29/09/2023

அதிமுக - பாஜக கூட்டணி பிளவு இயல்பானதா?

 



தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக நீடித்துவந்த அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்திருக்கிறது. அதிமுக தலைவர்கள் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே இரண்டரை ஆண்டுகளாக நீடித்த உரசல்கள், விமர்சனங்கள், கருத்து மோதல்கள் போன்றவற்றைக் காரணம் காட்டி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி யிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது அதிமுக. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவின் இந்த விலகல் உறுதியானதா என்னும் விஸ்வரூபக் கேள்வி எழுந்திருப்பதில் வியப்பில்லை.

விசித்திரமான காரணம்: அதிமுக-பாஜக இடையே இவ்வளவு ஆண்டுகள் கூட்டணி நீடித்ததே பெரும் சாதனைதான். ஏனெனில், ஜெயலலிதாவின் காலத்தில், 1998, 2004 ஆகிய ஆண்டுகளில் இக்கட்சிகள் இடையே அமைந்த கூட்டணியின் ஆயுள்சொற்ப காலமே நீடித்தது. 2019இல் அதிமுக-பாஜக கூட்டணி மலர்வதற்கு முன்பாக, 2016இல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதலே அதிமுக மீது பாஜகவின் நிழல் படர்ந்தது.

அதற்கேற்ப பாஜக தேசியத் தலைமைக்குத் தம்மை நெருக்கமாகக் காண்பித்துக்கொள்ளும் போட்டி மனப்பான்மையில் அதிமுக தலைவர்கள் மூழ்கிக் கிடந்தனர். அதே நேரம் பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது முதலே அவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தண்ணீரும் எண்ணெயுமாக இருந்தனர். அதன் நீட்சியாக நீண்ட தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல இன்று பாஜக கூட்டணியை உதறித் தள்ளி வெளியேறியிருக்கிறது அதிமுக.

எனினும், பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாகச் சொன்னதற்கான காரணம் உண்மையிலேயே சற்று விசித்திரமானது. பாஜகவின் தேசியத் தலைவர்களோடு அதிமுக தலைவர்களுக்கு எந்த மோதலும் இல்லை. தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலைதான் அதிமுகவுக்கு உள்ள ஒரே பிரச்சினை என்று பிரிவை அறிவிக்கும் அதிமுகவின் அறிக்கையிலேயே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அறிஞர் அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்ட முன்னோடித் தலைவர்களை அண்ணாமலை விமர்சித்தார், எடப்பாடி பழனிசாமியைச் சிறுமைப்படுத்தினார் என்பன போன்றவையே காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. என்றாலும், இக்கூட்டணி முறிவுக்கு வேறு சில வலுவான காரணங்களும் இருக்கின்றன.

பரஸ்பரப் புரிதலின்மை: கூட்டணி என்பதே பரஸ்பரப் புரிதலோடு இயங்குவதுதான். ஒன்றை விட்டு ஒன்றைப் பெறுவதுதான். ஆனால், அதிமுக தலைவர்களைக் கோபம் கொள்ள வைத்திருப்பது தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அண்ணாமலை முன்வைக்கும் கருத்துகள். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பேசுவதற்கோ, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ அண்ணாமலைக்கு உரிமை உண்டு. ஆனால், அது எல்லாமே தனித்துச் செயல்படும்போது மட்டுமே சாத்தியம்.

முன்பு தேசியக் கட்சியான காங்கிரஸுடன் அதிமுக பல முறை கூட்டணி கண்டிருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு அதிமுக உதவுவது; மாநிலத்தில் அதிமுக ஆட்சிக்குக் காங்கிரஸ் உதவுவது என்ற புரிதலோடுதான் கூட்டணியின் செயல்பாடுகள் அமைந்தன. கடந்த 20 ஆண்டுகளாக நீடிக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணியும் அதே வகையான புரிதலோடுதான் தொடர்கிறது.

தமிழ்நாட்டில் ‘காமராஜர் ஆட்சி அமைப்போம்’ என்று பேசாத காங்கிரஸ் தலைவர்களே கிடையாது. ஆனால், கூட்டணித் தலைவர்கள் மனம் கோணும் வகையில் அதைப் பூதாகரமாக மாநில காங்கிரஸ் தலைவர்கள் பேசியதில்லை. கட்சி தொடங்கியது முதல் தன்னுடைய ஆட்சி என்று பேசிவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், 2011இல் அதிமுகவோடு கூட்டணி வைத்தபோது ஜெயலலிதாவைத்தான் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினார்.

தற்போது அதிமுக-பாஜக கூட்டணியில் இது தலைகீழாக இருப்பதுதான் முரண். மோடியை மூன்றாவது முறையாகப் பிரதமராக்க உழைப்போம் என்று அதிமுக தலைவர்கள் பேசும்போது, “எடப்பாடி பழனிசாமியைத் தமிழ்நாட்டின் முதல்வராக்குவோம் என்று நான் கூற முடியாது. நிச்சயமாக பாஜக 2026இல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்” என்று அண்ணாமலை அறிவித்தால், அங்கு கூட்டணிக் கட்சிகளுக்கு இருக்க வேண்டிய பரஸ்பரப் புரிதல் அடிபட்டுப் போகாதா? எனில், மாநிலத்தில் ஆட்சிஅமைக்கும் போட்டியில் அதிமுக, பாஜக தனித்தனியாகக் களமிறங்குவதே உசிதம். அதைத்தான் அதிமுக செய்திருப்பதாகக் கருத இடமுண்டு.

தொக்கி நிற்கும் கேள்விகள்: அதிமுக-பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக அறிவித்துவிட்டாலும், அரசியல் அரங்கிலும் பொதுவெளியிலும் அது சந்தேகக் கண்ணோடுதான் அணுகப்படுகிறது. ஏனெனில், கூட்டணியின் பிரச்சினையாக அண்ணாமலைதான் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறார். ஒருவேளை, அண்ணாமலையை பாஜக தேசியத் தலைமை மாற்றிவிட்டால் அல்லது அதிமுகவுக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது என்று கட்டுப்பாடுகளை அவருக்கு விதித்துவிட்டால், அதிமுகவின் நிலைப்பாடு என்ன? அப்படி நடந்தால் பாஜகவோடு அதிமுக மீண்டும் கூட்டணியை ஏற்படுத்துமா? பிரதமர் மோடியோ உள் துறை அமைச்சர் அமித் ஷாவோ எடப்பாடி பழனிசாமியைச் சமாதானம் செய்தால், அப்போதும் அதிமுக தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்குமா? இதுபோன்ற கேள்விகள் தற்போது அதிமுகவைத் துரத்துகின்றன. அதே நேரம், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவைச் சந்தித்துவிட்டு வந்த பிறகுதான் இந்தக் கூட்டணி முறிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் மறந்துவிட முடியாது.

இன்றைக்கும் அதிமுக-பாஜக இடையே கொள்கை மோதல்களோ, மத்திய அரசுத் திட்டங்கள் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகளோ இல்லை. மத்திய அரசின் முடிவுகள் தமிழ்நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் என்கிற விமர்சனங்கள் எதுவும் அதிமுகவிடம் வெளிப்படவில்லை. இந்தப் பின்னணியில்தான், பாஜகவும் அதிமுகவும் பேசி வைத்துக்கொண்டு இந்த அரசியல் விளையாட்டை விளையாடுவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.

தப்பிக்கும் அதிமுக: அதிமுக தலைவர்கள்-அண்ணாமலை இடையே பல்வேறு சந்தர்ப்பங்களில் வார்த்தை மோதல்கள் ஏற்பட்டபோதெல்லாம், இக்கூட்டணி நீடிப்பதற்குக் காரணம், பாஜகவின் டெல்லி நிழலில் அதிமுக இருப்பதே என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. தற்போது பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியிருப்பதன் மூலம், இந்த விமர்சனங்களிலிருந்து அதிமுக விடுபட உதவும். பாஜகவோடு கூட்டணியில் இருப்பதால் மத்திய அரசின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை அதிமுகவும் சேர்த்தே தமிழ்நாட்டில் எதிர்கொண்டுவந்தது. அந்த விமர்சனங்களிலிருந்தும் அதிமுக தப்பிக்கக்கூடும்.

அதிமுகவின் தற்போதைய முடிவு, 2024 மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணி-தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற போட்டியைப் பாரம்பரியப் போட்டியாக திமுக-அதிமுக போட்டியாக மடைமாற்றும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களின் காரணமாகவே பாஜக கூட்டணியில் அதிமுக நீடிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் அடிப்பட்டுப்போகும். பாஜக கூட்டணியால் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்துவிட்டதாகக் கருதும் அதிமுக, அந்த வாக்குகளைப் பெற முனையும்.

காத்திருக்கும் சவால்: பாஜக உறவை உதறித் தள்ளிவிட்டதை - அரசியல் களத்தைத் தாண்டி - பொதுவெளியில் நம்பவைக்க வேண்டிய கட்டாயமும் அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. அண்ணாமலைக்கு எதிராகப் பேசும் அதிமுக தலைவர்கள், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி சேர மாட்டார்களா; பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராகப் பேசுவார்களா என்கிற சந்தேகம் இப்போதே அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. ஆனால், எந்த ஒரு காரணத்தை முன்வைத்தும் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கவே மாட்டோம் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கூட்டணி முறிந்தது முறிந்ததுதான் என்பதில் உறுதியாக இருந்து, தனது தலைமையில் எடப்பாடி பழனிசாமி புதியதொரு கூட்டணியை அமைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பாரேயானால், ‘அடிமை அதிமுக’ என்று இனிமேல் எக்காலத்திலும் திமுக-வால் கேலி பேச முடியாது.

இறைவன் விமர்சனம்

 


சென்னை மாநகரில் மிகக் கொடூரமாக இளம் பெண்கள் தொடர்ச்சியாகக் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலைகளை நிகழ்த்தும் சீரியல் கில்லரை (ராகுல் போஸ்) கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள் காவல் உதவி ஆணையர்களான அர்ஜூனும் (ஜெயம் ரவி) ஆண்ட்ரூவும் (நரேன்). இதில் ஒரு துர்நிகழ்வு நடைபெற போலீஸ் வேலையை விட்டே ஒதுங்குகிறார் ஜெயம் ரவி. என்றாலும் ஜெயம் ரவியை இலக்கு வைத்து துரத்திக்கொண்டே இருக்கிறான் சைக்கோ கொலையாளி. இதற்கு என்ன காரணம்? யார் அந்த சைக்கோ கொலையாளி? இருவருக்கும் இடையிலான துரத்தலில் என்னென்ன சம்பவங்கள் நிகழ்கின்றன. அவனை ஜெயம் ரவி என்ன செய்கிறார் என்பதுதான் ‘இறைவ’னின் மீதிக் கதை.

சீரியல் கில்லர், சைக்கோ கொலைகள் தொடர்பான படங்கள் என்றால், ஓர் அழகான ஒன்லைன் கதையை வைத்துகொண்டு துரத்தலும் திகிலும் கொண்ட திரைக்கதையை எழுதுவார்கள். ஆனால், ஒரு வறட்சியான த்ரில்லர் கதைக்கு திகில் முலாம் பூச முயன்றிருக்கிறார் இயக்குநர். விளைவு, சீரியல் கில்லர் படங்களுக்கே உரிய பரபரப்பு, படபடப்பு, திருப்பங்கள் எதுவும் இல்லாமல் பயணிப்பது ‘இறைவ’னின் பெரும் பலவீனம். படத்தின் தொடக்கத்திலேயே சைக்கோ கொலையாளியைக் காட்டிவிடுகிறார்கள். எனவே, அவர் யார் என்கிற சஸ்பென்ஸ் உடைந்து, அவர் செய்யும் கொடூரமான கொலைகள் எல்லாமே பாவமாக இருக்கிறது.

ஒரு சைக்கோ கொலையாளி என்றால், அவன் சைக்கோவாக ஆனதற்கான பின்னிணியை ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்வது படத்துக்கு வலுசேர்க்கும். அப்படியான எந்தக் காட்சிகளுமே படத்தில் இல்லாதது படத்துக்கு மைனஸ். முதல் பாகத்தின் முடிவில் சொல்லப்படும் ஒரு திருப்பம் கவனம் பெறுகிறது. ஆனால், தெளிவற்ற பின்னணிக் கொண்ட திரைக்கதை இரண்டாம் பாகம் முதல் பாகத்தைவிட அயற்சிக்குள்ளாக்கி விடுகிறது.

சைக்கோ கொலையாளி - நாயகன் இடையே எந்தத் துரத்தலும் இல்லை. சர்வ சாதாரணமாக சைக்கோ கொலையாளியை ஜெயம் ரவி கண்டுபிடிக்கிறார். சண்டைப் போடுகிறார், அடிக்கிறார். திரும்பத் திரும்ப நடக்கும் இந்தக் காட்சிகள், ‘இறைவா, எங்களைக் காப்பாற்று’ என்று பார்வையாளர்களைக் கதறவைத்துவிடுகிறது. ஸ்மைலி கில்லர், காபி கேட் கில்லர் என்று விதவிதமாக பெயர்கள் வைத்து அழைத்தாலும், புதுமை இல்லாமல் நகரும் காட்சிகளால் படம் தள்ளாடுகிறது.

சைக்கோவிடமிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு பெண் பற்றி அமைக்கப்பட்ட காட்சி அமைப்புகள் வக்கிரமானவை. ஊர் முழுக்க சிசிடிவி, கையில் எல்லோரும் செல்போனுடன் அழையும் காலத்தில் சைக்கோ கொலையாளி சர்வசாதாரணமாக காரில் கடத்துகிறார். இது கேள்விக்குள்ளாகக் கூடாது என்பதற்காக, ‘சிசிடிவி கேமரா இல்லாத இடமாகப் பார்த்து’ என்ற சரடு வசனத்தை விடுகிறார்கள். ‘பிரம்மா’ என்று அழைத்துக்கொண்டு இளம் பெண்களை கொலை செய்யும் ராகுல் போஸ், கொலை செய்வதற்காக சொல்லும் காரணங்களில் தர்க்கமே இல்லை. ஊரையே நடுங்க வைக்கும் அளவுக்கு கொலைகள் செய்து மருத்துவமனை சிறையில் இருக்கும் சைக்கோ கொலையாளி சுலபமாக தப்புவது போலீஸுக்கே அடுக்காது. போலீஸ் வேலையை விட்ட ஜெயம் ரவி, போலீஸாகமலேயே எல்லா போலீஸ் வேலையையும் செய்கிறார். இப்படி படம் முழுக்க நிறைய பூச்சுற்றல்கள்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்திருப்பதைத் தவிர நேர்மறையான அம்சங்கள் எதுவும் இல்லை. அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில், ‘எனக்கு பயம்னா என்னென்னே தெரியாது’ என்று ஜெயம் ரவி பல வெரைட்டிகளில் கோபத்தைக் காட்டுகிறார். அர்ஜூன் கதபாத்திரத்திலும் கச்சிதமாகப் பொருந்துகிறார். நண்பன் நரேனுக்காக உருகுவது, நயன் தாராவிடமிருந்து விலகி நிற்பது, நெருக்கமானவர்கள் கொலையாகும்போது பதறுவது என நடிப்பில் குறை வைக்கவில்லை. நயன்தாரா ஒருதலையாக காதலித்து உருகும் பெண்ணாக வந்துபோகிறார். சைக்கோ கொலையாளியாக வரும் ராகுல் போஸ் தன் கச்சிதமாக செய்திருக்கிறார். அவரின் தொடர்ச்சியாக வரும் வினோத் கிஷன் மிகை நடிப்பால் திணறடிக்கிறார். மேலும் படத்தில் நரேன், ஆசிஷ் வித்யார்த்தி, சார்லி, அழகம் பெருமாள், பக்ஸ், விஜயலட்சுமி ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. பாடல்கள் கவனம் பெறாவிட்டாலும், ஒரு த்ரில்லர் படத்துக்குரிய இசையைச் சரியாக வழங்கியிருக்கிறார். இருட்டில் நடக்கும் கொலைகளைக் கச்சிதமாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஹரி கே. வேதாந்தம். இழுவையான காட்சிகளுக்கு கருணையின்றி கத்திரி போட்டிருக்கலாம் படத்தொகுப்பாளர் ஜே.வி. மணிகண்ட பாலாஜி.