31/01/2023

சீரழிவுக்கு வித்திடும் கிரிக்கெட் விதிமுறைகள்

சர்வதேச கிரிக்கெட்டில், ஒரு நாள் (50 ஓவர்) போட்டிகள் பிரபலமாகத் தொடங்கிய 1980-90களில் மட்டையாளர் ஒருவர், ஒரு போட்டியில் 150 ரன்களைக் கடப்பதே அரிதான நிகழ்வாக இருந்தது. ஏனென்றால், அன்று கிரிக்கெட் விதிகளும் ஆடுகளங்களும் மட்டையாளர் - பந்து வீச்சாளர் என இரு தரப்பினருக்கும் சமமான சவாலை உருவாக்கும் வகையில் இருந்தன.

ஆனால், மட்டையாளர் ஒருவர் 200 ரன்களைக் கடப்பது இன்று எளிதாகிவிட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்திய வீரர்கள் இருவர் இஷான் கிஷான் (210), சுப்மன் கில் (208) ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்களைக் கடந்திருக்கிறார்கள். 2010இல் குவாலியரில் நடந்த போட்டியில், முதன் முறையாக 200 ரன்களை விளாசினார் சச்சின் டெண்டுல்கர். அதன் பிறகு, கடந்த 12 ஆண்டுகளில் 10 பேர் இரட்டைச் சதங்களை விளாசியிருக்கிறார்கள்; இதில் 7 சதங்கள் இந்தியர்களிடமிருந்து வந்தவை.

அயல்நாட்டு மட்டையாளர்களில் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (237*), மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் (215), பாகிஸ்தானின் ஃபாஹர் சமான் (210*) ஆகியோர் மட்டுமே இரட்டைச் சதங்களை விளாசியிருக்கிறார்கள். இதில் மார்ட்டின் கப்திலும் கிறிஸ் கெயிலும் ஆஸ்திரேலியாவிலும் ஃபாஹர் ஜிம்பாப்வேயிலும் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்கள்.

ஆனால், இந்திய வீரர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில்தான் இரட்டைச் சதம் அடித்துள்ளனர். அதிலும் இஷான் கிஷானைத் தவிர, மற்ற எல்லோரும் தாய்மண்ணில்தான் ரன் வேட்டை நிகழ்த்தியிருக்கிறார்கள். பொதுவாக, இந்தியத் துணைக் கண்டத்தில் எளிதாக ரன்களைக் குவிக்கும் இந்திய மட்டையாளர்களால், வெளியே அதை நிகழ்த்த முடிவதில்லை.

அது மட்டுமல்லாமல், மட்டையாளர்கள் எளிதாக ரன்களைக் குவிக்கும் வகையில், ஒரு நாள் கிரிக்கெட்டின் விதிமுறைகள் இன்று மாற்றப்பட்டுவிட்டன. 1990களின் மத்தியில் முதல் 15 ஓவர்களில் உள் வட்டத்துக்கு வெளியே 2 ஃபீல்டர்களை மட்டுமே நிறுத்தும் தடுப்பாட்டக் கட்டுப்பாடு அறிமுகமானது.

அதுவே பல ஆண்டுகளுக்கு நீடித்தது. ஆனால், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்த பிறகு, 50 ஓவர் கிரிக்கெட்டிலும் விதிமுறைகள் மாறும் நிலை ஏற்பட்டது. 2005க்குப் பிறகு தடுப்பாட்டக் கட்டுப்பாடு 3 விதங்களாகப் பிரிக்கப்பட்டது. புதிதாக அறிமுகமான ‘பவர் பிளே’ விதிமுறையும் மட்டையாளர்களுக்குச் சாதகமானதுதான்.

2010க்குப் பிறகு, ஒரே இன்னிங்ஸுக்கு இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதால், பந்து நீண்ட நேரம் பளபளப்பை இழக்காமல் இருக்கிறது; இது மட்டையாளர்களுக்கே சாதகமாக இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர், வக்கார் யூனிஸ் போன்ற முன்னாள் வீரர்கள் இந்த விதிமுறைக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளனர்.

‘நோ பால்’க்கு ‘ஃபிரீ ஹிட்’. ‘ஃபிரீ ஹிட்’டில் அவுட் கிடையாது என்பன போன்ற புதிய விதிமுறைகளும் மட்டையாளர்களுக்கு வரமாகவும் பந்து வீச்சாளர்களுக்குத் தண்டனையாகவும் மாறிவிட்டன. இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் ஆடுகளங்கள், பிட்ச் ஆகியவை மிகப் பெரிய ரன் குவிப்புச் சாதனைகளை நிகழ்த்துவதற்கு ஏற்பவே உருவாக்கப்படுகின்றன.

இது போன்ற காரணங்களால், மட்டைவீச்சில் ரன் விகிதம் கடந்த 15 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் அதிகரித்துவிட்டது. அது அணியின் ஒட்டுமொத்த ஸ்கோரிலும் எதிரொலிக்கிறது. இந்தியா கடைசியாக விளையாடிய 7 ஒரு நாள் போட்டிகளில், 5 போட்டிகளில் 349 ரன்களுக்கு மேல் குவித்தது ஓர் உதாரணம்.

20 ஓவர் கிரிக்கெட்டின் வருகைக்குப் பிறகு கிரிக்கெட் முழுமையாக வணிகமயமாகிவிட்டது; கடந்த 15 ஆண்டுகளாக இது கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றிவிட்டிருக்கிறது. கிரிக்கெட்டின் பாரம்பரிய நியதிகளுக்குப் பொருந்தாத டி20 போட்டிகளுக்கான விதிமுறைகளை மட்டும் மாற்றுவதுடன் நிறுத்திக்கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால், 50 ஆண்டு வரலாறு கொண்ட 50 ஓவர் போட்டிகளிலும் அதைப் புகுத்துவதும் மட்டையாளர்களுக்குச் சாதகமான போக்கை உருவாக்குவதும் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. சுவாரசியத்துக்காகவும் அதிரடிக்காகவும் விதிகளையும் மைதான பிட்சுகளையும் மாற்றுவது கிரிக்கெட்டின் சீரழிவுக்கே வழிவகுக்கும்.

No comments:

Post a Comment