30/10/2023
மார்கழி திங்கள் விமர்சனம்
13/10/2023
சினிமாவுக்குள் கிரேஸி மோகன் வந்தது எப்படி? தம்பி மாது பாலாஜி ஃபிளாஷ்பேக்
கதை, வசனகர்த்தா, நாடக ஆளுமை, நடிகர், மறைந்த கிரேஸி மோகனும் அவரது ராஜபாட்டையைத் தொடரும் அவருடைய தம்பி மாது பாலாஜியும் இணைந்து தொடங்கிய நாடகக் குழு ‘கிரேஸி கிரியேஷன்ஸ்’. அக்குழு 44ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.
நீங்கள் கல்லூரியில் படிக்கும்போது அண்ணனாக கிரேஸி மோகன் உங்களுக்கு நாடகங்கள் எழுதத் தொடங்கிய நினைவுகளைப் பகிர முடியுமா?
மோகன் பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது முதல் முதலில் ‘தி கிரேட் பேங்க் ராபரி’ என்கிற நாடகத்தைப் போட்டார். அதற்கு ஏகப்பட்டப் பாராட்டுகள். அதன்பிறகு அவருக்கு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது நான் கல்லூரியில் சேர்ந்திருந்தேன்.
அவர் எனக்காகக் கல்லூரியில் நாடகம் போடத் தொடங்கினார். அவர் எழுதியதை வைத்து, நான் நடித்துச் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுக்கொண்டு வந்துவிடுவேன். அப்போதே நா.பார்த்தசாரதி, சுஜாதா, ஜெயகாந்தன் போன்றவர்களிடமிருந்து சிறந்த நடிகர் விருதைப் பெற்று வந்தேன். இவையெல்லாம் சேர்ந்துதான் எங்களுக்கென்று ஒரு நாடகக் குழுவைத் தொடங்கும் உந்துதலைக் கொடுத்தது. அதுதான் ‘கிரேஸி கிரியேஷன்ஸ்’.
‘கிரேஸி கிரியேஷன்ஸ்’ நாடகங்களைக் காண சினிமா பிரபலங்கள் படையெடுத்தார்கள் இல்லையா?
ஆமாம்! 1979இல் கிரேஸி கிரியேஷன்ஸை தொடங்கினோம். ‘அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்’ தான் முதல் நாடகம். அதற்கு முன்பே எஸ்.வி.சேகருக்கும் காத்தாடி ராமமூர்த்திக்கும் மூன்று நாடகங்களை கிரேஸி மோகன் எழுதியிருந்தார். எங்களின் இரண்டாவது நாடகம் ‘மேரேஜ் மேட் இன் சலூன்’.
அந்த நாடகத்தைத்தான் ‘பொய்க்கால் குதிரைகள்’ என்கிற பெயரில் கே. பாலசந்தர் திரைப்படமாக இயக்கினார். கிரேஸி மோகன் சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்க அந்த நாடகம்தான் முதல் படியாக அமைந்தது. 1988இல் கமல்ஹாசனுடன் இணைந்து தொடர்ச்சியாக சினிமாவில் பயணிக்கத் தொடங்கினார் மோகன். அதே நேரத்தில் நாடகத்திலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தோம்.
உங்களுடைய குழுவின் புகழ்பெற்ற நாடகங்கள் பற்றி..
எங்கள் நாடகங்களில் ‘மேரேஜ் மேட் இன் சலூன்’, ‘மாது 2’, ‘மீசையானாலும் மனைவி’, ‘சேட்டிலைட் சாமியார்’, ‘ஜுராஸிக் பேபி’, ‘சாக்லெட் கிருஷ்ணா’ போன்றவை புகழ்பெற்ற நாடகங்கள். இதில் ‘மேரேஜ் மேட் இன் சலூன்’, ‘மாது 2’, ‘மதில் மேல் மாது’ போன்றவை 200 - 300 காட்சிகளைக் கடந்து இப்போதும் வெற்றிகரமாக மேடையேறிக் கொண்டிருக்கின்றன. கடந்த 44 ஆண்டுகளில் உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 6,500 காட்சிகளை நடத்தி முடித்திருக்கிறோம். அவற்றில் அமெரிக்காவில் மட்டும் 160 காட்சி களை ‘சாக்லேட் கிருஷ்ணா’ கடந்திருக்கிறது.
உங்கள் நாடகக் குழுவில் பயணித்தவர்கள், பயணித்துக் கொண்டிருப்பவர்கள் பற்றிச் சொல்ல முடியுமா?
அன்றைக்கு அப்பா கேரக்டரில் நடிக்கத் தொடங்கிய ரமேஷ் இன்றைக்கும் நடித்துக் கொண்டிருக்கிறார். சுந்தர்ராஜன், பார்த்திபன், ரவி, சத்தியமூர்த்தி, செகரட்டரி ஜி. சீனிவாசன், இயக்குநர் காந்தன் (மௌலியின் சகோதரர்) ஆகியோர் எங்கள் குழுவில் இன்றும் பயணிக்கின்றனர்.
எங்கள் நாடகங்கள் வெற்றி பெற்றதற்கு கிரேஸி மோகனின் வசனமோ, எங்கள் நடிப்போ மட்டும் காரணம் கிடையாது. 44 ஆண்டுகளாக எந்தக் கருத்து வேறுபாடுகளும் இல்லாமல், ஒற்றுமையாக ஒரே குழுவாகப் பயணித்துக் கொண்டிருப்பதுதான் காரணம்.
‘சாக்லெட் கிருஷ்ணா’வுக்கு மட்டும் ஒரு தனி மவுசு உருவானது எப்படி?
குழந்தைகளுக்காகவே ஒரு நாடகம் எழுத வேண்டும் என்று 2008இல் கிரேஸி மோகன் எழுதியதுதான் ‘சாக்லெட் கிருஷ்ணா’. கடவுள் கிருஷ்ணர் ஒரு சாமானியனான மாதுவைச் சந்திக்க வருவதுதான் கதை. குழந்தைகளுக்குக் கிருஷ்ணரைப் பிடிக்கும். சாக்லெட்டையும் பிடிக்கும். நகைச்சுவையையும் குழந்தைகள் ரசிப்பார்கள்.
அதனால்தான் நாடகத்துக்கு ‘சாக்லெட் கிருஷ்ணா’ என்று பெயர் வைத்தார். நாங்கள் நினைத்ததுபோலவே குழந்தைகளை அந்த நாடகம் ஈர்த்தது. அமெரிக்காவில் நாடகம் போட்டபோதுகூட அங்கிருக்கும் குழந்தைகள் நாடகத்தைப் பார்க்க வந்திருந்தனர். இதுதான் அந்த நாடகத்தின் பலம். தமிழ் நாடக மேடையில் இதுவரை எந்த நாடகமும் செய்யாத சாதனையாக 1099 காட்சிகளைக் கடந்திருக்கிறது ‘சாக்லெட் கிருஷ்ணா’.
கிருஷ்ணர் வேடத்தில் கிரேஸி மோகன் மீசையுடன் தோன்றியதைப் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டது எப்படி?
கிரேஸி மோகன் எப்போதும் மீசையுடன்தான் இருப்பார். நாடகம் போடும்போது கிரேஸி மோகன் மீசையை எடுத்துவிட்டு வருவார் என்று நினைத்தேன். ஆனால், “மீசையை எடுக்கப் போவதில்லை, மீசையோடு தான் நடிக்கப் போகிறேன்” என்று சொன்னார். மேடையில் நான், ‘‘கிருஷ்ணா, நீ மீசை வைத்திருக்கிறாயே, ஷேவ் செய்துவிட்டு வருவாய் என்றல்லவா எதிர்பார்த்தேன். இப்படி ஒரு கிருஷ்ணரை எதிர்பார்க்கவில்லையே?” என்று வசனம் பேசுவேன்.
அதற்கு, கிருஷ்ணர், ‘‘திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்று பார்! அங்கே பள்ளிகொண்டிருக்கும் பெருமாள், பாரதியார் மீசையைப் போல் பெரிய மீசையை வைத்துக் கொண்டிருப்பார். நானும் அந்த மாதிரிதான்’’ என்று சொல்வார். இதைப் பார்வையாளர்கள் ரசித்து ஏற்றுக்கொண்டனர். அப்போது பார்வையாளரில் ஒரு பெண், “நீங்கள் கிருஷ்ணராக நடிக்கிறீர்கள் என்றால் பேண்ட் போட்டுக்கொண்டுகூட நடியுங்கள். ஆனால், எங்களுக்கு நல்ல நகைச்சுவை வேண்டும். அவ்வளவுதான்!” என்றார்.
கிரேஸி மோகன் இருந்த இடத்திலிருந்து பணியை மேற்கொள்வது உங்களுக்குச் சுமையா, சுகமா?
அதைப் சுமையென்று சொல்லக் கூடாது, பெரிய சுகம். மோகன் இறந்த பிறகு நாடகம் போடலாமா, வேண்டாமா என்ற விவாதம் எங்களுக்குள் எழுந்தது. அப்போது குழுவிலிருக்கும் எல்லாரும் நாடகம் போட வேண்டும் என்று ஒருமித்தக் கருத்தில் சொன்னார்கள்.
கமல்ஹாசன்கூட போன் செய்து “நீ நாடகத்தை விட்டுவிடக் கூடாது, தொடர்ந்து நடத்து” என்றார். கிரேஸி இறந்துபோன அந்த மாதமே நாடகத்தை நடத்தச் சொன்னார். நான் வந்து பார்ப்பேன் என்றார். கிரேஸி மோகன் இறந்த பிறகு இதுவரை 150 காட்சிகளுக்கும் மேல் நாடகத்தை நடத்திவிட்டோம்.
கிரேஸி மோகன் ஏற்று நடித்த நாடகங்களில் அவருக்குப் பதிலாக இப்போது நடிப்பது யார்?
ரவிஷங்கர். அவரும் எங்கள் குழுவில் தொடக்கத்தி லிருந்தே இருக்கிறார். இப் போது கிருஷ்ணராக அவர்தான் நடிக்கிறார். அவரையும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண் டார்கள். மோகன் பாத்திரத்தில் யார் நடித்தாலும் ஏற்றுக்கொள்ளும்படி வசனங்களை எழுதியிருப்பதுதான் கிரேஸியின் சிறப்பு.
அவர் உயிருடன் இருக்கும் போதே ரவிஷங்கரை தயார் செய்தார். இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு, ரவிஷங்கரை அழைத்து “என்னுடைய கதாபாத்திரங்களை எல்லாம் நீ பார்த்துக்கொள். இது பின்னால் உனக்கு உதவும்” என்று கிரேஸி சொன்னார். மோகன் இருக்கும்போதே அவருடைய வசனங்களை எல்லாம் ரவிஷங்கர் பார்த்துக் கொண்டார். அது அவருக்குக் கஷ்டமாகவும் தெரியவில்லை.
கிரேஸி கிரியேஷன்ஸ் நாடகங்களில் காலத்துக்கு ஏற்ப வசனங்களில் திருத்தம் செய்வதுண்டா?
கிரேஸி மோகனின் பலமே 1979இல் இயற்றிய நாடகத்தை இப்போதும் நடத்த முடிவதுதான். அந்த நாடகங்களில் லேட்டஸ்ட் விஷயங்கள் எதையும் அப்டேட் செய்வதில்லை. எல்லா காலத்துக்கும் அந்த வசனங்கள் பொருந்திப் போகின்றன. அதற்கேற்பதான் வசனங்களை கிரேஸி மோகன் எழுதியிருக்கிறார். நாடகங்கள் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் விஷயங்கள் என்பதால் அதில் பெரும்பாலும் வசனங்கள் மாறுவதற்கு வாயப்பில்லை.
கிரேஸி மோகன் நினைவாக நாடகம் ஒன்றை அரங்கேற்றப் போவதாகச் செய்திகள் வெளியானதே?
அந்த நாடகத்தை வரும் ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். நாடகத்தின் பெயர் ‘வீட்டோடு மாப்பிள்ளை’. இந்த நாடகத்துக்கான கதை, வசனம் முழுவதையும் கிரேஸி மோகன் அவரது இறப்புக்கு முன்பே எழுதி முடித்துவிட்டார்.
சினிமாவில் கிரேஸிமோகனுடன் இணைந்து நீங்கள் பணியாற்றிய அனுபவம் உண்டா?
எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. என்றாலும் இரண்டு படங்களில்தான் நடித்திருக்கிறேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னை நம்பியும் நாடகங்களை நம்பியும் பத்துக்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். என் நாடகங்களில் நடித்த ஒருவரும் சினிமாவுக்குச் செல்லவில்லை. நான் சினிமாவுக்குச் செல்ல வேண்டியிருந்தால் நாடகத்தைத் தியாகம் செய்ய வேண்டியிருந்திருக்கும். அதனால், சினிமாவுக்குச் செல்வதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. இந்தப் புகழே எனக்குப் போதுமானது.
மாது என்ற பெயர் உங்களுடன் ஒட்டிக்கொண்டது எப்படி?
இப்போது பாலாஜி என்று என்னை சொன்னால் யாருக்கும் தெரியாது. மாது பாலாஜி என்று சொன்னால்தான் தெரியும். ‘எதிர்நீச்சல்’ படத்தில் நாகேஷ் சாரின் பெயர் ‘மாடிப்படி மாது’. கிரேஸி மோகன் முதன்முதலில் ‘அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்’ நாடகத்தை எழுதியபோது ‘மாடிப்படி மாது’ என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினார். அப்போது இனி எல்லா நாடகங்களிலும் மாது என்ற கதாபாத்திரத்தை வைத்துவிடுவோம் என்று கிரேஸி மோகன் முடிவெடுத்தார். இப்போது அது ஒரு சாதனையாகவே மாறிவிட்டது. கடந்த 44 ஆண்டுகளாக ஒரே கதாபாத்திரப் பெயரில் நடித்திருப்பது நானாக மட்டும்தான் இருக்க முடியும்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாடகங்களுக்கு வரவேற்பு இருக்கிறதா?
கடந்த ஐந்து ஆண்டுகளாக நாடகங்களுக்குக் கொஞ்சம் மவுசு குறைந்துள்ளது உண்மைதான். ஆனால், எங்கள் நாடகங்களுக்கு இன்னமும் கூட்டம் வந்துகொண்டுதான் இருக்கிறது. மக்களுக்கு டி.வி, சினிமா, கிரிக்கெட், செல்போன் என்று அவர்களை திசைதிருப்ப வெவ்வேறு விஷயங்கள் வந்துவிட்டன. எல்லாவற்றையும் மொபைலிலேயே பார்த்துவிடுகிறார்கள். இப்போதும் எங்கள் நாடகங்களுக்கு அரங்கு நிறைந்த வரவேற்பு இருப்பதை நீங்கள் நேரில் வந்தால் பார்க்கலாம். அதற்குக் காரணம் மக்களுக்குப் பிடித்த நாடகங்களை போட்டால் வரவேற்பார்கள். இந்த டிஜிட்டல் யுகத்தில் இளைய தலைமுறையினரும் எங்கள் நாடகங்களைக் காண நேரடியாக வருகிறார்கள். அப்படி வருவதால்தான் எங்களால் நாடகங்களைத் தொடர்ந்து நடத்த முடிகிறது.
கிரேஸி மோகனின் நாடகங்களை டிஜிட்டல் ஆக்கம் செய்யும் யோசனை இருக்கிறதா?
கிரேஸி மோகனின் நாடகங்களை டிஜிட்டல் ஆக்கம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம். இரண்டு நாடகங்களை ஓ.டி.டி. தளங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். எதிர்காலத்தில் இதுதான் இருக்கப்போகிறது. ஏற்கெனவே கிரேஸி மோகன் பெயரில் யூடியூப் அலைவரிசை இருக்கிறது. அதில் ‘பூம்பூம் வே’ என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறோம். அவருடைய நாடகங்களையும் அதில் வழங்குகிறோம். 2024இல் ஒரு முழுநீள டிஜிட்டல் நாடகம் நடத்த வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. அதற்கான அனுமதி கிடைத்தவுடன் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்.
29/09/2023
அதிமுக - பாஜக கூட்டணி பிளவு இயல்பானதா?
தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக நீடித்துவந்த அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்திருக்கிறது. அதிமுக தலைவர்கள் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே இரண்டரை ஆண்டுகளாக நீடித்த உரசல்கள், விமர்சனங்கள், கருத்து மோதல்கள் போன்றவற்றைக் காரணம் காட்டி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி யிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது அதிமுக. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவின் இந்த விலகல் உறுதியானதா என்னும் விஸ்வரூபக் கேள்வி எழுந்திருப்பதில் வியப்பில்லை.
விசித்திரமான காரணம்: அதிமுக-பாஜக இடையே இவ்வளவு ஆண்டுகள் கூட்டணி நீடித்ததே பெரும் சாதனைதான். ஏனெனில், ஜெயலலிதாவின் காலத்தில், 1998, 2004 ஆகிய ஆண்டுகளில் இக்கட்சிகள் இடையே அமைந்த கூட்டணியின் ஆயுள்சொற்ப காலமே நீடித்தது. 2019இல் அதிமுக-பாஜக கூட்டணி மலர்வதற்கு முன்பாக, 2016இல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதலே அதிமுக மீது பாஜகவின் நிழல் படர்ந்தது.
அதற்கேற்ப பாஜக தேசியத் தலைமைக்குத் தம்மை நெருக்கமாகக் காண்பித்துக்கொள்ளும் போட்டி மனப்பான்மையில் அதிமுக தலைவர்கள் மூழ்கிக் கிடந்தனர். அதே நேரம் பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது முதலே அவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தண்ணீரும் எண்ணெயுமாக இருந்தனர். அதன் நீட்சியாக நீண்ட தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல இன்று பாஜக கூட்டணியை உதறித் தள்ளி வெளியேறியிருக்கிறது அதிமுக.
எனினும், பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாகச் சொன்னதற்கான காரணம் உண்மையிலேயே சற்று விசித்திரமானது. பாஜகவின் தேசியத் தலைவர்களோடு அதிமுக தலைவர்களுக்கு எந்த மோதலும் இல்லை. தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலைதான் அதிமுகவுக்கு உள்ள ஒரே பிரச்சினை என்று பிரிவை அறிவிக்கும் அதிமுகவின் அறிக்கையிலேயே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அறிஞர் அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்ட முன்னோடித் தலைவர்களை அண்ணாமலை விமர்சித்தார், எடப்பாடி பழனிசாமியைச் சிறுமைப்படுத்தினார் என்பன போன்றவையே காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. என்றாலும், இக்கூட்டணி முறிவுக்கு வேறு சில வலுவான காரணங்களும் இருக்கின்றன.
பரஸ்பரப் புரிதலின்மை: கூட்டணி என்பதே பரஸ்பரப் புரிதலோடு இயங்குவதுதான். ஒன்றை விட்டு ஒன்றைப் பெறுவதுதான். ஆனால், அதிமுக தலைவர்களைக் கோபம் கொள்ள வைத்திருப்பது தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அண்ணாமலை முன்வைக்கும் கருத்துகள். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பேசுவதற்கோ, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ அண்ணாமலைக்கு உரிமை உண்டு. ஆனால், அது எல்லாமே தனித்துச் செயல்படும்போது மட்டுமே சாத்தியம்.
முன்பு தேசியக் கட்சியான காங்கிரஸுடன் அதிமுக பல முறை கூட்டணி கண்டிருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு அதிமுக உதவுவது; மாநிலத்தில் அதிமுக ஆட்சிக்குக் காங்கிரஸ் உதவுவது என்ற புரிதலோடுதான் கூட்டணியின் செயல்பாடுகள் அமைந்தன. கடந்த 20 ஆண்டுகளாக நீடிக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணியும் அதே வகையான புரிதலோடுதான் தொடர்கிறது.
தமிழ்நாட்டில் ‘காமராஜர் ஆட்சி அமைப்போம்’ என்று பேசாத காங்கிரஸ் தலைவர்களே கிடையாது. ஆனால், கூட்டணித் தலைவர்கள் மனம் கோணும் வகையில் அதைப் பூதாகரமாக மாநில காங்கிரஸ் தலைவர்கள் பேசியதில்லை. கட்சி தொடங்கியது முதல் தன்னுடைய ஆட்சி என்று பேசிவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், 2011இல் அதிமுகவோடு கூட்டணி வைத்தபோது ஜெயலலிதாவைத்தான் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினார்.
தற்போது அதிமுக-பாஜக கூட்டணியில் இது தலைகீழாக இருப்பதுதான் முரண். மோடியை மூன்றாவது முறையாகப் பிரதமராக்க உழைப்போம் என்று அதிமுக தலைவர்கள் பேசும்போது, “எடப்பாடி பழனிசாமியைத் தமிழ்நாட்டின் முதல்வராக்குவோம் என்று நான் கூற முடியாது. நிச்சயமாக பாஜக 2026இல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்” என்று அண்ணாமலை அறிவித்தால், அங்கு கூட்டணிக் கட்சிகளுக்கு இருக்க வேண்டிய பரஸ்பரப் புரிதல் அடிபட்டுப் போகாதா? எனில், மாநிலத்தில் ஆட்சிஅமைக்கும் போட்டியில் அதிமுக, பாஜக தனித்தனியாகக் களமிறங்குவதே உசிதம். அதைத்தான் அதிமுக செய்திருப்பதாகக் கருத இடமுண்டு.
தொக்கி நிற்கும் கேள்விகள்: அதிமுக-பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக அறிவித்துவிட்டாலும், அரசியல் அரங்கிலும் பொதுவெளியிலும் அது சந்தேகக் கண்ணோடுதான் அணுகப்படுகிறது. ஏனெனில், கூட்டணியின் பிரச்சினையாக அண்ணாமலைதான் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறார். ஒருவேளை, அண்ணாமலையை பாஜக தேசியத் தலைமை மாற்றிவிட்டால் அல்லது அதிமுகவுக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது என்று கட்டுப்பாடுகளை அவருக்கு விதித்துவிட்டால், அதிமுகவின் நிலைப்பாடு என்ன? அப்படி நடந்தால் பாஜகவோடு அதிமுக மீண்டும் கூட்டணியை ஏற்படுத்துமா? பிரதமர் மோடியோ உள் துறை அமைச்சர் அமித் ஷாவோ எடப்பாடி பழனிசாமியைச் சமாதானம் செய்தால், அப்போதும் அதிமுக தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்குமா? இதுபோன்ற கேள்விகள் தற்போது அதிமுகவைத் துரத்துகின்றன. அதே நேரம், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவைச் சந்தித்துவிட்டு வந்த பிறகுதான் இந்தக் கூட்டணி முறிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் மறந்துவிட முடியாது.
இன்றைக்கும் அதிமுக-பாஜக இடையே கொள்கை மோதல்களோ, மத்திய அரசுத் திட்டங்கள் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகளோ இல்லை. மத்திய அரசின் முடிவுகள் தமிழ்நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் என்கிற விமர்சனங்கள் எதுவும் அதிமுகவிடம் வெளிப்படவில்லை. இந்தப் பின்னணியில்தான், பாஜகவும் அதிமுகவும் பேசி வைத்துக்கொண்டு இந்த அரசியல் விளையாட்டை விளையாடுவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.
தப்பிக்கும் அதிமுக: அதிமுக தலைவர்கள்-அண்ணாமலை இடையே பல்வேறு சந்தர்ப்பங்களில் வார்த்தை மோதல்கள் ஏற்பட்டபோதெல்லாம், இக்கூட்டணி நீடிப்பதற்குக் காரணம், பாஜகவின் டெல்லி நிழலில் அதிமுக இருப்பதே என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. தற்போது பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியிருப்பதன் மூலம், இந்த விமர்சனங்களிலிருந்து அதிமுக விடுபட உதவும். பாஜகவோடு கூட்டணியில் இருப்பதால் மத்திய அரசின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை அதிமுகவும் சேர்த்தே தமிழ்நாட்டில் எதிர்கொண்டுவந்தது. அந்த விமர்சனங்களிலிருந்தும் அதிமுக தப்பிக்கக்கூடும்.
அதிமுகவின் தற்போதைய முடிவு, 2024 மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணி-தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற போட்டியைப் பாரம்பரியப் போட்டியாக திமுக-அதிமுக போட்டியாக மடைமாற்றும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களின் காரணமாகவே பாஜக கூட்டணியில் அதிமுக நீடிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் அடிப்பட்டுப்போகும். பாஜக கூட்டணியால் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்துவிட்டதாகக் கருதும் அதிமுக, அந்த வாக்குகளைப் பெற முனையும்.
காத்திருக்கும் சவால்: பாஜக உறவை உதறித் தள்ளிவிட்டதை - அரசியல் களத்தைத் தாண்டி - பொதுவெளியில் நம்பவைக்க வேண்டிய கட்டாயமும் அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. அண்ணாமலைக்கு எதிராகப் பேசும் அதிமுக தலைவர்கள், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி சேர மாட்டார்களா; பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராகப் பேசுவார்களா என்கிற சந்தேகம் இப்போதே அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. ஆனால், எந்த ஒரு காரணத்தை முன்வைத்தும் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கவே மாட்டோம் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கூட்டணி முறிந்தது முறிந்ததுதான் என்பதில் உறுதியாக இருந்து, தனது தலைமையில் எடப்பாடி பழனிசாமி புதியதொரு கூட்டணியை அமைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பாரேயானால், ‘அடிமை அதிமுக’ என்று இனிமேல் எக்காலத்திலும் திமுக-வால் கேலி பேச முடியாது.
இறைவன் விமர்சனம்
சென்னை மாநகரில் மிகக் கொடூரமாக இளம் பெண்கள் தொடர்ச்சியாகக் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலைகளை நிகழ்த்தும் சீரியல் கில்லரை (ராகுல் போஸ்) கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள் காவல் உதவி ஆணையர்களான அர்ஜூனும் (ஜெயம் ரவி) ஆண்ட்ரூவும் (நரேன்). இதில் ஒரு துர்நிகழ்வு நடைபெற போலீஸ் வேலையை விட்டே ஒதுங்குகிறார் ஜெயம் ரவி. என்றாலும் ஜெயம் ரவியை இலக்கு வைத்து துரத்திக்கொண்டே இருக்கிறான் சைக்கோ கொலையாளி. இதற்கு என்ன காரணம்? யார் அந்த சைக்கோ கொலையாளி? இருவருக்கும் இடையிலான துரத்தலில் என்னென்ன சம்பவங்கள் நிகழ்கின்றன. அவனை ஜெயம் ரவி என்ன செய்கிறார் என்பதுதான் ‘இறைவ’னின் மீதிக் கதை.
சீரியல் கில்லர், சைக்கோ கொலைகள் தொடர்பான படங்கள் என்றால், ஓர் அழகான ஒன்லைன் கதையை வைத்துகொண்டு துரத்தலும் திகிலும் கொண்ட திரைக்கதையை எழுதுவார்கள். ஆனால், ஒரு வறட்சியான த்ரில்லர் கதைக்கு திகில் முலாம் பூச முயன்றிருக்கிறார் இயக்குநர். விளைவு, சீரியல் கில்லர் படங்களுக்கே உரிய பரபரப்பு, படபடப்பு, திருப்பங்கள் எதுவும் இல்லாமல் பயணிப்பது ‘இறைவ’னின் பெரும் பலவீனம். படத்தின் தொடக்கத்திலேயே சைக்கோ கொலையாளியைக் காட்டிவிடுகிறார்கள். எனவே, அவர் யார் என்கிற சஸ்பென்ஸ் உடைந்து, அவர் செய்யும் கொடூரமான கொலைகள் எல்லாமே பாவமாக இருக்கிறது.
ஒரு சைக்கோ கொலையாளி என்றால், அவன் சைக்கோவாக ஆனதற்கான பின்னிணியை ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்வது படத்துக்கு வலுசேர்க்கும். அப்படியான எந்தக் காட்சிகளுமே படத்தில் இல்லாதது படத்துக்கு மைனஸ். முதல் பாகத்தின் முடிவில் சொல்லப்படும் ஒரு திருப்பம் கவனம் பெறுகிறது. ஆனால், தெளிவற்ற பின்னணிக் கொண்ட திரைக்கதை இரண்டாம் பாகம் முதல் பாகத்தைவிட அயற்சிக்குள்ளாக்கி விடுகிறது.
சைக்கோ கொலையாளி - நாயகன் இடையே எந்தத் துரத்தலும் இல்லை. சர்வ சாதாரணமாக சைக்கோ கொலையாளியை ஜெயம் ரவி கண்டுபிடிக்கிறார். சண்டைப் போடுகிறார், அடிக்கிறார். திரும்பத் திரும்ப நடக்கும் இந்தக் காட்சிகள், ‘இறைவா, எங்களைக் காப்பாற்று’ என்று பார்வையாளர்களைக் கதறவைத்துவிடுகிறது. ஸ்மைலி கில்லர், காபி கேட் கில்லர் என்று விதவிதமாக பெயர்கள் வைத்து அழைத்தாலும், புதுமை இல்லாமல் நகரும் காட்சிகளால் படம் தள்ளாடுகிறது.
சைக்கோவிடமிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு பெண் பற்றி அமைக்கப்பட்ட காட்சி அமைப்புகள் வக்கிரமானவை. ஊர் முழுக்க சிசிடிவி, கையில் எல்லோரும் செல்போனுடன் அழையும் காலத்தில் சைக்கோ கொலையாளி சர்வசாதாரணமாக காரில் கடத்துகிறார். இது கேள்விக்குள்ளாகக் கூடாது என்பதற்காக, ‘சிசிடிவி கேமரா இல்லாத இடமாகப் பார்த்து’ என்ற சரடு வசனத்தை விடுகிறார்கள். ‘பிரம்மா’ என்று அழைத்துக்கொண்டு இளம் பெண்களை கொலை செய்யும் ராகுல் போஸ், கொலை செய்வதற்காக சொல்லும் காரணங்களில் தர்க்கமே இல்லை. ஊரையே நடுங்க வைக்கும் அளவுக்கு கொலைகள் செய்து மருத்துவமனை சிறையில் இருக்கும் சைக்கோ கொலையாளி சுலபமாக தப்புவது போலீஸுக்கே அடுக்காது. போலீஸ் வேலையை விட்ட ஜெயம் ரவி, போலீஸாகமலேயே எல்லா போலீஸ் வேலையையும் செய்கிறார். இப்படி படம் முழுக்க நிறைய பூச்சுற்றல்கள்.
இந்தப் படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்திருப்பதைத் தவிர நேர்மறையான அம்சங்கள் எதுவும் இல்லை. அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில், ‘எனக்கு பயம்னா என்னென்னே தெரியாது’ என்று ஜெயம் ரவி பல வெரைட்டிகளில் கோபத்தைக் காட்டுகிறார். அர்ஜூன் கதபாத்திரத்திலும் கச்சிதமாகப் பொருந்துகிறார். நண்பன் நரேனுக்காக உருகுவது, நயன் தாராவிடமிருந்து விலகி நிற்பது, நெருக்கமானவர்கள் கொலையாகும்போது பதறுவது என நடிப்பில் குறை வைக்கவில்லை. நயன்தாரா ஒருதலையாக காதலித்து உருகும் பெண்ணாக வந்துபோகிறார். சைக்கோ கொலையாளியாக வரும் ராகுல் போஸ் தன் கச்சிதமாக செய்திருக்கிறார். அவரின் தொடர்ச்சியாக வரும் வினோத் கிஷன் மிகை நடிப்பால் திணறடிக்கிறார். மேலும் படத்தில் நரேன், ஆசிஷ் வித்யார்த்தி, சார்லி, அழகம் பெருமாள், பக்ஸ், விஜயலட்சுமி ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. பாடல்கள் கவனம் பெறாவிட்டாலும், ஒரு த்ரில்லர் படத்துக்குரிய இசையைச் சரியாக வழங்கியிருக்கிறார். இருட்டில் நடக்கும் கொலைகளைக் கச்சிதமாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஹரி கே. வேதாந்தம். இழுவையான காட்சிகளுக்கு கருணையின்றி கத்திரி போட்டிருக்கலாம் படத்தொகுப்பாளர் ஜே.வி. மணிகண்ட பாலாஜி.
01/06/2023
தமிழ்நாட்டில் ஆவின் வந்த வழி
இந்தியாவில் தேசியப் பால்வள வாரியம் அமல்படுத்திய வெண்மைப் புரட்சியின் விளைவாக, பால் உற்பத்தித் திட்டங்கள் மூலம், கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் குஜராத்தின் ‘ஆனந்த்’ மாதிரி (அமுல்) கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டன. அவை பால், தயிர், பால் சார்ந்த பொருள்களைத் தயாரித்து நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றன. தமிழ்நாட்டில் ஆவின், கர்நாடகத்தில் நந்தினி, குஜராத்தில் அமுல் போன்றவை அதுபோன்று உருவாக்கப்பட்ட நிறுவனங்கள்தான்.
இதன்மூலம் பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்கிற பால் வீணாவது தவிர்க்கப்பட்டது. பாலைப் பாதுகாத்து, பதப்படுத்தி நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் பால் தேவையைப் பூர்த்திசெய்ய முடிந்தது. பாலுக்கென நிரந்தரச் சந்தையும் ஏற்பட்டது. ஆக்கபூர்வமான இந்த முன்னெடுப்புகளால், 1997 முதல் பால் உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடம் வகித்துவருகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பால் உற்பத்தியின் பங்களிப்பு 4.2% ஆகும்.
நாட்டில் பல மாநிலங்களிலும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகப் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. குஜராத் (275 லட்சம் லிட்டர்), கர்நாடகத்தைத் (73 லட்சம் லிட்டர்) தொடர்ந்து மூன்றாம் இடத்திலுள்ள தமிழ்நாட்டில், ஆவின் நிறுவனம் தினமும் சுமார் 37 லட்சம் லிட்டர் பாலைக் கொள்முதல் செய்கிறது; தினமும் 206 லட்சம் லிட்டர் பால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தயாரிக்கப்படும் பால், பால் பொருள்கள் ‘ஆவின்’ என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.
மூன்று அடுக்குகள்: ஆவின் நிறுவனம் என்று ஒற்றைப் பெயரில் அழைக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் மூன்று அடுக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இதைத்தான் ‘அமுல்’ மாதிரி கூட்டுறவுச் சங்கங்கள் என்கிறார்கள்.
அடுக்கு 1: கிராம அளவில் செயல்படும் தொடக்கப் பால் கூட்டுறவு சங்கங்களே மூன்றடுக்குப் பால் கூட்டுறவு அமைப்புகளின் அடித்தளம். இக்கூட்டுறவு அமைப்புகளே பால் உற்பத்தியாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவை. உள்ளூர் தேவை போக, உபரிப் பாலை மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களுக்கு இவை வழங்குகின்றன.
அடுக்கு 2: மாவட்டக் கூட்டுறவுஎல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள தொடக்கப் பால்உற்பத்தியாளர்கள், இரண்டாம் அடுக்கில் உள்ள மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் உபரிப் பாலை வாங்கி, பதப்படுத்தி நுகர்வோருக்கு விற்பனை செய்வார்கள்; அத்துடன் பால் பொருள்களையும் தயாரிப்பார்கள்.
அடுக்கு 3: தமிழ்நாடு கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் இணையம் என்பது மாநில அளவிலான தலைமைப்பால் கூட்டுறவுச் சங்கம். இதில் மாவட்டக் கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களே உறுப்பினர்கள். இவர்கள் பாலைக் கொள்முதல் செய்து பதப்படுத்தி சென்னைபோன்ற பெருநகரில் பால் விற்பனை செய்கிறார்கள்.
கூட்டுறவு அமைப்புகளின் பங்களிப்பு: தமிழ்நாட்டில் 27 மாவட்டக் கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் உள்ளன. இதில் உறுப்பினர்களாக 9,673 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இதில் அங்கம் வகிக்கும் 3.99 லட்சம் பால் உற்பத்தியாளர்கள்தான் 37 லட்சம் லிட்டர் பாலை உற்பத்தி செய்கின்றனர்.
இதில் உள்ளூரில் பால் விற்பனை போக, உபரிப் பால் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு வழங்கப்படுகிறது. இப்படிப் பெறப்படும் பால் பல்வேறு நிலைகளில் தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நுகர்வோருக்குப் பால் பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் 1958இல் பால்வளத் துறையை அரசு ஏற்படுத்தியது. பிறகு அனைத்து பால் கூட்டுறவுச் சங்கங்களின் மீதான சட்டபூர்வ, நிர்வாகக் கட்டுப்பாடுகள் 1965இல் பால்வளத் துறைக்கு மாற்றப்பட்டன. 1972இல் இத்துறையின் வணிக நடவடிக்கைகள் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டன.
1981இல்தான் ‘அமுல்’ பாணியில்தமிழ்நாட்டில் ஆவின் என்ற மூன்றடுக்குப் பால் சார்ந்தகூட்டுறவு முறை உருவாக்கப்பட்டது. பிற கூட்டுறவு அமைப்புகள்போல இந்த மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்புகளும் 1983 முதல் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
24/02/2023
இடைத்தேர்தல்கள் உணர்த்துவது என்ன?
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இடைத்தேர்தல்களுக்குத் தனி இடம் உண்டு. இடைத்தேர்தல் வழியாக மாநில அரசியலில் கவனத்தையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தியவர்கள் உண்டு. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்நாட்டில் ஆளும் கட்சியின் ஆட்சியை எடை போட்டுப் பார்க்கும் தேர்தல்களாக இடைத்தேர்தல்கள் கருதப்பட்டன.
ஆனால், இன்றோ இடைத்தேர்தல் என்பது திருவிழா போலவும் மற்ற தொகுதி மக்கள் பொறாமைப்படும் அளவுக்கும் மாறிவிட்டது. தொகுதி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணத்தை வாரி இறைத்து, வெற்றியைப் பெற முனையும் போட்டிகளாக இடைத்தேர்தல்கள் சுருங்கிவிட்டன. ஒரு தொகுதியின் இடைத்தேர்தலுக்கு ஆளுங்கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இவ்வளவு முக்கியத்துவம் தருவது தேவையா என்கிற கேள்வியை இது அழுத்தமாகவே எழுப்புகிறது.
தலைகீழ் மாற்றம்
இடைத்தேர்தலை அணுகும் போக்கு, மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் தலைகீழாக மாறியிருப்பதைக் கடந்த கால் நூற்றாண்டு கால இடைத்தேர்தல்கள் உணர்த்துகின்றன. திமுகவும் அதிமுகவும் ஆளுங்கட்சிகளாக இருக்கும் காலகட்டத்தில், இந்த இரண்டு கட்சிகளுமே இடைத்தேர்தல் வெற்றியை கௌரவப் பிரச்சினையாக அணுகுவதையும் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக விதவிதமான வியூகங்களைப் பின்பற்றுவதையும் தமிழ்நாடு கண்டுவருகிறது.
திமுகவுக்கு ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்றால், அதிமுகவுக்கு ‘கும்மிடிப்பூண்டி - காஞ்சிபுரம் ஃபார்முலா’ என்று இரண்டு கட்சிகளுக்குமே ‘பெயர் சொல்லும்’ இடைத்தேர்தல்கள் உண்டு. ஆளுங்கட்சிக்கான மக்கள் ஆதரவு குறையவில்லை, ஆட்சிக்கான அங்கீகாரத்தை மக்கள் மீண்டும் வழங்கிவிட்டார்கள் என்று ஆளுங்கட்சி மார்தட்டிக்கொள்ளவும், ஆளுங்கட்சியை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கவும் மட்டுமே இடைத்தேர்தல் உதவுகிறது.
அதற்காகப் பின்பற்றப்படும் ‘ஃபார்முலா’க்கள் கட்சிகள் சார்ந்து மாயத் தோற்றத்தை உருவாக்க மட்டுமே பயன்படுகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடைபெற்றது. சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு சந்தித்த முதல் பொதுத் தேர்தலும் அதுதான். அதன் பிறகான காலத்தில் பல்வேறு இடைத்தேர்தல்களைத் தமிழ்நாடு சந்தித்திருக்கிறது. இதில் 58% வெற்றியை ஆளுங்கட்சிகள் பெற்றுள்ளன; எதிர்க்கட்சிகள் 42% வெற்றியைப் பெற்றுள்ளன.
குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இடைத்தேர்தல்கள் என்றாலே ஆளுங்கட்சிகள் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற அளவுக்குத் தேர்தல் களத்தை அரசியல் கட்சிகள் மாற்றிவிட்டிருக்கின்றன. கருணாநிதி - ஜெயலலிதா இரு துருவங்களாக இருந்த காலம் தொடங்கி, இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்று வாக்காளர்களே நினைக்கும் அளவுக்கு மாறிவிட்டதுதான் சோகம்.
ஆளும்கட்சியின் ஆதிக்கம்
தமிழ்நாடு இடைத்தேர்தல்கள் தொடர்பான சில புள்ளிவிவரங்களும் அதையே உணர்த்துகின்றன. 1999 - 2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 34 இடைத்தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. இதில் 32 இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. 1999ஆம் ஆண்டில் நத்தம் தொகுதியிலும், 2004இல் மக்களவையோடு சேர்ந்து நடைபெற்ற மங்களூர் இடைத்தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன.
2019இல் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து 22 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுகவும் 9 தொகுதிகளில் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவும் வெற்றி பெற்றன. மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து நடைபெற்றதால், மக்களவைத் தேர்தலின் தாக்கமும் அந்த இடைத்தேர்தலில் எதிரொலித்தது.
2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றியையும் அதிமுக கூட்டணி படுதோல்வியையும் சந்தித்திருந்த நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் ஒத்திவைக்கப்பட்டு நடந்த வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது.
அந்தத் தேர்தல் பொதுத்தேர்தலோடு சேர்த்து நடைபெறாமல் தனித்து நடைபெற்றதால் வாக்கு வித்தியாசம் தலைகீழாக மாறியிருந்தது. இதேபோல விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களும் வழக்கமான முடிவுகளையே எதிரொலித்தன. இவையெல்லாமே கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்திய அடையாளங்கள்.
தொடரும் புகார்கள்
இப்போது திமுக ஆட்சிக்குவந்த பிறகு முதல் இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கில் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் அத்தனை அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் தொகுதியில் முகாமிடுவது, பணத்தை வாரியிறைப்பது, தேர்தல் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிடுவது, வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருள்களை வழங்குவது, வாக்காளர்களை ஓரிடத்தில் ஒன்றுதிரட்டித் தனியாகக் கவனிப்பது, இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுப் பணப் பட்டுவாடா செய்யப்படுவது, வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுப்பது எனக் கடந்த கால இடைத்தேர்தல்களின்போது என்னென்ன புகார்கள் கூறப்பட்டனவோ அவையெல்லாம் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும் சொல்லப்படுகின்றன.
இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை என்றபோதும், அந்தக் குறை தெரியாத அளவுக்குக் காங்கிரஸைவிட திமுகவே பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதையும் களத்தில் துடிப்பாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. இடைத்தேர்தலை ஓர் ஆளுங்கட்சி எந்த வகையில் அணுகுகிறது என்பதற்கும் இது ஒரு சிறு உதாரணம்தான்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சியாக திமுக என்னென்ன புகார்களைக் கூறியதோ, அதே புகார்களை திமுக ஆட்சியில் இருக்கும்போது இன்று அதிமுகவும் கூறுகிறது; நீதிமன்றம் செல்கிறது. ஆளுங்கட்சி மாறினாலும் இடைத்தேர்தல் என்றால், திமுக - அதிமுகவின் புகார்கள் மட்டும் மாறுவதில்லை என்பது நகைமுரண்.
ஆட்சி, அதிகாரப் பலத்தோடு ஆளுங்கட்சி இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கும் எதிர்க்கட்சியாகத் தேர்தலை எதிர்கொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தை திமுகவும் அதிமுகவும் தெளிவாக உணர்ந்தே இருக்கின்றன. என்றாலும், ஆளுங்கட்சிக்குப் போட்டியாகப் பிரதான எதிர்க்கட்சியும் இன்று முட்டி மோதுவதைக் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் இடைத்தேர்தல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
தேவையற்ற ஆர்ப்பாட்டம்
பொதுவாக, இடைத்தேர்தல் முடிவால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஒரு மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஒரு கட்சி, இடையில் மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டு அதில் தோல்வியடைந்தால், மக்கள் ஆதரவை இழந்துவிட்டதாகப் பதவி விலகிவிடப்போவதில்லை. பதவி விலகியே தீர வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்க முடியாது. அப்படியிருக்க, ஓர் இடைத்தேர்தலுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்? திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படுமா என்கிற கேள்வி எழும் அளவுக்குத் தேர்தல் புகார்கள் ஏன் அணிவகுக்க வேண்டும்?
இடைத்தேர்தல் பாணியைப் பொதுத் தேர்தலிலும் புகுத்தியதன் விளைவால், 2016இல் அரவக்குறிச்சி, தஞ்சாவூர்; 2017இல் ஆர்.கே. நகர்; 2019இல் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலே நிறுத்தப்பட்ட அவமானம் தமிழ்நாட்டில் நடந்தேறியது. அந்த அளவுக்குத் தேர்தலை மாற்றிவிட்டதற்குச் சக்திவாய்ந்த அரசியல் கட்சிகளே காரணம்.
எந்த வகையில் தேர்தல் புகார்கள் வந்தாலும், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கே உண்டு என்றாலும், அதைவிட அதிகப் பொறுப்பு தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் உண்டு. அனைத்துத் தரப்பினரும் அதைக் கடைப்பிடித்தால் மட்டுமே ஜனநாயகம் வலுப்பெறும்.
31/01/2023
சீரழிவுக்கு வித்திடும் கிரிக்கெட் விதிமுறைகள்
சர்வதேச கிரிக்கெட்டில், ஒரு நாள் (50 ஓவர்) போட்டிகள் பிரபலமாகத் தொடங்கிய 1980-90களில் மட்டையாளர் ஒருவர், ஒரு போட்டியில் 150 ரன்களைக் கடப்பதே அரிதான நிகழ்வாக இருந்தது. ஏனென்றால், அன்று கிரிக்கெட் விதிகளும் ஆடுகளங்களும் மட்டையாளர் - பந்து வீச்சாளர் என இரு தரப்பினருக்கும் சமமான சவாலை உருவாக்கும் வகையில் இருந்தன.
ஆனால், மட்டையாளர் ஒருவர் 200 ரன்களைக் கடப்பது இன்று எளிதாகிவிட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்திய வீரர்கள் இருவர் இஷான் கிஷான் (210), சுப்மன் கில் (208) ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்களைக் கடந்திருக்கிறார்கள். 2010இல் குவாலியரில் நடந்த போட்டியில், முதன் முறையாக 200 ரன்களை விளாசினார் சச்சின் டெண்டுல்கர். அதன் பிறகு, கடந்த 12 ஆண்டுகளில் 10 பேர் இரட்டைச் சதங்களை விளாசியிருக்கிறார்கள்; இதில் 7 சதங்கள் இந்தியர்களிடமிருந்து வந்தவை.
அயல்நாட்டு மட்டையாளர்களில் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (237*), மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் (215), பாகிஸ்தானின் ஃபாஹர் சமான் (210*) ஆகியோர் மட்டுமே இரட்டைச் சதங்களை விளாசியிருக்கிறார்கள். இதில் மார்ட்டின் கப்திலும் கிறிஸ் கெயிலும் ஆஸ்திரேலியாவிலும் ஃபாஹர் ஜிம்பாப்வேயிலும் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்கள்.
ஆனால், இந்திய வீரர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில்தான் இரட்டைச் சதம் அடித்துள்ளனர். அதிலும் இஷான் கிஷானைத் தவிர, மற்ற எல்லோரும் தாய்மண்ணில்தான் ரன் வேட்டை நிகழ்த்தியிருக்கிறார்கள். பொதுவாக, இந்தியத் துணைக் கண்டத்தில் எளிதாக ரன்களைக் குவிக்கும் இந்திய மட்டையாளர்களால், வெளியே அதை நிகழ்த்த முடிவதில்லை.
அது மட்டுமல்லாமல், மட்டையாளர்கள் எளிதாக ரன்களைக் குவிக்கும் வகையில், ஒரு நாள் கிரிக்கெட்டின் விதிமுறைகள் இன்று மாற்றப்பட்டுவிட்டன. 1990களின் மத்தியில் முதல் 15 ஓவர்களில் உள் வட்டத்துக்கு வெளியே 2 ஃபீல்டர்களை மட்டுமே நிறுத்தும் தடுப்பாட்டக் கட்டுப்பாடு அறிமுகமானது.
அதுவே பல ஆண்டுகளுக்கு நீடித்தது. ஆனால், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்த பிறகு, 50 ஓவர் கிரிக்கெட்டிலும் விதிமுறைகள் மாறும் நிலை ஏற்பட்டது. 2005க்குப் பிறகு தடுப்பாட்டக் கட்டுப்பாடு 3 விதங்களாகப் பிரிக்கப்பட்டது. புதிதாக அறிமுகமான ‘பவர் பிளே’ விதிமுறையும் மட்டையாளர்களுக்குச் சாதகமானதுதான்.
2010க்குப் பிறகு, ஒரே இன்னிங்ஸுக்கு இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதால், பந்து நீண்ட நேரம் பளபளப்பை இழக்காமல் இருக்கிறது; இது மட்டையாளர்களுக்கே சாதகமாக இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர், வக்கார் யூனிஸ் போன்ற முன்னாள் வீரர்கள் இந்த விதிமுறைக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளனர்.
‘நோ பால்’க்கு ‘ஃபிரீ ஹிட்’. ‘ஃபிரீ ஹிட்’டில் அவுட் கிடையாது என்பன போன்ற புதிய விதிமுறைகளும் மட்டையாளர்களுக்கு வரமாகவும் பந்து வீச்சாளர்களுக்குத் தண்டனையாகவும் மாறிவிட்டன. இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் ஆடுகளங்கள், பிட்ச் ஆகியவை மிகப் பெரிய ரன் குவிப்புச் சாதனைகளை நிகழ்த்துவதற்கு ஏற்பவே உருவாக்கப்படுகின்றன.
இது போன்ற காரணங்களால், மட்டைவீச்சில் ரன் விகிதம் கடந்த 15 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் அதிகரித்துவிட்டது. அது அணியின் ஒட்டுமொத்த ஸ்கோரிலும் எதிரொலிக்கிறது. இந்தியா கடைசியாக விளையாடிய 7 ஒரு நாள் போட்டிகளில், 5 போட்டிகளில் 349 ரன்களுக்கு மேல் குவித்தது ஓர் உதாரணம்.
20 ஓவர் கிரிக்கெட்டின் வருகைக்குப் பிறகு கிரிக்கெட் முழுமையாக வணிகமயமாகிவிட்டது; கடந்த 15 ஆண்டுகளாக இது கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றிவிட்டிருக்கிறது. கிரிக்கெட்டின் பாரம்பரிய நியதிகளுக்குப் பொருந்தாத டி20 போட்டிகளுக்கான விதிமுறைகளை மட்டும் மாற்றுவதுடன் நிறுத்திக்கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால், 50 ஆண்டு வரலாறு கொண்ட 50 ஓவர் போட்டிகளிலும் அதைப் புகுத்துவதும் மட்டையாளர்களுக்குச் சாதகமான போக்கை உருவாக்குவதும் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. சுவாரசியத்துக்காகவும் அதிரடிக்காகவும் விதிகளையும் மைதான பிட்சுகளையும் மாற்றுவது கிரிக்கெட்டின் சீரழிவுக்கே வழிவகுக்கும்.
09/01/2023
சென்னைப் பொங்கல் டெஸ்ட் கிரிக்கெட்: மறக்கடிக்கப்பட்ட வரலாறு!
தமிழ் நாட்டின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டு, சேவல்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்ற விளையாட்டுகளும் மனதுக்குள் குதூகலத்தை ஏற்படுத்தும். அதுபோலவே ஒரு காலத்தில் பொங்கல் பண்டிகை வந்தாலே, கூடவே சென்னையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து காத்திருக்கும். ஆம், பொங்கலின்போது ‘பொங்கல் டெஸ்ட்’ போட்டிகளும் சென்னையில் பண்டிகையின் ஓர் அங்கமாகவே இருந்து வந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்த ‘பொங்கல் டெஸ்ட்’ போட்டிகள் மீண்டும் நடைபெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகி வருகிறது.