமிழகத்தின் தெற்கே உள்ள சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் காரைக்குடியை மையமாகக் கொண்ட குறிப்பிட்ட சில ஊர்களே   ‘செட்டிநாடு’ என்றழைக்கப்படுகிறது. குறிப்பாகக் காரைக்குடி, புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட மக்கள் குடியேறிய 96 ஊர்களும் இப்படி குறிக்கப்படுகிறது. இவற்றை பொதுவாகச்  செட்டிநாடு என்றுகூட அழைக்கிறார்கள்.


இந்த செட்டிநாடு கிராமத்தில் காரைக்குடி, தேவகோட்டை,  கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், ஆத்தங்குடி, அரியக்குடி, கண்டரமாணிக்கம், பாகனேரி, நாட்டரசன்கோட்டை, ஒக்கூர், வேந்தன்பட்டி, பொன்னமராவதி என பல ஊர்கள் அடங்கியுள்ளன. நகரத்தார் சமூகத்தினர் வசிக்கும் இந்தப் பகுதியை, ‘நாட்டுக்கோட்டை’ என்றும் அழைப்பது உண்டு.


செட்டி நாடு சமையல் எந்தளவுக்கு புகழ்பெற்றதோ, அதே அளவுக்கு புகழ் பெற்றது செட்டி நாடு வீடுகள். குறிப்பாக ஆயிரம் ஜன்னல் வீடு உள்ள செட்டிநாடு வீடுகள் மிகவும் பிரபலம்.  செட்டிநாட்டிலுள்ள வீடுகள் எல்லாம் 1875-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டுவரை கட்டப்பட்டவை.  எல்லா வீடுகளுமே 80 அடி முதல் 120 அடிவரை அகலம், 160 அடி முதல் 240 அடிவரை நீளம் கொண்டவை. பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேக்குமரங்களால் வீடுகள் இழைத்துக் கட்டப்பெற்றவை.  ஒரு வீடு கட்டி முடிக்க 3 முதல் 5 ஆண்டுகள்வரையிலும் பிடித்திருக்கிறது.


 கலையம்சம் உள்ள செட்டி நாடு வீடுகள் போலவே அதன் வீதிகளும் மிகவும் வித்தியாசமனவை. குறிப்பிட்ட சமுதாயத்தின் பெருமை பேசினாலும், தமிழ்நாட்டின் பெருமை என்று செட்டிநாட்டை உறுதியாகக் கூறலாம்.
 

இது ஊட்டி மாதிரி (தேனி)


மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி. மேகமலைக்கு அதுதான் காரணப் பெயர். மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி பச்சை பசேல் எனப் பரந்து விரிந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடு இந்த மேகமலை. தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் இருக்கிறது இந்த ஊர். அடிவாரத்தில் இருக்கும் சிறிய முருகன் கோயில் வெகு பிரசித்தம். 


குன்னூர், ஊட்டியில் இருப்பதுபோல மேகமலையில் டீ, காபி தோட்டங்கள் நிறைய உள்ளன. ஆனால், வீடுகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். பகல் நேர வெப்பநிலை சராசரியாக 12 டிகிரி செல்சியஸ். அதனால், எப்போதும் இதமான குளிர் இருக்கும். சீசன் நேரம் என்றால் பகல் நேரத்தில்கூட ‘ஸ்வெட்டர்’ தேவைப்படும். 


வழியெங்கும் ஆங்காங்கே குறுக்கிடும் அருவிகள் என ரம்மியமாகக் காட்சியளிக்கிறது மேகமலை. எல்லாப் பருவநிலைகளிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுவது இங்கு தனிச்சிறப்பு. இரண்டு மலைகளுக்கு இடையே பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. திடீர் திடீரென யானைக் கூட்டங்களின் அணிவகுப்பு, காட்டு மாடு, மிகப் பெரிய அணில், வேணாம்பல் (ஹார்ன்பில்) என விலங்குகளின் நடமாட்டத்தை அதிகம் காணலாம். 


சின்னமனூரிலிருந்து நேராக மேகமலைக்கு செல்ல பேருந்து வசதி உண்டு. காரில் செல்வதாக இருந்தால், ஆண்டிப்பட்டியிலிருந்து கண்டமநாயக்கனூர் சென்று அங்கிருந்து மேகமலைக்கு செல்லலாம்.
 

நாகரீகத் தொட்டி (நெல்லை)
 

திருநெல்வேலி செல்லும் பாதையில் இருக்கும் ஆதிச்சநல்லூர் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? பொட்டல் காடாக காணப்படும் ஆதிச்சநல்லூர்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்த, நம்முடைய கலாச்சாரம் செழித்தப் பகுதி என்றால் நம்புவீர்களா? 

1876-ம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜகோர் எனும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மானுடவியல் ஆராய்ச்சிக்காக, இந்தியாவுக்கு வந்தார். ஆதிச்சநல்லூரில் உடைந்த மண்பாண்டத் துண்டுகளைக் கண்டு தோண்டிப் பார்த்தபோது முதுமக்கள் தாழி, செம்புப் பட்டை, இரும்பு ஆயுதங்களைக் கண்டெடுத்தார். 


1900-ம் ஆண்டுகளில் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி செய்தபோது வாணலி, தயிர்ப் பானை, முக்கனிசட்டி, முக்காலிக் குதில், ஜாடி, உருளி, மையக் கிண்ணம் என சுமார் 100 வகையான சமையல் பாத்திரங்களும் ஈட்டி, எறிவேல், கைக் கோடாரி, பலிவாள், அம்புதலை, வேலாயுதம், அகன்றவாய்ப் பரசு, கத்தி, குத்துவாள் போன்ற  ஆயுதங்களும் தோண்டத் தோண்ட கிடைத்தன. இவையெல்லாம் வெளிநாட்டு அருங்காட்சியங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.


சமூக ஆர்வலர்களின் கோரிக்கையால்  நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 2003-ம் ஆண்டில் சுமார் ஆறு மாதங்கள் இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சி துறை இங்கு ஆய்வு நடத்தியது. அடுக்கு மண்பாண்டங்கள், 168 முதுமக்கள் தாழிகள், இரும்புப் பொருட்கள், விளக்குகள் கிடைத்தன. மேலும் பல பொருட்கள் கிடைத்தன. இதன் மூலம் ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்று ஆதிச்சநல்லூரும் மிகத் தொன்மையானதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.


ஆதிச்சநல்லூர் 3,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மொத்தம் உள்ள 114 ஏக்கரில் சுமார் 10 சென்ட் அளவுக்கு மட்டுமே குழிதோண்டி பழங்கால பொருட்களைச் சேகரித்துள்ளனர். 


கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களைத் தட்டினால் வெண்கல ஒலி கேட்கிறது, கீழே போட்டால் உடைவது இல்லை. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிக்குள் மனித எலும்புகள் கிடைத்துள்ளன. எனவே இவர்கள் திராவிடர்களாகவும் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வங்கதேசத்து தொல்லியல் நிபுணர் பானர்ஜி, ஆதிச்சநல்லூரை 'நாகரிகத்தின் தொட்டில்’ என்கிறார்.


அதிசய தொட்டிப் பாலம் (கன்னியாகுமரி)



கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தொட்டிப் பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரியது.  நீர்ப்பாசனத் திட்டத்திற்காக 1962-ல் தொடங்கப்பட்டு 1969-ல் கட்டி முடிக்கப்பட்டது. மாத்தூர் என்ற கிராமத்தில் கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரு மலைகளுக்கு நடுவில் இப்பாலம் கட்டப்பட்டது.


தொட்டிப் பாலம் நீளவாக்கில் 1,204 அடியும் தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. 28 தூண்கள் இப்பாலத்தைத் தாங்கி நிற்கின்றன. பெரிய பெரியத் தொட்டிகளாகத் தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 


தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் ‘தொட்டிப் பாலம்’ எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் ‘தொட்டில் பாலம்’ எனவும் இதை அழைக்கிறார்கள். இப்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று பார்த்தால், ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கிறது. மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது.


ஆசிய அளவில் புகழ்பெற்ற இப்பாலம் திருவட்டாற்றிலிருந்து 3 கி.மீ. தொலையிலும், கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலையிலும் அமைந்துள்ளது.


தங்கமான நல்லதங்காள் (விருதுநகர்)


 ‘நல்லதங்காள்’ படம் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். நல்லதங்காள் கதை பற்றி உங்களுக்கு தெரியுமா? நல்லதங்காள் கதை தமிழகத்தில் பிரபலமான ஒரு சோகக் கதை. விருதுநகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இக்கதை மிகப் பிரபலம்.


 நல்லதங்காள் தொடர்பான சம்பவம் கதையாகவே சொல்லப்பட்டு வந்தாலும், அவள் உண்மையிலேயே வாழ்ந்தாள் என நம்பப்படுகிறது. நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, தானும் அக்கிணற்றில் விழுந்து இறந்ததாக அவளது கதை சொல்லப்படுகிறது. அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான் என்பதே நல்லதங்காள் கதை.


 நல்லதம்பி-நல்லதங்காள் வாழ்க்கை சிறந்த அண்ணன் - தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. தற்போது நல்லதங்காளை தெய்வமாக விருதுநகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வணங்குகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரத்தில்தான்  நல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் நல்லதங்காளுக்கு இப்பகுதியில் கோயிலும் எழுப்பப்பட்டுள்ளது. 


 கோவில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏழு குழந்தைகளின் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு தனியே இன்னொரு சன்னதியில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோயிலுக்குச் சற்று தொலைவில் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்து காணப்படுகிறது. நல்லதங்காள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது இங்கேதான் என்று சொல்கிறார்கள். ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் இங்கு நடைபெறும்  திருவிழா பிரசித்தம்.


 ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வாத்திராயிருப்புக்குச் சென்று, அங்கிருந்து அர்ச்சுனாபுரம் சென்றால், அங்கு  நல்லதங்கள் கோயிலை தரிசிக்கலாம்.


கல்லிலே ஒரு கலைவண்ணம் (தூத்துக்குடி)



ஒரே கல்லில் கோயில் உருவாக்கிய தமிழர்களின் தனித்திறமையைக்  கேள்விபட்டிருக்கிறீர்களா?  இல்லையென்றால், நீங்கள்  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள  வெட்டுவான்கோயிலுக்குச் செல்ல வேண்டும். இங்குதான் தமிழர்களின் பழம்பெருமை பேசும் கழுகுமலை பாண்டிய குடவரை கோயில்  உள்ளது


  கழுகு மலையின் அடிவாரத்தில் அப்படியே மலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கிறது இந்தக் கோயில். ஒரு  மலையைக் குடைந்து ஒரு கலைப் பெட்டகத்தையே நிறுவியிருக்கிறார்கள் சமண முனிவர்கள். பண்டையக் காலத்தில் சமணர்கள், மக்களுக்குக் கல்வி கற்பிக்கும் இடமாக இருந்தது இந்தக் கழுகு மலை. அப்போது பல சமண முனிவர்கள் சேர்ந்து அற்புதமான சிற்பங்கள் மற்றும் கோயிலை கழுகு மலையில் உருவாக்கியதாகக் கூறுகிறார்கள்.


இது மற்ற குடவரை கோயில்போல கிடையாது. யாரும் எளிதில் செதுக்க முடியாத கடினமான பாறையில் ஆனது இந்த கழுகு மலை. அப்படி இருந்தும் அவ்வளவு துல்லியமாகவும் கலை உணர்வுடனும் சமண முனிவர்கள் இந்தச் சிலைகளைச் செதுக்கியிருக்கிறார்கள். வரகுணப் பாண்டியன் காலத்தில், சிவனுக்காகக் கழுகு மலையின் பாறையில் 7.50 மீ. ஆழத்துக்கு சதுரமாக வெட்டியெடுத்து, அதன் நடுப்பகுதியை ‘வெட்டுவான் கோயிலாக' செதுக்கியுள்ளனர்.


பண்டையத்  தமிழர்களின் சிற்பக் கலைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

- தி இந்து தீபாவளி மலர், 2013